யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2

author
0 minutes, 10 seconds Read
This entry is part 17 of 17 in the series 12 ஜூன் 2016

பி ஆர் ஹரன்

பசுக்கள் வழக்கில் யானைகளையும் சேர்த்த உயர் நீதிமன்றம் 
 unnamed (1)
தமிழகத்துக் கோவில்களில் உள்ள கோசாலைகளில், பசுக்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து போவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக இருந்த நிலையில், மனவருத்தமுற்ற சென்னையைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலரும் எழுத்தாளருமான திருமதி ராதாராஜன் உயர்நீதிமன்றத்தில் 2013ம்ஆண்டு பொதுநல வழக்கு(WP 28793 & 28794 of 2013) ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தன் மனுவில், “தமிழகத்தில் கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் நிர்வாக முறைகேடு, போதிய பராமரிப்பின்மை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் கோசாலைகளின் பராமரிப்பைக் கண்காணிப்புக்குழு அமைத்து மேற்பார்வையிட உத்தரவிடவேண்டும்” என்று கோரியிருந்தார்.
வழக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அவர் மனுவின்மீது விசாரணை நடத்தி, ஆகஸ்டு 2014ல், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. மனுதாரரான ராதாராஜன், இந்திய விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி குமார் மற்றும் கால்நடைத்துறை இணைஇயக்குநர் எல்.அனந்தபத்மநாபனன் ஆகிய மூவர் அடங்கிய குழுவை அமைத்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள கோயில்களின் பசுமடங்களை ஆய்வு மற்றும் பரிசோதனை செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது.
Elephant 1
மூவர்குழு 21 கோவில்களில் பரிசோதனை மேற்கொண்டதன் முடிவில் அவர்கள் அறிக்கை அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் பதிலும் பெறப்பட்டு அவற்றின் மீதான விவாதங்களும் நடத்தப்பட்டன. மூவர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளுக்கு அறநிலையத்துறையால் சரியான காரணங்களுடன் கூடிய விளக்கங்கள் அளிக்கமுடியவில்லை. அறநிலையத்துறையின் அலட்சியம் மிகுந்த நிர்வாகம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆகவே, மூவர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மாநில அளவிலான கண்காணிப்புக்குழுவிற்குத் தகுதி வாய்ந்த பத்து நபர்களை பரிந்துரைக்குமாறு மூவர்கு ழுவினரிடமே கேட்டுக்கொண்டது. அதற்கிணங்க மூவர் குழு பத்து நபர்களைப் பரிந்துரைத்தனர். அதையும் ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அந்தப் பத்து நபர்களும் இந்திய பிராணிகள் நலவாரியத்துக்குக் கட்டுப்பட்டு கோவில் கோசாலைகள் பராமரிப்பை மேற்பார்வை செய்ய உதவ வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய பிராணிகள் நலவாரியத்திற்கும்,  குறிப்பிட்ட பத்து நபர்களுக்கும், அறநிலையத்துறையும் கால்நடைத்துறையும் முழு ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என்றும், மூவர் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அறநிலையத்துறையும் அரசும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் முதல்அமர்வு வழக்கை முடித்தது.
Goshala
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பத்து நபர்கள் அடங்கிய குழுவினர் உதவியுடன் மூவர் குழுவினர் கோசாலைகளைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகின்றனர். வழக்கை முடித்துவிட்ட  போதிலும், பரிசோதனைக் குழுவினரின் அறிக்கையை ஒவ்வொரு முறையும் பெற்றுக்கொண்டு, எந்த அளவிற்கு பசுக்கள் பராமரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனித்துக்கொண்டு வருகின்றது உயர் நீதிமன்றம். அந்த மாதிரியான ஒரு சந்திப்பில் தான் பசுக்கள் மற்றும் கோசாலைகளைப் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சட்ட உரிமைக் கட்டளையை (Mandate) நீட்டித்து, யானைகளையும் அவற்றின் பராமரிப்பையும் கூட பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் படி பரிசோதனைக் குழுவினர் பசுக்கள் மற்றும் கோசாலைகள் பராமரிப்பை ஆய்வு செய்யச் செல்லும் சமயத்தில் யானைகளின் நிலையையும் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த மாதிரியான ஒரு ஆய்வின் முடிவில் தான் காமாக்ஷி அம்மன் கோவில் யானைகள் தீவிர சிகிச்சைக்காகப் புனர்வாழ்வு மையத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
காமாக்ஷி அம்மன் கோவில் யானைகளின் பிரச்சனை
கர்நாடகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தியா என்கிற காமாட்சிக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் புண்கள் வந்து மிகவும் அவதிப்பட்டிருக்கிறாள். மருத்துவ உதவி அளிக்கப்பட்டும் குணமாகவில்லை. மேலும் இவளுடைய இடது கண்ணில் 10 ஆண்டுகளாக புரை (Cataract) வந்து பார்வை போய்விட்டது. அதாவது அவளுடைய இடது கண் குருடாகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் வலது தொடைப்பகுதியில் குணமாகாத நிலையில் பெரும் புண் ஏற்பட்டுள்ளது. அதைச் சரியாகக் கவனிக்காததால் அது வளர்ந்து பெரிதாகியுள்ளது. இடது இடுப்புப் பகுதியிலும் புரையோடிய புண்கள் முளைத்துள்ளன. பின்பக்க இடது பாதத்தில் நகங்கள் உடைந்து சீழ்கட்டுகள் ஏற்பட்டுள்ளன. தலை மற்றும் நெற்றியில் தோற்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. வாலில் எலும்பு முறிவுகள் உண்டாகி வாலின் வடிவமே உருமாறியுள்ளது. வாலில் உள்ள முடிகளும் நீக்கப்பட்டுள்ளன. இறந்து போன பாகனின் மனைவியும் மகளும் சந்தியாவின் முடிகளைப்பிடுங்கி விலைக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கான்கிரிட் மற்றும் கருங்கல் தரைகளில் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதாலும், அதே தரைகளில் நடைப்பயிற்சி கொடுக்கப்படுவதாலும் பாதங்கள் மெலிதாகி அடிப்பாகம் தேய்ந்து போயுள்ளன. முன் இடதுகால்-குளம்பு இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளதால் அவளின் நடையே இயல்பானதாக அல்லாமல் வினோதமானதாக மாறிவிட்டது. கால்-குளம்பு இணைப்பில் ஏற்பட்டுள்ள பழுது கிட்டத்தட்ட மூட்டுவாதத்திற்கு (Arthiritis) ஒப்பானதாகக் கருதப்படுகிறது.
Elephant 3a
கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்துவுக்குக் கால் நகங்கள் பெரிதாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், ஆங்காங்கே உடைந்தும் போயுள்ளன. முன்னங்கால்களிலும் பின்னங்கால்களிலும் நகங்களுக்கு இடையேயும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழங்கை(Elbow) மூட்டுகளிலும், முன்னங்கால்களிலும் புண்கள் ஏற்பட்டுள்ளன. காமாட்சி போலவே இந்துவுக்கும் பாதங்கள் மெலிதாகி அடிப்பாகம் தேய்ந்து போயுள்ளன. உடல் முழுவதும், குறிப்பாக முதுகு, பின்பக்கம் மற்றும் தலைப்பகுதிகளில் புரையோடிய புண்கள் முளைத்துள்ளன. மொத்தத்தில் சோர்ந்து போய் அமைதியற்று காணப்பட்டிருக்கிறாள் இந்து.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 18 வயதாகும் ஜெயந்திக்கு இப்போதே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. 3 வயதிலிருந்தே கான்கிரீட் மற்றும் கருங்கல் தரைகளில் நிற்பதாலும், நடப்பதாலும் பாதங்களின் அடிப்பாகம் தேய்ந்துள்ளது. உடலில் ஆங்காங்கே தோல் காய்த்துப்போய் புண்கள் ஏற்படும் நிலையில் இருந்துள்ளது. வலது இடுப்புப் பகுதியில் தோற்சிதைவு ஏற்பட்டு குணமான வடு தெரிகிறது. இடுப்பின் இடது பக்கம் சரிந்துள்ளதால் ஜெயந்தியின் நடையும் இயல்பானதாக இல்லை.
இந்த நிலையில்தான் மூன்று யானைகளையும் தீவிர சிகிச்சைக்காக இயற்கைச் சூழல் மிகுந்த புனர்வாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்ல இந்திய விலங்குகள் நலவாரியம் முடிவு செய்தது. காஞ்சி மடமும் பிரச்சனையின் தீவிரத் தன்மையைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பையும் நல்கியுள்ளது. பீடாதிபதிகளான ஸ்ரீ சங்கராச்சாரியார்களும் தங்களுடைய ஆசிகளை நல்கி, பக்தர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
Elephant 4a
திருக்கடையூர் கோவில் யானை அபிராமியின் மரணம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்தின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று. அன்னை அபிராமியைத் தரிசனம் செய்ய நாடெங்கிலிருந்தும் லக்ஷக்கணக்கான மக்கள் வந்து கொண்டே இருக்கின்ற தலம். எமனிடமிருந்து மார்க்கண்டேயரைச் சிவபெருமான் காப்பாற்றிய தலம் ஆதலால் இங்கே சஷ்டியப்த பூர்த்தியும் சதாபிஷேகங்களும் தினமும் நடந்துகொண்டிருக்கும் தலம் இது. இக்கோவிலில் திருப்பனந்தாள் ஆதீனம் எஜமான் முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்கள் அபிராமி என்கிற பெண் யானையை 4 வயதில் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
20 வருடங்களுக்கும் மேலாக அக்கோவிலில் இறைப்பணி செய்துகொண்டிருந்த அபிராமி, தமிழக அரசு யானைகளுக்காக நடத்தும் புத்துணர்வு முகாமுக்கு 26 நவம்பர் 2012 அன்று சென்றாள். முகாம் முடிந்து 13 ஜனவரி 2013 அன்று திருக்கடையூர் திரும்பியதிலிருந்து அபிராமி நோய்வாய்ப்பட்டிருந்தாள். உணவு உட்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டாள். அவள் உடல் மெலிந்துபோய் எடையும் குறைந்தது. மருத்துவ சிகிச்சைப் பலனின்றி 25-ம் தேதி அதிகாலை மரணம் அடைந்தாள் அபிராமி. அப்போது அவளுக்கு வயது 28 தான். பிறகு சம்பிரதாய முறைப்படி கோவில் அருகேயுள்ள யானைக்குளம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் அபிராமி. முன்னதாக அவளுடைய பிரேதம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவளுடைய வயிற்றில் பாலிதீன் உரையும், கூழாங்கல்லும் இருப்பது தெரிந்தது. ஜீரணம் ஆகாத வாழைப்பழ தோலும் இருந்தது.
Elephant 4a 2
சராசரியாக 70 ஆண்டுகள் உயிருடன் இருக்கக் கூடிய இனத்தில் பிறந்த அபிராமி இருபத்தி எட்டே வயதில் இறந்துபோனது எவ்வளவு கொடுமை! அவள் சென்று வந்தது “புத்துணர்வு முகாம்”! புத்துணர்வு முகாமிலிருந்து திரும்பிய உடனேயே நோய்வாய்ப் பட்டாள் என்றால் அங்கே என்ன நடந்தது? பிரேதப் பரிசோதனையில் அவள் வயிற்றில் பிளாஸ்டிக் உரையும் கூழாங்கல்லும் இருந்தது தெரிந்துள்ளது. அப்படியென்றால் முதுமலையில் உள்ள புத்துணர்வு முகாமில் தான் அவை அவளின் வயிற்றுக்குள் போயிருக்க வேண்டும். திரும்பிய 12 தினங்களில் இறந்துவிட்டாள். 12 தினங்கள் அவளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என்ன மாதிரியான சிகிச்சை அளித்தார்கள்? அவளுக்கு என்ன நோய் என்பதையாவது இவர்களால் கண்டறிய முடிந்ததா? அவள் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டாமா? அபிராமியின் மரணத்தப் பற்றிய விசாரணை நடத்துவது அறநிலையத்துறையின் கடமையல்லவா? அந்த விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவு போட வேண்டாமா? ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
ராமேஸ்வரம் கோவில் யானை பவானியின் மரணம்
ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவிலுக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனர் ராமசாமி ராஜா அவர்கள் பவானி, ராமலக்ஷ்மி என்கிற இரு யானைகளை அன்பளிப்பாக வாங்கி அளித்திருந்தார். அபிராமி சென்ற அதே புத்துணர்வு முகாமுக்கு பவானியும் அனுப்பப்பட்டாள். 26 நவம்பர் 2012-ல் முகாம் தொடக்கம். 25-ம் தேதி மாலை பவானி முகாம் நடக்கும் இடத்தை அடைந்தாள். 25 நவம்பர் 2012 அன்று அவள் பயணத்துக்குத் தகுதியான உடல்நலனில் இருந்ததாக உள்ளூர் மருத்துவர் தகுதிச் சான்றிதழ் தந்துள்ளார். வந்தவுடனேயே பவானி மிகவும் சோர்வாகக் காணப்பட்டதால், அவளை முகாமையொட்டி இருந்த பவானி ஆற்றில் குளிக்கச் செய்தனர். ஆற்றில் இறங்கிய உடனேயே பவானி மயக்கமுற்றாள். மயக்கம் அடைந்த பவானியை பாகன்களால் எழுப்ப முடியவில்லை. எனவே கிரேன் கொண்டுவரப்பட்டு அவளை ஆற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். வெளியே கொண்டுவந்த பிறகும் அசைவில்லாமல் இருந்ததால் மருத்துவர்கள் வந்து சோதித்துப் பார்த்தனர். அப்போது பவானி இறந்துவிட்டாள் என்பது தெரிந்தது. வனத்துறையின் விலங்கு மருத்துவர் டாக்டர் மனோகரன், பவானி பலவீனத்தினாலும், உச்சக்கட்ட சோர்வினாலும், முதுமையினாலும், மாரடைப்பு ஏற்பட்டதாலும் இறந்ததாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். பின்னர் பவானி எந்த லாரியில் ராமேஸ்வரத்திலிருந்து உயிருடன் அழைத்து வரப்பட்டாளோ, அதே லாரியில் உயிரற்ற நிலையில் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டாள். பவானியின் வயது 52.
Elephant 5a
யானைகளின் சராசரி வாழ்வுக்காலம் 70 ஆண்டுகள் என்கிற போது 52 வயதில் இருக்கும் ஒரு யானையை ஒரு லாரியில் ஏற்றி 12 மணிநேரத்துக்கும் மேல் பயணத்தில் ஈடுபடுத்தலாமா? ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும்போதே பவானி உடல்நலன் குன்றியிருந்தாளா? அப்படியிருந்திருக்கும் பக்ஷத்தில் அவளை வலுக்கட்டாயமாக முகாமிற்கு அழைத்துச் சென்றது சரியா? உடல்நலன் குன்றிய நிலையில் வயதான யானையைப் பயணத்திற்கு அனுப்ப முடிவு செய்தது யார்? மருத்துவர் எப்படி தகுதிச் சான்றிதழ் அளித்தார்? அல்லது மருத்துவரின் கருத்து கேட்கப்படவில்லையா? இல்லாவிட்டால் முகாமில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா? முகாமில் நடந்த தவறால் யானை இறந்துபோனதால், மரணத்திற்கான உண்மையான காரணம் மறைக்கப்பட்டுள்ளதா? பவானியின் மரணத்தின் மீது அறநிலையத்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? அவ்விசாரணைக்கு ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை? பவானியின் மரணத்திற்கான உண்மையான காரணம் சொல்லப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
திருச்செந்தூர் கோவில் யானை குமரனின் மரணம் 
திருச்செந்தூர் கோவிலின் முன்னாள் தக்கார் தேவதாச சுந்தரம் என்பவர் 2006-ஆம் ஆண்டு குமரன் என்கிற 4 வயது ஆண்யானையை அன்பளிப்பாக வழங்கினார். அப்போதிலிருந்தே இறைப்பணியில் ஈடுபட்டிருந்த குமரன், 11 டிசம்பர் 2014 அன்று மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய புத்துணர்வு முகாமுக்குச் செல்லவில்லை. சில மாதங்களாக மதநீர் சுரந்த பிரச்சனையால் குமரன் பாதிக்கப்படிருந்தான் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 7 ஜனவரி 2015 அன்று குமரன் வயிற்றுப்போக்கு வந்து அவதிப்பட்டான். இரண்டு நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனளிக்காத நிலையில், 9-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குமரன் இறந்துபோனான். அவனுக்கு வயது 13!
அத்தனை சிறிய வயதில் குமரன் இறந்த செய்தியைக் கேட்ட ஊர் மக்கள் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரனின் விந்தணுக்களை (Sperm) வெளியேற்றுவதற்காக மின்விசை (Electro Ejection) கொடுக்கப்பட்டதால் தான் குமரன் இறந்தான் என்கிற குற்றச்சாட்டும் எழுப்பினர் பொது மக்கள். ஆனால், பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants (Management andMaintenance) Rules, 2011) கூறியுள்ளபடி கட்டாயமாகப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால் குமரனின் பிரேதம் பரிசோதிக்கப் படவில்லை
Elephant 6a
மேலும், அவ்வாறு கோவில் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தால் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கோவில் அதிகாரிகள் காரணம் கூறியதாகவும் சொல்லப்பட்டது. ஆயினும், பிரேதப் பரிசோதனை செய்தால் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கூறிய அதிகாரிகள், குமரனின் உடலிலிருந்து தந்தங்களை அறுத்து எடுப்பதற்குத் தயங்கவில்லை! அப்போது புனிதத்துவம் கெடாதா என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.
சில மாதங்களாக மதநீர் சுரந்த பிரச்சனையால் குமரன் பாதிக்கப்பட்டிருந்தான் என்கிற பக்ஷத்தில் என்ன மாதிரியான சிகிச்சை அவனுக்கு அளிக்கப்பட்டது? அவனுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள் யானைகளுக்கான சிகிச்சை பற்றிய அறிவும் அனுபவமும் உடையவர்களா? மின்விசையால் அவனுடைய விந்தணுக்கள் வெளியேற்றப்பட்டன என்று பொது மக்கள் சாட்டிய குற்றம் உண்மையா? அவ்வாறு செய்ததால்தான் அவன் இறந்தானா? அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தது யார்? உடல்நலன் முன்னேற்றத்திற்காகத்தான் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகின்றது என்கிற போது, அந்த இளைய வயதில் குமரனை அங்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு அவன் உடல்நலனில் என்ன பிரச்சனை? பிரேதப் பரிசோதனை கட்டாயம் செய்யப்படவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்தது யார்? 4 வயது குழந்தையாக குடும்பத்திலிருந்து பிரித்துக் கொண்டுவரப்பட்ட குமரன் 13 வயது சிறுவனாக இருக்கும்போது இறந்துபோனது எப்பேர்பட்ட கொடுமை! இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு?
தஞ்சாவூர் பெரிய கோவில் வெள்ளையம்மாளின் மரணம்
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, தன்னுடைய இஷ்ட தெய்வமான புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு 1960-ஆம் ஆண்டு 10 வயதுடைய யானையை அன்பளிப்பாக அளித்தார். அந்தத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமான வெள்ளையம்மள் என்கிற பெயரே அந்த யானைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து அக்கோவிலில் இறைப்பணி செய்து வந்த வெள்ளையம்மாள் 1985-ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு மாற்றப்பட்டாள். அக்கோவிலில் இறைப்பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளையம்மாளுக்கு நாளடைவில் உடல்நலன் குன்றியது. கால்கள் பலமிழந்து மூட்டுவலியால் அவதிப்பட்டாள். நாளடைவில் மூட்டுவலி அதிகமாகவே, கால்கள் கடினமாகி விறைத்துப்போயின. எனவே அவளால் உட்காரவோ படுக்கவோ முடியவில்லை. தூங்கும்போதுகூட நின்றபடியே தான் தூங்குவாள். பல ஆண்டுகளாக அவளின் நிலை இதுதான்.
Elephant 7a
வயது முதிர்ந்து மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவளுடைய பாகன் பாஸ்கரும் அவருடைய உதவி பாகனாக இருக்கும் அவர் சகோதரர் சாரங்கனும் அவளைக் கோவிலின் இரண்டாவது கோபுர வாசலில் கால்கடுக்க நிறுத்தி பக்தர்களிடமிருந்து காணிக்கை வசூல் செய்து வந்துள்ளார்கள். யானை ஆசி வழங்க 5 ரூபாய், யானையின் முதுகின் மேல் ஏறி சிறிது நேரம் அமர்ந்துகொள்ள 10 ரூபாய், யானையுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள 25 ரூபாய் என்று வசூல் செய்துள்ளனர். வசூல் செய்கின்ற பணத்தை கோவிலில் யானையின் பராமரிப்புக்கும் கொடுப்பதில்லை. மேலும் வெள்ளையம்மாளின் உடலில் உள்ள முடிகளையெல்லாம் சவரக்கத்தியை வைத்துச் சுரண்டி எடுத்து கள்ளச்சந்தையில் விற்றுள்ளனர்.
பாகன்களின் பணவேட்டை தொடர்ந்து நடந்துகொண்டிருக்க அறநிலையத்துறை அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் புகார்கள் அனுப்பிய பிறகுதான் அறநிலையத்துறை பெயருக்கு நடவடிக்கை எடுத்தது. உதவிப்பாகன் சாரங்கனை மட்டும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துவிட்டு அறிவிப்புப்பலகை ஒன்றும் வைத்தனர். அந்த அறிவிப்பில், “யானை வெள்ளையம்மாளுக்கு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, உணவு வழங்கப்படுகிறது.  பக்தர்கள், பழங்கள், தேங்காய் போன்றவை வழங்க வேண்டாம். யானையிடம் ஆசிபெறுவதும், போட்டோ எடுப்பதும், யானை மீது அமர்வதும், கண்டிப்பாகக் கூடாது. பாகன்களிடம் பணமோ, பொருளோ ஏதும் கொடுக்க வேண்டாம். யானைக்காக பொருள் அல்லது பணம் செலுத்த விரும்புவோர், திருக்கோவில் அலுவலகம் அல்லது யானை பராமரிப்பு உண்டியலில் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேற்கண்டவாறு பாகன்களால் துன்புறுத்தப்பட்டும், பல ஆண்டுகள் நின்றுக் கொண்டே தூங்கவேண்டிய கட்டாயத்தில் மூட்டு வலியால் அவதிப்பட்ட வெள்ளையம்மாள் 14 செப்டம்பர் 2013 அன்று காலை மரணம் அடைந்தாள். வெள்ளையம்மாளுக்கு எந்த விதமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது? பல ஆண்டுகள் சிகிச்சை கொடுத்தும் ஏன் பலனில்லை? சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு யானைகளுக்கு எந்த மாதிரியான சிகிச்சை தரவேண்டும் என்கிற அறிவோ அனுபவமோ இல்லையா? சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தகுந்த சூழ்நிலை, அதாவது இயற்கைச் சூழல் மிகுந்த புனர்வாழ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லாமல், கோவிலுக்குள்ளேயே கான்க்ரீட் தளம் கொண்ட கொட்டகையில் வைத்து சிகிச்சை அளித்தது ஏன்? மூட்டுவலி வந்து அவதிப்படுகின்ற நிலையில் இருந்தும் பாகன்கள் அதைத் துன்புறுத்த அனுமதித்தது ஏன்? பாகன்களைப் பணிநீக்கம் செய்து, அனுபவமும் கருணையும் கொண்ட வேறு பாகனை நியமிக்காதது ஏன்? துன்புறுத்திய பாகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? வயதான காலத்தில் வெள்ளையம்மாள் அனுபவித்த வலியும் வேதனையும் துன்பமும் நிறைந்த வாழ்வுக்கு யார் பொறுப்பு?
விருதுநகர்கோவில் யானை சுலோச்சனாவின் மரணம்
விருதுநகர் வாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் இறைப்பணி செய்துவந்த பெண்யானை சுலோச்சனா. ஒரு கண் முழுவதும் பார்வை கிடையாது. நாளடைவில் இரண்டாவது கண்ணிலும் புரை ஏற்பட்டது. அரைகுறையான பார்வை தான். மூட்டுவாதத்தாலும் அவதிப்பட்டாள் சுலோச்சனா. பார்வைக் குறையாலும், மூட்டு வாதத்தினாலும் அவளால் சரியாக நடக்க முடியாது.
(சுலோச்சனா நடப்பதற்காக ஒரு அடி முன்னால் எடுத்து வைக்கக்கூட எவ்வளவு வலியுடனும் வேதனையுடனும் கஷ்டப்படுகிறாள் என்பதைக் கீழ்காணும் வீடியோ இணைப்பில் பார்க்கலாம்: https://www.facebook.com/brharan/videos/498439323693298/)
டிசம்பர் 2015-ல் பாகன் சரியாக வழிநடத்திச் செல்லாததால் கீழே விழுந்தாள் சுலோச்சனா. அப்போது அவளின் தோள் இடம்பெயர்ந்துவிட்டது. வலியால் துடிதுடித்தாள். அப்போதிலிருந்து அவளால் கீழே படுக்க முடியவில்லை. நின்றபடியே சுவற்றில் சாய்ந்துகொண்டுதான் படுப்பாள். அவ்வாறு நின்றபடியே சுவற்றில் சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த சுலோச்சனா மார்ச்சு மாதம் 21-ம் தேதி நடுநிசியில் தூக்கக் கலக்கத்தில் மீண்டும் கீழே விழுந்துவிட்டாள். அதன் பிறகு அவள் எழுந்திருக்கவேயில்லை. 22-ம் தேதி காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தாள். அவளுக்கு வயது 32 தான்!
Elephant 8a
ஒரு கண் குருடாகவும், ஒரு கண் புரையோடியும், மூட்டுவாதமும் கொண்ட ஒரு யானையை எதற்காகக் கோவிலில் இறைப்பணிக்கு வைத்துக்கொள்ள வேண்டும்? அதன் அவசியம் தான் என்ன? அந்த யானையை வனத்துறையிடமோ அல்லது புனர்வாழ்வு மையங்களுக்கோ ஏன் அனுப்பவில்லை? மருத்துவர்கள் ஆலோசனை எதுவும் வழங்கவில்லையா? சுலோச்சனாவின் துன்பம் மிகுந்த வாழ்வுக்கும் இறுதி மாதங்களில் அவள் அனுபவித்த வேதனைக்கும் யார் பொறுப்பு?
(தொடரும்)
Series Navigationஎஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *