பாச்சுடர் வளவ. துரையன்
என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா?”
அவர் உங்கள் தொல்காப்பியமென்று கேட்டபோதே அவரைப் புரிந்து விட்டது. “இவர் போன்ற ஒரு சிலர் பண்டைய இலக்கணமோ. இலக்கியமோ அறிந்திடாமல் அதைத் தீண்டத்தகாததாய் நினைக்கிறார்கள். இவருக்குப் புரியும்படிச் சொல்லவேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான் அவரைக் கேட்டேன் “குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்ன?”
அவர் நன்கு விடை சொன்னார் “அதாவது குழந்தைகளை அளவோடு பெற்றுக் கொள்ளுதல்” உடனே நான் ”பிள்ளைகளை அளவோடு பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் கருவறையில் உண்டாகும் காலமறிந்து நடக்க வேண்டும் அன்றோ? இதைத்தான் நம் தொல்காப்பியம் கூறியிருக்கிறது” என்றேன். நான் இப்போது அவரையும் சேர்த்து நம் தொல்காப்பியம் என்றேன்.
”எப்படி? எங்கு சொல்லப்பட்டுள்ளது? என்று அவர் கேட்டார்.
நான் ஒரு நூற்பாவைச் சொன்னேன்.
”பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான”
அவர் இதற்கு விளக்கம் கேட்டார். நான் ஒரு சிறிய விளக்கவுரையே ஆற்ற வேண்டி வந்து விட்டது.
இந்நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ளது. புலவர் குழந்தை உரையின்படி இது 216-ஆம் நூற்பாவாகும். பழந்தமிழகத்தில் தலைவனுக்குப் பரத்தையரிடம் சில நாள் சேரல் எனும் ஒரு பிரிவு இருந்து இருக்கிறது. அது சரியா பிழையா என்று இப்போது நாம் ஆராய்தல் நன்றன்று. அக்கால நடைமுறைப் பழக்கங்களை நாம் இக்கால அளவுகோல்களை வைத்து எடைபோட இயலாது. அது முறையானதும் அன்று.
தலைவன் எப்பொழுது தலைவியைப் பிரியமாட்டான் என்று இந்த நூற்பா கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்த மூன்று நாள்களுக்குப் புறம்பான பன்னிரு நாள்களும் தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லமாட்டான். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமாயின் நான்காம் நாள் தொடங்கிப் பதினந்து நாளிடைப்பட்ட பன்னிரு நாள்களும் தலைவி கருத்தரிக்கும் காலமாகையால் தலைவன் தலைவியைப் பிரிய மாட்டான் என்பதாம்.
எனவே கருத்தரிக்கும் நாள்களைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறுகின்றது எனலாம். கருத்தறியா நாள்களையும் மறைமுகமாய்க் கூறிய தொல்காப்பியம் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு தக்க வழியையும் காட்டுகிறது.
இன்றைய மருத்துவ அறிஞர்கள் தாம் ஆய்ந்த வகையில் 13 முதல் 18 வரையில் கருத்தரிக்கும் நாள்கள் என வரையறுக்கின்றனர். “பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்” என்னும் காலத்தை நன்கு ஆராய்ந்து ஐயமின்றித் துணிந்து வரையறை செய்து கொள்வது குடும்பக்கட்டுப்பாட்டுக்கு எளிய வழியாகும்.
இவ்வாறு நான் விளக்கவுரை ஆற்றி முடித்ததும், “ நீங்கள் அடிக்கடி சொல்வது போல நம் தொல்காப்பியத்தில் எல்லாம் உள்ளது போலிருக்கிறதே? என்றார் என் நண்பர். இப்பொழுது அவரை நம் தொல்காப்பியம் என்று சொல்ல வைத்த்தே யான் பெற்ற பேறு என எண்ணினேன்.
அடுத்து நண்பர் இன்னொரு வினா விடுத்தார். ”இதைப் போல வேறு நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறதா?”
”ஆமாம் நண்பரே ஆசாரக் கோவை எனும் நீதி நூலில் இது பற்றி என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் அந்தப் பாடல் என்று கூறிப் பாடலையும் சொன்னேன்.
”தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு”
”ஆக நம் தொல்காப்பியம்தான் நமக்கெல்லாம் பெரும் சொத்து” என்னும் முடிவுக்கு வந்தார் என் நண்பர். அவருக்கு விளக்கம் தந்ததில் நானும் மகிழ்ச்சியடைந்தேன்.
===================================================================================
வளவ. துரையன்,
20 இராசராசேசுவரி நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்—607 002
பேசி: 93676 31228
- ஒளிப்பந்தாக இருந்த முகம்
- தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா
- ஆஸ்கர்
- தொல்காப்பியத்தில் மகப்பேறு
- ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்
- சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு
- கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா
- பேய்
- ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்
- யானை
- கதை சொல்லி
- பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….