தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.

This entry is part 5 of 12 in the series 9 ஏப்ரல் 2017
          அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் இந்த மூன்று மாதங்களும் பயனுள்ள வகையில் சிறப்பாகவே இருந்தது.
          மருத்துவப் பயிற்சி போலவே இதிலும் வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் பணியாற்றினோம்.அதில் முன்பே பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் பிரச்னைகள் அதிகம் இல்லை. ஆனால் இவை தவிர வாரத்தில் இரண்டு நாட்கள் காலையில் அறுவைச் சிகிச்சைகள் நடக்கும் கூடத்திற்கு ( Operation Theatre ) சென்றாக வேண்டும். இங்கு டாக்டர் ஜோசப் அறுவை சிகிச்சை செய்யும்போது நாங்கள் அவருக்கு உதவவேண்டும். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடக்கும்போது ஒரு பயிற்சி மருத்துவர்தான் உதவ முடியும். மற்றவர் உடன் நின்று பார்க்கவேண்டும். யார் உதவுவது என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
          அறுவைச் சிகிச்சைகள் காலையிலேயே ஆரம்பமாகும். அதனால் அன்றைய நாட்களில் காலை ஏழு மணிக்கெல்லாம் அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு சென்றுவிடவேண்டும். அங்கு சென்றதும் நேராக உள்ளே சென்றுவிட முடியாது. முதலில் உடை மாற்றும் அறைக்குள் செல்லவேண்டும். அணிந்துள்ள மேல் சட்டையையும் சிலுவாரையும் கழற்றி விட்டு ஆறுவைச் சிகிச்சை உடைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். காலணிகளைக் கழற்றிவிட்டு அங்குள்ள சிலிப்பர்களை மாட்டிக்கொள்ளவேண்டும். அதன்பின் கை கழுவும் அறைக்குச் செல்லவேண்டும்.அங்கே ஒரே நேரத்தில் பலர் கைகளைக் கழுவ வரிசையாக தண்ணீர்க் குழாய்கள் உள்ளன. கைகளைக் கழுவ சோப்பு திரவம், ப்ரஸ் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். கைகளில் சோப்பு நீரை ஊற்றிக்கொண்டு பிரஸ் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவவேண்டும். இதுபோன்று இரண்டுமுறை செய்யவேண்டும். குறிப்பாக விரல்களில் இடுக்குகளில் நன்கு தேய்த்துத் கழுவவேண்டும். கழுவியபின்பு அடுத்த அறைக்குள் செல்லவேண்டும். அங்கு கைகளை உலர்த்த வெள்ளை டவல்கள் இருக்கும். அதில் துடைத்துக்கொண்டபின்பு அங்குள்ள தாதியர் ஒருவர் கையுறைகளைத் தருவார். அவற்றை முறையாக அணிந்துகொண்டபின்பு முகத்தில் மாஸ்க் கட்டிவிடுவார். நாங்கள் ஆடை மாற்றும் அறையில் உடுத்திய உடையின்மீது இன்னொரு வெள்ளை நிற அங்கியையும் மாட்டிவிடுவார். அதன்பின்புதான் நாங்கள் நுண்ணம் நீங்கிய ( Sterile )  நிலைக்கு உள்ளாவோம். எங்கள் மீது நோய்த் தொற்றுக் கிருமிகள் இல்லை என்று பொருள்.  இத்தகைய ” ஒப்பனையுடன்தான் ” நாங்கள் அடுத்த அறையிலுள்ள அறுவை மேசையில் ( Operation Table ) கிடத்தியுள்ள நோயாளியிடம் செல்லமுடியும்.
          நோயாளி மயங்கிய நிலையில் படுத்திருப்பார். வார்டிலேயே அவருக்கு ஊசி போட்டிருப்பார்கள். அவரின் தலைமாட்டில் மயக்க மருத்து தரும் கருவி இருக்கும்.அதை இயக்க மயக்கம் தருபவர் ( Anesthetist ) தயார் நிலையில் இருப்பார். நோயாளியின் இடது பக்கத்தில் உதவி செய்யும் தாதி அறுவைக்குப் பயன்படுத்தும் கத்தி ( Scalpel ), கொறடா ( forceps ), கத்தரிக்கோல் ( Scissors ), தைக்கும் ஊசி, நூல், இரத்தத்தை உறிஞ்சும் கருவி ( Suction Apparatus ) பஞ்சு, காஸ் துணி,( Gauze ), போன்றவற்றை தயார் நிலையில் அருகில் வைத்திருப்பார். அவர் டாக்டர் ஜோசப்புக்கு அறுவைச் சிகிச்சையின்போது உதவுவதால் அவருக்கு என்ன கருவி தேவை என்பதை அறிந்து அவர் கேட்காமலேயே, அவர் கையை நீட்டும்போது எடுத்துத் தரும் ஆற்றல் கொண்டவர்.
          நான் அந்த தாதியின் அருகில் நின்றுகொள்வேன். டாக்டர் ஜோசப் அப்போது வருவார். கண்களை மூடி மெளன ஜெபம் செய்வோம். மயக்கம் தருபவர் தனது கருவியை இயங்கச் செய்து நோயாளியின் வாய்க்குள் ஒரு குழாயைச் செலுத்தி அதன் வழியாக மயக்க மருந்தை செலுத்துவார். நோயாளி முழுதும் நினைவை இழந்துவிடுவார். அதைக் காண கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும். நினைவு மீண்டும் திரும்பாவிட்டால் அவ்வளவுதான்! ஆனால் அது நிச்சயமாகத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில்தான் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
          டாக்டர் ஜோசப் கத்தியால் தோலை நேராகக் கிழிப்பார். அப்போது இரத்தம் குபுகுபுவென்று வெளியேறும். அதை தாதி காஸ் துணியால் துடைப்பார். டாக்டர் ஜோசப் இன்னும் அழுத்தி வெட்டி உடலினுள் புகுவார். அப்போது இன்னும் அதிகமான இரத்தம் வெளியேறும். அந்தப் பகுதியே இரத்த வெள்ளத்தில் மூழ்கும். அதை உறிஞ்சும் கருவியால் வெளியேற்றுவர். இரத்தம் அதிகமாக வெளியேறும் தமனி அல்லது சிரையை கொறடாவால் பிடித்து நூலால் கட்டுவார். இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். பின்பு தொடர்ந்து செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வார்.. அவ்வாறு செய்யும்போது அவருக்குத் தேவையான எதையாவது என்னைச் செய்யச் சொல்வார். அது பெரும்பபாலும் ஒரு பகுதியை இழுத்துப் பிடிக்கும் கருவியின் ( Retractor ) உதவியுடன் இழுத்துப் பிடிக்கும் வேலையாகும். அப்படிச் செய்தால்தான் உள்ளேயுள்ள உறுப்புகள் நன்றாகத் தெரியும்.
          எத்தகைய அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கேற்ப நேரமாகும். உதாரணமாக குடல் வால் அகற்றும் சிகிச்சையில் ( Appendicectomy  ) அரை மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் வயிற்றுக்குள் என்ன பிரச்னை என்பதைத் தேடும் சிகிச்சையில் ( Laparotomy ) மூன்று மணி நேரம்கூட ஆகும். அதுவரை நின்றபடியே உதவவேண்டும். சிலருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருக்கும். அதன் உண்மையான காரணத்தை பரிசோதனைகளின் வழியாக கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். ஒரு வேளை அது புற்று நோயாகவும் இருக்கலாம்.அல்லது இரைப்பை, குடலில் பிரச்னை இருக்கலாம். அது என்ன என்று கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படுவதே தேடும் அறுவைச் சிகிச்சையையாகும். காரணம் நேரடியாக காணப்பட்டால் அப்போதே அதை அப்புறப்படுத்திவிடலாம். சிலருக்கு குடல் வால் வெடித்து சீழ் வயிற்றுக்குள் பரவிவிடும். அப்போதும் இத்தகைய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்போது குடலை வெளியில் எடுத்து கழுவி சுத்தம் செய்வதோடு வயிற்றில் உள்ள சீழையும் வெளியேற்றி சுத்தப்படுத்தவேண்டும்.
தைராய்டு சுரப்பியை அகற்றும் சிகிச்சையில் ( Thyroidectomy ) அதுபோன்றே நேரமாகும். கால்கள் வலிக்கும். எப்போது வெளியேறலாம் என்றிருக்கும். ஆனால் வெளியேற முடியாது. முதல் நோயளிக்கு அறுவை முடிந்தபின்பு அடுத்த நோயாளி கொண்டுவரப்படுவார்.
          அறுவைச் மருத்துவ நாட்களின்போது காலையிலிருந்து மாலை வரை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக  நடைபெறும். இடையில் உணவு உண்ண சென்று வருவோம். மாலையில் மிகவும் களைப்பாக இருக்கும். நாள் முழுவதும் இரத்தத்தை நிறைய பார்க்க முடியும்.அதுகூட ஒருவிதமான களைப்பை உண்டுபண்ணும்.இதனால் அறுவைச் சிகிச்சை பொது மருத்துவச் சிகிச்சைபோல் என்னைக் கவரவில்லை.
          ஆறுவை மருத்துவத்திற்குப் பின்பு நோயாளி வார்டுக்கு கொண்டுசெல்லப்படுவார். அங்கு அவர் ஒரு வாரம்போல் தங்கியிருப்பார். அதுவரை அன்றாடம் ந்த அறுவைக் காயத்தை ஆற்றும் வகையில் கட்டு  போடுவோம். அப்போது தாதியர் உதவியடன் அதைச் செய்வோம்.
          சில நோயாளிகளுக்கு ட்ரிப் சென்றுகொண்டிருக்கும். அதன் வழியாக ஆறு  மணிக்கு ஒருதரம் ஊசி மருந்து ஏற்றவேண்டும். அதையும் நாங்களத்தான் செய்ய வேண்டும். இரவில் விடுதியில் இருந்து அந்த ஊசி போட தூக்கக் கலக்கத்துடன் நடந்துவரவேண்டும்.
          அறுவை மருத்துவப் பிரிவில் மூன்று மாதங்கள் இருந்தபோதும், எங்களைத்  தனியாக எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். எப்போதுமே டாக்டர் ஜோசேப்புக்கு உதவிதான் செய்யவேண்டும்.அவ்வாறு மூன்று மணிநேரமும் கால்கடுக்க நின்றுகொண்டிருப்பது, அதிக உடல் உழைப்பைத் தந்தது. நாட்கள் செல்ல செல்ல அறுவை முடிந்து தோலைத் தைக்கும் வாய்ப்பைத் தருவார். அப்போது அதை ஆர்வத்துடன் வேகமாக செய்து முடிப்பேன்.நானும் ஒரு அறுவை மருத்துவ நிபுணராக ஆகவேண்டுமெனில் மேலும் மூன்று வருடங்கள் பயிலவேண்டும். அவ்வாறு பயில இடம் கிடைப்பதும் சிரமம்!
          வார்டு ரவுண்ட்ஸ் செய்யும்போதும் ஒவ்வொரு நோயாளியிடமும் நெடு நேரம் நிற்கவேண்டும்.அப்போது கட்டை அவிழ்த்து காயத்தை கவனித்து புது கட்டு போட்டபின்புதான் அடுத்த நோயாளியிடம் செல்லமுடியும்.மருத்துவ ரவுண்ட்களின்போது ஒரு நோயாளியின் நோய் பற்றி டாக்டர் புளிமூட் வெகுநேரம் விவாதித்துக்கொண்டு நிற்பார். இங்கு அப்படி இல்லை. காயம் ஆறுவதைத்தான் கவனிப்போம். அதோடு அறுவைச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளையும் பார்ப்போம்.
          பொதுவாகவே மருத்துவ சிகிச்சையைவிட அறுவை மருத்துவம் சிரமமானதாகத் தோன்றியது. இதில் நிறைய உடல் உழைப்பும் தேவைப்படுகிறது.
          அறுவைச் சிகிச்சை செய்யும்போது மிகவும் நிதானமும் பொறுமையும் தேவை. அவசரப்பட்டு எதையும் செய்துவிட முடியாது. தவறு செய்தால் எதாவது முக்கிய உறுப்பு வெட்டுபடும் அல்லது இரத்தம் பீறிட்டு அடிக்கும். அதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும்.
          அறுவை மருத்துவ பயிற்சியின்போதும் வாரம் ஒரு முறை சஞ்சிகை கலந்துரையாடல் நடைபெறும். இது அறுவை மருத்துவப் பிரிவு ஒன்றின் கலந்துரையால் கூடத்தில் நடைபெறும். அப்போது வார்டில் உள்ள ஒரு நோயாளியைப்பற்றியோ, அல்லது மருத்துவ சஞ்சிகைகளில் உள்ள ஒரு சுவையான தகவல் குறித்தோ  விவாதம் செய்வோம்.
          இவ்வாறு கொஞ்சமும் ஓய்வு இன்றி மூன்று மாதங்கள் இந்த அறுவை மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்தோம். டாக்டர் ஜோசப் அவர்களும் எனக்கு ஒரு சான்றிதழ் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
          ” This is to certify that I have known Dr.G.Johnson as a clinical student and later as a Resident Intern in my unit Surgical Firm – 1.
          During this period of time I have been very impressed by Dr.G.Johnson’s sincerity, and willingness to work hard. I found him to be honest, sincere, conscientious and reliable. He showed keen interest in his patients and developed good knowledge in the principles of surgery. His pre – operative work up of patients was good and post – operative care was satisfactory.
          Dr.G.Johnson was always eager to help and to take on extra duties. He was cheerful and friendly and his interpersonal relationship with his colleagues was good. He was always respectful towards his seniors, and gentle in speech and in attitude when dealing with patients.
          I have no hesitation in recommending Dr.G.Johnson to any medical institution. He will, I am sure, quickly apply his knowledge and sincerity and will be a great asset to any institution in which he chooses to serve.
          I shall follow his future career with great interest.
          Dr.L.B.M. Joseph, MBBS., MS.,
          Professor & Head of the Department of Surgery Firm – 1.

          Director, C.M.C. Hospital, Vellore – 632004, NA District, South India.

          டாக்டர் ஜி. ஜான்சனை என்னுடைய அறுவை மருத்துவப் பிரிவு ஒன்றின் மருத்துவ மாணவராகவும், பயிற்சி மருத்துவராகவும் நான் அறிவேன் என்று சான்றளிக்கிறேன். இந்தக் காலக் கட்டத்தில் டாக்டர் ஜான்சனின் நேர்மையும், கடினமாக உழைக்கும் ஆர்வத்தையும் கண்டு நான் பெரிதும் கவரப்பட்டேன். அவர் நேர்மையும், உண்மையும், கடமையையுணர்வும் கொண்ட நம்பத்தகுந்தவருமாவார். அவர் நோயாளிகளின்மீது மிகுந்த அக்கறையும், அறுவை மருத்துவத்தின் கோட்பாடுகளின்மீது நல்ல ஆளுமையும் கொண்டவர். அறுவை மருத்துவத்துக்கு நோயாளிகளைத் தயார் செய்வதில் வல்லவராகவும், அறுவைக்குப் பின் நோயாளிகளைக் கவனிப்பத்தில் ஏற்புடையவராகவும்  திகழ்பவர்.
          டாகடர் ஜான்சன் எப்போதுமே கூடுதல் வேலை செய்து உதவுவதில் நாட்டமுடையவர். சக ஊழியரிடம் அவர் உற்சாகத்துடனும் நட்புடனும் பழகுபவர். சீனியர்களிடம் எப்போதும் மரியாதையுடனும், நோயாளிகளிடம் மென்மையாகவும் பழகுபவர்.
          வேறு எந்த மருத்துவ நிறுவனத்திற்கும் டாக்டர் ஜான்சனை பரிந்துரை செய்வதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கம் கிடையாது. அவர் தேர்ந்தெடுக்கும் எந்த நிறுவனத்திலும் தன்னுடைய மருத்துவ அறிவையும், நேர்மையையும் செலுத்தி அதன்மூலம் இன்றியமையாதவராகத் திகழ்வார் என்பதில் நான் திடமாக நம்புகிறேன்.
         அவருடைய எதிர்கால பணியை நான் பெரிதும் ஆர்வத்துடன் கண்காணிப்பேன்.
          டாக்டர் எல். பி. எம். ஜோசப் , MBBS.MS.
          பேராசிரியரும். அறுவை மருத்துவப் பிரிவு ஒன்றின் தலைமை மருத்துவர்.

          இயக்குனர், சி.எம்.சி. மருத்துவமனை, வேலூர்.

          (  தொடுவானம் தொடரும் )
Series Navigationநாலு பேர்..படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *