தெறி

This entry is part 6 of 16 in the series 24 ஏப்ரல் 2016

0

சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி.

0

வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் )

கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு! அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு வந்துட்டே இருந்தது.

சண்டை வேணாம்னு கேரள ரவுடிங்க கிட்ட விஜய் பம்முறதும், எல்லை மீறி போவும்போது அதிரடியா, மழை சொட்ட சொட்ட புரட்டி எடுக்கறதும் புதுசா வேற தினுசா இருக்கு இல்லே மச்சான்?

கூடையை கவுத்தா மாதிரி ஒரு டோப்பாவை வச்சுக்கிட்டு, கண்ணாடி போட்ட மலையாள டீச்சர் ஆனியா ஏமி ஜாக்சன் பாக்க புடிக்கலை நண்பா. ஆனா, அதுக்கு சேத்து வச்சு கடைசி பாட்டான “ ஒன்னால நான் கெட்டேன் “ ல கலர் கலரா லெக்கின்ஸுல வந்து டிக்கட் காசுக்கு பங்கம் வராம பாத்துக்குது.

ஃப்ளாஷ் பேக்ல நம்ம அண்ணா விஜய்தான் எஸ்.பி. விஜயகுமார். அந்த காக்கி டிரஸ்ஸுல கஞ்சி போடாமயே வெறைப்பா இருக்க தலைவரால தான் முடியும். நடுவுல, சண்டைக்கு முன்னால ரஜினி ஸ்டைல்ல சுவிங்கம் துண்டுகளை, மணிக்கட்டுல தட்டி வாயிலே போடற காட்சிக்கு அப்ளாஸ் அள்ளும் பங்காளி.

போலீஸ் பிடிக்காத அப்பாவுக்கு பொறந்து, போலீஸையே காதலிக்கும் மித்ராவா நம்ம சமந்தா பொண்ணு செம ஜிலீர். ஆனா ஒரே மாதிரி சிர்க்கறதும், ஒரே மாதிரி பேசறதும் கொஞ்சம் போரடிக்குது மாப்ளே!

அமைச்சர் வானமாமலையா ‘ முள்ளும் மலரும் ‘ மகேந்திரன் செமை கெத்து வில்லன்பா. குரலும் அப்படியே கட்டையா பாரதி ராஜா கணக்கா இருக்கா நானே கொஞ்சம் மெர்சலாயிட்டேன். கூடவே அல்லக்கையா வந்து தொழிலதிபர் ரத்னமா மாறச் சொல்ல அழகம் பெருமாள் ஓகே. அட! போலீஸ் டிரைவர் ராஜேந்திரனா வர்ற மொட்டை ராஜேந்திரனுக்கு குணச்சித்திரம் கூட வருதுப்பா. அது நல்லாவும் இருக்கு.

விஜய் அம்மாவாக ராதிகா நல்லாவே நடிக்குது. காவல் அதிகாரியா பிரபு ஓகே.

ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அம்பதாவது படமாமே இது. செமை ஃப்ரெஷ்ஷா ட்யூன் போட்டிருக்காரு. புதுசா சில சங்கதிங்களை பின்னணி இசையிலே சேத்து படத்தை ரசிக்க வைக்கிறாரு. பேபி உத்தாரா, ஜி.வி. பாடற “ ஈனா மீனா டீகா “ நம்ம வூட்டு பிள்ளைங்களுக்கான பாட்டு. பாம்பே ஜெயஶ்ரீ பாடியிருக்கற “ தாய்மை வருகவென” கொஞ்சம் தளபதி படத்தோட “ சுந்தரி கண்ணால் ஒரு சேதி “ சாயல்.. அது சரி இது இளைய தளபதி படமாச்சே! தப்பில்லே.

கேமரா ஆளு ஜார்ஜ் வில்லியம்ஸ் செமை கெத்துப்பா. கேரளாவையும் நம்மூர் சென்னையையும் அசத்தலா அள்ளிக்கினு வந்துருக்காரு. தேவா, பாலச்சந்திரன் குரல்ல வர்ற “ ஜித்து ஜில்லாடி “ டாப் கோணங்கள்ல அள்ளுது. நடுவுல பறக்கற நாலஞ்சு ஸ்பைடர் மேன் கார்ட்டூன்ஸ் என்னை கொழந்தையா ஆக்கிடுச்சுப்பா!

சிகப்பு மலர்கள் விரிச்ச பூமி, பச்சை படர்தாமரை படர்ந்த கடற்கரை, வறண்ட பாலைவனத்திலே நீல குளங்கள்னு செமையா செட்டு போட்டிருக்காரு கலை இயக்குனர் முத்துராஜ். அவருக்கு ஒரு பொன்னாடை போத்தணும்பா!

சண்டைக்கு சண்டை. காமெடிக்கு காமெடி; காதலுக்கு லிப் டு லிப்; அழுவறதுக்குன்னு சில சீனுங்கன்னு செமையா திரைக்கதை அமைச்சிருக்காரு அட்லி. அது சூப்பர் ‘குட்’லி.

நீ வேணா பாத்துக்கோ நிச்சயமா படம் தெறிச்சிக்குனு ஹிட் ஆவப்போவுது!

0

வெர்ஷன் 2 ( வெகு ஜன ரசிகன் )

ரகசிய போலீஸை எடுத்து, பாட்ஷாவில் கொஞ்சம் ஊற வைத்து, மேலாக வேதாளத்தைத் தூவினால் தெறி ரெடி. மெனு புரியறதுக்குள்ளே மென்னு முழுங்கிடணும்.

0

காவல் அதிகாரி விஜயகுமார் அதிரடி போலீஸ். முப்பது வயதாகும் அவர் ரவுடிகளுக்கு டெரர். அம்மாவுக்கு அடங்கிய மகர். பிள்ளைகளை கடத்தி, ஊனமாக்கி பிச்சை எடுக்க விடும் கும்பலை அடித்து துவைத்து மருத்துவமனையில் சேர்க்கும்போது, விஜய் டாக்டர் மித்ராவை பார்க்கிறான். கண்டதும் வரும் காதல், இருவருக்கும் கடிமணத்தில் முடிகிறது. இன்ப அதிர்ச்சியின் எல்லையாக குழந்தை நிவேதிதா பிறக்கிறாள். ஆனால் ஒரு கற்பழிப்பு குற்றத்தில் மாட்டும் அமைச்சரின் மகன் அஸ்வின் கொல்லப்படுவதும், அதனால் அமைச்சர் வானமாமலையின் பகைக்கு ஆளாகி அம்மாவையும், காதல் மனைவி மித்ராவையும் இழக்கும் விஜய் குண்டுகள் துளைக்க சாய்வதும், அவர் இறந்ததாகவே அமைச்சரை எண்ணவைக்கிறது.  ஆனால் கேரளக் கரையோரம் ஜோசப் குருவில்லாவாக, புதுக் காதலி ஆனியுடன், புது வாழ்வு வாழும் விஜய்யை தொடர்ந்து வருகிறது மலையின் கொலைக்கரம். விஜய் தப்பிதானா? நிவேதிதா, ஆனி பிழைத்தார்களா என்று அதிகம் போரடிக்காமல் சொல்லியிருக்கிறது இயக்குனர் அட்லியின் திரைக்கதை.

லேசாக  நகைக்க வைக்கும் காட்சிகள்; கண்ணீர் எட்டிப் பார்க்கும் கண்களாக சில அழுத்தங்கள். அதிரடியான சண்டைக் காட்சிகள். ரம்மியமான காதல் எபிசோட்கள் என வெரைட்டி விருந்தாக வந்திருக்கிறது படம்.

தன் திரை ஆளுமையையும் தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஒரு சேர மனதில் கொண்டு விஜயகுமார் பாத்திரத்தை அணுகியிருக்கீறார் இளைய தளபதி விஜய். பாடல் காட்சிகளிலும் ஸ்டன்ட் காட்சிகளிலும் அவர் காட்டும் வேகம் அதிசயிக்க வைக்கிறது. அழகு பதுமை மித்ராவாக, சமந்தா அதிகம் மெனக்கெடாமல் வந்து போகிறார். அடையாளம் தெரியாத முடியழகில் ஆனியாக ஏமி ஜாக்சன் ஏமாற்றுகிறார். இயக்குனர் மகேந்திரன் அமைச்சர் வானமாமலையாக சராசரி வில்லன் வேடத்தை ஏற்று அலுக்க வைக்கிறார். ஆனாலும் அவரது குரலின் வசீகரம் ரசிகனைக் கட்டிப் போடுகிறது.

ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமராக் கோணங்கள் பல முறை புருவங்களை உயர வைக்கின்றன. சண்டைக் காட்சிகளின் நம்பகத் தன்மை அவருக்கான பாராட்டு.

கேரள பேக்கரி செட்டிங்ஸ் ஒன்றே கலை இயக்குனர் முத்துராஜின் திறமைக்கு அத்தாட்சி. செம்மண் பூமியும் கரு நீல குள நீரும் அவரது கற்பனையின் நீர் வீழ்ச்சி.

“ லவ் சொல்றதுக்கு வெக்கப்படறவன் வாழறதுக்கே வெக்கப்படணும் “

யதார்த்தமான வசனங்களுடன் பயணிக்கிறது திரைக்கதை. நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த ஃபலூடாவாக சுழன்றடிக்கிறது அவரது இயக்கம். விழியோர நீரை வெட்கப்படாமல் துடைத்துக் கொள்ளும் பார்வையாளனே அவரது திறமைக்கான கட்டியக்காரன்.

158 நிமிட படத்தின் காட்சிகளை முன் கூட்டியே ஊகித்து விடலாம். ஆனால் அதைக் கூட ஊகிக்க விடாமல் ஜெட் வேகத்தில் காட்சிகளை கத்தரித்த எடிட்டர் ரூபன் பாராட்டப்பட வேண்டியவர்.

கடைசி காட்சியில் இந்திய சீனா எல்லையில் ஒரு கிராமத்தில் தர்மேஷ்வராக மூன்றாவது அவதாரம் எடுக்கிறார் விஜய். அடுத்த பாகம் நிச்சயம் உண்டு என்கிறது கோலிவுட் பட்சி.

விஜய் படங்கள் பெரிதாக வாதிடப்பட வேண்டிய பட்டி மன்ற தலைப்புக்கள்  அல்ல. ஒரு இரண்டு மணி நேரம் குழந்தைகளுடன் குதூகலமாக செலவிட வேண்டிய திருவிழா தருணங்கள். அந்த வகையில் ஏமாற்றவில்லை அட்லியும் விஜய்யும்.

0

பார்வை : ஊத்தப்பம்

0

மொழி : நாற்காலிலே கட்டிப் போட்டாலும் அதிரடியா சண்டை போட தெரிஞ்சவர் தான் மாஸ் ஹீரோன்னு ஆக்ஸ்போர்ட் அகராதியிலே போட்டிருக்காமே!

0

Series Navigationகாப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *