ராப்பொழுது

This entry is part 5 of 14 in the series 29 மே 2016

அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் விளக்குகளும் இல்லாத அந்த நிலையத்தில் சனங்களின் நடமாட்டம் எள்ளளவும் குறைந்த பாடே இல்லை. மனிதர்கள் விளக்கு இல்லை என்பதால் ஊர் போகாமலிருக்க முடியுமா என்பது அரசின் எண்ணமாக இருக்கவேண்டும். அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரும் தான் உண்டு தன் ரைஸ்மில் வியாபாரம் உண்டு என்று இருந்தார். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் அவரே செயிப்பார். அவர் கணக்கில் இன்னொரு கடை அல்லது ரைஸ் மில் கூடும். ஆனால் மக்களுக்கு எந்த வசதியும் கூடாது.
கங்காதரன் சென்ற மாதத்தில் ஒருநாள் அந்த ஊர் எல்லையை மிதித்தான். அவன் மிதித்த அவனுடைய கெட்ட நேரம். அதன் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளை அவன் எதிர்பார்த்திருந்தால் ஒரு வேளை அவன் அந்த ஊர் எல்லையை ஏன் அந்த மாவட்டத்தின் எல்லையையே மிதித்திருக்க மாட்டானோ என்னவோ!
கங்காதரனுக்கு சொந்த மேல்பள்ளிப்பட்டு. திருப்பத்தூர் டவுனின் ரைஸ் மில்லில் அவன் சொற்ப வருடங்கள் வேலை பார்த்திருந்தான். அவனுடைய உண்மையான உழைப்பைக் கண்டு அவனுடைய எசமானன் அவனை மனதாரப் பாராட்டிக் கொண்டே இருப்பார். ஆனால் அவருடைய போதாத நேரம் அவர் தன் ரைஸ் மில்லை விற்று விட்டு சொந்த பந்தங்களோடு தூரதேசம் போக வேண்டிய நிர்பந்தம்.
“கங்கா ஒன்னிய மாதிரி ஒரு வேலைக்காரன், நாணயமான உழைப்பாளி கெடைக்கறது ரொம்ப சிரமம்பா இந்த காலத்துல.. நீ நல்லவன்.. இன்னும் மேல மேல வரணும் “ என்று சொல்லி அவன் கையில் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை திணித்து விட்டு புறப்பட்டுப் போனார்.
மதுரைப்பக்கம் ரைஸ் மில்லுங்க அதிகம்னும் அங்கன வேலைக்கு போன நெறய காசு பணம் கெடைக்கும்னும் அவன் கூட வேல பாக்குற ஆரோக்கியதாஸ்தான் சொன்னான். அவனும் கூட வர்றதாதான் ஏற்பாடு. கடோசி நேரத்துல அவன் பங்காளி ஒருத்தன் வெட்டுக்குத்து தகராறுல மாட்டிக்கிட்டதுல இவன் பேரும் இழுத்து விட்டாப்ல ஆகிப்போச்சு.
கங்காதரன் ஒருமுறை கண்களை விழித்துப் பார்த்தான். எங்கும் மினுக்கும் வாழைத்தண்டு விளக்குகள். பூச்சி பறந்தால் ஒட்டிக்கொள்ள எண்ணை தடவிய காகிதங்கள் என்று பேருந்து நிலையம் முழுவதும் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.
“ பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்கே போனாக்கா பாரத் ரைஸ் மில்லு வரும். இல்லைன்னா யார வேணும்னாலும் கேளு வளி சொல்லுவானுங்கோ.. “ ஆரோக்கியதாஸ் தைரியம் கொடுத்து அனுப்பியிருந்தான்.
பதினைந்து நிமிட நடைக்கு பின் அவன் பாரத் ரைஸ் மில்லை கண்டுபிடித்திருந்தான். ஆனால் அவன் போன நேரத்திற்கு அது பூட்டிக் கிடந்தது. இந்த பெரிய டவுனின் யாரையும் அவனுக்கு தெரியாது. இந்த ராப்பொழுதை எப்படிப் போக்குவது? அருகிலிருந்த தேனீர்க்கடைக்குச் சென்று விசாரித்தான்.
“ இன்னிக்கு அவ்வளவா சோலி இல்ல அல்லங்கில் இந்நேரம் தொறந்தாயிட்டு இருக்கும் சாரே “ என்றான் மலையாளச் சேட்டன். ஒரு தேனிரைக் குடித்தபடியே முதலாளி வீட்டிற்குச் சென்று பார்க்க முடியுமா என்று கேட்டான்.
“ பாரத் ரைஸ் மில் ஓனர் மட்டுமில்ல சாரே அவரு பஞ்சாயத்து பிரசிடெண்ட் .. வடக்கு மாசி வீதியில நின்னு கேட்டா கொழந்த கூட வீடு காண்பிக்கும்.. போய்க்கோ “

மாலையில் நடந்த பேரத்தில் இரண்டு ரைஸ் மில்கள் மற்றும் அரசு டெண்டர் ஒன்று பல லட்சங்களுக்கு முடிவான மகிழ்ச்சியில் பிரசிடெண்ட் கொஞ்சம் போதையேற்றிக் கொண்டிருந்தார். அவருடைய அடிவருடிகள் வரப்போகும் தேர்தலிலும் அய்யாவே செயிப்பார் என்று உசுப்பேற்றி சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
கங்காதரன் ஓரமாக வந்து நின்றான். எல்லோருமே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்தார்கள். இதில் யார் பிரசிடெண்ட்?
“ அய்யா நான் திருப்பத்தூர்லேர்ந்து வரேன். பத்து வருசம் ரைஸ் மில்லுல வேலை பார்த்த அனுபவம் இருக்கு.. ஒரு வேலை கொடுத்தீங்கன்னா.. “
“ யார்ராவன் நேரங்கெட்ட நேரத்துல.. அய்யா நிதானமா இருக்கும்போது வா “ என்று ஒருவன் விரட்டினான்.
“எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. விடியற வரைக்கும் இங்கன ஓரமா தங்கிட்டு காலையில அய்யாவ பாக்கலாங்களா “
அய்யா பேசினார். “ என்னா பேழு ?”
“ கங்காதரன் அய்யா.. அப்பா பேரு மாணிக்கம் ஊரு மேல்பள்ளிப்பட்டு “
அய்யா போதையில் தலை ஆட்டியதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு தன் பையோடு வீட்டின் சுற்றுச்சுவர் ஓரம் படுத்துக் கொண்டான்.

காலையில் ஐந்து மணிக்கு வாக்கிங் போன அய்யாவை யாரோ வீட்டு வாசலில் சரமாறியாகக் கத்தியில் குத்தியிருந்தார்கள். அய்யா ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
அவரைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட கத்தி கங்காதரன் அருகில் கிடந்தது. கங்காதரன் கைது செய்யப்பட்டு அவன் இதுவரை பார்க்காத எதிர்க்கட்சி உறுப்பினர் அட்டையோடு சிறையில் அடைக்கப்பட்டான்.

தெற்கு மாசி வீதியில் அந்தப் பெரிய வீட்டில் வெள்ளை வேட்டிக் கும்பல் கூடியிருந்தது.
“ எப்படிங்க தைரியமா அய்யாவ போட்டுத் தள்ளிட்டீங்க.. ? “
“ அந்த ரைஸ் மில் பய வர்ற வரைக்கு ஐடியா இல்ல.. அப்புறம்தான் தோணிச்சி.. இவரு இருந்துகிட்டே இருந்தா நாம எப்ப பிரசிடெண்ட் ஆவறது.. அதான் போட்டுத் தள்ளிட சொன்னேன். அந்த பய படுத்துக் கெடந்தான். அவன் பையில எதிர்க்கட்சி உறுப்பினர் அட்டையை சொருகினேன். அவந்தான் பேரைக் கேட்டா சாதகத்தையே ஒப்பிச்சுட்டானே.. அத வச்சு அவனை மாட்னேன். எப்படி நம்ப மூளை “
“ சூப்பர் சூப்பர்மா “ என்று எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

Series Navigationசோறு மட்டும்….இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *