காப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்

This entry is part 14 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

செல்வம்

மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும்,

‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247)

என்று செல்வத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வத்தைப் பெருக்கிப் பிறருக்கு உதவி செய்வோர் யானை மீது செல்வர் என்ற நம்பிக்கையும், ஆலமரங்கள் கெட்டாலும் அவற்றை விழுதுகள் தாங்கும்(495,497498) அதுபோல முதுமையில் உடல்வலிமை கெட்டாலும் இளமையில் அவர்கள் சேர்த்த பொருள் முதுமைக்காலத்தில் பயன்படும் என்ற நம்பிக்கைகள் சிந்தாமணியில் திருத்தக்கதேவரால் குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. இந்நம்பிக்கைகள் செல்வத்தை ஈட்டுவதிலும் ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு வழங்கி உதவி செய்யும் பண்பையும் உருவாக்குகின்றன எனலாம்.

நல்வினை தீவினை குறித்த நம்பிக்கை

மண்ணுலக வாழ்க்கையில் மக்கள் செய்யும் செயல்களை நல்வினை தீவினை என்று இரண்டாகப் பிரிப்பர். இவற்றில் நல்வினை என்பது தவம் செய்தல், அருகனை வணங்குதல், கொடையளித்தல், பிற உயிர்களைக் கொல்லாமை, பிறர்மனை விரும்பாமை முதலிய செயல்களைக் குறிக்கின்றது.

முற்பிறவியில் அருகனின் பாதங்களை மலர்தூவி வழிபட்டவர்கள் இப்பிறவியில் பிறர் மலர் தூவி வழிபடும் அரசர்களாகப் பிறக்கின்றனர்(2739). தவம் செய்யும் முனிவர்கள் பிறவியைப் போக்குவார்கள்(605) அருகனது திருவடியைத் தொழுதல் நன்மையத் தரும்(511. சிற அளவேனும் உணவை வறியவர்களுக்கு ஈந்தாலா் மகாமேரு போல உயர்ந்த பலன்களைத் தரும்(2926). பொருளற்ற வறியவர்களுக்குக் கொடுக்கும் உணவு நல்லுகம் செல்ல ஏணியாகி உதவும்(2927). தேனையும் ஊனையும் உண்ணாதவர்களை மண்ணுயிர்கள் கைகூப்பித் தொழும் என்று நல்வினை பற்றி சிந்தாமணி எடுத்துரைக்கின்றது(2927).

பிற உயிர்களைக் கொன்று தின்றால் ஏற்படும் தீவினைகள்

உயிர்க்களைக் கொல்லுதல், அருகனை வணங்காமலிருத்தல், ஊன் உண்ணுதல், கள் உண்ணுதல் ஆகிய செயல்கள் தீவினை நிரம்பிய செயல்களாகக் கருதப்படுகின்றன. செல்வம் நிலையில்லாதது தாளிப்பு மணம் மிக்க உணவுகளையே உண்டவர்கள் பின்னொரு காலத்தில் பிச்சை ஏற்று உண்ணும் நிலையை அடைவர் என்பதிலிருந்து உணவின் ஈடுபாட்டைத் திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்(2929). செல்வம் நிலையில்லாததை உணர்ந்து வறியவர்களுக்குக் கொடுத்து உண்ணாத வாழ்க்கையை உடையவர்கள் கிழிந்த ஆடையை உடுத்தி இல்லந்தோறும் சென்று பிச்சை ஏற்பர்(2929)

முற்பிறவியில் செய்த தீவினை ஊழ்வினையாக வந்து கேடு செய்யும்(945). காமம், கள், இறைச்சி ஆகியவை தீவினையைத் தரும்(1551). உயிரினங்களுக்குத் தீவினை செய்பவர்கள் நரகத்தில் துன்புறுவர்(2762). அங்கிருக்கும் கொடிய நஞ்சை உணவாக உண்பர்(2763). உயிர்களைத் துன்புறுத்தியவர்கள் உடலை வயிர ஊசியால் குத்தி நெருப்பிலிட்டு வாட்டுவர்(2766). விலங்குகளைக் கொல்பவர்களை அவ்விலங்குகளின் உடலிலுள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவு உடலைக் கூறுபடுத்துவர்(2766).

விலங்குகளின் ஊனை உண்டவர்கள் நரகத்தீயில் விழுந்து உடல் உருகுவர்(2765). உடும்பை வேட்டையாடியவர்களை வேட்டை நாய்களைக் கொண்டு குதறச் செய்வர்(2767). வாளை மீன்களைத் தின்றவர்களின் வாயைத் திறந்து உருக்கிய இரும்பைத திணிப்பர்(2768). கால்களை நிலத்தில் பதிந்து கிடக்கும் முள்ளில் வைத்து அவர்களது உடம்பைத் தேய்ப்பர்(2768). அம்பினால் விலங்குகளைக் கொன்று வலையினால் மீன்களை வாரிக் கொன்றவர்களை நரகத்தில் தள்ளி நாள்தோறும் சுட்டுத் துன்புறுத்துவர்(2770).

தீவினையாளர்களைத் தடியால் அடித்துத் துன்புறுத்துவர்(2771).  இரும்புச் சட்டியில் இட்டுப் பொரித்து எடுப்பர்(2771). அவர்களது கண்களைக் கூரிய வாளால் குத்துவர்(2771). கூரிய முள்ளை நட்டுப் பனைமரத்தைப் பிளப்பது போன்று அவர்களது உடலைப் பிளப்பர்(2771). நாவறட்சியுற்ற தீவினையாளர் குடிக்க அருவெறுக்கத்தக்க குளத்து நீரைக் குடிக்கக் கொடுப்பர்(2772). தீவினையாளர்களைச் செப்புக் குழம்பில் அழுத்தியும் இயந்திர ஊஞ்சலில் அமர்த்திக் கீழே நெருப்பிட்டும் பொசுக்குவர்(2774).

தீவினை செய்பவர்களை செக்கிலிட்டு ஆட்டுவர். அம்மிலிட்டு அரைத்துப் பொடியாக்குவர்(2774). பிறர்மனை நயந்த கயவர்களை உலைக்களத்தில் பழுக்கக் காய்ந்த பாவைகளைக் கட்டித் தழுவச் செய்வர்(2769). ஐம்பொறிகளைக் காக்காதவர்களின் உடல் தசைகளை நரகர், ஈட்டி, வேல், குந்தம், வாள், எரியும் முனையுடைய சுரிகை முதலியவற்றால் எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி செய்வர்(2764). மண்ணுலகில் தீவினைகளை விதைப்பவர்களைக் கழுவில் ஏற்றித் துன்புறுத்துவர்(2776).

இவ்வாறு பிற உயிர்களைக் கொன்று அதனைத் தின்பவர்களும், பிறன் மனை நயப்பவர்களும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவர் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவி வந்தது. தீயன செய்பவர் தீயனவற்றாலேயே அழிவர் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் நிலவியதை சிந்தாமணி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது. (தொடரும்….18)

 

Series Navigationகம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதிகளந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    BSV says:

    //செல்வம்
    மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும்,
    ‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247)//

    திருவள்ளுவர் அப்படி சொல்லவில்லை. மேலும், அவர் செல்வம் என்ற சொல்லைக் கையாளவில்லை. பொருள் என்ற சொல்லே இக்குறளில் உள்ளது.

    வாழ்த்தும்போது 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்ப. அப்பதினாறில் ஒன்றே ஒன்றுதான் பொருள். மற்றவை வேறு வேறு. அவற்றுள் ஒன்று பெற்ற குழந்தைகள் மக்கட்செல்வம் என்பார் அவர். ஆக, செல்வம் என்ற பதத்தை பொருள் எனபதைக்குறிக்க மட்டும் பயனபடுத்தக்கூடாது.

    இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருள் அவசியம். ஆனால் அவ்வுலக வாழ்க்கைக்கு (இவ்வுலகத்தை நீத்தாருக்கு) பொருள் அவசியமில்லையென்றுதான் சொல்கிறார். தான் புதைக்கப்படும் ஆறடி நிலம் கூட ஒரு கோடீசுவரனாக வாழ்ந்தவனுக்கு இல்லை.

    சீவக சிந்தாமணி என்பதுதான் காவியத்தின் பெயர். வெறும் சிந்தாமணியென்றா எழுதுவது?

    செல்வம் = Any thing that helps you live your life in peace and happiness. You can be crorepathi. But you have no children. Can you be happy? Your daughter whose marriage you had conducted in all splendor splurging crores of money, came back home crying ”I cannot live with that alchoolic who beats me daily”. Can you be happy? Man does not live by bread alone செல்வத்தின்ன் கையறு நிலைகள் பலபல வாழ்க்கையில்.

    பொருள் = material wealth.

    வள்ளுவர் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்தித்து எழுதுபவர். அவர் தவறிழைப்பாரோ?

  2. Avatar
    BSV says:

    திருத்தக்க தேவர் காட்டும் தீவினைப்பயன்கள் வெகுளித்தனமாக இருக்கின்றன. அம்மா, குழந்தை சாப்பிட மறுத்தால், பூச்சாண்டி பிடிச்சிட்டுப் போய்விடுவான் எனறு பயமுறுத்துவாள். இல்லையா? அதைத்தான் தேவர் செய்கிறார்.

    //இவ்வாறு பிற உயிர்களைக் கொன்று அதனைத் தின்பவர்களும், பிறன் மனை நயப்பவர்களும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவர் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவி வந்தது. தீயன செய்பவர் தீயனவற்றாலேயே அழிவர் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் நிலவியதை சிந்தாமணி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது. //

    ஒட்டுமொத்த தமிழகத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வந்தன என்று முனைவர் சொல்வது வெறும் கற்பனை. திருக்கத்த தேவர் தன் சமணமதத்தை மார்க்கெட்டிங் பண்ண அருகனை வணங்குவோர் /
    /முற்பிறவியில் அருகனின் பாதங்களை மலர்தூவி வழிபட்டவர்கள் இப்பிறவியில் பிறர் மலர் தூவி வழிபடும் அரசர்களாகப் பிறக்கின்றனர்(//
    அடடே பெரிய பதவி கிடைக்குமென்று ஆசை காட்டுகிறார். பலபல பொய்களை அள்ளி வீசி தமிழர்களை ஏமாற்றுகிறார். அல்லது வெறும் வார்த்தை ஜாலங்களைக் காட்டி சமணத்தை விற்கிறார்.

    நம் முனைவர் சேதுராமன் இது அன்றைய தமிழ்ச்சமூகத்தில் நிலவிய கருத்துக்கள் என்கிறார். என்னே கற்பனை!

    இதைப்படியுங்கள்: ஜோரா கைதட்டுவீர்கள் :-)

    //வாளை மீன்களைத் தின்றவர்களின் வாயைத் திறந்து உருக்கிய இரும்பைத திணிப்பர்(2768). கால்களை நிலத்தில் பதிந்து கிடக்கும் முள்ளில் வைத்து அவர்களது உடம்பைத் தேய்ப்பர்(2768). அம்பினால் விலங்குகளைக் கொன்று வலையினால் மீன்களை வாரிக் கொன்றவர்களை நரகத்தில் தள்ளி நாள்தோறும் சுட்டுத் துன்புறுத்துவர்(2770).//

    அப்போ அன்னைக்குத் தமிழ்நாட்டில் ஒருத்தர் கூட மீன் சாப்பிடவில்லை. மீனவர்களும் கிடையா. அப்போ எப்படி சார் நெய்தல் திணை வந்தது? அங்க வாழ்ந்தவனெல்லாம் தமிழனில்லையா? இல்லை உள்ளாட்டில் வாழ்ந்தவரெல்லாம் வெஜிட்டேரியன்களா? அவராவது பரவாயில்லை. காரியத்தொடு செய்கிறார். நீங்கள் தமிழ்நாட்டில் நிலவி வந்தததாகல்லவா சொல்கிறீர்கள்?

    தன்னையறியமாலே இக்கட்டுரை சொல்வது யாதெனில், ஏன் சமணம் தமிழ்நாட்டிலிருந்து மறைந்தது? அல்லது சைவர்கள் சமணத்தை ஓட்டும் வேலையை இலகுவாக்கியது? என்பதுதான்.

    திருத்தக்க தேவர் சொன்னதாக முனைவர் சேதுராமன் எழுதியதைப்படித்துப் பயந்து விடாதீர்கள். சீவக சிந்தாமணி தமிழில் எழுந்த அருமையான அழகான இலக்கிய படைப்பு. மற்றுமொரு சிறப்பான விடயமென்னவெனில், இக்காவியத்தில் sensual taste அலாதி. படித்து இன்புறுங்கள். தமிழ் மக்கள் இதைப்படித்து காமச்சுவையில் இறங்கி விட்டார்களே என வருந்தியே சோழன் பெரிய புராணத்தை எழுத வைத்தான் என்றால், காமச்சுவை எப்படியிருந்திருக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *