தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்

This entry is part 1 of 10 in the series 27-மார்ச்-2016

113.கற்றாருள் கற்றார்

Scudder Auditorium அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! புலைமை மட்டுமல்ல சபைக்கு ஏற்றவகையில் அவர் பேசியது மேலும் வியப்பையூட்டியது.
” கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். ” என்னும் குறளுக்கேற்ப அண்ணாவின் உரை அமைத்திருந்தது.
அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மதங்கள் மீது பற்றுதல் இல்லாதவர். அவர் தமிழக முதல்வர். அனைத்து தமிழக மக்களையும் அணைத்துச் செல்லும் பொறுப்பு மிக்கவர்.அண்ணா வந்துள்ளது கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி. கிறிஸ்துவர்களின் வளாகம். அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பெரும்பகுதி கிறிஸ்துவர்கள். இந்தியாவின் பல மாநிலத்தவர்.விழா தொடக்கம் கிறிஸ்துவ ஜெபத்துடன் துவங்கியது.
அண்ணா கிறிஸ்துவ மிஷனரிகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி தமது உரையைத் துவங்கினார். அவர்கள் ஆற்றிவரும் சமயப்பணியுடன், கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணிகளைக் குறிப்பிட்டு அதனால் மக்கள் அடைந்துவரும் நம்மைகளைக் குறிப்பிட்டார். அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகளையும் மேற்கோள் காட்டினார். கால்டுவல் பற்றியும் அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றிக் குறிப்பிட்டார். ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள், நாலடியார் பற்றியும் கூறினார். சீகன்பால்க் தமிழ் மொழியை முதன்முதலாக தரங்கம்பாடியில் அச்சில் ஏற்றியது பற்றிக் கூறினார். அவர் ஓர் அருமையான இலக்கிய உரையை ஆற்றிக்கொண்டிருந்தார்.

பின்பு எங்கள் கல்லூரியை உருவாக்கிய ஐடா ஸ்கடர் அம்மையார் பற்றி பேசினார். அவர் தமது இளம் வயதிலேயே இந்திய மக்களுக்கு மருத்துவச் சேவை புரிய ஆவல் கொண்டவர். அதில் உறுதியுடன் இருந்து அமெரிக்காவில் மருத்துவம் பயின்றவர். அவர் எண்ணியிருந்தால் அங்கு சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.அனால் அதைத் தியாகம் செய்துவிட்டு இங்கேயே திரும்பி வந்து இந்தப் புனித மருத்துவப் பணிக்காக தமது வாழ்கையை அர்பணித்தவர். கொண்ட கொள்கையில் அவர் கொண்டிருந்த உறுதியும் விடாமுயற்சியும் நம்மையெல்லாம் வியக்கவைக்கும் அளவில் அமைத்துள்ளது. அவர் இந்தியாவில் அமைத்த இந்த முதல் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி வளர்ந்து இன்று உலகின் புகழ்மிக்கதோர் கல்லூரியாக உருவான விதம் பற்றியும் கூறி எங்களையெல்லாம் பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்!

புதிய மருத்துவப் பட்டதாரிகளை வாழ்த்தினார். அவர்களுடைய மருத்துவப் பணி சிறந்த விளங்க ஆசிர்வதித்தார். அவர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் பணியாற்றினாலும் ஏழை எளிய மக்கள் மீது கருணைகொண்டு அவர்களுடைய பிணி தீர்க்கவேண்டும் என்றார். நீங்கள் கடவுளை அந்த ஏழைகளில் சிரிப்பில் காணலாம் என்றார். இயேசுவின் அன்பைப் போதிக்கும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்த்துள்ள நீங்கள் அதுபோன்ற அன்பை உங்கள் நோயாளிகளிடம் செலுத்தவேண்டும். நோயாளிகளிடம் நீங்கள் நோயை அல்லது ஒரு உறுப்பைக் குணப்படுத்த முயலாமல் அவர்களை முழு மனிதராகப் பாருங்கள் என்றார்.அப்போதுதான் உங்கள் மருத்துவக் கல்வி முழுமை பெற்றதாகும் என்று புதிய பட்டதாரிகளுக்கு அறிவுரைக் கூறினார்.
இவ்வளவையும் கையில் எந்த குறிப்பும் இல்லாமல் தங்குதடையின்றி அவர் பாணியில் பேசி முடித்தார். அவையோர் அப்படியே எழுந்து நின்று அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். மற்ற மாநிலத்தவர் தமிழகத்தில் இப்படி ஒரு முதல்வரா என வியந்துபோயினர்! சக மாணவர்கள் என்னைக் கைக்குலுக்கி வாழ்த்தினர். ( நான் தி. மு. க. அபிமானி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.)
அதன்பின் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அரங்கத்தின் பின்புறம் திறந்த வெளியில் இரவு உணவும் கலை நிகழழ்சிகளும் நடைபெற்றன. அண்ணா இரவு பத்து மணிக்கு விடைபெற்றார்.

அன்றிரவு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரவு வெகுநேரம் தூங்கவில்லை. அண்ணாவை நான் இவ்வளவு விரைவில் இவ்வளவு அருகில் பார்ப்பேன் என்று நான் எண்ணிப்பார்த்ததில்லை.

சிங்கப்பூரில் பள்ளிப் பருவத்திலிருந்து அண்ணா மீது அளவற்ற பற்று கொண்டவன் நான். அவரையே என் வாழ்கையின் இலட்சியத் தலைவராக ஏற்றுக்கொண்டவன் நான். அவர் எழதிய எழுத்துக்களையும், ஆற்றிய சொற்பொழிவுகளையும் நாளிதழ்களிலும் நூலகங்களிலும் தேடிப் படித்தவன் நான்.அந்த அண்ணாவை நேரில் பார்த்தது பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

இரண்டாம் ஆண்டு முடிந்து விடுமுறையும் விடப்பட்டது.நான் இந்த முறை தரங்கம்பாடி சென்று அண்ணன் அண்ணியிடம் கழித்தேன் . இரண்டு வாரங்கள் அங்கு இருந்துவிட்டு தெம்மூர் சென்று ஒரு வாரம் இருந்தேன்.கோகிலம் இல்லாதது என்னவோபோலிருந்தது. பழைய நினைவுகள் கவலையை உண்டுபண்ணின. பால்பிள்ளைதான் துணையாக இருந்தான். வழக்கம்போல் தூண்டில் போடுவோம்.ஆற்றங்கரையில் கோகிலம் நிற்பது போன்ற பிரமை உண்டாகும். சில சமயங்களில் அவள் கூபிடுவதுபோல் இருக்கும். அவள் பாடிய ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் பாடலின் கடைசி வரிகள், ” வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம்; இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறைய சம்மதம். ” என்ற வரிகள்கூட காதில் கேட்கும்.தொலைவிலிருந்து அவள் பாடுவதுபோன்று இருக்கும். இனிமேல் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நிச்சயம் கோகிலத்தின் நினைவு வரும்!
இராஜகிளியும் தினமும் வந்து போவார். திண்ணையில் அமர்ந்து நெடு நேரம் பேசுவார். அவர் ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்களில் படித்த கதைகளைக் கூறுவார். என்னிடமும் தந்து படிக்கச் சொல்வார்.

இரண்டாம் ஆண்டில் தொடங்கிய உடற்கூறும்,உடலியலும் தொடந்து நடந்து வந்தது. இன்னும் மூன்று மாதங்களில் தேர்வுகள் நடைபெறும். அதன்பின்புதான் கிளினிக்கல் வகுப்புகள் தொடங்கும். அப்போது நாங்கள் மருத்துவமனை சென்று நோயாளிகளைப் பார்த்து மருத்துவமும், அறுவைச் சிகிச்சையும் பயில்வோம். அப்போது கண்ணியல் ( Ophthalmology ), மருந்தியல் ( Pharmacology ), நோய் இயல் ( Pathology ), நுண்ணியிரி இயல் (Microbiology ) ஆகிய பாடங்களை ஓராண்டு பயில வேண்டும்.

உடற்கூ று வகுப்புகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. அறுவைக்கூடத்தில் என்னுடைய பிரேதம் முற்றிலுமாக நார்நாராக அறுக்கப்பட்டுக் கிடந்தது. அதன் வயிறுக்குள் புகுந்த நாங்கள் நால்வரும் அனைத்து உறுப்புகளையும் வெளியே எடுத்து அறுத்து ஆராய்ந்து பயின்றோம். கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம், சிறுகுடல், பெருங்குடல்,குடல்வால், கருப்பை, சினைப்பை, சிறுநீரகம், போன்ற அனைத்து உறுப்புகளையும் கைகளில் ஏந்தி தொட்டுத் தடவி அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும், அதற்கான இரத்தக் குழாய்களையும், நரம்புகளையும் மிக நுணுக்கமாகப் பயின்று மனதில் பதியவைததோம். என்னுடைய பிரேதம் ஒரு பெண். ஆண்கள் உறுப்பான புராஸ்டேட், பாலியல் உறுப்புகளை பக்கத்தில் கிடந்த ஆண் பிரேதத்திடம் பயின்றோம். அதுபோல் ஆண் பிரேதம் உள்ளவர்கள் எங்களிடம் வந்து பெண் உறுப்புகளைக் கண்டு பயில்வர். நெஞ்சுப் பகுதிக்குள் சென்று இருதயம், உணவுக்குழாய், சுவாசக் குழாய்கள், நுரையீரல்கள், பெரிய தமனி, பெரிய சிரை, இதர இரத்தக் குழாய்கள் ஆகியவற்றை அறுத்துப் பார்போம். இருதயத்தையும் பிளந்து அதன் நான்கு அறைகளையும் ஆராய்வோம். நுரையீரல்களையும் அவ்வாறே அறுத்துப் பார்ப்போம்.

இவ்வாறு கைகள், கால்கள், வயிறு, நெஞ்சு ஆகிய பகுதிகளை அறுத்துப் பார்த்தபின்புதான் இறுதியாக தலைக்குச் செல்வோம்.ஒரு பிரேதம் நான்கு பேருக்கு என்பதால் ஒரு தலையை நாங்கள் நான்கு பேரும் ஒன்றாக இணைந்து அறுத்துப் பார்த்துப் பயில்வோம்.முகம், கண்கள், மூக்கு, காது,ஆகியவற்றை அறுத்தபின் மின்சார ரம்பத்தால் மண்டை ஓட்டை சுற்றிலும் அறுத்து மேல்பகுதியை தனியாக எடுத்துவிட்டு மூளையைப் பார்த்தபின்பு அதை முழுமையாக வெளியே எடுத்து ஒவ்வொரு பகுதியாக தனியே அறுத்துப் பார்ப்போம்.

உடற்கூறு எவ்வளவு அருமையானதே அவ்வாறே பயில்வதற்கும் கடினமானதே.எலும்புகளின் பெயர்கள், தசைகளின் பெயர்கள்., தசை நார்களின் பெயர்கள், இரத்தக் குழாய்களின் பெயர்கள், நரம்புகளின் பெயர்கள் ஏராளம் இருந்தன. அவற்றின் பெயர்களோடு அவற்றின் செயல்பாடுகள், அவை அமைந்துள்ள சரியான பகுதி, அவற்றின் பயன் ஆகியவற்றை மனப் படமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். உண்மையிலேயே மருத்துவப் படிப்பில் உடற்கூறு பயில்வதுதான் மிகவும் கடினம்.
அதுபோன்றே உடலியல் பாடமும் அவ்வளவு எளிதானதல்ல. உடலின் செயல்படுகள், அது இயங்கும் விதம், ஒவ்வொரு உறுப்பும் இயங்கும் விதம், சுரப்பிகளின் செயல்பாடு, அவை சுரக்கும் ஹார்மோன்கள், அவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இன்னும் மூன்று மாதத்தில்தேர்வுகள் வந்துவிடும்.அதில் தேர்ச்சி பெற்றால்தான் மூன்றாம் ஆண்டு செல்ல முடியும்.இல்லையேல் இரண்டாம் ஆண்டிலேயே ஆறு மாதம் இருந்தாகவேண்டும். அப்படி உடற்கூறு தேர்விலும் உடலியல் தேர்விலும் மூன்று முறை தோல்வியுற்றால், தொடர்ந்து மருத்துவம் பயில இயலாது.

மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயில்வோருக்கு சிறப்பான ஆண்டு. காரணம் அப்போது கழுத்தில் ஸ்த்டெத்தஸ்கோப் மாட்டிக்கொள்ளலாம். அதுதான் அனைவரின் கனவாக இருக்கும். அதோடு மருத்துவமனைக்குச் சென்று வார்டுகளில் நோயாளிகளைப் பார்த்து நோய்கள் பற்றியும் பயிலலாம். அதன்பின் இறுதி ஆண்டுவரை அனைத்துப் பாடங்களும் மருத்துவமனையில்தான்.

ஆனால் அதற்குத் தடைக்கல் இரண்டாம் ஆண்டு உடற்கூறு உடலியல் தேர்வு! அதில் எப்பாடு பட்டாவது தேர்ச்சியுற வேண்டும்.அதற்கு கடின உழைப்பு தேவை.

இந்த மூன்று மாதங்களை மனதை வேறு எந்த சிந்தனையிலும் அலைக்கழிக்காமல் பாட நூல்களிலேயே மூழ்கவேண்டும். இரவு வெகுநேரம் கண்விழித்து படிப்பேன். தேனீர் கலக்கிக் குடித்துக்கொண்டு விழித்திருந்து படிப்பேன். இல்லையேல் சீக்கிரம் படுத்துத் தூங்கிவிட்டு, விடியல் காலை நான்கு மணிக்கு விழித்து படிப்பேன்.படிப்பது என்பது சாதாரணமான மேலோட்டமான படிப்பல்ல. இது நாவல் வாசிப்பது போன்றதன்று! ஒவ்வொரு பக்கமும் ஆழ்ந்த கவனத்துடன் படித்தாக வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது அவற்றை மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் தேர்வில் வரலாம் என்ற சில கேள்விகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பதில் தயார் செய்வோம்.இவ்வளவுக்கும் ஆறு கேள்விகள்தான் கேட்கப்படும். அதிலும் மூன்று கேள்விகளுக்கு நீண்ட பதிலும் ( சுமார் நான்கு பக்கங்கள் ) மூன்று கேள்விகளுக்கு சிறு பதிலும் ( ஒன்று அல்லது இரண்டு பக்கம் ) எழுத வேண்டும்.இதில் ஒவ்வொரு கேள்வியிலும் சிறு கேள்விகளாக நான்கு கேள்விகள் கேட்கப்படும். இரண்டு வருடம் இரவு பகலாக படித்துவிட்டு இறுதியில் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் தோல்வி அடைவதும் அந்த ஆறு கேள்விகளில்தான் இருக்கும்.

தேர்வுக்குத் துரிதமாக தயார் செய்துகொண்டிருந்தோம். விடுதியில் வழக்கமான கேளிக்கைகளும் இதர பொழுது போக்குகளும் குறைந்துவிட்டன. இரவில் பெரும்பாலும் நிசப்தம் நிலவும். எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். அனைவருமே தேர்வுக்குத் தயார் செய்துகொண்டிருந்தனர்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநிலவில் இருட்டு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    smitha says:

    அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

    Small correction.

    அண்ணா (Hindu)கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *