மூன்று கல்லறைகள்.

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 12 in the series 11 செப்டம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

அன்று என் தாயார் இறந்ததினம். கன்னி மேரியின் தேவாலயத்துக்குப்; போய் அவர் நினைவாக மெழுகுவரத்தி ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு தேவாலயத்துக்கு அருகே உள்ள இடுகாட்டுக்குப் போய், மலர் வலையம் வைக்கச் சென்றேன். என் பெற்றோர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாது கன்னி; மேரி தேவாலயத்துக்குப் போய்வருபவர்கள். அதனால் தேவாலயத்துக்கு அருகே உள்ள இடுகாட்டில் தாங்கள் இறந்த பின் தங்கள் உடல்களை அருகருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் எனக்கு இட்டக் கட்டளை.

என் அம்மாவின் கல்லறையை பார்க்க போகும் போது இரு மலர் வலையங்கள் எடுத்துச் சென்று, என் தந்தையினதும், அம்மாவினதும் கல்லறைகளில் வைத்து வணங்கி, அவர்கள் ஆன்மாக்கள் சாந்திபெற செபம் செய்து வருவது வழக்கம். இதை நான் என் தந்தை இறந்த தினத்தன்றும், என்தாயார் இறந்த தினத்தன்றும் வருடா வருடம் செய்வது வழக்கம்.

அன்று மலர் வலையம் வைத்துவிட்டு, இடுகாட்டின் வழியே நடந்து வீடு திரும்பும் போது சில நேரங்களில் அழகான கல்லறைகளப் பார்த்து இரசித்தபடி நடந்து போவது என் வழக்கம். சில கல்லறைகள் அதிகப் பணம் செலவு செய்யப்பட்டு சலவைக் கல்லால் கட்டப்பட்டதாக இருக்கும். அக் கல்லறையில் உள்ள பதிவுகளை வாசித்துப் பார்த்தால். அடக்கம் செய்யப்பட்டவரின் பெயர், பிறந்த திகதி, இறந்த திகதி, அவர்கள் பற்றிய விபரம் இருக்கும். அதில் அவர்களுக்கு பெற்ற தகுதிகள், வகித்த பதவிகள், ஆகியவை தெரிந்துவிடும். கல்லறைகளில் கூட அந்தஸ்த்து வித்தியாசத்தைக் காணலாம்.

இப்படி கல்லறைகளை அவதானித்து வரும் போது என் பார்வைக்குப் பட்டது அருகருகே உள்ள அழகிய மூன்று ஒரே மாதிரியான கல்லறைகள். ஒருவேலை இறந்தவர் இரண்டு பெண்டாடிக்காரனாக இருந்திருக்கலாமோ என்றது என யோசித்தேன்;. எதற்கும்; போய் அந்த மூன்று கல்லறைகளில் எழுதி இருந்த பதிவுகளை வாசித்தேன். அதைவைத்து உருவாகியதே இக்கதை.

******

சிறு வயது முதற்கொண்டே ஜேக்கப், ஜோசப், ஜோனி ஆகிய முவரும் நண்பர்கள். ஒரே கிராமத்தில் அவர்கள் வீடுகள் அருகருகே இருந்தபடியால் நண்பர்களானார்கள். அவர்கள் எண்ணங்களில்; ஓற்றுமை இருந்தாலும் அவர்களின் உடலில் உள்ள ஊனங்கள், அவர்கள் நண்பர்களாவது முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அவர்களுக்கு உடலில் குறைபாடுகள் இருந்தாலும் அவ்களுக்குள் ஒரு திறமை புதைந்து கிடந்தது.

ஜேக்கப் பார்வையற்றவன். சிறுவயதில் அவருக்கு வந்த கண் வியாதியை சரிவர சிகிச்சை செய்யாததால் குருடானவர். ஜேகப்புக்கு வாத்தியக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அதுவும் ஹார்மோனியம் வாசித்து மகிழ்வது அவனுக்கப் பிடித்தமானது ஒன்று. அவனது மாமன் பியானோ வாசிப்பவர். ஜேக்கப், மாமன் வாசிப்பதைக் கேட்டு தானாகவே பியானோ வாசிக்க ஆரம்பித்தான். கண்கள் தெரியாத குருடனானலும், அவன் காது கேளாத பேத்தோவன் இசை மேதை போல், பியானோவில் மெட்டுகள் அமைத்தான். அவனின் மாமன் ஜேகப்பின் திறமையைக் கண்டு அதிசயித்தார் அவனுக்கு ஒரு ஹார்மோனியம் பெட்டியை வாங்கிக் கொடுத்தார். சில வேலைகளில் உணவு உண்ணாமலும் ஹார்மோனியம் வாசித்துக்கொண்டே ஜேகப் இருப்பான். புதுப் புது மெட்டுகளை உருவாக்குவான். கிராமத்து நாட்டு பாடல்களை காதால் கேட்டு புதுமையாக மெட்டு அமைப்பான். கண்கள்; தெரியாவிட்டாலும்; அவனது விரல்கள்; , ஹார்மோனியத்தில் தானாகவே அவன் கற்பனையோடு இணைந்து விளையாடும். இனிமையான புதுப்பது மெட்டுகளை உருவாக்கும் திறமை படைத்வன்.

ஜேகப்பின் நண்பன் ஜோசப் பிறவிச் செவிடன். ஆனால் இனிமையாகப்பாடுவான். சிறுவயது முதற்கொண்டே அவர் இனிமையான குரலில் பாடுவது பலரைக் கவர்ந்தது. தான் பாடும் பாடலைப் பதிவு செய்து கேட்டு இரசிக்க முடியாதவன். ஆனால் அவன் முறையாக இசையைக் கற்றதில்லை. அவனின் தந்தை சிறுவயதிலேயே இறந்தார். தாய், மகனை நிராகதியாக தவிக்க விட்டு விபச்சாரியாக, சிவப்பு விளக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டாள்.

ஜேகப்பின் நண்பன் ஜொனி ஊமையாக இருந்தும் கற்பனை வளமுடையவன். சிறுவயது முதற்கொண்டே கவிதைகளும், சிறுகதைகளும் எழுதுவான். இயற்கையின் அழைகை இரசித்து எழுதுவான். சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி எழுதுவான். ஜொனி பாடல் எழுத, அதற்கேற்ப ஜேகப் தன் ஹார்மோனியத்தில் இசை அமைக்க. ஜோசப் இனிமையாக அவ்விசைக்கு ஏற்றவாறு பாடுவான்.

ஜேகப்பின் தந்தை ஒரு மோசடிக்காரன். பலரை மோசடி செய்த குற்றத்துக்காக பல வருடங்கள் சிறைவாசம் செய்துதுவருகிறான்.; ஜேகப்பின் தாய் புற்று நோயால் அவன் சிறுவயதாக இருந்தபோது இறந்தவள். அவன் அனாதையாக விடப்பட்டான். ஜேகப்பைப் போல், ஜோசப்பும் ஜொனியும் அனாதையாக விடப்பட்டவர்கள். இம்மூவரும் தமது அன்னறாட வாழ்வுக்குத் தேவையான வருமானத்தை தங்களுகுள் புதைந்துள்ள திறமைகளை ஒன்று சேர்த்து பஸ்நியைம், ரயிலவே நிலையம், கடற்கரை, சந்தை ஆகிய இடங்களில் தங்கள் திறமைகளை ஒன்றியிணைந்து வெளிகாட்டினார்கள். அவர்களுக்கு முன் விரிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் பணம் சேர்ந்தது. சிலர் அவர்களின் இசையையும், பாடல்களையும் கேட்கவே தினமும் அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்தனர்.

******

சினமா தயாரிப்பாளரும், இயக்குனருமான பீட்டர் டங்கன் என்பவர், தினமும் தேகப்பியாசம் செய்ய கடற்கரைக்குச் செல்வதுண்டு. அன்று ஒரு நாள் அவர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் கைதட்டி ஆராவாரப் படுவதைக்கண்டார். ஆர்வம் உள்ள டங்கனுக்கு எதற்காக அவ்வளவு கூட்டம் என்று அறியவேண்டும் என்று இருந்தது. . கூட்டத்தில் ஒருவனாகப் போய் நின்றார். ஜேக்கப், ஜொனி, ஜோசப்பின் கூட்டுத் திறமையைக் கண்டு வாயில் விரல் வைத்து அதிசயித்தார். அவர் மூளை சுறு சுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. கூட்டம் கலைந்தவுடன் மூவரையும் அவர் அனுகினார்.

“நீங்கள் மூவரும் நண்பர்களா” டங்கன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

டங்கன் கேட்டதுக்கு அவர் யார் என்று காணமுடியாவிட்டாலும் அவர் கேள்விக்கு மூவரில் முத்தவனான ஜேக்கப் பதில் அளித்தான்.

“ ஓம் ஐயா. அனாதைகளான நாங்கள் மூவரும் பல காலமாக நண்பர்கள். என் பெயர், ஜேக்கப், பாடியவன் பெயர் ஜொசப். இந்தப் பாடலை உருவாக்கியவன் பெயர் ஜொனி. அதை இசையாக ஹார்மோனியத்தில் வாசித்தவன் நான். எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அங்கத்தில் ஒரு குறையிருந்தாலும், சில திறமைகளைக் கடவுள் தந்திருக்கிறார்” என்றான் ஜேக்கப்.

“ இது தானா உங்கள் பிழைப்பு”? டங்கன் அவர்களைக கேட்டார். ஜோசப்பும், ஜொனியும் டங்கன என்ன சொல்லுகிறார் என்பதை அவரின் உதட்டுகளின் அசைவுகளில் இருந்து புரிந்து கொண்டார்கள்.

“ ஓம் ஐயா. ஏதோ நாங்கள் கைநீட்டிப் பிச்சை எடுக்காமல் எங்கள் திறமைகளை ஒன்றாக வெளிகாட்டிப் பிழைக்கிறோம்” ஜேக்கப் பதில் சொன்னான்.

“ அது சரி எங்கே தங்கிருக்கிறீகள்”?

“ நதிக்கரை ஓரத்தில் உள்ள சேரிப் பகுதி குடிசையொன்றில். மூட்டை தூக்கும் கூலி முருகன் என்பவரின் குடிசை அது. பிள்ளைகள் இல்லாத அவரும் மனைவி வள்ளியம்மாவும், எங்கள் மேல் பரிதாபப் பட்டு குடிசையில் தங்க விட்டடிருக்கிறார்கள்.

“ அப்போ உணவுக்கு என்ன செய்கிறீர்கள்”?

“ எங்கள் இரசிகர்கள் சில சமையங்களில் ரொட்டி ,வடை, இட்டலி, தோசை தருவார்கள். அவர்கள் ஏதும் தராவிட்டால் கடையில் கிடைத்த பணத்தைக் கொடுத்து வாங்கிச் சாப்பிடுவோம். இரவில் குடிசையில் வள்ளி ஆச்சி சமைத்து கொடுப்பதைச் சாப்பிடுவோம். முருகன் அப்புவும்;, வள்ளி ஆச்சியும் தான் எங்கள் வள்ப்புப் பெற்றோர்கள். மாதம் மாதம் அவர்களுக்கு எங்கள் சம்பாதியத்தில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைக் கொடுப்போம்”, ஜேக்கப் சொன்னான்.

“ உங்களின் அங்கங்ளில் குறையிருந்தாலும் நீங்கள் மூவரும் சுயமாக உழைத்து வாழ்வதை பாராட்டுகிறேன்” , டங்கன் அவர்களைப் பாராட்டினார்.

“ அது சரி ஐயா எங்களிடம் பல கேள்விகள் கேட்கிறீர்களே நீங்கள் யார் என்ற எங்களுக்குச் சொல்லவில்லையே”, ஜேக்கப் கேட்டான். .

“ என் பெயர் பீட்டர் டங்கன். டங்கன் என்றால் சினிமத்துறையில் எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு சினிமா தயாரிப்பாளனும், இயக்குனரும். பல வெற்றிப் படங்கள் எடுத்திருக்கிறேன். நான் கலைத் திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்துவேன்”, டங்கன் சொன்னார்.

“ அப்படியா? அது தான் எங்களிடம் பேசிக் கொண்டிருகிறீகளா?;

“காரணம் இல்லாமல் நான் ஒன்றும் செய்ய மாட்டேன்”.

“ அப்படி என்றால்?”

“ உங்களுக்குள் உள்ள திறமையை அடையாளம் கண்டுவிட்டேன். நீங்கள் சம்மதித்தால் உங்களைச் சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்துகிறேன். நான் எடுக்கப் போகும் அடுத்த படத்தில் உங்கள் மூவரையும் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறேன். என்ன சொல்லுகிறீரகள்?

“ என்ன நீங்கள் சொல்லுகிறீர்கள் ஐயா? விளங்கவில்லையே. எங்களுக்குத் தான் நடிக்கத் தெரியாதே” ஜேக்கப் சொன்னான்.

“ படத்தில் நீங்கள் நடிக்கத் தேவையில்லை. படத்துக்கு பாடல்கள் எழுதி, இசை அமைத்து, பாடினால் போதும். ஒரு புதுமையைச் செய்ய விரும்புகிறேன். ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. என்ன உங்கள் மூவருக்கும் சம்மதமா”?

மூவரும் உடனே சம்மதம் தெரிவிக்வில்லை. பதிலுக்கு,

“ ஐயா அப்புவிடமும் ஆச்சியிடமும் கலந்து பேசி விட்டு, நாளை பதில் சொல்கிறோம். நாளை இதே நேரம் இவ்விடத்துக்கு வாருங்கள். சம்மதமா இல்லையா எனச் சொல்லுகிறோம்;.

“ சரி. நல்ல மறுமோழியோடு நாளை வாருங்கள். நீங்கள் சம்மதித்தால் அட்வான்ஸ பணமும் தருவேன். உங்களுக்கு கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்”இ டங்கன் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

*******

மறுநாள் டங்கன் தன்; செயலாளரோடு சொன்ன அதே நேரத்துக்கு அவர்களைச் சந்திக்கப் போனார். நேற்று போல் அதே கூட்டம், மூவரின் இசை நிகழச்சியை இரசித்துக் கொண்டிருந்தது. அவர் கேட்டது “ தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற பிரபல்யமான பாடல். பாடலுக்குப் போருத்தமான ஹார்மோனிய இசையோடு, ஜோசப் கேட்டவர்கள் மனம் உருகப் பாடினான். நிகழ்ச்சி முடிந்ததும் டங்கனும் அவரது செயலாளரும், மூவரிடமும் சென்றார்கள்.

இவர்களைக் கண்ட ஜோசப் என்ன “டங்கன் ஐயா சொன்ன நேரத்துக்கு வந்துவிட்டீர்களே” அவரைப்பார்த்து கேட்டான்.

“ என் காரியம் ஆக வேண்டுமானால் நான் சொன்ன நேரத்துக்கு வந்து தானே ஆகவேண்டும். என்ன உங்களுடைய அப்புவோடும், ஆச்சியொடும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தீர்களா?”.

“ ஆம் அவர்களுக்கு முழுச் சம்மதம். ஆனால் ஒன்று மட்டும் எங்களுக்குச் சொன்னார்கள்”, ஜேக்கப் சொன்னான்.

“ அவர்கள் என்ன சொன்னார்கள்”?

“நீங்கள் வருங்காலத்தில் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்து செல்வந்தர்களானால் உங்களின் பழைய நிலையை மறந்து விடாதீர்கள். அதோடு உங்கள் மூவருக்கிடையே எக்காரணத்தைக் கொண்டும் பிரிவு ஏற்படக் கூடாது என்றார்கள், ஜேக்கப் சொன்னான்.

“நல்ல அறிவரை தான். இதோ இதில் அட்வான்ஸ் பணம் எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள். ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் விகிதம் எடுத்துகொள்ளுங்கள்”, என்று சொல்லி தனது செயலாளரை டங்கன் பார்த்தார். அவர் தான் கொண்டு வந்த கை பையில் இருந்து பணத்தை எடுத்தார்.

“ யாரிடம் பணத்தைக் கொடுப்பது” டங்கன் அவர்களைக் கேட்டார்.

“ என்னால் பணத்தை எண்ணிப் பார்க்கமுடியாது. ஜோனியால் திருப்தி என்று சொல்லமுடியாது. அதனால் பணத்தை ஜோசப்பிடம் கொடுங்கள். ஜேக்கப் சொன்னான்.

ஜேக்கப் பணத்தை வாங்கி, எண்ணிப்பார்த்தபின் “திருப்தி ஐயா. உங்கள் புது முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்”. என்றான்.

******

ஆறு மாதத்தில் “மூன்று கலைஞர்கள்” என்ற தலைப்போடு வெளிவந்த படம் சக்கைபோடு போட்டு நூறு நாட்களுக்கு மேல் தாண்டியது. அதைத் தொடர்ந்து பல இயக்குனர்களும், தயாரிப்ளர்களும் அவர்களைத் தேடிவந்தார்கள். அவர்களின் குடிசை வாழ்வு போய், சிறு வீடு ஒன்றை வாங்கி, மூவரும் அப்பு ஆச்சியோடு வாழத் தொடங்கினார்கள். அப்புவை கூலி வேலைக்குப் போக வேண்டாம் என்று மூவரும் கேட்டுக் கொண்டார்கள். தமக்கு வந்த செல்வத்தில் அவர்கள் முதலில் செய்த செயல், வலம் குறைந்த அனாதைச் சிறுவர்களைப் பராமரிக்கும் நிலையம் ஒன்றை “விடிவு விலாஸ்” என்ற பெயரில் உருவாக்கி, முப்பது சிறவர்களைப் பராமரிக்க, நடவடிக்கை எடுத்ததே. தங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தங்கள் உயிலில்,. தங்களின் மரணுத்துக்குப்பின் தங்கள் உடல்களை அருகருகே அடக்கம் செய்யவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள். கடைசி வரை அவர்கள் திருமணம் செய்யாத பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்தார்கள். அப்படித் திருமணம் செய்தால், தமக்கு வரும் மனைவிமார்கள், தம்மிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.

(யாவும் கற்பனையே)
******

Series Navigationஉன் கொலையும் என் இறப்பும்…இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *