எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன். எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும் போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுத்ததால் அவர் எனக்குச் சில சலுகைகள் கொடுத்திருந்தார். அறைக்குள் தாங்கிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைத் தொட்டுப் புரட்டலாம். எடுத்துக்கொண்டு வந்து அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். உறுப்பினராக இல்லாத எனக்கு அது பெரிய சலுகை.
அந்தச் சலுகையின் அடிப்படையில் ஒருநாள் படிப்பதற்கு புத்தகம் தேடிக்கொண்டிருந்தபோதுதான் கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்னும் புத்தகத்தைக் கண்டெடுத்தேன். ஏதோ கல்வெட்டுக் கால எழுத்துபோல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த எழுத்துகளின் புதுமைதான் என்னை முதலில் கவர்ந்தது. அதற்குப் பிறகு வண்ணதாசன் என்னும் அந்தப் பெயர். முதலில் ஒரு வேகத்தில் அந்தப் பெயரை கண்ணதாசன் என்று படித்துவிட்டு பிறகுதான் வண்ணதாசன் என்று திருத்திக்கொண்டேன். தாங்கியிலிருந்து அதை எடுத்துக்கொண்டு வந்து நூலகரிடம் காட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். நான் நினைத்ததுபோலவே அவர் “அது கண்ணதாசன் இல்லப்பா, வண்ணதாசன், நல்லா பாரு” என்று திருத்தினார். ”பாத்துட்டேன் சார். பாத்துட்டுதான் எடுத்தேன்” என்றேன். அவர் சிரித்தார். “சரிசரி, நீ கவிதை படிக்கற ஆளாச்சே. கண்ணதாசன்னு நெனச்சி ஏமாந்துடக்கூடாதுன்னுதான் சொன்னேன்” என்றார். தொடர்ந்து “சரிசரி, உட்கார்ந்து படி” என்றார்.
வழக்கமான அச்செழுத்துகள் போலன்றி, புதுவிதமாக இருந்த அந்த எழுத்து வரிசையையே வெகுநேரம் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் போன போக்கில் பக்கங்களைப் புரட்டியபோது உல்லாசப்பயணம் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு அந்தச் சிறுகதையை முதலில் படித்தேன். அதுதான் நான் படித்த முதல் வண்ணதாசன் எழுத்து.
நாலைந்து பிள்ளைகள் இருக்கக்கூடிய ஒரு நடுத்தரக் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்துக்கே உரிய பிரச்சினைகள். செலவுகளை ஈடுகட்டிக்கொண்டு குடும்பத்தைச் செலுத்தமுடியாத அளவுக்கு போதிய வருமானமில்லாத குறை. போதாமை குடும்ப உறுப்பினர்களை அமைதியிழக்க வைக்கிறது. ஏதேனும் எதிர்பாராத வகையில் செலவு செய்யும்படியான விஷயங்கள் நடந்துவிடுமோ என்று அஞ்சியஞ்சி ஒவ்வொரு நாளையும் கழிக்கும் குடும்பம். அச்சம் அதிகரிக்கும்போதெல்லாம் அஞ்சியவையே நிகழ்ந்துவிடுகின்றன. ஒரு பிள்ளைக்கு உடல்நலம் குன்றி ஏற்கனவே கடன் வாங்கிச் செலவு செய்தாகிவிட்டது. உறவுக்காரர்களின் திருமணச்செலவு. மழைக்காலம் வேறு. குடும்பத்தின் தலைவி அதைச் செய், இதைச் செய் என்று எல்லோருக்கும் வேலை கொடுத்தபடி இருக்கிறாள். ஒரு மகன் விறகு வாங்கச் செல்கிறான். இன்னொரு மகன் பள்ளியிலிருந்து வரப்போகும் சகோதரியை அழைத்து வர குடையுடன் பேருந்து நிலையத்துக்குச் செல்கிறான். கணவனும் சரி, பிள்ளைகளும் சரி யாரும் அவளுடன் எதிர்வாதத்துக்கு நிற்பதில்லை. அவள் எதிர்பார்ப்பதையெல்லாம் செய்கிறார்கள். ஆனாலும் அவளுக்கு ஒரு நிறைவில்லை. போதாமையும் வறுமையும் அவளைப் பிடித்தாட்டுகின்றன. வெடிப்பதுபோல சொற்கள் அவளிடமிருந்து வெளிப்பட்டபடி இருக்கின்றன.
குடும்பச்சூழலின் சித்திரம் விரிவடையும்போதே இளைய மகன் தன் அப்பாவிடம் தன் பள்ளிக்கூடத்தில் கொடுத்தனுப்பிய உல்லாசப்பயணம் தகவல் கடிதத்தை ஒரு கணம் தன் தந்தையிடம் காட்டுகிறான். ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ கட்டணம். குற்றாலம் வரைக்கும் அழைத்துச் செல்லப் போகிறார்கள். அதுதான் அந்தச் சுற்றோலையின் சாரம். உல்லாசப்பயணத்துக்குப் பெயர் கொடுப்பவர்கள் உடனடியாகப் பயணம் செலுத்தவேண்டும். பணமில்லாததை எப்படி மகனிடம் சொல்வது என்று தயங்கிக்கொண்டிருக்கும் போதே அந்தக் கடிதத்தை வாங்கி புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, கைக்குக் கிடைத்த தாளையெடுத்து தாமரைப்பூ படம் வரையத் தொடங்குகிறான் மகன். பணம் வேண்டுமென அழுத்திக் கேட்க மனமின்றி, அமைதியாக தன் வேலையில் ஈடுபடும் மகனைப் பார்க்க அவன் அப்பாவுக்கு பாவமாகவும் இருக்கிறது. குற்ற உணர்வாகவும் இருக்கிறது.
மழை வலுத்துக்கொண்டே போகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை. நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. பள்ளிக்குச் சென்றிருந்த பெண்பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள். குடையை சுவரோரமாக வைத்துவிட்டு உள்ளே வரும் சிறுமி மழையின் பெருக்கை ஆச்சரியத்தோடு சொல்கிறாள். எதிர்வீட்டு தட்டோடியிலிருந்து அருவிமாதிரி பொங்கி விழுகிற தண்ணீர்ப்பாய்ச்சலையும் சொல்கிறாள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிற இளையவனைப்பற்றியும் சொல்கிறாள். “வேடிக்கை என்ன வேண்டிக்கிடக்குது? நாலு குடம் பிடிச்சி வச்சாலும் ஏதாச்சும் வேலைக்கு உதவும்” என்று அலுத்துக்கொள்கிறாள் அம்மா.
அந்த அப்பா இரு குடங்களோடு வாசலுக்குச் செல்கிறார். பட்டையாய்த் தண்ணீர் விழுவதை அவரும் பார்க்கிறார். இரண்டு கைகளையும் மார்போடு சேர்த்து கட்டிய நிலையில் அதில் குளித்துக்கொண்டிருக்கும் மகனையுயும் பார்க்கிறார். ஒருகணம் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த மழையருவியில் நனைந்தபடி, ராகமாக பாடியபடி, உடல்பகுதிகளை மாற்றிமாற்றிக் கட்டியபடி அவன் விளையாடி அடையும் ஆனந்தத்தையும் பார்க்கிறார். அவன் ஆனந்தத்தைக் குலைக்காமல் திரும்பி வந்துவிடுகிறார்.
எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. மனம் பொங்கி கண்கள் வரை அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. கிட்டத்தட்ட என் கதையைப்போலவே இருந்தது அக்கதை. அந்தக் குடும்பம், அந்த அம்மா அப்பா, அந்தச் சகோதரசகோதரிகள் எல்லாமே எங்கள் குடும்பத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது. நம் வீட்டுக்கதை இவருக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. அதே கதையை மறுபடியும் வரிவரியாகப் படித்தேன்.
என் பள்ளி வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் உல்லாசப்பயணம் சென்றதில்லை. ஒருமுறை கூட பெயர் கொடுத்ததில்லை. பணம் வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தியதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உல்லாசப்பயணம் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் என் கட்டுரைக்கே அதிக மதிப்பெண்கள் கிடைத்துவந்தன. அதைப் பார்த்து பிள்ளைகளும் ஆசிரியரும் ஆச்சரியப்படுவார்கள். ”எப்படிடா?” என்று கேட்பார் ஆசிரியர். “மத்த பசங்க சொன்னத வச்சி எழுதனேன் சார்” என்று சொல்வேன். என் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் செல்வார் அவர்.
வண்ணதாசன் எழுதிய கதை எனது கதையையேதான் என்பதில் எனக்குச் சந்தேகமே எழவில்லை. மூன்றாவது முறையாக அக்கதையை மீண்டும் படித்தேன். வறுமையின் பிடியில் நம் குடும்பத்தைப்போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ள உலகத்தில் ஏதேனும் ஒரு குடும்பத்தின் காட்சி அவர் கண்ணில் பட்டிருக்கலாம் என்று ஒருமுறை தோன்றியது. ஒரு கணம் கழித்து ஒருவேளை அவர் குடும்பமும் அப்படிப்பட்ட குடும்பமாக இருக்கக்கூடும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
நூலகர் அந்த ஒரே கதையையே மீண்டும் மீண்டும் நான் படிப்பதைக் கண்டுபிடித்துவிட்டார். “என்ன, பரீட்ச பாடமா அது? திரும்பித்திரும்பி அதையே படிக்கிற?” என்று பக்கத்தில் வந்து கேட்டார். ”ரொம்ப புடிச்சி போச்சி சார்” என்றேன் நான். அவருக்கும் அந்தக் கதையைச் சொன்னேன். அவரும் அந்தக் கதையை ரசித்துக் கேட்டார். பிறகு “வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கத்தானே செய்யுது. பணக்காரங்களுக்கு தங்கத்தால நகைங்க செஞ்சி சந்தோஷப்பட்டா, ஏழைபாழைங்களுக்கு கவரிங் நகைங்க போட்டு சந்தோஷப்படுதுங்க. முடிஞ்சவங்களுக்கு திருப்பதி பெருமாள். முடியாதவங்களுக்கு நம்ம தெரு முக்குட்டுல இருக்கற பெருமாள். என்ன செய்யமுடியும் சொல்லு, வாழ்க்கையை ஓட்டியாகணுமே….” என்றார். அந்தக் கதையை என் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்வதற்கு அவர் சொற்கள் உதவின. கற்பனையால் ஈடுகட்டி அடையும் மகிழ்ச்சி என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
அந்த ஒரு கதையிலேயே என் நெஞ்சு நிறைந்துவிட்டது. எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று முழுக்க அதைப்பற்றிய நினைவுகளிலேயே மூழ்கியிருந்தேன். தட்டோடியிலிருந்து விழும் தண்ணீரில் குளிக்கும் மகனைப் பார்த்ததும் மனம் கசியும் அந்த அப்பாவின் சித்திரத்தை மனத்துக்குள் எழுப்பிக்கொண்டேன். அந்த அப்பா என் அப்பாவைப்போலவே மிகமிக நல்லவராகவும் பாவமானவராகவும் இருக்கிறாரே என்று தோன்றியது. மழையில் நனையும் மகனைப் பார்த்ததும் எந்த அப்பாவாக இருந்தாலும் ஓடி வந்து நனையாதபடி அழைத்துச் செல்வதுதானே உலகவழக்கம். இந்த அப்பா மட்டும் பார்த்தும் பாராதது போல மீண்டும் எதற்காக வீட்டுக்குள்ளேயே போகிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. குற்றாலத்துக்குச் சென்று குளிக்க ஆசைப்பட்ட மகனுக்கு கட்டணமாகக் கொடுக்க அந்த அப்பாவிடம் பணமில்லை. ஆனால், எதிர்வீட்டுத் தட்டோடியிலிருந்து விழும் தண்ணீரை அருவியாக நினைத்துக் குளித்துக் களிப்பதற்கு கட்டணமாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மானசிக அனுமதியை வழங்கினாலேயே போதும் என்று அந்த அப்பாவுக்குத் தோன்றியிருக்கலாம். அந்த எண்ணத்தாலேயே அவர் பார்த்தும் பாராததுபோலத் திரும்பிவிடுகிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்த வாரம் நூலகத்துக்குச் சென்றதுமே நான் மீண்டும் அந்தக் கதைத்தொகுதியைத்தான் தேடினேன். அது மேசையிலும் இல்லை. தாங்கியின் புத்தகவரிசையிலும் இல்லை. நூலகரிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர் உடனே தன் மேசை மீது இருந்த பெரிய லெட்ஜரைப் புரட்டி “யாரோ ஒரு அம்மா எடுத்துட்டு போயிருக்காங்களே…..” என்று சொன்னார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ”வேற எதயாச்சிம் எடுத்து படி, போ” என்றார் அவர். நானும் கைக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் அந்தப் புத்தகம் மீண்டும் என் கைக்குக் கிடைத்தது. தன் மேசை இழுப்பறைக்குள் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார் நூலகர். “அந்த அம்மா முந்தாநாளே கொடுத்துட்டாங்க. மறுபடியும் யாராச்சிம் எடுத்துடுவாங்களோன்னு எடுத்து டிராயர்ல போட்டு வச்சேன்” என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கினேன். ஓர் அருவியும் மூன்று சிரிப்பும் என்னும் தலைப்பைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. உடனே படிக்கத் தொடங்கினேன்.
இரண்டு நண்பர்கள் அருவியில் குளிக்கச் செல்கிறார்கள். அங்கே ஒருவர் குளியலுக்குத் தேவையான எண்ணெய், துண்டுகள், சோப்புக்கட்டிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருக்கிறார். வியாபாரம் அலைமோதுகிறது. எண்ணெய் வாங்கி இருவரும் கடையோரமாகவே ஆடை களைந்து தேய்த்துக்கொள்கிறார்கள். சரியாக ஊறும் வரைக்கும் கடையோரமாகவே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அருவிக்கு வந்து செல்லும் ஒவ்வொருவருடைய முகத்திலும் சிரிப்பு பொங்கி வழிந்தபடி இருக்கிறது. ஆர்த்தெழுந்து விழும் அருவியே ஒரு மாபெரும் சிரிப்பாகவே இருக்கிறது. எதைப் பார்த்தாலும் கிளர்ச்சியுறும் நண்பர்கள் சிரித்தபடியே இருக்கிறார்கள். அந்தச் சூழலில் சிரிக்காத ஒரே நபர் கடைக்காரர் மட்டுமே. அவர் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஆளைப் பார்த்து விலையைக் கூட்டிச் சொல்லி பணம் வாங்கிவிடுகிறார். அவரைச் சிரிக்க வைப்பதற்காக இருவரும் என்னென்னமோ பேசிக் கொள்கிறார்கள். ஒரு பயனும் இல்லை.
அப்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு சில்லறை தரும் விஷயத்தில் ஒரு ரூபாய் கொடுப்பதற்கு மாறாக, நாலு ரூபாய் கொடுத்துவிடுகிறார். சற்று தாமதமாகத்தான் அந்தப் பிசகை கடைக்கு அருகில் நின்றிருக்கும் நண்பர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இழப்பை நினைத்து நிலைகுலைந்துபோகிறார் கடைக்காரர். அருவிக்கரையிலேயே கடை வைத்திருந்தும் அருவியைக்கூட நிமிர்ந்து பார்க்க நேரமின்றி உழைத்தும் ஏமாந்துவிட நேர்ந்த சம்பவம் அவரை மிகவும் நிலைகுலைய வைத்துவிடுகிறது. முதல் முறையாக அருவியை நேருக்குநேர் பார்க்கிறார். கடையைச் சாத்திவிட்டு எண்ணெய் தேய்த்துக்கொள்கிறார். அருவியில் குளித்துவிட்டு வைத்துவிட்டுச் சென்ற ஆடைகளை வாங்கிக்கொள்ள வரும் இரு நண்பர்களும் கடைக்காரரின் வேகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். எதையோ யாரோ சொல்ல எல்லோருமே சிரிக்கிறார்கள். ஆடை மாற்றியபடி ஒரு நண்பர் அருவியில் குளித்தபடி இருந்தபோது ஆழ்மனத்திலிருந்து திடுமென உந்தி எழுந்த ஆசையைப்பற்றிச் சொல்லட்டுமா என்று கேட்கிறார். சரியென்று தலையசைக்கிறார் இன்னொரு நண்பர். அதைக் கேட்பதற்காக கடைக்காரரும் சிறிது நேரம் நிற்கிறார். யாருமற்ற ஒரு பெளர்ணமி இரவில் பொங்கி விழும் அருவியில் தனியாக எதையாவது பாடலை முணுமுணுத்தபடி ஆடையின்றி குளிக்க ஆசையாக இருப்பதாக அவர் சொன்னதைக் கேட்டு கடைக்காரர் விழுந்துவிழுந்து சிரிக்கிறார். அதைப் பார்த்து மற்ற இருவரும் சிரிக்கிறார்கள். அருவியின் ஓசையோடு மூவரின் சிரிப்போசையும் சேர்ந்துகொள்கிறது.
இதுவும் ஒரு குளியல் கதை என்பதாலோ என்னமோ, உல்லாசப்பயணம் கதையைப்போலவே இக்கதையும் பிடித்துவிட்டது. எங்களூரில் அருவி இல்லை. ஆனால் கடல் போலப் பொங்குகிற பெரிய ஏரி இருந்தது. குளிப்பதற்காகவே ஒரு துறை இருந்தது. குளித்துவிட்டு தண்ணீர் வழியவழிய கரையேறி வரும் ஒருசிலர் சிறிது நேரம் நின்று அக்கம்பக்கம் நடமாட்டமில்லாத சமயம் பார்த்து சட்டென்று இடையாடையை ஒரே நொடியில் கழற்றி வீசிவிட்டு ஏரிக்குள் அம்புபோலப் பாய்ந்து குதித்து நீந்திவிட்டு அதே வேகத்தில் திரும்பி துண்டையெடுத்துச் சுற்றிக்கொள்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அதனால் அந்த நண்பரின் ஆசை எனக்கு இயற்கையான ஒன்றாகவே தோன்றியது.
அன்றும் அந்த ஒரே கதையைத்தான் படித்தேன். மீண்டும் மீண்டும் அதையே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். அத்தொகுதியின் மற்ற கதைகளையும் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டாக விரைவில் படித்துமுடித்தேன். அன்றுமுதல் வண்ணதாசனை என் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக வரித்துக்கொண்டேன். அவருடைய பெயரை எங்கு பார்த்தாலும் படிப்பதை பழக்கமாக வைத்துக்கொண்டேன்.
தீபம், கணையாழி இதழ்களுடைய அறிமுகம் கிடைத்த பிறகு, அவற்றில் வெளிவந்த அவருடைய சிறுகதைகளை அவை வெளியான தருணத்திலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருவியும் ஆறும் வண்ணதாசனின் கதைகளில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இடக்குறிப்புகளாக மட்டுமன்றி, விரிந்த கோணத்தில் அவற்றை அழகான படிமங்களாகவும் அவர் நுட்பமாக மாற்றிவைத்து விடுகிறார். அருவியாக இருந்தாலும் சரி, ஆறாக இருந்தாலும் சரி எல்லாம் ஒரு கோணத்தில் ஆனந்தத்தின் படிமமே. அருவியாக, ஆறாக நம்மைச் சுற்றி எப்போதும் ஆனந்தம் வழிந்தோடியபடியே இருக்கிறது. தட்டோடித் தண்ணீரை அருவியாக மாற்றி நினைக்கும் பிள்ளைமனம் இருந்தால் போதும், அந்த ஆனந்தம் எளிதில் வசப்பட்டு விடும். அந்தப் பிள்ளைமனத்தை இழந்துவிடுபவர்களுக்கு அல்லது பிள்ளைமனமே இல்லாதவர்களுக்கு எல்லாமே பிரச்சினைதான். அவர்களை தப்பித்தவறி உண்மையான அருவியின் முன்னால் நிறுத்தினால் கூட, அவர்களுக்கு ஆனந்தத்தை அனுபவிக்கத் தெரியாது. ஆனந்தத்தை அறிவது ஒரு வரமெனில், அதை அறியாமல் இருப்பது ஒரு பெரும் சாபம். எல்லாத் தருணங்களிலும் அவர்கள் ஆனந்தமாக இருப்பவர்களைப் பார்த்து சொற்களை நெருப்பென பொழிந்துகொண்டே இருப்பார்கள். சீண்டிப் பார்த்தபடி இருப்பார்கள். தளர்ச்சியுறவைத்தபடி இருப்பார்கள். வரம் பெற்றவர்களைப் படைக்கும் வண்ணதாசன் அதற்கு சமமான எண்ணிக்கையுள்ள கதைகளில் சாபத்தால் தவிப்பவர்களையும் படைத்திருக்கிறார்.
கடந்த ஐம்பதாண்டுகளாக இடைவிடாத படைப்பூக்கத்தோடு எழுதி வரும் மகத்தான ஆளுமை வண்ணதாசன். பொன்னை உருக்கி ஆபரணம் செய்பவர்களுக்கிருக்கும் கவனத்துக்கு இணையான கவனத்தோடு தன் ஒவ்வொரு படைப்பையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒளியிலே தெரிவது, ஒரு சிறு இசை, நாபிக்கமலம் என வெளிவந்திருக்கும் அவருடைய சமீபத்திய தொகுதிகள் அவருடைய படைப்பூக்கத்தின் உச்சப்புள்ளிகள் என்றே சொல்லவேண்டும். அவருடைய மொழியில் படிந்திருக்கும் கூர்மையும் மென்மையும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மிகச்சிறந்த கலவையாக இருக்கிறது.
இன்று இலக்கியத்தின் சார்பாக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர் வண்ணதாசன். அவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுதிகளாக வருமெனில் உலக அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கியமான படைப்பாளியாக உயர்வார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவருடைய பங்களிப்புக்குப் பொருத்தமான பெரிய விருதுகள் எதுவும் அவரை இன்னும் வந்தடையவில்லை. ஓரளவு என் மனக்குறையைப் போக்கும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் விருதுக்குரியவராக வண்ணதாசன் அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணம் என் மகிழ்ச்சியைப் பல மடங்காகப் பெருகவைக்கிறது. வண்ணதாசனுக்கு என் மனமார்ந்த வணக்கம்.
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை