`ஓரியன்’

This entry is part 1 of 17 in the series 12 ஜூன் 2016

அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் உரசிக் கொண்டு போன ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில் கோடிக்கணக்கான மக்கள் சில மணி நேரங்களில் மடிந்து போனார்கள். பேரழிவு. இந்த இயற்கை வலிமையானதும், கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, கொடூரமானதும் ஈவு இரக்கமற்றவையும் கூட. அந்த நிகழ்வுகளுக்கப்புறம் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றல் குறைந்து போனது. ப்ளஸ் தட்பவெப்ப நிலையும் மாறியிருந்தது. அ.ப்.ப்ப்பா…அந்த கொடூரமான நாட்களை இந்த உலகத்து மக்களால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது. அது ஒரு காலை நேரம் காலை ஒன்பது மணியிருக்கும். உலகம் உறக்கம் தெளிந்து இயக்கத்தை துவக்கியிருந்த நேரம்.

ஆண்களும், பெண்களும் தத்தம் சம்பாதனைகளுக்காக ஒட ஆரம்பித்திருந்த நேரம். பட்டுச் சுருணையாய்  பாலர் பள்ளி குழந்தைகளும், மாணவர்களும், மாணவிகளும், பெரியவர்களும் என்று சாலைகள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த நேரம். திடீரென்று காது கிழியும்படி பெரிய இடி சத்தம். அதன் அதிர்வை உலகெங்கிலும் உணர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து பெருமழை பெய்வது மாதிரி, கருகிய கற்களும், நெருப்புக் குழம்புகளும், பூமாரி பொழிவது போல கொத்து கொத்தாய் வந்து வழ ஆரம்பித்தன. விழுந்த இடங்களில் எல்லாம் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. சடசடவென்று கற்குழம்பு மழை. ஒரு நிமிடத்தில் நாடகத்தின் அடுத்தக் காட்சி போல நிலைமை தலை கீழாய் மாறியிருந்தது. மக்கள் அலறியடித்துக் கொண்டு இங்குமங்கும் ஒண்ட இடம் தேடி ஓடினார்கள். அங்கங்கே எரிந்தவர்களும், செத்து விழுந்தவர்களும்,  எங்கும் அழுகை ஓலம். வீடுகளெல்லாம் பற்றியெரிந்தன. இந்த மோதலில் வால்நட்சத்திரம் நேரிடையாக மோதாமல் உரசிக் கொண்டு போனதால்தான், பொழிவின் மூன்றில் இரண்டு பகுதி பொழிவுகள் கடலில்  வீழ்ந்தன. அதனால்தான்  சற்று குறைவான அளவில் இறப்புகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் அறிக்கை விட்டிருந்தனர். இந்த கொடூர நிகழ்வு உலகம் முழுக்க நடந்திருக்கிறது. உலகமே அரற்றிக் கொண்டிருக்கும் அந்த பேரிடரில் தப்பிப் பிழைத்தவர்கள்தான் இன்றைக்கிருக்கும் மக்கள் கூட்டம்.

அதிக நேரம் சுரீரென்று வெய்யில் பட சாத்தியமில்லாத நிலையில் வைட்டமின் D3 குறைபாட்டால் படிப்படியாக குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை ரிக்கெட்ஸில் வளைந்த கால்களுடன் அவதிப் பட்டார்கள். வேறு வழியில்லை. சாலையோரங்களில், மைதானங்களில், திறந்தவெளிகளில், எங்கும் மக்கள் கூட்டம்கூட்டமாக சூரிய ஆற்றல் கிடைக்கும் நேரங்களில் முக்கால் நிர்வாணத்தில் வெய்யிலில் காய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு மொட்டைமாடிகளில் எல்லாம் பெண்கள் அதே நிலையில், அதே காரணங்களுக்காக.

ஜீவன் D3 வைட்டமினுக்காக காய்வதை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது, வெளியே அவனுக்காக ரஷ்ஷு காத்திருந்தான். சென்ற ஆண்டு நிலவுக்கு போனபோது இவன் ஜீவனின் சக பயணி.   
         
“ஏய்! என்னப்பா இவ்வளவு தூரம்?.”—-ரஷ்ஷுவை கட்டிப் பிடித்துக் கொண்டான்.                                                   
 “வாக்கிங். நேத்து உன் ஆளு சுமனாவைப் பார்த்தேண்டா.”                                                                    
  “அது என்ன என் ஆளுன்னு ேர் ைக்கிற?.”   
                                                                            
“உன்னைப் பத்திதாம்பா அப்படி பேசறா.”                                                                                             
“சே! அவ ஒரு நல்ல நண்பிடா, அதத் தாண்டி எதுவுமில்ல. நீ அவளைக் கேட்டுப்பாரு. அவளும் இதையேதான் சொல்லுவா. சரீ ராதா, பூஜால்லாம் எப்படி இருக்காங்க?.”                                                                                            
“பூஜா யாரோ ஒரு புது பையனோட சுத்திக் கிட்டிருக்கா. ராதா தெரியல. நல்ல கட்டை இல்ல?.”—–இவர்களின் சம்பாஷனையில் பாடுபொருள் பெண்களைத்தாண்டி வேறு எதுவுமே இருக்காதோ?. ஆமாம், எத்தனை யுகங்கள் கடந்தால்தான் என்ன?, மனித குலம் இருக்கும் வரையிலும் ஆண்களுக்கு பெண்களைவிட வேறு ஈர்ப்பான விஷயங்கள் இந்த உலகத்தில் என்னவாக இருக்க முடியும்?.

“ஜீவன்! உங்களுடைய ஓரியன் பயணம் எப்ப?.                                                                                   
“தெரியல, அநேகமா அடுத்த மாசமாக இருக்கலாம்.”                                                                      
“ஜாக்கிரதை. ஏவுதளம் பூரா உன்னைப் பத்திய பேச்சாத்தான் இருக்கு. விஷயம் தெரியல. ஆனா விஞ்ஞானிகள் மட்டத்தில் உன்னை அய்யோ பாவம்னு பேசிக்கிறாங்க. எப்படியோ நீ இந்த பயணத்தில் விட்டில் பூச்சியாக மாட்டியிக்கியோன்னு இருக்கு. ஜாக்கிரதைப்பா. அதைச் சொல்லத்தான் வந்தேன்.”                                                                                                      
“ஏன்…ஏன்..அப்படி சொல்றப்பா?.”
                                                                                        
“தெரியல. எதுக்கோ உன்னை குறி வெச்சிருக்காங்களோன்னு தோணுது.”                                                         
“என் மடியில கனமில்ல சரி நான் பார்த்துக்கறேன்.” — ஏன் இப்படி சொல்றான்?. மனசஞ்சலத்துடன் ஜீவன் வீட்டிற்குள் நுழைய, ஹாலில் இருந்தபடியே கண்காணித்துக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் ஆதர்ஷ்–8 குரல் கொடுத்தது. எலெக்ட்ரானிக் இயந்திரன். எக்ஸ்பர்ட் சிஸ்டம், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறையின் லேட்டஸ்ட் டிவைஸ். அர்ஷாதி அண்டு ஆத்ரூ நிறுவனத்தின் தயாரிப்பு. பேரலல் பிராஸசிங்கில் வடிவமைக்கப்பட்டு கோடிக் கணக்கில் புழக்கத்தில் விடப் பட்டிருக்கும் மாடல்களின் ஒரு பிரதி. சுயமாக சிந்திக்கும், வேகமாய் முடிவெடுக்கும். இந்த மாடல்களுக்கு இங்கே ஏகப்பட்ட கிராக்கி. அப்போது ஆதர்ஷ்—8 ன் குரல்.                                                                                                              

“அரசிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி பேனலில் காத்துக் கொண்டிருக்கிறது.”—– விரைந்தான். மேசையில் திரையில் எழுத்துக்கள் திரும்பத் திரும்ப வந்துக் ொண்டிருக்கின்றன.                                                         

“ 278—2790 ஆம் தேதி, அதாவது இன்றிலிருந்து நான்காம் நாள் காலை நான்கு மணிக்கு உங்கள் ஓரியன் பயணம் திட்டமிடப் பட்டிருக்கிறது தயாராகுங்கள்.”— தெரிந்த செய்திதான் என்றாலும், உள்ளே குபுக்கென்று ஒரு பயம் எழுந்தடங்கியது. அடுத்த மாதம் என்று தேதி குறிப்பிட்டு விட்டு திடீரென்று நாலு நாட்களுக்குள் என்றால், எனக்கெதிராக யாரோ வலை விரிச்சிருக்கிற மாதிரி உள்ளுணர்வு சொல்லுதே. இந்த நெடும் பயணத்துக்கு தன்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்று ஆத்திரப்பட்டான். ஆனால் மறுக்க முடியாது. தேசத்துரோகம்.

“ஓரியன் கிரகத்தில் நீங்கள் ஆற்றவேண்டிய செயல்திட்டத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து மனதில் நிறுத்துங்கள். இவள்தான் உங்களுடன் பயணிக்கப் போகிற பார்ட்னர் மிஸ்.இமா., வயசு—25, இடது கண் புருவத்திலும், வலது பக்க மேலுதட்டிலும் சின்னதாக இரண்டு கருப்பு மச்சங்களைக் கொண்டிருப்பவள். உயரம் 175 செ.மீ. வானியலில் உயர் படிப்பு.”– திரையில் அவளைக் காட்டினார்கள்.குறைவான உடையுடன் உரித்த கோழிபோல அப்போதே சாப்பிட்டு விடவேண்டும் போலிருந்தாள். இந்தப் பயணம் ஒரு வருடத்துக்கு முன்னரே திட்டமிடப் பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்பாகவே ஓரியன்  பயணத்திற்கு ஜீவனையும், இமாவையும் தேர்ந்தெடுத்து தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்துப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்த சூரியக் குடும்பத்தைத் தாண்டி நெடுந்தொலைவு போகும் பயணம் என்பதால் கடுமையான பயிற்சி. அதற்கான மற்ற வகை பயிற்சிகளுடன், தனிமைச் சிறையில் வைத்து, நாட்கணக்கில் உணவில்லாமல், தண்ணீர் கூட இல்லாமல் சாகடித்து, தாங்கும் திறனை அதிகப்படுத்தி, அ.ப்.ப்.பா.

இந்தக் கணத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இரவில் வானத்தைப் பாருங்கள் .நடுவானுக்கு சற்று வடக்குப் பக்கம் மினுக்கும் ஓரியன் நெபுலா விண்மீன்கள் கூட்டம் தெரிகிறதா?. ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம் விட்டம் உள்ள அந்த பரந்த விரிந்த அதன் பரப்பில், வடகிழக்கு திசை மூலையில் சற்று இளஞ்சிவப்பில் மின்னுகிறதே, அதுதான் அந்த மண்டலத்தில் இருக்கும் கணக்கற்ற சூரியன்களில் ஒன்று.. அதைச் சுற்றிக்கொண்டிருக்கும், ஒரு குறிப்பிட்டகிரகத்திற்கு நம் மூதாதைய விஞ்ஞானிகள் சூட்டியிருக்கும் பெயர் ஓரியன். தெரிந்ததவரையிலும் அது இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இரண்டு கிரகங்களுல் ஒன்று. அதன் இன்றைய சராசரி சீதோஷ்ண நிலை— (–)6 டிகிரி முதல் +34° செல்ஷியஸ் வரை. அதன் விடுபடு திசை வேகம்  பூமியை விட— 0.8 கி.மீ/நொடி அதிகம். ஒரு நாள் என்பது பூமியைப் போலவே அவர்களுக்கும் 24 மணி நேரந்தான்.  பருவகாலங்கள், வருடம் என்பது எல்லாமே அப்படியே டிட்டோ.

கிளம்ப வேண்டிய தினம் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் ஜீவன் தயாராகிவிட வெளியே ஊர்தி காத்திருந்தது. அவனுக்குள்ளே ரஷ்ஷு சொன்ன வார்த்தைகள் உள்ளே அலையடித்துக் கொண்டிருக்கிறது. அவன் விண்கலம்—838 ஐ நெருங்கியபோது இமாவும் வந்து சேர்ந்துக் கொண்டாள். அ.ப்.ப்.பா..36-24-36,ல் ஒரு சொர்க்கம். சுலபமாய் விழுந்துவிடுவான் போல, அவளுந்தான். அது ஒன்றும் பெரிய சமூக்க் குற்றமில்லை.ஆண்கள் பெண்களை அடக்கியாளும் உத்தியாய் அவர்களிடம் மட்டுமே திணிக்கப் பட்டிருந்த `கற்பு’ என்ற அடிமைப் படுத்தும் மாயவலை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அறவே நீக்கப்பட்டு விட்டது.

விண்கலம்—838, பிரமாண்டமாய் ஒரு அசுரனைப் போல உயர்ந்து நிற்கிறது. எரிபொருள்—-டியூட்ரியம், டிரிடியம்,அணுக்கரு பிணைவு முறையில் பெறப்படும் சக்தி. ஒப்புவிசைத்திறன்–1080 செகண்ட். விரிந்து ஓடும் அந்த பெரிய மைதானத்தில் அங்கங்கே சில விண்கலங்கள் கிளம்பத் தயாராக நின்றுக் கொண்டிருந்தன. அவைகள் இந்த சூரியக் குடும்பத்திற்குள் உள்ள கோள்களுக்கு பயணிக்கும் சிறிய ரக ஏவூர்திகள். இரண்டு குழுக்கள் வந்து விண்வெளி உடைகள் பொருத்தி சோதனை செய்ய ஜீவனையும், இமாவையும் அழைத்துச் சென்றார்கள். எல்லாம் முடிந்தது. ஜீவனும், இமாவும், வழியனுப்ப வந்தவர்களின் கடைசி சிரிப்பையும், கையசைப்பையும் வாங்கிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். அவனை பைத்தியமாக ஈர்க்கக் கூடிய அத்தனைப் பரிமாணங்களும் அவளிடத்தில் அபரிதமாக இருப்பதைப் பார்த்ததில் அவனுக்கு உள்ளே வியர்த்தது. ஹும்! இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது.

கொஞ்ச நேரம் இருவருக்கும் விஞ்ஞானிகளின் அறிவுரைகள் இயர்போன் வழியே அஞ்சல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.இவர்கள் இருவருக்கும் விண்வெளிப் பயணம் புதிதில்லை. சூரியக் குடும்பத்திற்குள் இருக்கும் கோளுக்கு ஒரு தடவை பயணித்த அனுபவம் இருக்கிறது.. ஆனால் முதன்முறையாக இந்த நெடும்பயணம். இருவருக்கும் உள்ளே வியர்க்க ஆரம்பித்தது. பயணத்தில் உயிர் நிச்சயமில்லை. குடும்பத்தைவிட்டு, மனிதர்களை விட்டு, இந்த உலகத்தின் அத்தனை உள்ளடக்கங்களையும் விட்டு, விலகிப் போகும் இந்த பிரிவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?. என்ற விசாரத்தில் கொஞ்ச நேரம் சோகத்தில் மெளனித்தார்கள். இனி நடப்பது எதையும் அவர்களால் தவிர்க்க முடியாது .

( 1.)

இப்போது இருவரும் தங்கள் ஆளுமையில் இருக்கக் கூடிய உபகரணங்களை ஒருபார்வை பார்த்து சோதித்து முடித்தார்கள். மிஸ்.இமா மளமளவென்று போதிக்கப்பட்ட அடுத்த கட்ட செயலில் இறங்கினாள். விண்கலத்தின் இக்னீஷியனுக்காக விண்கலத்தின் கண்காணிப்பு கணினிக்கு ஆணை வழங்கினாள். கவுண்ட் டவுன் இரண்டாயிரத்தில் தொடங்கி, மெதுவான, சீரான ரிதத்தில் இறங்க ஆரம்பித்தது. 72—96 மணி நேர கவுண்ட் டவுன் என்பதெல்லாம் இப்போது வழக்கில் இல்லை. அங்கே விஞ்ஞானக் கூடத்தில் விஞ்ஞானிகள்கூட்டம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது.தலைமை விஞ்ஞானியின்  மேற்பார்வையில் விஞ்ஞானிகள் குழு சோதித்தமுடித்துவிட்ட எல்லா சோதனைகளின் மீதும் ஒரு கடைசி கட்ட பார்வைகள். இப்போதெல்லாம் விண்கல பயணத்தின் போக்கை தீர்மானிப்பது விண்கலத்திலிருக்கும் மானிட்டர் மட்டுமே, தரை கட்டுப்பாட்டு அறை அல்ல. மூன்றாம் நிலையிலுள்ள விஞ்ஞானி பிரம்மாவிடம் சக விஞ்ஞானி ஒருத்தர் நெருங்கி தாழ்ந்த குரலில்

“என்ன சார் ஓரியனுக்கு இந்தப் பையனை அனுப்பறாங்க?. ஏற்கனவே மூணு வருஷத்துக்கு முன்ன போன நம்ம ஆட்கள் ரெண்டு பேரையும் அங்க அடிச்சே கொன்னுருக்காங்க. இந்தப் பையனும் பெண்கள் விஷயத்தில ரொம்ப வீக் ஆச்சே”

“உஷ்! அடக்கி வாசியும். நமக்கு வேணாம் அந்த விஷயம். தலைவர் காரணமாத்தான் இவனை அனுப்பறார்னு பேசிக்கிறாங்க. அநேகமாக திரும்ப மாட்டானாம். அதுதான் திட்டம்.”—கேட்டவர் அதிர்ச்சியாகி நின்று விட்டார்.

கிளம்ப சில நொடிகளே நிலுவையில் இருக்கும் அந்த நேரம், ஜீவன் ஓரியனுக்கான வழிகாட்டி சங்கதிகளை ஒரு கிளான்ஸ் பார்வையில் திரையில் மேய்ந்துக் கொண்டிருக்கிறான். இப்போது கவுண்ட் டவுன்  ஜீரோவைத் தொட்டுவிட.                                                                                       
“ஷ்…ஷ்…ஷ்….ட்..ட்…ட்..ட்..ட்..டு..டும்..ம்..ம்.”—வெடியோசையில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரம் கிடுகிடுத்தது. அசுர வேகத்துடன் விசிறியடிக்கப்படும் நெருப்புக்  கோளமல்ல, கடல். வெப்பம் தகித்தது, கண்கள் கூசின. சத்தம்—170 டெஸிபல்களைத் தாண்டியது. லாஞ்ச்பேட் சரியான கணத்தில் தன் பிடிமாணத்தை விட்டு விலகிக் கொள்ள,விண்கலம்—838 நெருப்பு ஜ்வாலையைக் கக்கிக் கொண்டு, மேலெழும்பியது. எடுத்த வேகப் பாய்ச்சலில் உள்ளேயிருந்த அவர்களுக்கு வயிறு எக்கியது.கிளம்பிய ஐந்தாவது நொடியில் 52 வது கிலோமீட்டர் உயரத்தில் பதினாறு டிகிரி சாய்ந்து தன் நெடிய பயணத்தைத் தொடங்கியது. ஜீவனிடம் எதையோ கேட்க திரும்பிய இமா, அவன் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். கண்களை உருட்டி முறைத்து எச்சரித்தாள். அதில் நிஜம் குறைவாய் இருப்பதை ஜீவன் புரிந்துக் கொண்டான். ம்… நிச்சயமாக குட்டி ஜீவனுடனோ, குட்டி தேவதை இமாவுடனோதான் திரும்புவோம் போலிருக்கிறது தனக்குள் சொல்லிக் கொண்டான். இந்தப் பயணத்தில் இமாவின் பணி என்பது இந்த விண்கலத்தை சரியான பாதையில் செலுத்தி ஓரியன்னில் தரையிறக்குவது, ஓரியனில் ஜீவனின் செயல்களுக்கு உதவுவது, திரும்ப பூமிக்கு கொண்டுவந்து சேர்ப்பதுவுந்தான்.

விண்கலம் இப்போது100 வது கிலோமீட்டர் உயரத்தில் பூஜ்ஜியம் ஈர்ப்பு எல்லையைத் தாண்டிவிட, அந்த நொடியில். இருவரும்ஒரு மாதிரியான  அந்த பரமானந்தத்தை உணர்ந்தார்கள். எடையற்ற நிலையில் அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். மிதந்தபடியே கொஞ்ச நேரம் முன்னும் பின்னும் போய்வந்து குதூகலித்தார்கள். இப்போது விண்வெளி உடையை கழட்டிவிட்டு சாதாரண உடைக்கு மாறிக் கொண்டார்கள். இமா விளையாட்டாய் எடுத்துப் போட்ட ஒரு குட்டி பென்சில் கண்ணெதிரில் அப்படியே அந்தரத்தில்  நிற்கிறது. லேசாய் சுண்டிவிட, அந்த கோடிவரை அந்தரத்தில் மிதந்தபடி மேல்கீழாய் சுழன்றுக் கொண்டே போய் விண்கலத்தின் சுவரில் முட்டி திரும்பி வருவதை பார்த்து ரசித்தார்கள்.

“ஜீவன்! ஒரு சந்தேகம். ஏற்கனவே பிதுங்கும் மக்கள்தொகை பிரச்சினைகளில் திணறிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கம் கண்காணாத தொலைவிலிருக்கும் முகந்தெரியாத மனிதர்களுக்காக ஏன் இந்தப் பயணத்திற்கு வீண் செலவு செய்கிறது?,தேவைதானா?.”                                                                                                                                                                                                                                           “அங்கே மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்களாம். காரணம் தெரியவில்லை. காரணங்களை ஆராயக் கூடிய விஞ்ஞானிகள் பற்றாக் குறையாம். இந்த பிரபஞ்சத்தில் நம் பூமியிலும், ஓரியன் கிரகத்திலும் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. முதல் விஷயம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள். ஆதியில் விண்ணிலிருந்து தேவதூதர்களாக அவர்கள் மண்ணில் போய் இறங்கியவர்கள் நம் முன்னோர்கள்தான். நாம் ஒரு நாலைந்து முறை ஓரியனுக்கு போய்வந்திருக்கிறோம். அவர்களைக் காப்பாற்ற நாம் எதையாவது செய்தாக வேண்டும். லாப நஷ்டம் பார்க்கிற வேலை இல்லை இது. அதேசமயம் இதில் கொஞ்சமாய் நம்முடைய சுயநலமும் உண்டு. இன்றைக்கு அங்கே எப்படியென்று புரிந்துக் கொள்ள முடியாதபடிக்கு தொடர்ந்து மனிதகுலம் குறைந்துக் கொண்டே வருகிறதாம். உதவி கேட்டு கோரிக்கை வந்துக் கொண்டே இருக்கிறது. இங்கே பூமியில் இயற்கை சீற்றங்களால் கோடி கணக்கில் மக்களை நாம் இழந்திருப்பினும், பெருத்துப் போய் கிடக்கும் மக்கள்தொகையில் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். குறைக்க வழி தெரியவில்லை. எனவே அங்கே  குறைவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நிவர்த்தியும், அந்த காரணிகளை வைத்து இங்கே பூமியில் மக்கள்தொகையை குறைக்கவும் முடியுமா?. ஆமாம் இதுதான் இலக்கு. எச்சரிக்கை உனக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்குமானால் சொல்லாதே, விழுங்கி விடு. ராஜதுரோகம். ”

“ ஐயோ! சரி…..சரி… அதற்கு நாம ரெண்டுபேர் மட்டும் போய் என்ன செய்து விடமுடியும்?. சரி என்ன செய்யப் போகிறோம்.”
                                                                                  
“இதற்கு என் பதில் தெரியாது. ”                                                                                                            
 “எனக்குப் புரியவில்லை இது என்ன மாதிரியான பதில்?. அப்படியென்றால் நாம் நம்முடைய தேன்நிலவுக்காகவா அங்கே போகிறோம்?.” —சொல்லிவிட்டு நக்கலாய் ிரித்தாள்.   
                                                                      
”இதற்கு என் பதில் சந்தோஷங்களுடன் நான் தயார். உன் இசைவுக்காக காத்திருக்கிறேன். அங்கே ஆராய்ச்சிகளைச் செய்து மக்கள்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் சொல்லப் போறது நானில்லை. இதோ இந்த ஸீகம்—I, ஸீகம்—II,கம்ப்யூட்டர்கள்.”

அவன் சுட்டிய திசையில் சென்டிமீட்டர் அளவில் அடக்கமாக இரண்டு கம்ப்யூட்டர்கள் உட்கார்ந்திருந்தன. ஜீவன் இப்போது டெலஸ்கோப் வழியாக வியூஃபைண்டரை அட்ஜஸ்ட் செய்து வெளியே பார்க்க ஆரம்பித்தான்.

“ஹேய்! இமா! இங்க வந்துபார். நமக்கு சின்ன ஒளிப்புள்ளியாகத் தெரிஞ்சிக்கிட்டிருந்த ஒரியன் கோள் இப்போது ஒரு நிலவைப் போல பிரகாசிக்குது பார். ச்சே! என்ன அழகு?.—– கிட்டே வந்த இமாவை வியூஃபைண்டரிடம் அனுமதிக்கும் சாக்கில் அவளை அணைத்தபடி நின்றான். மறுப்பில்லை, அனுமதித்தாள். தூசுப் படலம் இல்லாத வெற்றிடம் என்பதால் ஒளிச்சிதறல்கள் இல்லாத இருண்ட பிரபஞ்சத்தில் பெரிய பிரகாசமாய் ஓரியன் நெபுலாவின் சூரியன்களில் ஒன்றும், அதைச் சுற்றி சின்னச்சின்ன வெளிச்ச நிலாக்களாக அதன் கோள்களும், அவை ஒவ்வொன்றை சுற்றியும் வெளிச்ச புள்ளிகளாக அவைகளின் நிலவுகளும், என்று பார்க்க ரம்மியமாக இருந்தன. சற்று நேரம் இருவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க, அப்போது கண்ட்ரோல் சிஸ்டம் கம்ப்யூட்டர் பீப்…பீப்…பீப்… அலர்ட் ஒலி கொடுத்துவிட்டு தகவலை ஸ்க்ரீனில் படர விட்டது.                                                                                                               “விண்கலம்—838 க்கு எச்சரிக்கை தரப்படுகிறது. ஜாக்கிரதை. இன்னும் முப்பது நிமிடங்களுக்கு அப்புறம் ஆர்.ஜி.ஜி. 110 ப்ளாக் ஹோல் ஐ நெருங்கப் போகிறீர்கள். ஆபத்து…பெரும் ஆபத்து. அதில் மாட்டினால் ஒளி கூட தப்பித்து வெளியே போக முடியாது இழுத்துக் கொள்ளும். அந்த பகுதியைச் சுற்றி அதீத வெப்பக் காற்றும், சுற்றிலும் வெளிர் நீல வண்ணத்தில் பெரிய வளையமும் பிரகாசமாய் ஜொலிக்கும். .அதுதான் அடையாளம். இரும்பு அயான்கள் ஒளிர்வதினால்தான் அந்த நீல வண்ணம். இன்னும் 26 நிமிடம், 34 நொடிகள் முடிந்ததும் செல்லும் நம் பாதையிலிருந்து விண்கலம் 4° விலகும். அந்த நொடியிலிருந்து அதன் வேகம் உயரும். உயர்ந்து, எட்டு நிமிடங்கள் பயணித்து, அப்புறம் மீண்டும் பழைய பாதைக்கும், பழைய வேகத்துக்கும், மாறிவிடும். திசைமாற்றம், வேகமாற்றம் வருவதால் எழுந்து நடமாட வேண்டாம். இருக்கையோடு பிணைத்துக் கொள்ளுங்கள்..”——அவசரமாய்  இருவரும் உட்கார்ந்து, தத்தம் இருக்கையோடு பிணைத்துக்  கொண்டார்கள். ஜீவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“இதோ இருக்கும்  ஸீகம்—I, ஸீகம்.—II. சூப்பர் கம்ப்யூட்டர்கள். இரண்டும் இரண்டு எலெக்ட்ரானிக் விஞ்ஞானிகள், உபரியாக சமீபத்திய சில பொதுஅறிவுக் களஞ்சியங்களையும் கொண்டுள்ளன. திரும்பும் போது இரண்டையும் ஓரியன்  நிவாகிகளிடம் ஒப்படைத்து விடச் சொல்லி நமக்கு உத்தரவு. அவர்களுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு. இந்தப் பயணத்தினுடைய சரியான நோக்கமும் இதுதான். இரண்டும் அங்கே திறமையான விஞ்ஞானிகளாய் செயல் பட்டு அங்கே விஞ்ஞானிகளின் பற்றாக் குறையைத் தீர்த்து வைக்கப் போகின்றன. எல்லா வகையான ஆய்வுகளுக்கும் அவர்களுக்கு உதவும். இவைகளுக்குத் தெரியாத விஷயங்கள் எந்த உலகத்திலும் இல்லை.”

”அட! அப்படியா?.நாம் நம்மைவிட இதுபோன்ற எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களை முழுசாகச் சார்ந்திருப்பதே நம் இயல்பாக மாற்றிக் கொண்டு விட்டோம். சரி இதை நான் சோதிச்சிப் பார்க்கட்டுமா?.”                                                                                                           
 ”தாராளமாக முயற்சி செய். எல்லை எதுவும் கிடையாது. எதைப்பற்றி வேண்டுமானாலும். ப்.ப்.பூ! ஆனால் அதை சோதிக்கும் அளவுக்கு உனக்கு ஞானம் உண்டா என்பதுதான் என் கேள்வி.”—அவன் சொல்லிக் கொண்டே ஸீகம்—II ஐ உயிர்ப்பித்தான். இமா அவனை முறைத்து விட்டு அதைக் கேட்டு திணறடிக்க வேண்டிய கேள்விகளை ஆழமாக யோசித்து, அணு விஞ்ஞானத்தில் ஆரம்பித்தாள்..                                                                                                               
 ”யுரேனியம்235 ன் கிரிட்டிகள் மாஸ் எவ்வளவு?.“ —கேள்வியை முடிக்கும் நொடியிலேயே பதில் வந்துவிட்டது.                                                                               
“52.4 Kg”                                                                                                                              
 “கடவுள் எங்கே இருக்கிறார்.?”                                                                                                                     “மனித மனங்களிலும், இலக்கியங்களிலும், மறை நூல்களிலும்.”                                                                                                               
 ”சரி உம்…காஸ்மிக் சூப் பத்தி சொல்லு.”                                                                                    
 “முதன்முதல் உயிர்கள் தோன்றியதின் வரலாறு. மீத்தேன்,கரியமில வாயு, ஹைட்ரஜன் சேர்ந்த கூட்டுதான் அந்த மேற்படி சூப். அதிலிருந்து அமைனோ அமிலங்கள் தோன்றி அப்புறமாக அதிலிருந்து உயிர் உற்பத்தி என்பது ஒரு சித்தாந்தம்.”

“ஒரு அணுகுண்டு வெடிப்பது எந்த மூன்று ிஷயங்களைச் ார்ந்துள்ளது?.”                                                                               
“கிரிடிக்கிள் மாஸ், கிரிட்டிகிள் பர்செண்டேஜ், பாதுகாப்பான இடைவெளி.”
                                              
“ சரி…சரி இதற்கு சொல்.தூய்மையான காதல் என்பது என்ன?.”                                                                                                         
”ஒப்பனை செய்யப்பட்ட காமம் .” —-அந்த பதிலில் லயித்தாள்.                                                                        “சரி..முட்டையிடும் ஆண் பறவை ஒன்று இருந்தது, தற்போது அது இல்லை. அழிந்துவிட்டது. அதன் பெயர்?.”—அது சற்று தாமதித்தது. தன் மெமரி செண்டரில் தேடுகிறது போல. இமா சிரித்தாள்.                                                                                                                  
“சில்லிமேட்.”                                                                                                                                                   
 இமா திகைத்து நின்றாள்.

Series Navigationசாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *