“முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 15 of 15 in the series 23 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

 

டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை மூத்தவர். இராஜதுரையின் இரு தம்பிமார்களும் சிறுவயதிலேயே ஹார்ட அட்டாக்கால் இறந்ததினால் அவர்களின் பிள்ளைகளை கவனிக்கும் பொநுப்பு  இராஜதுரையின் தலையில் விழுந்தது.

 

செல்லத்துரையருக்குத் தன்னப்போல தன் மகன் இராஜதுரையும் படித்து வைத்தியத் துறையில் ஈடுபட வேண்டும் என்பது அவர் கனவு. இராஜதுரையை ராஜா என்றே நண்பர்கள் அழைத்தார்கள். பருத்தித்துறை ஹார்ட்டிலி கல்லூரியில் ஏ லெவல் படித்து, அதன் பின் கொழும்பு மருத்துவக் கல்லூரியில்  பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர். சொந்தத்துக்குள் கரைவெட்டியில் பிரபல வழக்கறிஞர் மகேஸ்வரனின் மகள் ஈஸ்வரியைத் திருமணம் செய்து, சாந்தி என்ற பெண் குழந்தைக்குத் தந்தையானார். சாந்தி பத்து வயதுச்சிறுமியாக இருந்தபோது புற்றுநோயால் தாயை இழந்தாள். டாக்டர் ராஜா எவ்வளவோ பணம் செலவு செய்தும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடியவில்லை.

 

ஆரம்பத்தில் கொழும்பு பெரிய வைத்தியசாலையில் ஒரு வருடப் பயிற்சி பெற்று, அதன் பின்னர் கலுபோவில, இரத்தினபரி வைத்தியசாவைகளுக்கு மாவட்ட மருத்துவ அதிகாரியாக் சென்றவர். அதைத் தொடர்ந்து ரம்புக்கன, மாத்தறை, காலி, நீர்கோழும்பு. மாறவில, சிலாபம், புத்தளம் ஆகிய இடங்களில்; உள்ள வைத்தியசாலைகளில் சேவைபுரிந்து, மக்களின் அன்பைப் பெற்றவர். ரிட்டடையராக முன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாக வேலை செய்தவர். அங்கு ஈழத் தமிழ் மக்களுக்குத்  தன் மருத்துவ அனுபவத்தை மனதிருப்தியோடு பயன் படுத்தியவர். முல்லைத்தீவில் வேலை செய்தபின் ஓய்வு பெற்று ருத்திரபுரத்தில் ஒரு சிறு மருத்துவகத்தை ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக நேர்சாக பயிற்சிபெற்ற அவர் மகள் சாந்தியும், அப்போதிக்கரி மாணிக்கமும் இருந்தனர். அவர்களுடைய  வைத்தியசாலையில , முகுந்தன் என்ற மருந்து தயாரிப்பவரும், சேந்தன் என்ற ஆண் நேர்சும் வேலைசெய்தார்கள். அவர்கள் இருவரும், அப்போதிக்கரி மாணிக்கமும், டாக்டர் ராஜாவோடு கிளிநொச்சியிலும் , முல்லைத்தீவிலும் வேலை செய்தவர்கள். அதனால் டாக்டர் ராஜாவின் திறமையை நன்கு அறிந்திருந்தார்கள். கைராசிக்காரன் என்று ராஜதுரையருக்கு வேலைசெயத வைத்தியசாலைகளில் பெயர் கிடைத்தது. அவரது அன்பான குணமும், நோயளிகளை நேசத்தோடும், அக்கரையோடும், பரிவோடும் அவர் கவனிக்கும் விதம், அவரோடு தொடர்ந்து வேலை செய்யும் விதத்தில் அவர்களை ஊக்குவித்தது. அதனால் டாக்டர் ராஜா ருத்திரபுரத்தில்; “சாந்தி மருந்தகம்”; என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்றை நிறுவி ருத்திரபுரத்தை சற்றியுள்ள  பல கிராமமக்களுக்கு சேவை செய்தார். மாங்குளம்,  நெடுங்கேணி, கிளிநொச்சி, பரந்தன், பூனகரி ஆகிய இடங்களில் இருந்து கூட நோயாளிகள் அவரின் மருந்தகத்துக்கு செல்வதுண்டு. விடுதலைப்புலிகள் அவரது சேவையை அறிந்து, அடிக்கடி காயப்படட் தமது போராளிகளுக்கு சிகிட்சை பெற சாந்தி மருந்தகத்திற்கு போவதுண்டு. மருத்துவ  உதவி என்று தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் வைத்தியம் பார்க்க முடியாது என்று கூறாமல் அதன் விளைவைத் தெரிந்திருந்தும்  வைத்திய நெறிமுறைப் படி காயமடைந்த போரளிகளுக்கு வைத்தியம் செய்தார் டாக்டர் ராஜா.

 

டாக்டர் ராஜாவின் முதல் தம்பியின் மகன் மகாதேவன் பல வருடங்களுக்கு முன் கனடாவுக்கு புலம் பெயர்வதற்கு தேவையான முழு நிதி உதவியைச் செய்தவர் டாக்டர் ராஜா. அதனால் டொரண்டோவில், பிரபல்ய ரியல் எஸ்டேட் புரோக்கரானார் மகாதேவன். இலங்கையில் வாழும் தன்  பெரியப்பாவையும், அவர் மகள்  சாந்தியும் கனடாவுக்குப் புலம் பெயர்வதற்கு தான் ஸ்பொன்சர் செய்வதாகக் கடிதம் எழுதினார்.. அக்கடிதத்தில்;

“ பெரியப்பா உங்கள் போன்ற மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்த   வைத்தியர்கள்; கனடாவுக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் இங்கு வந்தால் பல தேசத்து வைத்தியர்களுடைய அனுபவங்களை  பயன் படுத்துவது மட்டுமன்றி புதிய வைத்திய முறைகளையும் கற்கலாம். அதோடு சாந்தியும் கல்வியைத் தொடரலாம். பெரியம்மாவின் மறைவிற்குப் பின் நீங்களும் சாந்தியும் தனித்துவிட்டீர்கள். அதோடு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர் சூழலில் வேலை செய்வது கடினமும் ,  ஆபத்தும். இங்கு வந்தால் உங்களுக்கும், சாந்தியின் வருங்காலத்துக்கு நல்லது. உங்களை நான் ஸ்பொன்சர் செய்யமுடியும். நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் என்ற படியால் என் வருமானம் உங்களையும் சாந்தியையும் ஸ்பொன்சர் செய்ய  போதுமானது” என்று  மகாதேவன் எழுதியிருந்தான்.  ஆனால் டாக்டர் ராஜாவுக்கு இலங்கையை விட்டு கனடாவுககுப் போக விருப்பம் இருக்கவில்லை.

 

“மகாதேவா, எனது மருத்துவ அறிவையும் அனுபவத்தையும் ஈழத்தமிழ்; மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பயன் படுத்தவே விரும்புகிறேன். நீர் எனக்கு எழுதிய கடிதத்தைச்  சாந்திக்குக் காட்டினேன். அவளுக்கும் இலங்கையை விட்டு வெளிநாடு போக விருப்பமில்லை. நீர் எங்கள் இருவர் மீதும்; கரிசனை காட்டி கடிதம் எழுதியதுக்கு மிகவும் நன்றி”, என்று பதில் அளித்து மகாதேவனுக்கு கடிதம் எழுதினார் டாக்டர் ராஜா.

 

தென்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளிலும் வடமேற்கு வைத்தியசாலைகளிலும், வன்னியிலும் கடமையாற்றியவர். அதனால் சிங்களமும் சரளமாகப் பேசக்கூடியவர். இவ்வாறு ஜோன் டாக்டர் ராஜாவை சந்திக்க முன்பே அவரைப் பற்றிய விபரங்களை ஜோனுக்கு மகேஷ் சொன்னார்.

 

மகேஷைக்கண்ட டாக்டர் ராஜா “ மகேஷ் உன்னை இங்கு கண்டது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரியமாக மெனிக் முகாமுக்கு வந்தனி. இவர்கள் இருவரும் உனது நண்பர்களா”? ராஜா கேட்டார்.

 

“ ஓம் பெரியப்பா. உங்களுக்குத் தெரியும் நான் ஒரு பத்திரிகையாளன் என்று. அவர் ஜோன். கனடாவில் இருந்து மெனிக் முகாமில் அகதிகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்தும், விசாரித்தும் அறிந்து எழுத வந்தவர். மற்றவர் லலித். இவர்  கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியர்.” இருவரையும் டாக்டர் ராஜாவுக்கு மகேஷ் அறிமுகப் படுத்தினார்.

 

“உங்கள் இருவரையும் சந்தித்தற்கு  மகிழ்ச்சி. உங்களைப் போல் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், இராஜதந்திரிகளும் இங்கு வந்து போயிருக்கிறார்கள். ஐநா சபை செலயலார் நாயகம் கூட முகாமுக்கு வந்து போனார். அவர்கள் என்ன எழுதினாலும் இலங்கை அரசு தான் நினைத்ததை தான் செய்யும். வெளிநாட்டில் இருந்து நிதி உதவியாக தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக இலங்கை அரசுக்கு கிடைக்கும்  பணம் எங்கு போகிறது என்பது புரியாத புதிர். நான் நினைக்கிறேன் இங்கு செயற்படும் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், தங்களுக்கு  கிடைக்கும் நிதியில் இருந்து பெரும்; பகுதியைப் பரிபாலன செலவு எனக் காரணம் காட்டி, விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கியும், தமது ஊழியர்களுக்கு நல்ல வீடு வசதிகளுக்காகவும் செலவு செய்கிறார்கள். அது சரி மகேஷ் சாந்தியைச் சந்தித்தீரா? ராஜா கேட்டார்.

 

“சாந்தியை நாங்கள் மூவரும் சந்தித்துப் பேசினோம்;. காயப்பட்ட ஒருவரை சிகிச்சைக்காக மஞ்சுளாவின் உதவியோடு சாந்தியிடம் அழைத்துப் போனோம். உங்களைப் போல் சாந்தி அகதிகளுக்கு செய்யும் சேவை மிகவும் பாரட்டுக்குரியது. உங்களது சேவையைப், பற்றி மாத்தறையில் வாழும் எனது சித்தி வெகுவாக பாராட்டினார். அவவுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம்” என்றார் லலித்.

 

“மாத்தறையில் உள்ள உங்கள் சித்திபெயர்  என்ன? சில சமயம் எனக்கு அவவைத் தெரிந்திருக்கலாம்” என்றார் டாக்டர் ராஜா.

 

“ அவவுக்கு நீண்ட பெயர். சந்திரலேக்கா வர்ண்குலசூரியா. பெண்கள் கல்லூரி ஒன்றில் தலமை ஆசிரியையாக வேலை செய்கிறா. அவவை சந்திரா ஆண்டி என்று கூப்பிடுவேன்” லலித் சொன்னார்.

 

“ சந்திராவை எனக்கு நல்லாய் தெரியும். நல்ல அன்பாக எல்லோரோடையும் பழகுவா. மிகவும் நன்றி லலித் உம்மை சந்தித்ததில். நீர் என் சகோதரனின் மகனோடு நண்பராக இருப்பதையிட்டு மகிழ்ச்சி. அவரைக் கவனித்துக்கொள்ளும். அவர் ஒரு நல்ல எழுத்தாளர். அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல மொழி ஆளுமை இருக்கிறது. அவர் நல்ல நகைச்சுவையகவும், வாசிப்பவர்களின் மனதைத் தொடும் விதத்தில் எழுதுவார். ஆனால் அவர் கொஞ்சம் கவனமாக இருக்கவேணடும்.

 

“ ஏன் அப்படி சொல்லுகிறீர்கள் டாக்டர்?” லலித் கேட்டார்.

 

“ அவர் ஒரு தமிழ் ஊடகவியலாளர் என்பது தான் பிரச்சனை. அவர் எதை எழுதினாலும் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக எழுதுகிறார் என்றே அரசு கருதலாம். அன்மையில் நான் அறிந்தேன், ஒரு தமிழ் ஊடகவியலாளருக்கு, செய்யாத குற்றத்துக்கு கடும் ஊழியச் சிறைத்தண்டனை கிடைத்தது என்று. சர்வதேச நாடுகளினதும், இயக்கங்களினதும்; எதிர்ப்;பால் சிறைத்தண்டனை இரத்து செய்யப்பட்டதென்றும், அதனால் மேலும் இங்கு வாழப் பிடிக்காமல்  வெளிநாடொன்றுக்குப் புலம் பெயரந்தார் என்றும் அறிந்தேன். அதுவல்லாமல் அரசின் போக்கைக் விமர்சித்து  எழுதிய ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார்”.

 

“ டாக்ட்ர் நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் பயப்படவேண்டாம்” லலித் சொன்னார். சாந்தி அவ்விடத்தை விட்டு நோயாளிகளைக் கவனிக்கப் போனபின்,

 

“ சித்தப்பா எப்போ சாந்திக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறீர்கள் அவவுக்கு வயதும் கூடிக்கொண்டே போகிறது”, மகேஷ் பெரியப்பாவைக் கேட்டார்.

 

“ மகேஷ் நீர் நினைக்கிறீரா எனக்கு சாந்தியின் திருமணத்தில் அக்கரை இல்லை என்று? எனக்கும் பேரப்பிள்ளைகளைக் காண ஆசை தான். திருமணத்தைபற்றி அவவோடு நான் சில மாதங்களுக்கு முன் நான் பேசியபோது இப்போ அவசரம் இல்லை அப்பா என்று விட்டாள.; ஆனால் இப்போது ராமின் வருகையால் அவளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைக் கண்டேன். அவர்களுக்கிடையே ஒரு நல்ல உறவு வளர்வiதைக் கண்டேன் மகேஷ்;”

 

”என்ன நீங்கள் சொல்லுகிறீர்கள் பெரியப்பா”?

 

“உமக்குள் வைத்துக்கோளளும், அவர்களுக்கிடையே ஒரு பரஸ்பர நட்பு வளருகிறது. அவர்கள் இருவரும் தீர்மானித்து திருமணம் செய்;ய ஒப்புதல் தந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்றார் டாக்டர் ராஜா.

 

“ ஆனால் பெரியப்பா” என்று வார்தைகளை அழுத்திச் சொன்னார் மகேஷ்.

 

“ மகேஷ்  நீர் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்குத் தெரியும். ராம் ஓரு கால் இல்லாதவர். சாந்தி அந்தக் குறையோடு அவரை ஏற்றுக்;கொள்வாளா என்பது தானே உம் மனதில் தோன்றிய கேள்வி”?

 

“ஆம் பெரியபப்பா”

 

“ சாந்தி ஒரு முற்போக்குச் சிந்தனைகள் உள்ளவள். சாதி, மதம், அந்தஸ்த்து, அங்கக் குறைகள் பாராதவள். தன் மனதில் ஒருவரை பிடித்துக்கொண்டால் பிறகு அவள் மனதை மாற்றமுடியாது” என்றார் டாக்டர் ராஜா.

 

மகேஷ் ஜோனைப் பார்த்தார். அவருக்குச் சாந்தியைப் பற்றிய தங்கள் இருவரது பேசியது புரிந்துவிட்டது என்பதை தன் புன்முறுவல் மூலம் காட்டினார்.

 

“என்ன ஜோன் உமக்கு டாக்டர் ராஜாவும் நானும்; சாந்தியைப் பற்றி பேசியது புரிந்து விட்டதா?” மகேஷ் ஜோனைக் கேட்டார் ஆங்கிலத்தில்.

“ஓரளவுக்கு ஊகித்துவிட்டேன்.; மகேஷ், சாந்திக்கு எது விருப்பமோ, அவவின் விருபப்படி செய்யட்டும். எனக்கு ராமைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. திறமைசாலி. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலை சாந்தியொடு ராமுக்கு நல்லாக ஒத்துப்போகும்” என்றார் ஜோன்.

 

 

********

Series Navigationபூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *