ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 16 in the series 24 ஏப்ரல் 2016

 

ராஜசுந்தரராஜன் ஓவியத்தில் நாட்டம் கொண்டவர். யாப்பருங்கலக் காரிகை  , தொல்கப்பியம் பயின்றவர். மீரா ,தேவதேவன் சுந்தர ராமசாமி , பிரமிள் ஆகியோரின் நட்பு  வட்டம் இவர் வளர்ச்சிக்கு

உதவி இருக்கிறது. தேடல் , படிமம் , கணையாழி , சதங்கை , ழ , லயம் ஆகிய இதழ்களில் இவர்

கவிதைகள் வெளிவந்துள்ளன.  ‘ உயிர்மீட்சி ‘ என்ற இத்தொகுப்பிலிருந்து இவரைப் பற்றிய பிற

குறிப்புகள் ஏதும் இல்லை. இதில் சில சிறு கவிதைகளும் சில நீள்கவிதைகளும் உள்ளன.

இவர் கவிதைகளில்  அழகியல் , எதிர் அழகியல் , யதார்த்தம் , கற்பனைச் சார்பு , எளிமை , எளிமை

யின்மை , பூடகத்தன்மை , சொற்செட்டு ஆகிய பண்புகள் காணப்படுகின்றன.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘ விட்ட குறை ‘   ! இது நான்கு வரிகள் கொண்ட

சிறு கவிதை.

மண் மீது

ஒரு பறவைப் பிணம்

மல்லாந்து நோக்குது

 

வானை

நான்கு வரிகளிலும் கவித்துவம் மற்றும் மொழி சார்ந்த அழகியல் ஏதுமில்லை. கவிதையைத்

தலைப்போடு பொருத்திப் பார்க்கும் போது தெறித்து விழுகிறது தொனிப் பொருட்செறிவு ! இதுவே

நான்கு வரிகளை அழகான கவிதையாக மாற்றிவிடுகிறது ; எனவே  வித்தியாசமானது.

‘ பறவைப் பிணம் மல்லாந்து நோக்குது வானை ‘ என்னும் போது , தான் பல நேரங்களில் பறந்து

திரிந்து வாழ்ந்த வானத்தை மறக்காமல் இறந்த பின்னும் அந்த வானத்தை பார்க்கிறது என்ற தற்குறிப்

பேற்ற அணிதான் உரைநடை வரிகளைக் கவிதைத் தளத்திற்கு உயர்த்துகிறது. இது அழகான

அற்புதமான நேர்த்தியாகும். எனவே இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

‘ சாராநிலை ‘ என்ற கவிதை வாழ்க்கையைத் தெரிந்தவரின் தத்துவப் பார்வையை உள்ளடக்கமாகக்

கொண்டுள்ளது.

காரைக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன

இப்போது கான்கிரீட்.

தெருக்கூத்துக்கு மவுசு இல்லை

இப்போது சினிமா.

ஓசைகள் இல்லை , கவிதையில்

இப்போது ஓவியம்

 

வீழ்வன இயல்பாய் வீழட்டும்

புலம்பாதிருப்போம்

வெல்வன தாமே வெல்லட்டும்

கொக்கரிக்கா திருப்போம்

 

இன்று கொக்கரித்து

நாளைக்கே புலம்புவதா?

 

 

வேண்டாம்.

—- எளிமையாகத் தொடங்கி எளிமையாக முடிகிறது கவிதை.

‘ பயன்பாடு ‘ கண் பரிசோதனை பற்றிப் பேசுகிறது.

எழுத்துக்கள்

சொல்லாகிப் பொருள்  குறித்தல் விடுத்துப்

பார்வையை நிறுத்திக் காட்டும்

படிக்கற்கள் ஆகிறதைக்

கண்டேன்

கண் மருத்துவமனையில்.

—– நாற்பது தாண்டியதும் — சிலர் அதற்கு முன்பே — எல்லோரும் கண் பரிசோதனை செய்துகொள்ள

வேண்டியது அவசியமாகிறது. இதைக் கருவாகக்கொண்டு யாரும் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை.

மேற்கண்ட வரிகள் கவிதையின் பிற்பகுதியாகும்.

ஓவியம் எழுதவோ தூரிகை —

ஒட்டடை அடித்தால் என்ன?

—– என்று விசித்திரமாகத் தொடங்குகிறது. ஒட்டடை அடிக்கத் தூரிகை போதுமா என்ன ?

‘ வாழும் வகை ‘ என்ற கவிதை நாயையும் சிலந்தியையும் ஒப்பிட்டுப் பேசுகிறது.

நாக்குத் தொங்க வாய்நீர் வடிய

நாறுகிற திசையெல்லாம் ஓடுகிறது

நாய்

கரணம் போட்டுக் கட்டிய வீட்டில்

இருந்து தின்னுது

சிலந்தி

 

‘ மிகை ‘ என்ற கவிதை வித்தியாசமான பார்வை கொண்டது.

கேட்பதற்கு துளைகள் போதும்

என்றாலும் செய்விமடல்கள்

[ அறுத்துவிடலாமா ? ]

மானத்துக்கு ஆடை

அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு

கருக்கொண்ட பின்பும்

புணர்ச்சி

 

ஆடையில் வேலைப்பாடுகள் அழகியல் சார்ந்தது — ஆறாம் அறிவின் சாதனை — என்று கவிஞருக்கும்

நிச்சயம் தெரியும்!

‘ சிதலம் ‘ என்ற நீள் கவிதையின் தொடக்கம் கோடைக் கால வெப்பம் பற்றியது. பின் அந்த ஆதங்கம்

ஒரு தாயிடம் ஒருவர் புலம்புவதுபோல் அமைந்துள்ளது. ஸ்ரீராம பிரானிடம் சில கேள்விகள் கேட்கப்படுவதுபோல் ஒரு பெருங்கோபம் பதிவாகியுள்ளது. அடுத்து ஒரு புனிதப் பயணம் சென்றது பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன.  மேலும் இக்கவிதையில் மனிதப்பண்பு பற்றிய ஒரு கவலை

கொப்பளிக்கிறது.

தெருவு கொள்ளாமல் மனித முகங்கள்

எந்த இரு முகங்களுக்கு இடையிலும்

இணக்கம் இல்லை

நாய்கூட ,  இன்னோரு நாயைக் கண்டால்

முறைக்கும் அல்லது வாலாட்டிக் குழையும்

எதிர் வரும் மனிதனின் முகம் கண்டு

ஒரு முகக்குறி காட்டினால் என்ன ?

இறந்த ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்பு பின் வருமாறு…

படுத்திருந்தது ஒரு மனிதன் என்றோடிப்

புரட்டிப் பார்த்தேன் :

எலிகள் புரண்டெழுந்து  பல் நீட்டிச் சீறின.

விழிகள் தோண்டப்பட்டு

மூக்கிழந்து

உதடுகள் செவிமடல் உண்ணப்பட்டு

குடல் கிழித்துக் குதறப்பட்டு

ஒரு மனித மிச்சம்

உயிரைக் கையில் வாரி

ஓடி அகன்றேன்

—- ‘ சிதலம் ‘ என்னும் தலைப்பிற்கேற்ற சில தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு 1986. அணிந்துரை தந்துள்ள சுந்தர ராமசாமி தன்

உரைக்கு ‘ இந்த மண்ணில் ஒரு இளங்கவி ‘ என்று தலைப்பு தந்துள்ளார். ராஜசுந்தரராஜன் தொடர்ந்து

கவிதை முயற்சியில் ஈடுபட்டதாக எனக்குத் தெரியவில்லை. கவிதைகள் சோதனை முயற்சி ரகமாகப்

படுகிறது.

 

Series Navigationதொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *