இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

This entry is part 18 of 19 in the series 20 நவம்பர் 2016

இரு கோடுகள்
(முதல்பாகம்)
தெலுங்கில் : ஒல்கா
தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

olgaஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது.
சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களிலும் யாருடனும் நட்பு ஏற்படவில்லை. ஆனால் மோகன் போன்ற சிலபேருடன் அறிமுகம் கூட நீடிக்காது என்று கச்சிதமாகப் புரிந்து விட்டது.
மோகனுக்கு சப்ஜெக்ட் சரியாக தெரியாது. வேலையும் செய்ய மாட்டான். வெற்றுப்பேச்சு பேசி பொழுது போக்க வேண்டுமென்று பார்ப்பான். நான்கு மாதங்களாக தேவையற்ற சந்தேகங்களுடன் சாந்தாவின் நேரத்தை வியர்த்தமாக்கிக் கொண்டிருந்தான்.
சாந்தாவின் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் மோகன் வந்து உட்கார்ந்து கொண்டான். வேலை எதுவும் செய்யாமலேயே தான் செய்யும் வேலை எவ்வளவு உயர்வானது என்று அரைமணி நேரம் பேசினான்.
சாந்தா மறுபேச்சு பேசாமல் கேட்டுக் கொண்டாள்.
மோகனுக்கு பேசவேண்டிய வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் விட்டன. சாந்தாவை எப்படியாவது பேச வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டவன் போல் இடத்தை விட்டு நகரவில்லை.
சாந்தா வேறு வழியில்லாமல் தேநீர் வரவழைத்தாள்.
“உங்களுக்கு சொந்த ஊர் எது?” உதவாக்கரைப் பேச்சைத் தொடங்கினான்.
நூற்றுக் கிழவனைப் போல் கேட்டுக் கொண்டிருந்த மோகனைப் பார்த்தால் சிரிப்பு வந்தது சாந்தாவுக்கு. அவனுக்கு வயது முப்பத்தேழு இருக்கலாமோ என்னவோ.
“குண்டூர்! அக்ரஹார வீதியில் இருந்தோம்.” வேண்டுமென்றே அழுத்திச் சொன்னாள்.
“என் மாமியாரின் ஊரும் குண்டூர் தான்” என்றான்.
அப்படியா என்பது போல் தலையை அசைத்தாள் சாந்தா.
“என் மனைவி கூட அங்கேதான் படித்தாள், பெண்கள் கல்லூரியில். பி.எஸ்.ஸி.யில் கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறாள்.
இந்த முறை சாந்தாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. “உங்கள் மனைவியின் பெயர் என்ன?”’
“ஷோபா! ஷோபாதேவி!”
“ஷோபா! நீங்க ஷோபாவின் கணவரா?” வியப்புடன் பார்த்தாள் சாந்தா.
“ஷோபாவை உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியுமாவா? நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். உங்கள் திருமணத்துக்கு நானும் வந்திருந்தேன். உங்களை அடையாளம் தெரிதுகொள்ள முடியாமல் போய்விட்டது. அப்பொழுது மணமகன் கெட்டப்பில் பார்த்தேன் இல்லையா, அதான். ஷோபா எப்படி இருக்கிறாள்?”
“நன்றாக இருக்கிறாள். ரொம்ப நன்றாகவே இருக்கிறாள். இரண்டு ஆண் குழந்தைகள். சொந்த வீடு வாங்கிவிட்டேன். எல்லா வசதிகளும் இருக்கு. எந்த குறையும் இல்லை.”
“ஷோபாவை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? நாட்களாவது? பன்னிரண்டு ஆண்டுகள்! உங்கள் திருமணத்திற்குப் பிறகு மறுபடியும் பார்க்கவே இல்லை.”
“அப்படியானால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. எங்கள் வீட்டுக்கு வாருங்கள். சாப்பிடவே வந்து விடுங்கள்.” மோகன் அழைப்பு விடுத்தான்.
“அப்படியே ஆகட்டும். கட்டாயம் வருகிறேன். ஷோபாவைப் பார்ப்பதற்காகவாவது வருகிறேன்.”
திடீரென்று சாந்தா தன் மனைவிக்கு சிநேகிதியாக இருப்பது மோகனுக்கு மிகவும் பெருமையாய் இருந்தது.
அந்த சந்தோஷத்தில் சாந்தாவிடமிருந்து சீக்கிரமாக விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
ஷோபாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தாலே சாந்தாவுக்கு சந்தோஷமாக இருந்தது.
ஒரு காலத்தில் உயிர் சிநேகிதிகளாய் இருந்து வந்தார்கள். ஷோபாவின் திருமணத்துடன் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. வெறும் சிநேகிதிகளாக கூட எஞ்சியிருக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தான்தான் என்று சாந்தா எப்போதுமே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்.
அந்த நாட்களெல்லாம் சாந்தாவின் நினைவுக்கு வந்தன.
தான் அன்று அவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்க வில்லை என்றால் ஷோபாவின் நட்பை இழந்திருக்க மாட்டாளோ.
இப்போ ஷோபா தன்னை பார்த்தால் நட்புடன் பேசுவாளா? இன்முகத்துடன் வரவேற்பாளா? தன்னைப் பார்த்துச் சிரிப்பாளா?
ஷோபாவின் சிரிப்பு எவ்வளவு நன்றாக இருக்கும்! தான் பேசிய பேச்சுகளை மறந்து போய் சிரிப்பாளா?
ஷோபாவைப்பற்றி முழுவதுமாக தெரிந்த பிறகும் தான் அப்படி ஏன் பேசினாள்?
அப்படிப் பேசாமல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை? சாந்தாவுக்கு தன்னுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தன. ஷோபாவும் தானும் சேர்ந்து அலைந்து திரிந்த கல்லூரியின் வரண்டாக்கள், அறைகள், அந்த வழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அரச மரத்தின் கீழே இருந்த திண்ணை, பட்டன் ரோஸ் கொடி, ஷோபாவின் வீட்டு கொல்லையில் இருந்த கொய்யா மரம் எல்லாம் நினைவுக்கு வந்தன. அதே நேரத்தில்…..
*****
“ஷோபா! பேச்சுப் போட்டிக்கு உன் பெயரைக் கொடுத்து விட்டாயா இல்லையா?” தெலுங்கு லெக்சரர் ராஜலக்ஷ்மி வகுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் கேட்டாள்.
“இல்லை மேடம்!” எழுந்து நின்று பதில் சொன்னாள் ஷோபா.
“ஏன்? என்ன ஆச்சு?” ராஜலக்ஷ்மிக்கு வியப்பாக இருந்தாலும், மேற்கொண்டு கேட்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. ஏற்கனாவே பிசிக்ஸ் லெக்சரர் வாசலுக்கு வந்துவிட்டிருந்தாள்.
ஷோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சாந்தாவும் வியப்படைந்து போனாலும் அப்படியே சும்மா இருக்க முடியவில்லை அவளால். லெக்சரர் அட்டெண்டென்ஸ் எடுத்து முடிக்கும் வரையில் தொணத்தொணத்துக் கொண்டே இருந்தாள்.
“ஏன் பெயரைக் கொடுக்கவில்லை? நாம் இரண்டு பேரும் ஒரு டீம் ஆக போகணும் என்று நினைத்தோம் இல்லையா? நேற்றுகூட வருவதாகத்தானே சொன்னாய்?” என்று துளைத்தெடுத்துவிட்டாள்.
ஷோபா முறுவலுடன், “வகுப்பு முடிந்தபிறகு சொல்கிறேன். அதுவரையில் வாயை மூடிக்கொண்டு இரு” என்று கடிந்து கொண்டாள்.
வகுப்பு முடிந்த பிறகு இருவரும் கேட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்துகொண்டார்கள்.
“இப்பொழுது சொல். நாமிருவரும் டீம் ஆக போகலாம் என்று இருந்தோம் இல்லையா? என்னால் உன் அளவுக்கு நன்றாக பேச முடியாது என்று தானே?” நிஷ்டூரமாகச் சொன்னாள் சாந்தா.
“சீ… அப்படி ஏன் நினைக்கிறாய்? எங்கள் வீட்டில் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்” என்றாள் ஷோபா நிர்விசாரமாய்.
“ஏன் அப்படி? வேண்டாம் என்று சொல்லுவானேன்?”
சற்றுப் பொறுத்து காரணம் சொன்னாள் ஷோபா.
“போட்டிகள் நடக்கப் போவது ஹிந்தூ கல்லூரியில். அந்த கல்லூரி மாணவர்கள் ரௌடிகள். மாலை ஆறுமணிக்கு தொடங்கும் போட்டி முடிவதற்கு ஒன்பதோ பத்தோ ஆகி விடும். இரவு நேரத்தில் அங்கிருந்து எப்படி வருவாய்? வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.” குறைப்பட்டுக் கொள்வதுபோல் சொன்னாள் ஷோபா.
“எல்லா விஷயத்தையும் அவர்களிடம் எதற்காக சொன்னாய்? எங்கே போட்டி நடக்கிறது? எப்போ என்றெல்லாம் சொல்ல வேண்டுமா? நீ போட்டியில் கலந்துகொள்ளும் விஷயத்தையே அவர்களிடம் சொல்லா விட்டால்தான் என்ன?”
“சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? வீட்டில் நீ சொல்ல வில்லையா?”
‘நன்றாகச் சொன்னாய் போ. எதற்காகச் சொல்வது? ‘பத்து மணி வரையிலும் போட்டி இருக்குமா? அந்த நேரத்திற்கு நான் வருகிறேன். பயப்பட வேண்டாம். போய் வா’ என்று சொல்பவர்களிடம் சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விஷயத்தைச் சொன்னதுமே போகக் கூடாது என்று சொல்பவர்களிடம் வேலை மெனக்கெட்டு சொல்வானேன்?” எரிச்சல் அடைந்தாள் சாந்தா.
“போட்டி நடக்கும் அன்றைக்கு வீட்டுக்கு தாமதமாக போனால் ஒன்றும் சொல்ல மாட்டார்களா?”
“சொல்லுவார்கள். நாம் மட்டும் சும்மா இருப்போமா? கல்லூரியில் ஏதாவது வேலை இருக்காதா? தாமதம் ஆகாதா? அவர்களிடம் சண்டை போட மாட்டேனா? இதற்கு போய் முன் அனுமதி வாங்க வேண்டுமா?” கோபமாகச் சொன்னாள்.
“நான் மட்டும் அம்மா, அப்பாவிடம் சொல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். அவர்கள் வேண்டாம் என்ற காரியத்தை அசலுக்கே செய்யமாட்டேன்.”
திடமாக, அமைதியாக, மனப்பூர்வமாகச் சொல்லிக்கொண்டிருந்த ஷோபாவைப் பார்த்தபடி நின்றுவிட்டாள் சாந்தா.
ஷோபா எவ்வளவு நல்லவள்! எவ்வளவு புத்திசாலி! எவ்வளவு விவேகத்துடன் யோசிக்கிறாள் என்று நினைத்தாள்.
சாந்தா மட்டுமே இல்லை. ஷோபாவைப் பற்றி அப்படி நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஷோபாவைப் பார்க்கும் போதே மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்.
அழகு மட்டுமே இல்லை. எப்போதும் முறுவலுடன் இருக்கும் ஷோபாவின் முகத்தை பார்த்துகொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். அந்த முறுவல் இதழ்களை விட்டு பிரியும் சூழ்நிலையை வரவிட மாட்டாள். இங்கிதம் தெரிந்தவள்.
எப்போது எந்த காரியத்தைச் செய்ய வேண்டுமோ, அதை உடனே செய்து விடுவதால் யாருடைய கோபத்திற்கும் ஆளாக மாட்டாள். எல்லா விஷயங்களிலும் அளவோடு இருப்பாள். ஒரு வார்த்தை அதிகம் பேசமாட்டாள். செய்யக்கூடாத காரியத்தை உயிரே போனாலும் செய்ய மாட்டாள். சிலசமயம் சாந்தாவுக்குக் கோபம் வரும்.
வருடத்தில் ஒரு முறையாவது கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்குப் போகவில்லை என்றால் எப்படி? ஷோபா ஒருநாளும் அப்படி சினிமாவுக்கு வந்தது இல்லை. அதற்காக வகுப்புக்கு மட்டம் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போகும் சிநேகிதிகளை தடுக்க மாட்டாள். தாழ்வாக நினைக்கவும் மாட்டாள். நட்புடன் இருப்பாள். வேண்டிய உதவிகளை எல்லாம் செய்வாள். இறுதி வரையில் ஒத்துழைப்பு தருவாள். தான் மட்டும் வர மாட்டேன் என்று சொல்லி விடுவாள். அதற்காக தான் ஒருத்தி மட்டும் வகுப்பிற்குச் சென்று பாடத்தைக் கேட்பாளா என்று கேட்டால் நிச்சயம் மாட்டாள். வீட்டுக்குப் போய் விடுவாள்.
வீட்டில் அம்மாவிடம், “எல்லோரும் சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள். மேடம் எப்படியும் கிளாஸ் எடுக்க மாட்டாள் என்பதால் வந்து விட்டேன்” என்று சொல்லுவாள். மறுநாள் காலையில் சினிமா ஹாலில் நடந்த கூத்தை எல்லாம் சினேகிதிகள் சொல்லும்போது முறுவலுடன் கேட்டுக் கொள்வாள். மனபூர்வமாக சந்தோஷப்படுவாள். முன் வரிசையில் அமர்ந்து இருந்த பசங்களை டீஸ் செய்து அழ வைத்ததற்கு ராஜஸ்ரீக்கு ஷேக் ஹேண்ட் தருவாள். ஆனால் இந்த கலாட்டாவில் தான் பங்கு பெறாமல் போனதற்கு ஒருநாளும் வருத்தப்பட மாட்டாள்.
அவளைப் பார்த்து எப்படி கோபம் கொள்வது என்று சாந்தாவுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களை மணிக்கணக்கில் சாந்தாவுக்கு சொல்லித் தருவது அவள்தான். பேச்சுப் போட்டி ஏதாவது வந்தால் நூலகத்திற்குகுச் சென்று தனக்கும், சாந்தாவுக்கும் வேண்டிய தகவல்களை எல்லாம் தானே சேகரித்துக்கொண்டு வருவாள்.
ஷோபா இந்த அளவுக்கு தயாரித்துக் கொண்டுத்தாலும் சாந்தாவால் நன்றாக பேச முடியாது. ஷோபா மலர்ந்த முகத்துடன், ஒழுங்கு முறையுடன் எதிர் கட்சியினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எந்த தயக்கமும் இல்லாமல் தன் வாதத்தை எடுத்துரைப்பாள். அவள் இருக்கும் டீம் தான் வெற்றிபெறும்.
எப்படியாவது, ஷோபாவை எந்த விஷயத்திலாவது தனக்குப் பின்னால் இருக்கும்படியாக செய்ய வேண்டும் என்று சாந்தா அவ்வப்பொழுது முயற்சி செய்வாள். ஷோபா களத்தில் இருக்கும் வரையில் அது ஒருநாளும் சாத்தியப் படவில்லை. ஆனால் ஷோபா எல்லோரையும் விட முன்னால் இருப்பதற்கு யாரும் பொறாமை மட்டும் கொண்டது இல்லை. அவளும் மற்றவர்கள் பொறாமைப் படும் விதமாக இருந்ததும் இல்லை. அவள் கால்கள் முன்னால் இருந்தாலும் கைகள் மட்டும் சினேகிதிகளின் தோள்கள் மீதுதான் இருக்கும். ஷோபாவின் மீது எதற்காக கோபம் கொள்ள வேண்டும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஷோபாவைப் போல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை என்று தான் சாந்தாவுக்கு தவிப்பாக இருந்தது.
“தனக்கு திருப்தி என்பது இல்லை. போதும் என்ற மனப்பான்மையும் இல்லை. எல்லாம் தனக்குத்தான் வண்டும். அதனால் எத்தனை சிக்கல்கள்? எவ்வளவு அமைதியின்மை? பேச்சுப் போட்டி விஷயத்தை வீட்டில் சொன்னால் வேண்டாமென்று மறுப்பார்கள். தான் சொல்ல மாட்டாள். அன்று இரவு தாமதமாக வீட்டுக்குப் போய் வெசவுகளை வாங்கி கட்டிக்கொள்வாள். அழுவாள். வாங்கிய பரிசைப் பார்த்து, “ரொம்ப பெருமைதான்!” என்று எள்ளி நகையாடும் அண்ணனைப் பார்த்து கோபத்தால் கொந்தளித்துப் போவாள். மனம் முழுவதும் அல்லகல்லோலமாகி விடும். இதெல்லாம் வேதனையாக இருந்தாலும் போட்டிக்குப் போகாமல் தன்னால் இருக்க முடியாது. ஷோபாவால் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது? தன்னால் ஏன் முடியவில்லை?
இதுமட்டுமே இல்லை. சினிமா, டிராமா, கூட்டங்கள் என்று எல்லாவற்றுக்கும் வீட்டில் சொல்லாமல் போய்க் கொண்டுதான் இருந்தாள் சாந்தா. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கல்லூரியில் மறியல் போராட்டம் நடந்த போது அவள்தான் முதல் இடத்தில் இருந்தாள்.
ஷோபா நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்திருந்தாள். சாந்தா மட்டும் கல்லூரி வாசலுக்கு முன்னால் மறியல் செய்தபடி உட்கார்ந்து லெக்சரர்களின் பார்வையில் பட்டதில் பிரின்சிபால் வீட்டுக்குத் தகவல் அனுப்பிவிட்டாள்.
அன்று அம்மா எப்படி எல்லாம் ஏசினாள்! அப்பா தலைமுடியைப் பற்றிக்கொண்டு எப்படி உலுக்கி எடுத்தார்? அண்ணன் எப்படி ஏளனமாக சிரித்து நக்கலடித்தான்? அன்று முழுவதும் அழுதுகொண்டுதான் இருந்தாள். அத்தனை அழுகையிலும் எ.ஸி. கல்லூரி மாணவர்கள்.. முக்கியமாக ராம்குமார் சொன்ன வார்த்தைகள் நியாயமாகத் தோன்றின. மறியல் செய்தது மிகவும் சரி என்று தோன்றியது. அதைப்பற்றி வீட்டில் சொன்ன போது மேலும் திட்டினார்கள்.
“எதற்காக தான் இவ்வளவு அமைதியின்மையை வலிய வரவழைத்துக்கொள்கிறாள்? ஷோபாவைப் போல் நிம்மதியாக அம்மா, அப்பா வேண்டாம் என்று சொன்ன காரியத்தை செய்யாமல் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
செய்ய வேண்டிய வேலையை அந்தந்த நேரத்தில் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
“பஸ்ஸுக்கு நேரமாச்சு. உன் தவம் எதற்காக?”
ஷோபா சாந்தாவைத் தட்டி எழுப்பினாள்.
“அப்படி என்றால் பேச்சுப் போட்டியில் நான் கலந்து கொள்கிறேன். பெயர் கொடுத்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே ஆங்கிலத் துறையை நோக்கி ஓட்டமெடுத்தாள் சாந்தா.
“நாளைக்குக் கொடுக்கலாம் இல்லையா. பஸ் போய் விடும்.”
ஷோபா சொல்லிக் கொண்டிருந்ததை காதில் வாங்கவே இல்லை. ஷோபா கல்லூரி கேட்டைத் தாண்டும்போது பேருந்து வந்து கொண்டிருந்தது. சாந்தாவுக்காக காத்திருக்காமல் ஷோபா பேருந்தில் ஏறிவிட்டாள்.
அதன் பிறகு நான்கு நாட்கள் சாந்தாவும் ஷோபாவும் சேர்ந்து பேச்சுப்போட்டிக்கு தேவையான சமாச்சாரத்தை சேகரித்தார்கள். ஷோபாதான் அதிகமாக மெனக்கெட்டாள். போட்டி நடந்த மறுநாள் காலையில் எட்டு மணிக்கு சாந்தாவின் குரலைக் கேட்டு வியப்புடன் வெளியே வந்தாள் ஷோபா.
அப்படியே அவளைக் கட்டிக் கொண்டு விட்டாள் சாந்தா.
என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டிருந்த ஷோபாவிடம், “இதோ பார்!” என்று சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்த பெரிய கோப்பையை காண்பித்தாள்.
“கங்கிராட்ஸ்! மொத்தத்தில் சாதித்து விட்டாய்!” சிரித்தபடி சாந்தாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ஷோபா. “அம்மா! அம்மா!” என்று பரபரப்புடன் அம்மாவை அழைத்து சாந்தா சாதித்த வெற்றியைப் பற்றி சொன்னாள்.
“இதோ வருகிறேன்” என்று சமையல் அறை பக்கம் சென்றாள்.
“ஷோபா இந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டிருந்தால் இந்த பரிசு அவளுக்குத்தான் கிடைத்திருக்கும்.” ஷோபாவின் தாய் அன்னபூர்ணாவிடம் சொன்னாள் சாந்தா.
“நள்ளிரவு வரையில் வீட்டுக்கு வந்து சேராமல் ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்து, கோப்பைகளை சம்பாதிப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? எனக்கு விருப்பம் இல்லை” என்றாள் அந்தம்மாள்.
சாந்தாவின் உற்சாகம் வடிந்துவிட்டது. அதற்குள் ஷோபா காபி எடுத்து வந்தாள். ஷோபாவின் தங்கையும், தம்பியும் வந்து சாந்தாவைப் பாராட்டினார்கள்.
“உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்?” ஷோபா கேட்டாள்.
“என் அண்ணனுக்கு இதுபோன்ற கோப்புகள் கிடைக்கவில்லையே என்ற கவலை அம்மாவுக்கு, என்னைப் பாராட்டினால் தன்னுடைய பெரிய மனுஷத்தன்மைக்கு பங்கம் வந்து விடும் என்று அப்பாவின் நினைப்பு. என்னைப் பார்த்து பொறாமையும், தீசலும் கலந்த ஏளனம் அண்ணனுக்கு.”
“சரிதான். சும்மா இரு. குழந்தைகளைப் பாராட்டக் கூடாது என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள். ஆனால் உள்ளூர சந்தோஷம் இல்லாமல் இருக்காது.”
‘அதுபோல் என்னாலும் சமாதானமடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ நினைத்துக் கொண்டாள் சாந்தா.
“உண்மையிலேயே உனக்கு வருத்தமாக இல்லையா? நீ மட்டும் போட்டிக்கு போயிருந்தால் இந்த பெயரும் புகழும் உனக்குத்தான் கிடைத்திருக்கும்?”
கல்லூரியில் லேக்சரர்கள், பிரின்சிபால், கூட படிக்கும் மாணவிகள் எல்லோரும் தன்னைப் பாராட்டும் போது திக்குமுக்காடிக் கொண்டே, தன்னுடன் சேர்ந்து சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்த ஷோபாவிடம் கேட்டாள் சாந்தா.
“சீ.. வருத்தமாவது? பைத்தியக்காரத்தனமாய் பேசுவதில் கூட உனக்குத்தான் முதல் பரிசு கொடுக்கணும்.”
இன்னொருமுறை கல்லூரியில் கன்யாசுல்கம் நாடகம் போடுவதாக இருந்தபோது…
எல்லோரிடமும் சொல்லவில்லையே தவிர ஷோபா சாந்தாவிடமும், ராஜலக்ஷ்மியிடமும் சொன்னாள்.
மதுரவாணி பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வீட்டில் கேட்டு விட்டார்களாம். நாடகத்தில் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார்களாம். ஷோபா நயமாய் எடுத்துச் சொன்ன பிறகு மதுரவாணி வேடம் அல்லாமல் புச்சம்மா வேடம் போடு என்று சொன்னாராம் அவளுடைய அப்பா. அந்த செய்தியை கோபமாக அல்லாமல் அமைதியாக ராஜலக்ஷ்மி மேடத்திடம் சொன்னதைப் பார்த்து சாந்தாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
“மதுரவாணியாக நடித்தால் உன் வீட்டாருக்கு என்ன நஷ்டம்?” தாங்க முடியாமல் கேட்டு விட்டாள்.
“அந்த வசனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர்கள் பயம்! விழாவுக்கு வந்தவர்கள் பிற்பாடு என்னை மதுரவாணி என்று அழைப்பது, பசங்கள் யாரவது அந்த வசனங்களைப் பேசி எனக்கு தொல்லை கொடுப்பது இதெல்லாம் அவர்களுக்கு விருப்பம் இல்லை.”
“உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நீ தானே சமாளிக்கப் போகிறாய்? நடுவில் அவர்களுக்கு என்ன வந்தது?”
“நான் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய எண்ணம்.”
“அப்போ நான் அந்த வேடம் போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளலாமா?”
ஷோபா சிரித்துவிட்டு பேசாமல் இருந்தாள்.
சாந்தா மேலும் அழுத்தமாகக் கேட்டாள். “நான் போட்டாலும், வேறு யார் போட்டாலும் அந்த பசங்கள் கிண்டலடிக்கத்தானே போகிறார்கள்? அந்த அவமானத்தை யாராவது ஒருத்தர் சகித்துக் கொள்ள வேண்டியது தானே?”
“நான் சகித்துக்கொள்வது எங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்காது. அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.”
“எங்க அம்மா அப்பாவால் கூட தாங்கிக்கொள்ள முடியாது. எங்க அண்ணன் வீட்டில் பெரிய ரகளையை உண்டாக்கி விடுவான். என்னுடைய படிப்பபை நிறுத்தும் அளவுக்கு போய் விடுவார்கள். ஆனாலும் சரி நான் மதுரவாணியாக நடிக்கத்தான் போகிறேன்.” பிடிவாதமாகச் சொன்னாள் சாந்தா.
“வேண்டாம் என்று நான் சொன்னேனா?”
“நீ ஏன் இதுபோல் எல்லோரையும் எதிர்க்க மாட்டேன் என்கிறாய்? எதிர்க்காமல் எப்படி இருக்க முடிகிறது உன்னால்?”
“எனக்கு விருப்பம் இருக்காது. அம்மா அப்பா என்னுடைய நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்று தோன்றும். அவர்கள் சொன்னது போல் நடந்துகொண்டு அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தோன்றும்.”
கொஞ்சம் கூட தயங்காமல், தடுமாறாமல் பதில் சொன்ன ஷோபாவை ரோஷத்துடன் பார்த்தாள் சாந்தா. “உன்னுடைய ரசனைகளை எல்லாம் குழி தொண்டி புதைத்துவிடு!”
“ரசனைகள்தானே.” ஷோபா சிரித்துவிட்டாள்.
கடைசியில் அந்த நாடகத்தில் சாந்தா மதுரவாணியாக நடித்தாள். அந்தச் சிரிப்பு, புருவத்தை நெளிப்பது, கைகளை சுழற்றுவது எல்லாம் ஷோபாவிடம்தான் கற்றுக்கொண்டாள். நாடகம் நடந்த அன்று சாந்தாவின் மீது பாராட்டு மழை பொழிந்தது. நகரத்தில் இருந்த இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த நாடகத்தை, மதுரவாணியாக நடித்த சாந்தாவை வானளவுக்கு புகழ்ந்தார்கள்.
சாந்தாவுக்கு ஷோபாவைப் பார்க்கும் போது அழுகைதான் வந்தது. ஷோபா சந்தோஷமாக சாந்தாவைக் கட்டிக்கொண்டு பாராட்டினாள்.
கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஷோபா கல்லூரிக்கு பிரசிடென்ட் ஆவாள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. தேர்தல் அனாவசியம் என்று கூட நினைத்தார்கள்.
அதற்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. பி.ஏ. மாணவிகளுக்கும் பி.எஸ்.ஸி. மாணவிகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ஓரிருவருக்கு நடுவில் தொடங்கிய பிணக்கம் போகப்போக பெரிதாகி விட்டது.
எண்ணிக்கை வகையில் பார்த்தால் பி. ஏ. மாணவிகள்தான் அதிகம். அதனால் அவர்கள் இந்த பந்தயத்தில் ஒரு பகுதியாக கல்லூரி பிரசிடென்ட் ஆக அவர்கள்தான் வர வேண்டும் என்று நினைத்தார்கள். பி.எஸ்.ஸி. மாணவிகள் ஷோபாவின் பின்னால் நின்றார்கள். போட்டியை தவிர்க்க முடியவில்லை. பி.ஏ.மாணவிகள் முதலில் பாம்ப்லெட்ஸ் (துண்டுப் பிரசுரம்) கொண்டு வந்து கல்லூரி முழுவதும் விநியோகம் செய்தார்கள்.
தங்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள், டைம் டேபிள் அட்டைகள் வேண்டும் என்று பி.எஸ்.ஸி மாணவிகள் சொல்லி விட்டார்கள். இண்டர் படிக்கும் மாணவிகளின் வாக்குகளை, முதலாம் வருடம் பி.எஸ்.ஸி. படிக்கும் மாணவிகளின் வாக்குகளைப் பெற வேண்டியது மிகவும் முக்கியம். பிரசாரம் இல்லை என்றால் நடக்காது. துண்டுப் பிரசுரத்தை அச்சடிக்க வேண்டியதுதான் என்று எல்லோரும் முடிவு செய்தார்கள். அந்த பொறுப்பை சாந்தா ஏற்றுக்கொண்டாள். அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் பிரிண்டிங் பிரஸ் இருக்கிறது. மூன்றாவது வருடம் பி.எஸ்.ஸி படிக்கும் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் போட்டு ஐநூறு ரூபாய் வரையில் சேர்த்தார்கள்.
சாந்தா, ஷோபா, சரஸ்வதி சேர்ந்து டைம் டேபிள் கார்ட் டிசைன் செய்தார்கள். அன்று மாலை பிரஸ்ஸிலிருந்து தாமதமாக வீட்டுக்குப் போனதற்கு சாந்தா வசவுகளை வாங்கி கட்டிக்கொண்டாள்.
மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்து விட்டாள். பத்து பெண்கள் எட்டரை மணிக்கே வந்து கல்லூரி கேட அருகில் நின்று துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்யணும் என்று முடிவு செய்திருந்தார்கள். எல்லோரையும் விட முன்னதாக எட்டு மணிக்கே சாந்தா பெரிய பார்சலை சுமந்து கொண்டு வந்தாள்.
தன்னிவிட முன்னாடியே கேட அருகில் நின்னு கொண்டிருந்த ஷோபாவைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான். ஷோபா எந்தச் சூழ்நிலையிலும் ஒன்பதரைக்கு முன்னால் தான் வரப்போவதில்லை என்று ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள். அவளால் வரவும் முடியாது என்று சாந்தாவுக்குத் தெரியும். ஆனால் ஷோபா வந்து விட்டாள்.
“பரவாயில்லையே! உனக்கும் சுறுசுறுப்பு வந்து விட்டதே” என்றாள் பார்சலை அவளிடம் நீட்டிக் கொண்டே.
ஷோபா அதை வாங்கி கீழே வைத்தாள். “சாந்தா! நான் போட்டியில் பங்கு பெறவில்லை” என்றாள். சாந்தாவுக்கு ஒரு நிமிடம் வாயடைத்து போய் விட்டது.
ஷோபா வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் சாந்தாவுக்கு ஏற்கனவே இருந்து வந்தது. எல்லோரும் ஷோபாதான் பிரசிடென்ட் என்று பேசிக் கொண்டிருந்த போது, “உங்க வீட்டில் சம்மதிப்பார்களா?” என்று கேட்கவும் செய்தாள்.
“அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றாள் ஷோபா.
அம்மாவிடம் கேட்டாள். வந்து சந்தோஷமாக சொன்னாள். “ஒப்புக்கொண்டு விட்டார்கள். கல்லூரி வேலைகளை தவிர வெளிவேலைகள் எதுவும் இருக்காது என்று சொன்னதால் ஒப்புக் கொண்டார்கள். ‘எல்லோரும் நீ தான் வேண்டும் என்று சொல்லும் போது அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்கள” என்று சொன்னாள். சாந்தா அன்றைக்கு ஷோபாவின் பெற்றோரைப் பற்றி தனக்கு இருந்த அபிப்பிராயத்தையும் மாற்றிக்கொள்ள தயாராக இருந்தாள்.
எல்லாம் முடிந்து ஒரு வாரம் கூட கழியவில்லை. அதற்குள் இந்த மாறுதல். மேலும் ஐநூறு ரூஒபாய் வரையிலும் செலவு செய்த பிறகு.
“ஏன் ஷோபா! உன் வீட்டில் சம்மதம்தான் சொன்னார்களே? இதற்குள் என்னவாகிவிட்டது?” நீர் நிறைந்த விழிகளுடன் கேட்டாள் சாந்தா.
“எந்த போட்டியும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப் படுவேன் என்று நினைத்தார்கள். இரண்டு பேர் போட்டியில் நிற்பது, இப்படி துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது அவர்களுக்கு இஷ்டம் இல்லை. ‘உன் பெயர் இப்பொழுது நடுத்தெருவுக்கு வந்து விடும். எல்லோரும் மிதித்துக் கொண்டு போவார்கள். நாளைக்கு அந்த பெண் பாரதி சுவற்றில் எழுத வைத்து பிரசாரம் செய்தால் உன் பெயரும் எழுத வைப்பார்கள். பிறகு எத்தனை பிரச்சனைகள் வருமென்று தெரியாது. ஏதோ ஒரு சாக்கில் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் கூட தேர்தலில் மூக்கை நுழைப்பார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் பெரிய பிரச்சினை ஆக வில்லையா? இப்பொழுது அது போல் நடந்தால் அசிங்கம்! உன் பெயர் இப்படி பத்து பேர் வாயில் புகுந்து புறப்பட்டால் நமக்கு எவ்வளவு தலைகுனிவு? நாளைக்கு உனக்கு திருமணம் நடக்க வேண்டாமா?’ இப்படி எல்லாம் பேசினார்கள். நான் என்ன செய்யட்டும்? அவர்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத போது நான் எப்படி போட்டியிடுவது?” விவரமாகச் சொன்னாள் ஷோபா.

Series Navigationசந்ததிக்குச் சொல்வோம்புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *