பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
இதை இதை
எழுதவேண்டுமென்று
எண்ணியதில்லை
எண்ணுவதுமில்லை
அது அது
வந்து நச்சரிப்பதால்தான்
எனது எழுதுகோல்
உச்சரிக்கிறது
அதுவரை தெரியாதது
அடுத்தடுத்து தெரிகிறது
இருட்டுக்குள் வெளிச்சம்
வழிகாட்டுகிறது
சூத்திரம் இல்லாமல்
சூட்சுமம் அவிழ்கிறது
திறவுகோல் இல்லாமல்
பூட்டுகள் திறக்கின்றன
பார்ப்பதால் உடன்
பாதிக்கப்படுகிறேன்
எண்ணுவதால் என்னை
இழந்துவிடுகிறேன்
கவனம் கூடி
கரைந்துவிடுகிறேன்
பறவையாகி
பறந்துவிடுகிறேன்
விதவிதமாக
பொருள்புரிகிறேன்
புரிந்ததைப் புதிதாய்ப்
புரியவைக்கிறேன்
அதிசயம்கண்டு
அசந்துவிடுகிறேன்
வியப்புற்று என்னையே
வியக்கிறேன்
ஆனந்தமாய் ஒரு
கவிதையடைகிறேன்
கவிதையைக்கண்டு
கர்வமடைகிறேன்
அக்கணத்திலேயே நான்
கவிஞனாகிறேன்
(15.04.2014 அன்று 5.50க்கும் 6.30க்கும் இடையில் பேருந்து எண் 67 ல் விளைந்தது)