[Japan’s Seikan Subsea Mountain Tunnel]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
+++++++++++++++
++++++++++++
முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது! 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும்! ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை! ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன! அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன! ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது!
1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் சுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர்! பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது! அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங் களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது!
செய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்
பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை! பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33! அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது!
சுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை! காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப் பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று! மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப் பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.
செய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்
ஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது! அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன் பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி! 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது! அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர்! ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது!
1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளி யேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது!
1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது! பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது! பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது! நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை! ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன!
ஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்
மலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி ? முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன! குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின!
தொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின! ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாறைக் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.
சுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை! கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்
Bullet Superfast Train
வெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது! 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன! கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப் பான செய்கான் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது! பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.
33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறு அகற்சி, பெரு அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.
ஜப்பான் புள்ளெட் வேக ரயில்
நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!
ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்து களை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லை!! இல்லை!!! ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!
1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.
பூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு!
மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி! ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது!
புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகை யான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.
2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது! நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர்! வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன! ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர்! யாரும் மரண மடைய வில்லை! 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது! தொழிற் சாலைகளில் தீப்பற்றின! காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன! நகரில் நீர்ப்பைப்புக ள் துண்டிக்கப் பட்டன! கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன! விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது! நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது! நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை!.
செய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்
ஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கான் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கான் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம்! 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது!
நான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை! எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்குப் பயன் பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது!
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை!
பிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது! 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன! 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன! 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.
ஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்டப் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது! ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது! சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை! மேலும் மொராக்கோ விலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது!
தகவல்:
1. National Geographic Picture Atlas of our World [1990]
2. The Seikan Tunnel -A Short History of the Tsugaru Straits Line [www.pref.aomori.jp/]
3. Science & Technology: The World ‘s Longest Tunnels [www.Swishweb.com/]
4. Mountain Tunnels, Tunnels & Bridges -Seikan Undersea Tunnel.
5. A Short History of Japan By: InfoPage Corporation [2003]
6. Bullet Trains Programmed to Stop, if a Quake occurs [And Life Goes On By: G.Bhaskaran, The Hindu Jan, 2002]
7. Powerful Earth Quake Shakes Northern Japan [Sep 26, 2003]
8. World Data Center for Seismology, Denver U.S. Geological Survey [Sep 25, 2003]
9. Spain & Morocco Agree to Rail under Gibraltar Strait By Vicky Short [Jan 5, 2004]
10. http://www.railway-technology.
12. http://web-japan.org/atlas/
13. https://en.wikipedia.org/wiki/
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] [March 9, 2016] [R-2]
Preview YouTube video Seikan Tunnel, world’s longest undersea tunnel (Honshu to Hokkaido)
Preview YouTube video Seikan Tunnel History
- பூங்காற்று திரும்புமா?
- தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”
- அப்பாவும் மகனும்
- தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை
- ’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி
- குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை
- இயன்ற வரை
- கர்ணனுக்காக ஒரு கேள்வி !
- சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…
- சொற்களின் புத்தன்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை
- தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்