கவி நுகர் பொழுது-9 அகிலா

This entry is part 12 of 17 in the series 18 செப்டம்பர் 2016

author

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும்.

நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் மிகுந்த பெரும் பரப்பைக் கொண்டிருக்கின்றனவெனலாம். சமகாலத்தின் வாழ்வியல் சூழல் கொடுக்கிற பல்வேறு பிரத்யேகமான அனுபவங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் என இதுகாறும் தமிழ்க்கவிதை எதிர் கொள்ளாத பல விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றன. இப்படியான, சமகாலத்தின் புறச்சூழலும் சம்பவங்களும் அனுபவங்களும் தரும் உந்துதல் ஒரு புறம் இருப்பினும் அவற்றை எழுதுகிற கவிமனம் நம்மின் மனத்துக்கு நெருக்கமாய், எந்நாளும் இருக்கிற இயற்கை, பறவைகள், மிருகங்கள் கவிதைகளின் முக்கியமான பொருண்மைகளாக அடையாளம் கொள்கின்றன.

பெரும்பாலும் சமகாலத்தின் கூறுகளைப் பேசும் போது இவையெல்லாம் தொன்மக்கூறுகளாகவும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் அமைகின்றன. ஏனெனில் அவை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல் சார்ந்தோ அல்லது அதற்கு நேரெதிரானதாகவோ கவிதைகளில் இடம் பெறுவதைப்பார்க்க முடியும்.

wrapper4

தேவதேவனின் பறவைகள் காய்த்த மரம் என்றொரு கவிதை.

இன்னொரு காலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்

அன்று பறவைகளால் காய்த்து

இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப் போல

சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை

வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ

மெய் சிலிர்த்து நின்றது அந்த மரம்.

இந்தக்கவிதை மரத்துக்கும் பறவைகளுக்குமான உறவை, இருப்பைப் பேசுவதாக அமைந்து, இரவில் பறவைகளால் காய்த்திருந்த மரம் சூரியனின் வருகையினால் பறவைகள் வானமெங்கும் ஆனந்தமாய்ப் பரவ மரம் சிலிர்த்து நிற்கிறது. அது தான் உறவின் உன்னதம்.

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

என்னும், தேவதச்சனின் கவிதை குருவிகளின் சப்தத்தை, நிசப்தத்திற்கும் சப்தத்திற்குமான உறவு, இடைவெளி கவனத்தினூடாக நிகழும் மாயம் என விரியும். இவ்விதமாய் நவீன கவிதைகள் பறவைகளை அசாத்தியமானப் படிமங்களாக,குறியீடுகளாக மாற்றியிருப்பதைக் காண முடியும்.

இவற்றை ஏன் இங்கே குறிப்பாக நினைவு கூர்கிறேனெனில், அகிலாவின், ‘மழையிடம் மௌனங்கள் இல்லை,’ தொகுப்பில் கணிசமாக பறவைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவரின் பறவைகள் குறியீடுகளாகவோ படிமங்களாகவோவன்றி, கவிமனத்தின் உடன் இருக்கின்றன. கண்ணெதிரே அமர்ந்திருக்கின்றன. இரையெடுக்கின்றன. பறந்து போகின்றன.மீண்டும் வந்து அமர்கின்றன.

 

நாரை,புலுனி,செம்போத்து,காகம்,குருவி,கிளி, அக்கா குருவியென.

விதைத்துவிட்டு திரும்புவதற்குள்

பசியென அவற்றைப் புசித்திருக்கும்

இந்த அதிகாலை குருவிகளிடம்

என்ன பேச?

வரிகளைக் கவனியுங்கள்.விதைத்த விதைகளைத் தின்ற பறவைகள் மீது கோபம் தானே வரும். அகிலாவின் கவி மனத்திற்கு வராது.

 

காக்கைக் குருவி எங்கள் சாதி

என்னும் கவிமனம் அது. அதனாலே தான் இந்த அதிகாலை குருவிகளிடம் என்ன பேச, என்று சமாதானமாகிறார்.காரணம் என்ன தெரியுமா? பசியென அவற்றைப் புசித்திருக்கும் அவைகளிடம் என்ன பேச முடியும். தன் பிள்ளை ஏதேனும் தவறிழைத்தால், ‘என்ன கேட்கச் சொல்றிங்க , செஞ்சுட்டான்/ள்

’, என்னும் தாயின் குரலாய் உணர முடியும்.

 

பறவைகள் தவிர்த்து மழை குறித்த கவிதைகள் மற்றும் சமூகம் சார் கவிதைகள் எனவும்.

மச்சுவீட்டில் அமர்ந்த மதப்பில்

மதிலின் மேல் கொட்டாங்குச்சி

மழை நீரை அதிகமாய்க் குடித்து

எட்டிப்பார்த்த நிலவைப் பிடித்து

சட்டென உள்ளே அடைத்தது

கெஞ்சிய நிலவை

போதையில் கொஞ்சியது

போராட்டமும் தள்ளாட்டமும்

மதிலின் விளிம்பில்

சற்றுபிடி தளர்ந்த பொழுது நீர் மண்ணுக்கும்

நிலவு விண்ணுக்குமாய்

\மதிலின் மேல் தனித்து

மீண்டும் மழைக்காய் கொட்டாங்குச்சி

நூலின் முதல் கவிதையிது.

ஒரு காட்சிச் சித்திரம். முற்றிலும் புனைவுக்காட்சியே. எதனை முன்வைத்து எழுதினார் என வாசக மனத்தினூடாக சிறு திறப்பைக் கண்டடைகிறேன். அது, ‘போதையில்’ என்னும் சொல்லே. இப்போது புனைவைப் பொருத்துவது இலகுவாக மட்டுமல்ல சுகமாகவும் இருக்கிறது. கவிமனம் இதற்கான புனைவாக எண்ணி எழுத முனைந்ததாவெனத் தெரியவில்லை.

’மச்சுவீட்டில்’, வசதியான சூழலில் மதிலென்னும் விளிம்பில் அதிகம் குடித்த கொட்டாங்குச்சி ஒரு கணத்தில் நிலவையே தன்னுள் அடைக்கும் சாத்தியம் பெற்றது.

போதையில் கொட்டாங்குச்சி கொஞ்ச,அடைபட்ட நிலவு கெஞ்சுகிறது, தப்பித்தலை முன்வைத்து.நிலவின் போராட்டமும் தள்ளாட்டமும் மதிலின் மேல் நடக்கிறது.ஒரு கட்டத்தில் பிடி தளர நிலவு தப்பித்து விண்ணுக்கு செல்கிறது.

கொட்டாங்குச்சி மீண்டும் மதிலின் மேல்.

நவீன கவிதையின் சிறப்பும் இதுதான் சிக்கலும் இதுதான்.ஒற்றைப் புனைவு வாசகனிடம் சற்றும் எதிர் பாராத இடங்களுக்கு இட்டுச் சென்றுவிடும் சாத்தியம் கொண்டது.

கிளிக்கூட்டமொன்று

நீல வானை

பச்சையாக்கிச் செல்கிறது

என்னும் போது வான் பரப்பெங்கும் கிளிக்கூட்டமென்னும் காட்சி விரிகிறது.பறவைகள் பறவைகளாகவே உடனிருப்பதும் மனம் நிறைப்பதுமாய் காணமுடிகிறது.

வானம் தொட்ட சிவந்த அரளிப்பூக்கள்

நிலவை இழுத்துவரும் பொழுதுகளிலெல்லாம்,

மல்லிகையின் மீது,

முதல் மழை

என அழகியல் பேசும் மழையும்.

மழையிடமிருந்து மறைக்கப் பிரயத்தனப் பட்டு,

முடியாமல், முழுதாய் நனைந்திருந்தது

அந்தவீடு

விடாத மழையும்

இருளுக்கு கண் கொடுத்து

இடுக்குகள் வழி உள்ளிறங்கியது

என இயலாமை உணர்த்தும் மழையும்,

வானவில்லை வாசலில்

விட்டுச் செல்லும் மழையிடம்

என்றுமே மௌனங்கள் இல்லை

என குணாம்சம் கொண்ட மழையும்,

பெருமழையாய் இருப்பின்

வீதி தொடும்முன், காற்றின் புகை கரைத்து

கசாயம் செய்கின்றன

வீதி தொட்டபின்,

கழிவுகளின் வாசம் சுமந்து

மணம் மாறுகின்றன

என நகரத்தை நரகமாய் மாற்றும் மழையும்.

 

மழை பற்றியும் பறவைகள் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளுக்கப்பால் சமூகம், பெண்மனம் , தொன்மம் அல்லது பழங்காலச் சடங்கு முறையென பலதரப்பட்ட பாடு பொருள்களைக் கொண்ட கவிதைகள் தொகுப்பில் கவனம் கொள்ளத்தக்கவையாய் உள்ளன.

 

அப்பா குறித்த கவிதை ஒன்று. மகள்களைப் பெற்ற அப்பாக்கள் கொடுத்து வைத்தவர்கள்..ஏனெனில்,

அவரைப் புரிந்து கொள்ள

பெண்மகவுக்கு

அவகாசம் வேண்டாம்

ஆண்பிள்ளைக்கோ

ஆண்டுகள் வேண்டும்

என்று அகிலாவின் வரிகள் சொல்வதால் மட்டுமல்ல: அது தவிர்த்து வாழ்வின் உதாரணங்கள் பலவும் காணக்கிடைக்கின்றன. அதைவிட, அகிலா போன்று கவித்துவ மனமும் மொழியும் கொண்ட மகள் அரிதான கொடுப்பினையென்றே சொல்வேன்.

இளம்பிறை ஒரு கவிதையில் தந்தைக்கும் மகளுக்குமான உரையாடலைப் பதிவு செய்திருப்பார்.வயல் வெளியில் நடந்து வரும் போது அப்பா வரப்பில் வழுக்கி விழ, மகள் கவலையுறுவாள். உடன் தந்தை தன் கையில் ஏற்பட்ட காயத்தை மறைத்துக் கொண்டு, ‘ஒண்ணுமில்ல தாயீ, நீ கவலைப்படாதே,” என மகளுக்கு ஆறுதல் சொல்வார்.அடிபட்டவர் அப்பா. ஆறுதல் மகளுக்கு.

 

லீனா மணிமேகலை, தன் முதல் தொகுப்பான, ‘ஒற்றையிலையென’, நூலில் உள்ள தந்தை குறித்த கவிதையில், மரணமுற்றுக் கிடத்தப்பட்டிருக்கும் தந்தை குறித்து, ‘அவரைப் பிணம் என்று சொல்லாதீர்கள். அவர் மீது தீ மூட்டாதீர்கள். வெந்நீரின் அதிக சூடு கூடத் தாங்க மாட்டார் ‘, என்னும் பொருள் பட எழுதியிருப்பார்.

அகிலா, தன் கவிதையில் தந்தை குறித்து எழுதுகையில்,

பார்வைகளை

மொழிகளாக்குபவர்கள்

மௌனங்களை

வார்த்தைகளாக்குபவர்கள்

புன்னகையை

சிரிப்பாக்க யோசிப்பவர்கள்

பெற்ற மகவை

பொறுப்பின் கனமாய் உணர்பவர்கள்

என்கிறார். இது தந்தை பற்றிய பாச மொழியன்று. பேசத்தெரியாதவர்கள்; அன்பை பார்வைகளோடு புதைத்து விடுபவர்கள்;புன்னகையை சிரிப்பாகக் கூட மாற்றாமல் மாற்றத் தெரியாமல் இருப்பவர்கள் ; பொறுப்பின் கனம் சுமப்பவர்கள்; தந்தை பற்றிய முதிர்ந்த பார்வை.

 

‘பிணம் தழுவுதல்’ என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்துள்ள சடங்கு என்று கூறப்படுகிறது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்களாம். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தைத் தழுவி வர (உடலுறவு கொள்ள) வேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்களாம். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை. மலைநாட்டில் இவ்வழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படியான ஓர் தொன்ம வழக்கம் குறித்த பதிவாக மட்டுமல்லாது மீள் பார்வைக்கும் அகிலா உட்படுத்துவது சிறப்பு.அநேகமாக ‘பிணம் தழுவுதல்’ குறித்த நான் படித்தகவிதை இதுதான்.

கல்லறை உடைத்து, வெளியிழுத்து போடப்பட்டது

உயிரற்ற முகம் வெளுத்த அந்த உடல்

ஒடிந்துவிடும் தேகம் கொண்ட அவனை

அங்கேயே விட்டு நகர்கிறது மனித வாசம்

 

மரித்த பெண்ணை உறவுகொள்ளச் சொல்லும் மனிதர்கள் விலகிப்போவதை, நகர்கிறது மனித வாசம். மனித வாசம் கூட இல்லாது அற்றுப் போவது எத்தனை கொடுமை.    எல்லாம் முடிந்தபின் கவிதை இப்படி முடிகிறது.

இசைப்பதை மறந்த பறவையொன்று

சடசடவென சிறகடித்துப் பறக்கிறது

பீத்தோவானின் கல்லறையை நோக்கி

பல் கவிதைகளில் பறவைகளோடு வாழ்பவர், நெஞ்சம் நெகிழும் நிகழ்வின் பின் பறவையைப் படிமமாக்குகிறார்.

பெரிதாய் என்ன பேசிவிடப் போகிறாய்

சாப்பிட்டாயா தூங்கினாயா என்பதான

அனர்த்தமான சொற்களைத் தவிர

என்னும் போது அர்த்தமான உரையாடலாக கவிதையின் முற்பகுதியில் குறிப்பிடும் உரையாடலுக்குத் தகுதியான பொருள்களாய்ச் சொல்பனவற்றைப் பார்க்கும் போது சமூகத்தின் மேலுள்ள அக்கறை வெளிப்படும்.

சில இடங்களில் எளிய அதேசமயம் குறிப்பிடத்தக்க உவமைகளைக்காண முடிகிறது.

 

கூடலின் பொழுதொன்றில்

கழற்றப்பட்டு கிடந்தன

ஆடைகளாய் அவை

***** ***** *****

இரவலுக்கு குரலை வாங்கிக் கொண்டு

மேடை கட்டி ஆடுகிற

பெண்ணைப்போல

***** ***** ****

உறைந்து போன பெண் இதயம்

சம்பாஷனையற்ற திண்ணையாய் வறண்டிருக்கிறது

போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.

 

அகிலாவின் கவிதைகள் தமக்கென மெல்லிய நடையொழுங்கையும் அரிதான விஷயங்களையும் அதிர்ந்து பேசாமல் அதே சமயம் அழுத்தம் குறையாத தன்மையையும் கொண்டிருக்கின்றன. பெண்ணியம் குறித்தான இன்றைய படைப்புகளின் ஒப்பீட்டளவில் சொல் முறையில் தீவிரம் மட்டுப் பட்டதாகத் தோன்றலாம். அது தோற்றம் தான். சரியானவற்றைப் பேசுகிறார் என்பது தான் கவனம் கொள்ளத்தக்க ஒன்றாம். தொனி, மொழி, முறைமையெல்லாம் படைப்பாளியின் பிரத்யேக உரிமை.

 

எனக்கு இணக்கமான பல கவிதைகளைப் படிக்கிற வாய்ப்பை இத்தொகுப்பு வழங்கியது என்பதைப் பதிவு செய்வதென் கடமை. வடிவம் சார்ந்தும் சற்று இறுக்கம் கூடியும் எதிர் நாளில் தேவையின் பாற்பட்டு, செய்வது அவருக்குச் சிரமம் இருக்காது. தொடர்ந்து இலக்கியத்தில் இயங்கும் போதான படிநிலைகள் யாவர்க்குமானது. உயரம் எட்ட என் வாழ்த்துகள்.

Series Navigationகைப்பிடிச் சோறுகேள்வியும் பதிலும்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *