அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் அன்னாந்து பார்க்க வானத்திற்கு பொட்டு வைத்ததுபோல் பறந்த அழகான பட்டம் சிதைந்து அந்தப் படுக்கையில் கிடப்பதுபோல் உணர்கிறேன். காலை நேரங்களில் அம்மா வழக்கமாக நடக்கும் அந்த ஃபேரர்பார்க் திடலின் ஒவ்வொரு புல்லும் அம்மாவைத் தேடுவதாகவே உணர்கிறேன். ஒரு பார்வையிலேயே நெஞ்சுக்குள் பம்பரம் சுழற்றும் என் அம்மாவின் பார்வையை நேருக்குநேர் சந்தித்தால் நொறுங்கிப் போவோமோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அதற்காகவே அம்மாவின் முகத்தை பார்ப்பதைத் தவிர்த்து வருகிறேன். வெளிச்சமான என் வீட்டில் இருட்டில் நடப்பதுபோல் உணர்கிறேன். எல்லா இயக்கங்களும் எப்போதும் போல் தான் இருக்கின்றன. அதை உணரவேண்டிய என் மனம் மரக்கட்டை போல் ஆகிவிட்டது. அப்போதுதான் அம்மா மெதுவாக கையை உயர்த்தி என்னை அழைத்தார். மிகச் சிரமப்பட்டு தன் படுக்கையின் பக்கவாட்டில் ஒரு சிறு இடத்தை ஒதுக்கி உட்காரச் சொன்னார். அடுத்த கையில் ஒரு பத்திரம் இருந்தது. பத்திரத்தைப் பார்த்ததும் அம்மா என்னிடம் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதை மீண்டும் அந்த நிலையில் அம்மா சொல்ல முடியாது. அந்தப் பத்திரத்தை என் கையில் வைத்து அதன் மீது மறு கையை வைத்தார். எங்கோ ஒளிந்து கொண்டிருந்த கண்ணீர்த்துளிகள் அம்மாவின் கண்களில் விருட்டென்று தலைநீட்டி எந்தப் பக்கம் வழிவது என்று தடுமாறியது. அவர் இமைகளைத் தாழ்த்தியபோது நானும் தலையசைத்தேன். அந்த அசைவுகளுக்குள் பல அர்த்தங்கள் ஒளிந்து கிடந்தன. அந்தப் பத்திரம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லுரிக்கு எதிரே இருக்கும் ராஜேஸ்வரி நகரில் உள்ள இரண்டு காலி மனைப்பத்திரம். என் மகனுக்கு இப்போது பெண் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலிமனைகளை விற்று அந்தப் பணத்தில்தான் திருமணம் செய்ய வேண்டுமாம். அந்த வேண்டுகோளும் அதற்கான சம்மதமும் அந்தக் கடைசி நேர அசைவுகளின் அர்த்தம். அந்தப் பத்திரத்தில் அம்மாவின் உயிர் ஒட்டிக் கொண்டிருந்ததுபோல் அந்தப் பத்திரம் என் கைக்கு வந்த அதே நேரம் அம்மாவின் உயிரும் பிரிந்துவிட்டது. அந்தப் பத்திரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உங்களை 40 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறேன்.
அறந்தாங்கியில் கிட்டத்தட்ட 100 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ள மச்சுவீடுதான் எங்கள் வீடு. எங்கள் வீட்டின் வால் பகுதியில் இரண்டு பசுமாடுகள் இரண்டு காளை ஜோடிகள். நடுப்பகுதியில் நெல் பத்தாயங்கள், விவசாயச் சாமான்கள் சாக்குக் கட்டுகள். முகப்புப் பகுதியில் இரண்டு திண்ணைகள். இருபது பேர் படுக்கலாம். அந்தப் பகுதி தேக்குச் சட்டத்தால் இடைவெளி விட்டு அடைக்கப்பட்டு அதன் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். முகப்பு வழியாக நாங்கள் வீட்டுக்குள் போவதில்லை. அதற்குப் பின்பகுதியில் உள்ள வாசல் வழியாகத்தான் வீட்டுக்குள் போவோம். வெளியூரிலிருந்து வரும் முசாஃபர்கள் இரவு நேரங்களில் தங்கிக் கொள்வார்கள். செவத்தியான், மேரி என்ற குடும்பம் மூன்றாவது தலைமுறையாக எங்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள். இரவில் தங்குகிறவர்களுக்கு சம்பா சோறு, முருங்கைக்காய் முள்ளங்கி போட்ட பருப்பானம் அல்லது அடர்த்தியான புளியானம். அதோடு சுட்ட கருவாடு அல்லது அவித்த முட்டை, முருங்கைக் கீரையுடன் சாப்பாடு தரவேண்டியது அவர்களின் பொறுப்பாக இருந்தது. அது தவிர விவசாய வேலைகளுடன் மாடுகளைப் பார்த்துக் கொள்வதும் அவர்கள் தான். அவர்களுக்கு இந்த உலகமே என் அம்மா மட்டும்தான். எனக்கு பத்து வயதாகும்போதே என் அத்தா மௌத்தாகிவிட்டார். சிங்கப்பூர் தஞ்சோம் பஹாரில் காசு மாற்றும் கடையாம். அறந்தாங்கியைச் சுற்றி பஞ்சாத்தி, கடையாத்துப்பட்டி, மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஆமாங்குடி, பாக்குடி என்று எல்லாப் பகுதியிலும் நிலங்கள் வாங்கிப் போட்டிருந்தார். அத்தாவின் ஒரே சகோதரர் என் சச்சா அப்துல்லா அறந்தாங்கியிலேயே மிகப் பெரிய நெல் அரிசி வியாபாரி. அவர் தொழிலுக்கு முதலீடு செய்தது என் அத்தாதானாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர் ராமகிருஷ்ணன் என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த விஷயம் அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததுகூட, காசு வங்கி மூலம் அனுப்பியதால்தான். அம்மாவுக்கு அது ஒரு சங்கதியே அல்ல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏகப்பட்ட குத்தகை நெல் வரும். அதையெல்லாம் வாங்குவது, நல்ல விலை வரும்போது விற்பது எல்லாம் என் அப்துல்லா சச்சாதான் கவனித்து வந்தார். அம்மாவுக்குச் சேரவேண்டிய ஒரு ரூபாய் கையில் இருந்தாலும் அம்மா கணக்கில் சேர்க்காமல் பள்ளிவாசலுக்கு தொழப் போகமாட்டார். ராமகிருஷ்ணன் ஒரு தடவை அம்மாவிடம் சொன்னார். ‘விசுவாசம் என்றால் என்னவென்று படித்திருக்கிறேன். இந்த அப்துல்லாவிடம் தானம்மா நான் அதை முழுமையாகப் பார்க்கிறேன்’ அத்தா மாதாமாதம் டிராஃப்ட் அனுப்பிவிடுவார். எல்லாமும் அம்மா கணக்கில் சேர்ந்து கொண்டிருந்தது. காசு வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சேவத்தியான் போய் ராமகிருஷ்ணனிடம் வாங்கிவந்து விடுவான். அதற்கான காசோலை யெல்லாம் அடுத்த நாள் ராமகிருஷ்ணன் அம்மாவிடம் நேரில் வந்து பெற்றுக் கொள்வார். பள்ளிவாசலில் இரவு தொழுகைக்குப் பின் வெளியூர் முஸாஃபர்கள் எங்கள் வீட்டில் தூங்கிவிட்டு மறுநாள் காலை ஃபஜரில் எழுந்து எங்களுக்காகத துஆ செய்துவிட்டுப் போவார்கள். எல்லாருமே சொல்வார்கள் என் அம்மாவிடம் ரஹ்மத்தான மலக்கு குடிகொண்டிருப்பதாக. அத்தா மௌத்துக்குப் பிறகு அம்மா வெள்ளைச் சேலைதான் உடுத்தினார். தலை முக்காடு நழுவுவதே இல்லை. தூரத்தில் பள்ளிவாசல் பாங்கொலி கேட்டதும் தொழத் தயாராகிவிடுவார். ஒரு வேளைத் தொழுகை கூட அம்மா விட்டதில்லை. நான் குட்டைக்குளப் பள்ளியில்தான் தொடக்கப்பள்ளி படித்தேன். நான் பள்ளிக்கு போகும்போது என்னோடு அம்மாவும் வந்துவிடுவார். பள்ளிக்கூடத்தின் பின் புறத்தில் உள்ள திடலில் மரவள்ளியும் முள்ளங்கியும் அம்மா சொந்த ஆட்களை வைத்து பயிர் செய்வார். மூட்டை முள்ளங்கியும் மரவள்ளியும் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து எல்லா ஆசிரியர்களுக்கும் கொடுக்கச் சொல்வார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அத்தாவுக்கும் மிகப்பெரிய தரும சிந்தனை உண்டு. அம்மாவின் தரும குணம் அறிந்துதான். அத்தா நிறைய காசு அனுப்பினாராம். உண்மையில் தான் செய்ய விரும்பிய சதக்காக்களை அம்மாமூலம் அவர் செய்துவந்தார்.
அறந்தாங்கியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தஞ்சாவூரில் தொடர்ந்தேன். அம்மா மாதாமாதம் நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்துவிடுவார். என் நண்பர்களையெல்லாம் அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். எனக்குத் தெரியாமல் 100, 50 என்று அவர்களுக்குக் காசு கொடுத்திருக்கிறார். என் அறையில்தான் சுந்தரராமன் தங்கியிருந்தான். மிகச் சிறந்த அறிவாளி ஆனால் ஏழை. அவனுக்காக ஒரு தடவை அம்மா விடுதிக் கட்டணம் கூட தந்திருக்கிறார். படிப்பின் அடுத்த கட்டம். எனக்கு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை படிக்க இடம் கிடைத்தது. அப்போது சுந்தரமாமனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவனுக்கு சென்னை சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாம் கல்லூரிக் கட்டணம் விடுதிக் கட்டணம் என்று 1000 ரூபாய் தேவையாம். பணம் இல்லாததால் அப்பா படிக்கவேண்டாம் என்கிறாராம். அவனுக்கு ஊர் புதுக்கோட்டைதான் தெற்கு 3ல் வீடு. ஒரு தடவை வீட்டுக்குப் போயிருக்கிறேன். கடிதத்தை அம்மாவிடம் காட்டினேன். உடனே 1500 ரூபாய் தந்து நேராக வீட்டுக்குப் போய் கொடுக்கச் சொன்னார். திருச்சிக்குப் பிறகு சென்னையில் என் முதுகலை முடித்து பின் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியிலேயே விரிவுரையாளராகிவிட்டேன். அப்பாடா! பத்துவருடக் கதையை இரண்டு வரியில் முடித்துவிட்டேன்.
அப்போதுதான் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமணத்திற்கு வந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பக்கம் ‘அல்லாஹ்’ மறுபக்கம் ‘முஹம்மது’ பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுகளை அம்மா கொடுத்தார். அதை அம்மா எப்படி செய்தார் எப்போது எவ்வளவுக்கு வாங்கினார் என்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. திருமணம் முடிந்த உடனேயே அம்மா, ராமகிருஷ்ணன், அப்துல்லா சச்சா மூவரும் வந்து 1100 ரூபாய் வாடகையில் வீடு பேசி எங்களைத் தனிக்குடுத்தனம் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அம்மா ஒருநாள் கூட மருமகளைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பியதில்லை. அப்போது என் மொத்தச் சம்பளமே அவ்வளவுதான். அம்மா அந்த வாடகையை நேரடியாக வீட்டுக்காரருக்கு அனுப்பிவிடுவார். என் சம்பாத்தியம் செலவு எதையுமே அம்மா கேட்டதில்லை. காசு தேவையானால் உடனே தெரியப்படுத்து என்று மட்டும்தான் சொல்வார். கல்லூரியிலிருந்து மதியச் சாப்பாட்டுக்கு நான் வீடு வந்துவிடுவேன்.
ஒரு நாள். வீட்டுக்கு வந்தபோது வீட்டில் அம்மா, ராமகிருஷ்ணன், அப்துல்லா சச்சா ஆகியோரைப் பார்த்து அதிர்ச்சியானேன். வருவதுபற்றி என்னிடம் சொல்லவே இல்லை. வீட்டுக்காரரும் இருந்தார். ராமகிருஷ்ணன் தான் சொன்னார். மாலை கல்லூரி முடிந்து நேராக நான் பத்திரப்பதிவு அலுவலகம் வந்துவிடவேண்டுமாம். அந்த வீட்டை என் பெயருக்கு கிரயம் செய்யப் போகிறார்களாம். எல்லாத் தகவலுமே அந்த நிமிடம்தான் எனக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது என் வீட்டுக்கு அருகே இருந்த இரு காலி மனைகளை அம்மா தன் பெயருக்கு வாங்கினார். அதை வாங்கியதும் எனக்குத் தெரியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயம் கனவில் யாராவது சொல்லி அது ‘அல்லாஹ்வின் கட்டளை’ என்று கூட அம்மா பல காரியங்கள் செய்திருக்கிறார். எதற்குமே நான் அம்மாவிடம் காரணம் கேட்டதில்லை. அப்படிக்கேட்டாலும் ஆழமான புன்சிரிப்புடன் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவார். காலம் உருண்டது. இப்போது சிங்கப்பூருக்கு வந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. வரும்போதே அம்மாவையும் அழைத்து வந்துவிட்டேன். அம்மா இப்போது தரும் பத்திரம் அந்தக் காலிமனைக்கான பத்திரம்தான்.
இப்போது என் மகனுக்கு பெண் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த மனையை விற்க வேண்டும். பிறகு கூட விற்கலாம். அதை ஆன செலவுக்கு ஈடு கட்டலாம். ஆனால் என் மனசாட்சி இடம் தரவில்லை. அம்மாவின் ஆசை அதுவல்லவே. உடனே விற்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டேன். தஞ்சாவூர் யூகோ வங்கியில் நிர்வாகியாகப் பணிபுரிகிறான் என் நண்பன் ஐயப்பன். அவனுக்கு தொலைபேசினேன். ‘மனை உடனே விற்கப்படவேண்டும். அதற்கான சொத்து முகவர்களைப் பார். மனைகளின் நகலை இப்போதே அனுப்பிவிடுகிறேன். மற்ற என்னென்ன டாக்குமெண்டுகள் வேண்டும் என்று உடன் தெரிந்து வைத்துக்கொள். இரண்டு வாரத்தில் மீண்டும் அழைக்கிறேன்.’ உடனே ‘சரி’ என்றான். உடனே பத்திர நகலை அனுப்பிவிட்டேன்.
பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. தொடர்பு கொண்டேன். ஐயப்பன் சொன்னான். ‘எல்லா வேலைகளும் முடித்துவிட்டேன். நானே பேசுவோம் என்றிருந்தேன். உடனே ஒரிஜினல் பத்திரம், உன் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓ.ஐ.சி. அம்மாவின் டெத் சர்டிபிகேட், நீ மட்டும்தான் அம்மாவின் வாரிசு என்பதற்கான சர்டிபிகேட் அங்குள்ள நோட்டரி பப்ளிக்கிடம் பெறவேண்டும். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வரும் தேதி, நேரத்தைச் சொல். திருச்சி ஏர்போர்ட்டுக்கு வண்டி அனுப்புகிறேன். ஹோட்டல் பரிசுத்தத்தில் ரூம் போட்டுவிடுகிறேன்.’ நான் கேட்பதற்கு எதுவுமே இல்லை. மொத்தத்தையும் சொல்லிவிட்டான். உடனே சுறுசுறுப்பு நரம்புகளை முறுக்கேற்றினேன். அம்மாவின் இறப்புச் சான்று இருக்கிறது. வாரிசு சர்டிபிகேட். பெனின்சுலா பிளாஸாவில் ஒரு நோட்டரி பப்ளிக் இருக்கிறார். அவரிடம் போனேன். அடையாள அட்டை, அம்மாவின் இறப்புச் சான்று கேட்டார். வலக்கையை உயர்த்தி ‘எனக்குக் கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லை’ என்று சத்தியப் பிரமாணம் எடுக்கச் சொன்னார். உடனே அந்த சர்டிபிகேட்டும் சுடச்சுட டைப் செய்து தந்துவிட்டார். ஐயப்பன் விருப்பப்படி நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை புறப்பட்டுப் போய் நான்கு நாட்களில் திரும்புவதுபோல் பயணச்சீட்டும் தயார். ஐயப்பனுக்கு தகவல் சொன்னேன்.
நவம்பர் 14. காலை 11. விமானம் திருச்சி விமானநிலையத்தில் இறங்கியது. அரை மணி நேரத்தில் வெளியேறிவிட்டேன். என் பெயர் எழுதிய அட்டையை உயர்த்திப் பிடித்தபடி ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் நான்தான் என்று அவனே ஊகித்துக்கொண்டான். அவனோடு உடன் தொடர்ந்து காரில் தஞ்சாவூருக்குப் புறப்பட்டேன். திருச்சி தஞ்சாவூர் இப்போதெல்லாம் ஒரு மணி நேரம்தான். வல்லம், மெடிக்கல் காலேஜ் இப்படி எதையுமே தொடாமல், புதிய பேருந்து நிலையம், சரபோஜி கல்லூரி வழியாக ஹோட்டல் பரிசுத்தம் சேர்ந்தபோது மணி 12.30. ஹோட்டல் லாபியில் எல்லாரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த போது விளங்கிக் கொண்டேன். ஐயப்பன் எதைச் செய்தாலும் ஒரு ஈடுபாட்டுடன் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டுதான் செய்வான். அங்கு இருந்தவர்கள் சொத்து முகவர் அலி, இடத்தை வாங்க விரும்பும் வல்லம் இஸ்மாயில், அவரின் கூட்டாளி, மற்றும் ஐயப்பன். எல்லார் முகமும் விடியவில்லை. ஏதோ சாலை விபத்தை ஏற்படுத்தி 300 வெள்ளி அபராதமும் 10 குற்றப் புள்ளியும் பெற்றதும்போல் முகம் சுருங்கி சோர்ந்திருந்தது. அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தோம். முதலில் இஸ்மாயில் தான் பேசினார்.
‘ரொம்ப வருத்தமா இருக்குணே. ஒங்கள தப்பா வரச்சொல்லிட்டோம். இன்னிக்கு ஒன்னும் செய்ய முடியாதுன்னு நெனக்கிறேன்’
‘ஏன்?’
‘எல்லா ஏற்பாடும் செஞ்சு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு பத்திரம் எழுதப் போனோம். இன்னொரு டாக்குமென்ட் தேவையாம். இங்குள்ள ராஜேஸ்வரி நகர் விஏஓ வின் நீங்கள் மட்டும்தான் உங்கள் தாயாரின் ஒரே மகன் என்ற சர்டிபிகேட் அவசியம் தேவையாம். உடனே விஏஓ வைப் பார்த்துச் சொல்லிவிட்டோம். அவர் விசாரித்துப் பார்த்த வகையில் உங்களோடு கூடப்பிறந்தவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாது என்கிறார்களாம். அதனால் தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு 15 நாள் கழித்து சர்டிபிகேட் தருகிறேன் என்கிறார். அவர் வேறு ஏதும் எதிர்பார்க்கிறாரா என்றும் கேட்டுவிட்டோம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்படி விசாரிக்காமல் கொடுத்து ஒரு விஏஓ வேலையை இழந்துவிட்டார் என்றும் கரப்சன் கேஸில் மாட்டிக் கொண்டார் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது நியாயம்தான்’
ஐயப்பன் குறுக்கிட்டான். ‘பரவாயில்லை இஸ்மாயில். 15 நாட்கள் தானே. காத்திருப்போம்.’
15 நாட்கள் எனக்கு மிக அதிகமான இடைவெளி. உடனே நான் சொன்னேன்.
‘சட்டம் எதுவாகவும் இருக்கட்டும். சிங்கப்பூரிலிருந்து வந்துவிட்டேன். நேராக ரெஜிஸ்ட்ராரைப் பார்ப்போம். எல்லா சர்டிபிகேட்டுகளையும் காட்டுவோம். ஐயப்பனும் வருவதால் அவருக்கு ஒரு நம்பிக்கை ஏற்படலாம். முடியவே முடியாது. விஏஓ சர்டிபிகேட் அவசியம் வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டால் பரவாயில்லை. 15 நாள் கழித்து மீண்டும் வருகிறேன். நீங்கள் எல்லாரும் ரெண்டரை மணிக்கு ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் வந்துவிடுங்கள். நானும் வந்துவிடுகிறேன். ரெஜிஸ்ட்ரார் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து அடுத்த முடிவு எடுப்போம்.’
எல்லாரும் ஆமோதித்தனர்
2.30 மணி. ரெஜிஸ்ட்ரார் அலுவலகம். ஏதோ ஒரு குறுநில மன்னனின் கொலு மண்டபம் போல் நடுவில் உயர்ந்த மேடை மீது ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. சுற்றிலும் பலர் கணினியில் ஏதேதோ தட்டிக் கொண்டிருந்தார்கள். நுழைவாயிலின் வலது பக்கம் இரண்டு மேசைகள் குட்டியாக ஒரு தார் ரொடு போடுவதுபோல் கருப்பை அப்பிக் கொண்டு கிடந்தன. சுவரெல்லாம் கருப்பு மை பதித்த விரல் பதிவுகள். ஒரு துண்டு ஒன்று கருப்பிலேயே குளித்தபடி அங்கே கிடந்தது. அதில்தான் கருப்பைத் துடைத்துக் கொள்ள வேண்டுமாம். அது துடைக்குமா? ஒட்டுமா? லேசாகச் சிரித்துக் கொண்டேன். மேசையில் விரிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு வெள்ளைத்தாள் என்பது அது மடிக்கப்பட்ட நுனியில் தெரிந்தது. வழக்குமன்றங்களில் சாட்சிகளை, சம்பந்தப்பட்டோரை மூன்று முறை பெயர் சொல்லி அழைப்பாரே ஒருவர். சட்டைக்கு மேல் குறுக்காக மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒரு பட்டையை அணிந்தபடி. அப்படி ஒருவர் வந்தார். அவர்தான் ரெஜிஸ்ட்ராரின் உதவியாளர். பத்திரம் பதிவோரை ரெஜிஸ்ட்ராரிடம் அவர்தான் அழைத்துச் செல்வார். அவர் சொன்னார். ஐயா மதுரை போயிருக்கிறாராம். வந்து கொண்டிருக்கிறாராம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவாராம். அந்த வாசற்படியின் வெளி வராண்டாவில் காத்திருந்தோம். திடீரென்று ஒரு சலசலப்பு. அங்கங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அவரவர் இடங்களில் அமர்ந்தார்கள். அந்த உதவியாளர் தேவையில்லாமல் நிற்பவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறார். சற்று நேரத்தில் என் வயதில் ஒரு மனிதர் காரிலிருந்து இறங்கி நடந்து வந்தார். வெள்ளை பேண்ட். வெள்ளைச் சட்டை. கிட்டத்தட்ட விஜய் சேதுபதி லுக். சில நொடிகள் எங்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன. யாரையும் குறிப்பிட்டுப் பார்க்கக் கூடாதோ என்னவோ? முகத்தைத் திருப்பிக் கொண்டு நேராக அவருடைய பிரத்யேக அறைக்குச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில் உதவியாளர் வந்து என்னிடம் சொன்னார். ‘ஐயா உங்களை மட்டும் வரச் சொல்றாருங்க.’ கேட்டவுடன் ஐயப்பனும் இஸ்மாயிலும் புருவத்தை உயர்த்தினார்கள். ரெஜிஸ்ட்ரார் இப்படி கூப்பிடுவது நடைமுறையில் இல்லயோ? ஆச்சரியப்பட்டார்கள். அவரிடமே நான் திருப்பிக் கேட்டேன். ‘என்னையா?’. ‘ஆம். வெள்ளைச் சட்டை. ப்ரௌன் பேண்ட். கண்ணாடி, உயரம்.’ அந்த அடையாளங்கள் அவர் என்னைப் பார்த்த ஒரு சில வினாடிகளில் கிரகித்துக் கொண்டது. எவ்வளவு துல்லியமான கவனிப்பு. அந்த உதவியாளரோடு நான் மட்டும் சென்றேன். அந்த அறையின் கதவைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். நான் உள்ளே நுழைந்தேன்.
கதவுக்குப் பின்னாலிருந்து ‘ரஜித்து’ என்று கட்டிப்பிடித்தார். அந்தக் குரல். அந்தக் குரல். அவரை விலக்கிக் கொண்டு திரும்பினேன். ‘சுந்தரராமா?’ மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
‘என்னடா இது. நீயா ரெஜிஸ்ட்ரார்?’
‘ஆமாண்டா. இது அம்மா தந்ததுடா. எங்கேடா அம்மா? அழைச்சுட்டு வந்திருக்கியல்ல. அம்மா மட்டும் இல்லேன்னா ஏதாவது ஹோட்டல்ல டேபிள் தொடச்சுக்கிட்டிருப்பேன்டா. மொத மாச சம்பளம் வாங்கினப்போ அம்மா கால்ல வச்சு எடுக்கணும்னு நெனச்சேன்டா. எல்லாரையும் அள்ளிக்கிட்டு நீ சிங்கப்பூருக்கு போயிட்டே. டேய் டேய் வாடா. எங்கேடா தங்கிருக்கே. அம்மாவப் பாக்கணுன்டா.’
நான் கர்சிப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதேன். அவன் விளங்கிக் கொண்டான்.
‘என்னடா?’
‘ஆமாண்டா. போயிட்டாங்கடா.’
என்னை அவன் மீண்டும் கட்டிப் பிடித்தபோது அவன் குலுங்கியதில் நானும் சேர்ந்து குலுங்கினேன். என் தோள் பட்டையில் கண்ணீர் வழிந்து முதுகில் இறங்கியது. ஒருவரை ஒருவர் பிரித்துக் கொண்டோம்.பூமியிலிருந்து 1000 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் அமைதி அப்போது நிலவியது. அவன்தான் உடைத்தான்.
‘இங்கே எப்புர்றா வந்தே. நா இருக்கது தெரியுமா?
‘இல்லேடா. அம்மாவோட மனக்கடட விக்கணும். அதுலதான் என் மகனோட கல்யாணம் நடக்கணுமாம். அம்மாவோட ஆசைடா.’
எல்லாரையும் அறைக்கு வரச்சொன்னான் சுந்தர்ராமன். இனிமேல் நான் பெயர் சொல்லக்கூடாது. ரெஜிஸ்ட்ரார். அவரே தொடர்ந்தார்.
‘இஸ்மாயில் நீங்க வாங்குறீங்களா? 4800 சதுரஅடி. கிட்டத்தட்ட 5 கோடி வருதே. கேஸ் ரெடியா வச்சிருக்கீங்களா?’
‘இருக்குங்கய்யா’
அடுத்த நிமிடம் உதவியாளரை அழைத்து உடனே விஏஓ பன்னீர்செல்வத்தை வரச்சொன்னார். அடுத்த 15 நிமிடத்தில் பன்னீர்செல்வம் நடுநடுங்கி உள்ளே நுழைந்தார். ‘அவர் கேட்ட சர்டிபிகேட்ட உடனே கொடுங்க. அந்த அம்மாவுக்கு இவர் மட்டும்தான் மகன். மிஸ்டர் இஸ்மாயில் நீங்க போயி கேஸை எடுத்துட்டு வாங்க. அடுத்த அரை மணி நேரத்தில நாம ரெஜிஸ்டர் பண்றோம்.’ என்றார். மளமளவென்று பத்திரம் எழுதப்பட்டது. இரண்டு சூட்கேஸில் பணம் வந்தது. ‘ஐயப்பன் நீங்க எண்ணி சரிபாருங்க. அவருக்கு யூகோவில அக்கவுண்ட் இருக்காம். நான் போலிஸ் புரொடக்ஷனுக்கு ஏற்பாடு பண்றேன். உடனே கேஸை பேங்க்ல டெபாசிப் செஞ்சிடுங்க.’
யூகோ பேங்கில் டெபாசிட் செய்துவிட்டேன். இதோ சிங்கப்பூருக்குப் பறந்துகொண்டிருக்கிறேன். அம்மா ஆசைப்பட்டது நடந்திருக்கிறது. நல்லார் ஒருவர் உளரேல் தலைமுறைக்கே தனிப் பெருமைதான்.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்
- அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்
- பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’
- நித்ய சைதன்யா கவிதைகள்
- தொடுவானம் 149. கோர விபத்து
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13
- ‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா
- திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்
- 100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?
- நல்லார் ஒருவர் உளரேல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6
- மார்கழியும் அம்மாவும்!
- ஊசலாடும் இலைகள்…