திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை

This entry is part 21 of 21 in the series 27 ஜூன் 2016

 

சமீபத்தில் நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். எழுத்தாளர் விவேக் ஷான்பாக் தலைமையேற்ற ஒரு குழு எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்படங்களை எடுப்பதற்கான கருத்துருக்களை ஓர் அமைப்பின் சார்பில் பரிசீலனை செய்து, அவற்றை அனுப்பியவர்களை நேர்காணல் செய்து, இறுதிச்சுற்றில் தகுதி பெற்ற நான்கு பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருந்தது. இந்த அமைப்பைப்போலவே அரசு சார்ந்ததும் சாராததுமான பல அமைப்புகள் கன்னடத்தில் ஆவணப்பட ஆக்கத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. படங்கள் முடிவடைந்ததும் பொதுமக்களுக்காக அவை திரையிடப்படுகின்றன. நான் பத்து படங்களுக்கும் மேல் பார்த்திருக்கிறேன்.  பார்க்காதவை ஏராளமாக இருக்கும். பல தேசிய விருதுகளைப் பெற்ற திரையுலக இயக்குநரான கிரீஷ் காஸரவல்லி  சமீபத்தில் எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியைப்பற்றிய ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். கன்னடச்சூழலைப்பற்றிய ஒரு சிறிய குறுக்குவெட்டுச் சித்திரம் இது. தமிழில் இப்படி நிகழவில்லையே என்கிற ஆதங்கத்தால் இதைக் குறிப்பிட்டு எழுத வேண்டியிருக்கிறது. மறைந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்களைப்பற்றி ரவிசுப்பிரமணியன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தைப் பார்த்ததன் விளைவாக  அந்த ஆதங்கம் பொங்கியெழுகிறது. ஒவ்வொரு படத்தையும் தொடங்கி முடிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அலைச்சல்களையும் அறிந்தவன் என்கிற நிலையில் என் ஆதங்கம் பல மடங்காகப் பெருகுகிறது.

பெரியபெரிய நிறுவனங்களின் ஆதரவின் துணையோடு இந்திய மொழிகளில் ஆவணப்படங்கள் உருவாகும் சூழலில் தமிழில் ரவி சுப்பிரமணியன் போன்றோர் தம் கைப்பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து ஆவணப்படங்கள் எடுக்கிறார்கள். தமிழ்சூழல் மீதும் தமிழ்ப்படைப்பாளிகள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையே, எல்லா இழப்புகளையும் கடந்து இத்துறையை நோக்கி அவரைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. தமிழுலகம் ரவி சுப்பிரமணியன் போன்றோருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

திருலோக சீதாராம் மறைந்து பல ஆண்டுகளாகின்றன. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவருடைய நூற்றாண்டே வரப்போகிறது. ஆனால் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துமுடித்த தருணத்தில் நம்மிடையே அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்னும் எண்ணம் சட்டென எழுந்ததை உணர்ந்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என ஒருகணம் யோசித்த பிறகுதான் புரிந்தது. படைப்பாளிகள் மரணமற்றவர்கள். அவர்களுடைய உடல் மறைந்தாலும் அவர்கள் தம் படைப்புகளில் தொடர்ந்து உயிர் வாழ்கிறவர்கள். மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் பேறு பெற்றவர்கள். ’இலக்கியப்படகு’ கட்டுரைத்தொகுதியும் ‘சிவாஜி’ இதழ்த்தொகுதியும் ‘சித்தார்த்தன்’ மொழிபெயர்ப்பும் தமிழில் நிலைத்திருக்கும் வரை, திருலோக சீதாராம் என்னும் பெயரும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

பாரதியாரை நேரில் பார்க்கக் கிடைக்காத முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் திருவையாறு லோகநாத சீதாராம் என்னும் திருலோக சீதாராம். ஆனால் பாரதியார் பாடல்களில் மனம்தோய்ந்தவர். இசையோடு பாடத் தெரிந்தவர். தமிழகம் முழுதும் பாரதியார் பாடல்களைப் பாடிப்பாடி பரப்பியவர். பாடிப்பாடி பாரதியாருடைய பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்துவிட்டவர். அவர் பாடும் விதம் பற்றி சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன், அசோகமித்திரன், சத்தியசீலன் போன்றோர் சொல்லச்சொல்ல, அவர்களெல்லாரும் எவ்வளவு நற்பேறு பெற்றவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

சீராகப் பாய்ந்துவரும் நதிப்பெருக்கோடு கவி ஆளுமையான திருலோகத்தைப்பற்றிய ஆவணப்படம் தொடங்குகிறது. காலமென்னும் நதி, மொழியென்னும் நதி, இலக்கியமென்னும் நதி, பண்பாடென்னும் நதி என பல சொற்கள் மனத்தில் மின்னிமின்னி மறைகின்றன. விவேகானந்தர் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்த பாறையை நம் பண்பாடு அவருடைய நினைவைப்போற்றும் இடமாகவே மாற்றி நிலைநிறுத்திக்கொண்டதுபோலவே, திருலோக சீதாராம் அமர்ந்து பாரதியார் பாடல்களைப் பாடிய காவேரிக்கரையில்  இன்னும் திருலோகம் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றியது. அக்கணத்தில் அவர் குரலும் மூச்சுக்காற்றும் சுற்றிச்சுற்றி வரும் இடமாகவே காவேரிக்கரை காட்சியளித்தது. ஒருகணம் புறநானூற்றுக் கவிஞர் காவற்பெண்டு எழுதிய பாடல்வரிகள் மனத்தில் நகர்ந்தன. அந்தப் பாட்டில் ’நின்மகன் யாண்டுளன்?’ என்று ஒரு தாயிடம் தோழிகள் கேட்கிறார்கள். அதற்கு ’புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறே இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’ என்று பதில் சொல்கிறாள் அந்தத் தாய். அவளுடைய ஈன்ற வயிற்றைப்போல திருலோக சீதாராம் நின்று, அமர்ந்து, நடந்து, பாடி மகிழ்ந்த கரை இது எனச் சொல்லாமல் சொல்வதுபோல அந்தக் காட்சியை வடிவமைத்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன். திருலோக சீதாராமைப்பற்றி உரையாடும் ஆளுமைகள் மாறும்தோறும் இடம்பெறும் நதியின் காட்சி, ‘அவர் எங்கும் செல்லவில்லை, இதோ இங்கே இருக்கிறார்’ என்று மெளனமாகச் சுட்டிக்காட்டியபடி இருக்கிறது. நதியைத் தொடர்ந்து விட்டுவிடுதலையாகிப் பறக்கும் குருவியையும் வானத்தையும் திரையில் பார்த்ததும் திருலோகத்தையே அந்தக் குருவியாக நினைத்துக்கொண்டேன்.

டி.என்.ராமச்சந்திரன் மனமுருக உரையாடும் சொற்கள் வழியாக திருலோகத்தின் சித்திரம் மெல்ல மெல்ல உருவாகித் திரண்டு வருகிறது. மன்னர் மன்னன், சத்தியசீலன், சக்தி, கிருஷ்ணசாமி ரெட்டியார், அசோகமித்திரன் போன்றோர் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் ராமச்சந்திரன் உருவாக்கிய சித்திரங்களுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளன. ’முன்னொரு பாடல் எழுதினேன், அதன் மூலப்பிரதி கைவசம் இல்லை’ என்று அவர் திருலோகத்தின் கவிதையொன்றை அவர் மனப்பாடமாகவே சீரான தாளக்கட்டோடும் மன எழுச்சியோடும் பாடும் கணத்தில் மனம் நிரம்பித் தளும்பியது. அவருக்கும் திருலோகத்துக்கும் இடையிலான நெருக்கத்தை ஒவ்வொரு சொல்லிலும் உணரமுடிகிறது.

திருலோகத்துக்கு ஆசிரியராக இருந்த அந்தகக்கவி ராமசாமிப்படையாச்சி என்னும் பெயரை முதன்முதலாக ரவிசுப்பிரமணியன் பதிவு செய்திருக்கிறார். ஆவணப்படம் வழியாக அறிய நேர்கிற  பாரதிதாசன், கொத்தமங்கலம் சுப்பு, ஜி.டி.நாயுடு போன்றோரைப்பற்றிய சித்திரங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமானவையாக உள்ளன.

சிறப்பிதழுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்கும்படி திருலோகம் பாரதிதாசனிடம் கேட்டபோது, அவர் திருலோகத்தை வாழ்த்தி ஒரு பாடல் எழுதிக் கொடுத்துவிட்டு ”உன்னைப் புகழ இந்த மண்ணில் இருப்பவர்களுக்கு மனமில்லை, இது ஒரு தொடக்கமாக அமைந்து, அந்தப் புகழ்ப்பஞ்சம் விலகட்டும்” என்று சொல்வதாக இடம்பெறும் குறிப்பு திருலோகத்தின் தன்னலமற்ற மனப்போக்கை எடுத்துரைப்பதாக உள்ளது. ஒருமுறை பாரதிதாசனுக்கு நிதியளிப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். நிதிதியைத் திரட்டும் பொறுப்பு திருலோகத்திடம் வழங்கப்படுகிறது. ஆனால் பாரதிதாசன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் அவருக்கு மன உளைச்சல்.  பாரதிதாசனை நேரில் சந்தித்து பணமுடிச்சைக் கொடுத்துவிட்டுச் செல்வதற்காக அவரே புதுச்சேரிக்கு வருகிறார். அப்போதும் விவாதம். ஒரு கட்டத்தில் “எங்களுக்கு நீங்கள் வேண்டாம். உங்களுடைய பாடல்கள் போதும்” என்று பொதுவாகச் சொல்கிறார் திருலோகம். மனம் கரைந்துபோன பாரதிதாசன் திருலோகத்தைத் தன் வீட்டில் உண்டுவிட்டுச் செல்லும்படி சொல்கிறார். திருலோகம் தன் பழக்கத்தை அனுசரிப்பதிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக, அவர்பொருட்டு பக்கத்து வீட்டிலிருந்து திருநீறு எடுத்துவர ஏற்பாடு செய்து கொடுக்கிறார் பாரதிதாசன்.

இன்னொரு முறை கடற்கரையில் அமர்ந்தபடி கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்களை ரசனையோடு பார்க்கிறார். அக்கம்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களும் அந்தப் பாட்டைக் கேட்கிறார்கள். தற்செயலாக அங்கே கடற்கரைக்கு வந்திருந்த சுப்புவும் அந்தப் பாட்டைக் கேட்கிறார்கள்.  மகிழ்ச்சியோடு திருலோகத்தின் அருகில் சென்று ”இது யார் எழுதிய பாட்டு தெரியுமா?” என்று கேட்கிறார். திருலோகம் தெரியாது என தலையசைக்க, சுப்பு ”நான் எழுதியதுதான்” என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். “மிகவும் அழகாகப் பாடுகிறாய்” என்று மனம் திறந்து பாராட்டிவிட்டுச் செல்கிறார் சுப்பு.

ஜி.டி.நாயுடுவும் திருலோகமும் ஒருவர்மீது ஒருவர் நல்ல மதிப்பை உடையவர்களாக இருந்தார்கள். ”உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், ஏதேனும் கேளுங்கள்” என்று ஒருமுறை ஜி.டி.நாயுடு திருலோகத்திடம் கேட்கிறார்.. திருலோகம் தமக்கென எதுவும் கேட்காமல், தம் பகுதிகளில் வசிக்கும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதற்குப் படும் சிரமங்களை எடுத்துரைக்கிறார்.  அதைக் கேட்ட நாயுடு அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு வந்து செல்ல ஒரு பேருந்தையே ஏற்பாடு செய்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக இருக்கிறது. ஒன்றோடு ஒன்று பொருந்தியிருக்கும் வகையில் கச்சிதமாக இணைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் நேரங்களில் மட்டும் திருலோகத்தைப்பற்றிய தகவல்களைச் சொல்லவும் திருலோகத்தின் கவிதை வரியைப் படிக்கவும் ரவியின் குரல் தோன்றி மறைகிறது. திருலோகத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் கேட்டால் நன்றாக இருக்குமேயெனத் தோன்றும் தருணத்தில் படம் முடிவடைந்துவிடுகிறது. சிறிதும் தொய்வில்லாமல் நெய்யப்பட்ட பட்டாடைபோல நீண்டு சென்ற ஆவணப்படத்தைப் பார்த்த அனுபவம் இன்று கிட்டிய அனுபவங்களில் மிகமுக்கியமானது. ரவி சுப்பிரமணியத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Series Navigationசிறுவர் நாவல்கள் மின்னூல்களாக
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *