முனைவர். இராம. இராமமூர்த்தி
உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர். அங்ஙனம் வாய்மையைப் போற்றியும் இன்னாசெய்யாமையை மேற்கொண்டும் புகழ்பெற்றவர் இந்தியத் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள். இங்ஙனம் இசைபட வாழ்தலையே நன்மக்கள் விரும்புவர்.
பண்டை நாளைய மன்னர்களும் இத்தகு நல்லொழுக்க, நற்செயல்களாலேயே தம்புகழ் நிறுவினர். எனினும், மக்களைக் காக்கும் மன்னர்களுள்ளும் அடாதுசெய்து பெரும்பழி எய்திய மன்னர்களும் சிலருளர். அவருள் ஒருவனே நீங்காப்பழி யெய்திய நன்னன் என்பான். அவனை இலக்கியப் புலவோர், ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே அடைகொடுத்துப் பழித்துரைத்துள்ளனர்.
அந்நன்னன் புரிந்த செயலைச் சற்று விரிவாகத்தான் காண்போமே. நன்னன் ஒரு குறுநில மன்னன். அவனது தோட்டத்தில் பயன்தரு மரங்கள் பல இருந்தன. அத்தோட்டத்திற்குக் காவலும் மிகுதி. அங்கு மாமரமொன்றில் காய்கள் காய்த்திருந்தன. அம்மாமரக்கனிகளை நன்னன் பிறர்க்கீயாது தானே உண்ணவிரும்புவான் போலும்! ஒருநாள் அம்மரத்திலிருந்த காயொன்று காற்றினால் அலைப்புண்டு அதன் பக்கலிலிருந்த ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்து சென்றது.
பக்கத்தூரிலிருந்து குறுநிலத் தலைவனின் மகளாகிய இளநங்கையொருத்தி, தன் தோழியர் குழாத்தொடு புனலாடச் சென்றனள். விளையாட்டும் வேடிக்கைப் பேச்சுமாய் அந்நங்கையர், அருகில் பாய்ந்துசென்ற அவ்வாற்றில் நெடுநேரம் புனலாடி மகிழ்ந்தனர். கண்கள் சிவப்ப நீராடிக்கொண்டிருந்த அத்தலைவன் மகள் ஆற்றுநீரில் மிதந்துவந்த மாங்காயைக் கண்டனள். இளநங்கை தானே? விளையாட்டுப் பருவமும் கூட. அம்மாங்காயை எடுத்துக் கடித்துத் தின்றனள்.
இஃதிவ்வாறாக; தோட்டக்காவலர் மாங்காய் ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்துசெல்வதை எவ்வாறோ அறிந்து, ஆற்றின் கரைவழியே மாங்காயைத் தேடி வந்துகொண்டிருந்தனர். அதுபொழுது, ஆற்றில் நீராடிய மங்கையொருத்தி அம்மாங்காயை எடுத்துத் தின்றதை யறிந்தனர்; வெகுண்டனர்.
அவ்விள நங்கையை நன்னனிடம் அழைத்துச்சென்று நிகழ்ந்ததைக் கூறினர். நன்னன் சீற்றத்தின் உச்சிக்கே சென்றான். நிகழ்வின் உண்மையறியாதவனாய் – தேரா மன்னனாய் அவ்விளம்பெண்ணிற்குக் கொலைத்தண்டனை வழங்கினான். இச்செய்தியறிந்த அம்மங்கைநல்லாளின் தந்தையாகிய குறுநிலத்தலைவன் பதறிப்போனான். நன்னன் அரசவைக்கு விரைந்தேகினான். மன்னனாய் அங்கே நாளோலக்கத்தில் வீற்றிருந்த நன்னனை வணங்கித் தன்மகள் அறியாமற் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டினான். அப்பிழைக்கு ஈடாக எண்பத்தொரு களிற்றியானைகளையும் தன்மகளின் நிறைக்கீடாகப் பொன்னாலியன்ற பாவையொன்றையும் பரிசளிப்பதாயும் கூறித் தன்மகளை விடுவிக்க வேண்டினான் அவன். (அரசனைப் பிழைத்தோர் தம் நிறையுள்ள பொன்னால் பாவைசெய்து தண்டமாக இறுத்தல் அந்நாளைய மரபாயிருந்திருக்கின்றது.) பன்முறை அத்தலைவன் வேண்டியும் ஐயகோ…! அவ்வேண்டுகோளை ஏலாது அந்நங்கையைக் கொன்றான் நன்னன் என்னும் நயனிலன். பெண்கொலை புரிந்த நீங்காப் பழி நன்னனை மட்டுமன்றி அவன் மரபையே சூழ்ந்தது. அவனுடைய இந்த இழிசெயல் இலக்கியத்திலும் இடம்பிடித்துவிட்டது. தமிழிலக்கியங்கள் உள்ளவரை நன்னனின் பழியும் நீங்காமல் நிற்கும் என்பதையறிக.
மன்னன் நீதிவழாது, கோல்கோடாது ஆட்சிபுரியவேண்டியதன் அவசியத்தை உணர்த்தவந்த பொதுமறையாசிரியர்,
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை (குறள்: 541) எனவும்,
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள்: 547)
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட “இறைகாக்கும்” எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ”முறைகாக்குங்கால் முட்டுப்பாடு வந்துழியும் முட்டாது செய்தல் வேண்டும்” என்பார். மேலும் இம்முறைசெய்த சிறப்பினைத் தன்கை குறைத்தான் கண்ணும் (பொற்கைப் பாண்டியன்), மகனைத் தேரூர்ந்தான் கண்ணும் (மனுநீதிச்சோழன்) காண்க என்பார்.
நன்னன் குற்றமொன்றும் செய்யாக் குமரியைக் கொன்றான். அந்நங்கை அவனுடைய தோட்டத்திற்சென்று காயைப் பறிக்கவுமில்லை; கொல்லையில் கிடந்த காயை எடுத்துக் கடிக்கவுமில்லை. புனல்தரு காயை யுண்டனள்; அவ்வளவே! இச்செயலில் அவள்செய்த பிழைதானென்ன? எண்ணுக!
இக்கொடுஞ்செயலைப் பரணர் எனும் பைந்தமிழ்ப் புலவர், குறுந்தொகைப் பாடலொன்றிற் பாங்குறப் பதிவுசெய்துள்ளார்.
மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றொ டு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல… (குறுந்: 292 – பரணர்)
குடிபழி தூற்றும் கோலனாய்த் திகழ்ந்த நன்னனின் செயல் ஓர் ஆட்சியாளன் எவ்வாறிருக்கக் கூடாது என்பதற்கு இன்றளவும் சாட்சியாய் விளங்குகின்றதன்றோ?
- முற்பகல் செய்யின்……
- சுவை பொருட்டன்று – சுனை நீர்
- சொற்களின் புத்தன்
- அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு
- பிரேமம் ஒரு அலசல்
- அவியல்
- பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்
- தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ்
- தேடிக்கொண்டிருக்கிறேன்
- இரண்டாவது புன்னகை
- நீங்காப் பழி!
- கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’