நிர்வாண மானுடர் நிறைந்த காலத்தில்
நிரம்பியே செழித்தன நிகரிலா வனவளம்!
பேர்பெற்ற நாகரீகம் பெருமையெனக் கண்டதால்
பேதலிக்கும் நிர்வாண பிழையான நிலவளம்!
ஊர்சுற்றி நாடோடி உண்மையாய் வணங்கிட
ஊணமே காணாது உயர்ந்தது மண்வளம்!
வேர்வையை சிந்திட வேளாண்மை செய்தவன்
வித்திட்ட உழைப்பினால் வாழுது விளைநிலம்!
நிலத்தடி நீர்வளம் நிலைத்திட செய்வதே
நித்திலம் செழித்திங்கே நிம்மதி கிடைத்திடும்!
உலகத்தின் வேர்களாய் ஓடிய நீர்த்தேக்கம்
ஊரென மாறினால் உயிரெலாம் அழிந்திடும்!
பலகையில் எழுதிடும் பாலகன் மனதிலும்
பசுமையை உணர்த்திட படிப்பினை வந்திடும்!
குலமெலாம் இயற்கையை கொண்டாடும் பன்பாடே
குவலயம் சிறந்திட கொள்கையை கண்டிடும்!
சந்ததி வாழ்வினை சற்றேனும் நினைப்பதே
சரிவிலா சூழலே சத்தியமாய் வந்திடும்!
வந்தமழை சேமிக்க வசதியை செய்தாலே
வையத்தில் வாட்டிய வறட்சியும் நீங்கிடும்!
சிந்தனை செய்திடு சீற்றங்கள் வருவதும்
சீரழித்த இயற்கையென சிந்தையே கண்டிடும்!
தந்தியின் வேகமாய் தரணியைக் காத்திட
தந்திடும் விழிப்பதுவே தடுத்திட உதவிடும்!
-ப.கண்ணன்சேகர், திமிரி.
பேச : 9894976159.