பண்ணைக்காரச்சி

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 22 in the series 4 டிசம்பர் 2016

அழகர்சாமி சக்திவேல்

அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும் இங்கும் அவசரமாய் திடுதிடுவென சத்தமெழுப்பி நடந்தார்கள். ‘ஐயையோ.. ஐயையோ’ என்ற முகம் தெரியாத பெண்களின் கூச்சல், அந்தக் காலைத் தூக்கத்திற்குள் இன்னும் முடங்கிக் கிடந்த மற்ற ஊர் மக்கள் எல்லாரையும் எழுப்பி விடுவதற்கு போதுமானதாய் இருந்தது. தெருவில் படுத்துக் கிடந்த நாய்கள் சில, மனிதர்களின் திடீர்க் காலடி சத்தத்தில் பயந்துபோய், ஊளையிட்டுக் கொண்டே தெருவை விட்டு விலகி ஓடின. ஊருக்கு நடுவே இருந்த ஒரே ஒரு கூரை வேயாத பிள்ளையார் கோயிலில், சாணி தெளித்து, சரட்டு சரட்டு எனப் பெருக்கிக்கொண்டிருந்த இளம்பெண்டுகள், தங்கள் கையில் இருந்த விளக்குமாற்றை தூர எறிந்துவிட்டு சத்தம் வந்த திசை பார்த்து ஓடி வந்தனர். தாறுமாறாய் அவர்கள் ஓடிய வேகத்தில், கால் தட்டி, கிட்ட இருந்த கோலமாவு நாலாபக்கமும் சிதறியது. சிலர் கோலத்திற்கு நடுவே வைக்க இருந்த பரங்கிப்பூவையும் பரங்கிப்பூ சொருக வைத்து இருந்த சாணிப்பந்தையும் மிதித்துக் கொண்டே ஓடினர். மூச்சு முட்ட ஓடி வந்த எல்லோருக்கும் கிட்ட வந்ததுமே தெரிந்து போயிற்று… ஊர் நாட்டாமை இறந்து போய் விட்டார் என்று.

“ஐயோ என் மவனே…நா இன்னும் உசிரோடிருக்க நீ மட்டும் போயிட்டியே…” வீட்டுக்கு முன்னே இருந்த திண்ணையின் கயிற்றுக்கட்டிலில் கிடந்த நாட்டாமையின் தாய்க்கிழவி பெருங்குரலெடுத்து அரற்றினாள். ஊர் மக்களில் சிலர் நாட்டாமை வீட்டுக்குள் ஓடினார்கள்.. சிலர் தாய்க்கிழவியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்கள். “என் ஒரே புள்ளை போயிட்டானே.. என் பேரப் புள்ளையும் இங்கே இல்லாமப் பட்டணத்துப் பக்கம் வேலைக்குப் போயிட்டானே….யாராவது பட்டணத்துக்குப் போன் போட்டு என் பேரப்பிள்ளையை வரச்சொல்லுங்களேன்… என் ராசா…”. தாய்க்கிழவியின் சத்தம் இன்னும் கூடியது. மாறி மாறி மாரில் அடித்துக்கொண்டாள் கிழவி. சிலர் நாட்டாமையின் மனைவி பண்ணைக்காரச்சியைத் தேடினர். “பண்ணைக்காரச்சி.. பண்ணைக்காரச்சி.. பண்ணைக்காரச்சி எங்கே போனா?” அறை அறையாய்த் தேடியும் பண்ணைக்காரச்சி கண்ணில் தென்படாததால் புழைக்கடைப் பக்கம் ஓடியது கூட்டம்.. பின்புறம் இருந்த அந்த பெரிய புழைக்கடையில், அந்த விடியாத இருட்டில், பண்ணைக்காரச்சி சரியாய் யாருக்கும் தெரியவில்லை. வேலையாட்களிடம் உத்தரவு போடும் அவள் குரல் மட்டுமே கூட்டத்திற்குக் கேட்டது. “பெரிய பந்தல் போடணுமப்பா.. எட்டுப்பட்டி கிராமமும் உட்கார இடம் வேணும்…ஒருத்தன் போய் வெட்டியானுக்கு சொல்லிட்டு வாங்க… தப்பு அடிக்கிறவன்ங்க கிட்டேஅஞ்சாறு தப்பா எடுத்துட்டு வரணும்னு சொல்லிவிடுங்க… அவிங்க தப்பு சூடு பண்ண நெருப்பு கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க…தண்ணி எடுக்கிற குளத்தைச் சுத்தி கருவேலமுள்ளு ஒரே காடா வளர்ந்து கிடக்கு.. எல்லாத்தையும் வெட்டி ஒழுங்கு படுத்துங்க….நீர்ப்பந்தல் எடுக்க வெள்ளை வேட்டிகளை ரெடிபண்ணுங்க..எருவாட்டி,விறகு,பூ,பழம்,பொறி, பானை எல்லாத்துக்கும் சிட்டை எழுதி கடை தொறந்ததுமே முத ஆளாப் போய் வாங்கிட்டு வந்திடுங்க ” பண்ணைக்காரச்சி தன் கணீர்க்குரலில் மூச்சு விடாமல் வேலைக்காரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள். “சரி தாயி.. சரி தாயி…” எனத் தலையாட்டிக் கொண்டே வேலையாட்கள் ஆளுக்கு ஒரு திசையாய் ஓடினார்கள். புருஷன் போன இந்தப் பெருஞ்சோகத்திலும் பண்ணைக்காரச்சி அழாமல் இருந்தது ஊர் மக்களை அதிகமாய் ஆச்சரியப்படுத்தியது.

 

சிலர் நாட்டாமையைத் தேடினார்கள். நாட்டாமை ஏற்கனவே உள்ளே இருந்த கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்தார் பக்கத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த காமாட்சி விளக்கின் ஒளியில், அந்த இருட்டிலும் நாட்டாமையின் பரந்த முகம் ஒரு புன்னகையுடன் ஜொலித்தது. நாட்டாமையின் மச்சானாகிய நான்தான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன். எனக்கு நாப்பது வயது.. நாட்டமைக்கு போன வாரம்தான் அறுபது முடிந்தது. நெடிய கருமையான தேகம். சின்னச்சின்ன நரைமுடிகளுடன் முறுக்கிவிடப்பட்ட பெரிய மீசை. போன வாரம் நாவிதர் வந்து சவரம் செய்த பின்னே வளர்ந்த கொஞ்சம் தாடி மயிர்கள், அவர் கழுத்தை நிறைத்த புலிநகச் சங்கிலி, காடாய் இருந்தாலும் பரந்து விரிந்த மார்பின் மீது, ஒரு வித ஒழுங்கோடு வளர்ந்த பெரிய பெரிய மார்பு முடிகள்…தேக்குக் கட்டைகள் போன்ற தோள்கள்.. அதற்கேற்ற பரந்த கைகள்…சந்தோசம் வந்தால் அவ்வப்போது தட்டித்தட்டிப் பேசும் அவரது தூண்களைப் போன்ற கனத்த தொடைகள்…”ஐயோ..எப்படி இருந்த ஒரு சிங்கம் இப்படி செத்துப் போயிடுச்சே” திடீரென்று எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கதறிக் கதறி அழுதேன். அதே நேரத்தில் உள்ளே நுழைந்த பண்ணைக்காரச்சி என்னைப் பார்த்து விட்டாள். என்னையே கூர்ந்து கவனித்தாள்..நான் இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தேன். “அழாதே ரங்கா”..என்று அவள் என்னிடம் சொல்லவும் இல்லை. என்னைத் தேற்றவும் இல்லை. “ரங்கா..அடுப்படி மேலே மூடி போட்ட வெண்கலச் சட்டிக்குள் பழையது வைச்சு இருக்கேன்.. ஊர்க்கூட்டம் கூடினால் சாப்பாடு கிடைக்காது… அதுனாலே.. விடிஞ்சதுமே பல்லை விளக்கிட்டு அந்த பழசு எல்லாத்தையும் சாப்பிட்டு காலி பண்ணிடு.. சரியா.” பேசிக்கொண்டே வெளியே போனாள் பண்ணைக்காரச்சி. நான் அவள் நடந்து போவதைப் பின்னால் இருந்து பார்த்தேன். இவ்வளவு சோகத்திலும் அவளிடம் ஒரு தளராத தன்னம்பிக்கை நடை. பண்ணைக்காரச்சியின் இந்தத் தன்னம்பிக்கைதான் நாட்டாமையின் பலம். அவரது எல்லா செல்வங்களுக்கும், வளர்ச்சிக்கும் அடித்தள அஸ்திவாரமாய் நின்றது பண்ணைக்காரச்சியின் கூர்மையான அறிவுதான்.

ஊர்க்கூட்டம் நாட்டாமையைச் சுற்றிக்கொண்டது. பெண் கூட்டம் மாரடித்து ஒப்பாரி வைத்தது. “நல்லவங்களைத்தான் கடவுள் இப்படி சீக்கிரமே கொண்டு போயிடறான்..” ஒரு பெரியவர் புலம்பியதில் கூட்டம் உச்சுக்கொட்டியது. கூட்டம் என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நாட்டாமை எனது மாமா என்பதோ நான் அவரது தூரத்து உறவு என்பதோ, ஊரக்காரர்கள் நிறைய பேருக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நான் அந்த வீட்டின் ஒரு வேலையாள். நாட்டாமையின் ஒரு நம்பிக்கைக்குரிய எடுபிடி.. இவ்வளவே அவர்களுக்குத் தெரிந்ததால் எனக்கு ஒன்றும் அங்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. நான் கூடத்தில் இருந்து மெதுவாய் வெளியே வந்தேன். வெளியே இப்போது நன்கு விடிந்து இருந்தது. தப்பு அடிப்பவர்கள் கொஞ்ச தூரத்தில், சுள்ளி வைத்து நெருப்பேற்றி, அந்த நெருப்பின் மேல் தங்கள் தப்புக்களை காட்டிக் காட்டி வாட்டிக் கொண்டு இருந்தார்கள். அழுது அழுது சூடாகி இருந்த என் உடம்புக்கு வெளியே அடித்த அந்த திடீர்க் குளிரைத் தாங்க முடியவில்லை. நான் நெருப்பு இருந்த இடம் நோக்கி நடந்தேன். “வாங்கய்யா வாங்க” தப்பு அடிப்போர் மரியாதை கொடுத்து உட்கார இடம் கொடுத்தனர். நான் எதுவும் பேசாமல் உட்கார்ந்தேன். நெருப்பு என்னை சூடாக்கியது. கூடவே என் ஞாபகங்களும் என்னை வாட்டியது.. பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களும், நானும், என் நாட்டாமை மாமாவும் இப்படித்தான் இரவில் வயலில் விளைந்த பயிருக்குக் காவல் காக்கச் செல்லுவோம், அப்படிச் செல்லும் போதெல்லாம் குளிருக்கு இதே போல நெருப்பேற்றி எங்களைச் சூடேற்றிக் கொள்ளுவோம். மாமா சும்மா இருக்க மாட்டார்.. “ஏதாவது பாட்டுப் பாடுடா மாப்புள்ளே” என்று சொல்லுவார். நானும் பவ்யமாய்ப் பாடுவேன்.. சந்தோசத்தில் விசில் அடிப்பார். பரிசாய் எனக்கும் கள் குடிக்கக் கொடுப்பார். அந்த இரவு முழுதும் போதையில் அவர் அடிக்கும் கும்மாள நினைவுகள் திடீரென்று என்முன் வந்து போயின…மறுபடியும் குபுக்கென்று என் கண்ணில் இருந்து நீர்ப் பெருக்கெடுத்தது. அவசரமாய் நான் துடைத்துக்கொண்டேன். “ஐயா.. நீங்க.. நாட்டாமையோட மச்சான் ஆச்சுதுங்களே.. கோடி எடுத்துப் போடலியா?” கூட்டத்தில் ஒரு கொட்டு அடிப்பவர் கேட்ட கேள்வி எனக்கு நியாயமாய்த் தெரிந்தது. நான் கோடி வாங்கவும், மாலை வாங்கவும் டவுன் கடைக்குப் புறப்பட்டேன்.

டவுனில் இருந்து நான் கோடி எடுத்துக் கொண்டு திரும்பிய போது, கூட்டம் இன்னும் கூடியிருந்தது. பந்தல் பெரிதாய்ப் போடப்பட்டு, ஒரு ஓரத்தில் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. நான் தப்புக்காரர்களிடம் போய் கொஞ்சம் சில்லறைக் காசுகள் கொடுத்தேன். சந்தோசத்துடன் வாங்கிக்கொண்டு கொட்டு சத்தத்தைக் கூட்டினார்கள். கொட்டுச் சத்தத்துடன் கூடவே நடந்து வந்து கோடி வேட்டியை என் நாட்டாமை மாமாவின் உடலில் போர்த்தினேன். மாலை போடும்போதுதான் பண்ணைக்காரச்சியை கவனித்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் அழுதபோதும் அவள் இப்போதும் அழவில்லை. என்னையே பார்த்தாள். ஏதோ சொல்லவருவது போன்று இருந்தது அவள் முகம். மறுபடியும் குற்ற உணர்ச்சியில் நான் தலை குனிந்து கொண்டே வெளியே வந்தேன்.

மதியம் ஆகி இருந்தது. பட்டணத்தில் இருந்து பையன் வந்து விட்டான். நாட்டாமையைப் போலவே நெடு நெடு என்று வளர்ந்து இருந்தவன்..”ஐயோ அப்பா.. எங்களையெல்லாம் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டீங்களே..” ன்னு கதறி கதறி அழுதபோது கூட்டமும் சேர்ந்து அழுதது. “ம்ம்.. சரி சரி வாங்க..மகன் வந்துட்டான்…ஆக வேண்டியதை எல்லோரும் கவனிப்போம்…நீர்ப்பந்தல் எடுக்க எல்லாம் வாங்க… தாய்மாமன்கள் யாருப்பா…“ என்று ஒரு பெரியவர் சத்தமாய்ப் பேசினார். என்னைப் பார்த்து..”யோவ்…தம்பி.. வாப்பா.. நீயும் ஒரு மாமன் மச்சான் முறைதான்” என்று கூப்பிட நானும் எழுந்தேன். தூரத்தில் இருந்து மறுபடியும் பண்ணைக்காரச்சியின் அந்தக் கூர்மையான பார்வை என்னைத் துளைத்தது. நான் கண்டுகொள்ளாதது போல நடந்தேன். மனசு மட்டும் படக் படக் என்று அடித்தது. எல்லா ஆண்களும் குளத்திற்குச் சென்றோம். நாட்டாமை மகன் மொட்டை போட்டான். பிறகு குடங்களில் நீர் நிறைத்து வந்து நாட்டாமை உடலை எல்லோரும் குளிப்பாட்டினர். நாட்டாமையைக் குளிப்பாட்டும்போது என்னால் அந்த இடத்தில் நிற்கவும் முடியவில்லை, அந்த இடத்தை விட்டுப் போகவும் முடியவில்லை. பண்ணைக்காரச்சி என்னைப் புரிந்து கொண்டாள். பக்கத்தில் இருந்த அக்காவிடம் ஏதோ முணுமுணுத்தாள். அந்த அக்கா என்னிடம் நேரே வந்தாள். “ரங்கா… மதிய சாப்பாடு உள்ளே உனக்காக எடுத்து வைத்து இருக்கேன்.. வந்து ஒரு வாய் சாப்புட்டுட்டுப் போ..” என்றாள், எனக்கு பசி ஒரு பக்கம். அந்த இடத்தை விட்டுப் போக வேண்டிய நிர்பந்தம் ஒரு பக்கம். மறுக்காது அக்காவுடன் நான் உள்ளே சென்றேன்.

உடல் எடுக்கும் நேரம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பாடையின் மேலே நாட்டாமையின் உடல் ஏறியது. வண்டி மெதுவாய் நகர்ந்தது. பெண்கள் எல்லோரும் தெருவின் முக்கு வரைச் சென்றார்கள். தெருமுக்கில், பண்ணைகாரச்சியின் தலையில், ஒரு தண்ணீர்ப் பானை ஏற்றப்பட்டது. மூன்று முறை கூட்டம் அவளோடு சுற்றி வந்தது. அவள் சுற்றி வந்த ஒவ்வொரு முறையும் அந்தப் பானையின் அடியில் இரும்பு தொரட்டிக் கம்பால் பொட்டென்று ஒரு பெரியவர் ஓட்டை போட்டார். பானையில் போடப்பட்ட ஓட்டை வழியே நீர் பீச்சிக்கொண்டு அடித்து பண்ணைக்காரச்சியின் தலையையும் உடம்பையும் நனைத்தது. பெண் கூட்டம் கதறிக் கதறி அழுதது. ஆனால் அப்போதும் பண்ணைக்காரச்சி அழவில்லை. கடைசியில் பண்ணைக்காரச்சியின் தாலி அறுக்கப்பட்டது. அவள் வளையல்கள் உடைக்கப்பட்டன. அவள் நெற்றியில் வைத்து இருந்த பெரிய குங்குமப் பொட்டை ஊர்ப் பெண்களில் ஒருத்தி அழித்தாள். ஊரே ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுதபோதும் பண்ணைக்காரச்சி இப்போதும் கண்ணீர் விடவில்லை. பார்த்துக் கொண்டே இருந்த நான் பயத்தில் திடீரென்று மயங்கி விழுந்தேன்.

நான் மயக்கத்தில் இருந்து விடுபட்டபோது, வீட்டின் ஒரு மூலையில் பாயில் படுத்து இருப்பதை உணர்ந்தேன். மணியைப் பார்த்தேன். மணி இரவு இரண்டு மணி ஆகி இருந்தது. சுடுகாடு போய் நாட்டாமையை அடக்கம் பண்ணிய களைப்பில் எல்லோரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். நான் அமைதியாய் மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு கை என் தோளைத் தட்டியது. நான் அதிர்ச்சியில் சரேலென்று எழுந்தேன். என் பக்கத்தில் பண்ணைக்காரச்சி “சத்தம் போடாதே” என்று கை காட்டினாள். “என்னோடு எழுந்து வா” என சைகையாலேயே எனக்கு உததரவு இட்டாள். நான் பயத்துடன் அவள் பின்னே சென்றேன். எல்லோரும் அயர்ந்து தூங்கும் அந்த நேரத்தில், என்னை வயல் காட்டிற்குள் தரதரவென இழுத்துக்கொண்டு போனாள். அந்த இருட்டிலும், வெகு தூரத்தில் இருந்த சின்ன வெளிச்சம் பட்டு அவள் கையில் இருந்த பொருளை எனக்குக் காட்டிக் கொடுத்தது. துணுக்குற்று சற்றே உற்றுப் பார்த்தேன். ஐயோ..அவள் கையில் இருந்தது ஒரு நீண்ட வீச்சரிவாள். எனக்கு பயம் இன்னும் அதிகமானது. “அக்கா..அக்கா… என்னை விட்டுடுங்கக்கா..” நான் கெஞ்சினேன்… “அடச்சீ வாடா… அவள் என்னை இறுக்கமாய்ப் பிடித்து இருந்த பிடியை விடவே இல்லை. வேகவேகமாய் நடந்தாள்..

நேரே மோட்டார் பம்ப் செட் ரூம் அருகே சென்றாள். நானும், நாட்டாமையும் இரவில் ஒன்றாய்ப் படுக்கும் கட்டிலை எடுத்து வெளியே போட்டாள். அவள் கையில் எடுத்து வந்திருந்த வளையல்களை என் கைகளில் போட்டாள். நான் அழுதேன்..ஆனால் மறுப்பேதும் சொல்லவில்லை. “நெத்தியைக் காட்டுடா..” ஆத்திரத்தில் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. நான் பலிகடா போல் என் தலையைக் குனிந்தேன். என் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டாள். அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது எனக்கு இப்போது முழுமையாய்த் தெரிந்துபோன போது என் அழுகை இன்னும் கூடியது. “ஐயையோ அக்கா.. அக்கா..” நான் கேவிக் கேவி அழ ஆரம்பித்தேன். கையில் வைத்து இருந்த மண் குடத்தை மோட்டார் செட்டில் இருந்த தண்ணீரை நிரப்பி என் தலையில் ஏற்றினாள். “ம்ம் நட” என்றாள். நான் நாட்டாமையின் கட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்தேன். நான் கட்டிலைச் சுற்றச் சுற்ற, அவள் மண்பானையில் மூன்று ஓட்டை போட்டு முடித்தாள். கடைசியில் என் நெற்றிப் பொட்டை அழித்தாள்.. வளையல்களை ஆவேசமாய் நொறுக்கினாள்.  எல்லாம் முடிந்தது.

இதுவரைக் கதறாத பண்ணைக்காரச்சி என் முன்னால் கதறிக் கதறி அழுதாள். “அக்கா…என்னை மன்னிச்சுடுக்கா..என்னை மன்னிச்சுடுக்கா.. இப்படி ஒரு பிறப்பா நான் பொறந்துட்டேன்க்கா” என்று நானும் கதறினேன். இரண்டு அபலைகளின் அழுகுரல்கள் கேட்டு அந்த இருட்டில் பறவைகள் படபடவென சிறகடித்தன. தூரத்தில் மனிதர்கள் மட்டும் எதையும் உணராது உறங்கிக் கொண்டு இருந்தனர்.

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)இரண்டு கேரளப் பாடல்கள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *