தொடுவானம் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி

This entry is part 4 of 12 in the series 4 ஜூலை 2016

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்

          126. ஹிப்போகிரெட்டஸ்  உறுதிமொழி

Hippocrates          மருத்துவ வகுப்பு வெளி நோயாளிகள் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தது. விரிவுரை ஆற்றும் மேடையும் மாணவ மாணவிகள் அமர்ந்து குறிப்புகள் எடுக்கும் வகையில் மேசை நாற்காலிகளும் சொகுசாக இருந்தன.

டாக்டர் மில்லர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இளம் வயதினர். அவர்தான் எங்களுக்கு மருத்துவப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தருவார். அவருடடைய ஆங்கில உச்சரிப்பு வேறு விதமாக இருந்தாலும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது.

அவர் முதலில் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார். மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் இங்கிலாந்தில் பெற்றுள்ளதாகவும், இங்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆவதாகவும் கூறிக்கொண்டார். தம்முடைய மருத்துவ வகுப்புக்கு எங்களை வரவேற்றார். அதன்பின்பு எங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று அறிமுகம் செய்துகொண்டோம்.

மருத்துவத் தொழில் புனிதமானது என்றார். காரணம் அது மனித உடலுடனும் உயிருடனும் தொடர்புடையது என்று கூறிய மில்லர், அதனால்தான் நோயாளிகள் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகின்றனர் என்றார். இந்தப் புனிதத் தன்மை எல்லா நிலையிலும் காக்கப்படவேண்டும் என்றார். நோயாளிகளில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது, எல்லாருக்கும் உண்மையுடன், சிறப்பான மருத்துவம் செய்யப்படவேண்டும் என்றார். இயேசு கிறிஸ்து உலகில் வாழ்ந்த காலத்தில் அன்பைப் போதித்ததோடு பரம வைத்தியராகப் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தினார். அவர் காட்டிய மருத்துவப் பணியைத்தான் இன்று மிஷன் மருத்துவமனைகள் தொடர்ந்து செய்துவருகின்றன என்றார். இந்தத் தொழிலை பொருள் ஈட்டும் தொழிலாகக் கருதாமல் சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவையாகக் கொள்ளவேண்டும் என்றார்.
மருத்துவப் பணியின் புனிதத் தன்மைமையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர்கள் போற்றிக் காத்துள்ளனர். அதன் புனிதத் தன்மையை வலியுறுத்தும் வண்ணமாக மருத்துவம் பயின்று வெளியேறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. அதை அவ்வாறு உருவாக்கியவர் ஹிப்போகிரேட்டஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞர். அதனால் அது இன்றளவும் ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி ( Hippocratic Oath ) என்று அழைக்கப்படுகிறது. அந்த உறுதிமொழியை  இன்றும் உலகின் பல மருத்துவக் கல்லூரிகளில்  படித்து முடித்து வெளியேறும் மருத்துவப் பட்டதாரிகள் பட்டமளிப்பு விழாவின்போது போது எடுத்துக்கொள்கின்றனர்.
ஹிப்போகிரேட்டஸ் தமது தந்தையிடம் முறையாக மருத்துவம் பயின்ற ஓர் மருத்துவர். இவர் கிரேக்க நாட்டவர். உலகில் கிரேக்க நாடு மிகச் சிறியதாக இருந்தாலும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு அதன் பொற்காலமாக விளங்கியது. உலகின் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களான சோபோக்கிலிஸ் ( Sophocles ) , இயூரிபிடிஸ் ( Euripides ), அரிஸ்டோபானஸ் ( Aristophanes ), சாக்ரட்டீஸ் ( Socrates ) , பிளேட்டோ ( Plato ), ஹெரோடோட்டஸ் ( Herodotus ), தூசிடிடிஸ் ( Thucydides ) , ஹிப்போகிரேட்டஸ் ( Hippocrates ) ஆகியோர் வாழ்ந்த காலம் அது.
இவர்களில் ஹிப்போகிரேட்டஸ் மருத்துவத்தை அறிவியல் பூர்வமாக வெளிக்கொணர்ந்தவர்.  இவர்தான் இன்று மருத்துவத் தந்தை என்று உலக முழுதும் போற்றப்படுகிறார். இவர் அவர் காலத்தில் புகழ்மிக்க மருத்துவராக விளங்கியதோடு பல்வேறு புதுமையான தத்துவங்களும் தந்தவர். அவற்றில் ஒன்றுதான் ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி ( Hippocratic Oath ).  அது வருமாறு:

” I swear by Apollo The Healer, by Asclepius, by Hygieia, by Panacea, and by all the Gods and Goddesses, making them my witnesses, that I will carry out, according to my ability and judgment, this oath and this indenture.

To hold my teacher in this art equal to my own parents; to make him partner in my livelihood; when he is in need of money to share mine with him; to consider his family as my own brothers, and to teach them this art, if they want to learn it, without fee or indenture; to impart precept, oral instruction, and all other instruction to my own sons, the sons of my teacher, and to indentured pupils who have taken the physician’s oath, but to nobody else.

I will use treatment to help the sick according to my ability and judgment, but never with a view to injury and wrong-doing. Neither will I administer a poison to anybody when asked to do so, nor will I suggest such a course. Similarly I will not give to a woman a pessary to cause abortion. But I will keep pure and holy both my life and my art. I will not use the knife, not even, verily, on sufferers from stone, but I will give place to such as are craftsmen therein.

Into whatsoever houses I enter, I will enter to help the sick, and I will abstain from all intentional wrong-doing and harm, especially from abusing the bodies of man or woman, bond or free. And whatsoever I shall see or hear in the course of my profession, as well as outside my profession in my intercourse with men, if it be what should not be published abroad, I will never divulge, holding such things to be holy secrets.

Now if I carry out this oath, and break it not, may I gain for ever reputation among all men for my life and for my art; but if I transgress it and forswear myself, may the opposite befall me.

          இதை இவ்வாறு மொழிபெயர்க்கலாம்:
           ”  நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ , அஸ்கிலிபியுஸ் , ஹைஜீஈயா , பானசீயா ,இதர எல்லா தெய்வங்களின் மேலும், அவர்களை இதற்கு சாட்சியாகவும் நான் இந்த உறுதிமொழியை  என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஏற்றவகையில் இதைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

         எனக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்த ஆசிரியரை என் பெற்றோருக்கு சமமாக மதிப்பேன். அவரை என்னுடைய வாழ்க்கையின் பாதையில் உறுதுணையாகக் கொள்வேன்.அவருக்குத் தேவையான வேளையில் என் செல்வத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவருடைய குடும்ப உறுப்பினர்களை என்னுடைய சகோதர்களாக ஏற்பேன். அவர்கள் விரும்பினால் அவர்களுக்கும் இக் கலையை ஊதியம் பெறாமல் கற்றுத் தருவேன். இது தொடர்பான அனைத்து கலைகளையும் என் மகன்களுக்கும்  என் ஆசிரியரின் மகன்களுக்கும் கற்றுத் தருவேன். இந்த உறுதிமொழியை  எடுத்துள்ள இதர மாணவர்களுக்கும் இவ்வாறே நான் கற்றுத் தருவேன். இவர்கள் தவிர வேறு யாருக்கும் நான் சொல்லித் தரமாட்டேன்.

           என்னுடைய திறமைக்கு ஏற்ப நான் நோயாளிகளுக்கு உதவுவேன். ஆனால் தவறு செய்யவோ காயப்படுத்தவோ மாட்டேன். யாராவது விஷத்தை தர வேண்டினாலும் நான் தரமாட்டேன். அதை ஊக்குவிக்கவும் மாட்டேன். அதுபோன்றே பெண்ணுக்கு கர்ப்பத்தைக் கலைக்கும் மருந்தையும் தரமாட்டேன். ஆனால் என்னுடைய கலையையும்  ( தொழிலை ) வாழ்க்கையையும் நான் புனிதமாகவும் பக்தியாகவும் வைத்திருப்பேன்.நான் கத்தியைப் பயன்படுத்த மாட்டேன்.  கற்களால் ( சிறுநீரகக் கற்கள் ) பாதிக்கப்பட்டவர்களுக்கும் நான் கத்தியைப் பயன்படுத்தாமல், அதில் தேர்ந்தவர்களிடம் அவர்களை ஒப்படைப்பேன்.

          எந்த வீட்டினுள் நான் நுழைந்தாலும், நோயாளிக்கு உதவவே செல்வேன். எவ்விதமான தவறுகளையும் தீய நோக்கங்களும் இல்லாமல், குறிப்பாக பெண்களின் உடல்களை அல்லது ஆண்களின் உடல்களை , அவர்கள் அடிமையோ இல்லையோ, மாசு படுத்தாமல் இருப்பேன்.என்னுடைய தொழிலில் அல்லது வெளியில் நான் சந்தித்த மனிதர்களிடம் நான் பார்த்ததையும், கேட்டதையும் வெளியிடக்கூடாது என்ற நிர்ப்பந்தம் உண்டானால் அவற்றை வெளியிடாமல் புனிதமான இரகசியங்களாகக் கருதிக் காப்பேன்.

          இப்போது, இந்த  உறுதிமொழியை நான் தவறாமல் கைக்கொண்டால், என்னுடைய வாழ்க்கையிலும் கலையிலும் என்றென்றும் நான் பேரும் புகழும் பெறுவேன். ஆனால் நான் அப்படிக் கைக்கொள்ளாமல் மீறி வேறு விதமாக நடப்பேனானால், இவற்றுக்கு நேர்மாறானவை என்மேல் விழுவதாக. ”

ஹிப்போகிரேடட்ஸ் மருத்துவ வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர். அவர் அறிவியல் பூர்வமான சிறந்த பகுத்தறிவாளராகத் திகழ்ந்துள்ளது வியப்பானது. அவர் வாழ்ந்த காலத்தில் வியாதிகள் பற்றியும் மருத்துவம் பற்றியும் மக்களின் புரிதல் வேறு விதமாக இருந்தது.

          வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தில் மந்திரவாதிகள்தான் மருத்துவர்களாகச் செயல்பட்டனர். இவர்களை மந்திரவாதி – வைத்தியர்கள் ( Witch  – Doctors ) என்று அழைத்தனர். இவர்கள் பல்வேறு மந்திரங்கள், மாயாஜால வித்தைகளைப் பயன்படுத்தியதோடு ஒருசில மருந்துகளையும் தயாரித்தும் தந்துள்ளனர்.

          இந்த மந்திரவாதி – வைத்தியர்கள் பூஜைகளும் செய்ததால் அவர்கள் பூசாரிகளாகவும் கருதப்பட்டனர். இதனால் சமய நம்பிக்கையும் மருத்துவமும் இரண்டராக் கலந்து விட்டது எனலாம். காலப் போக்கில் இந்த மந்திரவாதி – வைத்தியர்கள் பூசாரி – வைத்தியர்களாக ( Priest –  Physician ) உரு மாறினர்.

          ஆனால் கிரேக்க நாட்டில் ஹிப்போகிரேடட்ஸ் வந்தபின்பு அவர் மந்திர, சமய, மாயாஜால வித்தைகள் மூலமாக நோய்களைக் குணப்படுத்தும் முறையை மாற்றி அறிவியல் பூர்வமான மருத்துவத்தை அறிமுகம் செய்தார். அவர் மருத்துவம் தொடர்புடைய நூற்றுக்கணக்கான தொகுப்பு நூல்களைச் சேகரித்து மருத்துவ நூலகம் அமைத்தார். அந்த நூல்கள் பலரால் எழுதப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் மருத்துவ அறிவுக்கு புத்துயிர் ஊட்டுவனவாக இருந்தன. அவரும் பல நூல்களை எழுதினார். அவற்றை வைத்து அவர் மருத்துவத்துக்கு புதிய உயிரூட்டம் தந்தார். மந்திரவாதிகளையும் பூசாரிகளையும் மருத்துவக் கலையிலிருந்து புறந்தள்ளவேண்டும் என்றார். மந்திரங்கள் ஓதுவதைக் கற்பதை விட்டுவிட்டு மருத்துவம் செய்ய விரும்புபவர்கள் அறிவியல் பூர்வமாக நோயின் தன்மைகளை உணர்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். நோயின் தண்மையைக் கவனிப்பதோடு அதன் அறிகுறிகளையும் குறிப்பெடுத்து பத்திரப்படுத்தி  அதன்மூலம் அதேமாதிரி அறிகுறிகள் காண நேர்ந்தால் அவற்றை ஒப்பிடவேண்டும் என்றார். குறிப்புகள் எடுப்பதும், நோயாளிகளின் சிகிச்சைகளை முறையாக எழுதி ஆவணப்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்பதை அவர் வலியுறித்தினார். அவர் வழிகாட்டிய அந்த ஆவணப்படுத்தும் முறை மருத்துவக் கலையில் இன்றும் பின்பற்றப்படுகிறது! இதுவே நவீன மருத்துவக் கலையின் துவக்கம்!

         இத்தகைய மருத்துவப் புரட்சி உலகில் ஒரு சின்னஞ்சிறு நாடான கிரேக்கத்தில் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்பது எண்ணிப்பார்க்க முடியாத விநோதமாகும்!

 

          ( தொடுவானம் தொடரும் )

Series Navigationமயிர் நீப்பின்…புறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *