கவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 8 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

Ezavani

  • தமிழ்மணவாளன்

சமகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிற‌து.ஈழவாணியின் , ‘மூக்குத்திப் பூ ‘,தொகுப்பை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பின் பின் , அதன் மீதான எனது கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

முதலில், இதில் உள்ள கவிதைகளில் கணிசமானவை ஏற்கனவே, இதற்கு முன்னர் வந்த இவரின் தொகுப்புகளில் இடம்பெற்றவை.அவற்றிலிருந்து, ‘மூக்குத்திப்பூ’, என்னும் இத்தொகுப்பில் எடுத்தாளப்பட்டுள்ளன.இதைக் குறிப்பிடுவதற்கான காரணம், இக்கவிதைகள் எழுதப்பட்ட காலம் பல ஆண்டுகளைக் கொண்டது என்பதைச் சொல்வதற்காகவே.

இந்நூலுக்கு முன்னரை வழங்கியிருக்கும், மு. பொன்னம்பலம் கீழ்க்காணுமாறுக் குறிப்பிடுகிறார்.

wraper

‘மரபு வழி வந்த கவிதைகளில் ஏற்பட்ட சலிப்பும் அலுப்புமே பலரை புதுக்கவிதைகள் அல்லது வசனக் கவிதைகளுக்கென சில விதிகள் ஏற்பட்ட அவை  ஸ்தாபிதமாக்கப்பட்ட பின் அவற்றையும் உடைத்தெறிந்து கவிதைகளை புதுப்பாதையில் எடுத்துச் செல்லும் முனைப்பே இப்போது மேலெழுந்து உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது’;.

என்பதைச்சுட்டி,

இது எனக்கான கவிதை

இதைச் சரி செய்யத் தோன்றவில்லை

என்னூடான பிழைகளோடே

சுவாசிக்க முனைகிறேன்

எதற்கு இத்தனை ஆணவமுனக்கு

முடிந்தால்

பிழைகளோடே வாசித்துச் செல்

என்னும் கவிதையை மேற்கோளிட்டு,

‘இக்கவிதை ஈழவாணியின் மன நிலையை உரித்துக் காட்டுவது போல் உள்ளது’, என்கிறார் மு.பொன்னம்பலம்.

இந்த வரிகளைத் தொடரும் வரிகளில் அதற்கான காரணத்தைச் சொல்கிறார்.ஏன் சரி செய்யத்தோன்றவில்லை. பிழைகளோடே இருக்க நினைப்பதன் காரணம் யாது?

போலி மதிப்புகளில்

செம்மைப் படுத்த விரும்பவில்லை

மறுத்தால் கூட‌

மறுபரிசீலனைக்கு இங்கே இடமில்லை

இவை இப்படியே தான்

தவறுகளோடானவையாகத்தான்

பிழைத்துச் செல்லும் ஏனெனில்

இது எனக்கான கவிதை.

என்கிறார்.

போலிமைக‌ளோடு உடன்படாத மனத்தின் வெளிப்பாடு. யாரும் தவறை ஒப்புக்கொள்வதில்லை.இங்கே மதிப்பீடு என்பது வெறும் போலித்தன்மைகளால் ஆனதாக இருப்பதன் காரணத்தால் தானும் அப்படி ஒரு போலி மதிப்பீட்டில் அல்லது போலி செம்மைத் தன்மையில்  மாற வேண்டுமா? அவசியமில்லை என்பதே இவரின் நிலைப்பாடு. ஏனெனில் இது இவருக்கான கவிதை.

தொடர்ந்து பிறிதொரு கவிதையில்,

ஒப்பனைகள் எதற்கு

உரித்துப் போட்ட வார்த்தைகளைத்தான்

நேசிக்கிறேன் வா

எனை நிர்வாண‌மாய் நேசித்துப் பார்

ஒப்பனைகள் அற்ற வார்த்தைகள் மட்டுமல்ல, உரித்துப் போட்ட வார்த்தைகள். அவற்றை நேசிப்பது மட்டுமல்ல‌

எனை நிர்வாணமாய் நேசித்துப்பார்

என்பதில் இருக்கும் அழுத்தம் தொடர்ந்து போலிகளின் மீதிருக்கும் மனவெளிப்பாடு உறுதியாகிறதெனலாம்.

‘தேவன்’, என்ற தலைப்பிட்ட கவிதையொன்று.  உள்ளே தேவன்களுக்கான பன்மையில் பேசுகிறது.

இவர்கள் கனவுகளின்

தேவதையை வெறுப்பதில்லை

என்று தொடங்குகிறது. ‘கனவுகளின்  தேவதையை வெறுப்பதில்லை’, எனில் இயல்பு வாழ்வில் என்னவாக இருக்கிறார்கள்.இயல்பு வாழ்வில் தேவதையை வெறுக்கிறார்களா? அவ்விதம் தேவதையை வெறுத்தால்- தேவதையையே வெறுத்தால்…..

இதன் நிமித்தம்

வெறுப்புகள் உமிழவும்

உதாசீனங்களை விதைக்கவும்

நேசங்களை அறுக்கவும் கூட‌

வினாடிகளிலும் நிதானிப்பதில்லை

என்கிறார்.’கனவுகளின்  தேவதையை வெறுப்பதில்லை’, என்றால் இயல்பு வாழ்வில் வேறாக இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதிலாகத் தான்  மேற்கண்டவரிகளைக் கொள்ளமுடியும்.

அதை முற்றிலும் உறுதிப் படுத்தும் விதமாக,

ஏனெனில்

நிஜங்களின் பிரசன்னத்தை

சாத்தான்களாகப் பிரகடனப்படுத்தி

மனிதப் பெண்மையைச் சபித்து

இடப்பக்கச் சிலுவைகளாக்குகின்றன‌

முட்களிலான முடிகளை மட்டும் சாற்ற…

என்று நிஜ வாழ்வில், தேவன்கள் பெண்மையைச் சபிக்கும் சூழலை எழுதுகிறார்

தேவன்களின் மீதான கோபம் பல கவிதைகளிலும் தொடர்கிறதென்றே தோன்றுகிறது. தொகுப்பு முழுவதும் பல கவிதைகள் இந்த மனோ நிலையை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. மேலும் சில கவிதைகளில் காணக்கிடைக்கும் வரிகளை வாசிக்கும் போது அது புலப்படும்.

உடைந்த மட்பானையாய்

வெளிஉணரும் காற்றாய்

எதுவும் அர்த்தப்படாமல்

பரந்து வெளிகளாய்……

வார்த்தை இழந்த ஒலிகள் மட்டுமாய்

அபத்த நகர்வில் தோற்றுப் போகும்

இருப்புக்கான நிகழ்வுகள்.

வார்த்தை இழந்த ஒலிகள் அர்த்தமற்றவை. அவை வெறும் சப்தங்களே. சிற்சில வேளைகளில் உணர்வெழுச்சியின் வெளிப்பாடாகவும் அச்சப்தங்கள் அமையக்கூடும். அழுகையாய், விசும்பலாய், முனகலாய் , சிரிப்பாய்… இன்னபிறவாய். எதுவும் அர்த்தப்படாத ஒலிகளாய் நகரும் வாழ்க்கையின் இருப்பு எத்தனை சலிப்பானதாக இருக்கும். அந்த இருப்பை அறிந்து கொள்ளத்தான் இப்படி செய்கிறாயா என்கிறார் இன்னொரு கவிதையில். ஒரு கவிதையில் எழும் ஐயத்திற்கு, பிறிதொரு கவிதையில் விடை கண்டடையும் போது தொகுப்பின் ஆழத்தில் ஓடும் மைய இழையை ஊகிக்க முடியும்.சரி.அர்த்தமற்ற ஒலிகளாலான இவ்விருப்பை நிரூபிப்பதற்காகவே உன் அழைப்பு என்கிறது அக்கவிதை.கவிதையின் தலைப்பு, ’என் இருப்பு’.

மரத்துக் கிடக்குமெனை

நினைக்கப்பேசி ஞாபகிக்கிறாய்

விஞ்ஞாபமற்ற விசனங்களின் நடுவில்

நிலைப்படுத்தும் உன் அழைப்புகள்

ஆத்மார்த்தத்தை நிரூபிக்கிறது

சலன சந்தங்களைப் பாடியோ

விசனப்படுத்தும் வார்த்தைகளைத் தூவியோ

களிப்புற நீளும் பட்டியலில்

நீயின்றி நிறைந்து…

சுவாச நாளங்களின் வழி..

இன்னும் என் இருப்பை

நிரூபிப்பதற்காகவே உன் அழைப்பு.

 

அழைப்பென்பது நிராகரிப்பின் எதிர்மறையான சூழல். ஆனால் அவ்வழைப்பும் நம்பிக்கைத்தர வியலாததாகவே இருக்கிறது.காரணத்தை மற்றொரு கவிதையில் கண்டுபிடிக்கலாம். உன் அழைப்பை எதிகொள்ளும் ’நான்’ என்னவாகச் சித்தரிக்கப்படுகிறது என்று கவனித்தால், அச்சித்தரிப்புக்கான சூழலின் வலியைப் புரிந்துகொண்டால், விளங்கிக்கொள்வது ஏதுவாகும்

பழக்கப்பட்ட வார்த்தைகளை

பயன்படுத்துவதால் என்னை நானாய்

அறிந்துவிட முடியுமா…

என்னும் கேள்வி

எப்படி அறியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

புனையப்படும் பெயரெச்சத்திலா

மச்சங்களாய் உறையும்

பெண்ணெச்சத்திலா

 

என்னும் போது எழும் கவிமனத்தின் வாதை ஏனென்பதற்கான பதிலாக,

அங்கப்பதிவுகளூடான

வளைவுப் பொந்துகளில்

விளைந்து கிடக்கும்

பெண்மை எனத்தேடும்

ஆண் அழைப்புகளில்

என்பதில் உச்சம் கொள்கிறது.இதனூடாக எழும் கவிமனத்தின் பேரவஸ்தையை புரிந்துகொள்ளமுடியும்.அந்த புரிதலினூடாக கீழ்க்காணும் கவிதை வாசிக்க அச்சமூட்டுகிறது.

நான் தனியாக வாழ

கற்றுக் கொண்டிருக்கிறேன்

யாருக்காவும் யாரும் இல்லை

எனக்கானதும் இதுவாகவேயிருக்க….

அன்பும் அக்கறையும்

ஊசி வழியேற்றும் சுயநலப்பிரயோகங்கள்

நடிப்பும் சுகிப்புமாகி

குருதியெதிர்த்து நரம்புவழி

கண்களில் வடிகையில்

தனியாக வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

தனியாக வாழக்கற்றுக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துவதில் உள்ள உள்ளார்ந்த வேதனை, வார்த்தைகள் வெளிப்படுத்துவதைவிடக் கொடுமையானது. தனியாக வாழ்வதற்கான நிர்பந்தம் ஏன் எழ வேண்டும்.அதை உருவாக்கும் சமூகத்தின் மீதான மதிப்பீட்டை      எவ்விதம் உருவாக்குவது.வெறும் சக மனித சிக்கல் மாத்திரமா? அல்லது ஒட்டு மொத்த சுற்றுச்சூழலின் தாக்கமா? எதுவாயினும் அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியத்தை உருவாக்க வேண்டும். கவிதைகளினூடாக ஓடும் சரடினைப் பற்றிக்கொண்டு பயணிக்கக் கிடைக்குமிடம் யாதெனப் பார்க்கின்,

தற்கொலைக்குத் துணியும்

எல்லாச் சந்தர்ப்பங்களிலும்

ஏதோ ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது

நெருக்கமான குடும்ப நண்பரை இழக்கும்போது,எழுபதில் முதிந்த அன்பரை இழக்கும்போது,முப்பது வயது சகாவை இழக்கும் போது,மூன்று வயது மழலையை இழக்கும்போது தற்கொலைக்கான காரணங்கள் அமிழ்ந்துபோகிறது.தற்கொலைக்கான காரணங்கள் அமிழ்ந்து போவது நம்மை ஆசுவாசப்படுத்தினாலும் அதற்கான காரணங்கள் பிற மரணங்களின் பொருட்டு என்பது கவனிக்கத்தக்கது. அதனினும், நோக்கத்தக்க ஒன்றுண்டு.இறுதி வரியாய்,

இன்னொரு சந்தர்ப்பத்திற்காய்

தொக்கி நிற்கிறது

எழுதப்படுவது.இன்னொரு சந்தர்ப்பதிற்கு என்றால்,தற்கொலைக்கான அமிழ்ந்து போன காரணங்கள் மீண்டும் மீண்டும் துளிர்க்க யாது காரணம். மீளவேண்டியதை, அதன் அவசியத்தை உடன் உணர்த்தும் மன நிலையை உருவாக்குகிறது.கவிமனத்தின் அழுத்தம் முற்றிலுமாக வெளிப்படும் இடமாக அறிய முடியும்.

 

இத்தொகுப்பில், ஈழம் சார்ந்த நாட்டுப்புற பாடல் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகள். அரிய சொல்லாட்சிகள் அக்கவிதைகளில் கிடைக்கின்றன.

 

முடைச்சி முடைச்சி யெண்டு

புடைச்சிருந்த முலைக்காம்பில் உம்

உசிரக்கட்டி தேன வடிச்செடுத்தீர்-தேன்

பூச்சி ஒண்டு கடிச்சுப் போட்டா  தூ….…எண்டு துப்புவீரா…

******     ******     *******

கொத்தாக இருந்தவரே என்னைக்

கொத்தி யெடுத்துப் போனதுவும் பின்

நெத்தாகும் காலமொண்டக் காட்டி

நெஞ்சு ரெண்டும் நோக விட்டு

பத்தாத நெருப்புண்டு என்ர பொண்வண்டே

பார்க்காம ஒதுக்காதீர்

*********    *****     ******8

வேரில பழுத்த சுளைய மச்சமெண்டு பிடிச்சு நீர்

காட்டுத் தேனில ஊற வைச்ச

கதையொண்ணு கேக்கணுமா….

*********      ********     *****

முல வெடிச்சு ஒழுகுதையா பாரும்

ஒரு எட்டு வந்து போங்க

ஓலை வச்ச வேலிக்கால

என்பன போன்ற மண் மணமிக்க,உணர்வெழுச்சி வற்றாத நாட்டுப்புறப்பாடல் வடிவத்திலான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

 

‘கம்பரே பொய் புகன்றதுமேனோ?’, ‘சீதைக்கும் சிறந்திருப்பான் ராமன்’,போன்ற அரசியல் கவிதைகள் கவனத்திற்குரியன.

 

ஒட்டு மொத்த தொகுப்பை வாசித்து முடிக்கிற போது கவிமனத்தின் விரக்தியும் எதிர்மறைச் சூழலும் சலிப்பும் வருத்தமும் வேதனையும் அதிகம் உணர்வின் வெளிகளாய் வியாபித்திருக்கிறது.அதிலிருந்து உடன் மீளலின் அவசியத்தை உணர்கிறேன்.மீள வேண்டும்.

மற்றபடி கவிதை எழுதியதில் இருக்கிற விமர்சனப்பார்வை ,மொழிதலில் இருக்கிற பிரச்சனை, கவித்துமாக வேண்டிய இடத்தைக் கண்டடையும் தருணத்தை தவறவிடுதல் போன்ற எல்லாவற்றுக்கும் சொல்வதற்கு தொகுப்பில் கவிதைகள் உண்டு.

 

ஆயினும், பாடு பொருள் என்னை இழுத்துச் சென்ற இடமும் அதிலிருந்து வெளியேறவும் வெளியேறச் சொல்வதன் அவசியமும் முக்கியமானது.

 

ஈழவாணி பலவிதமான சூழல் சார்ந்த, சமூகம் சார்ந்த புதிய பார்வையோடு கவிதைகளைப் படைக்க வேண்டும். சுய அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும். அதற்கான சூழலும் வாழ்வும் அமையவும் தொடர்ந்து படைப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்.

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் – ​14. சிந்தாமணியில் க​லைகள்கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன் (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *