சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ? சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ http://video.pbs.org/video/ https://www.youtube.com/watch? https://www.youtube.com/watch? ********************* [Click to Enlarge] சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் ++++++++++++++ நெப்டியுனுக்கு அப்பால் நகரும் அண்டங்களின் [Six Extreme Trans-Neptunian Objects (ETNOs)] சுற்று வீதிகள் நிலையானவை அல்ல. ஆகவே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒன்பதாம் கோளின் சுற்று வீதியும் நிலையான தில்லை. ஆறு எட்னா அண்டங்களின் சுற்று வீதிகள் [ETNO Objects Orbits] நீண்ட காலம் நிலையாய் இருக்கும் என்று கருத்தில் கொண்டு, கால்டெக் விஞ்ஞானிகள் பாட்டிஜின் & பிரௌன் முன்மொழிந்த ஒன்பதாம் கோளின் சுற்றுவீதியில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அதனால் நாங்கள் நம்புவது : சூரியனுக்கு ஒன்பதாம் கோளுடன், பத்தாம் கோளும் இருக்கலாம்; அவற்றுக்கு மேலும் இருக்கலாம். கார்லாஸ் தி ல ஃபியுன்டெ [ஸ்பானிஷ் வானியல் நிபுணர். ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் உலக விஞ்ஞானிகள். உலக விஞ்ஞானிகளுக்குச் சூரியனின் ஒன்பதாம் கோள் இருப்பை ஐயுறும் எதிர்மறைக் கருத்து எழுந்துள்ளது. அதன் சுற்றுக் காலத்தை அறிய நெப்டியூன் கோளுக்கு அப்பால் நீட்சி நீள்வட்டத்தில் ஒரே திசையில் சுற்றி வரும் மிகச்சிறிய அண்டங்களின் நகர்ச்சிப் போக்கை கால்டெக் விஞ்ஞானிகள் பாட்டிஜின் & பிரௌன் எடுத்துக் கொண்டார் [Caltech Scientists : Batygin & Brown, USA]. அந்த கணினிப் போலி மாடலில் அதன் நீட்சியான நீள்வட்ட வீதி 10,000 – 20,000 ஆண்டுகட்கு உட்பட்டதாக இருக்கும் என்று வெளியிட்டார்கள். ஆனால் இப்போது ஸ்பெயின் சகோதர வானியல் நிபுணர் இருவர் கார்லோஸ் & ராவுல் மார்கோஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி ஸ்வெர் ஆர்ஸெத் மாறான சிந்தனையைக் கிளப்பியுள்ளார். ஒன்பதாம் கோளின் சுற்றுவீதி நிலையற்றது [Unstable Orbit] என்னும் புதிய நோக்கு எழுந்துள்ளது. காரணம் நெப்டியூன் கோளுக்கு அப்பல் சுற்றும் சிறிய ஆறு அண்டங்களின் நகர்ச்சி சுற்றுவீதிகள் நிலையானவை [Unstable Orbits] அல்ல. மேலும் நமது பரிதிக்கு ஒன்பதுக்கு மேற்பட்ட கோள்கள் இருக்கலாம் என்னும் புதிய கருத்து 2016 ஜூன் 13 ராயல் வானியல் குழுவினர் மாத இதழில் [Royal Astronomical Society Journal ] வெளியாகியுள்ளது. இந்த அண்டக்கோள் -9 நகர்ச்சியை மட்டும் நாங்கள் மெய்யாக ஓர் விண்ணுளவி அனுப்பித்தான் தேடி உளவ முடியும். புறப் பரிதிக் கோள் களைக் [Exoplanets] காணப், பொதுவாக நூற்றுக் கணக்கான ஒளியாண்டுகள் தூரம் கடக்க வேண்டி இருக்கும். முரணாக இந்தக் கோள் -9 நமது அந்தப் புறத்திலே ஒளிந்து கொண்ண்டுள்ளது ! அலெக்சாண்டர் முஸ்டில் [ வானியல் துறைஞர், லுன்ட் பல்கலைக் கழகம், சுவீடன்] சூரியனின் ஒன்பதாம் கோள் பற்றிச் சுவீடன் வானியல் நிபுணரின் அறிக்கை : போலிக் கணினி மாடல் [Computer-Simulated Model] மூலம் நிரூபிக்கப்பட்ட சூரியனின் ஒன்பதாம் கோள் புறப் பரிதிக் கோளாய் [Exoplant] இருக்கப் பெரும்பான்மைத் தகுதி உள்ளது என்று சுவீடன் தேசத்து வானியல் விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார். இதுவே முதன்முதல் சூரிய குடும்பக் கோளாய்க் கண்டு பிடிக்கப்பட்ட புறப் பரிதிக் கோள் [Extrasolar Planet or Exoplanet]. இங்கே கூறப்படும் கோள் நியதி என்ன ? நமது சூரியன் தன் ஒன்பதாம் கோளை, 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே அதன் பூர்வீக மூலப் பரிதியிலிருந்து களவாடிக் கொண்டது ! பிறந்த நமது இளஞ் சூரியன், கோள் -9 ஐப் பற்றிக் கொண்டதற்குப் பற்பல ஆதாரம் இருப்பதாக சுவீடன் லுண்டு பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார். Click to Enlarge Image தோன்றும் போது பரிதிகள் யாவும் கொத்துக் கொத்தாய் [Star Clusters] உற்பத்தியாவதால், ஒன்றை ஒன்று நெருங்கி வரும்போது, ஒரு பரிதி, அண்டைப் பரிதிக் கோள் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதைப் பற்றிக் கொள்ளலாம். அவ்விதமாக நம் பரிதி கோள் -9 யைப் பிடித்துக் கொண்டிருக்கலாம். அல்லது புறப் பரிதியின் மற்ற கோள்கள், நம் பரிதி அரங்கில் கோள் -9 யைத் தள்ளி விட்டிருக்கலாம். இதுவரை கோள் -9 இன் சுயவடிவம் தெரியப்பட வில்லை. ஒருவித ஒளி எழுச்சியும் காணப்பட வில்லை. அதன் உட்பொருள் வாயுவா, பாறையா, எதுவெனத் தெரியாது. அது பனி மூடியதா, விண்கற்கள் மேலே விழுந்து குழியானதா என்று தெரியாது. அதன் நிறை மட்டும் பூமியைப் போல் 10 மடங்கு என்பது உறுதியாகத் தெரிகிறது. கோள் -9 புறப்பரிதிக் கோளென்று உறுதிப்பட, இன்னும் மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படும். அந்தக் கோட்பாடு மெய்யாக நிலைநாட்டப் பட்டால், லுண்டு பல்கலைக் கழக வானியல் நிபுணர், அலெக்சாண்டர் முஸ்டில், நமது சூரிய குடும்பக் கோள்கள் தோற்ற கோட்பாட்டில், அது பூத எட்டு முன்னடி [Giant Leap Forward] வைப்பாகும் என்று கூறுகிறார். புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது. அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம். அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது. கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம் சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது. ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது. அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல்[Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்: காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown] சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது. நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில் [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது. இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை. 2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது. அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது. மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார். அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார். அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது. இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார். அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார். 2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர். இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன. எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை. அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல. தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும். அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது. பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth] யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை ! ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency) [ஏப்ரல் 15, 2008] பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids] என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது. முரண் கோள்கள் சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு; அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது, ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos] ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று. முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள் [Beads like Chondrules] எறிகற்களில் காணப்பட்டன. அவை இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது. இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன. முடிவுகள் இவைதான் : 1. முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள். அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல. 2. உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே. சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா. அவையும் கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல. நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ? வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன ! பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ? விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை ! இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின. இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது. பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ? வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன ! பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின. பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளி யேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின. பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன. பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் ! அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன. யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது ! ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றி யுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவி யின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும். ++++++++++++++++++++++ [தொடரும்] தகவல்: Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine. 1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986) 19. http://www.spacedaily.com/ 20. http://www.spacedaily.com/ 21. http://mashable.com/2016/01/ 22. http://iopscience.iop.org/ 24. http://www.dailygalaxy.com/ 25. http://www.dailygalaxy. 26. https://www.newscientist.com/ 27. http://www.dailygalaxy. 28. http://www.hngn.com/ 29. https://www.sciencedaily. 30. http://www.cnn.com/2016/06/ 31. http://www.spacedaily.com/ ****************** S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 17, 2016 [R-2] Attachments area
Preview YouTube video Evidence of a Ninth Planet Preview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016 Preview YouTube video We can’t see this possible 9th planet, but we feel its presence Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been |
People (2)
Recent photos
Show details
|
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2
- ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?
- திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா
- லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை
- அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16
- “காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”
- `ஓரியன்’ – 2
- தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்
- காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்
- சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்
- தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்
- கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்
- My two e-books for young adults