கவி நுகர் பொழுது- உமா மோகன்

This entry is part 7 of 23 in the series 24 ஜூலை 2016

uma mokan

( உமா மோகனின்,” துயரங்களின் பின் வாசல்”, கவிதை நூலினை முன்வைத்து)

 

நவீன கவிதை என்பது,சமகாலப் பிரச்சனைகளை சமகால மொழிக் கூறுகளோடு சம காலத்தின் தேவையைக் கருதி சமகாலச் சூழலை மையப் படுத்தி எழுதுவது என்றாகும் பட்சத்தில் எக்காலத்தில் எழுதப்படும் கவிதையும் அந்தக் காலத்தின் ந‌வீனத் தன்மைக்குகந்ததாக அமைகிறது. விடுத்து, வெளி நாட்டுக்கவிதைகளின் வாசிப்பனுபவத்தின் வாயிலாக மொழிபெயர்ப்புக் கவிதைகள் போல எழுதுவதாகாது.

ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு தனித்த மொழி அமைகிறது. அமைய வேண்டும். வெற்றி பெற்ற கவிதைகளைப்ப படித்துவிட்டு அதைப் போல‌வோ அதில் பயன் படுத்தப் பட்ட வார்த்தைகளை போணி செய்ய முயல்பவர்களை விட்டு விடுவோம்.

உமா மோகனின் ,”துயரங்களின் பின் வாசல்”, கவிதைத் தொகுப்பினை, விமர்சனக் கூட்டமொன்றில் பேசும் பொருட்டு வாசித்தேன்.

function

“தனித்த வழிகளைக் காட்டிலும் பொது வலிகளே அதிகம் பாடு பொருளாக வேண்டுமென்பது என் ஆவல் “, என முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

தன் அனுபவங்களின் பதிவாக படைப்புகள் உருவாகும் போது அவற்றிற்கான தனித்துவமும் வலிமையும் அதிகம். ஏனெனில், அவற்றுள் புனைவிகளை விடவும் சத்தியமும் யதார்த்தமும் மிகு தன்மை யுடையதாய் அமைந்திருக்கும்.

ஆயினும் தன்னனுபவங்கள் மட்டுமே படைப்பாக மாறும் அல்லது மாற வேண்டுமென்பதில்லை.  சக மனிதைன் இன்ப துன்பங்களைத் தனதாகப் பாவிக்கும் மனம் கவிமனத்திற்கு இயல்பானதே. அதனால் தானோ என்னவோ பொதுவலிகளையே அதிகம் பாடு பொருளாக வேண்டுமென்கிற ஆவல் கொண்டவராயிருக்கிறார், உமா மோகன். ” எளியவர் கண்ணீரிலிருந்து ஊறும் மசி நமது எழுதுகோலில் இருப்பதை உணர்ந்தால், நாம் அனைவருமே துயரங்களின் பின் வாசலில் காத்திருப்போம்”, என்கிறார்.

book wrapper

இது வெறும் அனுதாபமல்ல. பிறர்  நிலையில் தானிருந்து பார்க்கிற மனோ நிலை.

It is not sympathy, it is Empathy.

 

அன்றாடம் ஒரு கவள‌ம் சோற்றுக்கு

வருவது ஒரே காக்கையா என‌

ஏனோ நினைத்ததில்லை.

நினைக்காது. ஒரே காக்கையா எனும் ஆர்வம் வரும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட காக்கை மீது ப்ரியம் ஏற்படும். ஒரே காக்கை மீது அன்பு செலுத்துவதும் தவறில்லை தான். நட்பாய் உறவாய் மாற்றி அன்பு கொள்ளும் தனமை. தாய் தன் பிள்ளை மீது காட்டும் அன்பு உலகின் ஆகச் சிறந்த அன்பின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. எனில், ஒரே காக்கையா எனப் பார்க்காததில் உள்ள முக்கியத்துவமென்ன வென்று நினைக்கக்கூடும். இருக்கிறது. ஒரேகாக்கையாவென கவனம் கொள்ளும் போது, உருவாகும் பிரியம் பிற காக்கை வரும்போது விரட்டச் சொல்லும். எனவே இது ஒற்றைக் காக்கை மீது உருவாகும் அன்பன்று.

காக்கைக் குருவி எங்கள் சாதி

என்று பாரதி பாடிய உயிரின் மீதான அன்பு.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு

அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கெல்லாம் நான்

அன்பு செயல் வேண்டும்

என்னும் வள்ளலாரை வழிமொழிகிற அன்பு.

இத்தகைய கவிதைமனத்தின் தொகுப்பு ,”துயரங்களின் பின் வாசல்”.

நூலின் அட்டைப்படம், இதற்கெனப் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட புகைப்படம்.எடுத்தவர் ராஜி சுவாமிநாதன். மகிழ்ச்சி,பாராட்டு.

வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள சிமண்ட் கட்டையொன்றில் கவிழ்த்து வைக்கப்பட்ட வாளி.அந்தப்படம் ,அது வெளிப்படுத்தும் சூழல். கவிழ்த்துவைக்கப்பட்ட வாளி ,தொகுப்பின் தலைப்பை காட்சிபடுத்தமுயல்கிறது.வாளியில் ஒன்றுமில்லை எனவே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏதேனுமிருக்குமாயின் நிமிர்த்தி வைத்து பாதுகாப்பாய் மூடியும் கூட வைத்திருப்பார்கள். இதுதான் யதார்த்தம்.

நூலின் தலைப்பு, துயரங்களின் பின்வாசல். தலைப்பு ஒரு படிமமாய் மாறுகிறது.துயரம் என்பது யாவர்க்குமானது: பொதுவானது. ஆனால், பின் வாசல் என்பது

பெண்களுக்கானதென சமூகம் காட்டியிருப்பது.இப்போது யாரின் துயர் பேசும் தலைப்பென , பெண்களின் துயரென அறிய முடியும்.

 

வெகு கால தொடர் மனோ நிலையின் தொடர்ச்சியில் சிலவற்றை நேர்மறையாகவும் சிலவற்றை எதிமறையாகவும் குறியீடாய்க் கொள்கிறோம்.பின் வாசல் என்பது ஓர் எதிர் மறைக் குறியீடாக அமைவதை எப்போதும் பார்க்கிறோம்.கொல்லைப் புறம் என்கிறோம்.ஆண்கள் இருக்குமிடம் வாசலாகவும் பெண்கள் பெரிதும் புழங்குமிடம் பின் வாசல் அல்லது கொல்லைப்புறம் என்கிறோம்.கொஞ்சம் முன்னேறினால் வெப்பம் தகிக்கும் சமையலறை. காலம் காலமாய் சமூகம் காட்டியிருக்கும் மாறாத வாஸ்துஇது.

பின்வாசல் வழி நுழைவதென்பது தவறான செயல். முன்வாசல் உயரமாகவும் பின்வாசல் சிறியதாகவும் அமைவதைக் காணலாம்

பெண்கள் போடுகிற கோலம் முன்வாசலில் பெரிதாகவும் பின் வாசலில் சிறிதாகவும் இருக்கக் காண்கிறோம்.இவற்றின் ஒட்டுமொத்த தன்மைகளைப் பார்க்கும் போது பின்வாசல் எத்தகையப் படிமத்தை உருவாக்குகிறதென்பதை உணர முடியும்.

இப்போதைக்கு இது போதும்

என எப்போது தோன்றுகிறதோ

அப்போதைக்கு அது போதும்.

போதுமெனில் போதும். வெறும் மிக சாதாரணத் தொடர் தான். ஆனால் மிகப் பெரிய மானுட விழிப்பைச் சொல்வது.பொன் செயும் மருந்து. தத்துவார்த்த பார்வையில் இது மிக கனமான விஷயம்.இன்னும் கூட கவித்துவத்தின் வீச்சோடு வந்திருக்கலாமோவெனத் தோன்றும் விஷயம்.

உன் நம்பிக்கையை விடப்

பெரிய சிலுவையில்   யார் அறைந்துவிடப்

போகிறார்கள்.

என்ற வரிகள், உருவாக்கும் நம்பிக்கைக்கெதிரான கருத்து எளிதில் கடந்து விட முடியாதது. ந‌ம்பிக்கை  தான் வாழ்வியக்கத்தை தொடர்வதற்கான சாத்தியங்களை அனேகமாய் எல்லாத்தருணங்களிலும் தரவல்லது.இந்த வரியின் மனோ நிலையைனூலின் பக்கங்களில் தேடினால் ,’பயணங்கள் முடிவதில்லை’, என்னும் கவிதையின் இறுதி வரிகளில் கிடைக்கிறது.

நம்பிக்கை நெருப்பு என்னும் கவிதை,

கழிப்பறை செல்கையிலும்

நாசுக்காக நான் எடுத்துச்செல்லும்

கைப்பை எரிக்கும் நெஉப்பு இருந்தது

என்னும் கவிதை,அதற்கான காரணத்தை,

நம்பிக்கை…அதானே எல்லாம்

என்று சொல்லித்திரிபவன் மூட்டியதாஅது.

இங்கே விழுகிற அடிதான் அங்கே எழுகிறது நம்பிக்கையின்மையாய் .

சமூகப் பார்வையுடனான கவிதைகள் தொகுப்புக்கு வலுச் சேர்ப்ப‌வையாக இருக்கின்றனவெனலாம்.

சமூகம் என்னும் தலைப்பிலான கவிதை

அருவருப்பாகத் தான் இருக்கிறது

ஏன்?குப்பைத் தொட்டிக்கு வெளியேகிடக்கும் உதிரக்கொத்தோ, உதிரி மலர் அழுகளோ அப்புறப் படுத்தப் படாமலே கிடக்கிறது. யாருக்குத்தான் பொறுப்பிருக்கிறது என்னும் சலிப்பு கவிதையின் இறுதியெனில்….கவிதை தீர்வு சொல்லாது தான் எனினும் வெறும் சலிப்பின் மிச்சமென்ன என்னும் கேள்வி எழுகிறது.

 

கடந்த ஆண்டு (2015திசம்பர்)சென்னை மற்றும் வடமாவட்டங்களில் கடுமையான வெள்ளம். குறிப்பாக சென்னை நகரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.இந்த பாதிப்புக்கு, ஏரி குளங்களை ஆக்ரமித்ததும, நீர் செல்லும் பாதையை அடைத்து வீடு கட்டடங்களைக் கட்டியதுமென முக்கியக்காரணம் கூறப்பட்டது.

ஒரு வேளை மழை பெய்த

ஒரு வேளை வெள்ளம் வந்தால்

வீடு மூழ்குமே என யோசியாமல்

சாக்கடைகளின் கரைகளில்

கட்டிக் கொண்டது எங்கள் பிழைதான்

கரைதாண்டிக் கட்டிய எஜமானர்களும்

மிதக்கிறார்கள்

 

ஒரே காரியத்தைப் பற்றிய விஷயத்தை முன்வைக்கிறபோது எழைகளுக்கும் எஜமானர்களுக்குமான வெவ்வேறு

சொற்பிரயோகம் கவனிக்கத்தக்கது.ஏழகளுக்கு, மூழ்குதலையும் எஜமானர்களுக்கு மிதத்தலையும் பரிந்துரைப்பது திட்டமிட்டதா இல்லை எதேட்சையானதாவெனத் தெரியவில்லை.

 

யார் வீட்டுத் துக்கமும் ஒப்பாரியும்

உங்கள் தூக்கம் கலைப்பதே இல்லை

என்னும் நேரடியாக குற்றம்சுமத்தத் தலைப்படும் கவிமனம் அதன்  நீட்சியாகவே துயரங்களின் பின் வாசல் கவிதையை

எழுதுகிறது.

“மையோ மரகதமோ அய்யோவும்”,வும்

அதோ அவள்

வயிறெரிந்து கூவுகிறாளே

அந்த அய்யோவும் ஒன்றாகுமா?

முதலில் ஒருத்தி அய்யோவென கூவும் காட்சி.எப்படி கூவுகிறாள் வயிறெரிந்து கூவுகிறாள்.ஏன் கூவுகிறாள் டாஸ்மாக் இலக்கை எட்டுவதற்கு குடித்து முடிந்த கணவன். வீட்டைப் பற்றியே நினைவில்லாமல் விழுந்துகிடக்கிறான்.

ஒரு மதியப் பொழுதொன்றில் கிடந்தாய்

வாயில் ஈ மொய்க்க‌

குடித்துத் தீர்த்திருந்தது குடி உன்னை

இப்போதெல்லாம்

குடித்து விழுந்துகிடப்பவரைக் கண்டால்

பதைக்கிறது மனசு

என்னும் யாழினி முனுசாமியின் கவிதை குடியால் வாழ்விறுதியான தந்தையின் நிலைகுறித்துப் பேசும்.

இங்கே,   அது போல ஒருவன்;கணவன்.  அதனால் வயிறெரிந்து அவள் அய்யோவென கூவுகிறாள்.சமூக அவலத்தின் ஒரு சித்திரம்.கோபம் வருகிறது.சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். கோபமென்று சொல்ல முடியா விடினும் ஒரு விமர்சன ஞாபகமேனும் கம்பன் மீது மீது வருகிறது.

எப்படி?

“மையோ மரகதமோ அய்யோ”,வும்

இந்தப் பெண் கூவும் அய்யோவும் ஒன்றாகாது. “மையோ மரகதமோ அய்யோ”, கம்பராமாயண வரி. இராமனை வர்ணிக்கிற போது,

வெய்யோன் ஒளிதன் மேனியின் விரிசோதியின் மறைய‌

பொய்யோஎனு மிடையாளொடும்,இளையானொடும் போனான்

‘மையோ, மரகதமோ, மறிகடலோ,மழைமுகிலோ

அய்யோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகுடையான்

என்கிறான் கம்பன்.அது ஏன் ஞாபகத்திற்கு வருகிறது.ஒருமனிதனின் நற்குணங்களைச்  சொல்ல வார்த்தையின்றி அய்யோ என்கிறான். இவளோ அழிவைத்தேடும் கணவனின் நிலையெண்ணி அய்யோவென கூவுகிறாள்.கம்பனைப் படித்திருந்தால் தான் இதை முழுதும் உணர முடியும்.

வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் கடவுளை உருவகப் படுத்துவார் திர்வள்ளுவர்.

இவரோ,

உலகம் வெகு அழகானது

மக்கள் யாவரும் மகிழ்வோடு

இருக்கிறார்கள்

வேண்டுதல் வேண்டாமை இன்றி

கைகுலுக்குகிறார்கள்

எமன்கிறார். இப்படி பழைய சொல்லாடல்களை தக்கவாறு பயன்படுத்திக்கொள்கிறார்.

எமக்கு என்று சொற்கள் இல்லை

மொழி எம்மை அணைத்துக் கொள்வதுமில்லை

உமது கவிதைகளில் யாம் இல்லை

எமக்கென்று சரித்திரமில்லை

நீங்கள் கற்றுத் தந்ததே நான்

வார்த்துத் தந்ததே நிஜம்

என்னும் கனிமொழியின் கவிதை, பெண்ணுக்கான தனித்த மொழியின்மை குறித்துப்பேசும். பல பெண் படைப்பாளிகள் அம்மொழியை கண்டடையும் ஆக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலும் இருக்கிறது.ஆனால் சமூகத்தில் ஒரு பெண் தன் கருத்தை ஒரு ஆண் வெளிப்படுத்தும் விதமாக சொல்கிற சூழலும் சாத்தியமும் இருக்கிறதா? பெண் மொழி என்பதற்கும் முன்னே , இயல்பான பிரச்சனைகளைக் கூடப் பேசவியலாத சூழல்.

எல்லாவற்றையும் எப்போதோ

சொல்லிவிட‌

வாய்ப்பிருக்கிறது உனக்கு

எப்போதும் இல்லை எனக்கு

என்கிறார் உமா மோகன்.  மிக யதார்த்தமான சூழல்.

தமிழ்மணவாளனின், ‘உரைத்தல் முரண்’, என்றொரு கவிதை

கடை வீதியில் எதிர்வந்த‌

பெண்ணைக் காட்டி

நான் காதலித்த பெண்ணிவள்

என்கிறான் கணவன்

கல்யாண வீடொன்றில்

வந்திருப்பவனைக் காட்டி

நீங்கள் பெண் கேட்டு வரும் வரை

ரொம்ப நாளாய்

என்னை இவருக்குத் தான்

கல்யாணம் செய்வதாய்ப் பேச்சு

என்கிறாள் மனைவி

தமிழ்மணவாளனின்,இக்கவிதை குறித்து ஜெய மோகன் கீழ்க்காணுமாறு குறிப்பிடுவார்.

” சங்க இலக்கியத்தில் இவ்வகைக் கவிதைகளைக் காணலாம்.அவன் சொல்வதும் அவ்ள் சொல்வதும் ஒன்றைத்தான்.அவன் மொழி தடையற்று நேரடியாகச் செல்கிறது. அவள்மொழி முள் நிறைந்த பாதைவழியே செல்வது போல் நெளிந்து குழைந்து செல்கிறது.அதன் நடனத்தை இக்கவிதை தொட்டுக்காட்டிவிடுகிறது.இத்தகைய ஓர் அனுபவமெளிதாயினும் நம் கலாச்சாரச் சூழலையேஒருவகையில் சொல்லிவடக் கூடியது.கற்பனையுள்ள வாசகனிதில் அப்பெண்ணின் முகத்தை, கணவனின் உடல் மொழியைக் காணலாம்.னம்மரபு உருவக்கியுள்ள குடும்ப அமைப்பினொரு தெள்ளிய சித்திரத்தையே காணலாம்”.

 

ஒரே விஷயத்தை ஒரு ஆணால் சொல்ல முடிவதைப் போல் பெண்ணால் சொல்ல முடிவதில்லை.அதற்கான சூழல் இல்லை என்னும் அடிப்படை யதார்த்தத்தை பல இடங்களில் , உமாமோகனின் கவிதைகளில் காணமுடிகிறது.

 

எனக்கான பருத்தியை நீ தான் பயிரிடுகிறாய்

எனக்கான ஆடையை நீதான் நெய்கிறாய்

என்னும் வரிகளை தமிழச்சியின் கவிதையில் வாசித்த ஞாபகம்.

இந்த மனோ பாவத்தின் அழுத்தத்தினால் தனோ என்னவோ

அதனால் தான் சொல்கிறேன்

உங்கள் மழையும் எங்கள் மழையும் ஒன்றல்ல

என்கிறார்.மழை யாவர்க்கும் பொதுவானது தான் . ஆனால், ஆணுக்கான மழையல்ல பெண்ணுக்கு. மொழி யாவர்க்கும் பொதுவானது தான். ஆயினும், ஆணுக்கான மொழியல்ல பெண்ணுக்கு. பெண் மொழியை வளர்த்தெடுக்கும் அதே நேரம் பொது மொழியைப் பெண்ணுக்குமானதாக மாற்ற வேண்டும். அது சமூக இயல்பு வாழ்வில் பெண் செயல் பாட்டின் முக்கியமானதாக இருக்கும்.

ஒரே வீடு என்றாலும்?

ஒரே அலுவலகம் என்றாலும்?

ஒரே காலம் என்றாலும்?

ஒரே ஒரே ஒரே என்றாலும் வேறு வேறு வேறு

என்கிறார்.

பிறிதொரு,

நான் கேட்டதும்

நீ கேட்டதும்

ஒரே பாடல் என்றாலும்

ஒரே பாடல் இல்லை

என்னும் உமாமோகனின் கவிதைக்கு, ஒரேபாடலாக மாறும் காலத்தை , பொதுமொழியை ஆணிடமிருந்து கைப்பற்ற வேண்டும். ஆம். பெண்மொழி என்று படைப்பிலக்கிய ரீதியாக பேசுகிறோம். அதன் அவசியம் உணர்கிறோம். அது போலவே சமூக வாழ்வின்  இயல்பு வெளியில் பொதுமொழியில் இருக்கும் பெண்ணுக்கான தடைகளை தகர்த்தாக வேண் டும். அவ்வுணர்வையே மேற்கண்ட கவிதைகள் உருவாக்கவல்லவையென  கருதுகிறேன்.

”   தாள் சுருட்டிசைக்கிள் உருட்டி”, என சில அழகிய காட்சிச் சித்திரங்களும் உள்ளன.

திரையிடுக்கில் நின்றபடி

ஆடிக்காட்டும் மிஸ்ஸும்

அங்கே ஒருகண்

அவையில் ஒருகண்ணாய்

ஆடும் குழந்தையும்

ஆண்டுதோறும் கிடைத்து விடுகிறார்கள்

என்பன போன்ற புனைவு வெளியில் விரியும் கவிதைகளும் காணக்கிடைக்கின்றன.

 

இதுபோல பல நல்ல கவிதைகள்  இடம் பெற்றிருக்கும் தொகுப்பு ,  உமாமோகனின், ‘துய‌ரங்களின் பின்வாசல்’.

கவிதைகளைத்தொகுத்து நூலாக உருவாக்கும் போது சேர்க்க நினைக்கும் கவிதைகளைக் காட்டிலும் விலக்க நினைக்கும் கவிதைகள் குறித்த கவனம் தேவைப்படுகிறது.தயவு தாட்சண்யமற்ற அணுகு முறை ஒன்று தான் அதனைச் சாத்தியப்படுத்தும். இத்தொகுப்பிலும் அவ்வாறான கவிதைகளைக் கவனித்து தவிர்த்திருக்கலாம். துணுக்குகள் போல் ஏதோ சில தருணங்களில் எழுத நேர்ந்ததை தொகுப்பில் சேர்த்திருக்க‌ வேண்டிய‌தில்லை.

அதுபோல சிலகவிதைகள், வாசிப்பினூடாக தொடர்பற்ற தாவலை உள்ளடக்‌கியதாக இருக்கின்றன. அவை வாசகனிடம் புரிதல் குழப்பத்தையும் கவிதானுபவ சிக்கலையும் உருவாக்கும். இவையெல்லாம் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதால் சில கவிதைகள் மீதான விமர்சனம் தான். இவ்விமர்சனம், அதற்கு முன் குறிப்பிட்டு, சிலாகித்துப் பேசிய எவ்விஷயத்தையும் பாதிக்காது.

ஏனெனில், அவை தனித்த கவிதைகள். அத்தகைய பல கவிதைகளைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பை வழங்கியிருக்கும் உமா மோகனைப் பாராட்டுகிறேன்;வாழ்த்துகிறேன்.

Series Navigationகவி நுகர் பொழுது – சொர்ணபாரதிஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Comments

  1. Avatar
    Mallika says:

    விமரிசனம் நன்றாக இருக்கிறது. கூறியது கூறலாக சில வார்தைளைத் தவிர்த்திருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *