தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

This entry is part 14 of 17 in the series 11 டிசம்பர் 2016

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள்.

அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல் நன்றாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிட்டும். நிலத்தில் போட்டுள்ள பணத்துக்கு மேலாக இலாபம் கிடைக்கும். நிலங்கள் இல்லாதவர்களுக்கும் அறுவடை காலத்தில் தொடர்ந்து வேலையும் கூலியும் கிடைக்கும்.

ஆனால் எல்லா வருடமும் இத்தகைய மகிழ்ச்சியைக்  காண முடியாது.

விவசாயத்துக்கு இன்றியமையாதது பருவ மழை. முன்பெல்லாம் பருவ மழை தவறாமல் பெய்யும். காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வீராணம் எரியும் நிரம்பி வழியும். தஞ்சை, தென்னாற்காடு மாவட்ட்ங்களில் நிலங்கள் செழித்து விளைந்து தமிழகத்தின் பொன் விளையும் பூமியாகத் நிகழ்ந்துள்ளன. ஆனால் இப்போதெல்லாம் பருவமழை பொய்த்து, நாற்றங்கால் அமைத்து விதை இடுவதும், நாற்று அடிப்பபதும்,நடவு நடுவதும் அபூர்வக் காட்சிகளாகிவிட்டன, அதற்கு மாறாக புழுதி அடிக்கும் நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டுவிட்டது. இதிலும் மழை பெய்தால்தான் நாற்று வேர் பிடித்து வளரும்.

சில வேளைகளில் நாற்று நட்டபின் கடும் மழை பெய்து வெள்ளம் உண்டானால் பயிர்கள் நாசமாக்கிப் போகும். செலவு செய்த அத்தனையும் வீணாகும்.

வேறு சில நேரங்களில் பயிர் நன்றாக விளைந்து கதிர்கள் முற்றும் வேளையில் மழை பெய்து நிலத்தை மூழ்கடித்து அவ்வளவு பயிரையும் நாசம் செய்துவிடும்.

இன்னும் சில நேரங்களில் பயிர்கள் நன்றாக பழுத்திருக்கும் வேளையில் பெரும் படையாக ” செரகி ” என்னும் குருவி வகைகள் பெரும் படைபோல் பறந்து வந்து வயல்களில் இறங்கி கொஞ்ச நேரத்தில் எல்லா கதிர்களையும் உருவிவிடும்..

இவை அனைத்தும் இயற்கையின் சீற்றங்கள் என்பார்கள். இவை உண்டானால் மகசூல் குறையும் அல்லது இல்லாமலேயே போய்விடும். விவசாயம் செய்வதில் இதை எதிர்நோக்க உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு வருடமும் ஏதாவது தோன்றி பெரும் இழப்பை உண்டுபண்ணும்.

விவசாயிகள் வருடந்தோறும் கடனில் மாட்டிக்கொள்வது இதனால்தான்.

இது போதாதென்று தற்போது காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டி தடை போடுவது செயற்கைப் பேரிடர் எனலாம். இப்போதெல்லாம் பருவ மழையும் பொய்பித்து, காவிரியும் வற்றிய நிலையில், தமிழகத்து வயல்கள் அனைத்தும் காய்ந்துபோன நிலைக்கு உள்ளாகிவருகின்றன. இதனால் இனி நிலத்தை நம்பி வாழ்வது என்பது இயலாத ஒன்றாகி வருகிறது.

வேறு வழியின்றி இத்தகைய இன்னல்கள் மத்தியில் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் உள்ள பல நிலங்களை வீட்டு மனைகளாக்கி நல்ல விலைக்கு விற்பவர்களும் உள்ளனர் – விளை நிலங்களால் இனி பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள்.

தமிழ் நாடு கிராமங்களால் ஆனது. கிராமங்கள் செழிக்கவேண்டுமெனில் பருவ மழை முக்கியமானது. அது இல்லாத வேளையில் நதிகளிலாவது நீர் தடையின்றி வரவேண்டும். அதற்கு தேசிய அளவில் நதிகளை இணைக்கவேண்டும். அது  எப்போது செயல் வடிவம் பெறுகிறதோ அன்றுதான் தேசிய ஒருமைப்பாடும் நிறைவேறும்.

இந்த   விடுமுறையில்  நான் கிராமத்தின் எதிர்காலம் பற்றி  நிறைய சிந்தித்தேன். அதற்கு ஆய்வு செய்யும் வகையில் பால்பிள்ளையுடன் எங்கள் கிராமத்தின் எல்லா தெருக்களிலும் நடந்து வீடுகளையும் அங்கு வாழந்த மக்களையும் சந்தித்தேன். ஏறக்குறைய அனைவருக்கும் என்னைத் .தெரிந்திருந்தது.

” டாக்டர் தம்பி. நம்ப தரணியம்மாள் மகன். ” என்று அவர்கள் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

எங்கள் தெருவில் கல் வீடு ஒன்றுதான் இருந்தது. அதுதான் இராஜகிளியின் வீடு. அவரின் கணவர் குப்புசாமிதான் பல வருடங்களாக கிராம பஞ்சாயத்துத் தலைவர். பழுத்த காங்கிரஸ்வாதி. அவர் வெளிநாடு செல்லாமலேயே பல காணிகளுக்குச் சொந்தக்காரர். வீட்டில் கூண்டு வண்டி இருந்தது. கிராமத்துக்கான வானொலியும் அவர் வீட்டில் இருந்தது. அங்கிருந்து ஒலிப்பெருக்கியின்மூலம் வானொலி நிகழ்ச்சிகளும் பாடல்களும் உரக்கமாக ஒலியேறும்.

மற்ற வீடுகள் அனைத்துமே மண் சுவராலும் வைக்கோல் கூரையாலும் கட்டப்பட்ட வீடுகள்தான் . இவற்றில் எங்கள் வீடும் வேறு சில வீடுகளுமே பெரிதாக வசதியாக தோட்டத்துடன் இருந்தன. இதர வீடுகள் அனைத்துமே குடிசைகள்.  அவற்றின் முன் பக்கம் வழியாக குனிந்துதான் உள்ளே நுழைய வேண்டும். அதுபோன்ற வீடுகளில் வசித்தவர்களுக்கு சொந்த நிலங்களும் கிடையாது. அவர்கள் வயல்களில் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தவேண்டும். மிகவும் ஏழைகள்.

தெம்மூர் இராஜன் வாய்க்கால் தாண்டி காளியங்குளம் வழியாக பெரிய தெருவுக்குச்  சென்றோம். அங்குதான் அம்மா பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. இப்போது மாமன்கள் மூவரும் அங்கு உள்ளனர். அது கல் வீடு. அம்மாவின் அப்பா மலாயாவில் இருந்தபோது கட்டிய கல் வீடு அது. அதுபோல் தெருவின் கோடியில் அம்மாவின் சித்தப்பாக்கள் இருவரும் கல் வீடு கட்டியிருந்தனர். அம்மாவின் அத்தைக்கும் ஒரு கல் வீடு இருந்தது. இவை தவிர அந்தத் தெருவில் செல்லப்பெருமாள் மாமா வீடும் கல் வீடுதான்.அவர் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தார். இவை தவிர அந்தத் தெருவில் அனைத்து வீடுகளும் குடிசை வீடுகள்தான்.

பெரிய தெருவிலிருந்து வரப்பு வழியாக சின்ன தெருவுக்குச் சென்றோம்..அங்கு அனைத்துமே குடிசை வீடுகள்தான். அங்கிருந்து மீண்டும் வரப்பு வழியாக சாவடிக் கரைக்கு வந்தோம். அங்கு பெரும்பாலும் பிள்ளை சமூகத்தினரின் பெரிய கல் வீடுகள் இருந்தன. அவர்கள் நிறைய நிலங்களுக்குச்  சொந்தக்காரர்கள். அங்கு இடையிடையே சில தெருக்களில் குடிசை வீடுகள் இருந்தன.

பட்டித் தெருவில் அனைத்துமே குடிசை வீடுகள்தான்.

வீடு திரும்பிய பின்பு பார்த்த வீடுகளையும் கிராம மக்களையும் எண்ணிப்பார்த்தேன். கிராமத்தில் ஏழ்மையே தாண்டவமாடியதை உணர்ந்தேன். பொதுவாக தமிழக கிராமங்களின் நிலையும் இவ்வாறுதான் என்று தோன்றியது. அதன் மாதிரியாக எங்களுடைய கிராமம் தோன்றியது. ” நான் இந்தியாவை கிராமங்களில் காண்கிறேன். ” என்று மகாத்மா காந்தி சொன்னார் என்று எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது.

கிராம மக்களில் முதியவர்கள் கொஞ்சமும் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களின் இளம் பருவத்தில் பள்ளிகள் இல்லாததுதான் முக்கிய காரணம். அதனால் அவர்கள் வேறு வேலைகளுக்குப் போகமுடியாமல் கிராமங்களில் விவசாயத்தையே நம்பி இருந்து வருகின்றனர். இவர்களில் சொந்த நிலம் இல்லாதவர்களின் நிலை பரிதாபமே!

நிலங்கள் நடும்போதும் அறுவடை செய்யும்போதும்தான் இவர்களுக்கு வேலை. மற்ற காலங்களில் வெறுமனே நேரத்தைப் போக்கினார்.அப்போதெல்லாம் கையில் பணம் இல்லாமல் நிலம் வைத்திருப்பவர்களிடம் கடன் வாங்குகிறார்கள். பின்னாளில் வயலில் வேலைகள் வரும்போது வாங்கிய கடனுக்கு வேலை செய்து கடனை அடைத்துவிடுகிறார்கள். இதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். அம்மாவிடம் பல பேர் இப்படி பணமும், நெல்லும் கடனாக வாங்கிச் செல்கிறார்கள். பின்பு நடவு சமயத்திலும் அறுவடை சமயத்திலும் எங்களுடைய வயலில் வேலைக்கு வந்துவிடுகிறார்கள். இது ஒரு வகையான கொத்தடிமைதான்

கிராம மக்களுக்கு வாழ்வு மலரவேண்டுமெனில் அவர்களுடைய பொருளாதாரம் உயரவேண்டும். அது எப்படி சாத்தியம் என்பது எனக்குத் தெரியவில்லை. அடுத்தபடியாக அவர்களுக்கு பாதுகாப்பான இல்லங்கள் தேவை. குடிசைகளில் வாழ்வதால் பல இன்னல்களை  அவர்கள் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக பூரான், தேள், பாம்பு போன்றவற்றுடன் போராடியபடியே வாழ்கின்றனர். இவற்றுக்கு உடனடி முதல் சிகிச்சை கிடையாது. மருத்துவமனைக்குச் செல்லுமுன் பலர் உயிர் இழக்கின்றனர். நான்கூட மருத்துவம் படித்து முடித்த பின்பு எங்கள் கிராமத்திலேயே மருத்துவச் சேவை செய்யலாம். அப்படியானால் சிங்கப்பூர் திரும்புவதைக் கைவிடவேண்டிவரும். அதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். அப்போது அது பற்றி முடிவெடுக்கலாம்.

எங்கள் வீடும் மண் சுவராலும் வைக்கோல் கூரையாலுமே இன்னும் உள்ளது. இரண்டு பெரிய அறைகளும் ஒரு சமையல் அறையும் கொண்டது. நீண்ட விசாலமான திண்ணையும் உண்டு. அங்குதான் தாத்தா கயிறு கட்டிலில் படுத்திருப்பார். பெரியப்பாவுக்கு அப்பாவுக்கும் சேர்ந்தமாதிரி வீட்டின் பின்புறமுள்ள காலி மனையை வாங்கி அங்கு அஸ்திவாரம் போட்டிருந்தார். அதற்கு மலாயா சிங்கப்பூரில் இருக்கும் அவர்களிடம் பணம் வரும் என்று காத்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் ஊர் திரும்பியபின் கல் வீடு கட்டலாம் என்றுவிட்டனர். அதனால் அந்த அஸ்திவாரம் பத்து பதினைந்து வருடமாக அப்படியே கிடக்கிறது. இப்போது பெரியப்பாவும் குடும்பத்தோடு திரும்பிவிட்டார். அப்பா இன்னும் திரும்பவில்லை. தாத்தாவுக்கும் வயதாகிவிட்டது. அந்த கல் வீடு எழுமா என்று சந்தேகமாக உள்ளது. பெரியப்பா அந்த இடத்தின் அருகிலேயே ஒரு கூரை வீடு கட்டிக்கொண்டு வசித்து வருகிறார். மலாயாவில் இருந்தபோதே அந்த வீடடைக் கட்டி முடித்திருக்கலாம். அப்பா தமது சம்பளத்தையெல்லாம் எங்கள் படிப்புக்கே செலவு செய்து வருகிறார். வீடு கட்டுவது பற்றிய எண்ணம் அவருக்கு இல்லை.

வசதிகள் அற்ற நிலையில் வாழையடிவாழையாக கிராமத்திலேயே வாழும் கிராம மக்கள் நகரவாசிகளின் ஆடம்பர வாழ்க்கையை அறியாமலேயே, அதற்கு ஏங்காமலேயே, இருப்பதை வைத்து சிக்கனமாக வாழ்ந்துகொண்டிருப்பது கண்கூடு. இவர்கள் ஒரு குடும்பமாக, சமுதாயமாக  ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் வாழ்வது தெரிகிறது. வருடம் முழுதும் வேலை இல்லாவிடினும், அன்றாட வேலைக்குச் சொல்லாவிட்டாலும், கிராம மக்களின்  எளிய வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியும் கலகலப்பும் உள்ளது வியப்பானது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசோ – மானுடத்தின் பன்முகம்உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *