திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

author
0 minutes, 11 seconds Read
This entry is part 2 of 17 in the series 18 செப்டம்பர் 2016

86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி

poopathy-mrmrs-indra-parthasarathy

முருகபூபதி – அவுஸ்திரேலியா

அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை
எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து
தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை.

லண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன்.

அதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன்

உரையாடினேன்.

அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில்

சமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் ஐயர் சென்னையில் காலமாகிவிட்ட எனக்குத்தெரியாத தகவலும்

தந்தார்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்தில் எம்முடன் பயணித்த பலரும் விடைபெறுவது

இயல்புதான்.

பத்மநாப ஐயரை நன்கு தெரிந்த தமிழகத்தில் வதியும் எங்கள் மூத்த படைப்பாளி இந்திராபார்த்தசாரதியும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தார். தமக்கு 86 வயதாகிவிட்டதாகவும்,

தொடர்ந்தும் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்குவதாக அவர் எழுதியிருந்தார்.

அந்த வார்த்தைகள் எனக்கு வியப்பூட்டின. பல எழுத்தாளர்கள் படைப்பு இலக்கியத்திலிலிருந்து ஒதுங்கி, முகநூல் குறிப்பாளர்களாக நோண்டிக்கொண்டிருக்கும் சூழலில் 86 வயதிலும் இந்திரா பார்த்தசாரதி எழுதுவதும் இயங்குவதும் எமக்கு முன்மாதிரியானது.

அவர் பற்றிய இந்தப்பதிவை மீண்டும் வாசகர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்குவது பொருத்தமானது.

— — — — — — — — — — — — — — — — –

2

புகலிடத்துக்கு (அவுஸ்திரேலியா)   வந்து   கால் நூற்றாண்டுகாலத்தின் பின்னர்    எனக்கு   ஒரு உண்மை  தெரிந்தது.   தாயகத்தின் போர்  அநர்த்தங்களினால்   அதிலிருந்து தப்பிவந்தவர்கள், ஓடி ஓடி உழைத்து தேட்டங்கள்   தேடினார்கள்.   பிள்ளைகளை  படிக்கவைத்து  பட்டங்கள் பெறுவதற்கும்  தொழில்  வாய்ப்பு பெறுவதற்கும் கடினமாகப் பாடுபட்டார்கள்.

ஊரிலிருக்கும் உறவுகளுக்கும் உதவினார்கள். கார்,   வாகனங்கள், வீடுகள் என்று சகல சௌகரியங்களும்     பெற்றார்கள்.   விடுமுறை   காலங்களில்  விமானங்களில் உலகை   வலம்  வந்தார்கள்.

விருந்துகளிலும்   ஒன்றுகூடல்களிலும்    குதூகலமாக பொழுதை   கழித்தார்கள்.  அதே
நேரம் ஓடி   ஓடி இயந்திர கதியில்   உழைத்தார்கள். எல்லாம் இருந்தும் எதனையோ
இழந்துவிட்ட சோகம்  அவர்களை வாட்டிக்கொண்டுதான்   இருக்கிறது.

இழந்தது என்ன?  மகிழ்ச்சியா…?   ஓய்வா…? நட்புகளா…?  உறவுகளா…?  வாழ்க்கையா…? எல்லாம்  தேடிவிட்டு    மகிழ்ச்சியைத் தொலைத்தவர்கள் நம்மில்  எத்தனைபேர்…..?  அவ்வாறு தனது மகிழ்ச்சியையும் ஆத்மாவையும் தொலைத்த ஒரு பாத்திரத்தை இந்திரா பார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலில் 1970  களில்  படித்தேன். அதனை நினைத்துப்பார்க்கின்ற   வேளையில்  புகலிடத்தில் தமது மகிழ்ச்சியை   தொலைப்பவர்கள்  பற்றியும்  நினைக்கத்தோன்றுகிறது. இந்த   நாவலை எனக்கு  படிக்கத்தந்தவர்   ஈழத்தின் மூத்த மலையக   இலக்கியவாதி   தெளிவத்தை  ஜோசப்.

தந்திரபூமிக்கு   முன்னுரை வழங்கியிருந்தவர் சுஜாதா.

தந்திரபூமி நாவலில் பிரதான பாத்திரம்   கஸ்தூரி.   அவன் ஒரு  அறிவுஜீவி. அரசியலிலோ இலக்கியத்திலோ சமூகவியலிலோ  அல்ல.   வர்த்தகத்துறையில். மகா புத்திசாலி.

வர்த்தகத்தின்  நெளிவு  சுழிவுகள் அவனுக்கு  அத்துப்படி.   அவனது திறமை புத்திக்கூர்மை   அனைத்தும்   கடின  உழைப்பினால்  அவனுக்கு  கிடைத்த  வரம்.   ஆனால்  அந்த  அற்புதமான  வரம்   முதலாளித்துவ  சக்திகளினால்  அவனறியாமலே   சுரண்டப்படுகிறது.     அந்த

உண்மையை   அறிந்துகொள்ளும்பொழுது  அவன்  களைத்துவிடுகிறான்.  ஒரு   தேர்ந்த   consultant ஆக    எப்பொழுதும்   பிஸினஸ் பிஸினஸ், தரகு  வேலை   என்று   ஓடித்திரிபவன்,   ஒரு  கட்டத்தில்  தனது  காதலி   மீனாவையும்   புறக்கணித்துவிட்டு   முதலாளித்துவ சக்திகளுடனேயே  ஐக்கியமாகிவிடுகிறான்.

தனது  உழைப்பு  நீண்டகாலமாக   சுரண்டப்படுகிறது   என்பதை  அறிந்தவுடன்  அலுத்துச்சலித்து   அந்த   வர்த்தக  மோசடி  உலகத்திலிருந்து  முற்றாக  வெளியேறி  கையில்  ஏதுமற்ற  நிலையில்  விரக்தியுடன்  மீனாவைத்   தேடி  வருகிறான்.

உச்சத்திலிருந்தபோது   நட்சத்திர   அந்தஸ்து   பெற்ற   உல்லாச ஹோட்டல்களில்  தங்கி   உயர்ந்தரக  விருந்துண்டவன்  இறுதியில்  மீனாவிடம்   வந்து  தனக்கு  பசிக்கிறது.  தனக்காக   ஏதும் சமைக்க   முடியுமா?  எனக்கேட்கிறான்.

3

அங்கே  தரையில்  அயல்வீட்டுக்குழந்தை  ஒன்று   எந்தக்கவலையுமற்று  ஆனந்தமாக  உறங்கிக்கொண்டிருக்கிறது

அந்தக்குழந்தையை  வைத்தகண்வாங்காமல்  பார்க்கிறான்.

ஒரு  காலத்தில்   தானும்  அப்படிக்   குழந்தையாகத்தானே இருந்திருப்பேன்  என  நினைக்கின்றான்.

அத்துடன்   நாவல்  முடிகிறது.  ஆனால்   வாசகர்களாகிய  எம்மிடம்  வாழ்க்கை  பற்றியதேடல்  அந்த   முடிவிலிருந்து   ஆரம்பமாகிறது.

சுஜாதா   தமது   முன்னுரையில்   கஸ்தூரியின்  வீழ்ச்சியை  ஜூலிய  சீசரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பிட்டிருந்தார்.

அந்த  நாவலைத்தொடர்ந்து  இந்திரா  பார்த்தசாரதியின்   படைப்புகளை  தொடர்ந்து  படித்தேன்.  படித்துவருகின்றேன்.

மனிததெய்வங்கள்,    காலவெள்ளம்,      வெந்துதணிந்த   காடுகள்,  ஹெலிகாப்டர்கள்   கிழே    இறங்கிவிட்டன.   சுதந்திரபூமி,  குருதிப்புனல் உச்சிவெய்யிலில்,     ஏசுவின்   தோழர்கள்,   மாயமான்வேட்டை   மற்றும்  சிறுகதைகள்,   கட்டுரைகள்   பலவற்றை    படித்திருக்கின்றேன்.

சுதந்திரபூமி   இந்திய   அரசியலை   அங்கதச்சுவையுடன்   சித்திரித்த  மற்றுமொரு  நாவல்.  ஒரு  வடநாட்டு  பெரிய  அரசியல்  தலைவரது   வீட்டில்  சுவையான   காப்பி  தயாரித்துத்தரும்    பணியாளனாக     நுழையும்  முகுந்தன்   எவ்வாறு  பின்னர்  பெரிய   அரசியல்வாதியாகின்றான் என்பதே   நாவலின்   கதை.

இ.பா. குறிப்பிட்ட   முகுந்தன்    பாத்திரத்தை    வார்த்திருந்த  பாங்கு என்னை   மிகவும்   கவர்ந்தமையால்   எனக்கு  ஆண்குழந்தை  பிறந்தால்  அந்தப்பெயரைச்சூட்டுவதற்கு    விரும்பினேன்.  ஆனால்   அடுத்தடுத்து   பெண்குழந்தைகள்   பிறந்தமையால்   அதற்கான  சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.   எனினும்    எனது    தங்கைக்கு  ஆண்குழந்தை  பிறந்ததும்  முகுந்தன்   என்ற   பெயரை  வைத்தேன்.

பல  வருடங்களின்  பின்னர்   எனக்கு   மகன்  பிறந்தவுடன்  அவனுக்கும்  முகுந்தன்   எனப்பெயர்   சூட்டினேன்.  அதனால்   எங்கள்  குடும்பத்தில்  இரண்டு முகுந்தன்கள்   இருக்கிறார்கள்.

எனது  மகன்   தனது   நான்கு  வயதில்  இந்திராபார்த்தசாரதியுடன்  பேசிச்சிரித்து   விளையாடுவான்     என்று   நான் கனவிலும்   நினைத்திருக்கவில்லை.    எதிர்பாராத   மகிழ்ச்சியான   தருணங்கள்  அவை.

அவர்   அவுஸ்திரேலியா   வந்து  மெல்பனில்  எமதில்லத்தில்   இரண்டு  நாட்கள்  தங்கியிருந்தபொழுது   அவரிடம்  எனது  மகனுக்கு

முகுந்தன்    பெயர்   வந்த   கதையைசொன்னபொழுது    ஆச்சரியப்பட்டார்.

அமெரிக்காவில்    டெக்சாஸ்   மாநிலத்தில்  வசிக்கும்   அவரது   மூத்த  மகனின்  பெயரும்    முகுந்தன்   என்ற   தகவலை  அவர்  சொன்னார்.

எங்களை    நண்பர்களாக்கியவர்  தமிழகத்தின்  பிரபல  எழுத்தாளர் அகிலனின்  மகன்  கண்ணன். எனது  இரண்டாவது   கதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலை  வெளியிட்டது  அகிலன்  கண்ணனின்
தமிழ்ப்புத்தகாலயம்

மெல்பன்  சகோதரி   அருண்.விஜயராணியின்   முதலாவது   கதைத்தொகுதி  கன்னிகா தானங்கள்   நூலை   பதிப்பிப்பதற்காக   1990 இல்  சென்னை திருவல்லிக்கேணியில்  அமைந்த  தமிழ்ப்புத்தகாலயத்திற்குச்சென்றிருந்தேன்.

பாண்டிச்சேரிக்கு   புறப்படும்  வேளையில்   அங்கு   வந்திருந்த  இந்திரா  பார்த்தசாரதி  தம்பதியரை  அகிலன்  கண்ணன்   எனக்கு அறிமுகப்படுத்தினார்.   அச்சமயம்   பாண்டிச்சேரியில்    ஒரு  கல்லூரியில்   பேராசிரியரக  அவர்   பணியிலிருந்தார்.    அவர்   புறப்படும்  அவசரத்திலிருந்தமையால்  சில  நிமிடங்கள்தான்  உரையாடமுடிந்தது.

தனது  மகள்  சிட்னியில்  இருக்கும்   தகவலை   அப்பொழுது   சொன்னார்.

நானும்  சில  நாட்களில்  அவுஸ்திரேலியா  திரும்பிவிட்டேன்.

இலங்கையிலிருந்த   காலத்தில்  தமிழ்நாடு  வாசகர்  வட்டம்  வெளியிட்ட அறுசுவை  குறுநாவல்களின்   தொகுப்பில்   இ.பா.வின்    உச்சிவெய்யில்    நாவலை  படித்திருக்கிறேன்.  குறிப்பிட்ட   கதையின்  திரைவடிவமே  சிவகுமார்  ஜெயபாரதி   ராதா   நடித்த  சேதுமாதவனின்   இயக்கத்தில்  வெளியான  மறுபக்கம்.

தஞ்சையில்   கீழ்வெண்மணி  என்ற  விவசாயக்கிராமத்தில்  1968  இல் இரண்டு  கர்ப்பிணித்தாய்மார்   உட்பட  20  பெண்கள் 19   சிறுவர்கள் 5 ஆண்கள்  ஒரு நிலச்சுவாந்தரின்   அடியாட்களினால்  தீயிட்டு  கொளுத்தப்பட்ட  சம்பவம்  அக்காலப்பகுதியில்   பிரபல்யமான   கொடூர   நிகழ்வு.

இதனைப்பின்னணியாகக்கொண்டு  இ.பா. எழுதிய   நவீனம்   குருதிப்புனல்.

இதனைத்தழுவி  ஸ்ரீதர்ராஜன் (நடிகர்  ஜெமினிகணேசனின்  மருமகன்)  கண்  சிவந்தால்   மண்  சிவக்கும்  என்ற  திரைப்படத்தை  இ.பா.வின்  அனுமதியின்றியே  எடுத்திருக்கிறார்.   அத்துடன்   இ.பா.வின்    நந்தன்கதை   நாடகத்தையும்  அத்திரைப்படத்தில் புகுத்தியிருக்கிறார்.  படம்   வெளியான   பின்னர்தான்  இந்த  உண்மைகள்  இ.பா.வுக்கு   தெரியவந்தன.

இந்திய   அரசியலை  அங்கதச்சுவையுடன்   விவரிக்கும்     சுதந்திரபூமி    நாவலின் முன்னுரையை   அவர்     மிகவும்  இரத்தினச்சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

இ.பா. டெல்லியில்  நடந்த  காந்தி  நூற்றாண்டு  விழாவுக்கு  தனது பெண்குழந்தையுடன்  சென்றார்.   அங்கே  ஒரு   மத்திய அமைச்சர்  மெய்ப்பாதுகாவலர்கள்   புடைசூழ   வருகிறார்.  இ.பா.வின்  குழந்தை  அமைச்சர்  நடந்துவரும்  பாதையில்  குறுக்கே  சென்றுவிடுகிறது.   உடனே
மெய்ப்பாதுகாவலர்கள்    குழந்தையை   அதட்டி   விரட்டுகின்றனர்.  உடனே இ.பா   கோபத்துடன்,  “அமைச்சரின்  பாதுகாப்புக்கு   இந்தக்குழந்தை  அச்சுறுத்தலா?”   என்று   கேட்டுவிடுகிறார்.

மெய்ப்பாதுகாவலர்கள் இ.பா.வை   ஏசுகின்றனர்.   அமைச்சர்   ஏதும்  அறியாதவர்  போன்று   அந்தக்குழந்தையை  உடனே  தூக்கி  கொஞ்சிவிட்டுப்போகிறார்.

5

“அமைச்சர்   அவ்வாறு   செய்ததன்  மூலம்   அங்கிருந்த அனைவரையுமே  முட்டாள்களாக்கிவிட்டுப்போனார்.   இப்படித்தான்  சுதந்திரம்  பெற்ற   காலம்   முதல்   நாமெல்லோரும்    முட்டாள்களாகிக்கொண்டிருக்கிறோம். இனி நாவலைப்படியுங்கள்…”  என்று  அந்த   சுருக்கமான   முன்னுரையை முடித்திருந்தார்.

இவ்வாறு  நான்   பெரிதும்  ரசித்து   உள்வாங்கிக்கொண்ட  சமாச்சாரங்கள்  நிறைந்த   படைப்புகளை  எழுதிய  இந்திரா  பார்த்தசாரதியுடன் அன்று   சென்னை திருவல்லிக்கேணி   தமிழ்ப்புத்தகாலயத்தில்  நீண்ட   நேரம் பேசுவதற்கு   சந்தர்ப்பம்   கிடைக்கவில்லையே  என்ற    கவலையுடன்  இருந்த எனக்கு   அதன்   பின்னர்  அவருடன்  நீண்ட  பொழுதுகள்   உரையாடும்
சந்தர்ப்பம்  கிடைத்ததை  பெருமையாகவே  கருதுகின்றேன்.

அவர்   சிட்னியில்   தமது  மகளிடம்   வந்திருக்கும்  தகவல்  அறிந்தவுடன்  தொடர்புகொண்டு   சிட்னி  முகவரியை   பெற்றுக்கொண்டு,  1990   இல் சென்னை  தமிழ்ப்புத்தகாலயத்தில்   நாம்   எடுத்துக்கொண்ட  ஒளிப்படத்தின் பிரதியை   அனுப்பிவைத்தேன்.

அவர்   அதனை  எதிர்பார்த்திருக்கவில்லை.  அந்தப்படம்     உணர்வுபூர்வமானது  என்பதை   பின்னர்தான்    நான்  புரிந்துகொள்ள   நேரிட்டது.

எனது   கடிதமும்   குறிப்பிட்ட  படமும்   கிடைத்ததும்   இந்திரா பார்த்தசாரதி

என்னுடன்   தொடர்புகொண்டு     அதிர்ச்சியும்   கவலையும்  தரும்

தகவலைச்சொன்னார்.

அந்தப்படத்தில்  இருக்கும்   அவரது   மனைவி  தற்பொழுது   உயிருடன்  இல்லை என்றார்.

தமிழ்நாட்டில்   எழுத்துலகில்   இரண்டு பார்த்தசாரதிகள்   சமகாலத்தில் அறிமுகமாகியிருந்தனர்.

ஒருவர்  தீபம்   இதழின்  ஆசிரியர்   சிறுகதை,  நாவல்   படைப்பாளி  நா.பார்த்தசாரதி. இவருக்கு   மணிவண்ணன்   என்றும்  புனைபெயர்  இருந்தது.

மற்றவர்  இந்திரா  பார்த்தசாரதி.

இந்தப்பத்தியில்   நான்   குறிப்பிடும்  பார்த்தசாரதியின்அன்புத்துணைவியார்   ஒருசமயம்   உடல்நலக்குறைவினால்   பல  நாட்கள் மருத்துவமனையிலிருந்தார்.   அவர்   அருகேயிருந்து   கவனித்துக்கொண்ட கணவர்  பார்த்தசாரதி  குறிப்பிட்ட  மருத்துவமனையில் மனைவியின்  அருகாமையிலிருந்தவாறு    நிறைய   வாசித்தார்.

படைப்பிலக்கியமும்   எழுதினார்.

அவ்வாறு   எழுதுவதற்கு   ஏதோ  ஒருவகையில் தூண்டுதலாக  இருந்த  மனைவிக்கு  நன்றி  தெரிவிக்கும் எண்ணத்துடன்  மனைவியின்   பெயரை (இந்திரா) முன்னால்  இணைத்து இதழ்களில்  எழுதிவரலானார்.

படைப்பிலக்கிய   உலகில்   இந்த   பார்த்தசாரதிக்கு  பெயரையும்  புகழையும் பெற்றுக்கொடுத்த   இந்திரா  அம்மையார்   உயிருடன்  இல்லை   என்ற தகவலை   அவர்   என்னிடம்  பகிர்ந்துகொண்டதுடன்    எனது அழைப்பையும்  ஏற்று  மெல்பனுக்கு  வருகைதந்தார்.     மனைவி விடைபெற்றதும்   நாடோடியாக   அலைகின்றேன்   என   அவர் சொன்னபொழுது    நெகிழ்ந்துபோனேன்.

எனது   வேண்டுகோளை   ஏற்று,   சிட்னியில்  இ.பா.வை  நேரில்   சந்தித்த நண்பர்  பாஸ்கரன் அவரை   என்னிடம்   அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை   மேற்கொண்டார்.

மெல்பன்  வை. டபிள்யூ. சி.ஏ. மண்டபத்தில்   அவருடனான  இலக்கியச்சந்திப்புக்கு  ஒழுங்கு செய்திருந்தேன்.   கணிசமான   அன்பர்கள்   வருகை  தந்திருந்தனர். நீண்ட  நேரம்  கலந்துரையாடல்  நடைபெற்றது. அவரது   எழுத்துக்கள்   நாடகங்கள்    பற்றியெல்லாம் பேசினோம்.

தமது  மழை   நாடகம்  பற்றி  அவர்  சொன்னபொழுது,  “அந்த  நாடகம் தமிழ்  நாட்டில்  பல   தடவைகள்   மேடையேற்றப்பட்டுவிட்டதாகவும் அதில்   குறிப்பிடத்தக்க  சுவாரஸ்யம்   என்னவென்றால்  மழையில் நடித்தவர்கள்   அதன்  பின்னர்   காதலித்து  திருமணம்  முடித்துக்கொண்டு இல்லறத்தில்  ஈடுபட்டார்கள்  என்பதுதான்”  என்றார்.

உடனே,   இலங்கையிலும்  அதுதான்  நடந்தது  என்றேன்.

அவர்   அப்படியா?   என்று  கேட்டு   என்னை ஏறெடுத்துப்பார்த்தார்.

இலங்கையில்  வானொலியில்   மழை  நாடகம் ஒலிபரப்பப்பட்டமை  பின்னர்   அவைக்காற்று  கலைக்கழகத்தினரால் மழை  பலதடவைகள்   மேடையேற்றப்பட்டமை அதில்  நடித்த பாலேந்திராவும்  ஆனந்தராணியும்   தம்பதிகளானமை தகவல்களைச்சொன்னேன்.

இந்திரா  பார்த்தசாரதி   இந்தப்புதிய   தகவல்களினால்   மேலும்   மேலும் ஆச்சரியப்பட்டார்.

தமது   மழை  நாடகம்  இலங்கையில்  மேடையேற்றப்பட்ட  தகவல் தனக்கு  இப்பொழுதுதான்  தெரியும்   என்று  சொன்னவேளையில்தான், இயக்குனர்   ஸ்ரீதர்ராஜன்  என்பவர்   தனது   குருதிப்புனல் நாவலைத்தழுவி    தமது  அனுமதி   இல்லாமல்  கண்சிவந்தால்   மண் சிவக்கும்   என்ற   திரைப்படத்தை  எடுத்திருப்பதாகவும்   அதில்   தமது நந்தன்கதை  நாடகத்தையும்  இடைச்செருகலாக  இணைத்திருப்பதாகவும்  தாம் அறிந்ததாகச்சொன்னார்.

இ.பா   அவர்களிடம்   கேட்டுத்தெரிந்துகொள்வதற்கு   நிறையத்தகவல்கள்  இருந்தன.

எங்கள்  வீட்டில்   தங்கியிருந்த  நாட்களில்  அவருடைய  விரிவான நேர்காணலை  பதிவுசெய்தேன்.

மெல்பன்   இலக்கியச்சந்திப்பிற்கு   செல்லும்பொழுது   நல்ல  வெய்யில்.

உச்சிவெய்யிலில்   போகிறோம்   என்று   சொல்லிவிட்டு   அர்த்தம்பொதிந்த

சிரிப்பை   உதிரவிட்டார்.

7

இரண்டு    நாட்கள்  கழித்து   அவரை  ஒரு  காலை   வேளையில்  சிட்னிக்கு வழியனுப்ப    உடன்சென்றபொழுது    அடைமழை    பெய்தது.

நேற்று   உச்சிவெய்யிலில்    காய்ந்தோம்   இன்று   அடைமழையில் நனைகின்றோம்   என்றார்.

உச்சிவெய்யிலில்,    மழை    என்பன   அவருடைய   படைப்புகளின் தலைப்புகள்.  மெல்பனின்    பருவகாலத்தை   வியந்தார்.

உங்களுடைய  பாத்திரங்கள்  பல்வேறு   குணவியல்புகள் கொண்டிருப்பதுபோன்று   எங்கள்  மெல்பன்  பருவகாலமும்  பல்வேறு இயல்புகளை    கொண்டது    என்றேன். (மெல்பனில்  தினமும்  நான்கு பருவகாலங்கள்)

அவருடனான    நேர்காணல்கள்   மெல்பனில்    மரபு  இதழிலும்  பிரான்ஸில் வெளியான  பாரிஸ்  ஈழநாட்டிலும்     வெளியாகின.   அவுஸ்திரேலியா  முரசுவிலும் அவரைப்பற்றிய   கட்டுரையை   எழுதியிருக்கின்றேன்.    அவருடனான நேர்காணல்   பின்னர்   1998  இல்   வெளியான    எனது   சந்திப்பு   நூலில்இடம்பெற்றுள்ளது.

பாரிஸ்  ஈழநாடுவில்   வெளியான    நேர்காணலை   பார்த்த   பாலேந்திரா, உடனடியாகவே     ஈழநாடு   ஆசிரியர்    நண்பர்  குகநாதனுடன் தொடர்புகொண்டு   எனது  தொலைபேசி   இலக்கம்     பெற்று    என்னுடன் உரையாடினார்.

தாம்    மேடையேற்றிவரும்  மழை  நாடகம்   பற்றி இந்திராபார்த்தசாரதியுடன்  உரையாடுவதற்கு   அவரது  தொலைபேசி  இலக்கம் தேவைப்படுவதாகச்சொன்னார்.   சென்னை    இலக்கங்களைச்சொன்னேன்.

பாலேந்திரா,    இ.பா.வுடன்  தொடர்புகொண்டதுடன்,  அமெரிக்காவுக்கு  அவர் மகனிடம்   சென்றசமயம்     ஐரோப்பிய   நாடுகளுக்கு   அழைத்து   அவரது முன்னிலையில்  மழை    நாடகத்தை     மேடையேற்றினார்.

பின்னர்    இ.பா.வின்   80  ஆவது  பிறந்த  நாளை முன்னிட்டு   சென்னையில் நடந்த  நிகழ்வொன்றிலும்  அவரது  முன்னிலையில்   பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியர்  மழை  நாடகத்தை  மீண்டும்   மேடையேற்றினார்கள்.

கலை,  இலக்கிய  உலகில்  தொடர்பாடல்   என்பது   இன்றியமையாதது  என்பதை சுட்டிக்காண்பிப்பதற்காகவே    மேற்படி    தகவல்களை    இங்கு   பதிவுசெய்கின்றேன்.

ஒரு     நாட்டுக்கு   வெளியிலிருந்து     ஒரு   படைப்பாளி   வந்திருக்கும் தகவல்  தெரிந்தும்,   தெரியாதவர்களுக்கு     தெரியப்படுத்தாமல்   மறைத்து இருட்டடிப்புச்செய்யும்      தாழ்வுச்சிக்கல்கள்    மலிந்துபோன    கலை,  இலக்கிய உலகத்தில்     தொடர்பாடலின்      முக்கியத்துவத்தை     உணர்த்துவதற்காகவும் இந்தத்தகவல்கள்     பயன்படட்டும்.

மழை  நாடகத்தை  ஐரோப்பாவில்   கண்டு  களித்த   இந்திரா  பார்த்தசாரதி, நான்றாகச்செய்கிறார்கள்   என்ற   தமது   கருத்தை  எனக்கு   எழுதியிருந்தார். சந்திப்பு   நேர்காணல்   தொகுப்பில்   இக்குறிப்பினையும்   இணைத்திருந்தேன். இலங்கைக்கு   சமீபத்தில்   சென்றிருந்த  பாலேந்திரா –  ஆனந்தராணி தம்பதியினரும்  இ.பா.வின்      முன்னிலையில்    மழை  நாடகத்தை   ஐரோப்பாவிலும் சென்னையிலும்  மேடையேற்றிய     தகவல்களை   சமீபத்தில்     நேத்திரா தொலைக்காட்சிக்கு   வழங்கியிருந்த   பேட்டியில்   குறிப்பிட்டிருக்கிறார்கள்

எனக்கு  இ.பா.  அவர்கள்   1990   களில்  வழங்கிய  நேர்காணலில்   ஒரு கருத்தை    வலியுறுத்திச்சொன்னார்.

“தமிழர்களுக்கு    உலக    அங்கீகாரம்     வேண்டும்.   ஈழத்தமிழர்களினாலேயே அது     சாத்தியம்.”

இந்தக்கருத்து      இலங்கையில்     முடிந்த    போருக்குப்பின்னர்தான்     உலகடங்கிலும் பேசுபொருளாகியிருக்கிறது.   ஆனால்   சுமார்   இருபது  ஆண்டுகளுக்கு     முன்பே இந்திராபார்த்தசாரதி      தீர்க்கதரிசனமாகவே  இக்கருத்தை     முன்மொழிந்தார்.

இவர்   டெல்லியில்    பேராசிரியராக  பணியாற்றிய  காலத்தில்   இவரது குருதிப்புனல்  நாவலுக்கு   சாகித்திய    அகடாமி     விருது     கிடைத்தது.

அதனைப்பொறுக்கமுடியாத     பிராமணர்களிடம்     வெறுப்பை     உமிழும்   ஒரு தமிழுணர்வு     பேராசிரியர்       “இந்திரா  பார்த்தசாரதியின்  நூலுக்கு     விருது கொடுக்காவிட்டாலும்     அவர் அணிந்துள்ள     பூநூலுக்கு    கொடுத்திருப்பார்கள்.”       என்று சொன்னாராம்.

இத்தகவலை  இ.பா.   மெல்பனில்   என்னிடம்    சொல்லும்பொழுது, “  தான் பூநூல்  அணிவதில்லை.”   என்றார்.

இ.பா.  தமது   படைப்புகளில்     பாத்திரங்களின்  உளவியலை   அழகாகசித்தி ரிப்பார். அவரது   சிறுகதைகள்,   நாவல்கள்,  நாடகங்களில்  வாசகரின் சிந்தனையில்   உளவியல்தான்  ஊடுறுவும்.   இதுபற்றி   அவரிடம் கேட்டபொழுது,

“ஒவ்வோர்    எழுத்தாளனும்   அவன்,    பாரம்பரியக்கரு,   கல்வி,   வளர்ந்த  சூழ்நிலை ஆகியவற்றில்  உருவாக்கப்படுகின்றான்.    உளவியல்   அடிப்படையில் எதையும்    நோக்குவதென்பது   என்  இயல்பாக  அமைந்துவிட்டதென்றுதான் சொல்லவேண்டும்.     உளவியல்     நூல்களை    என்னை   படிக்கத்தூண்டியது  எது? இயற்கை    உந்துதல்தான்.    இவ்வியற்கை  உந்துதலுக்கு  காரணம் பாரம்பரியக்  கருதான் (Genetic Make-up)   என்பது  என்  அனுமானம்.”   என்று சொன்னார்.

அன்று    அவர்    மெல்பனில்   எங்கள்  வீட்டில்   நின்ற  சமயம்   எனது மகன் முகுந்தன்    அக்காமாருடன்  (இளம்பருவச்சண்டை)  சச்சரவில் ஈடுபட்டுவிட்டு  அழுதுகொண்டு   என்னிடம்   முறையிட   வந்தான்.  நான் அவனுக்கு  சார்பாகப்பேசி   மகள்மாரை     கடிந்துகொண்டேன்.

இதனை   அவதானித்த  இந்திரா பார்த்தசாரதி  என்னை   அருகே  அழைத்து அப்படிச்செய்து     மகனின்     தன்னம்பிக்கையை   பழுதுபடுத்திவிடவேண்டாம்.

அவனே  வாழ்க்கையில்     சுயமாக   சிந்தித்து   செயற்பட   விட்டுவிடுங்கள் என்று   எனக்கு  புத்திமதி     கூறினார்.

அப்பொழுது   அவரது   உளவியல்   சிந்தனைகளை    புரிந்துகொண்டேன். புதிய   எழுத்தாளர்கள்,   எழுத்துத்துறையில்   பிரகாசிக்க    விரும்பும்  புதிய தலைமுறையினர்  இந்திரா  பார்த்தசாரதியின்     படைப்புகளை  படிக்கவேண்டும். எழுதாமல்,  சிந்திக்காமல்   சோம்பிக்கிடக்கும்   எழுத்தாளர்களுக்கு   ஒரு  சிறுதகவல்:-

எண்பது  வயது  கடந்துவிட்ட   நிலையிலும்   இந்திராபார்த்தசாரதி   தொடர்ந்து படிக்கின்றார்,     எழுதுகின்றார்.    ஆழமாகச்சிந்திக்கின்றார்   என்பதற்கு   அவரது சமீபத்திய   கணையாழி   கடைசிப்பக்க     கட்டுரையை     இங்கு பதிவுசெய்கின்றேன்.

‘கணையாழி’    இதழில்   நான்   எழுதியிருந்த    கட்டுரையை   ஒட்டி ஒரு நண்பர் என்னைக்    கேட்டார்   நான்     தாகூரைவிட      பாரதி      உயர்ந்த கவிஞராகக்கருதுகின்றேனா     என்று.      தாகூர்     கவிதைகளையும்      பாரதி கவிதைகளையும்     துலாக்     கோல்     கொண்டு     ஆராய்ந்து      இருவரிலே யார் உயர்ந்தவரென்று மதிப்பீட்டு     முடிவு    எதுவும்      கூறவில்லை.     தாகூருக்கு இருந்த அதிர்ஷ்டம்       பாரதிக்கு     இல்லையென்றுதான்     கூறியிருந்தேன். ஆனால் பாரதியை       நான்     தமிழில்      படிக்கும்     போது     எனக்கு ஏற்படுகின்ற      பரவசமும் நிறைவும்     தாகூரை      ஆங்கிலத்தில் படிக்கும்போது      எனக்கு      உண்டாகவில்லை. காரணம்   பாரதி     மொழி தமிழ்க் கலாசாரப்       பாரம்பரியத்தின்      பிரிக்கவொண்ணாத அம்ஸம்.

இதைப்    பற்றி      எம்.டி.      முத்துக்குமாரஸ்வாமியும்      குறிப்பிட்டிருக்கிறார்.

‘தேனை      மறந்திருக்கும்      வண்டும்

ஒளிச்     சிறப்பை       மறந்து       விட்ட       பூவும்’

எனும்போது        கம்பனும்      சங்கப்      புலவர்களும்      என்      மனக்    கண்முன்      வந்து

போகிறார்கள்.’

ஒளிச்      சிறப்பை      மறந்து     விட்ட பூவும்      என்ற     வரி    என்    ரஸனை உணர்வைத் தூண்டிப்     பளிச்சென்று     விளக்கேற்றி     வைப்பது     போல் இவ்வரியினை       ஆங்கில மொழியாக்கம்     செய்துவிட     முடியுமா? ‘ஓராயிரம் வருடம்     ஓய்ந்து     கிடந்த பின்னர்    வாராது    போல் வந்தவர்    மஹாகவிபாரதி       என்பதைப்      பற்றி     எனக்கு எந்தவிதமான     சந்தேகமும்     இல்லை. மற்றவர்களிடமிருந்து     கேட்டுத்     தெரிந்து கொள்ளவும்     விரும்பவில்லை. காரணம்   நான்      வள்ளுவன்     படித்தவன்      கம்பன் படித்தவன் இளங்கோ       படித்தவன்.     பக்தி      இலக்கியங்கள்     பற்றியும்     தெரியும். பாரதியின்       ‘குயில் பாட்டு’        ஒன்று      போதும்    உலக      இலக்கியத்தில் அவர் தகுதியை நிலை     நிறுத்த. அதைப்    படித்து     ரஸிக்க    நமக்கு    இந்திய இலக்கியப் பாரம்பரிய      இலக்கியத்     தேர்ச்சியோடு     மட்டுமல்லாமல் மேலை      இலக்கியக் காற்றும் நம் ரஸனைச்      சாளரங்களில்    வீசிக் கொண்டிருக்க       வேண்டும்.       ‘குயில்பாட்டு’       குறிஞ்சித்திணையில்     அமைந்த அகத்துறைக்       கவிதை       என்பதோடுமட்டுமல்லாமல்     சமஸ்கிருத நாவலாகிய      (உலக    இலக்கியங்களின்    முதல் நாவல்.     எட்டாம் நூற்றாண்டு      ஆசிரியர்     பாணபட்டர்)      ‘காதம்பரியின்’      பாதிப்பும் உண்டு. ’காதம்பரியில்’       கிளி      கதை       சொல்லும்.      பாரதி     குயில்     காதல் கதையைச்

சொல்வதாகப்        பாடுகிறார்.     பாரதிக்கு       இரு     குரல்கள் எப்பொழுதுமே

இருந்திருக்கின்றன.      ஒன்று      அந்தரங்கக்     குரல் இன்னொன்று         பகிரங்கக்      குரல்.

இதைத்தான்       சங்க     காலத்தில் ‘அகம்-‘புறம்’      என்று        பிரித்திருக்க     வேண்டுமென்று

தோன்றுகிறது.   புறநானூற்றுக்       கபிலரின்        குரல்        பகிரங்கக்        குரல்     புறம்

பற்றிய பாடல்கள்.       ‘குறிஞ்சிப்        பாட்டு’க்       கபிலரின்      குரல்        அந்தரங்கக் குரல்.  அகம்

10

பற்றிய       பாடல்கள்.      பாரதியின்       நாட்டுப்       பாடல்கள்      சமூகச்சீர்திருத்தப்

பாடல்கள்       யாவும்       அவர்      பகிரங்கக்         குரல்(புறம்).     தனிமைபற்றிய     பாடல்கள்

வசன       கவிதை      குயில்பாட்டு     ஆன்மிகப்     பாடல்கள்       அவருடைய       அந்தரங்கக்

குரல்   (அகம்).

ஆன்மிகம்       அகத்துறை       ஆகுமா        என்ற     கேள்வி      எழக்கூடும்.     ஏன் ஆகக் கூடாது?

சங்க      அகத்துறை      அடிப்படையில்தானே      பக்தி இலக்கியங்களில்     நாயகநாயகி

பாவம்   ( Bridal mysticism) உருவாகியது?

ஐந்து     வயதில்      இழந்த    தம்    தாயைத்தாம்     பாரதி   வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார்.     விடுதலை        வேட்கை      மிகும்போது    அவர் தாய்       பாரதமாதா.

காதல்       மிகும்போது       கண்ணம்மா.       பக்திப்      பரவசத்தில்        பராசக்தி.

‘குயில்பாட்டு’   கோல்ரிட்ஜின்       ‘குப்ளாகான்’      போல்     ‘பாவலர்க்குப்    பட்டைப்  பகலில்தோன்றுவதாம்       ஒரு       நெட்டைக்     கனவு.’  ( In Xanadu did Kublakhan in stately dome decree)   என்று        ஆரம்பிக்கும்        வரிகளை      ஷெல்லி     படித்த போது     ஆழ்ந்த பரவசத்தில்     மயக்கமுற்று     விழுந்தாராம்.

விக்கிராமாதிதன்     கதைகள்     ‘அரபு  இரவு’    கதைகள்     போல்    கதைக்குள்   கதை கனவுக்குள் கனவு.     எது     கனவு     எது    நிஜம்     என்ற    தோற்ற   யதார்த்த தத்துவச்     சிக்கல்கள்! சால்     பெல்லோவின்     நாவல்களைப்     பற்றிக் கூறும்    போது    Wheel with in a wheel என்பார்கள்.     தமிழில்      தோன்றியிருக்கும் மகத்தான       இலக்கியங்களில்      ‘குயில் பாட்டு’க்கு     ஒரு    தனி     இடமுண்டு. ‘புல்லை     நகையுறுத்திப்     பூவை     வியப்பாக்கி ‘ என்பதற்கு     ஈடான வரிகளைக்     கம்ப     சித்திரத்தில்தான்    என்னால்    தேட    முடியும்.   ‘குயில் பாட்டை’ப்      பற்றி     ஒரு     விரிவான     ரஸனை     அநுபவ    நூல்   ஒன்று எழுத    நான் திட்டமிட்டிருக்கிறேன்.

இவ்வாறு     இந்திரா   பார்த்தசாரதி  தமது எண்ணங்களை   படரவிட்டுள்ளார்.

அவர்     நல்லாரோக்கியத்துடன்   தொடர்ந்தும்   எழுத்துப்பணியில்  ஈடுபட வேண்டும்   எனவாழ்த்திக்கொண்டு    அவரது    பாரதி  குயில் பாட்டு  ரஸனை   அனுபவ  நூலுக்காக காத்திருக்கின்றேன்.

Series Navigationநா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *