முருகபூபதி – அவுஸ்திரேலியா
சென்னை மழை வெள்ளத்தின் காரணிகளை துல்லியமாக ஆராய்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்
அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்தபின்னர், தமது மறைவுவரையில் எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியவர் நண்பர் ராஜஸ்ரீகாந்தன். இலங்கையில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அவற்றில் இருக்கும். மின்னஞ்சல், இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலப்பகுதியில், அங்கு நடைபெறும் (சமகால) நிகழ்வுகளை உடனுக்குடன் அவர் கடிதங்கள் தெரிவிக்கும்.
அந்நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் பெரும்பாலும் எனக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவருடைய கடிதங்களில் இடம்பெறும் ஒருவரின் பெயர் மாத்திரம் எனக்குப்புதியது. அவர் குறித்து நான் விசாரித்ததும் அந்தப்பெயருக்குரியவர் வீரகேசரியில் பணியிலிருப்பதாகவும் சென்னையில் படித்து திரும்பியிருப்பதாகவும் ஊடகத்துறையில் பயின்று பட்டம் பெற்றவர் – சிறந்த ஆய்வாளர் எனவும், உலக விவகாரங்கள் அறிந்தவர் என்றும் ராஜஸ்ரீகாந்தன் விதந்து குறிப்பிட்டிருந்தார்.
இலக்கிய நண்பர் டொக்டர் எம்.கே. முருகானந்தன் எழுதியிருந்த இரண்டு மருத்துவத்துறை சார்ந்த நூல் வெளியீட்டிலும் எனக்கு முன்னர் அறிமுகமில்லாத அவர் உரையாற்றியிருந்த தகவல் ஒரு கடிதத்தில் இருந்தது. அதனையடுத்து வந்த கடிதத்தில் சோவியத்திலிருந்து இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வந்த இரண்டு இலக்கியத் தூதர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் அவருடைய நூலும் எனது சமதர்மப்பூங்காவில் ( சோவியத் பயணக்கதை) நூலும் வெளியிடப்படுகிறது என்ற தகவலும் சொல்லப்பட்டிருந்தது.
சோவியத்திலிருந்து வந்தவர்கள் கவிஞர்கள் குப்ரியானோவ். அனதோலி பர்பரா. அந்த விழா நிகழ்ச்சிப்படங்களையும் ராஜஸ்ரீகாந்தன் பின்னர் அனுப்பியிருந்தார். அதில்தான் குறிப்பிட்ட அவரை முதலில் பார்த்தேன்.
அவர்தான் சந்திரிக்கா சோமசுந்தரம் என்ற பத்திரிகையாளர்.
மருத்துவம் தொடர்பான நூல் வெளியீட்டிலும் உரையாற்றி, சோவியத்தின் அதிபர் கொர்பச்சேவ் பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கும் அவர் நிச்சயமாக பல்துறை ஆற்றல் மிக்கவராகத்தான் இருப்பார் என்பதை ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் மூலம் அறியமுடிந்தது.
சந்திரிக்கா சோமசுந்தரம் என்ற அந்த நங்கை அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர், எனக்கு கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியமாக அறிமுகமானார். தொலைபேசியில் தொடர்புகொண்டார். 1997 ஆம் ஆண்டு எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூல் பற்றிய தமது வாசிப்பு அனுபவத்தையும் ஒரு கடிதமாக எழுதியிருந்தார்.
08-09-1997 ஆம் திகதி எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில், ” பொதுவாக Biography வகையில் அடங்கும் நபர்களைப்பற்றிய அறிமுகநூல்கள் – மெதுவாக நகர்ந்து, எழுத்தோட்டத்தில் தடங்கல்களுடன், படிப்பவருக்கு எரிச்சலூட்டும் சில பந்திகளையும் கொண்டிருக்கும். ஆனால், பூபதியின் எழுத்தில் தொய்வோ, தொங்கலோ இன்றி, சீரிய வேகமான வெல்லக்கூடிய போக்கே காணப்படுகிறது. இந்நூல் முழுவதும் – எல்லா பந்திகளும் படிப்பதற்கு சுவையாக இருப்பது இந்நூலின் சிறப்பாகும்.
மொழி – இனம் போன்றவற்றில் பற்று பரந்து விரியும்போது பிறமொழிகளின் மீது துவேசமாக உருவாகும் வாய்ப்பே அதிகம். ஆனால் , பூபதிக்கு பிறமொழிகளில், அதன் இலக்கியங்களில், இலக்கிய கர்த்தாக்களிடம் உள்ள மதிப்பும் மரியாதையும் அமரதாச, மொஹிதீன், ஃபுர்னீக்காவை படிக்கும்போது தெளிவாக வெளிப்படுகிறது. ” என்று சில வரிகளை குறிப்பிட்டிருந்தார். அந்த வரிகள் எனது எழுத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தன.
அங்கீகாரத்தை தேடி அலையாமலேயே அங்கீகாரம் வீடு தேடி வரும்பொழுது புத்துணர்ச்சிதானே.
சிட்னியில் நண்பர் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் மறைந்தபொழுது சந்திரிக்காவுடன் உரையாடிய வேளையில் இவருக்கும் சுந்தாவுக்கும் சென்னையிலேயே நல்ல தந்தை – மகள் உறவு இருந்ததையும், அவரை அன்பொழுக சுந்தா மாமா என இவர் அழைத்திருப்பதையும் அறியமுடிந்தது.
சிட்னியில் சுந்தாவின் நினைவரங்கில், எனது நான்கு நூல்களை அறிமுகப்படுத்தியபொழுது அதில் சந்திரிக்காவையும் பேசுவதற்கு அழைத்திருந்தேன். அவருடன் எஸ்.பொ, ஆசி. கந்தராஜா, கலாமணி, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர். கலையரசி சின்னையா நிகழ்ச்சிக்கு தலைமைவகித்தார். ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம் சுந்தாவின் படத்தையே தமது தூரிகையால் வரைந்து எடுத்துவந்திருந்தார். அந்தப்படத்தை திறந்துவைத்து நிகழ்ச்சி ஆரம்பமானது.
சந்திரிக்கா சுப்பிரமணியம் எனக்கு அறிமுகமான கதை இதுதான்.
————-
நான் அறிந்தவரையில் இலங்கையில் சில பத்திரிகையாளர்கள் இதழியலுக்கு அப்பால் சட்டத்துறையில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். இதழியலில் இருந்துகொண்டே சட்டக்கல்லூரிக்குச்சென்று சட்டத்தரணிகளாகிய வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் சிவகுருநாதன், வீரகேசரி கண. சுபாஷ் சந்திரபோஸ், வீரகேசரியில் பணியாற்ற வந்துவிட்டு சட்டம் படிக்கச்சென்ற தேவன் ரங்கன் ஆகியோரை நன்கறிவேன்.
அவ்வாறே இதழியலில் இருந்து, சட்டவல்லுனராக மாறியவர்தான் சந்திரிக்கா. இது அவருடைய அயராத முயற்சியின் வெளிப்பாடு. தன்னை தேங்கவைத்துக்கொள்ளாமல், படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்ட ஆளுமைப்பண்பு.
இலங்கையில் தமது இளமைக்காலத்தில் படித்துவிட்டு, சென்னை சென்று, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அத்துடன் நில்லாமல், சென்னைப்பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் பொதுசன தொடர்பியல் துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றவாறு, அவுஸ்திரேலியாவுக்கு வந்து , இங்கு சிட்னி மற்றும் குவின்ஸ்லாந்தில் சட்டத்துறையில் தேறி, வழக்கறிஞரானார். உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியவாறு இலக்கிய ஆய்வுத்துறையிலும் ஈடுபடுகின்றார்.
எமது தமிழ் சமூகத்தில் ஒரு பெண்மணி, இவ்வாறு அயற்சியற்ற தொடர் பயிற்சிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டு நூல்களும் எழுதுவது அரிதான செயல். ஆனால், சந்திரிக்கா ஒரு குடும்பத்தலைவியாக இருந்துகொண்டே வெளி உலகில் தனது இருப்பை காத்திரமாகவும் தனித்துவமாகவும் தக்கவைத்திருப்பது முன்மாதிரியானது.
எம்.ஜி.ஆர் . தமிழ் நாட்டில் தி.மு.க.வை விட்டு வெளியேறியதும் தமது புதிய கட்சிக்காக பல இதழ்களை தொடக்கினார். அவை அரசியல் ஏடுகளாகவே வெளியாகின. அதே வேளையில் தாய் என்ற வார இதழையும் அவர் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக விளங்கியவர் வலம்புரி ஜோன். இவரும் கலை, இலக்கிய ஆர்வலர். தாய் இதழில் ஈழத்தவர்களின் பங்களிப்பும் இருந்தது.
சந்திரிக்காவின் முதல் படைப்பு தாய் இதழில் வெளியாகியது.
தாய் இதழின் நிருபராகவும் பணியாற்றியிருக்கும் சந்திரிக்கா, தினமலர், சென்னை வானொலி, மற்றும் தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர்.
சென்னை, மதுரை, மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களில் இதழியல் கற்பித்தவர்.
1981 முதல் எழுதிவரும் சந்திரிக்கா, இதுவரையில் பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் வரவாக்கியவர். அந்த வரிசையில் 1989 இறுதியில் இலங்கையில் வெளியான இவரது முதல் நூல் பற்றியே அன்று நண்பர் ராஜஸ்ரீகாந்தன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற இவருடைய நூலுக்கு தமிழக அரசின் பாராட்டு விருதும் கிடைத்துள்ளது.
இலங்கையில் வீரகேசரியின் வாரவெளியீட்டின் பொறுப்பாசிரியராக இருந்தவேளையில் பலரை ஊக்கப்படுத்தியவர். பலருக்கு இதழியல் பயிற்சியும் வழங்கியவர்.
அவுஸ்திரேலியாவில் சட்டத்துறை இளம் , முது கலை ஆய்வுப் பட்டங்கள் பெற்று தற்போது சிட்னியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.
2004 இல் மனித உரிமைகள் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக விருதும் பெற்றவர். அத்துடன் சட்டத்துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக மேலும் மூன்று அவுஸ்திரேலிய விருதுகளையும் பெற்றிருப்பவர்.
இதுவரையில் சந்திரிக்கா வரவாக்கியுள்ள நூல்களின் விபரம்:
மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் • இன்றைய இதழியல் – அபிவிருத்தி இதழியல் – தென்னகத் திருக்கோயில்கள் –
இலங்கைத் தெனாலிராமன் கதைகள் – கற்பக விநாயகர் – சிறுவர்களுக்குக் கணினி – சூரிய நமஸ்காரம் – இந்திய ரஷ்ய உறவு – ஒரு பார்வை – பெருமைக்குரிய பெண்கள் – முதல் மொழி தமிழ் – Mother Tongue Tamil – Bilingual • தில்லை என்னும் திருத்தலம் – இணைய குற்றங்களும் இணைய வெளிச்சட்டங்களும்
இவை தவிர, இன்றைய இதழியல் – இணையம் – அறம் – சட்டங்கள் என்னும் நூலும் வெளிவரவிருக்கிறது.
மேலும் தெரிந்துகொள்வதற்கு இவற்றைப்பார்க்கலாம். www.successlawyers.com.au இவரது கட்டுரைகளைப் படிக்க http://chandippoma.blogspot.com.au/ பார்க்கலாம்.
பதிப்புத் துறையில் கணினியை பயன் படுத்துவது தொடர்பாக ஜப்பானில் சர்வதேச பயிற்சிப் பட்டறையில் யுனெஸ்கோ புலமைப் பரிசிலும் பெற்றுள்ளார்.
கணினித் துறையில் Microsoft மென்பொருள் திறமையாளர் மற்றும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்று பணியாற்றியவர்.
சென்னை, மதுரை, மற்றும் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இதழியல் கற்பித்தார். தற்போது மேற்கு சிட்னி Federation பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்பிக்கிறார்.
சிட்னி முருகனின் மீது இவர் எழுதிய திருப்பள்ளி எழுச்சி முதலாகத் தொடங்கி தாலாட்டில் முடியும் ஏழு பாடல்கள் இசைத் தட்டாக வெளிவந்துள்ளன.
சந்திரிக்காவின் வியத்தகு வளர்ச்சி மற்றவர்களுக்கு முன்மாதிரியானது.
——————————
தமிழ்நாட்டில் வணிக இதழ்களின் வரிசையில் வெளியான தாய் இதழில் பணியாற்றிய அனுபவம், இவரை அவுஸ்திரேலியாவிலும் அத்தகைய ஒரு இதழை நடத்துவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது வியப்பல்ல.
மென்மையான (Light Reading) வாசிப்புக்காகவும், பயணங்களில் வாசிக்க எடுத்துச்செல்லத்தக்க குறும் தகவல்களின் தொகுப்பாகவும் சில வருடங்கள் வெளிவந்த தமிழ் அவுஸ்திரேலியன் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய சந்திரிக்கா, அந்த வாசகப்பரப்பிற்கு ஏற்றவாறு விடயதானங்களை தெரிவுசெய்வதற்கு துணை ஆசிரியர் குழுவையும் தெரிவுசெய்திருந்தார். அதில் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகளையும் இணைத்துக்கொண்டார்.
அந்த இதழ் கல்வி, சமூகம், பொருளாதாரம், மருத்துவம், சமையல் குறிப்பு, சினிமா, ஆன்மீகம், அரசியல், விளையாட்டு முதலான துறைகள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையால் அதிலிருந்து சிறிய சிறிய தகவல்களை அறியமுடிந்ததே தவிர தேர்ந்த வாசிப்பு அனுபவம் மிக்கவர்களுக்கு பயன்படவில்லை என்பதே எனது கருத்து.
அந்த இதழில் சினிமா சம்பந்தப்பட்ட துணுக்குகள் சற்று தூக்கலாகவே இருந்து, தமிழ் சினிமா ரசிகர்களின் தேவைகளை போக்கியது. அந்தவகையில் சந்திரிக்கா ஜனரஞ்சக வாசகப்பரப்பிற்குரிய இதழாக அதனை வெற்றிகரமாகவே நடத்தினார்.
இணையத்தளங்கள் பல இன்று அந்த இதழின் உள்ளடக்கத்துடன் வெளியாகத்தொடங்கியதையடுத்து அதன் தேவையும் அற்றுப்போய்விட்டது என்றே சொல்லாம்.
சந்திரிக்கா நாம் சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா சிட்னியில் நடந்தவேளையிலும் பங்கேற்றவர். அவ்வாறே மலேசியாவில் நடந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் பங்கேற்றவர்.
இதழியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு படிப்படியாக பல்துறை ஆற்றல் மிக்கவராக வளர்ந்த சந்திரிக்கா, சில மாதங்களுக்கு முன்னர் சென்னையை பாதித்த கடும் மழை – வெள்ளப்பெருக்கின்போது எழுதியிருந்த கட்டுரை மிகவும் பெறுமதியானது.
பிரிட்டிஷாரின் காலத்தில் சென்னையின் மத்தியிலும் சுற்றாடலிலும் இருந்த ஏரிகள் படிப்படியாக தூர்ந்துபோனதன் பின்னர், அந்த நிலங்களில் கட்டிடங்களும் வீடுகளும் எழுந்த கதையை துல்லியமான தகவல்களுடன் எழுதியிருந்தார்.
இயற்கையின் சீற்றத்தின் காரணத்தை வரலாற்று ஆதாரங்களுடன் சந்திரிக்கா எழுதியிருந்தமையால் சுற்றுச்சூழல் பற்றிய அவருடைய அக்கறையையும் அந்தப்பதிவு வெளிப்படுத்தியிருந்தது.
அதனைப்படித்தவுடன் அவருக்கு பாராட்டு மடலும் அனுப்பியிருந்தேன். அத்துடன் அந்தக்கட்டுரையை பலருடன் பகிர்ந்துகொண்டேன்.
சந்திரிக்காவின் கட்டுரை தமிழகத்தில் மாறிமாறி பதவிக்கு வந்த திராவிடக்கழக கட்சிகளின் கண்களை திறந்திருந்தால் அதுவே இதழியலாளரான சந்திரிக்காவுக்கு பெரிய வெற்றி.
சமூகத்துக்காக பேசும் அதேவேளை, சமூகத்தையும் பேசவைக்கும் அதுபோன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்காலத்திலும் கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம் எழுதவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
—-0—-
- எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1
- தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்
- ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை
- புரியாத மனிதர்கள்….
- குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு
- நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்
- கவிதைத் தேர்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
- குழந்தை