மான் வேட்டை என்றதும் பூரித்துப் போய்விட்டேன்.அதுவும் முதுமலைக் காட்டில். சவுந்தர் சொன்னதும் மனது முதுமலைக்காட்டிற்குப் போய்விட்டது.250 கி.மீ உள்ள முதுமலைக்குப் போக முதுமையில்தான் வாய்த்தது என்பது பூரிப்பிற்கான காரணம். 58 வயதில் இப்போதுதான் முதுமலைக்குப் போக வாய்த்திருக்கிறது. அதுவும் நேரடியாக மான் வேட்டையும் கூட .
மான் கறி சாப்பட முடியுமா என்று கேட்டு வைத்தேன். அதற்கு பதிலாகத் தான் சவுந்தர் “ வேட்டையாடி கறி சாப்புடலாம்… அதுவும் மான் வேட்டை “ என்றார்.
“ நெசமாவா..பூட்ஸ், டார்ச்சு லைட்ட்டுனு ஏற்பாடு பண்ணனுமா “
” மலைசாதிக்காரங்க ஏற்பாடு பண்ணுவாங்க . எல்லாம் வெச்சிருப்பாங்க “
“ எங்க தங்கறம் “
“ மலை சாதிக்காரங்க வூட்லதா. இல்லீன்னா பாரஸ்ட் ஹஸ்ட் ஹவுஸ்லே. மானோ முயலோ எது வேட்டையாடறதும் குற்றம்தா. குற்றம்ன்னு தெரிஞ்சு செய்யறதிலெ ஒரு அட்வென்சர் இருக்குதே “
இது வரை மீன் வேட்டைக்குத்தான் அதிகபட்சம் சென்றிருக்கிறேன்.. மீன் பிடிப்பது வேட்டையாடுதலில் வருமா என்ற சந்தேகமும் இருக்கிறது.குழந்தைப் பருவத்தில் மான் கொம்பு தூளியில் படுத்துத் தூங்கியிருப்பதால் மான் வேட்டையாடத் தகுதியிருப்பதாக எண்ணிக் கொண்டேன்.என் பேரன், பேத்திகளுக்கு காட்டவென்று மான் கொம்பு வீட்டில் இல்லை. இப்போது அவை ஆயிரக்கணக்கில் விலை பெறும்.
மான் வேட்டைக் கனவில் நான்கு நாட்கள் இருந்தேன். வேட்டை நாய்கள், இரும்பு ஆயுதம் ஈட்டி, அம்பு, பூட்ஸ் , டார்ச் சகிதம் வேட்டையாடப் போற கனவு இருந்தது.புள்ளிமான், சருகுமான், சம்பாரிமான், கவுரிமான் .. எதை வேட்டையாடப் போகிறேன்.
ஆலாந்துறை சண்முகம் அந்தக் காலத்திய “கேம்ஸ் லைசென்ஸ் ” வைத்திருந்தவர். ஒரு டன் எடை உள்ள ஆலந்துறையே கறி தின்கிற அளவு பெரிய மானையெல்லாம் வேட்டையாடியவர். உறவினர். அவர் இறந்த பின் “ கேம்ஸ் லைசன்ஸ் “ முறையும் இல்லாமல் போய் விட்டது. அவர் பரம்பரையில் யாரும் வேட்டையைத் தொடரவில்லை.
ஊட்டியை நெருங்கிய அய்ந்தாம் நாளில் அந்த வேட்டைக் கனவு கலைந்து விட்டது.கூடலூரில் புலி ஒன்று அட்டகாசம் செய்து வந்ததை அன்றைய தினசரிகளும் நிச்சயப்படுத்திக் கொண்டன .வாதப் பிரதிவாதங்களாய் செய்திகள் தினசரிகளில் மிதந்தன. விலங்குகளின் பாதையை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் வந்த வினை என்று சுற்றுச் சூழல் வாதிகள் வாதாடினார்கள். விலங்குகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றாத வனத்துறை எதற்கு என்று சாதாரண மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஒரு தேயிலைத் தோட்டப் பெண்ணை அது அடித்து கொன்று விட மக்கள் கிளர்ந்தெழுந்து நான்கு வனத்துறை வாகனங்களுக்குத் தீ வைத்து எறித்து விட்டனர். கொஞ்சம் கைதுகள், சிரமங்கள் என்று தெரிந்தது.எல்லாம் செய்திகளாய் விரிந்திருந்தன.
இன்னொரு பக்கம் யானைகளின் நடமாட்டம் பற்றிய செய்திகள். தீப்பந்தத்தை ஏந்தியபடி யானைகளைத் துரத்தும் தேயிலைத் தோட்டத்து மக்கள் என்று புகைப்படமெல்லாம் தென்பட்டது. ” நாங்க தீட்டாயிட்டம். பெரிசுக போற எடத்திலெ கட்டடங்களா வந்திசுருச்சு.பெரிசுக தீனி தேடி வந்து ரேசன் அரிசின்னு பாக்காமெ திங்கறாங்க . அதுக்கு தீனி தேவைப்படறப்போ மறுபடியும் இங்கதா வர்றாங்க ..யாரைக்குத்தம் சொல்ல ..”வயதான ஒரு பெண் ஒரு புகைப்பட பிரசுரத்தில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
பேருந்தில் போகும் போதே கண்ணில் பட்ட தேயிலைத் தோட்டங்களில் புலிகள் கற்பனையில் திரிந்தன. திடுமென மறைவிலிருந்து வெளிவந்து மிரட்டின.பயம் காட்டின.
ஊட்டியிலிருந்து தெப்பக்காடு போவதற்காக விசேச பேருந்துதான் கிடைத்தது.அதில் மூன்று மடங்கு கட்டணம் என்பதால் சவுந்தருக்கு ஏக வருத்தம. ஊட்டியில் கனத்த வெயில்தான். ”சாயங்காலத்துக்குள்ள போயிரணும் . மப்பும் மந்தாரமா இருந்தாவே அபாயம். யானைக திரிய ஆரம்பச்சிரும் ‘’ மூன்று மடங்குக் கட்டணத்தை நியாயப்படுத்த ஒரு லிட்டர் குடிதண்ணீரும் வாந்தி வந்தால் பிடித்துக்கொள்ள பாலீதீன் பையும் கொடுத்தார்கள்.
பாலித்தீன் பை மிகவும் உபயோகமாக இருந்தது. ஊட்டியைக்கடந்த பின் வாந்தி எடுத்து களேபரப்படுத்தி விட்டேன் சவுந்தரை.
“ அங்க டாக்டரெல்லா இருப்பாங்கதானே..”
“யானைகளும், புலிகளும்தா இருக்கும் வெட்டரன்ரி டாக்டர் வேண்ணா இருப்பாங்க. இது வெறும் புரட்டல் வாந்திதானே. மசக்கை வாந்தியின்னு சொல்ல நீ பொம்பளை இல்லியே “
தெப்பக்காட்டில் இறங்கியதும் இன்னும் ஓர் அதிர்ச்சி. அது சமவெளிதான் குளுகுளு மலைப்பிரதேசம் அல்ல என்பதைக் கண்டு கொண்டேன். வனத்துறையினரும் காவல்துறையினரும். ஏக அளவில் தென்பட்டனர். எந்தக் கடைகளும் இல்லை. ” எதுக்குன்னாலும் ஆறு கிமீட்டருக்கு அந்தப்புறம் மசனகுடிகுத்தா போகணும் “
“ அப்போ நம்ம சாப்பாட்டுக்கு ஓட்டல்ன்னு இல்லையா”
“ அதுக்குத்த ஆதிவாசித் தோழர்கள் இருக்காங்களே. காசு குடுத்தா எல்லாம் பண்ணிக்குடுப்பாங்க .. “ தூரத்தில் வனத்துறையினரின் குடில்கள் தீப்பெட்டிகளை தாறுமாறாய் அடுக்கியது போல் தென்பட்டன,தாறுமாறாக மேடுகள் பள்ளங்களாகியிருந்தன.தூரத்துக் கோடுகளாய் குறுகிய சாலைகள் திரிந்தன.
” புலி அடிச்சு கிலி பண்ணீருச்சு… பாரஸ்ட் அப்பீசருங்க நிறையப் பேர் வந்துட்டாங்க . ரகளையாலெ போலீசும் ஏகமா இருக்கு. கஸ்ட் ஹவுசுலே ரூம் கெடைக்கறது சிரமம் பாஸ் “
சவுந்தரின் நண்பர் கைபேசியில், கொளுத்திப் போட்டு விட்டார். சவுந்தர் முக்கியமான ” பேரடைஸ் “ விருந்தினர் விடுதியில்தான் இடம் கேட்டிருந்தார். அதில்தான் ஹேமாமாலினியும், தர்மேந்தராவும் ஹாத்திமேரா சாத்தி , மா படப்பிடிப்புகளின் போது தங்கியிருந்தார்களாம்.
” இங்க வர்ரப்பெல்லா அதுலதா கேட்டுத் தங்குவேன் .ஹேமாமாலினி இருந்த ரூம்ன்னு ஸ்பெசலா கேட்டிருந்தன் “
சொர்க்கம் நழுவிப் போய் விட்டது. டார்மெட்டரி கிடைக்குதா பார்க்கலாம் என்றார்கள். எல்லாவற்றிலும் வனத்துறையினரின் ஆக்கிரமிப்பு. புலியை வேட்டையாடுகிற எத்தனம்.எங்களையும் துரத்தும் உபாயங்கள்.
“ தூங்கறதுக்கு எடம் கிடைச்சா பத்தாதா பாஸ். யானை வந்து கதவை இடிக்காத எடமா புடுச்சு தர்ரேன்”
கடைசியில் யானை கதவைத்தட்டி களேபரம் செய்த இடம்தான் கிடைத்தது.
அதற்கு முன் மான் வேட்டைக் கனவில் நான் திளைத்திருந்தேன். ” இப்போ இருக்கற பிரச்சினையில் காட்டுக் கோழி கெடைக்கறது கூட கஷ்டம் “
“ இதுக்கு பிராய்லர் சிக்கனே மேல்ன்னு கீழையே இருந்திருக்கலாம் “
என் ஆழந்த வருத்தங்கள் அறை பிடித்துத் தந்த ஆதிவாசித்தோழருக்கு சங்கடமே தந்தது. ” பகல்லெ முயல்கறி கெடைக்குதான்னு பாப்போம். இப்போ இருட்டிப் போச்சு. யானைக மொதற்கொண்டு எல்லாம் நடமாடிட்டு இருக்குதுக”
“ முயல்கறியா. அப்போ முயல் வேட்டைக்கு கூட வாய்ப்பில்லையா “
மாயாறு சலசலத்துக் கொண்டேயிருந்தது. இறங்கி கால்களை நனைத்துக் கொள்ளத் தோன்றியது.ஆனால் கண்ணில் பட்ட தூரத்து யானைகளின் நடமாட்டம் அறைக்குள் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கச் செய்தது..தூரத்தில் காட்டெருமைகளும் காட்டுப்பன்றிகளும் சாதாரணமாகப் பட்டன.வெளிச்சம் பரவாத இடமில்லை என்பது போல் வெளிச்சக்கீற்று எங்குமாய் பரவியிருந்தது.
“ மரத்திலெ கறையான் புடிச்சாலும் அதெ உலுக்கக் கூட இங்க உரிமை கெடையாது. இருக்கறது இருக்கறமாதிரி இருக்கணும். பாதுகாக்கப்பட்டப் பகுதி . காலையில் முயல் வேட்டைக்கு முயற்சி பண்ணலாம். புலி கெடச்சு போலிஸ்காரங்க, பாரஸ்ட்காரங்க வெக்கேட் பண்ணிட்டா அதுக்கு ரொம்ப வாய்ப்பு இருக்குது “
“புலி கெடச்சான்னா..”
“ பப்ளிக் புலி அடிக்கறதுன்னாலே கோபத்திலெ இருக்காங்க . பாரஸ்ட் ஆளுக எங்க உயிரைக் காப்பாத்த மாட்டீங்களான்னு பப்ளிக் கோபத்திலெ ரகளை பண்ணிட்டு இருக்கறதுனாலே புலி செத்தாதா உண்டு நிம்மதி இங்கிருக்கறவங்களுக்கு,ஆனா அதுகளுக்கு நாம பன்ற துரோகம் நெறைய “
“ அடிக்கற அதே புலியா .. கண்ணுல படற ஏதாச்சுமா “
“ வெளையாட்டிலெ எது வேண்ணா நடக்கலாம்.ஏதாச்சும் வேற அகப்பட்டாக் கூட அதைக் கொன்னுட்டு புலி பயம் இனி வேண்டாம்ன்ன்னு சொல்ல சந்தர்ப்பம் பாத்திட்டிருக்காங்க. கால்லே காய்ம்பட்ட புலி. இனி வேட்டையாடித் திருய முடியாது.. மேன் ஈட்டர்ன்னு தள்ளிட்டங்க .நமக்கு முயல் வேட்டைக்கு சந்தர்ப்பம் கெடைக்குதான்னு பாக்கலாம் “
சித்தப்பா காங்கயம் வேலன் முயல் பிரியர் . கொலஸ்ட்ரால் குறைவு என்று விரும்பிச் சாப்பிடுவார். காங்கயத்தில் வீட்டுத் தோட்டத்தில் முயல்கள் வளர்ப்பார்.காங்கயம் போகிற போதெல்லாம் அவர் வளர்க்கும் முயல்களை ரசிப்பேன். முயலை காஷ்மீர் பனிக்கட்டி என்பார் அதன் மிருதுத் தன்மை பார்த்து… உடம்பைப்பிடித்துத் தூக்கக் கூடாது என்பார். காதைப் பிடித்துத் தூக்கிக் காண்பிப்பார். சிறுசிறு பற்கள். சிகப்புக் கல் கண்கள் .வெள்ளை முடி . கைகளை நீட்டினால் உரசி கிளுகிளுக்கச் செய்யும். எலிக்குட்டி போல் முயல் குட்டிகள் உடம்பில் முடியே இல்லாமல் இருக்கும்.
” இதுக்கெல்லா ஆயுள் பத்து பன்னிரண்டு வருஷம் இருக்கும். நாம மூணு மாசத்திலெ மூணு கிலோ ஏறுதான்னு காத்திட்டிருந்திட்டு சாகடிச்சிர்ரமே..”
“ வளத்துட்டு சாகடிக்கறது சிரமம் இல்லியா சித்தப்பு “
“ ருசியான கறிக்குன்னெ ஆண்டவன் இதையெல்லா படச்சிருக்கான். அழகான பொண்னுகளெ ரசிக்கறதுக்கும் அனுபவிக்கறதுக்குன்னு படச்ச மாதிரி ”
ஒரு யூனிட் முயல் எப்போதும் அவர் வீட்டு புழக்கடையில் இருக்கும். பத்து முயல்கள் கொண்டது ஒரு யூனிட். சினைமுயல் ஒன்று. இரண்டு பெட்டைகள் ஆறுமாத முயல்கள் இரண்டு . அதைத் தவிர நான்கு பெட்டைகள்.
“ ஒரு யூனிட் டுன்னு இருக்கறதுலே அதன் வளர்ச்சி சீரா இருக்கும். ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி இருக்கும் அதுக்குத்தா. கொறஞ்சு போனா அதுக கண்ணுலே ஒரு ஏக்கம் வந்திரும் “
“ அதுக ஏங்கறதே கண்டு புடிச்சிருவீங்களா “
” வளர்க்கறமே தெரியாதா..”
மான் வேட்டையை முயல் வேட்டையாக்கி கொஞ்சம் கற்பனையில் அன்றிரவு தூங்கிப்போனேன்.தூக்கத்தில் கூட சூரியனின் அடர்த்தியான வெளிச்சம் ஊடுருவிக் கொண்டே இருந்தது.இது மலைப்பிரதேசம் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
துப்பாக்கியைக் கையில் ஏந்தி வேட்டைக்குப் போகிறேன். சாதாரணமாய் புலிகளும் யானைகளும் அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கின்றன திடுமென படபடவென சுட்டுத் தள்ளுகிறேன்,புலிகள் சுருண்டு வீழ்கின்றன. தேயிலைத் தோட்டப் பெண்ணைக் கொன்ற புலியைச் சுட்டிருக்கிறேன். மக்களை புலி பயத்திலிருந்து காப்பாற்ற என் வேட்டை பயன்பட்டிருக்கிறது பலரும் பாராட்டுகிறார்கள்.செத்துக் கிடக்கும் புலியின் பக்கத்தில் செல்பியாய் சில படங்களும் எடுத்துக் கொள்கிறேன்
நடு இரவிற்கு முன்னமே கதவை இடிக்கும் சப்தம் தூக்கத்தைக் கலைத்து விட்டது.பிளிறல் சபதம் போல் ஏதோ கேட்டமாதிரியிருந்தது. கதவருகில் நின்றிருந்தார் சவுந்தர் .
” நல்லாத் தூங்கிட்ட போல . பக்கத்திலே யானை நடமாடிட்டிருந்துச்சு. இப்போ பக்கத்திலே எங்கியோ கதவெ இடிச்சிட்டுரூக்குது ”
சூரியன் வெம்மையாக்கிய காலையில் அதன் துவம்சத்தைக் கண்டேன். தொட்டிச்செடிகள் சேதமாகியிருந்தன. கீழ்ப்பகுதி அறைகளில் ஒன்றின் கதவு சிதைந்து தொங்கிக் கொண்டிருந்தது. பிளைவுட் பலகைகள் சிதைந்து தொங்கின. மூங்கில் படல்கள் பிய்ந்து கிடந்தன.செடிகள் நசுங்கி வாடிக்கிடந்தன.அதன் பச்சையம் வேறு நிறமாய் மாறியிருந்தது.
“ வந்தது ஒன்னா ரெண்டா”
“பாத்தவங்க மூணுங்கறாங்க “.
காடு பயத்தை மீறி யாரையும் உள்ளிழுத்துக் கொள்ளும். என் கால்கள் எங்காவது போக தத்தளித்தன.அதன் வெளிச்சமும் சலசலப்பும் அழைத்துக் கொண்டேயிருந்தன, சவுந்தர் எங்கேயும் போய் விடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்
.” எப்போ எது நடமாடுன்னு சொல்ல முடியாது. கண்லே தட்டுப்ப்பட்டா என்ன பண்ணுனு சொல்ல முடியாது. ரூமுக்கு வெளிய இருக்கற படலுக்குள்ளாற் மூஞ்சியெ வெச்சிட்டு பாத்திட்டிரு “
பகலில் யானைத்தாவளம் போய் யானைகளுக்கு உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாவுத்தன் கக்கா பிக்கா என்று யானைகளுடன் ஏதோ பேசி உணவு தந்தார். நாற்பது வயது முது யானை ஒன்றும் தள்ளாடியபடி இலைக் கொத்துக்களை அள்ளிக் கொண்டது. மற்றவை ஏழெட்டு இருந்தன. கேழ்வரகுக் களி, கொள்ளு உருண்டைகள், பாசிப்பயிறு உருண்டைகள் , வாழைப்பழங்கள் என்று தந்தார்கள். நூறு கிலோ முதல் முந்நூறு கிலோ உணவு வரை யானை சாப்பிடும். மாவுத்தன் கொடுத்தது இருபத்தைந்து கிலோ கூட வராது. காட்டில் மேய்ந்து பசியாறிக்கொள்ளும் என்றார் சவுந்தர். கேழ்வரகுக் களி உருண்டையை ஒரு யானை நிராகரித்தே வந்தது. அஷ்ட சூரணம் என்று ஒரு உருண்டையை அதற்கு மாவுத் தந்தார். கக்கா பிக்கா என்று அதைத் திட்டுவது போலவும் ஆறுதல் சொல்வது போலவும் ஏதோ பேசினார்.அவர்களுக்கு இடையிலான ஏதோ கக்கா பிக்கா மொழி. தெப்பக்காட்டில் கொஞ்ச நாள் இருந்தால் புரிந்து விடும்.
தங்கியிருந்த இட்த்தில் யானை வந்து செய்த களேபரத்தைப் பற்றி பேச்சு வந்தது.யானைகள் காட்டில் திரிந்து எதையாவது சாப்பிடும் போது உப்பு தேவைப்படும் . குடியிருப்புகளுக்குள் அவை நுழையும் போது முதலில் உப்பைத்தான் தேடுமாம். யானையின் கனவில் புலிகள் வந்து பயமுறுத்தும். அது தூக்கத்தில் இருந்து விழித்ததும் புலி எதிரில் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டு எதிரில் இருப்பதையெல்லாம் துவம்சமாக்குமாம்.
“ புது கற்பனையா.. செய்தியா “
“ கேள்விப்பட்டதுதா “
“ நேத்தைக்கு உப்பைத் தேடித்தா வந்திருக்குமா.. முயலுக்கு உப்பு தேவையில்லையா”
“ பெரும்பாலும் எல்லா பிராணிகளும் எலை தளையின்னு சப்புன்னு சாப்புட்டது போதாதுன்னு உப்பு கறடெத் தேடிப்போயி நக்கிக்கும். நாம இங்க வந்து மானுக்கும், முயலுக்கும் நாக்கைத் தொங்கப்போட்டு அலையற மாதிரி “
முயல் கறியுடன் அறைக்கு வந்த ஆதிவாசித் தோழர் பாலித்தீன் பையில் முயல் கறியைக் காட்டினார். பாலிதீன் பையினூடே ரத்தத் துளிகள் மினுங்கின .
“ என்னமோ வேட்டையாடிக் கொன்னுட்டன். கயித்துச் சுருக்கிலே அகப்பட்டது. ஆனா தோலை உறிச்சுப் பாத்தப்போ அது கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சிச்சு. சங்கடமா இருந்துச்சு “
மெதுமெதுவான பனிக்கட்டி போன்ற மிருதுவான முயலின் கர்ப்பத்திலிருந்தக் குட்டி இன்னும் மிருதுவாக இருந்திருக்கும் என்ற நினைப்பு வந்தது. கறி சுவைக்காக அதைக் கர்ப்பத்திலேயே கொன்றிருக்கிறோம் என்பது ஞாபகம் வந்தது.யானையின் கோபமான பிளிறல் எங்கோ கேட்பது போலிருந்தது.
யானை களேபரம் செய்து விட்டுப் போனதில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது .
- யாதுமாகியவள்
- பிளிறல்
- சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3
- சொல்லவேண்டிய சில
- விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10
- மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!
- ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
- குறிப்பறிதல்
- உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்
- கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
- காப்பியக் காட்சிகள் 10.பொழுதுபோக்குகள், பழக்க வழக்கங்கள்
- மஹாத்மா (அல்ல) காந்திஜி
- பாடம் சொல்லும் கதைகள்
- தொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..
- அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு
- நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016
- சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை