கே.எஸ்.சுதாகர்
ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு தோன்றியது.
நடராஜா மாமாவின் மகன் ரகுவின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக தான் நின்றதை ரமணன் நினைத்துப் பார்த்தான். பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தடல்புடலான கலியாணம் அது. மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழனுக்கு வேலை எடுத்துக் தராமல் வேறு யாருக்கு வேலை எடுத்துக் கொடுப்பார்?
ரகுவிற்கு திருமணம் நடந்தபோது ரமணன் பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான். தினமும் ரகு வேலைக்குப் போகும்போது ரமணனும் அவரது சைக்கிளில் ஏறிக் கொள்வான். அது ஒரு காலம்.
நடராஜா மாமா என்றால் பகடி நினைவிற்கு வரும். எந்த நேரமும் சிரித்தபடி, மற்றவர்களையும் சிரிப்பூட்டியபடி இருப்பார் அவர். ‘ஜோக்’ மாமா என்று ரமணனின் தங்கை எந்த நேரமும் அவரை அழைப்பாள்.
அடுத்தநாள் ரமணனது நண்பன் பாலன், தனது காரில் ரமணனை ஏற்றிக் கொண்டு வந்து, நடராஜாவின் வீட்டு முகப்பில் இறக்கி விட்டு சந்தைக்குப் போய் வருவதாக கூறிச் சென்றான். வீதிகள் துடைத்துவிட்ட பால்வீதி போன்று துப்பரவாக இருந்தன.
வாசலில் பி.எம்.டபிள்யு (BMW) கார் ஒன்று நின்றது. நிறைய எதிர்பார்ப்புகளுடன் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான் ரமணன். வீட்டிற்குள் நுழையும்போது யாரோ ஒருவர் கண்ணாடி, தாடி, தொந்தி சகிதம் ரமணனைப் பார்த்து ‘ஹாய்’ என்றுவிட்டுப் போனார். இந்த ‘ஹாயை’ எங்கோ எப்போதோ பார்த்தது போன்ற ஞாபகம் ரமணனிற்கு. ஒருவேளை ரகுவின் கலியாணவீட்டில் பார்த்திருக்கலாம். அவர்களின் உறவினராக இருக்கலாம்.
அழைப்பு மணியை அழுத்திக் குரல் கொடுக்கலாமா என்று நினைத்த வேளையில் தான் கதவு திறந்திருப்பதை ரமணனால் காணக் கூடியதாக இருந்தது. கதவை நீக்கி உள்ளே எட்டிப் பார்த்தான். ஆங்கிலப்பாடல் ஒன்று காற்றினில் எழுந்து வர, அரை நிர்வாணக் கோலத்தில் நின்ற இளம் பெண் ஒருத்தி, தலை விரித்து ஆடிக் கொண்டிருந்தாள்.
சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தவள் திடீரென்று ரமணனைக் கண்டதும், வெட்கத்தினால் தலை குனிந்து உள்ளே ஓடினாள்.
மகேஸ்வரி அம்மா, நடராஜாவின் பேத்தி கிளிக்குஞ்சு மாதிரி என்று வர்ணித்து எழுதியிருந்தாள். அந்த ஆட்டத்தைப் பார்த்து கிலி பிடித்தது போலானான் ரமணன்.
“மம்… சம்பொடி இச் கம்மிங் (Mum Somebody is coming)”
“வர்ஷா…. அது சம்பொடியும் இல்லை. பற்பொடியும் இல்லை. தம்பி ரமணன். என்ன தம்பி் ரமணன்… இன்னும் என்னைக் காணேல்லைப் போல. நான் இஞ்சை மேலுக்கு நிக்கிறன்.”
”கண்டிட்டேன் மாமா. நீங்கள் ஆறுதலா இறங்கி வாங்கோ.”
டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவள் என்ரை மூத்த பேத்தி தம்பி. அவளுக்கு ஒரு தமிழ் எழுத்தும் தெரியாது. கொஞ்சம் கதைக்கிறது விளங்கும். எனக்கும் வயதாகிப் போச்சுது தம்பி. வயதான காலத்திலையும் பொருந்தக்கூடிய மாதிரி எங்களுக்கு பேர் வைச்சிருக்க வேணும் தம்பி. பாத்தனீர்தானே தம்பி! நடராஜாவை… எவ்வளவு நேரம் போகுது மேலுக்கு இருந்து கீழுக்கு இறங்கிவர. படுத்தால் எழும்பேலாது, எழும்பினால் படுக்கேலாது. போர்த்த போர்வையை மடிக்கேலாது. காலம் அப்பிடியாப் போச்சு.”
“நீங்கள் நல்லா மெலிஞ்சு போனியள்! அது சரி மாமா, அம்மாவின்ரை கடிதம் கிடைச்சதா?”
“பின்னைக் கிடையாமல்? எல்லாம் வாசிச்சம். நல்லது. என்ரை அவ கோயிலுக்குப் போயிட்டா. வரச் சுணங்கும். கோப்பி போட்டுத் தரவும் ஆளில்லை.”
“அதொண்டும் பெரிய பிரச்சினை இல்லை மாமா. அதென்ன மாமா உள்ளுக்கை ஏதோ சத்தங்கள் கேட்குது?”
“அதுவா? அது எங்களுக்குப் பழகிப் போச்சு. மருமகளின்ரை சத்தம். அவவுக்கு எங்கடை ஆக்கள் வீட்டுக்கு வந்தாப் பிடிக்காது. தன்னுடைய ஆக்கள் வந்தால் நாங்கள் முன்பக்கம் வரப் பிடிக்காது. ரொயிலட் வந்தாக்கூடி அடக்கி வைச்சிருக்க வேணும். கொஞ்சம் அடக்கி, அடங்கி அவவுக்குத் தக்கமாதிரி வாசிக்க வேணும். அப்பிடியாப் போச்சு. மழைக்கு முந்தின மூட்டம் மாதிரி இடிமுழக்கம் போடுறா. உதுகளை நீர் கண்டுகொள்ளாதையும். வெறும்பானை கீரிடத்தான் செய்யும்.”
“ஆ! இப்பிடியும் பிரச்சினைகளா? ரகு அண்ணை எல்லாருக்கும் வேலை எடுத்துக் குடுக்கிறாராம் எண்டு அம்மா கடிதம் எழுதியிருந்தா. உண்மைதானா மாமா?”
“தம்பி பிலத்துக் கதையாதையும். சுவருக்கும் காதிருக்கும். அதுதானே இஞ்சை பெரிய பிரச்சினை. மருமகளுக்கு உதுகள் பிடிக்காது. முந்தி மகன் உதவி செய்தவன் தான். இல்லையெண்டு நான் சொல்லேல்லை. மருமகளுக்கு விருப்பமில்லாததாலை இப்படி விட்டிட்டான்.”
“சரி போகட்டும் மாமா. ரகு அண்ணை எப்ப வேலையாலை வருவார்?”
“இப்பதான் தம்பி நீர் வரேக்கைதான் போறான். நீர் வாசலிலை கண்டிருப்பீர் எண்டு நான் நினைச்சன்.”
“ஓ! அப்படியெண்டால் அந்த ‘ஹாயா’த்தான் இருக்கும்.
மாமா, முந்தி எல்லாம் ஜோக் சொல்லி எங்களை சிரிக்க வைப்பியள். இப்பவும் ஒரு ஜோக் சொல்லுங்களேன் பார்ப்போம்.”
“தம்பி! இப்ப ஜோக் சொல்லுற நிலைமையிலேயே நான் இருக்கிறன். சரி பரவாயில்லை. கேட்டதுக்காக ஒண்டு சொல்லுறன்.
அப்ப ரகு கொன்றாக்ற் (contract) எடுத்து வேலை செய்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் மத்தியானம் சாப்பாட்டுக்கு ரகு வந்த நேரம். ஆரோ ஒரு பையன் ஏழெட்டு CV ஐப் பார்சல் பண்ணி ரகுவிட்டைக் குடுத்திருக்கிறான். ரகு அதை அம்மாவிட்டைக் குடுத்து Curriculum Vitae இதிலை இருக்கு மனிசியிட்டைக் குடுங்கோ எண்டு சொல்லியிருக்கிறான். என்ரை மனிசிக்கு ரகு சொன்னது கறி குளம்பு எல்லாம் விட்டே இருக்கு எண்ட மாதிரிப் பட்டுது. என்ரை மனிசியின்ரை வாய் சும்மா கிடந்துதோ இல்லையோ மருமகளிட்டைப் போய் ரகு தந்தவன் – புரியாணிப் பார்சலாம், கறிகுளம்பு எல்லாம் விட்டே இருக்காம் எண்டு சொல்லிக் குடுத்திருக்கிறாள். மருமகளுக்கு சமைக்கிறதெண்டால் பஞ்சி. பிறகென்ன கறி குளம்பு எல்லாம் என்ரை மனிசிக்கு மேலை வந்து விழுந்துது. அண்டைக்கு வெடிச்ச பூகம்பம்தான்.”
“மாமா நீங்கள் ஒரு பகிடிக் கதைக்குள்ளாலேயே ஒரு உண்மையையும் சொல்லிப் போட்டியள். ரகு அண்ணையை இனிமேல் நம்ப வேண்டாமெண்டு.
மாமா! அக்கா வந்து நாரியிலை கையூண்டி எட்டிப் பாத்திட்டுப் போறா.”
“பார்ப்பாள்… பார்ப்பாள்…”
“நான் என்ரை BioData எல்லாம் கொண்டு வந்தனான். சரி பரவாயில்லை. இனி என்ன செய்யுறது? நான் வேறு அகதியா வந்து தொலைச்சிட்டன். இனி அவுஸ்திரேலியா அரசாங்கம் எங்கடை பிரச்சினையை ஆராஞ்சு ‘அப்புறூவ்’ (approve) பண்ணினாப் போலதான் என்னவும் செய்ய முடியும்.”
”தம்பி… அகதி அகதி எண்டு ஒருநாளும் சொல்லாதையும். நீரும் இஞ்சை அகதியில்லை. அதே மாதிரி நானும் இஞ்சை அதிதி இல்லை. எங்களை முதல் ‘கெஸ்ற்’ (Guest) எண்டு சொல்லித்தான் இவை இஞ்சை கூப்பிட்டவை. அப்ப என்ரை மூத்த பேத்திக்கு எட்டு வயது. அடுத்தவள் அப்பத்தான் பிறந்து இருந்தாள். இப்ப மூத்தவளுக்கு பதினாறு வயதாயும் போச்சு. பிள்ளை வளர்த்ததும், இந்த வீடு எண்ட வட்டத்தையும் தவிர வேறொன்றையும் எங்களுக்குத் தெரியாது. இப்ப நாங்கள் இஞ்சை ‘கெஸ்ற்’ மாதிரியே இருக்கிறம்?”
ஏதோ நிலத்தில் விழுந்து உடையும் சத்தம் கேட்டது. வீறு கொண்டு எழுந்தது போல் மருமகள் வந்தாள். வாய் வங்காள விரிகுடா மாதிரி விரிந்தது.
“இஞ்சை பாருங்கோ மாமா…. உதிலே இருந்து பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது மாதிரி அலட்டாமல் ஆகவேண்டிய அலுவலைப் பாருங்கோ. ‘வக்கூம் கிளீனரை’ (Vaccum Cleaner) எடுத்துக் குனிஞ்சு நிமிர்ந்து தூசு போக வீட்டைக் கூட்டினால் ஏன் நாரிப்பிடிப்பு வரப் போகுது?”
”சரி, சரி… நீர் கத்தாமல் இரும்.
அதுதான் தம்பி நீர் பத்துமணிக்கு வரப் போறீர் எண்டு சொல்ல – வேண்டாம், பிறகு பதினொரு மணி மட்டிலை வாரும் எண்டு சொன்னனாங்கள். உவா பதினொரு மணி மட்டிலை வேலைக்குப் போயிடுவா. பிறகு வந்திருந்தால் வடிவா கனக்கக் கதைச்சிருக்கலாம். என்ரை மனிசி கோயிலுக்குப் போனவா எண்டே தம்பி நினைக்கிறீர். உங்கை பக்கத்து வீட்டிலை போய் ஒளிச்சு இருக்கிறா. நீர் வரேக்கை அவ இஞ்சை நிண்டிருந்தால் உவவின்ரை சத்தம் உப்பிடியா இருக்கும். உரு வந்தது மாதிரி ஆரோகணத்திலைதான் நிற்பா.”
“அப்ப நான் வந்து குடும்பத்துக்கை குழப்பத்தைக் கொண்டு வந்திட்டன் போல கிடக்கு. நான் போயிட்டு பிறகு ஒருநாள் பதினொரு மணி மட்டிலை வாறன்.”
“இன்னும் உதிலை கதை வளர்ந்தால் பிறகு வீடுதான் நாறிப் போகும். தம்பி, நீர் போட்டு வாரும். இவையும் ஒரு ஆக்கள் எண்டு பாக்க வந்திட்டீர்.”
இதற்கு மேலும் அங்கு நின்றால் ஏதாவது தப்புத் தண்ணா நடந்துவிடலாம் என்ற பயத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான் ரமணன். அவன் வெளியே வரவும் உமைபாலனின் கார் கிரீச்சிட்டு நிற்கவும் சரியாக இருந்தது.
அப்போதுதான் Biodata வை மாமா வீட்டினுள் மறந்து போய் வைத்துவிட்ட ஞாபகம் ரமணனுக்கு வந்தது.
”பாலன்… ஒரு நிமிஷம் பொறு. உடனை வந்திடுவன்” என்றபடி மீண்டும் உள்ளே ஓடினான் ரமணன்.
உள்ளே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஆங்கிலப்பாடல் மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கே ரமணன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிட்டு உறைய வைத்தது. ஒரு அடி கூட அப்பாலே நகரவிடாமல் தடுத்து நிறுத்தியது அந்தக் காட்சி. நடராஜா மாமா இருந்துவிட்டுப் போன இடத்தை ஈரத்துணி கொண்டு ஆடி ஆடிச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் வர்ஷா என்ற அந்த மூத்த பேத்திப்பெண். வாழ்க்கையில் முதன் முறையாக அசிங்கப்பட்டது போல உணர்ந்தான் ரமணன்.
“வர்ஷா, என்ரை செல்லக் குட்டியல்லே! ஈரத்துணி போட்டு முடிய கொஞ்சம் ‘எயர் ஃபிரஷ்னர்’ (Air Freshener) அடிச்சுவிடு. கிழட்டுப்பீடைகள், வீட்டை ஒருநாளும் சுத்தமா வைச்சிருக்க விடாதுகள்” என்று வீட்டுக்குள்ளிருந்து ஓலமிட்டாள் அந்த ராட்சசி.
ரமணனின் நெஞ்சுக் குழிக்குள் ஒருகணம் காற்று நின்று போனது.
இவற்றையெல்லாம் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடராஜா என்ற மானிடம், மெதுவாகப் பின்வாங்கித் தனது அறையினுள் புகுந்து கொண்டது. பார்வதிதானே ஏற்கனவே பக்கத்து வீட்டினுள் பள்ளிகொள்ளப் பதுங்கி விட்டாவே!
தில்லையிலே நடராஜாவும் பார்வதியும் பக்தர்களை பரவசப்படுத்த நடனம் ஆடுகின்றார்கள். இங்கே மருமகளின் நாயனத்திற்கு நடராஜாவும் பார்வதியும் தாண்டவம் ஆடுகின்றார்கள்.
பிள்ளைகள் – பெற்றவர்களுக்கு சுகமான சுமைகள்.
பிள்ளைகளுக்கோ வயதான பெற்றோர்கள் தேவையில்லாத பாரங்கள்.
இதற்குப் பிறகும் அந்த Biodata வை எடுத்துத்தான் ஆக வேண்டுமா?
ரமணன் நடப்பதற்குத் திராணியற்று குழம்பிப் போய் இருந்தான்.
உள்ளே ஏதோ சூறாவளி வீசுவது போன்ற சத்தம் கேட்டது.
“இந்த மனிசனைக் கேசரி உப்புமாவோடை கீழே வராதையுங்கோ எண்டால் விளங்கினால்தானே. ஏதோ தமிழ்ப்பற்றும் தமிழ் மொழியும் தன்னாலேதான் வீரியம் குறையிற மாதிரி வீரகேசரிப் பேப்பரைப் போற இடமெல்லாம் காவிக் கொண்டு திரியுது மனிசன்.”
கோபத்துடன் அதை எடுத்துக் குப்பைத் தொட்டிக்குள் போடப் போனாள் மருமகள்.
ஆனால் coffee table இல் கொலு இருந்தது வீரகேசரியோ உப்புமாவோ அல்ல என்றும், அது ஒரு BioData என்பதையும் புரிந்து கொண்ட அவள் பத்திரகாளியானாள். கடந்த ஒருவருடமாக BioData என்ற பொக்கிஷம் அந்த வீட்டினுள் அருவமாகவோ அல்லது உருவமாகவோ நுழைந்திருக்கவில்லை.
“இது என்ன புதுக்கூத்து? இதுகளின்ரை வாசம் வீட்டுக்குள்ளே வரப்படாதெண்டல்லே சொன்னனான். திரும்பவும் பார்! வந்திட்டுது.”
எரிமலை வெடித்தது. சுக்கு நூறாக அதைக் கிழித்தாள். ‘லாவாக்’ குழம்பு ஜன்னலிற்குள்ளால் தெறித்து வெளியே வழிந்தது.
பாலனின் காரிலிருந்து எழுந்த ‘ஹோர்ண்’ சத்தத்தையடுத்து, கனத்த மனத்துடன் காரை நோக்கி விரைந்தான் ரமணன்.
இந்த மனிதர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா? அகதி அகதி என்கின்றார்களே! யார் அகதிகள்? அவர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள். அகதிகள் என்றால் எதுவுமற்றவர்கள். வாழுகிற உரிமை, இருக்க இடம், பணம் இவை எல்லாம் இல்லாவிட்டால் ஏதும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று அர்த்தமாகிவிடுமா? ஓர் இனத்திற்கு எது எல்லாம் தேவையோ அதுவெல்லாம் அவர்களிடத்தில் இருக்கிறது. எவன் ஒருவன் தன்னுடைய இனத்தின் அடையாளத்தை இழந்து விடுகின்றானோ அவன் தான் உண்மையான அகதி. இனத்தையும், இனத்திற்கு அடையாளத்தைத் தந்திருக்கும் தாய்மொழியையும் இழந்துவிட்டால் அவன் தான் உண்மையில் அகதி.
வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு எதுவுமே நடந்துவிட முடியாது.
நடராஜாவின் பேத்தி வர்ஷா தற்காலிக அகதி. அவளுக்கொரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைதான் நிஜ அகதி.
எது வேண்டாம் என்றுவிட்டு ரமணன் திரும்பி நடந்தானோ, அது சுக்கு நூறரகக் கிழிந்து அவனைத் துரத்தியது. கன்னத்திலே ஒரு கடதாசித்துண்டு வந்து ஒட்டியது. பிடித்து இழுத்துப் பார்த்தான்.
இனம் தமிழ் (Ethnicity Tamil) என்று அதில் எழுதி இருந்தது.
- இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)
- தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?
- கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்
- நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு
- தேசபக்தி!!
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1
- தாத்தா வீடு
- அழியா ரேகை
- கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)
- பண்ணைக்காரச்சி
- இரண்டு கேரளப் பாடல்கள்
- வேழப்பத்து 14-17
- தளர்வு நியதி
- பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை
- தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு
- இன்குலாபுக்கு அஞ்சலிகள்
- The Impossible Girl
- கிரகவாசி வருகை
- ஒட்டப்படும் உறவுகள்
- சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
- சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?
- முதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு