தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

This entry is part 4 of 13 in the series 2 ஏப்ரல் 2017
                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது.

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இங்கு நோயாளிகள் வருகின்றனர். இங்கு வருமுன் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் பெறாதவர்களாகவே இருப்பார்கள். எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டு கடைசியாக வேலூர் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம்கூட மக்களிடம் பரவியிருந்தது. இதனால் நோய் முற்றிய நிலையில்தான் பலர் வருவதுண்டு. இதனால் பல்வேறு ஆபத்தான நோய்களின் இறுதி கட்டத்தில் உள்ளவர்களை கண்காணித்து குணப்படுத்தும் பயிற்சியும் கிட்டியது.

இங்கு நோய்களை அறிவியல்பூர்வமாக குணப்படுத்தும் முறையே தொடர்ந்தது. உதாரணமாக ஒரு வாரம் காய்ச்சல் என்று ஒரு நோயாளி வந்தால் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு உடன் காய்ச்சல் மாத்திரையையும் ஒரு எண்டிபையாட்டிக் மாத்திரையையும் எழுதித் தரமாட்டோம். அவருடைய இரத்தம் பரிசோதிக்கப்படும். அதில் வெள்ளை இரத்த செல்களின் அளவும், டைபாய்ட் காய்ச்சல் அறிகுறி, மலேரியா, ஃபைலேரியா காய்ச்சல் அறிகுறிகள் போன்றவை உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப்படும். நோயாளி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அந்த காய்ச்சல் வரும் நேரத்தையும் கருத்தில் கொள்வோம். இதற்கு செவிலியர்கள் வைத்திருக்கும் வெப்ப குறிப்பேடு ( Temperature Chart ) உதவியாக இருக்கும்.

பரிசோதனைகளின்மூலம் எந்த நுண்கிருமியால் நோய் உண்டாகியுள்ளது என்பதை அறிந்து அதை ஒழிக்க எந்த எண்டிபையாட்டிக் மருத்து தருவது உகந்தது என்பதை அறிந்து அதைத் தருவதையே அறிவியல் பூர்வமான மருத்துவம். என்கிறோம். இதில் தேவையில்லாமல் எண்டிபையாட்டிக் மருந்து தருவதில்லை. இதனால் அவற்றால் உண்டாகும் பின்விளைவுகளும்  ஏற்படுவது இல்லை.வைரஸ் காய்ச்சல்களுக்கு எண்டிபையாட்டிக் தருவது தேவையில்லை. வைரஸ் கிருமிகளை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது.

இத்தகைய அறிவியல் பூர்வமான சிகிச்சை முறையை சாதாரணமான கிராமப்புறத்தில், நகர்ப்புறங்களில் செயல்படும் கிளினிக்குகளில் பின்பற்ற முடியாது என்பது உண்மையே. அங்கெல்லாம் ஓர் யூகத்தில்தான் சிகிச்சைகள் தர முடியும். அப்படி சிகிச்சைகள் மேற்கொண்டபின்பும் காய்ச்சல் அல்லது வேறு நோய் நீடித்தால், இத்தகைய முறையைக் கையாளவேண்டும். இதில் நோயாளிக்கு ஒரு சிரமம் உள்ளது. காய்ச்சலுடன் மூன்று நாட்கள் துயருற நேரும். ஆனால் அதன் பின்பு எந்த நோய்க் கிருமி என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்ப மருந்துகள் தரப்பட்டு நோய் பூரண குணமாகும் நன்மை உள்ளது.

மூன்று மாதமும் வாழ்க்கை இவ்வாறு வார்டில் உல்லாசமாக ஓடிக்கொண்டிருந்தது.இனிமேல் தேர்வுக்காகப் படிக்கத் தேவையில்லை. இருந்தாலும் டாக்டர் புளிமூட் வார்டில் பலரின் முன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அவ்வப்போது மருத்துவ நூலைப் புரட்டியே ஆகவேண்டும்.அதோடு நூலகம் சென்று மருத்துவ சஞ்சிகைகளை இரவல் வாங்கி மருத்துவத்தில் நிகழும் முன்னேற்றங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் வேலை செய்வது போன்று ஒரு குறிப்பிட்ட வேலை நேரம், பின்பு ஒய்வு என்பது கிடையாது. இருபத்தி நான்கு மணிநேரமும் வார்டில் உள்ள நோயாளிகளைக் கண்காணிப்பதால் எப்போதும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும். எந்த நேரத்தில் வார்டில் அழைப்பார்கள் என்பது தெரியாது. அது எந்த நேரமானாலும் உடனடியாக அங்கு சென்றுவிடவேண்டும்.

மருத்துவ வார்டில் பணிபுரிந்த மூன்று மாதங்களில் இதயவியல் ( Cardiology ), நரம்பியல் ( Neurology ), சிறுநீரகவியல் ( Nephrology ) ஆகிய சிறப்புப் பிரிவுகளின் வார்டுகளில் இரண்டு வாரங்கள் பணிபுரிந்து பயிற்சி பெறுவோம்.

          ஆண்கள் பெண்கள் மருத்துவ வார்டுகள் தவிர எம் வார்டு என்ற பெயருடன் சிறப்பு வார்டும் இயங்கியது.. இந்த சிறப்பு வார்டில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இங்கு அரசியல் பிரமுகர்கள், மருத்துவமனை ஊழியர்கள் , மாணவ மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். நாங்கள் அங்கும் சென்று பயிற்சி பெறுவோம். தந்தை பெரியார் இந்த வார்டில்தான் சேர்ந்து சிகிச்சைப் பெறுவார். வீடு திரும்பம்போது தவறாமல் பணத்தை கட்டிவிடுவார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். கூட இந்த வார்டில்தான் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

இத்தகைய மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவிலும் மருத்துவ வார்டுகளிலும் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நோயாளிகளை தனியே பரிசோதனை செய்து சிகிச்சை தர முடிவெடுப்பதற்கு இது தன்னம்பிக்கையை ஊட்டியது. அநத அனுபவத்தை வைத்துக்கொண்டு வேறு மருத்துவமனைகளில் உதவியின்றி பணியாற்றலாம் என்ற துணிவு பிறந்தது.

மருத்துவ சஞ்சிகை குழு ( Journal Club ) ஒன்றும் இயங்கியது. இது வாரம் ஒரு முறை மாலையில் மருத்துவம் ஒன்று அலுவலக கலந்துரையாடல் அறையில் நடைபெறும். அதில் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகை அல்லது அமெரிக்க மருத்துவ சஞ்சிகை போன்றவற்றில்  வெளிவந்துள்ள புதுமையான மருத்துவ ஆராய்ச்சி பற்றிய கட்டுரையை ஒருவர் வாசிப்பார். அதன்பின்பு அது பற்றிய கலந்துரையாடல் செய்வோம். இந்த சஞ்சிகைகளை நாங்கள் மருத்துவமனை நூலகத்தில் இரவல் வாங்குவோம்.

எங்களுக்கு மருத்துவப்  பயிற்சியைத் தந்த டாக்டர் புளிமூட் எங்கள் ஒவ்வொருவருடன் நெருங்கிப் பழகி எங்கள் எதிர்காலம் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார். நாங்கள் எதிர்காலத்தில்  இந்தியாவில் எங்கே பணி புரிந்தாலும் அங்கெல்லாம் வந்து எங்களைக் காண வருவதாகவும் கூறி ஊக்கம் தந்தார்.

மூன்று மாத முடிவில் அவரது இல்லத்தில் எங்களுக்கு விருந்து வைத்து மகிழ்வித்தார். அவருடைய மனைவி டாக்டர் ரமணி புளிமூட் எங்களை அன்புடன் உபசரித்தார். அப்போது சுவையான கோழி பிரியாணி கிடைத்தது.

நாங்கள் மருத்துவப்  பயிற்சியை முடித்தபோது எங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது. இது மிகவும் முக்கியமானது. காரணம் மருத்துவ படிப்பு முடித்தபின்பு கட்டாயமாக இந்த மூன்று மாத பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். இந்த சான்றிதழ் இல்லையேல் எங்களுக்கு முழு மருத்துவப் பதிவு ( Full  Medical Registration ) கிடைக்காது. அந்த சான்றிதழ் இருந்தால்தான் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற முடியும். எனக்கு டாக்டர் புளிமூட் மிகவும் அருமையான ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

          ” This is to certify that Dr.G.Johnson worked under me from 18. 4. 1972 to 15. 7. 1972. He is a very sincere and hard working person. He is very much interested in working among Leprosy patients. His motivation to help these patients should go a long way for acquiring adequate training and furthering his knowledge. He is talented in many ways, particularly in writing up medical literature for common people to understand. He got along well with his colleagues.I wish him all the best.
     B. M. Pulimood, FRCPE, Professor of Medicine and Head of Medicine 1 – Unit. “
           டாக்டர் ஜி. ஜான்சன் எனக்குக் கீழ் 18.4.1972 முதல் 15.7.1972 வரை வேலை செய்துள்ளார். அவர் நேர்மையும் கடின உழைப்பும் மிக்கவர். தொழுநோயாளிகளிடம் வேலை செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவர்களுக்கு உதவிடவேண்டும் என்னும் அவரின் தன்முனைப்பு அதில் மேலும் பயிற்சியும் ஆற்றலும் பெறுவதற்கு தோலைதூர நோக்கில் பயனளிக்கும். அவருக்கு பல திறமைகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக பாமர மக்களுக்கு விளங்கும் வகையில் மருத்துவ இலக்கியத்தை எழுதும் ஆற்றலாகும்.சக பணியாளருடன் சுமுகமான நல்ல உறவுடன் பழகுபவர். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
          பி. எம். புளிமூட் எப்.ஆர்.சி.பி.இ ., மருத்துவப்  பேராசிரியர். மருத்துவப் பிரிவு ஒன்றின் தலைமை மருத்துவர்.
          இந்த மூன்று மாதங்களில் நான் மருத்துவப் பயிற்சி பெற்றபோதே பொது மருத்துவத்தின்மீது எனக்கு அதிகமான ஆர்வம் உண்டானது. மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கிட்டினால் பொது மருத்துவத்தில் நிபுணராக வேண்டும் என்று அன்றே முடிவு செய்தென்.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஇயற்கையின் பிழைஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *