* மாயாறு பொங்கி வழிகிறது.
மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது.
வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம்.
நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம்.
பொங்கி வருக..
* வேலியின் கிளுவைப்படல் யாராலும் நகர்த்தப்படலாம்.
யாராலும் நசுக்கப்படலாம்.
மிக மெல்லியதுதான்
என் வைராக்யம் என்னும் கோட்டை எந்தக் கொம்பனாலும் நகர்த்தமுடியாது.
கற்பு வெறும் கோட்டிலா இருக்கிறது.
* தீ காட்டில் தொடர்ச்சியாகப்
பரவிவிடக்கூடாது என்பதற்காய் பையர் லையன் ( தீக்கோடு )இருக்கிறது.
எங்களைச் சுற்றி நாங்களே போட்டுக் கொண்டிருக்கிறோம்.
எல்லாக் கோடுகளும் மானம் காக்க.
* எட்டுக்குழந்தைக்கு தாய் நான் பொம்மக்கா
எட்டு என்ற எண்ணின் தலைப்பகுதிஉள்ளில் நான்
எட்டு எண்ணின் கால்ப்பகுதி உள்ளில் கணவன்.
எவ்வளவுதான் பார்வை மேய்ந்தாலும்
எட்டாது தூரமே நில்லடா மேஸ்திரி.
* மரத்தை மற்றவர்களுக்காய்
எங்கள் தாத்தாக்கள் வெட்டினர்.
எங்கள் பாட்டன்கள் வெட்டினர்
எங்கள் பூட்டன்கள் தாத்தாக்கள் வெட்டினர்
எங்கள் மகன்களும் வெட்டுகின்றன்ர்.
அரிவாள் கூர்மையடைந்து வருகிறது
எல்லோருக்கும் தெரியும் தானே இது
*உன் குழந்தை அழுகிறது
என் கையில் இருக்கும் அழுக்குத் துணி மூட்டையிலிருந்து
எள்ளுரண்டையை எடுத்துத் தந்ததற்காய் முகம் சுளிக்கிறாய்.
இரண்டு வயது இருக்குமா உன் குழந்தைக்கு.
லேஸ், சிப்ஸ், பாண்டா என்று நீ அரை மணி நேரத்தில் கொடுத்த்தையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
அதில் எதற்கு குறைந்து போய் விட்டது என் எள் உருண்டை.
உன் முகச் சுழிப்பிற்கு காரணம் அழுக்குத் துணியா, எள்ளுரைண்டையா
லேஸ், சிப்ஸ், பாண்டா சாப்பிடும் உன் குழந்தை 30 வயதில் எப்படியிருப்பான்.
கம்யூட்டர் என்சிஜினியர், பணக்காரன் என்றிருப்பான்
ஆரோக்கியமானவனாக இருப்பானா.
உன் முகச்சுளிப்பில் உதட்டு லிப்ஸ்டிக் தேய்ந்து விட்ட்து.
பஸ் வரும் நேரம்தான்.
என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம் நீ.
* எங்கள் காட்டில் மேயும் விலங்குகளில் சருகு மான் இருக்கிறது ( மவுஸ் டீர்)
நீங்களெல்லாம் சரக்குமான்கள் தான்.
பொருள் சரக்கு
மது சரக்கு
பேராசை சரக்குமான்கள் நீங்கள்.
*பழைய முறத்தில் கொஞ்சம் நெல்லிக்காய் கொய்யாக்காய் பரப்பி உட்கார்ந்திருக்கிறேன்.
என் தலையைத் தொட்டு ஓடுகிறது கிண்டலாக அந்த இளம் வயசு..
பெருநாகம் 3 அடிக்கு எழும்பி தொடை நோக்கித் தாவும்.
எந்தப்பாம்பும் காலில் கொத்தும்.
பெரு நாயகமாய் எழுந்து கைகளை வீசுகிறேன்.
தப்பித்து விட்டாய்
பாம்புக்கு பழி வாங்கும் குணம் இல்லை
சுலபமாய் ,மறக்காது.
* சிங்கம் பூனைக் குடும்பம்
சிறுத்தையும் பூனைக் குடும்பம்.
நான் கோடாரிக் குடும்பம்.
* கலைஞ்ர் ஆட்சியில் தொலைகாட்சி தந்தார்கள்
பின் அம்மா படம் வந்தது.
யார்யாரோ படம் வந்தது.
அம்பேத்கார் பற்றிச் சொன்னார்கள் .
அவர் படம் வந்ததாகத் தெரியவில்லை.
அவர் யார் என்றும் அடையாளம் தெரியவில்லை.
* புலி அடுச்சு பொம்மக்கா செத்தாள்ன்னு பெரிய ரகளை தா.
காட்டு ஆபீசருங்களை ஓட ஓட வெரட்டுனாங்க.,
ஜீப்புக்கெல்லாம் தீ வெச்சங்க.
எங்க மாடுகளை ஆடுகளை புலி அடிச்சப்போ எங்களுக்குத் தெரியாமெ எதுக்கு வளர்த்தீங்ன்னுதா கேள்வி வந்துது.
* இஙக் வரும்போது சொகுசு கோச்சுலதா வர்றீக
அங்க சொகுசு கோச்சுலதா தண்ணி பாட்டல்
வாந்தி எடுக்க பிளாஸ்டிக் பை
நியூஸ் பேப்பர் எல்லாம் தந்தது செரிதா.
காதுலெ அடச்சு வெச்சுக்க பஞ்சும் குடுத்தாங்களா என்ன
நாங்க சொல்றதே யாரும் கேட்க மாட்டீங்கறீஙக.
* இரக்கமுள்ள கடவுள்ளுன்னு ஏதாச்சும் இருக்குதுங்களா.
வெளி நாட்டுக்கடவுளா இருந்தாலும் பரவாயில்லை.
பேரைச் சொல்லுங்கம்மா.
* மாயாறா மொய்யாறா அல்லி மாயாறா
ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்வாஙக
எங்க மனுசங்க, ஆடு மாடுகளெ மாயமா பண்ணும்
அதுக்குமாயச்சனியன்னு கூட பேரு வைக்கலாம்.
* ராசாக்களும், இங்கிலீஷ்காரனுகளும்
வேட்டையாடின அப்புறம் தங்கறது கேம் ஹட்.
இன்னும் கம்பீரமாத்தா நிக்குது.
இப்போ அதுக்குப் பக்கம் யாரும் போறதில்லை.
ஆவி சுத்துதுன்னு யரும் போறதில்லை.
வேட்டை ஆடுனது மான், புலி , பிராணிகதானா.
பொம்மக்கா மாதிரி
ஆதிவாசிப் பரம்பரைப் பொண்ணுக எத்தனை.
கணக்கேயில்லை.
*வறுமைக்கோடுங்கறாங்க
ஆதிவாசிக்குடிசைப் பகுதீங்கறாங்க
இந்த இடம் கடல் மட்ட்த்துக்கு மேலெ இத்தனை மீட்டர்ன்னு ஒவ்வொரு கட்டத்திலியும் எழுதி வசிசிருக்கீஙக்
எந்தக் கோட்டுக்கு மேல நாஙக இருக்கறம்.
எந்தக் கோடு எங்களைப் பிரிக்குது
சொல்லுங்க.
காலகாலமா தெரியாமத்தா இருக்கறம்.
* கோவில் திருவிழா சாமியாட்டத்திலே
ஆம்பளக் தா அதிகம் ஆடறாஙக.
எங்களை அளவா ஆடச்சொல்றாங்க.
சாமி வந்தா ஆம்பளைகதா ஆடறாங்க
எங்க மேல சாமி வர்றதேயில்லை.
*லைன்க்கு புருசன் போயிட்டான்
வெத்தலை வாங்கிட்டு வரச் சொல்லிருக்கறன்.
வெடி வை.
கிழிச்சு வெட்டு
செடி வெட்டு ஏதாச்சும் வேலை தர்றீங்க.
மென்னு துப்புற வெத்தல் மாதிரி நடுங்கிப் போறான்.
பத்து ரூபா வெத்தலைக்கு உங்க கிட்ட கை ஏந்தறம்.
* பொம்மத் தேவர் பகவதி முனிஸ்வரன் எல்லார்த்துக்கும்
சிவராத்திரின்னுகண்ணு முழிக்கப் பாட்டுப் பாடறம் .
எங்க பாட்டு கேட்டு எல்லா சாமிகளும் கண் முழிச்சிருக்கும்
எங்க புருசனுக தண்ணி அடுச்சுட்டு மேல் நோவு தாங்காமெ படுத்துக் கிடக்கறாங்க.
நாளைக்கு வெடியாலெ நேரத்தில போகனும் முள்ளு வெட்ட.
புலி மிரட்டிட்டிருக்கு யாரை அடிக்குமோ.
புருஷன் வர்லீன்னா எல்லா நாளும் சிவராத்திரிதா எங்களுக்கு.
* யானை அடிச்சு எம் புருசன் செத்துப் போனான்.
யார்யாரோ மிரட்டி என்னை சாகாம இருக்கப் பண்றாஙக.
அவங்களுக்கு நான் வேணுமாமா.
* எங்களெ கணக்குப் பண்ண ஒருத்தன்
கரடியா நடிச்சு எங்களை தொரத்திட்டிருந்தான்.
பலி கொடுக்க ஆளு வேனுமுன்னாங்காங்க.
அடையாளம் காட்டிட்டம்.
கணக்கு முடிஞசது.
* நாங்க முதுகுடி மரத்திலிருந்து பிறந்து வந்தவங்க.
தோள், தலை, கால், இடுப்புன்னு உடம்பிலிருந்து
நீங்களெல்லா பொறந்து வந்தவங்கன்னு பெருமை பீத்திக்கறீங்க.
அப்புறம் நாங்க மரத்திலிருந்துதா பொறந்திருக்கணும் .
* வீடு தர்றதா சொன்னீங்க. தர்லே.
காய்ஞ்ச புல் எடுத்து கூரை வேயறம்.
வீடு கட்ட நாங்களே மண் எடுத்தம்
கல் எடுத்தம் மண்ணுலெ பொதஞ்சாலும் தூரமாப் போன்னு கத்தறீங்க
* மந்திரம் தெர்சிஞ்சவங்கன்னு எங்களைப் பத்தி சொல்றீங்க.
மந்திரமும் தெரியாது தந்தரமும் தெரியாது.
மாயபூமி இது மாயாறு ஓடுது
நோவு வந்தா மாயமா செத்துப் போறம். அதுவும் மந்திரமா என்ன..
* மாயாத்துத் தண்ணிதா எல்லாத்துக்கும்.
குளிக்க. தொவைக்க குடிக்கன்னு.
சளி, காய்ச்சல் இருமல்ன்னு பெரிய தொல்லைகதா.
மாயாத்து முதலையே வா.
எங்க காலெ கவ்வி எங்காச்சும் இழுத்துட்டுப் போ
யானைகளே வா வந்து தூக்கி வீசு
இல்லே உதச்சுத் தள்ளு..
போதும் இந்த வாழ்க்கை.
வந்த காய்ச்சல் போறதில்ல.
வந்த வியாதி போறதில்ல்ல.
* தண்ணியெ காய்ச்சிக்குடிங்கறம்.
தாகம் தீரலே
பசி மாறெலே.
மருந்தா இருந்த தண்ணி
விசமானது யாராலே.
*கொழம்புக்கு பொறியல் உண்டாங்கிறீங்க
கொழம்பிருந்த பொறியல் இல்லே.
பொறியல் இருந்தா கொழம்பு இல்லே.
ஒரு வாய் சோத்திலதா எல்லாம் அடக்கம்.
* பொழங்கறதென்னவோ தமிழ் ஆளுககூடத்தான் .
பேசறதென்னவோ எங்க தாய் பாசையோட தமிழும்தான்.
ஆனா எங்களுக்கு பொங்கல் இல்லே.
தமிழ்ப்புத்தாண்டு இல்லை.
ஓணம் விசுன்னு கொண்டாட்டம் இருக்கும்..
மலையாள தெய்வம் இங்க.எல்லாமெ
முப்பாட்டன் கொண்டுட்டு வந்தது.
முதுமலைமுப்பாட்டன். நிலாக்கோட்டை வெள்ளி முப்பாட்டன்..
அப்புறம் பட்டாளக்காரன்.
அந்த தெய்வம் ஏழு வண்டியெ ஒரே கையில் இழுக்கும்.
அதுவும் கல் சக்கர வண்டி.
கைகழுவ சிரம்மாயிருக்கு.
முப்பாட்டன்க நெனப்பெ ஒழிக்க முடியாது.
வாழட்டும் அவங்க.
*ஒவ்வொரு பாடிக்கும் ஒவ்வொரு வகைச் சடங்குக.
ஒரே பாடிக்குள்ளதா கல்யாணம், காய்ச்சி.
இது மாறுச்சுன்னா பாடிக்குள்ள
பாடி ( பொணம் ) பண்ணீர்ராஙக.
*படிக்கிறது தமிழ் .
பேசறது குறும்பர் பாஷை.
என் மக படிக்கோணும் இங்கிலீஷ்.
* நான் உங்க ஊருக்கு வரமுடியாது
நீ எங்க ஊருக்கு வேடிக்கை பாக்க வர்லாம்
அவ்வளவுதா.
உன் அப்பா அம்மா என்னப்பா அம்மா ஆக முடியாது.
மாமா அத்தைன்னு ஆக முடியாது.வெவ்வேற பாடிக நாம.
* மக சுரிதார்தா கட்டறா
எல்லாத்துக்கும் அதுதா சவுகரியமா இருக்கு
நான் சம்பிரதாயமா கட்டற
மாருக்கு கொஞ்சம் மேல கட்டற சேலை நழுவி நழுவி போயிருது.
இழுத்துக் கட்டி இழுத்துக் கட்டி அலுத்துப் போச்சு.
கொஞ்சம் இழுத்தா நசிஞ்சது கிழிஞ்சும் போயிருது.
நைட்டி சரிதான்.
ஆனா கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கிலையா.. அதுதா.
மானம் பெரிசு .
பாடி பெருமை பெரிசு.( பாடி – வாழிடம் )
*டிகிரி படிச்சான் மகன்.
வேலை கெடக்கைலே. சரிதா .
கூலி வேலையில கஞ்சி கெடைக்குது.
எப்பாச்சும் வாங்கிட்டு வர்ற இங்கீலிஷ் பேப்ப்ர்
படிக்கற பெருமைதா எம் மகனுக்கு.
* வெளியூர்,
வெளியூர் பாடின்னு ஊர்கள்லெ இருந்து வர
ரெண்டு நாள் கூட ஆயிருது.
பொணத்தைப் போட்டு ரெண்டு நாளும் கெடக்க வேண்டியிருக்கு.
சுடுகாட்டுக்கு ரெண்டு மைல் போகணும்.
பக்கத்தில சுடுகாடு கேட்டு பலதரம் விண்ணப்பம் குடுத்தாச்சு.
நீங்க கரண்ட்லே சீக்கிரம் எறிஞ்சு சாம்பலாயிர்றீங்க
* நீயே ஒரு ஊராயிருவேங்றீங்க
எனக்கு எட்டு பேர் கொழந்தைக
என்பெரிய மகளுக்கு 5 பேர் கொழந்தைக
என் பெரிய மகனுக்கு 6 பேர் கொழந்தைக .
குடும்பக்கட்டுப்பாடுன்னு ஒண்ணும் பண்றதில்லெ
கோமுகம் அப்பிடிப் பண்ணி செத்துப் போனா.
இதிலெ ஜனத்தொகை வேற கொறஞ்சிட்டே வருதுங்கறாங்க.
நெசமான்னு தெரியலெ.
எதுக்கு அப்பிடி சொல்றாங்கன்னு புரியலே.
*ரேசன்லே 34 கிலோ அரிசி போடறாங்க.
8 பேர் குடும்பத்துக்கும் 34 கிலோ
4 பேர் குடும்பத்துக்கும் 34 கிலோ
ரேசன் கார்டு குடுக்கறாஙக.அது இதுக்கு மட்டுந்தா ஆகுது.
வூடு கட்டித்தர்றதில்லெ.
காலமெல்லா வாய்க்கரசி மாதிரி இதைத் தா தர்றாஙக்.
புழுங்கல் அரிசியெ எங்களுக்கு
வாய்க்கரிசியாவே போட்டர்றாஙக.
* தேன் எடுக்கக் கூட யாரும் போறதில்லெ.
எடுத்தாலும் எங்களுக்குத் தெரியாமெ
எதுக்கு எடுத்தேன்னு புடிங்கிட்டுப் போயிடறாங்க.
எவ்வள்வு கஷ்டப்பட்டு தேன் எடுத்தாலும்
எங்களுக்கு பிரயோசனம் ஆகறதில்லெ.
தேன் நக்கி ரொம்ப நாளாச்சி.
* பூசாரி நம்மாளில்லை
நிலம்புர் அய்யர் வர்றான்.
கூடூர் அய்யர் வர்றான்.
வாத்யம் நாஙக .
பூஜை அவங்க.
சாமியாட்டம் நாமதா.
நமக்குதா சாமி வரும் .
அந்தப் பெருமையை யாரு புடுங்கிக்க முடியாது.
* இந்தக் கோகாலெ ( இசைக் கருவி )
வாசிக்க எந்த பசங்களால கையாகருதில்லை
. மூச்சு தெனறானுக,
கேட்டா செல்போன்லே எதாச்சும் மியூசிக் போட்டு
இது போதுங்கறாங்க.
*பொண்ணு முந்தியல வெத்தலை.
மாப்பிளை துண்டுலெ பாக்கு .
மொய் 10, 50ன்னு வரும்.
வெத்திலை போட்டு
நாக்கு நல்ல செவப்பாகறது நல்ல சகனம்,
நல்ல தாம்பத்யம்.
* கொஞ்ச நேரம் நடனம் ஆடினம்
கோகலெ சப்தம் கேடு சின்னப் பையன் அழறான் பாருங்க.
அவனுக்குப் புடிக்கலே போல.
இதைக்கேட்டு பாம்பு வந்துது .
எங்க நடனத்திலே
தரையில அதிர்வுனாலே
பாம்புகள் நகந்து வந்திருக்கும்
அதெ ஒருநாள் இவன் பாத்துட்டான். பயந்துட்டான்.
கோகலெ சப்தத்துக்கு மனுஷன் மயங்கறது காணம்.
பாம்புகதா மயங்கி வருது போலன்னு
நெனச்சுக்க வேண்டியிருக்கு.
.
*பணம் கொட்டி பணப்பயிர் விளைவிச்சாச்சு.
கத்தை கத்தையா பணத்தைக் கொடுத்து காட்லே பங்களாகா வந்திருச்சு.
எங்களயெல்லா வெளியேத்தியாச்சு.
வாயுள்ள எங்க குரல் எடுபடவேயில்லே.
இதிலே வாயில்லாத
பாம்பு, மயில், யானை, மான் இதெல்லாம் எங்க போகும்.
அதயும் துரத்துனா எங்க போகும்.
மிச்சக்காட்டையாவது விட்டு வையுங்க
வாயில்லாத ஜீவன்களுக்கு
.புழு, பூச்சின்னு பொழங்கற எடமா அது இருக்கட்டும்.
* குலதெய்வத்துக்குன்னு ஒரு இடம்
காலம் காலமா இருந்துச்சு.
யார் யாரோ வந்து பங்களாகட்டி எல்லாம் அடச்சாச்சு.
குலதெய்வம் கோவிலுக்கும் போக முடியில.
ஒத்தை ஆளு போறமாதிரி சின்ன எடமாச்சும் குடுங்க
எங்க குலதெய்வம் நடமாடறதுக்கு.
நாங்க அவன் கிட்ட நடந்து போறதுக்கு.
*சடையாண்டியப்பனுக்கு பொங்க வெச்சு
கம்பம் போட்டு ஆடுவம்.
இப்போ அதுக்கு இடமிலாமெ யார் யாரோ அடச்சுட்டாங்க.
பெரிய பெரிய ஆளுக போட்டது.
ஊர் பூராவும் பேதி, காய்ச்சல்.
நாங்க உயிர் பொழைக்க நோவு தீரணும்
வழி வுடுங்க சாமி.
சடையாண்டியப்பனுக்கு கம்பம் போட.
* சடையாண்டி, ஏழு கன்னிமாரு எங்க குல தெய்வம்.
எங்க சாமியெ கும்பிட்டு கூப்பிய கையோட நின்னா
எதித்து நிக்கற யானையும் திரும்பிப் போயிடும்.
இந்த வேங்கி மரத்துக்கு வயசு தெரியாது .
ந்த நோய் வந்தாலும்
வேஙகி மர இலைதான் மருந்து.
வேஙகி மரத்துக்கு வெட்டு வுழுந்திருச்சு.
பாட்டன், பூட்டன் முப்பாடனுக்கு கோபம் வந்திருச்சு.
அவங்ககிட்ட மன்னிப்பு கேட்க
ஒரு பொங்க வைக்க எடம் குடுங்க சாமி.
* விறகு பொறுக்க நைட்டிதான் செரி.
தேஞ்ச செருப்புதான் செரி.
அழுக்கு உடம்புதான் செரி.
பவுடர் பாத்து ரொம்ப நாளாச்சு.
வெறகு வெட்டறப்போ புலி வந்தா
முறைக்கறதுக்கு தைரியந்தா வேணும்.
எங்க ஓடி ஒளிஞ்சா உயிர் பொழைக்கலாமுன்னு தெரிஞ்சா போதும்
.பவுடர் வேண்டா.
* ஊட்டிப்பக்கம் போன்னா
எங்க டிரஸ்சைப்பாத்து போட்டோ புடிக்கறாங்க.
எங்களெப் பத்தி எழுதறம்னு சொல்றாங்க,
போட்டோதான் பத்திரிக்கையில் வருது.
எங்க பிரசினை ஒன்னுக்கும் தீர்வு வர்லெ..
எங்க பாஷை எல்லார்த்துக்கும்
சாதாரணமா சாமான்யமா புரியற பாஷைதானே.
* நிகுநிகுன்னு வெந்தேக்குமாதிரி
ஒரு பொண்ணெ பாத்திருக்கன் அம்மா .
அப்பாகிட்ட நீதா சொல்லணும்.
எங்கட அவ.
இன்னொரு பதி.
உனக்குப் பாதியா வர்றவ
இதே பதிதாண்டா இருக்கணும்.
வேற பதி, ஊருன்னா நம்ம பதி, ஊரு ஒத்துக்கமாட்டாங்க…..
அதை மீறுனா
வெளிய போனவனெ புலி, சிங்கம், சிறுத்தை அடிச்சு போட்டிருச்சி.
ஆளு காணாமெப்போயிருச்சுன்னு நெனச்சுக்கச் சொல்லுவாங்க.
*நானு தனியா உக்கார்ந்து கோகலே வாசிக்கறன்.
எம் பேரன் 20 ரூபாய்க்கு வாங்கின
பொம்மையில் இருக்கற செல்போன்லே
ரிங்க் டோன் கேட்கறான்.
அவனுக்கு அது போதுங்கறான்.
* காட்டுக்கு காவலனா இருந்திருக்கேன்.
இப்பொ வயசாயி கால்லு ஆணி வுழுந்திடுச்சு.
காருங்க பார்க்கிங் எடத்திலெ பாஸ் குடுக்கற வேலை.
பணக்காரனுக்கு கார் கதவு தொறந்து மூட வேண்டியிருக்குது.
கஷ்டகாலம்ன்னா இது தானா.
சோத்துக்கு வந்த பஞ்சம்ன்னா இதுதானா.
* ஆபிசருங்க நாங்க
கேம்ப் வேலைமுடியலே.
தனிக்காட்டுக்குள்ள இருக்கறம்.
இருந்த அரிசியும் பருப்பும் தீந்து போச்சு.
செட்டில்மென்ட்லே போயி உட்காந்துட்டம்.
டெய்லி ராகி களி, ராகி உப்புமாதா.
மகராசிங்க சமச்சுப் போடறாங்க .
நாலு நாளு கழிச்சு
லாரி சாமானுகவோட வந்துச்சு. வேலையும் முடிஞ்சுபோச்சு.
யாருக்கும் செட்டில்மெண்ட் உட்டுப் போக இஷ்டமில்லெ.
லாரிக்காரன் கதர்றான்.
“ உங்க பொண்டாட்டி மார்களுக்கு யார் பதில் சொல்றது.
வாங்க ஊர்லே கொண்டு போயி உட்டர்றம் “
* ஊட்டியில ஆதிவாசித் திருவிழா.
ம.பி. காரன் வந்து ஆடுனான்.
உ.பி. காரன் வந்து ஆடுனான் பீகார்காரன் வந்து ஆடுனான்.
நம்ம டேன்சுதா ஒசத்தி. யார் ஒத்துக்கறா
நாங்களே சொல்லிட்டம். ஆமா..
* விற்கறதுக்கு விறகு எடுக்கலெ.
காட்டெ காப்பாத்தறதுக்கு விறகு எடுக்கறம்.
நாங்க காட்டுக்குள்ள நடமாடாட்டி
வேற எவன் எவனோ நடமாடறான்.
எவன் நடமாறான்னு கண்கானிக்க வேண்டியிருக்கு
காட்டெக் காப்பாத்த நடமாட வேண்டியிருக்கு.
** காபி போடுனு சொல்லி
சக்கரயும் காபி பவுடரும் வாங்கிட்டு வ்ந்து குடுத்தீங்க.
இந்நேரம் காபி ஆகலியான்னு நச்சரிக்கிறீங்க.
கரண்ட் அடுப்பா எங்ககிட்ட இருக்கு.
காஸ் ஸ்டவ்வா எங்க கிட்ட இருக்கு.
பச்ச வெறகை வைக்கறம்
பாழும் வயிறு எறியிற வேகத்திலெ கூட
அடுப்பு எறிய மாட்டேங்குது.
* கிங்பிசர் ஒரு ரூம்.
மினிவெட் இன்னொரு ரூம் பேரு.
அதில தங்கியிருந்தாங்க ஒரு ஆம்பளெ, ஒரு பொம்பளெ , ஒரு கொழந்தெ.
கொஞ்சம் சிரிச்சாஙக்.
ரெண்டு நிமிடப்பேச்சுதா போதும் அது.
வெறும் வெசாரிப்புதா
பிரிஞ்சு போயிட்டாங்க.
விசிட்டிங்கார்டு குடுத்துடுட்டு.
ரெண்டு நிமிசம் பழக்கம்
.இருபது வருசத்துக்கும் மறக்காது.
காட்டோட மகிமை அது.
* இலவசமா டி.வி குடுத்தாங்க.
கரண்ட் குடுக்கலெ.
அவசரத்துகு ஆம்பளைக அடமானத்துக்கு வெச்சாங்க
மூழ்கிப் போச்சு அதுவும்.
அவசர ஆம்புலன்சு நெம்பர் குடுத்திருக்காங்க.
* வேட்டைக்கு வர்றவங்க மான், புலி, கொக்குன்னு சுடறாஙக
. சில சமயம் எங்களெப்பாத்தும் சுடறாங்க.
அப்பிடி வேடிக்கையா சுட்டதில
எங்க பாட்டன் செத்துப் போனான்.
தெய்வமா ஆயிட்டான். செலை வெக்கலே.
நடு கல்லு வெச்சம்.
கோயில் கட்டலே. ஆனா சாமியா இருக்கான்.
* கேம் ஹட். வேட்டயாடி ஓஞ்சங்க தங்கற எடம்.
செவலை அங்கதா தூக்கிலெ தொங்குனா.
வேட்டைகாரனுக்கு புது பங்களா கெடச்சிருச்சு.
செவலி வேற இடம் கிடைக்காதமாதிரி
அங்கையே அலையறா..
* யானைக்காரனுங்க திருடனுங்கன்னு சொல்றாங்க.
நாஙகதா வனத்தைக் காப்பாத்துனம்.
விறகு கூட அடுப்பெறிக்கத்தான் பொறுக்குவம்.
விக்கக் கூட எடுக்கறதில்லை.
இதிலே தந்தம் எடுத்து என்ன செய்யப்போறம்.
* மேக்காலெ விதம்விதமா
கஸ்ட்ஹவுஸ், பங்களா, டார்மெட்டரி வந்துட்டே இருக்கு.
ஆபிசருங்க கோட்டர்ஸ் மாதிரி வீடுகளுக்குக் கொறச்சில் இல்லெ.
எங்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர மாட்டேங்கறாங்க..
நாஙக வெளியேறணுமாமா.
வீடு கட்டிக்குடுத்துட்ட வெளியேறமாட்டமாமா
.எங்களை எப்படி வெளியேத்தறதுங்கறது அவங்க கஷ்டம்.
வீடில்லாம பொழங்கறது, பொழைக்கறது எங்க கஷ்டம்.
* முடிவெட்ட முந்தியெல்லா
எங்களுக்குள்ளேயே ஆளுக இருந்தாங்க.
காலம் மாரிப் போச்சு .
இப்போ தனியா பார்பர்ன்னு வர்றான்.
கோவில் விசேசம்ன்னா முந்தியெல்லா
நாங்கெளே பண்ணிக்குவம்.
இப்போ அய்யர்ன்னு யாராச்சும்
கீழிருந்து வர்ற இரகசியம் யாருக்குத் தெரியும்
* இந்தக் காட்டேஜ் உசத்தியானது.
செல்போன்லே வந்து தங்குனவர் சொல்லிட்டு இருக்காறார்.
எதுத்தாப்பலே மாயாறு சலசலன்னு ஓடுது.
மானுக, காட்டுப்ன்னி, மயிலு சாதாரணமா நடமாடுதுக.
எப்பாச்சும் யானை தட்டுப்பட்டு போகுது.
ஒரு கருஞ்சிறுத்தையை இங்க பாத்ததா பக்கத்திலிருந்தவர் சொல்றார்.
அவர் இருக்கற காட்டேஜ்ல தர்மேந்திரா, ஹேமாமாலினி இருந்தாங்களாம்.
ஹாத்தி மேரா சாத்தி, மா பட ஷீட்டிங்கப்போ தங்கியிருந்தாங்களாம்.
அந்தக் காட்டேஜ்லே தங்கியிருக்கறதெப்பத்திப்
பெருமையா சொல்றார் அவர் செல்போன்லே..
நாங்க் பொழங்காத காட்டேஜா.
நாங்க டாய்லெட், பாத்ரூம்ன்னு கழுவுறதிலெ இருந்து
தண்ணியடுச்சுட்டுப் போடறதையெல்லாம் துடச்செடுக்கறம்.
வாந்தியெடுத்து நாசம் பண்ணுனாலும் சுத்தம் பண்றம்.
வந்து தங்கிப் போறவங்க பெருமையா சொல்லிக்கறாங்க.
இங்க் இருக்கறதே பெருமையா
சொல்லிக்க ஒண்ணுமில்லே எங்களுக்கு.
* கவர்மெண்ட் வூடு தர்லே.
கவர்மெண்ட் வூடு கட்டியும் தர்லே.
நாங்களே கட்டிகிட்டம்.
பக்கத்திலெ மண் எடுத்தா எதிர்க்கறாங்க.
பக்கத்திலெ கல் எடுத்தா எதிர்க்கறாங்க,
எங்கிருந்தோ கொண்டு வந்து கட்டி
மொழுகுனாலும் பொச்செரிப்பு படறாங்க.
அதையும் இடிக்கணும்கறாங்க.
காரணம் சொல்ல மாட்டேங்கறாங்க.
தகர தகரம் போட்ட ஊவூட்லெ இருக்க வுடமாட்டேங்குறாங்க
மண்ணு வெச்சு கட்டுன ஊவூட்லெ இருக்க வுடமாட்டேங்குறாங்க
ஆஸ்பெஸ்டாஸ் போட்ட ஊவூட்லெ இருக்க வுடமாட்டேங்குறாங்க
ஆனா அவங்கெல்லா அவங்கவுங்களுக்கு வூடு கட்டி
சவுகரியமா பொண்டாட்டி புள்ளைககளோட இருக்காங்க.
* வந்தவங்க நாட்டுக்கோழி பண்ணச் சொன்னாங்க.
வந்தவங்க ரண்டு பேரு. சாப்புட உட்காரும் போது எட்டுப் பேரு.
எனக்கு ஒரு துண்டும் கெடைக்கலெ.
நாலு துண்டு எடுத்து வைச்சு வெளையாட்டு காட்டறான் சின்னப்பையன்.
திருட்டு பயபுள்ளே வேக்கானமா..
* யானைக்கு தர்ற கவளத்திலெ சிதறது
யானை வேண்டான்னு
ஒதுக்கறதில சிந்தறதுதெ திங்கறதுக்கு
வர்ற காட்டுப்பன்னிக நீங்க.
மிச்சத்தைத் தின்னு பொழையுங்க.
தனியே என்ன குடுக்க
தனியே என்ன தேவை.
தனியே என்ன யார் குடுப்பாங்க.
போங்கடா
மிச்சமாகறதே காட்டுப்பன்னிக தொரத்தித் தொரத்தி தேடி
நக்கற மாதிரி இருந்துட்டுப் போங்க.
* யானை ஒரு நாளிக்கு 16லிருந்து 20 மணி நேரம் சாப்புடுமாமா
.நீதர்ற 3 கவளம் 13 நிமிசத்திலே முடிஞ்சு போகுது.
இதிலெ 3 துண்டு கரும்பு வேற இலவசம்ங்கற மாதிரி.
ஆணுமில்லாமெ. பொண்ணுமில்லாமெ இருக்கற
மோழை யானைகளுக்கு பெரும் பலம் .
எதை வேணும்னாலும் தூக்குதுக. பொரட்டுதகுக.
மொரட்டுத்தனத்துக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும்.
வயசான யானைக நின்னுட்டே தூங்குதுக.
தூங்கற யானை முழிச்சிட்டா
பண்றர லொல்லு பாத்துத் தூக்கி எறிஞ்சுரும்.
அது மாதிரிதா நாங்களும்.
தூக்கியும் எறிவோம்.
* சங்கிலி போட்ட யானைக்குப் பின்ன
நாலடியில காட்டுப்பன்னிக.. பின்ன நாப்பத்டியில மயிலுக.
பின்ன எண்பதடியிலெ காட்டுப்பன்னிக..
பின்ன நூறு அடியில காட்டுவிலங்குக .
எல்லார்தோடயும் எங்களுக்கு சினேகிதம் இருக்கு..
ஆனா மனுசனுக்கும் எங்களுக்கும் இடவெளி ரொம்ப தூரம்தா.
* யானை நிக்கற எடத்திலெ
பத்து அடியிலெ நீயும் உன் குடும்பமும்.
நெருங்கி நெருங்கி பாக்கறே.
மதம் உன் மனசிலெ இருக்கு..
* மரத்திலெ கரையான் புடுச்சாலும்
ஒண்ணும் பண்ணாதே.
உலுக்கி வுடாதே.
இருக்கறது அதது அப்படியே இருக்கணும்கறீங்க.
இயறகையை தொந்தரவு செய்யாதேங்கறீங்க..
செரி உங்க பங்களாவுக்கு மட்டும்
புது தார் ரோடு எப்பிடி போட்டிங்க.
* பெட்டிக்கடை கூட இல்லெ.
டீக்கடை கூட இல்லே.
பிளாஸ்டிக் எங்கையும் . தட்டுப்படக்கூடாதுன்னு ஏகப்பட்டக் கட்டுப்பாடு.
செரி பிளாஸ்டிக் கழிவா நிறையுதே மாயாறு.
எப்பிடி
பிளாஸ்டிக்கு நெகிழின்னு பேரை மாத்தி வெச்சாப் போதுமா..
* வயநாடும் பந்திப்பூரும் நீலகிரியும் கூடலூரும்
தலையும் காலுமா தோளும இருக்கற பூமி
.மாயாறா ..மோயாறா.
களிநடனம் புரிய பின் தொடர்ந்து போயி.
நீர்மூழிகிச் செத்துப் போன இளைஞர்கள் உண்டு.
சடலங்கள் அப்பப்போ கரை ஏறும்
. தெங்குமரஹடா வரைக்கும் களி நடனம்தா.
அப்புறமும் கூட.
ஆறுன்னா சும்மாவா.
* மனிதர்கள்லே எத்தனை வகை.
600 வகை யூகலிப்டஸ் உண்டு.
பாக்கெட் சோலாவிலெ மரங்களை வெட்டி நாசமாக்கறாங்கன்னு
வெள்ளைக்காரன் கொண்டு வந்தது யூகலிப்டஸ்.
நிலத்தடி நீரை உறிஞ்சி மேக ஈரத்தை உறிஞ்சி
எங்கையும் நிறைஞ்சிருக்கு .
அன்பு சிவமாய் அது.
நீர் உறிஞ்சி நீர் உறிஞ்சி தோட்டங்கள் வறண்டு போய்
விவசாயி தேயிலைத் தோட்டத்துக்கு கூலியாளா போற காலம் எப்பவோ வந்தாச்சு.
தேயிலையை வெள்ளைக்காரந்தான் கொண்டுட்டு வந்தான்
யூகலிப்டசையும் வெள்ளைக்காரந்தான் கொண்டுட்டு வந்தான்
* புலி க்ளின் ஈட்டர். பிராமின் ஈட்டர்
சிறுத்தை அக்லி ஈட்டர்ன்னு சொல்றாங்க.
வந்து நிலைச்சு போயிட்ட கார்ப்பரேட் கம்பனிக
மேன் ஈட்டர்.
* சிஙகம் பூனைக் குடும்பம்
சிறுத்தை பூனைக் குடும்பம். அதனதன் புத்தி அதுக்கு.
கார்ப்பரேட் கம்பனிக என்ன குடும்பம்.
* ஆச்சாவ் குட்டைமரத்து எலைகளெ ஆடுக தின்னா அபராதம்..
அபராதம் கட்ட காசு இல்லாமெ ஆட்டை வித்துத்தா கட்டணும்.
ஆடு இல்லாமெ போச்சுன்னா
என்ன குட்டைமரத்தை ருசி பாத்திருச்சான்னு
ஒரு கேள்வி எளக்காரமா வரும்.
* எவனெவனோ வந்து மரம் வெட்டறான்.
கடைசியில எங்க பேரைச் சொல்லீர்றாங்க.
நுனி மரத்திலெ உட்காந்து ஒருத்தன் மரம் வெட்டறான்.
கிளையை வெட்டறான்.
பார்வதி சிவன் பாக்கறாங்க.
பார்வதி சொல்றா. அம்மான்னு வுழுந்தா நான் காப்பாத்தறேன்.
அப்பான்னு வுழுந்தா நீங்க காப்பாத்துஙக்.
கடைசியிலெ அவன் வுழுகறப்போ கத்துனது.
“ வ………………ளி செத்தேண்டா “
* வெண் தேக்கு நிகுநிகுன்னு இருக்கும்.
அதுக்கு நேக்கட் பியூட்டி ஆப் பாரஸ்ட்ட்னுப் பேரு.
அதுக்கு பக்கத்திலெ போய் நிக்க எளசுகளுக்கு வெக்கமாப் போயிரும்.
வெக்கத்தோ பாக்கனும்னா
வெந்தேக்கு மரத்துக்கு பக்கம் நிக்க வைக்கணும்.
* சந்தன மரம்மாதிரியே இருக்கும்.
கொஞ்சம் வாசனையும் அதுமாதிரிதா இருக்கும்.
சந்தன மரம்ன்னு நெனச்சு புது ஆளுக வெட்டி மாட்டிங்குவாங்க.
அதுக்கு தேவிடியா சந்தனும்ன்னு கூட இன்னொரு பேரு.
அதெத் தொட்டவன் உடம்பு எறிஞ்சு பிரச்சினையாகும்.
சந்தனத்தை உடம்பிலெ பூசிட்டா குளுகுளூதா.
இந்த சந்தன மரத்தை தொட்டுட்டா குளுகுளுதா..
* கடன் வேணுமான்னு கேட்கறாங்க.
அடமானம் வெக்க பொம்பளைகளெ கேட்கறாங்க.
* முண்டுதா எங்க பாரம்பரிய ஆடை
. முண்டுலெ எத்தனை வகைன்னு
ஆராய்ச்சி பண்ண கேள்வி கேட்கறதுக்குன்னே பல பேர் வந்து போறாங்க.
. நாங்க நீக்ரோ இனம்ன்னு சிலபேர் சொல்றாங்க,
நாங்க ஆஸ்த்ரேலியா இனம்ன்னு சிலபேர் சொல்றாங்க,
நாங்க சோளகர் இனம்ன்னு சிலபேர் சொல்றாங்க,
அவஞ்க சொல்றதெல்லா
ஊர் பேரா .. உறவு பேரான்னு கூடத் தெரியலே.
* மூணு வேளை சாப்புட்டா ரோகிதா.
எங்களுக்கு மூணாம் வேளைக்கு எதுவும் இல்லெ
.ஒரு வேளை பட்டினிங்கறதெ
ரெண்டு வேளை சாப்புடறதாலெ அப்பிடி சொல்லிக்கறம்.
மதியம் பலாப்பழம் கெடச்சா பெரிய யோகம்.
* பதிக்கு யார் வந்தாலும் வெறும் கையோட அனுப்பறதில்லை.
என்ன தானியம் , தெவசம் இருக்கோ
அதிலெ ஒரு கை குடுத்து அனுப்புவோம்.
.சின்னான் எனக்கு வெத்திலையும் பாக்கும் தந்தான்.
எங்க சினேகிதம் பதியிலெ எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு..
உள்ளங்கை தானியம் ஊருக்கே தெரிஞ்சு போச்சு.
* பிரசவம்ன்னு வந்தா எங்களுக்கு காடுதா தாய்.
ஆஸ்பத்திரி எல்லாம்
காட்டுக்குள்ள போயுருவம்..
யாராச்சும் ஒரு பொம்பளெ தொணைக்கு இருப்பா.
சுகப்பிரசம்ன்னா திரும்புவோம் .
இல்லீன்னா அங்கியே பொதச்சிருவாங்க..
இப்போ காலம் மாறிப் போச்சு.
உம்ன்னா இலவச ஆசுபத்திரிக்கு கூட்டிட்டிடுப் போயிர்றாங்க.
மருந்து ஊசியும்..
எப்பத்திக்கும் இல்லாததை
ஒடம்புலெ போட்டு பொம்மை மாதிரி பண்ணிர்றாங்க.
பொம்மையெ பெத்துக்கற மாதிரி பெஹ்துக்கறம்.
*தினையும் சாமையும் சாப்பாட்டுக்கு மட்டுந்தானா..
எங்க பாட்டுக்கும் அந்த பேர்தா.
தெனப்பாட்டு சாமெ ஒக்கப்பாட்டுன்னு பிரிச்சிக்குவம்.
பாடறப்பவும்
மனசு செரியா கெடைக்காத சாப்பாடு மேல போயிரும்.
பாட்டும் சில சமயம் பிசகிரும்.
*கொல தெயவம் கும்படறம்ன்னு
காவடிச் சடங்கு நடத்துவம்.
காவடியாட்டம் போட்டதிலெ
கால் பிசகி நொண்டியாயிட்டான் என் மாமா.
வெத்திலையும் பாக்கும் குடுத்து
சினேகமான மாமன் நொண்டியாயிட்டதாலெ
எங்க பதியில் பிரச்சினை.
நொண்டியெ எதுக்கு கல்யாணம் பண்ணிக்க்கறேன்னு..
ஒத்தி போயிட்டே இருக்கு.
மனசுலெ எல்லாரும் நெண்டி நொண்டிதா நடக்குறாங்க.
* வசலை மாடு
சிங்கை
சுருளி
பாவை
பட்டி
கோவினு வகைவகையான கீரைகளை
கோணிப்பையில் தண்ணி தெளிச்சு
குடும்பத்துக்குன்னு ரொம்பதூரத்திலிருந்து கொண்டு வருவேன்
ஈரம் மீறி வறண்டு போச்சுன்னா
கெட்ட சகுனம்.
அன்பு கொறஞ்சு போச்சுன்னு அர்த்தம்.
அன்பு இல்லாமெப்போச்சுன்னு அர்த்தம்.
சங்கடமாப் போயிருது
* வயசானவிய செத்தா
எழவு காணப் போகையிலெ
வறட்டுக்குச்சி கொண்டுட்டுப் போகனும்
எளவயசுன்னா
பச்சைகுச்சியோட போகணும்
அடுப்புலெ வறண்ட குச்சின்னு நெனச்சு
பச்சையைப் பத்த வெக்கறது …
பச்சைக்குச்சியா போயி எரியாத மாதிரி இருக்கறதுதா எங்க பொழப்பு.
* கீழிலிருந்து வந்தவன் பேராசைக்காரன்.
சந்தன வாசனையின் மரம் வெட்டியவன்தான்.
“ இது தேவிடியா சந்தனம்” உன்னையும் ஏமாத்திருச்சு..
மரத்தைப் பார்த்தாலே பேராசை வரும்.
என்னையும் ஏமாத்திருச்சு.
அந்த சந்தனம் மரம் போல இருக்கணும்
மலையிலே இருக்க முடியாதே.
*வெண் தேக்கு மாதிர் ஒரு பொண்ணைப் பாத்திருக்கேன் உனக்கு.
நானும் உரிச்ச கோழி மாதிரி ஒரு பொண்ணு பாத்திருக்கேன்.
எங்க கீழ
நம்ம பாடியிலதான்னா செரி. இல்லீன்னா சாவுதா
பாடியில ” பாடி”யாயிருவே.
.
* யானை கிட்ட சாகறதிலெ எங்களுக்கு அவமானமில்லே.
பஸ்லெ அடிபட்டு சாகறது
லாரியில நசுங்கி சாகறது
ஏரி குளம்ன்னு வுழுந்து சாகறது
விசம் என்னென்ன இருக்குன்னு தேடிப்புடிச்சு சாகறது.
மிசினிலே கை பட்டு கை போயி கால் போயி சாகறதுன்னு
எவ்வளவு விதமா சாகறீஙக.
இது இல்லாமெ தூக்கு போட்டு சாகறது,
ரயில்லே வுழுந்து சாகறதுன்ன்னு உங்களுக்கு
இதிலெ யானை கிட்ட சாகறதிலெ
எங்களுக்கு அவமானமில்லே.
* கொழந்தைக பேரு சொல்றமாதிரி
மரங்களோட பேரைச் சொல்லிக்குவம்.
முள்மகிழ், காட்டிருப்பை, உலக்கைப்பாலை,
ஏழிலைப்பாலை, வெப்பாலி, கொடிப்பாலின்னு
நீங்க கேள்விப்படாத பேரெல்லாம் சொல்றம் பாத்தியா.
இதெல்லா நாஙக் பேர் சொல்லிக்கூப்புட்டு
அப்புறம் கட்டிப் புடுச்சு முத்தம் குடுக்கத்தா.
எவனுக்கும் வெட்டிப் படறதுக்கில்லெ.
அதுக்கு எங்கலியே வெட்டிப் போட்டுக்கலாம்
* நாஙக் யானைகளெ வெள்ளின்னு செல்லமா கூப்புட்டுக்குவம்
ஆனா அதுக்கு வெள்ளைன்னா புடிக்காது.
கரண்ட்ட் கம்பங்க வெள்ள வெள்ளையா நின்னு யானைகளெ மிரட்டுது,
அதுகளும் நாலு தள்ளு தள்ளு சாஞ்சு போக வைக்குது.
வேண்டா கரண்ட்டுன்னு எங்களுக்கும் ஆகிப் போச்சு.
எங்களையும், யானைகளையும் சாகடிக்க
கரண்டு வேலி போட்ட இடமாப்போச்சு இது.
* காட்லே மரத்தையெல்ல வெட்டி
எடுத்துட்டுப் போறீங்க..
மரங்களை வெட்டுன இன்னொரு
எடத்திலெ கட்டடங்களெக் கட்டறீங்க
மாசம் ஒரு தொட்டிச் செடின்னு வாங்கி வெச்சுக்கறீங்க.
அதுக்கு உங்களாலே
தண்ணி கூட ஊத்த முடியலே.
காஞ்சு காஞ்சு கருகிப் போகுது.
தொட்டிச் செடிக உங்க பட்ஜெட்லே இருக்கலாம்.
பணம் உங்க பாக்கெட்லியும் இருக்கலாம்.
எங்க மனசிலெ…
- முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்
- வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….
- கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016
- சோறு மட்டும்….
- ராப்பொழுது
- இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
- வீண்மழை
- காப்பியக் காட்சிகள் 6.வீடுபேறடையும் வழி
- வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்
- செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக
- மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
- தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
- வௌவால்களின் தளம்