மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

This entry is part 13 of 13 in the series 2 ஏப்ரல் 2017

420px-Café_de_Flore

 

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ?

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.:

பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல்  அபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள்   விற்பனையில்  சாதனை புரிந்துள்ள  நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில்   வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்,  Bernard Mangiante.  நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . பிரான்சுநாட்டிலும் நூலுக்கு நல்ல வரவேற்பென்று,  பிரெஞ்சு மொழியில் கலை இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமாகச் செயல்படும் France Culture வானொலி மூலம் அறியவந்தேன்.  நூல்,  மரங்களின் வாழ்க்கை நெறிகளை பேசுகிறதென்று சொல்லப்படுகிறது, இதுவரை வாசித்ததில்லை.

இயற்கை என்றால் பசுமை, வயல்கள், காடு, மரங்கள் செடி, கொடிகள் என்றே பொருள்கொண்டு பழகியிருக்கிறோம். ஆனால் ஆதனை இப்பிரபஞ்சத்தின் இயல்பு நிலை எனபொருள்கொண்டால்  மனிதர் உட்பட, பாரதி சொல்வதுபோல நிற்பது, நடப்பது, ஊர்வது பறப்பது அனைத்தும்( அவற்றின் தோற்றம்,  இயல்பான வாழ்க்கை முதலான), பிரபஞ்சத்தின் உண்மை நிலை (Reality), இயற்கை ஆகிறது. பிரெஞ்சு மொழியில் « tel qu’il est » என்றும் ஆங்கிலத்தில்   « As it is » என ஒன்றைப் பார்ப்பது. தமிழில் சொல்வதெனில்  எதுவாக இருக்கிறதோ அதனை அதுவாகப் பார்ப்பது. « Il vaut mieux être que paraître. »   என பிரெஞ்சு மொழியில் சொல்வதைப்போல , « பாசாங்கு தோற்றத்தைக்காடிலும் உண்மைத் தோற்றம் மேலானது » . மனிதரால் முடிகிற காரியமா ?

la vie sécrete

எதையும் கூட்டியோ குறைத்தோ ; பார்த்து, மதிப்பிட்டு விலை பேசி , விமர்சித்து வாழப்பழகிய மனித குணம் இயற்கைக்குரிய நியாயமான மதீப்பிட்டை அளித்து, உள்ளது உள்ளவாறு வாழப்பழகியதுண்டா என்றால் இல்லை. தேவைசார்ந்து பழகிய கண்களுக்கு மலரும் முள்ளும் அதனதன் கடமையை, அதனதன் இருத்தலை  அதனதன் கடப்பாட்டை நிறைவேற்றப் பிறந்தவை என்பதை மறந்து போவதும் இயற்கை. ஏன் எனில் அந்த « முள்ளும் மலரும் » எனக்கென்ன செய்கிறது என்ற பார்வை எடுத்த முடிவு. இதற்கு மலரோ முள்ளோ பொறுப்பு அல்ல. இங்கே « இயற்கையைப் பூதம் » என வர்ணித்து  எழுதுகிறேன் எனவைத்துக்கொள்ளுங்கள், என்னுடைய பூதத்திற்கும்,  நீங்கள்  கற்பனையில் காண்கிற பூத த்திற்கும் வேறுபாடிருக்கலாம்.  இந்த இரண்டு அணுகு முறைகளும்கூட ஒரு வகையில் இயற்கைக்கு, எதார்தத்திற்கு சேதம் விளைப்பவைதான். நகைக் கடையின் பெயர்கள் தான் வேறு, ஆனால் செய்கூலியில் சேதாரத்தைச் சேர்க்காத மனித வியாபரிகள் இருப்பதில்லை. இம்மனித உயிரிகளைத் தவிர பிற ‘இயற்கைக்’கூறுகள்  பொய்யின்றி அலங்காரமின்றி, ஜோடனையின்றி, வாசனாதி தைலங்களின்றி, அறிவை விருத்தி செய்யும் முனைப்பின்றி, அகந்தையின்றி ஆசையின்றி, கனவுகளின்றி  பிரபஞ்சத்தில் தமது பிறப்பையும் பதிவு செய்கின்றன. இறப்பையும் மருத்துவரிடம் போகாமல் ஏற்கின்ற பக்குவம் அவற்றுக்கு மட்டுமே உண்டு. தமது பிறப்பின் பயனை  தமக்கென கொள்ளாமல் இப்பிரபஞ்சத்திற்கு அர்பணித்துவிட்டு,  கல்லறை பற்றிய கனவுகளின்றி, ஈமச்சடங்குகள் குறித்த எதிர்பார்ப்புகளின்றி, சமயச் சடங்குகளின்றி மண்ணில் அவை மக்கிப்போகின்றன. மக்கி எருவாகி இறந்த பின்னும் ஈட்டிய கடனை திருப்பித் தரும் நேர்மை இயற்கைக்கு மட்டுமே உண்டு.

அண்மையில் மொழிபெயர்த்திருந்த ‘புரட்சியாளன்’ நூலில் அல்பெர் கமுய் (Albert Camus), கலை இலக்கிய படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது, இயற்கையை, இவ்வுலக உண்மையை , எதார்த்தத்தை  தாம் எதிர்பார்க்கின்ற வகையில் திருத்த முற்படுபவர்கள் என்ற  பொருளில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மனிதர்கள் முயல்வதற்கு  இயற்கையின் குறைய நிவர்த்தி செய்யவேண்டும் என்ற விருப்பம் மட்டுமே  காரணமல்லவென்றும், இயற்கையை உள்ளது உள்ளவாறு முழுமையாகச் சொல்வதற்குரிய இயலாமையும் காரணமென்று அதில் விளக்கியியுமிருப்பார். உண்மைதான் ஒரு காட்சியை, ஓர் எதார்த்தத்தை  எத்தனை வரிகளில், எத்தனைச் சொற்களில் உபயோகித்தாலும், முழுமையாக மொழிப்படுத்த, கலையில் வடிக்க, சித்திரமாகத் தீட்ட சேதாரமின்றி இயலாததுதான், இயற்கை எந்தவொரு கண்ணிக்கும் , பொறிக்கும், வலைக்கும் பிடிபடாத விலங்கு.

அண்மையில் பியர்லெமேத்ர் (Pierre Lemaître) என்பவர் எழுதியிருந்த ‘Au revoir la-haut)  எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது. அவருடைய இவ்வரிகள் மறக்கமுடியாதவை : « Son cerveau mélangeait la réalité et des dessins, des tableaux, comme si la vie n’était rien d’autre qu’une œuvre supplémentaire et multiforme dans son musée imaginaire. »

« வாழ்க்கை என்பதும் ஒரு கலை படைப்பு, பல வடிவங்களால் ஆனது என்பதன்றி வேறல்ல என்பதைப்போல எதார்த்தத்தடன் சித்திரங்களையும், ஓவியங்களையும் தனது கற்பனை அருங்காட்சியகத்தில், ஒன்று திரட்டினான் » என்ற படைப்பாசிரியரின் வரிகளை அல்பெர் கமுய் எழுப்பும் பிரச்சினை சார்ந்த தீர்வாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியர் சொல்வதைப்போல வாழ்க்கையையும் கலைபடைப்பாக அது எத்தனை கோணல்மாணலாக தீட்டப்படிருப்பினும், எதார்த்தத்திற்கு அல்லது இயற்கைக்குச் சமதையாக, கதை மாந்தனைப்போல  (அவன் முதல் உலகப் போரில் படுகாயமுற்று சிகிச்சைபெறும் வீரன், ஓவியனும் கூட)   மனதில்  நிறுத்தி திருப்தியுறுவதைத்  தவிர மனிதர்க்கு வேறுவழிகள் இருப்பதாக தெரியவில்லை. அதுவொன்றுதான், மனிதரினும் பார்க்க பெருமை மிக்க இயற்கையை, அதன் அகந்தையை வெல்ல பொய்யாகவே வாழப்பழகிய  மனிதன் கைகொள்ளக்கூடிய நிரந்தர தந்திரமாக இருக்க முடியும்.

. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பி கூடம் (Café littéraire)

இலக்கிய காப்பிக்கூடம் என்ற பெயரில் காப்பி இருப்பினும் காப்பி, தேநீர், பீர், தண்ணீர், பழரசங்கள், சோடா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பரிசாரகரிடம் கொண்டுவர பணித்துவிட்டு  உரையாட, விவாதிக்க, அல்லது தன்னந்தனியாக அமர்ந்து எழுத இலக்கியவாதிகள், ஓவியர்கள் தேர்வு செய்யும் விடுதிகளுக்கு இலக்கிய காப்பிக்கூடம் என்று பெயர். பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இத்தகையை கலை இலக்கிய காப்பிக்கூடங்கள் பிரசித்தம் என்றாலும் பாரீஸ் நகரத்திற்கு கூடுதல் பெருமையுண்டு. தவிர கலைஇலக்கியத்தின் பல பிரிவினரும் தொன்று தொட்டு இத்தகைய இடங்களுக்கு வந்து போவதை ஆண்டுகள் பலவாக தொடர்ந்து பின்பற்றிவருகின்றனர்.

இவர்கள், முழுக்குடியர்களாக  சட்டையைப் பிடித்துக்கொள்வதற்கென்றே பாருக்குச்  செல்லும் படைப்பாளிகள்  அல்ல, தவிர குருவை அரியாசனத்தில் அமர்த்தி, அவரின் பிரதாபத்தை அரசியல் தலைவர்- தொண்டர்கள் உறவின் அடிப்படையில் வாய்பிளந்து கேட்கும் சிஷ்யர்கள் இலக்கணத்தையும் அவர்கள் படித்ததில்லை, எனவே இந்தக் காப்பிக் கூடங்களின் இலக்கிய உரையாடல்கள் அனைத்துமே சக படைபாளிகளுடன், சிந்தனையாளர்களுடன், கவிஞர்களுடன், ஓவியர்களுடன் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடின்றி சரி சமமாக அமர்ந்து உரையாடும், விவாதிக்கும் களம். பதினேழாம் நூற்றாண்டிற்கு முன்பே le cabaret என்கிற இரவு விடுதிகள், மதுவை பிரதானமாக அருந்துகிற le taverne  விடுதிகள் ஆகியவற்றிற்குச் சென்று உரையாடும் வழக்கம் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது.  ஆனால் இத்தகைய காப்பி பார்களுக்கான செல்வாக்கு பதினேழாம் நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அழகியல், தத்துவம், அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் தங்கள் சொந்த இல்லங்களைத் தவிர்த்த சிறப்பு பொதுவெளியாக துறைசார்ந்த நண்பர்களுடன் விவாதிக்கும் களமாக காப்பி பார்கள்  உருவான காலமிது. அந்தவகையில்  முதலாவது இலக்கிய காப்பிக்கூடம் என்ற தகுதியைப் பெற்றது ‘le Procope’ (1986). இங்கு நாடகம் சார்ந்த புதிய முயற்சிகள் குறித்த கருத்துக்களை அத்துறை சார்ந்த நண்பர்கள் பகிருந்துகொண்டதாகச்  சொல்லப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இக்காப்பிக்கூடம் நாடக ஆசிரியர்களிடை பயன்பாட்டில் இருந்த இந்த இடம், பின்னர் பிரெஞ்சு புரட்சியின் போது முன்னணி தலைவர்கள் பலரும் அவ்வப்போது கூடி விவாதிக்க உதவி இருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறுகிய வீதிகளில் இருந்த காப்பி பாரை  விரும்பாத கலை இலக்கிய படைப்பாளிகள் அந்நாளில்  பாரீஸ் நகரில் Les grands boulevards எனப்புகழ்பெற்ற  பகுதியில் இருந்த காப்பிபார்களுக்கு வந்து செல்ல தொடங்கினர். இப்ப்குதியில் அவரவர் ஈடுபாட்டிற்கொப்ப துறை சார்ந்த நண்பர்களுடன் ஒரு பகுதியில் அவான் கார்டிஸ்டுகளும் (les avant-gardes), குறியீட்டாளர்களும்  சேன் நதியின் இதுடப்பக்கமிருந்த le Soleil d’or, le café de Cluny, le Vachette போன்ற காப்பி பார்களுக்கு வந்துபோக ;  சேன் நதியின் வலது பக்கமிருந்த காப்பிபார்களுக்கு போல்-ழான் தூலெ, கூர்த்தலின், ப்ரூஸ்ட் போன்றவர்கள் வந்து சென்றார்கள் அதேவேளை பாரீஸ் நகரின் மோன்மார்த்ரு  (Monmartre)பகுதியிலிருந்த  le chat noir காப்பி பாருக்கு வான் காக் முதலான நாடோடி வாழ்க்கை நடத்திய ஓவியக்கலைஞர்களும், க்யூபிஸ (Cubism) அபிமானிகளும்   வத்துபோவது வாழக்கமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோன்மார்த்ரு பகுதியிலிருந்து மோன்பர்னாஸ் பகுதியிலிருந்த காப்பிபார்களுக்கு போக ஆரம்பித்தார்கள், மீ எதார்த்த்வாதிகள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப இப்பகுதியிலிருந்து விலகி வெகுதூரத்திலிருந்த காப்பிபார்களில்  சென்று உரையாடினார்கள். நாற்பதுகளில் (1940) இத்தகைய காப்பி பார்கள் கலை இலக்கியவாதிகள் கூடும் இடமாக மட்டுமின்றி, அவர்களுக்கு எழுதவும் பயன்பட்ட து. அவ்வகையில் சிமொன் தெ பொவ்வார் அதிகம் வந்துபோகும் காப்பி பாராகLe Flore இருந்த து. பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இன்றும் இலக்கியவாதிகள் மட்டுமின்றி, தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோரும் காப்பி பாரில் கூடுகிறார்கள், அவற்றிர்க்கு Café Philosophique என்று பெயர்.

 

. பிரான்சில் என்ன நடக்கிறது.

அடுத்த மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல். இதுபற்றி விரிவாக அடுத்த மாத த்தில் எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட் ரம்ப் போன்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்த முகூர்த்தம் பிரான்சிலும் அதுபோன்ற தலவர்களுக்கு இன்று செல்வாக்கு.  அந்நியர்களை வெளியேற்றினால், பிரான்சு  ஐரோப்பாவிலிருந்து  வெளியேறினால் நாட்டின் மொத்த பிரச்ச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற பேச்சை நம்பும்  வெகுசன அரசியல் பிரான்சிலும் பிரசித்தம். அண்மைக்காலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் இந்த மாற்றத்தில் பங்கிருக்கிறது. இன்று பரவலாக ஐரோப்பிய நாடுகளில் வலது சாரிகளின் பேச்சு சாதாரண மக்களை எளிதாக ஈர்க்கிறது.  ஏற்கனவே ஆஸ்த்ரியா, நோர்டிக் நாடுகள் சிலவற்றில்  தீவிரவாதம் ஜெயித்துவிடுமோ என்ற அச்சத்தில் நடுநிலையாளர்கள் கவலைப்பட,  தேர்தல் முடிவுகள் தீவிர வலது சாரிகளுக்கு எதிராகவே இருந்தன.  அந்த  அச்சம் பிரான்சில் இன்று இருக்கிறது. Front National  எனும்`பாசிஸக் கட்டியின் தலைவர் மரி லெப்பென்(Marie Le pen)  என்ற பெண்மணி கருத்துக் கணிப்பின்படி தற்போது போட்டியாளர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர். பொதுவாக பிரான்சு நாட்டில் இனவேற்றுமை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராகலாம், பிரான்சு நாட்டில் சாத்தியமில்லை.   இந்த நிலையில் அண்மைக்காலத்தில் பிரெஞ்சு பொலீசாரின் தாக்குதலுக்கு ஒரு கறுப்பரின இளைஞர் உள்ளானார், பெரும் கொந்தளிப்பு உருவாகித் தணிந்தது. தற்போது சீனர் ஒருவர் பாரீஸில் சுடப்பட்டுள்ளார். இறந்த சீனர் கத்தியால் தாக்கவந்ததாகவும் தற்காப்புக்காக தாங்கள் ஆயுத த்தை உபயோகித்த தாகவும் பொலீஸார் கூறுகின்றனர். பாதிக்கபட்டவர் தரப்பினர் வாதமோ அதை முற்றாக மறுக்கிறது. விளைவாகத் தொடர்ந்து சீனர்கள் வீதியில் போராடுவது தொடர்கிறது(இப்போராட்டத்திற்குப் பின்புலத்தில் சீன அரசு இருக்கிறதென்ற குற்றச்சாட்டை, பிரான்சு உளவுத் துறை தெரிவிக்கிறது, அதைக் இறந்த சீனரின்  வழக்கறிஞர் கடுமையாக மறுத்திருக்கிறார்) இதற்கிடையில் சீன அரசு தங்கள் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பிரெஞ்சு அரசுக்குத் தெரிவிக்க, அடுத்த சில நாட்களில்   பிரெஞ்சுக்கார ர் ஒருவர் சீனாவில் தாக்கப்பட்டாரென்று செய்தி.

உலகெங்கும் தேசியவாதம் தலைதூக்கியிருக்க, இதே ஐரோப்பாவில்  பிரான்சுக்கு அண்டை நாடான சுவிஸ்ட்ஸர்லாந்து,  நான்கு மொழி பேசும் மக்கள் அவர்களின் வெவ்வேறு கலாச்சாரம், கணிசமான புலம்பெயர்ந்த மக்கள்  என்ற நிலையிலும் அமைதியான வாழ்க்கையைப் பேதமின்றி தம் பிரஜைகளுக்கு வழங்கிவருகிறதென்ற  உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

——————————————————————————

Series Navigationபூமராங் இணைய இதழ்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *