என் செல்வராஜ்
அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். பேருந்து வசதி என்பது அரிதான காலம். மாமா ஊர் உடையார் பாளையம் அருகில் பெரிய கிராமம். என் ஊரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் இருக்கும் பெரிய ஊரான பாளையங்கோட்டையிலிருந்து தான் பேருந்து வசதி. ஊருக்குள் மூன்று ஆர்ட்டீசியன் நீரூற்றுகள். எப்போதும் தண்ணீர் தானாகவே கொட்டிக் கொண்டிருக்கும். போர்வெல் போட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. வயல்வெளியில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் முப்போகம் நெல் விளைந்தது. கரும்பு, வாழைகூட சிலர் பயிரிட்டு எங்கும் பச்சைப் பசேலென செழித்துக் கிடந்தது. . வீட்டில் காலையில் கேழ்வரகு, கம்மங்கூழ் உணவு . அரிசி சாப்பாடு மதியமும் இரவும்தான். வயலில் வேலை செய்பவர்களுக்கும் அது தான். மதியம் மட்டும் சாதம் வடித்து சாம்பார் அல்லது புளிக்குழம்புடன் சோறு.
என்னுடைய தாய் மாமா எப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் . தின்பதற்கு தின்பண்டங்கள் ஏராளமாக வாங்கி வருவார். எப்போது அவர் வந்தாலும் வீட்டில் தடபுடலாக விருந்து நடக்கும். அப்பா சிறியதாக வியாபாரம் செய்து வந்ததால் பணத்துக்கு ஓரளவு பிரச்சினை இல்லை. மாமா வீட்டுக்கு வந்ததும் என்னை தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சுவார். அவரது தங்கைக்குப் பிறந்த ஒரே மகன் அல்லவா?. வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஊரில் விளையும் வரகு, மணிலா கொட்டை அன்றைக்குக் கிடைக்கும் காய்கறி போன்றவையும் கூடவே வரும். மாமா கிராமம் பெரியது. செம்மண் பூமி. எங்கு பார்த்தாலும் வறண்டு கிடக்கும். சில இடங்களில் ஏரிகள் இருந்தன. ஏரிப்பாசனத்தில் அருகில் உள்ள நிலங்களில் விவசாயம் செழித்து இருந்தது. மற்ற வயல்களிளெல்லாம் மானாவாரிப் பயிர்களே.
பள்ளியில் விடுமுறை விட்டிருந்தார்கள். மாமா வீட்டிற்குப் போக எனக்கு ஆசை “அம்மா….அம்மா…”’என்றேன் இழுத்தபடியே . ”என்ன ’’ஒரே வார்த்தையில் கேள்வி வந்தது அம்மாவிடமிருந்து “..மாமா ஊருக்குப் போகலாம்மா?”’ கொஞ்சம் கொஞ்சியபடியே கேட்டேன். “அப்பா வரட்டும் கேட்டுச் சொல்றேன்” சொல்லிவிட்டு அவர் வேலையில் கவனமானார், நல்ல வேளையாக அப்பா ஒத்துக்கொண்டார். மறுநாளே என்னை அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றார் அம்மா. உடையார் பாளையம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து சாலை வழியே நான்கு மைல் நடந்து செல்லவேண்டும். மாமாவை பார்க்கப்போகிறேன் என்ற எண்ணம் மகிழ்ச்சியைத் தந்ததால் நடப்பது அவ்வளவு கஷ்டமாக தெரியவில்லை. அம்மாவுக்கு தொந்திரவு தரக்கூடாது என்று நடந்தே சென்றேன். அந்த சாலையில் பேருந்து ஏதும் கிடையாது. எப்போதாவது மாட்டு வண்டி செல்லும். சில பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே கூண்டு வண்டி இருக்கும். அதில் எங்களுக்கு இடம் கிடைக்காது.
அப்போது அந்த சாலையில் தூரத்தில் மாட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளின் ஒலி காதுக்கு ரம்மியமாக இருந்தது. காளைகளின் காலடிப் புழுதியின் வாசனை மூக்கில் நுழைந்து ஒருவித இன்பத்தைக் கொடுத்தது. மானாவாரிப் பயிருக்காக் எப்போதும் உழுது கிடக்கும் வயல்வெளி மண்ணின் வாசனையும், லேசாக மழை தூறியபின் பரவும் மண் வாசனையும் நான் ரசித்து நுகர்ந்தேன். எங்கள் அருகில் வண்டி வந்ததும் நின்றது. ஓட்டி வந்தவர் அம்மாவின் உறவினர். “மாரியாயி… என்னாம்மா நல்லா இருக்கியா? வா வண்டியில வந்து ஏறிக்க.”என்று அழைத்தவரிடம் “’நல்லாருக்கண்ணே நீங்க நல்லா இருக்கீங்களா?”என்று சொன்னபடியே . என்னைத் தூக்கி வண்டியில் ஏற்றி விட்டு. பிறகு அவரும் ஏறிக்கொண்டார். வண்டி மெல்ல நகர்ந்தது.
வண்டி மாமாவின் வீட்டின் முன் நின்றது, நாங்கள் இறங்கிக் கொண்டோம்.. அந்த காலத்து ஓட்டு வீடு. மாமாவின் அப்பா கட்டியது. நிலைக்கதவை அடுத்து நீளமான தாழ்வாரம்.தாழ்வாரத்தை ஒட்டி எதிரும் புதிருமாக இரண்டு அறைகள். பின்பக்கக் கதவைத் திறந்தால் பெரிய தோட்டம். தென்னை, மா,தேக்கு,புளி என்று மரங்கள் அடர்ந்திருக்கும். ஆண்டுக்குத் தேவையான புளி,தேங்காய்,மாங்காய் என்று மாமா கொண்டுவந்து கொடுத்துவிடுவார். வரகு , கம்பு விளையும் காலங்களில் அவைகளும் தேவைக்கு அதிகமாகவே வந்துவிடும்.
வீட்டின் முன் வண்டி நிற்பதைப் பார்த்த அம்மாயி வெளியில் வந்தார். நாங்கள் வருவதை அறியாத அம்மாயிக்கு எங்களைக் கண்டதும் வியப்பும் மகிழ்ச்சியும் தொற்றிக் கொண்டது. ஒடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டார்.அம்மாயியின் பரிசம் எனக்குள் ஆனந்தப் பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது.. அதற்குள் மாமாவும் வந்து விட்டார். அம்மாயியிடமிருந்து மாமா தோளுக்குத் தாவினேன். என்னைக் கண்ட மகிழ்ச்சி அவர் கண்களில் தெரிந்தது.”ஏம்மா….வள்ளிய அழச்சிகிட்டு வரல?” இல்லண்ணா அவளும் வந்துட்டா அங்க மாடு கன்ன யாரு பாக்கறது?அவுங்க அப்பாவ யாரு கவனிக்கறது?அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமா என்னை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்தார். “ஏங்க…புள்ள இப்பதான் வந்திருக்கான் அதுக்குள்ள எங்க அழச்சிகிட்டுக் கிளம்பிட்டீங்க?” “இருடி…நானும் மாப்பிள்ளையும் ஒரு ரவுண்டு ஊர சுத்திட்டு வர்றோம்” என்ற மாமாவிடம் “ஆமாம் இனிமே மாப்பிள்ளையும் உங்க தோள உட்டு இறங்க மாட்டான்.நீங்களும் இறக்கமாட்டீங்க” சிரித்துக் கொண்டே சொன்னார் அத்தை.
மாமாவுக்கு ஆண் குழந்தை கிடையாது. அதனால்தானோ என்னவோ என்னையே அவர் மகனாக நினைத்தார். எனக்கும் மாமாவோடு இருக்கும் நேரமே மகிழ்ச்சியானதாக இருந்தது. உறங்கும் நேரத்தைத்தவிர மற்ற நேரங்களில் மாமாவோடுதான் இருப்பேன். சில நேரங்களில் தெருப் பசங்களோடு விளையாடப் போவதுண்டு.அப்போதும்கூட பயந்து பயந்து அனுப்புவார். மாமாவோடு தெருவை நோட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்தேன். மேலத்தெருவை அடைந்த போதுதான் “என்ணன்ணே….மாப்பிள எப்ப வந்தான்.?” குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்பினோம். கடைசி வீட்டு கோதண்டம் ஆட்டுக்குத் தழையை மேலே கட்டிக்கொண்டே கேட்டார். “”இப்பதான் வந்தான்..தங்கச்சியும் வந்திருக்கு”’ என்ற மாமாவுடன் குளக்கரையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தேன்.இந்த குளத்தில்தான் மாமா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார்.
நான் பார்த்தவரையிலும் எல்லா வீடுகளிலும் கல் உரல் இருந்தது. எங்கள் கிராமத்தில் அவ்வளவு அதிகமாக கல்லுரலை பார்த்ததில்லை. வீட்டில் மர உரல் தான். மாமா ஊரில் வீட்டுக்கு வீடு கல்லுரல் இருந்தது. எங்கு பார்த்தாலும் இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை வரகு, கம்பு போன்றவற்றை குத்திக்கொண்டிருந்தார்கள்.அப்படிக் குத்தும்போது அவர்கள் ஆயாசம் தெரியாமல் இருக்க “”க்கும்,க்கும்”என்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலி எனக்கு எப்போதும் பிடித்தமானது. தெருவிலும் தோட்டத்திலும் மணிலா கொட்டையைக் காயவைத்திருந்தார்கள். மாமா ஒரு கை மணிலாக் கொட்டயை எடுத்து கையில் கொடுத்தார். ஊரின் கோடியில் செக்கு இருந்தது. மாமா என்னை அங்கே அழைத்துப் போனார். செக்கு மாடு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது . செட்டியார் செக்கருகே நின்றிருந்தார். மரத்தாலான செக்கின் அடியில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது. எள்ளை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். மாமா கொஞ்சமாக அரைக்கப்பட்ட எள்ளைக் கையில் எடுத்து வந்தார். பக்கத்தில் இருந்த மளிகைக் கடையில் கொஞ்சம் நாட்டு வெல்லம் வாங்கி பாதி அரைபட்ட எள்ளுடன் கலந்து கொடுத்தார். ‘என்ன அருமையான சுவை.! இன்னும் திண்ண வேண்டும் என்று ஏங்க வைத்தது. அங்கிருந்து நான் மட்டும் மாமாவிடம் சொல்லிவிட்டு முருகன் கோவிலுக்கு சென்றேன்.
அந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். கோவிலுக்குச் சென்று முருகனை வணங்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மாயி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். ” ஆத்தா… மாரியாயி எனக்கு வயசாயிட்டே போவுதுமா…இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல… எப்போ சாவு வரும்னு தெரியல. எம் பேர்ல இருக்கிற சொத்து உனக்குத்தான் . உன் ஊட்டுகாரர்கிட்ட கிட்ட சொல்லி எழுதி வாங்கிக்கச் சொல்லு” அம்மாயியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன். ” போ ஆத்தா, அவருக்கு உன் சொத்தை எழுதி வாங்க விருப்பமில்ல. என் அண்ணன் இருக்கும்போது அந்த சொத்து எனக்கெதுக்கு என்கிறார்” என்ற அம்மாவிடம் ” என்னடி சொல்றே ? அவன் ஒன்னும் உங்கூடப் பொறந்தவன் இல்ல. என் மூத்தாளுக்குப் பொறந்தவன் தான. எஞ்சொத்த நான் தரேன் .ஏன் வாங்கிக்க மாட்டேங்கிற ?அம்மாயி லேசான கோபத்தோடு கேட்டார். ” ஆத்தா…. அவுரு என் கூட பொறக்கல தான். ஆனா எம்மேலேயும்,எம் புள்ளயோ மேலேயும் மச்சான் மேலேயும் காட்டுற அன்பப் பாத்தியா?சரி உன்ன கூட மாத்தாந்தாயி போலவா நடத்துறாரு…ஏன் உனக்கு புத்தி இப்படிப் போவுது?நீ செத்தீன்னா கொள்ளி வைக்கப் போறது அவருதான். பேசாம இரு. அவரும் என் அப்பாவுக்குப் பொறந்தவருதான், அவரே உன் சொத்தை அனுபவிக்கட்டும். என் ஊட்டுக்காரரும் இத தான் சொல்றாரு ” மீண்டும் அம்மா அம்மாயியிடம் கொஞ்சம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்த உரையாடல்கள் எதுவும் எனக்கு புரியவில்லை.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை. திடீரென ஒரு நாள் எனக்கு ஜுரம். எல்லோருக்கும் கவலை. நான் படுக்கையில் கிடந்தேன். அப்போதெல்லாம் பல கிராமங்களில் நாட்டு வைத்தியம் தான். உடல்நிலை ரொம்ப மோசமானால் மட்டுமே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வார்கள். மாமா வைத்தியரை அழைத்து வந்தார். என்னை வெளியே வரச்சொல்லிச் சட்டையைக் கழற்றிப் பார்த்தார். முகம் மற்றும் உடலில் சிறு கொப்புளங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டுப் ” பையனுக்கு அம்மை வாத்திருக்கு. சுத்த பத்தமா பார்த்துக்குங்க. ஒரு வாரத்தில சரியாயிடும் ” என்று சொல்லிவிட்டுத் தாத்தா கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்..
என் அம்மாயி பாயைச் சுருட்டி வைத்து விட்டு வேப்பிலை போட்ட படுக்கையைத் தயார் செய்து படுக்க வைத்தார். ” அம்மா…. எனக்கு என்னா வந்திருக்கு? ” ஒண்ணுமில்லய்யா. அம்மா மாரியாத்தா உன் ஒடம்புல வந்திருக்கா. நம்ம ஊரு அம்மனுக்கு வேண்டியிருக்கேன்.ஆத்தா ஒன்ன உட்டு சீக்கிரம் எறங்கிடுவா சரியா…” . “அம்மா சாமிகிட்ட வேண்டிகிட்டா சரியாயிடுமா? ” என் சந்தேகத்தைக் கேட்டேன் “ உனக்கு ரெண்டு வயசு உன் அப்பா உடம்புக்கு முடியாம படுத்துட்டாரு. எல்லாரும் செத்துடுவாருன்னு சொன்னாங்க . நம்ம ஊரு பெரியவங்க ‘புருஷன் பொழைச்சி வந்தா தாலிய கழட்டி உண்டியல்ல போட்டுடறதா வேண்டிக்க , அம்மன் காப்பாத்துவா” அப்படீன்னாங்க. நானும் அப்படியே அம்மன் கோயிலுக்கு போயி வேண்டிகிட்டேன். உங்கப்பா பொழைச்சி வந்துட்டாரு. நானும் வேண்டிகிட்ட மாதிரி பவுனில் செய்த அந்த தாலியை உங்க அப்பாவோட போயி அம்மன் உண்டியல்ல போட்டுட்டேன். அதால தான் சொல்றேன் அம்மன் சக்தி உள்ள சாமின்னு. நீ நிம்மதியா இரு கண்ணு ” என்றார். பக்கத்து வீட்டு கற்பகம் அக்கா மாரியம்மன் தாலாட்டை தினமும் படித்தது.ஒரு வாரத்தில் அம்மை இறங்க ஆரம்பித்தது.
எனக்கு சாமி மேல் அதிக நம்பிக்கை வந்தது. நான் சாமியை வேண்டிக்கிட்டா எல்லாம் நல்லதா நடக்கும் என நம்ப ஆரம்பித்தேன்.அம்மை இறங்கியதும் தலைக்கு தண்ணீர் ஊற்றினார்கள். ஊருக்குப் போவது என முடிவு செய்து தன் அண்ணனிடம் கேட்டார் அம்மா.. “’ஏம்மா இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேன்” என்றார் மாமா. “மாமா எனக்குப் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுட்டாங்க போயே ஆகணும்” என்றேன் . “சரி நாளக்கி காலையில புறப்படலாம்” என்றவர். மறுநாள் காலையில் என்னை தூக்கிக்கொண்டு வயல்வெளி வழியே ஒத்தையடிப் பாதையில் நடந்தார். அம்மா உடன் வர ஒத்தையடிப்பாதை நீண்டு கொண்டே சென்றது. வயல்களுக்கு இடையே நான்கு அடி அகலப்பாதை. போகும் வழி எங்கும் உயிர் வேலி அமைத்தது போலிருந்தது. ஜெயங்கொண்டம் வந்து சேர்ந்து எங்களைப் பேருந்தில் ஏற்றி விட்டார் மாமா. நாங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
அடுத்த ஆண்டே என் அம்மாயி இறந்து விட்டார். அவரது சொத்துக்களை என் அம்மாவும் அப்பாவும் வேண்டாம் என்று மறுத்து விட்டதால் மாமாவே அனுபவித்துக் கொண்டிருந்தார். மாமா தன் மகளுக்குத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார் அதில் குடும்பக்கடன் அதிகமாகிவிட்டது. அம்மாயியின் சொத்தில் கொஞ்சம் விற்றுவிட்டுக் கடனை அடைக்க விரும்பினார். அம்மாவிடம் கேட்டார் மாமா. அம்மாவோ “ஏண்ணா அது உங்களுக்குன்னு விட்ட பிறகு எனக்கு ஏது உரிமை. உங்கள் கடனை அடைக்க தாராளமாக விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார். “இருந்தாலும் கேட்காமல் விற்பது சரியல்ல. மச்சான் வரட்டும் அவரை ஒரு வார்த்த கேட்டுட்டு முடிவு செய்யலாம்” என்றார் மாமா. அப்பா இரவு வருவதற்கு நேரமாகி விட்டது. அதனால் அன்று எதுவும் கேட்காமல் மாமா படுத்துவிட்டார். மறுநாள் காலையில் அப்பா எழுந்ததும் வயலுக்கு சென்றுவிட்டார். வயலைச் சுற்றிப் பார்த்து விட்டு அப்பா வீட்டுக்கு வந்தார். மாமா பேச்சை ஆரம்பித்தார். “மச்சான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ” . “சொல்லுங்க” “ஒண்ணுமில்ல கடன் கொஞ்சம் அதிகமா போச்சு. வட்டிக்காரன் பத்து வட்டி கேக்குறான் ,வட்டி கொடுத்துத் தீராது போலருக்கு, அதான் அம்மா பேர்ல இருக்கிற நிலத்தில கொஞ்சத்தை வித்துட்டு கடன அடைக்கலாம்னு நெனைக்கிறன் “. “அதுக்கு என்ன எதுக்கு கேக்கறீங்க ?” “அம்மா நிலம் முறையா என் தங்கச்சிக்குத்தான் சேரனும். எங்கிட்ட நீங்க உட்டிட்டீங்க. இருந்தாலும் ஒங்கள கேக்காம விக்க எனக்கு மனசு வரல” “அப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது. நிலம் எங்களுக்கு வேணாம்னு சொன்னப்பவே அது ஒங்க சொத்து. அதை விக்காம கடன் அடையாதுன்னா வித்துகிங்க” “சரி மச்சான்” சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார். அம்மாவும் அப்பாவும் அவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
நான் மாமாவை இன்னும் கொஞ்ச நாள் தங்கச் சொல்லிக் கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “அப்புறமா வரேன்””.. என்று சொல்லி என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புறப்பட்டார். சென்றார். சில மாதங்கள் கழித்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது. மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று எழுதி இருந்தார்கள். என்னை வீட்டில் விட்டு விட்டு என் அப்பாவும் அம்மாவும் உடனே புறப்பட்டு சென்றார்கள். என் அக்காள் தான் என்னைப் பார்த்துக்கொண்டார். மாமாவுக்கு உடல்நலம் சரியான பிறகே அப்பாவும்,அம்மாவும் வீட்டிற்கு வந்தார்கள். என் அக்காவுக்கு படிப்பு வரவில்லை அதனால் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்கள். எனக்கு படிப்பு நன்றாக வந்ததால் அப்பா என்னைப் பக்கத்து ஊரில் உள்ள உயர் நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். தினமும் நடந்துதான் மூன்று மைல் தூரம் போகவேண்டும். வயல் வரப்பு வழியே நடந்து சென்றால் மலைப்பு தெரியாது.என் வகுப்பு தோழர்களுடன் பெரும்பாலும் வயல் வரப்பு வழியேயும் , சில சமயங்களில் மெயின் ரோடு வழியாகவும் செல்வோம். நான் நடந்து செல்லும் போது ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே செல்வேன். போகும் வழியில் உள்ள ஊரின் கோவிலுக்கு தினம் சென்று சாமி கும்பிட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.என் அப்பா தீவிர கடவுள் பக்தர். திருப்பதி வெங்கடாசாலபதிதான் அவருக்குப் பிடித்தமான தெய்வம். புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதமெல்லாம் இருப்பார். என் பெற்றோர்களிடமிருந்து எனக்கு பக்தி வந்துவிட்டது. கோயிலுக்குப் போனால் கும்பிடுவேன்..கடவுளிடம் எப்போதும் எல்லோரையும் நன்றாக வை என்று வேண்டுவேன்.கடவுள் நான் வேண்டுவதாலேயே எனது வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என நம்பினேன். பெரிய எழுத்து பஞ்ச பாண்டவர் வனவாசம் என்ற புத்தகத்தை எனது அத்தையிடமிருந்து வாங்கி வந்து படித்துக்கொண்டிருந்தேன். இரவு நேரத்திலும் மண்ணெண்ணெய் விளக்கில் படித்துக்கொண்டிருந்தபடியே தூங்கிவிட்டேன். விளக்கு சாய்ந்து நெருப்புப் பட்டு புத்தகம் கருகத் தொடங்கியிருந்தது. கருகும் வாசனையை நுகர்ந்த என் அப்பா ஓடி வந்து புத்தகத்தை எடுத்து தீயை அணைத்தார். என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார். நான் எழுந்து என்ன நடந்தது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.அப்புறம் தான் புத்தகத்தைப் பார்த்தேன். அது கருகியிருந்ததை கண்டதும் அழ ஆரம்பித்துவிட்டேன். எரிந்துபோன புத்தகத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்பதே என் கவலை. அப்பாவிடம் வேறு புத்தகம் வாங்கித்தர கேட்டேன். அவரும் சிதம்பரத்தில் கிடைக்கும் வாங்கித் தருகிறேன் என்றார்.
அதிகாலையில் வாசல்கதவு தட்டப்பட்டது. ‘யார்’ எனக் கேட்டபடி அம்மா கதவைத் திறந்தார். என் மாமாவின் ஊரில் இருந்து அம்மாவின் சொந்தக்காரர் வந்திருந்தார். அம்மா “என்ன திடீரென்று வந்திருக்கீங்க?எதாவது விஷேஷமா?” எனக் கேட்டார். வந்தவர் வாயில் துணியை பொத்திக்கொண்டே “உன் அண்ணன் செத்துட்டாரும்மா” என்றார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.அதைக்கேட்ட அம்மா அடுத்த நிமிடமே பெருங்குரலெடுத்து “அண்ணா.. அண்ணா” என்று அலற ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா வந்தார். செய்தியைக் கேட்டு கண்கலங்கினார். பிறகு என் அம்மாவைத் தேற்றினார். அம்மா அழுகை அதிகமானது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் ஓடி வந்தனர். செய்தியைக் கேள்விப்பட்டு செய்தி சொல்ல வந்தவரிடம் “எப்ப எடுக்கிறாங்க?” என்று கேட்டனர். என் அம்மாவும் எங்கள் சொந்தக்காரர்களும் உடனே என் மாமா ஊருக்கு புறப்பட்டனர்.
“மாமாவுக்கு என்ன ஆச்சிம்மா?” கேட்ட என்னைப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார் அம்மா. “உன் மாமன் செத்துப்போயிட்டாருடா தங்கம் … அவரு மடியிலே உக்காரவச்சி உனக்குக் காது குத்தலாம்னு இருந்தேன். அதுகூட இப்போ முடியாம போச்சே” தலையில் அடித்துக்கொண்டு அழுதார். மாமா பொழைச்சுக்குவார் என நான் நம்பினேன். “அம்மா நான் சாமிகிட்ட வேண்டிக்கிறன் . மாமா பொழச்சிக்குவார் பாரு என்று சொல்லிவிட்டு சாமியிடம் வேண்ட ஆரம்பித்தேன். கடவுளே, என் மாமா உயிர் பொழச்சு வரணும். என் அம்மா அழக்கூடாது என வேண்டிக்கொண்டே இருந்தேன். அக்கா மட்டுமே என்னுடன் வீட்டில் இருந்தார்.
” அக்கா, மாமா பொழச்சிப்பாரா?”
“ எனக்கென்ன தெரியும். நீ சாமியை வேண்டிக்கோ. எழுந்து வந்தாலும் வரலாம்” அக்காவின் பதில் எனக்கு நம்பிக்கை அளித்தது. மூன்று நாட்கள் விடாமல் சாமியை வேண்டிக்கொண்டிருந்தேன். சாமி நிச்சயம் என் மாமாவை திரும்ப கொடுத்துவிடும் என நம்பினேன். மூன்று நாள் கழித்து என் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்தார்கள். உடனே என் அம்மாவிடம் ஓடினேன்.
“அம்மா. மாமா பொழைச்சிட்டாரா?” அம்மா ஒன்றும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தார்.என்னருகில் வந்த அப்பா ” சுந்தரம் செத்தவங்க எப்பவும் திரும்ப பொழைக்க மாட்டாங்க ” இல்லேப்பா, சாமிகிட்ட வேண்டிகிட்டா அந்த சாமி அவரை உயிரோட கொடுக்காதா ?”. “அப்படி எல்லாம் நடக்காது. சும்மா அப்படி சொல்வாங்க. செத்தா செத்ததுதான், உன் மாமா சாமிகிட்ட போயிட்டார், அழாமல் இரு”
“அப்ப மாமா திரும்ப வரலியா அப்பா?”” .
“இனிமே வரமாட்டார் சுந்தரம், நீ அழக்கூடாது”
கடவுள் மீது எனக்கிருந்த நம்பிக்கை உடைந்து கொண்டிருந்தது.முதன் முறையாக கண்ணில் கண்ணீர் என் மாமாவை நினைத்து. அப்பா அப்ப சாமியை வேண்டிகிட்டா ஒன்னும் நடக்காதா. அப்படின்னா அது சாமி இல்லேப்பா. அந்த சாமி எனக்கு இனி வேண்டாம்பா என்று கதறி அழுதேன்.
- மாவீரன் கிட்டு – விமர்சனம்
- நாற்காலிக்காரர்கள்
- பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்
- செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.
- 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்
- பூக்கும் மனிதநேயம்
- மாமா வருவாரா?
- எங்கிருந்தோ வந்தான்
- LunchBox – விமர்சனம்
- இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்
- கம்பன் காட்டும் சிலம்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கம்பனைக் காண்போம்—
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்
- தொடுவானம் 157. பிரியாவிடை உரை
- திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
- ’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை