தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com
ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள சகுனம் பார்த்தல் என்ற நம்பிக்கை இன்றளவும் பயன்பட்டு வருகின்றது. இது முற்காலத்தில் புறத்துறைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்பட்டது. ஆநிரை கவரச் செல்பவர்கள் விரிச்சி கேட்டே தமது பயணத்தைத் தொடங்கினர். இச்செயலே பின்னர் சகுனமாக வளர்ச்சி பெற்றது. இச்சகுனம் நற்சகுனம், தீயசகுனம் என்ற இருவகைகளில் சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நற்சகுனம்
ஆந்தைகள் அலறுதல் நல்ல சகுனமாகக் கருதப்பட்டது(1281).பறவைகள், நிறைகுடம் முதலியன நன்நிமித்தத்தை வெளிப்படுத்தும் சின்னங்களாக விளங்கின(516).
தீயசகுனம்
ஆடவர்களுக்கு இடக்கண் துடித்தல், தீக்கனா, கோட்டான் பகலில் கூவுதல், குருதி மழை பொழிதல், தீய சகுனங்களாகக் கருதப்பட்டன(2173). இச்சகுனங்களின்படியே தீச்செயல்களும் நடைபெற்றன என்பதைக் கொண்டு சகுனங்கள் மக்கள் மனதில் நீங்காத நம்பிக்கையிடத்தைப் பெற்றிருந்தன என்பது நோக்கத்தக்கது.
சோதிடம்
சோதிடம் மக்கள் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருந்தது. குழந்தை பிறப்பு, கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டல், போரின் தொடக்கம், முடிசூட்டு விழா, திருமண விழா முதலிய நிகழ்ச்சிகள் அனைத்தும் சோதிடர்கள் குறித்த வேளையில் நடைபெற்றது(590,2467,2362,1344). குதிரைகள் வாங்குதல் முதலிய செயல்களிலும் சோதிடக்கலை பயன்பட்டது(1771).
ஐப்பசியில் பிறந்த குதிரைகள் நன்கு பாய்ந்து ஓடக்கூடியன(1771). பரணியில் பிறந்தவன் பகைக்கு அஞ்சாதவன்(1813) ஆகிய செய்திகள் சோதிடக்கலையின் நம்பிக்கையை வெளிப்படுத்துவனவாக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.
மந்திரம்
மனதைத் திடமாக வைத்திருக்க உதவுகின்ற சொற்களை மந்திரம் என்று கூறுவர். மந்திரங்கள் அக்கால மக்கள் வாழ்க்கையில் வீடுபேற்றை வழங்க வல்லது(951). இனிய குரலைத் தருவது, விடத்தைப் போக்க வல்லது வேண்டிய உருவை எடுக்கத் துணைபுரிவது(1218). ஆகாயமார்க்கமாகச் செல்வதற்கு இம்மந்திரங்கள் உதவும் எனவும் தெய்வங்களை வரவழைக்க இம்மந்திரளால் முடியும் என்றும் தொலைவில் நடப்பதை இங்கிருந்தே பார்ப்பதற்குப் பயன்படுவது என்றும் பலவகையான பயன்பாடுகளை மந்திரங்கள் கொண்டிருந்ததாக விளங்கின(1713). ஐம்பத மந்திரம்
ஐம்பத மந்திரம் மிகப் பெரிய மந்திரமாகும். சுதஞ்சணன் தேவ உடம்பைப் பெறுவதற்கு முன்னர் நாய் வடிவில் இருந்தான். அந்தாய் அந்தணர்கள் வேள்விக்காக வைத்திருந்த அவிர்ப்பாகத்தை எச்சில்படுத்தியது. இதைக் கண்ட அந்தணர்கள் அந்நாயை உயிர்போகும் அளவுக்கு அடித்துத் துன்புறுத்தினர்.
குற்றுயிராக விளங்கிய அந்நாயைச் சீவகன் கண்ணுற்று வருந்தினான். இழிந்த பிறப்பெடுத்த நாயின் துன்பத்திற்காக மனம் இரங்கினான். நாய்க்கு முத்தியை அளிக்க விரும்பி அதன் காதில் ஐம்பத மந்திரத்தை ஓதினான். மந்திர ஒலி அதன் காதில் விழுந்ததும் உயிர் வடிவில் விண்ணில் சென்று தேவ உருவைப் பெற்றது. இதனை,
‘‘மனத்தைிடைச் செறும்பு நீக்கி மறவலையாகி யைந்தும்
நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி
எனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயன் மென்றாற்
கனைப்பத வமிர்த நெ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே’’(951)
என்று குறிப்பிடுவதிலிருந்து ஐம்பத மந்திரம் தேவகதிக்கு அழைத்துச் செல்ல வல்லது என்பதை உணரலாம். இதேபோன்று பதுமையைப் பாம்பு தீண்டிய பொழுதும், பதுமையைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் அவளை விட்டுப் பிரிந்து சொல்லும்போழுதும் வேற்று உருக்கொண்டு செல்வதற்கும் மூன்று மந்திரங்கள் சீவகனுக்குப் பயன்பட்டன(1218).
சீவகனின் மனைவியான காந்தருவதத்தையும் மந்திரங்களைப் பயன்படுத்துகிறாள். தன் கணவன் சீவகனைக் கட்டியங்காரனின் வீரர்கள் சிறை செய்த பொழுது தெய்வ உதவியை நாடி மந்திரங்களை உச்சரிக்கிறாள். அவள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு தெய்வம் உதவி செய்ய முன் வருகிறது. ஆனால் மனைவியின் உதவியால் கணவன் உயிர் வாழ்வது இழுக்கு என்று கருதியதால் அத்தெய்வத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறாள்(1149, 1150).
மதிமுக மந்திரம்
‘நந்தட்டன்’ காந்தருவதத்தையைக் கண்டு தன் அண்ணனின் நிலை குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றான். அப்போது மதிமுகம் என்ற மந்திரத்தைப் பயன்படுத்திக் தொலைவில் நடப்பதை அறிந்து அதை நந்தட்டனுக்குக் கூறுகின்றாள். சீவகன் இருக்கும் .த்திற்குத் தன்னை அனுப்பி வைக்குமாறு நந்தட்டன் கூறுகிறான். இதை ஏற்றுக் கொண்ட காந்தருவதத்தை ஆகாயகாமினி என்னும் மந்திரத்தைப் பயன்படுத்தி நந்தட்டனைச் சீவகனிடம் கொண்டு சேர்க்கிறாள்(1713). இவ்வாறு காந்தருவதத்தை மந்திரங்களைப் பயன்படுத்தித் தெய்வங்களை ஏவல் கொள்வதும் தொலைவில் நடப்பதை அறிந்து கொள்வதும் ஆகிய செயல்களைச் செய்கிறாள்.
சீவகன் காட்டு வழியில் செல்லும்பொழுது, மனைவியைப் பிரிந்து வருந்தும் ஒருவனைக் காண்கிறான். அவன் வருத்தத்தைப் போக்கும் வகையில் ஒரு மந்திரத்தைக் கூறி இம்மந்திரத்தைக் கூறிச்சென்றால் முடிவில் உன் மனைவியைக் காணலாம் என்று அறிவுறுத்துகின்றான். அதன்படி அவனும் மந்திரததைக் கூறி அவன் மனைவியை மீண்டும் பெறுகிறான்(1581). இவ்வாறு சிந்தாமணி மந்திரத்தின் உதவியால் செயற்கரிய செயல்களைச் செய்ய இயலும் என்ற அக்காலத்தில் நம்பிக்கையை தெளிவுறுத்துகின்றது. இந்நம்பிக்கைகள் இன்றும் மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது(தொடரும்…19)
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.
- ஆஷா
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8
- திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்
- கவிஞர் அம்பித்தாத்தா
- பழக்கம்
- தொடுவானம் 134. கண்ணியல்
- சூழல் மாசு குறித்த கவிதைகள் சில
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2
- குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1
- காப்பியக் காட்சிகள் 18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
- பகீர் பகிர்வு
- சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1
- வேழப் பத்து—11
- விழியாக வருவாயா….?
- சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?
- தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்
- மிக அருகில் கடல் – இந்திரன்