(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை செய்தபின் இருவரும் பின்கட்டுக்குப் போய் முகம் கழுவித் துடைத்துக்கொண்டு திரும்பி வந்து சாப்பாட்டு மேஜையருகே அவருக்கு எதிரில் உட்காருகிறார்கள். செயற்கையான ஒரு புன்சிரிப்புடன் அவர்களை நோக்கித் தலையசைக்கும் ஜானகி அங்கு வந்து இருவருக்கும் முன்னால் தட்டுகளில் தின்பண்டங்களையும் காப்பியையும் வைக்கிறாள். சுந்தரி அவளை நோக்கிச் சிரிக்கிறாள்.
“நேர்முகத் தேர்வில் எப்படிச் செய்தாய், சுந்தரி?” என்று ஜானகி அவளை விசாரிக்கிறாள்.
“மிகவும் நன்றாய்ச் செய்தேன், அம்மா!”
“கூச்சப்படாமல் சாப்பிடு! சங்கோசம் வேண்டாம், சுந்தரி!” என்று அவளை உபசரித்தபின் ஜானகி அடுக்களை நோக்கித் திரும்புகிறாள்.
“காலையில் சிற்றுண்டி மிக நன்றாக இருந்தது, அம்மா. வெங்காய ரவை உப்புமாவும் கொத்துமல்லிச் சட்டினியும் பிரமாதம். தேர்வுக்குக் கிளம்பும் மும்முரத்தில் நான் உங்களிடம் சொல்லவில்லை.”
“அதனால் என்ன? சரி. நன்றாய்ச் சாப்பிடு….” – இவ்வாறு கூறிப் புன்னகை செய்த பின் நடந்து செல்லும் தம் மனைவியைப் பாராட்டும் பார்வையை ஜெயராமன் அவள் மீது செலுத்துகிறார். பின்னர், பெருள் பொதிந்த பார்வையைச் சுமதியின் மீது அவர் பதிக்கிறார். அவளும் அதே முறையில் முறுவலிக்கிறாள். அதன் பிறகு இரண்டு பெண்களும் சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
“ஏனம்மா, சுந்தரி! உனக்குத் தேர்வானால், அதன் பின் நீ இங்கு மதராசிலேயே வேலையில் அமர்த்தப்படுவாயா?” என்று ஜெயராமன் விசாரிக்கிறார்.
“தெரியவில்லை, மாமா! இந்தியா முழுவதிலும் அவர்களுக்குக் கிளைகள் உள்ளன – மதராஸ், ஹைதராபாத் உள்பட. … எங்கே போடுவார்களோ, தெரியாது!”
“இரண்டு வாரங்களுக்கு முன் விடிவெள்ளியில் வந்த சுமதியின் கட்டுரையைப் படித்தாயா? இரண்டு நாள்களுக்கு முன் இன்னொரு கட்டுரையும் வந்திருக்கிறது!” – ஜெயராமனின் குரலில் பெருமை ததும்புகிறது.
“தெருப் பிள்ளைகளைத் தத்து எடுப்பது பற்றிய முதல் கட்டுரை பிரமாதம். அடுத்ததை நான் இன்னும் படிக்கவில்லை. தேர்வுக்குத் தயார்
செய்துகொண்டிருந்ததால் படிக்கவில்லை. எடுத்து வைத்திருக்கிறேன்.!’
‘’இந்தக் கட்டுரையும் பிரமாதமாக இருக்கிறது!”
“போதும் அப்பா. ரொம்பவும்தான் பீற்றாதீர்கள்!”
“அவர் பீற்றுவதாக ஏன் சொல்லுகிறாய், சுமதி? அவர் உண்மையைத்தானே சொல்லுகிறாராம்?”
காப்பிக் கோப்பையைக் கையில் எடுத்துக்கொள்ளும் சுந்தரியிடம், “ஏய்! என்ன இது! இன்னும் கொஞ்சம் பக்கோடா சாப்பிட்டுவிட்டுக் காப்பியைக் குடியேன்!” என்கிறாள் சுமதி.
“வேண்டாம், சுமதி. அப்புறம் இரவு சரியாய்ப் பசி எடுக்காது!”
“சரி. உன் விருப்பம்!”
அடுக்களையிலிருந்து எட்டிப் பார்க்கும் ஜானகி, ஜெயராமனை நோக்கி, “நான் சமையலை முடித்தாகிவிட்டது. நீங்கள் அரியும் காய்கள் நாளைக்கானவை…. நாம் இப்போது கோவிலுக்குப் போய் வரலாமா?” என்று கேட்கிறாள்.
“போகலாமே! நானும் முடித்துவிட்டேன். …சுமதி! நீங்கள் இருவரும் கூட எங்களோடு வருகிறீர்களா?”
“இல்லை, அப்பா. நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். இன்றைய தேர்வுக்குப் பிறகு சுந்தரிக்கு மிகவும் அலுப்பாக இருக்கும். வெளியே போகும் வேலையை எல்லாம் நாங்கள் நாளைக்கு வைத்துக்கொள்ளுகிறோம்…. நீ என்ன சொல்லுகிறாய், சுந்தரி?”
“அதே தான், சுமதி!”
முகம் துடைத்தவாறு அங்கு வரும் ஜானகி, ஜெயராமனைப் பார்த்தபடி, “நாம் இருவரும் போகலாம். இந்தப் பெண்கள் என்னைச் சரிக்கட்டுவது எப்படி என்பது பற்றிப் பேசப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை!” என்று கண்டிப்பான புன்னகையுடன் அறிவிக்கிறாள்.
இரண்டு பெண்களும் பொருள்பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்ளுவதைக் கவனித்ததும் ஜானகி தனது ஊகம் சரிதான் என்றெண்ணித் தனக்குள் தன்னைப் பாராட்டிக்கொள்ளுகிறாள். ஜெயராமன் எழுகிறார். பின்னர் இருவரும் புறப்படத் தயாராகிறார்கள்.
கூடத்திலிருந்து இருவரும் போனதன் பின், “இந்த உன் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக இருக்கிறாரே! எப்படித்தான் அவரை நீ வழிக்குக் கொண்டுவரப் போகிறாயோ!” என்று சுந்தரி அங்கலாய்க்கிறாள்.
உதடுகளை உள்மடித்துச் சில நொடிகளுக்குப் பேசாமல் இருக்கும் சுமதி,“அது கடவுளுக்குத்தான் தெரியும். அன்றொரு நாள் இது பற்றிய வாக்குவாதத்தின் போது, ‘நீ பிரகாஷைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் தூக்கில் தொங்குவேன்’ என்று அறிவித்தார்!” என்கிறாள்.
“இப்படித்தான் சில முட்டாள் அம்மாக்களும் அப்பாக்களும் நம்மைச் சும்மாவாவது பயமுறுத்துவார்கள்!”
“இல்லை, இல்லை, சுந்தரி! என் அம்மாவை உனக்குத் தெரியாது. வேற்று மதக்காரனை நான் மணப்பது என்பது என் அம்மாவுக்கு விஷம் குடிப்பது போல! அதைத் தடுப்பதற்காக அவர் எந்த எல்லைக்கும் போவார்!”
“மிகவும் முன்னேறிய நாடுகள் என்று பீற்றிக்கொள்ளும் மேலை நாடுகளிலேயே கூட, வெள்ளை நிறத்துப் பெண் கறுப்பு இனத்தவனை மணந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை! ஆக மொத்தம், எல்லா நாடுகளிலும் இது போன்ற வேற்றுமைகள் – மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ – நிலவத்தான் செய்கின்றன!”
“என் அப்பாவும் நானும் கூட இதையே தான் அண்மையில் சொல்லிக்கொண்டோம், சுந்தரி!…”
உடைமாற்றிக்கொண்டு தயாராகி யிருக்கும் ஜெயராமனும் ஜானகியும் அங்கு வந்து தலையசைத்து இருவரிடமும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
“நாங்கள் போய் வருகிறோம். .. நீங்கள் இருவரும் மனம் விட்டு நிறையப் பேசி என்னை மனம் கொண்ட மட்டும் திட்டித் தீர்க்கலாம்! … சுந்தரி! எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்குப் பதிலாக, நீ உன் தோழிக்கு அறிவுரை சொன்னால் நன்றாக இருக்கும்!”
சுந்தரி புன்னகையுடன் மவுனமாய் இருக்கிறாள். சுமதி தலையைக் குனிந்துகொள்ளுகிறாள். ஜெயராமன் அதிருப்தியுடன் ஜானகியைப் பார்க்கிறார். அதன் பின் இருவரும் கிளம்புகிறார்கள். அவர்கள் போனதன் பின் சுமதியும் சுந்தரியும் தங்கள் பேச்சைத் தொடர்கிறார்கள்.
சிரித்துவிட்டு, “நாம் இப்போது தடை ஏதுமின்றிப் பேசுவோம். உன் அம்மா சொன்னது ஒரு வகையில் சரிதான். நாம் ஒன்றும் உன் அம்மாவைத் திட்டப் போவதில்லை யென்றாலும், பிரகாஷைப் பற்றித் தடையின்றிப் பேசலாம்தானே! .. அது இருக்கட்டும், நீங்கள் இருவரும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்தானே?” என்று சுந்தரி வினவுகிறாள்.
”ஆமாம். வாரம் ஒரு கடிதத்துக்கு மேல் எழுத வேண்டாம் என்று பிரகாஷிடம் சொல்லி வைத்திருக்கிறேன். மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுமாறும் சொல்லியிருக்கிறேன். அடிக்கடி அவன் பேசினால் இந்த என் அம்மா பூமிக்கும் வானத்துக்குமாய் எகிறிக் குதிப்பாரே!”
சுந்தரி, “சுமதி! ஒரு மிக முக்கியமான விஷயத்தை உன்னிடம் சொல்ல நான் மறந்தே போனேன். ஹைதராபாத் காச்சிகுடா ரெயில்வே நிலையத்தில் சில நாள்கள் முன் நான் பிரகாஷைப் பார்த்தேன்!” என்கிறாள்.
வியப்படையும் சுமதி, “அப்படியா! நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்கள்தானே?” என்று கேட்கிறாள்.
“இல்லை. பேச முடியவில்லை. நானும் கவனித்து அவனைக் கூப்பிடுவதற்கும் முன்னால் அவன் ஒரு டாக்சியில் ஏறிப் போய்விட்டான். அவனுடன் உயரமும் பருமனுமாய் ஒரு பெரியவரும் இருந்தார். அவனுடைய அப்பாவாக இருக்கலாம்!”
“அவன் உன்னைக் கவனித்திருந்திருக்க மாட்டான்!”
“இல்லை. எங்கள் பார்வைகள் சந்தித்தன என்றே தோன்றுகிறது! ஆனால் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டான். ஒருவேளை கண்கள் பார்த்தாலும் அவன் மனம் வேறு எங்கேயோ இருந்ததோ என்னவோ!”
“ஆனால், தான் அண்மையில் ஹைதராபாத்துக்குப் போயிருந்ததாய்த் தன் கடிதம் ஒன்றிலும் அவன் குறிப்பிடவில்லையே, சுந்தரி? அது சரி, அது எப்போது?”
சற்றே யோசித்துவிட்டு, “சரியாய்ப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்னால்,” என்கிறாள் சுந்தரி.
“அது பற்றித் தன் கடிதத்தில் தெரிவிக்க அவன் மறந்து போயிருக்கக் கூடும்.” “அதெப்படி? ஹைதராபாத்துக்கு வர வாய்த்தால் என் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லி என் முகவரியைக் கேட்டு வாங்கிக்கொண்டானே! ஆனால் வரவும் இல்லை!”
“ஒருவேளை அவனுக்கு நேரம் இல்லையோ என்னவோ!” என்னும் சுமதி, சட்டென்று விழிகளை மலர்த்தி, மகிழ்ச்சியுடன், விரல் சொடுக்குகிறாள். பின்னர், “சுந்தரி! பிரகாஷுடன் நான் இப்போது பேசட்டுமா? அம்மா அருகில் இல்லாத இந்த நேரம் அதற்குத் தோதானது!” என்கிறாள், சிரித்து.
“ஆமாமாம். கூப்பிடு!” என்று சுந்தரியும் சொன்னதும், சுமதி தில்லிக்குத் தொலையழைப்புக்கு இணைப்பகத்தைக் கூப்பிட்டு ஏற்பாடு செய்கிறாள்.
பிறகு, “சுந்தரி! இந்த என் அருமை அம்மா நான் பிரகாஷை மணந்தால் தற்கொலை செய்துகொள்ளுவேன் என்று பயமுறுத்துகிறாரே! நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று அங்கலாய்க்கிறாள்.
“அப்படி யெல்லாம் ஒன்றும் ஆகாது. கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்!” என்று சுந்தரி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.
“அது சரி. உன் அம்மா-அப்பா எப்படி? இது போல் ஒரு நிலை ஏற்பட்டால் அவர்கள் உன் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ளுவார்கள்?”
“அது ஒரு பிரச்சினையாக இருக்காது, சுமதி. ஏனெனில், என் அம்மா ஒரு தெலுங்கு பிராமணப் பெண். என் அப்பா ஒரு குஜராத்தி பனியா.”
“எனினும், இருவருமே இந்துக்கள். ஆனால் நீ ஒரு கிறிஸ்தவனையோ அல்லது முஸ்லிமையோ தேர்ந்தெடுத்தால்?”
“அப்போதும் பிரச்சினை எழாது. ஏனெனில் இருவரும் பரந்த மனப் பான்மை யுள்ளவர்கள்.”
அப்போது தொலைபேசியின் மணி ஒலிக்கிறது. அழைப்பது பிரகாஷ் தான்.
“ஹே! பிரகாஷ்! சுமதிதான் பேசுகிறேன். அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருக்கிறார்கள். எனவேதான் உன்னோடு மனம் விட்டுப் பேசலாமே என்று அழைத்தேன்…. நம் தோழி சுந்தரியும் இங்கே இப்போது என்னுடன் இருக்கிறாள். ஒரு நேர்முகத்தேர்வுக்காக அவள் மதராசுக்கு வந்திருக்கிறாள். முதலில் அவளோடு பேசு. உன் மீது அவளுக்கு ஒரு புகார் இருக்கிறது….”
சுந்தரி, ஒலிவாங்கியைச் சுமதியிடமிருந்து பெற்று, அவனோடு பேசுகிறாள்: “ஹாய், பிரகாஷ்! எப்படி இருக்கிறாய்?…ஓ! நான் நன்றாக இருக்கிறேன். சில நாள் முன் உன்னை நான் ஹைதராபாத் காச்சிகுடா ரெயில்வே நிலையத்தில் பார்த்தேன். உயரமாகவும் பருமனாகவும் இருந்த ஒரு பெரியவருடன் நீ அங்கு வந்திருந்தாய். நீ என்னைப் பார்த்தாய் என்றே நினைக்கிறேன். ஆனால் நான் உன்னை அழைப்பதற்கும் முன்னால் நீங்கள் இருவரும் ஒரு டாக்சியில் உடனேயே ஏறிப் பறந்துவிட்டீர்கள். … என்னது! நீ ஹைதராபாத்துக்கு வரவே இல்லையா! உன்னைப் போலவே இன்னொரு மனிதனாய் இருக்கக்கூடும் என்றா சொல்லுகிறாய்? அப்படியே உன்னை உரித்து வைத்தாற்போல் இருந்தானே அவன்? அதெப்படி, இரட்டையர்கள் மாதிரி ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தான் அந்த ஆள்? அது நீ இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை, பிரகாஷ்! சரி, சரி. அவன் நீ இல்லை என்று நீ திரும்பத் திரும்ப அடித்துப் பேசுவதால் நான் உன்னை நம்புகிறேன்… சரி… சுமதியோடு பேசு… உன்னோடு பேச அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள்!….”
பின்னர் சுமதி அவனுடன் பேசுகிறாள்: “பிரகாஷ்! நம் விஷயம் பற்றி உன் அப்பாவிடம் சொல்லிவிட்டாயா? … ஓ! சொல்லிவிட்டாயா! அதற்கு அவருடைய எதிரொலி என்ன? … அவர் ஒப்புக்கொண்டுவிட்டாரா! தேங்க் காட்! அம்மாடி! இப்போதுதான் எனக்கு நிம்மதியா யிருக்கிறது…. என் அம்மாவா! அவர் ஓர் இம்மி யளவும் மாறவில்லை, பிரகாஷ்! எங்கள் இருவரிடையேயும் வாக்குவாதம் இன்றி ஒரு நாள் கூடக் கழிவதில்லை…. நீ சொல்லவே வேண்டாம், பிரகாஷ்! நான் அவரிடம் மிகவும் பொறுமையோடுதான் பேசுகிறேன்… என்னது! நீ அவரைச் சந்தித்துப் பேச விரும்புகிறாயா! சரிதான், போ! உனது முதல் வருகையின் போது உன்னைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே போகச் சொல்லிக் கத்தினாரே என் அம்மா! மறந்துவிட்டாயா? மறுபடியும் நீ அவமானப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது… பொறுமையுடன் காத்திருந்து பார்ப்போம்……சரி… அப்புறம்… சுந்தரி என்னவோ உன்னை ஹைதராபாத்தில் பார்த்ததாய்ச் சொல்லுகிறாளே! … ஆனால் அந்த ஆள் நீ இல்லை என்று நீ எதற்காகப் பொய் சொல்ல வேண்டுமாம்? … அது அப்படியே உன்னைப் பொலவே இருக்கும் இன்னோர் ஆளாய்த்தான் இருக்கவேண்டும்… உன் அப்பாவுக்கு என் வணக்கங்களைச் சொல்லு… சுந்தரிக்கும் உன் அன்பைத் தெரிவிக்கிறேன்…. பை, பை! வைக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவள் பெருமூச்சுடன் ஒலிவாங்கியைக் கிடத்துகிறாள்.
“அந்த ஆள் பிரகாஷ் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை! இப்படியும் கார்பன் காப்பி மாதிரி ஓர் ஆள் இருப்பானா! இருந்தாலும், அவன் கிட்டத்தட்ட சபதம் செய்யாத குறையாய்ப் பேசுவதால் அவனை நம்பவேண்டித்தான் இருக்கிறது! விடு!”
சுமதி, “இப்போதும் பிரகாஷின் பேச்சை நீ நம்பத் தாயாரா யில்லை!” என்று கூறிவிட்டுச் சிரிக்கிறாள்.
“நம்பத்தான் முயல்கிறேன். ஆனால் முடியவில்லை!”
“சரி. அதை விடு… நான் ஏற்கெனவே உன்னைக் கேட்டுக்கொண்டது போல் நீ இன்னும் ஒரு வாரமாவது என்னோடு இருக்கவேண்டும், சுந்தரி! நாம் மதராஸ் முழுவதும் சுற்றிப் பார்க்கலாம். நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு நிறைய பேசலாம்… மேலும் நீ இங்கே இருக்கும் போது என் அம்மாவின் கடுஞ்சொற்கள் சற்றே மிதமாக இருக்கும். அதிலிருந்து ஒரு வாரத்துக்கேனும் நான் தப்பிக்கலாம்!”
“அந்த அளவுக்கா உன் அம்மா கடுமையாயப் பேசுகிறார்!” என்று விழிகள் விரிய, சுந்தரி வினவுகிறாள்.
கசப்புடன் சிரிக்கும் சுமதி, “ஆமாம், சுந்தரி. அதனால்தான் நான் விடுமுறை நாள்களிலும் கூட அலுவலகத்துக்குப் போய்விடுகிறேன்! வீட்டில் நான் தங்கும் நாள்களில் என் அம்மா எப்படியெல்லாம் என்னைச் சொற்களால் சுடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்!” என்கிறாள்.
“ஆக? இந்தியாவில் மாமியார் சொல்லும் கடுஞ் சொற்களையெல்லாம் இப்போது உன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாய்!”
”அதேதான்! பிரகாஷுக்கு அம்மா இல்லாததால், கல்யாணத்துக்குப் பிறகு மாமியாரின் படுத்தல் எனக்கு இருக்க வாய்ப்பில்லை. அதை என் அம்மா எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்! பிரகாஷுக்கு ஏன்தான் சரி என்று சொன்னேனோ என்று வருந்துகிற அளவுக்குச் சில நேரங்களில் அந்தச் சொற்கள் என்னைச் சுடுகின்றன!” – சட்டென்று உணர்ச்சி வசப்படும் அவளது குரல் தழுதழுக்கிறது. அவள் தன்னிரு கைகளாலும் முகத்தை மூடிக்கொள்ளுகிறாள். விம்மலில் அவள் தோள்கள் குலுங்குகின்றன.
ஆதரவுடன் அவள் இடுப்பைத் தன் கையால் வளைத்துக்கொள்ளும் சுந்தரி, “சேச்சே! எதற்கு இந்தக் கண்ணீர்? துணிச்சல் நிறைந்த ஒரு பத்திரிகை நிருபர் கண்கலங்கலாமா?” என்று கேட்டு அவளைத் தேற்றுகிறாள்.
கண்களைத் துடைத்துக்கொள்ளும் சுமதி, “ஆனால் அம்மாவின் பேச்சு மிகவும் புண்படுத்துகிறது. மனிதர்கள் ஏன்தான் தங்கள் மதத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, தெரியவில்லை! அவர்களது மதாபிமானத்தை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பிற மதத்தினரோடு சம்பந்தம் செய்துகொள்ளுவதை வெறுக்க வேண்டுமா என்ன! கல்யாணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது என்பது அவர்களது தனிப்பட்ட பிரச்சினை. இதில் அவர்களின் பெற்றோர்கள் எங்கே வருகிறார்களாம்? எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது!” என்று அங்கலாய்க்கிறாள்.
அவளது இடையைச் சுற்றியுள்ள தன் கையை நீக்கிக்கொள்ளும் சுந்தரி, “அட, கடவுளே! என் கருத்தும் அதேதான். மனிதர்களிடையே அன்பை உருவாக்கி மகிழ்ச்சி நிறைந்ததாக இவ்வுலகத்தை மாற்றும் பொருட்டே மதங்கள் உருவாயின. ஆனால் இன்று நடந்துகொண்டிருப்பதோ அதற்கு நேர்மாறானது! காதல் திருமணம் என்னும் விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த உலகம் முழுவதுமே மதங்களின் பெயரால் பல்வேறு பிரிவுகளாய்ப் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனவே! தங்கள் மனப் போக்குக்கும் விருப்பத்துக்கு ம் ஏற்ப மதங்களின் கோட்பாடுகளை மனிதர்கள் விபரீதமாக வன்றோ அர்த்தப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்! இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்ல!’ – இவ்வாறு பொருமிய பின் சுந்தரி பெருமூச்செறிகிறாள்.
“என் விஷயம் இருக்கட்டும். உன் விஷயம் என்ன, சுந்தரி? உனக்குப் பிடித்தவன் எவனாவது இருக்கிறானா?”
சிரிக்கும் சுந்தரி, “இதுவரையில் அப்படி யாரும் இல்லை, சுமதி. மேலும், இப்போது திருமணத்தில் எனக்கு ஆர்வமே இல்லை. என் கல்யாணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று என் அம்மாதான் தொணதொணத்துக்கொண்டிருக்கிறார்! இப்போதைக்கு இல்லை என்று நான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டேன்.”
“உன் அப்பா என்ன சொல்லுகிறார்?”
“என் விருப்பம் போல் முடிவெடுக்கும் சுதந்திரத்தை அவர் எனக்கு அளித்திருக்கிறார். கல்யாணத்துக்குக் கட்டாயப் படுத்தும் தொனியில் என் அம்மா பேசும்போதெல்லாம் அவர் என் அம்மாவைக் கடிந்துகொள்ளுவார்.”
அப்போது தொலைபேசியின் மணி அடிக்கிறது. சுந்தரி ஒலிவாங்கியை எடுத்துப் பேசுகிறாள்.
”குட் ஈவ்னிங், எடிட்டர் சர்! என்னது! சட்ட சபையிலே குழந்தைத் தொழிலாளர் பற்றிய பிரச்சினையை எதிர்ச் கட்சிக்காரர்கள் எழுப்பப் போகிறார்களா! உங்களுக்கு யார் சொன்னார்கள்?…. எதிர்க்கட்சித் தலைவரே சொன்னாரா? எனக்கும் அப்படித் தோன்றியது. ஏனெனில் குற்றவாளி ஆளுங்கட்சி ஆளாக இருப்பதால் அதை எதிர்க்கட்சிதானே எடுத்தாக வேண்டும்? இல்லை, சர். அது பற்றி எனக்கொன்றும் அச்சம் இல்லை. … மிக்க நன்றி. குழந்தைத் தொழிலாளிகள் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து அவர்களின் முதலாளிகளை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியை நான் ஒன்றும் நிறுத்தப் போவதில்லை! ஒரு போதும் நான் எனது நோக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்… மிக்க நன்றி… பை…” – ஒலிவாங்கியைத் தொலைபேசி மீது கிடத்திய பின் சுமதி மகிழ்ச்சியுடன் சுந்தரியை நோக்குகிறாள்.
“வாழ்த்துகள், சுமதி! ஆக, சட்ட சபையில் குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டதும் நீ தமிழ்நாட்டில் பேரும் புகழும் பெறப் போகிறாய்!”
“குற்றவாளி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சுந்தரி! தொழிற்சாலை இயங்கிவரும் மாவட்டத்தில் அவன் ஆளுங்கட்சியின் தலைவனும் கூட! அவன் ஒரு பொல்லாத போக்கிரி என்று கேள்விப்படுகிறேன்.”
“பொல்லாதவர்களும் போக்கிரிகளும்தான் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் காசு சேர்ப்பார்கள்! அதில் என்ன ஆச்சரியம்?” என்று கூறும் சுந்தரி சிரிக்கிறாள்.
காலடியோசை கேட்டுத் திரும்பும் இருவரும் ஜெயராமனும் ஜானகியும் நுழைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். எல்லாரும் புன்னகைப் பரிமாற்றம் செய்கிறார்கள். பின்னர், ஜெயராமனும் ஜானகியும் நாற்காலிகளில் அமர்கிறார்கள்.
ஜானகி இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவாறே, “என்ன! மனங்கொண்ட மட்டும் என்னைத் திட்டித் தீர்த்தாயிற்றா!” என்கிறாள் கிண்டலாக.
“இல்லவே இல்லை, அம்மா! சுமதியின் கல்யாண விஷயமாய்ப் பேசினோம்தான். ஆனால், யாரும் உங்களைத் திட்டவில்லை. பெரியவர்களோடு நான் அது பற்றி விவாதிக்கக்கூடாதுதான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், அம்மா. சுமதி பிரகாஷைத் தவிர வேறு யாரையும் மணந்துகொள்ளத் தயாராக இல்லை!”
சுமதியிடமிருந்து இதற்கு எந்த எதிரொலியும் இல்லை. அவள் தலை குனிந்த வண்ணம் தன் கால்விரல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஜானகி வேறு ஒன்றும் பேசாமல் எழுந்து அடுக்களைக்குப் போகிறாள்.
“அப்பா! விடிவெள்ளி ஆசிரியர் என்னோடு தொலைபேசினார்.”
“விசேஷமாக ஏதேனுமா?”
”எதிர்க்கட்சித் தலைவர் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை விரைவில் சட்டமன்றத்தில் எழுப்பப் போகிறாராம்!”
”உன்னுடைய வன்மையான கட்டுரையைப் படித்த போதே அப்படி நடக்கும் என்று நானே ஊகித்தேன்!”
“மாமா! சுமதி விரைவிலேயே ஒரு பேசப்படும் புகழ்பெற்ற நிருபர் ஆகப் போகிறாள்!”
அடுக்களையிலிருந்து எட்டிப் பார்க்கும் ஜானகி, “எல்லாரும் சாப்பிட உட்காரலாம்!” என்று அறிவிக்கிறாள். எல்லாரும் கைகழுவப் பின்கட்டுக்குப் போகிறார்கள். ஜானகி உணவுப் பண்டங்களை எடுத்து வந்து சாப்பாட்டு மேஜை மீது பரப்புகிறாள். jothigirija@live.com
- பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6
- இயற்கையின் பிழை
- தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி
- ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
- இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
- புனலாட்டுப் பத்து
- பாக்கத்தான போறேன்…….
- அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது
- அம்பலம் – 2
- பூமராங் இணைய இதழ்
- மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017