எஸ்.பால்ராஜ்
ஓரு காலத்தில் ஆடி மாதம் என்றால் தமிழர்களுக்கு அமங்கலமான மாதம். விவசாயிகள் மட்டும் ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்கள். மங்கல காரியங்கள் எவையும் இந்த மாதத்தில் நடக்காது.அதனால் திருமணம் போன்ற விசேஷத்திற்கு உரிய வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறாது. குறிப்பாக, ஜவுளி வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இதோடு மட்டுமின்றி, சீர் கொடுக்க வேண்டிய பாத்திர பண்டங்களும் வியாபாரம் இருக்காது. புதிதாகத் திருமணம் ஆகியிருந்தால், மனைவி கணவனைத் தற்காலிகமாகப்பிரிந்து தனது அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவாள். ஆடி மாதத்தில் அதிகமாகக் காற்று அடிக்கும். அவ்வளவு மோசமான மாதம் இது.
இப்போது எல்லாம் மாறி விட்டது. ஆடியில் காற்று அடிப்பது மட்டும்தான் மாறாமல் அப்படியே இருக்கிறது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் மட்டும்தான் நடைபெறுவதில்லை. உண்மைதான். நிறைய வீடுகளில் மங்கலம் பொங்குகிறது. எங்கே என்றால், வியாபாரிகள் வீட்டில். தமிழ் நாட்டில் விற்கவே முடியாத எந்தப் பொருளையும், காத்திருந்து ஆடி மாதத்தில் விற்றுவிடலாம். ‘ஆடியிலெ அடிக்குதய்யா அதிர்ஷ்டக்காற்று’ என்று பரவை முனியம்மா பாடுவது நடுத்தரக்குடும்பத்தில் அல்ல, வியாபாரி வீட்டில்.
முன்பெல்லாம் ஆடியில் கூட்டமே இல்லாமல் இருந்ததால், ஜவுளிக்கடைகளில் ஆடி மாதம் மட்டும் சிறிது விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது உண்மையான விலை குறைப்புதான். லாஜிக் எளிமையானது. பத்துப் பொருள்களை, 100 ரூபாய் லாபத்தில் விற்பதற்குப்பதில், இருபது பொருள்கள் ஐம்பது ரூபாய் லாபத்தில் விற்பது. பெருக்கிப்பார்த்தால் ஒரே லாபம்தான் வரும். இது நியாயமாய் நடந்த காலத்தில். இப்போது அப்படிக் கிடையாது. பெரிய, பெரிய ஜவுளி நிறுவனங்களாக இருந்தாலும் தள்ளுபடி விற்பனைக்காக, துணி தயாரிப்பு நிறுவனங்களில் தேங்கிக்கிடக்கும் புதிய (?) துணிகள் வாங்கப்படுகின்றன.ஏறத்தாழ எடைக்குப் போட வேண்டிய துணிகள், தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகின்றன. இவற்றில் சிறிய சேதாரங்களுடன் வரும் துணிகளும் அடக்கம். தள்ளுபடி விற்பனையில் அலைமோதும் கூட்டத்தில் இந்தச்சேதாரங்கள் நம் கண்ணில் படுவதே இல்லை.
இதில் ஜவுளிக்கடைக்குச் சென்றால் பெண்களுக்கான துணிப்பிரிவில் தான் கூட்டம் அலை மோதும். ஆண்கள் பிரிவு ஈ விரட்டிக்கொண்டு கேட்பாரின்றி கிடக்கும். கூட்டத்தில் சிக்கித்திணறி, பணத்தை அழுதுவிட்டுத் தள்ளாடுவதுதான் பொறுப்பான குடும்பத்தலைவரின் வேலை. பத்து மாதங்களுக்கு விற்பனையே இல்லாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் சிறு, சிறு ஜவுளிக்கடைகளும் ஆடி மாத விற்பனையை வைத்து, ஒரு வருடம் காலம் தள்ளும்.
கடந்த சில வருடங்களாக ஜவுளி வியாபாரிகளைப் பார்த்து மற்ற வியாபாரிகளுக்கும் பொறாமை வந்து விட்டது. காலியிடத்தை வாங்கி வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆடி அதிரடித்தள்ளுபடி வழங்குகிறார்கள். ரியல் எஸ்டேட் என்பதே ஆயிரம் ரூபாய்க்குப் பொருளை வாங்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பது. அதாவது நூறு மடங்கு விலை. இந்த அழகில் நமக்கு பத்து சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரப்படுத்துவார்கள்.
இது போக, குடும்பத்திற்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, குக்கர், தோசைக்கல் என அனைத்துப் பொருள்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆனி மாதம் வரை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருள், ஆடி மாதத்தில் ரூபாய் ஒன்பதாயிரத்திற்குத் தந்தால், விற்பவருக்கு நஷ்டம் கிடையாது. இவ்வளவு நாளும் அவர் அதிக விலைக்கு விற்று கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார் என்று அர்த்தம். இந்தச்சிறிய செய்தியை எந்தக்குடும்பத் தலைவராவது தனது மனைவியிடம் பக்குவமாகக் கூறிப் புரிய வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
இதே போல் ஒன்று வாங்கினால், அதே பொருள் மற்றொன்று இலவசமாகக் கொடுப்பார்கள். ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கினால், இன்னொன்று இலவசமாகக் கிடைக்கும். என்ன அர்த்தம்? அதன் உண்மையான விலை பாதிக்கும் கீழே! அதை விற்பவர் ஒன்றும் தர்ம சத்திரம் நடத்தவில்லை சும்மா கொடுப்பதற்கு. எங்கள் வீட்டு வழியே ஒரு ஐஸ்கிரீம் வண்டி செல்லும். பதிவு செய்யப்பட்ட விளம்பரம் ஒலிபரப்பாகிக் கொண்டே செல்லும். விளம்பரம் நம்மைச் சுண்டி இழுக்கும். ஒரு சிறுமி ஐஸ்கிரீம் வண்டியைக் கூப்பிடுவது போலும், சிறுமிக்கும் அவளது தகப்பனாருக்கும் நடைபெறும் உரையாடலாக இருக்கும். அது எனது மகள் என்னிடம் கேட்பது போலவே இருக்கும். ஆனால் அந்த வியாபரி ரொம்ப நியாயஸ்தன். வருடம் முழுவதுமே ஐஸ்கிரீம் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாகக் கொடுத்து விடுவார். அதாவது வருடம் முழுவதுமே நம்மிடம் இலவசம் என்ற பொய்யைச்சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நகைக்கடைக்குப் போனால் ஆடி மாதத்தில், சில கடைகளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் தருவார்கள். இதில் இரண்டு வகையான ஏமாற்று இருக்கின்றன. முதலாவது ஒரு கிராம் தங்கம் விலை சுமார் ரூபாய் 3000. ஒரு கிராம் வெள்ளி விலை சுமார் ரூபாய் 50. அதாவது மூவாயிரத்திற்கு, ஐம்பது குறைந்தால் உண்மையான விலைக்குறைவு 1.6% தான். 1.6 சதவீதம் விலையைக் குறைத்து விட்டு சேதாரத்தில் இரண்டு சதவீதம் கூட்டி விட்டால் லாபம் அவருக்குத்தான். இரண்டாவது ஏமாற்று, நாம் நகைக் கடைக்குச் சென்றால், சுமார் முப்பது கிராமிற்கு ஒரு தங்க நகை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.. அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் முப்பது கிராம் வெள்ளியில் ஒரு பொருளும் வாங்க முடியாது. அப்படி அமைந்தால் அது ஐம்பது கிராம் இருக்கும். இப்போது கூடுதலாக இருக்கும் இருபது கிராமிற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும். என்ன நடக்கிறது? மறைமுகமாகக் கடைகாரருக்கு இன்னொரு பொருள் விற்பனையாகி விட்டது.
அதே போல் சாலையில் நின்று கொண்டு, அவ்வழியகச் செல்வோரிடம் இலவசமாகச் சில பொருட்கள் கொடுக்கப்படும். உதாரணமாக, பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் சிலர் துணிப்பையை இலவசமாகக் கொடுப்பார்கள். கூடவே உங்கள் வீட்டுத்தொலைபேசி எண் கேட்கப்படும். எதற்கு என்று கேட்டால் ஒரு பரிசுக்கூப்பன் இருக்கிறது. அந்தப் பரிசு விழுந்தால் உங்களைத் தொலைபேசியில் கூப்பிட்டுத் தெரிவிக்க என்று கூறுவார்கள்.
இதுவரை நடந்த சம்பவத்தில், நமக்கு ஏன் ஒருவர் இலவசமாகப் பொருள் கொடுக்கிறார் ? ஏன் நமக்கு குலுக்கலில் பரிசு தர வேண்டும்? என்ற எண்ணம் நிறைய பேருக்கு எழுவதில்லை, பரிசுதானே, கொடுக்கட்டுமே என நமது தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுவோம். ஒரு வாரம் கழித்து நமது வீட்டுக்குத் தொலைபேசி வரும். குலுக்கலில் நமக்கு பவர்கட் ஆனால் எரியக்கூடிய விளக்கு க் கிடைத்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட முகவரியில் தங்கள் மனைவியுடன் வந்து பெற்றுச் செல்லும்படி சொல்வார்கள். கவனிக்க – மனைவியுடன் வர வேண்டும். அங்கே போய்ப் பார்த்தால் தெரியும். அது ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியாக இருக்கும். ஒரு விளக்கைக் கொடுத்து, லட்சக்கணக்கில் ஒரு பாலிசியை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். மனைவியுடன் வரச் சொல்வது நம்மை எளிதாகக் கவிழ்ப்பதற்காக.
எனவே எந்த மாதமாக இருந்தாலும் சரி, எந்தப்பொருளாக இருந்தாலும் சரி, எதனை இலவசமாகக் கொடுத்தாலும் சரி, வாங்குபவர்தான் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். பொதுவாக இலவசமாகக் கொடுக்கும் பொருளைக் கொஞ்சம் தள்ளி நின்று யோசிப்பது நல்லது.
paulrajs1963@gmail.com
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.
- ஆஷா
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8
- திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்
- கவிஞர் அம்பித்தாத்தா
- பழக்கம்
- தொடுவானம் 134. கண்ணியல்
- சூழல் மாசு குறித்த கவிதைகள் சில
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2
- குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1
- காப்பியக் காட்சிகள் 18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
- பகீர் பகிர்வு
- சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1
- வேழப் பத்து—11
- விழியாக வருவாயா….?
- சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?
- தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்
- மிக அருகில் கடல் – இந்திரன்