கவிதைக்கான பாடு பொருளைக் கவிஞன் எவ்விதம் கண்டடைகிறான். அவன் வாழும் சூழல் தான் அவனுக்குத் தருகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் அவனைப் பாதிக்கிறது; நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ. அவனின் கவனத்திற்கு வரும் அநேக விஷயங்களில், எல்லா தருணங்களிலும் எல்லாவற்றையுமே எழுதும் மன நிலை உருவாதில்லை;எழுதுவதுமில்லை.
அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகள் தான் பல கவிஞர்களின் பாடு பொருளாகின்றன.அதனாலே தான் கவிதை காலத்தின் கண்ணாடி என்கிற ஒரு அடையாளத்தைப் பெறமுடிகிறது.
சமகாலத்தில் தன்னை,தன்னைச் சுற்றி நடக்கும் பலவற்றை கவிதைகளாக்கியிருக்கிறார் கவுதமன். அவருடைய, ‘மெல்லின தேசம்’, தொகுப்பை வாசிக்கும்போது கிடைக்கிற கவிதைகள் நாம் தினந்தோறும் தரிசிக்கும் எளிய விஷயங்கள் தான். தொடர்ந்து நாள் தோறும் காணக்கிடைப்பவையாயினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் புதிதானது;புதிரானது. அவ்வுணர்வு தான் மானுடத்தின் இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சாத்தியத்தை வழங்குகிறதெனலாம்.
அன்றாட வாழ்வின் தரிசனங்கள் அழகான மொழியில் கிடைக்கிற போது,’அட’, ’நல்லாருக்கே’, எனக் கூறத் தோன்றுவது இயல்பானது.
கிராமப்புறங்களில் வாசலில் கோலமிடுவது வெகுநாளைய வழக்கம். கோலமிடுவது,அதுவும் மார்கழி மாதத்தில் விடியுமுன் கோலமிட்டு முடித்து விடுவதும் அதில் பரங்கிப் பூக்களை வைப்பதும் வழக்கம்.
அரிசி மாவில் கோலமிடுவதும், அழகிற்காக மட்டுமன்றி எறும்புகளுக்கு இரையாக இடுவதென்பதும் மரபு. கால மாற்றத்தில் அரிசி மாவிற்கு பதில் கல் மாவு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நான் சிறுவனாக இருக்கும் போது ,என்னுடைய அம்மா வெகு நேரம் முன்பே கோலம் போடத்தொடங்கி விடுவார். விழிப்புத்தட்டியவுடன் எழுந்து அமர்ந்து கொள்வோம் பிள்ளைகளெல்லாம். கோலம் முடியப் போகிற நேரம், பக்கத்தில் இருக்கும் குப்பை மேட்டில் படர்ந்து கிடக்கும் பரங்கிக் கொடியில் பூக்கள் பறித்து வருவோம். அந்தப் பூக்களை, கோலத்தில் எந்தெந்த இடத்தில் வைப்பது என்பது கூட ஒரு கலை. ஒரு நாள் சுற்றி வைப்போம். ஒரு நாள் இடையிடை விட்டு வைப்போம்;இப்படி. இப்போதெல்லாம் நகர வாழ்க்கை அதற்கான சாத்தியங்களை அறவே ஒழித்து விட்டது. வீடே இல்லை; இருந்தாலும் வாசலும் திண்ணையும் இங்கேது?
அம்மா கோலமிடுவதைக் கவனிக்கிற மகள், தானும் அவ்வாறு வரைய முற்படுகிறாள்.கோல மாவைக் கையில் எடுத்து விரலிடுக்கில் கச்சிதமய் வழிய விட்டு ,விரும்பும் கோடுகளை வரைவதற்கு பயிற்சி வேண்டும். அவளுக்கு , (மகளுக்கு) இன்னும் வாய்க்கவில்லை. அவள் வரைந்திருப்பது அல்லியா தாமரையாவெனக் கூட கண்டு பிடிக்கவியலவில்லை. இது கவுதமன் காட்டும் காட்சி. சரி. மிகச்சாதாரணமான சித்திரம். கவிதை எங்கே இருக்கிறது? கவிஞன் காட்சிக்கும் வெளிவந்து பேசுவதும் கவிதையாவதும் ,
அல்லியா தாமரையாவென
வித்தியாசம் தெரியாவிட்டாலும்
எந்தக்கவலையுமின்றி
தேனருந்தப் பழகி விட்டது
தாமரைமேல்
அவள் வரைந்த
வண்டோ, வண்ணத்துப் பூச்சியோ!
என்னும் வரிகளில் தான். அல்லியா தாமரையாவெனும் கேள்வியும் ஐயமும் நமக்குத்தான்.அவள் வரைந்த வண்டுக்கும் வண்ணத்துப் பூச்சிக்குமில்லை. அவை ஆர்வமாய் தேனருந்தப் பழகிவிட்டனவாம்.விமர்சனங்களை விடவும் விரும்புவது மகிழ்ச்சியானதல்லவா?
மாதவிலக்கான பெண்களை கோவில்களில் அனுமதிப்பதில்லை என்னும் கருத்தியல் பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வருகிற விமர்சனத்துக்குட் படுத்தப்பட்டிருக்கிற விஷயம்.
”எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை”
என்னும் கனிமொழியின் கவிதை ஒன்றுண்டு.
மனைவி
ஊருக்குச் சென்ற நாள் முதலாக
வீட்டுக் கடவுளர்களுக்கு
குளிப்பாட்ட வழியில்லை
பொட்டில்லை,பூவில்லை…
வெள்ளி, செவ்வாய் பூஜையில்லை
கடவுளுக்கே தீட்டானது போல்
தீண்டுவதற்கு நாதியில்லை…
இருந்தும்
கோவில் கொண்ட கடவுளரின்
பந்தாவுக்கு குறைச்சலில்லை:
“தீட்டான பெண்களுக்கு
கோவிலுக்குள் அனுமதியில்லை!”
என்னும் கவிதையில் ,பெண்கள் இல்லாத வீட்டில் கேட்பாரற்றுக் கிடக்கும் கடவுளை கிண்டலடித்து விட்டு, இந்தக் கடவுள் தான் கோவில் கொண்டிருக்கையில், அதே பெண்களை அனுமதிக்காமல் பந்தா காட்டுகிறாராம். பெண்ணை அனுமதிக்க மறுக்கும் மத நம்பிக்கை மீதான விமர்சனப் பார்வை இவருக்கு கோபத்தை உருவாக்க, அந்தக்கோபம்,
கடவுளுக்கே தீட்டானது போல்
தீண்டுவதற்கு நாதியில்லை
என்று எழுதத் தூண்டுகிறது. எனினும், தீட்டு என்கிற கருத்தியலை எதன் பொருட்டும் ஏற்க முடியாது.
விளைவித்து விற்க முடியாமல் போனதால், விளை நிலத்தையே விற்க வேண்டிய அவலத்தில் இருக்கும் சூழலைச் சுட்டும் ஒரு கவிதை. சென்னையிருந்து வந்த பேரனை, அறுவடை முடிந்த வயலுக்கு அழைத்துச் செல்கிறார் தாத்தா.
’அடுத்த வாட்டியாவது
நெல்லுச் செடியைக் காட்டு தாத்தா’
அப்பாவியாய்க் கேட்டவனுக்கு
’ம்’மென்ற ஒற்றை பதிலளித்தபடி
வயக்காடு கடக்கையில்
காலில் இடறியது
புதிதாய் முளைத்த அளவைக்கல்.
இது தான் நிலைமை. இனி எங்கே காட்டுவது ‘நெல்லுச் செடி’யை. எல்லாம் பிளாட் போட்டாகி விட்டது. புதிதாய் முளைக்கவில்லை, நட்டு வைத்திருக்கிறோம் என்பதே நிஜம்.இதன் மேலதிகச் சிந்தனைகள் எதிர்காலம் குறித்த அச்சமூட்டக்கூடியவை.
அம்மாவின் அன்பு எத்தனை காலம் பேசினாலும் தீராதது. எத்தனை கதைகள் சொன்னாலும் போதாதது. ஒவ்வொருவருக்கும் அம்மா காட்டிய அன்பைச் சொல்ல தனித்த நினைவுகள் இருக்கும். எதன் போலவுமில்லாமல் தனித்துவமாய் இருக்கும் ஒவ்வொரு அன்பின் வெளிப்பாடும். இவர் காட்டும் அம்மா அது போல அன்பை இனிப்பாய் பொட்டலம் கட்டுகிறாள்.கடவுளின் வரத்தை திருநீறாய், பத்திரப் படுத்தி வருகிறாள். வெளி நாட்டு மிட்டாயை பிள்ளைக்கானதென சேகரம் செய்கிறாள். பிள்ளைக்கு,பிள்ளைக்கு என்பது மட்டுமே தன் வாழ்வென நினைக்கிற அன்பின் உச்சத்தின் வெளிப்பாடுகள் இவை. அவளைப் பொறுத்தவரை அது இயல்பானது;அது தான் இயல்பானது.
மரணங்களில் தான்
அறிமுகமாகின்றன
சற்று தள்ளிய வீட்டு முகங்கள்…
நகர வாழ்வில் சக மனிதரோடு உறவில்லாத தன்மையை, ஒருவருக்கொருவர் அன்னியமாகி இருப்பதை துல்லியமாய்க் காட்டும் வரிகள்.
கருமை என்பதற்காக
யாரும் ஒதுக்குவதில்லை
நிழலை மட்டும்.
என்கிறார். ஒதுக்க முடியாது. ஒதுக்க நினைத்தால் …
நிழலுக்கு பயந்து ஓடி ஒளிந்தேன்
இறுதியில்
இருட்டின் மடியில் விழுந்து கிடந்தேன்
என, ‘நிழல் யுத்தம்’ என்னும் எனது கவிதை வரிகளைப் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
இவரின்,சில இயல்பான உவமைகளைக் குறிப்பிட வேண்டும்.
குடித்துவிட்டு போதையில் விழுந்து கிடக்கிறார். அவரைத் தவிர்த்து விட்டு செல்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது
பேருந்திலடிபட்ட தெரு நாயென
மிதித்திடாமல் சுற்றிச் செல்கிறோம்
போதையில் பாதையில் கிடப்பவரை.
என்கிறார்.உவமை இப்படியாகத்தான் இருக்க வேண்டும். ஒன்பது வகையான காரணிகளால் உவமையைப் பயன் படுத்தலாமெனில் உணர்வு அதில் முக்கியமானது.
பாதையில் குடித்துவிட்டுக் கிடப்பவனின் மேல் உருவாகும் அபிப்ராயம் தான் உவமையாக வரும் . அதுதான் இயல்பாக இருக்கும்.
ஒரு காதலி அருகு வருவதைத் தவிர்த்து விட்டு, சுற்றிக்கொண்டு போவதை ஒருகவிதையில்,
தேங்கிய நீரில் பாதம்
நனைந்து விடாத படி சுற்றிச்
செல்வதை போல்
என் அருகு வருவதைத் தவிர்த்துப் போகிறாய்
என்று எழுதியிருப்பேன். உவமை மற்ற காரணிகளை விடவும் உணர்வின் பாற்பட்டது. இவரின் இன்னொரு உவமை.
பிரசவ அறையின் வெளியே
காத்திருக்கும் கணவனின் பதட்டம்
தேர்வறையினுள்ளே
கேள்வித்தாளுக்கு காத்திருக்கும் தருணத்தில்.
எப்படி? நான் கூறியது ஒத்துப் போகிறது தானே.இப்படி பல உவமைகளை தொகுப்பில் சொல்ல முடியுமெனில் மகிழ்ச்சிதானே.
நவீன கவிதையென்பது வடிவம் சார்ந்தது மட்டுமன்று. அது சம காலத்தைப் பாடுவது. பாடு பொருள்களை, நவீன வாழ்வின் ஊடாகக் கண்டுபிடிப்பது.
ஏடிஎம் மிஷினை இப்போதுதானே பாட முடியும். அது காலம் வழங்கும் பாடு பொருள்.
ஆனால்,
ஏடிஎம் மெஷினுக்கு
நோவென்றால் மட்டும்
நலம் விசாரிக்கிறார்கள்
வாட்ச்மேன் தாத்தாவிடம்
என்று வாழ்வின் பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கும், சில ஆயிரங்களுக்கு வாழ்வின் பெரும் பகுதியை,யார் யாருக்கோவான கோடிகளை, லட்சங்களைப் பாதுகாக்கும் தாத்தாவைக் கண்டுபிடித்தது கவுதமனின் கவிதை மனம்.
எனக்கு கவிதைகளைப் போலவே கவிதைமனம் கொண்டவர்களை மிகப்பிடிக்கும். கவுதமனை, கவிதைக்காகவும் கவிதை மனத்திற்காகவும் பிடிக்கிறது. வாழ்த்துகள்.
- தொடுவானம் 131. அறுவை மருத்துவம்
- பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்
- மதம்
- தோரணங்கள் ஆடுகின்றன!
- கவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)
- தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்
- ‘காடு’ இதழ் நடத்தும் ‘இயற்கை மற்றும் காட்டுயிர் ஒளிப்படப்போட்டி’
- பூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி
- ஜோக்கர்
- கற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-
- கவி நுகர் பொழுது- அன்பாதவன்
- திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்
- காப்பியக் காட்சிகள் 15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் கலைகள்
- யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6