அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

author
0 minutes, 11 seconds Read
This entry is part 4 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

Late Jeyakanthan

ஆறு  கலைஇலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல்

ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன்

 

                                                                    முருகபூபதி

( துணைத்தலைவர்அவுஸ்திரேலியா  தமிழ்    இலக்கிய கலைச்சங்கம்)

 

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  வருடாந்த  தமிழ் எழுத்தாளர் விழா  இம்முறை  முதல்  தடவையாக  குவின்ஸ்லாந்து மாநிலத்தில்   கோல்ட்கோஸ்டில்  நடைபெறவுள்ளது.

ATLAS Logo01

ஏற்கனவே  கடந்த  2001  ஆம்   ஆண்டு  முதல்  மெல்பன், சிட்னி,  கன்பரா ஆகிய  நகரங்களில்  வருடந்தோறும்  நடைபெற்ற  தமிழ் எழுத்தாளர்  விழா  இந்த  ஆண்டு  கோல்ட்கோஸ்டில்  எதிர்வரும் 27-08-2016   ஆம்  திகதி  சனிக்கிழமை  மாலை  3.00  மணி  தொடக்கம்   நடைபெறும்.

நடைபெறும்  இடம்:  Auditorium,   Helensvale  Library,  Helensvale  Plaza  –   Helensvale 4212, Gold coast, QLD

சங்கத்தின்   தலைவர்  பேராசிரியர்  ஆசி.கந்தராஜா தலைமையில்   நடைபெறும்  இவ்விழாவை  இலங்கையிலிருந்து வருகை    தந்துள்ள  மூத்த  எழுத்தாளர்  திருமதி.  தாமரைச்செல்வி மங்கல  விளக்கேற்றி  தொடக்கிவைப்பார்.  திரு. பவனேந்திரகுமாரின்   வரவேற்புரையுடன் விழா  நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகும்.   மறைந்த   படைப்பாளிகள்,  கலைஞர்களின்  ஒளிப்படக்  கண்காட்சி,   கவியரங்கு,  கருத்தரங்கு,  பட்டி மன்றம், வாசிப்பு   அனுபவப்பகிர்வு,  ஆவணப்படக்காட்சி  மற்றும்  கலை  நிகழ்ச்சிகள்   இடம்பெறவுள்ளன.

———————————————–

தமிழ் கலை  இலக்கியம்  மற்றும்  ஊடகத்துறையில்  ஈடுபாடு மிக்கவர்களை  அவுஸ்திரேலியாவில்  ஒன்றிணைத்து கருத்துப்பரிமாற்றம்   மேற்கொள்வதற்காக  உருவாக்கப்பட்ட இயக்கமே  தமிழ்  எழுத்தாளர்  விழா.

2001  ஆம்   ஆண்டு  முதல்  தடவையாக  மெல்பனில்  நடந்த  தமிழ் எழுத்தாளர்   விழாவைத்தொடர்ந்து,   இந்நாட்டின்  சில மாநிலத்தலைநகர்களிலும்   இந்த  இயக்கம்  முன்னெடுக்கப்பட்டது.

அறிந்ததை   பகிர்தல்  அறியாததை  அறிந்துகொள்ள  முயல்தல் என்ற  நோக்கத்தின்   அடிப்படையில்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட   இந்த  இயக்கம்,    இதுவரையில்  15   எழுத்தாளர் விழாக்களையும்,   பல    இலக்கிய  சந்திப்புகளையும்   வாசிப்பு  அனுபவப்பகிர்வுகளையும்     நடத்தியிருக்கிறது.

அத்துடன்,    இந்நிகழ்வுகளின்  ஊடாக  மறைந்த  எழுத்தாளர் உருவப்படக்கண்காட்சி,   ஓவியம்,   சிற்றிதழ்,   நூல் கண்காட்சிகளையும்   ஆவணப்படம்,   குறும்படக் காட்சிகளையும் மெல்பன்,   சிட்னி,  கன்பரா  ஆகிய  நகரங்களில்  நடத்தியுள்ளது.

மகாகவி பாரதி  –  கவிதை  தமக்குத்தொழில்  என்றார்.   பெரும்பாலான கலை   இலக்கியவாதிகள்  தாம்  சார்ந்த  கலை  இலக்கியத்துறைகளை    தொழிலாக  கருதி  இயங்காதுபோனாலும். தம்மை   அறிவுசார்ந்து  வளர்த்துக்கொள்வதற்கு  வாசிப்பு  அனுபவம்  படைப்பாற்றல்    பேச்சாற்றல்  முதலானவற்றில்  ஈடுபடுவார்கள்.

அதற்குரிய   களமாக  கருத்துக்களின்  சங்கமமாகவே  எழுத்தாளர் ஒன்றுகூடல்களை   எமது  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்   அடிக்கடி  ஒழுங்குசெய்துவருகிறது.

இந்தப்பின்னணியில்   முதல்  தடவையாக  இந்த  ஆண்டு  (2016) குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்  கோல்ட்கோஸ்டில்  சங்கத்தின் 16  ஆவது   எழுத்தாளர்  விழா  நடைபெறுகிறது.  சில  வருடங்களுக்கு முன்னர்   எமது  சங்க  உறுப்பினர்களும்  குவின்ஸ்லாந்து  அன்பர்களும்   இணைந்து  பிறிஸ்பேர்ணில்  முழுநாள்  இலக்கிய நிகழ்ச்சியை    நடத்தியிருக்கின்றோம்.   அந்த  நிகழ்ச்சியை பிறிஸ்பேர்ண்   தாய்த்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவரும்  எமது சங்கத்தின்  உறுப்பினருமான   திரு. முகுந்தராஜ்    ஏற்பாடுசெய்திருந்தார்.

குவின்ஸ்லாந்திலும்   எழுத்தாளர்  விழா  இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும்   என்ற  எமது  நீண்ட நாள்  கனவு  தற்பொழுது நனவாகியிருக்கிறது.    இதற்காக  முன்வந்து  ஆதரவும்  ஒத்துழைப்பும் வழங்கும்  கலை  – இலக்கிய  ஆர்வலர்  திருமதி  வாசுகி  சித்திரசேனன்   அவர்களுக்கும்  அவருடன்  இணைந்து  கலை இலக்கியப்பணிகளை   முன்னெடுக்கும்  பிறிஸ்பேர்ண் – கோல்ட்கோஸ்ட்   அன்பர்களுக்கும்  எமது  மனமார்ந்த  நன்றியையும் வாழ்த்துக்களையும்    தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்ந்தும்   குவின்ஸ்லாந்து  மாநில  அன்பர்கள்  எமது  கலை இலக்கிய  இயக்கத்தில்  இணைந்து  செயற்படவேண்டும்  என்பதும் எமது   எதிர்பார்ப்பாகும்.

குவின்ஸ்லாந்தில்  நாவல்,  இசை,  நடனம்,  கவிதை,   நாடகம்,   குறும்படம்,  சிறுகதை,   திறனாய்வு  முதலான  துறைகளில்  ஈடுபாடுமிக்கவர்கள்   இத்தகைய   களத்தினை  ஆக்கபூர்வமான  திசையை  நோக்கி  நகர்த்தல்   வேண்டும்.

குவின்ஸ்லாந்து கலை  இலக்கிய  அன்பர்கள்  மேற்கொள்ளும்  பணிகளுக்கு எமது   அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கியக்  கலைச்சங்கம்   தொடர்ச்சியாக   ஆதரவும்  ஒத்துழைப்பும்  வழங்கும்.

கலை –   இலக்கியம்  புரிந்துணர்வையும்   சமூகச்செயற்பாடுகளையும் சிறப்பாக   வளர்த்தெடுக்கும்   என  நம்புகின்றோம்.

————————————-

16  ஆவது   எழுத்தாளர்  விழா நிகழ்ச்சிகள்:

முனைவர்   ஜீவன்  செந்தில்வாசன்  தலைமையில்   இடம்பெறும் கவியரங்கில்    மருத்துவர்கள்  காயத்ரி காந்திதாசன்,    ஜனனி திருமுருகன் ,   திருவாளர்கள் இரா. சோழன்  ,   பாலாஜி கோபாலகிருஷ்ணன் ,   திருமதி.சுமதி இராகவன் ஆகியோர் பங்குபற்றுவர்.

நூல் விமர்சன அரங்கு:-

கந்தசாமியும் கலக்சியும்  ( நாவல்)  ஆக்கம்   – ‘ ஜே.கே.” ஜெயக்குமாரன்

விமர்சன உரை –   மருத்துவர்  நடேசன்.

கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) ஆக்கம்  கவிஞர் அம்பி

விமர்சன உரை:    திரு. முருகபூபதி

கீதையடி   நீ எனக்கு  (குறுநாவல்கள்)    கறுத்தக்கொழும்பான் (படைப்புக்கட்டுரைகள்)  –  ஆக்கம் பேராசிரியர் கந்தராஜா

விமர்சன உரை :     மருத்துவர்   வாசுகி  சித்திரசேனன்.

வாழும் சுவடுகள்    (தொழில்சார்  அனுபவப் பதிவுகள்)                             ஆக்கம்:    மருத்துவர் நடேசன்

விமர்சன உரை: திரு.  செல்வபாண்டியன்.

கருத்தரங்கில்    கன்பராவிலிருந்து    வருகைதரும்  இலக்கிய  ஆர்வலர் மருத்துவர்   கார்த்திக் வேல்சாமி    சமகால தமிழ் இலக்கியப் பரப்பில்  அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின்   எழுத்துலகம் என்னும்    தலைப்பில்   உரையாற்றுவார்.    அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட    தலைப்பின்  தொனிப்பொருளில்   கலந்துரையாடல் இடம்பெறும்.

” வெளிநாட்டு   வாழ்வில்   நாம்  பெற்றது  அதிகமா ?   இழந்தது  அதிகமா?”    என்ற   தலைப்பில்  சிட்னியிலிருந்து    வருகைதரும்    திரு. திருநந்தகுமார்   தலைமையில்    இடம்பெறும் பட்டி மன்றத்தில் மருத்துவர்     கண்ணன் நடராசன்    அறிமுக உரை   நிகழ்த்துவார். வெளிநாட்டு வாழ்வில்  நாம்   பெற்றது   அதிகமா  ?   என்னும் தலைப்பில்,     திருமதி.வாசுகி சிவானந்தன்,    திரு.காந்தன் கந்தராசா,  திரு.சிவகைலாசம்    ஆகியோரும்   இழந்தது  அதிகமா ? என்னும் தலைப்பில்,   திருமதி.சாரதா   இரவிச்சந்திரன்                   திருமதி இரமாதேவி  தனசேகர் ,   திரு. குமாரதாசன்   ஆகியோரும்  வாதாடுவார்கள்.

கலையரங்கம்

வீணையிசை  –   செல்வி.    சிவரூபிணி முகுந்தன்

பரதம்

“பாரதமாதா”- ஸ்ரீமதி.பத்மலக்ஷ்மி ஸ்ரீராமும் குழுவினரும்

“விநாயகர் வணக்கம்”- செல்வி மதுஜா பவன்

“தில்லானா”-செல்வி  சிவகௌரி  சோமசுந்தரம்

தமிழ்நதி – முத்தமிழ் விருந்து – சங்கமம் கலைக்குழுவினர்.

இவ்விழாவில்   அண்மையில்  நடந்த  அவுஸ்திரேலியா  பல கதைகள்    சிறுகதைப்போட்டி   முடிவுகளை  அதன்  ஏற்பாட்டாளர்  திரு. முகுந்தராஜ்    அறிவிப்பார்.

ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன்

தயாரிப்பு,  இயக்கம்:   கனடா மூர்த்தி.

தொகுப்புரை:     பேராசிரியர் கா. சிவத்தம்பி.

( ஜெயகாந்தன்   வாழ்ந்த  காலத்தில்  ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அமரர்கள்  ஜெயகாந்தனையும்  பேராசிரியர்  சிவத்தம்பியையும் நினைவுகூரும்     ஆவணப்படம் )

விழா    நிகழ்ச்சிகளின்  இறுதியில்  16  ஆவது  எழுத்தாளர்  விழா நிகழ்ச்சி    ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான  சங்கத்தின் உறுப்பினர்  திரு. முகுந்தராஜ்  நன்றியுரை   நிகழ்த்துவார்.

இவ்விழாவில்    கலந்து  சிறப்பிக்குமாறு  கலை  இலக்கிய ஆர்வலர்களை    அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் அன்புடன்   அழைக்கிறது.

atlas25012016@gmail.com

—–0—–

Series Navigation‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *