சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

This entry is part 10 of 14 in the series 6 நவம்பர் 2016

கே.எஸ்.சுதாகர்

பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் – கட்டுரை

சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன்.

“எனது மகள் primary school இல் இருந்து secondary school இற்கு படிக்கப் போக இருக்கின்றார். மெல்பேர்ண் நகரத்தில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியான Mac.Robertson Girls’ High School இற்குப் போவதற்காக அவர் முயற்சி எடுத்து வருகின்றார். BENDIGO இல் ‘JOSS HOUSE’ என்ற எங்கள் கோவில் உள்ளது. அங்கே போய் வந்தால் நினைத்த காரியம் பலிக்கும் என்பார்கள். மகளின் பரீட்சைக்கு முன்பதாக நாங்கள் அங்கே போய் வந்தோம்” அவர் சொன்னார்.

அதற்கடுத்த வார இறுதி நாட்களில் நான் பென்டிக்கோ சென்றிருந்தேன். வெள்ளை இனத்து தன்னார்வத் தொண்டர் ஒருவர் அங்கே வேலை செய்கின்றார். அவர் ‘ஜொஸ் இல்லம்’ பற்றித் தரும் விளக்கம் அற்புதமானது. அவர் தனக்குத் தெரிந்த விபரங்களை மிகவும் ஆர்வத்துடன் தெரியப்படுத்தினார்.

1850 ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளில் முதன்முதலாக விக்டோரியாவில் பென்டிக்கோவில் தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. மெல்பேர்ன் நகரில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட நகரம் ’பென்டிக்கோ’. கிட்டத்தட்ட காரில் போவதானால் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் எடுக்கும்.

பென்டிக்கோவின் வரலாறு தங்கத்துடன் ஆரம்பிக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் தங்கம் அகழ்ந்தெடுக்கும் இடங்கள் எல்லாம் சீனர்களின் குடியிருப்புகள் ஆயின. சீனாவின் CANTON மாகாணத்தில் நிலவிய அரசியல் பொருளாதார நெருக்கடிகளினால் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், கலிபோர்ணியாவில் உள்ள தங்கவயல் போன்ற இடங்களிற்குச் சென்றார்கள். அந்தக் காலப்பகுதியில் ‘பென்டிக்கோ தங்கவயல்’ பற்றிய செய்தி கடல் வணிகர்களாலும், ஏற்கனவே அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த சீனர்களாலும் CANTON வாழ் மக்களுக்குப் பரப்பப்பட்டது. இதனால் ஏராளமான சீனர்கள் பென்டிக்கோ வந்தடைந்தார்கள்.
central_bendigo_from_botanic_gardens
இவர்களில் பெரும்பான்மையோர் GUILDFORD என்ற இடத்தில் குடியிருந்தார்கள். இது பலறாற்றிற்கும் பென்டிக்கோவிற்கும் நடுவில், CASTLEMAINE என்ற இடத்திற்கு அண்மையாக இருந்தது. GUILDFORD இற்கும் பென்டிக்கோவிற்கும் இடையில் புகையிரதம் ஓடியது. 1857 காலப்பகுதியில் 35,000 சினர்கள் அங்கிருந்ததாகக் கணிப்பிடப்படுகின்றது.

இவர்களின் வருகைக்கு இங்கிருந்த ஐரோப்பியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இதனால் 1855 இல் இவர்களின் வருகையை மட்டுப்படுத்தினார்கள்.

1871 காலப்பகுதிகளில் பெண்டிக்கொ (BENDIGO), பலறாற் (BALLARAT), காசில்மைன் (CASTLAMAINE) என்ற இடங்கள் தங்கவியாபாரத்தில் சுறுசுறுப்பாக இருந்தன.

1876 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயினால் GUILDFORD கிராமத்தின் பெரும்பகுதி அழிவுக்குட்பட்டது.

பென்டிக்கோவில் தங்க உற்பத்தி படிப்படியாகக் குறைய, சீனர்களில் பெரும்பான்மையோர் தங்கம், பணம் என்பவற்றுடன் தாய்நாடு சென்றுவிட, ஒரு சிறுதொகையினர் விக்டோரியாவில் தங்கிக் கொண்டனர். 1865 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் ஏறக்குறைய 23,000 சீனர்கள் தாய்நாடு சென்றதாகவும் 2000 பேர்கள் வரையில் பென்டிக்கோவில் தங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அப்பொழுது சீனப்பெண்கள் மிகக்குறைந்தளவில் இங்கு இருந்தபடியால், சீனர்களில் சிலர் ஐரோப்பியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் தங்கவேட்டை அங்கே கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் தொடர்ந்தது.
mount_alexander_diggings
எங்கெங்கு சீனர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு அருகாமையில் ‘ஜொஸ் இல்லம்’ (JOSS HOUSE) இருந்தது. ‘JOSS HOUSE’—சீனர்களின் வழிபாட்டுத்தலம்—‘joss’ என்பது கடவுளைக் குறிக்கும் போத்துக்கல் சொல்லான ‘dios’ மற்றும் லற்றின் சொல்லான ‘deus’ இலிருந்து வழிவந்ததாகும்.

அந்தக்காலத்தில் பென்டிக்கோவில் இருக்கும் Emu point எனப்படும் பிரதேசத்தில் நான்கு ஜொஸ் இல்லங்கள் இருந்தன. தற்போது ஒரு ‘ஜொஸ் இல்லம்’ மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இது உள்ளூரில் செய்யப்பட்ட செங்கற்களினாலும் மரத்தினாலும் ஆனது. வீரத்தின் அடையாளத்தைக் குறிக்கும் சீனர்களின் பாரம்பரிய நிறமான சிகப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த ஆலயம் – மத்தியில் பிரதான மண்டபம், வலதுபுறம் மூதாதையர்களின் ஆலயம் (Ancestral Temple), மற்றும் பாதுகாப்பவரின் இல்லம் (Caretaker’s Residence) என மூன்று பகுதிகளைக் கொண்டது. இங்கு (ALTAR) பலிபீடம் இருக்கின்றது. கோவிலின் பிரதான தெய்வம் KWAN GUNG.

இது தற்போது பாதுகாக்கப்படவேண்டிய தேசியச் சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதே போல மேலும் இரண்டு ‘ஜொஸ் இல்லங்கள்’ விக்டோரியாவில் இருக்கின்றன. ஒன்று மெல்பேர்ண் நகரத்திலும் மற்றது தெற்கு மெல்பேர்ணிலும் உள்ளன.

இங்கே நான் பார்த்தவற்றில் இரண்டு விடயங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. ஒன்று இந்துக்கடவுள் படம். அந்தப்படம் தான் அங்கு வேலைக்கு வரும்போதே அங்கிருந்தத்தாக அவர் சொன்னார். மற்றது துணியினால் செய்யப்பட்ட குழந்தை ஒன்றின் உருவ பொம்மை. பிள்ளை வரம் வேண்டி தம்பதிகள் குடுத்துவிட்டுப் போனது. பின்னர் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து, அந்தத் தம்பதியினர் குழந்தை சகிதம் அங்கே வந்ததாகவும் அந்தக் குழந்தையின் மழலைச் சத்தம் ஜொஸ் ஹவுஸ் எங்கும் ஒலித்தத்தாகவும் அவர் சொன்னார்.

இந்த பென்டிக்கோ நகரம் பற்றியதான சுவையான ஒரு தகவலை எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஒருமுறை அவர் பென்டிக்கோ நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நள்ளிரவு நேரம் ஆற்றுநீர் சலசலத்துப் பாய்ந்து ஓடும் சத்தம் அவர் கட்டிலின் கீழே மெதுவாகக் கேட்டது. தூக்கம் கலைந்து, எழுந்தார். சத்தம் வரும் திசை நோக்கி காதைக் கூர்மையாக்கினார். எங்கோ ஒரு அடி ஆழத்தில் நிலத்தின் கீழ் இருந்து வரும் ஓசை போல் அது இருந்தது.

மறுநாள் ஹோட்டல் உரிமையாளரிடம் அதை அவர் விசாரித்தபோது, மேலும் பலர் அவ்வாறு சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். பழைய தங்கச்சுரங்கம் ஒன்று அருகாமையில் இருக்க வேண்டும், ஒருவேளை இந்தக் கட்டடத்திற்குக் கீழாக அதன் பாதையொன்று இருக்கலாம் என அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

Series Navigationதொடுவானம் 143. முறுக்கு மீசைகிளியாகிப் பறக்கும் கனி
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *