தூங்கா மனம்

author
2
0 minutes, 8 seconds Read
This entry is part 11 of 12 in the series 9 ஏப்ரல் 2017

 

சோம.அழகு

எல்லோர்க்கும் எல்லா இரவுகளும் (நிம்மதியாகத்) தூங்கக் கிடைப்பதில்லை. அவ்வாறே தூக்கம் தொலைத்த ஓர் இரவு…….

 

இரவு 12:30 மணி இருக்கும். எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் நித்திரா தேவி வரவேமாட்டேன் என சாதித்தாள். இந்த இரவிற்கு அப்படி  என்னதான் சக்தியோ? மனதின் காயங்கள், வலிகள், நிறைவேறாமல் போன ஆசைகள், நிராசையாகவே இருக்கப்போகும் ஆசைகள், ஏக்கங்கள், அவமானங்கள், தவறான முடிவுகள் என அனைத்தும் வரிசைகட்டி வந்து, சற்றே எட்டி நின்று சிறிது நேரத்தில் மனமாற்றம் செய்துகொண்டு வரவிருக்கும் நித்திராதேவியை ஒரேடியாகத் துரத்தியடித்துக் கொண்டிருக்கும். சீ! மனம் கூட அரைத்த மாவையே (cliché என்ற ஆங்கிலச் சொல்லின் சுமாரான மொழியாக்கம்) அரைக்கிறது. படுக்கையை விட்டு எழுந்து சத்தமில்லாமல் கதவைத் திறந்து விளக்கைப் போடாமல் வெளியே மாடத்திற்கு வந்தேன்.

 

வழக்கமாக இந்நேரத்திற்கு பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் அடுத்த வீட்டு ராஜா பாதிரியார் அன்று பிரசங்கத்தை முடித்து விட்டிருந்தார். 80 வயதுக்கு மேல் இருக்கும் பாதிரியாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நினைவு தப்பி விட்டது. தமது வீட்டையும் தாம் சேமித்து வைத்த மொத்தப் பணத்தையும் சிலர் ஏமாற்றிப் பறித்த செய்திதான் அவர் சுயநினைவோடு கேட்ட கடைசிச் செய்தி. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவேயில்லை; மீள விரும்பவில்லை; மீளும் மன திடம் இல்லை. இவற்றில் ஏதோ ஒன்று அவரை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டது. இவ்வுலகில் எல்லோரும் நல்லவர் என நம்பி நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டதன் விளைவு. ‘போனால் போகிறது, அவரது இறுதி காலம் வரை அந்த வீட்டில் இருந்து கொள்ளட்டும்’ என்று கருணை காட்டிய அந்த ‘மனிதாபிமானிகள்’ அவருக்கு மாதாமாதம் வரும் பணத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஏ.சி. அறையில் இருந்தவர் இப்போது ஏர் கூலருக்கும் வழியின்றி தினமும் மெத்தையில் ஒரு வாளி நீரை ஊற்றி அதில் உறங்கும் அவலத்தைக் கேட்ட போது அப்பணப்பேய்களின் சாவிற்காய் வேண்டினேன். செய்ந்நன்றி மறவாத புண்ணியவதியான எலிசா அம்மாதான் தம் சொந்தங்களையும் சொந்த ஊரையும் விட்டு வந்து பாதிரியாரைத் தந்தையைப் போல பார்த்துக் கொள்கிறார். பாதிரியாரின் மருந்துச் செலவிற்குக் கூட காசில்லாததால் நான்கு வீடுகளில் வேலை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பாதிரியாருக்கும் தமக்குமான உணவுத் தேவைகளைச் சமாளிக்கிறார். எவ்வித எதிர்ப்பார்ப்பும் அவசியமும் இன்றி உறவினர் அல்லாத ஒருவரை கவனிக்கிற அந்த மனசு இருக்கே…..அதான் சார் கடவுள்! ( சாரி கமல் சார்…இத விட பொருத்தமா வேற எதுவும் தோணல…அதான் rights வாங்காம சுட்டுட்டேன்….! )

 

சுயநினைவில்லாததால் இன்னும் தாம் கோயிலில் பிரசங்கம் செய்வதாகவே நம்பும் பாதிரியார் தினமும் இரவு 12:00 (அவருக்குத் தினமும் கிறிஸ்துமஸ் என்றே ஞாபகம் போலும்) மணிக்கு அவர் வீட்டினுள் இருக்கும் திண்ணையில் இருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார். 1:00 மணி வரை நீளும் பிரசங்கம். எங்கள் தெருவின் எதிர்வரிசையில் வீடுகள் கிடையாது என்பதால் அவரைக் கடிந்து கொள்ள யாரும் கிடையாது. எனவே அவரது தற்போதைய இறைப்பணிக்கு ஒரு நாளும் இடையூறு வந்ததில்லை. நள்ளிரவில் தனியாக வெளியில் நிற்கும் பாதிரியாருக்குத் துணையாக, கண்கள் சொருகும் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருப்பார் எலிசா அம்மா. ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் அத்தெருவில் அவரது கண்களுக்கு மட்டுமே புலப்படும் அம்முகங்களுக்காக ஆண்டவரை உருகியுருகி மன்றாடுவார். அனைவரின் பாவங்களையும் மன்னிக்கும்படி இறைஞ்சுவார். ‘ஆண்டவர் உங்களோடு இருப்பதாக’ என்று பாதிரியார் பாடுவதும் அவரது கற்பனை உலகின் சார்பாக ‘உம்மோடும் இருப்பதாக’ என அரைத்தூக்கத்தில் எலிசா அம்மா பதிலுக்குப் பாடுவதும் வாடிக்கையான நிகழ்வாகிப்போனது.

 

அவர்கள் கண்ணில் படாமல் இருட்டில் அமைதியாக நின்று கவனிக்கலானேன். அன்று ஏனோ 12:30 மணிக்கே செபம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. “பிதா… சுதன்… பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்….சென்று வாருங்கள். திருப்பலி நிறைவேறிற்று. எல்லோரும் பத்திரமா வீட்டுக்குப் போங்க” என்று எல்லோரையும் கிளப்பிக் கொண்டிருந்தார். திருப்பலி முடிந்து கலைந்து செல்லும் முகங்களில் ஒன்றையேனும் இருள் போர்த்தி விழித்திருக்கும் இரவைக் கிழித்து ஊடுருவிப் பார்க்க விழைந்தேன். “அப்பா….வா…வந்து தூங்கு….எல்லோரும் வீட்டுக்குப் போய்ட்டாங்க பாரு…வாப்பா” – எலிசா அம்மாதான் என்னையும் நிஜ உலகத்திற்கு இழுத்து வந்தார்கள். ‘என்னையும்’ – தவறான வார்த்தைப் பிரயோகம். இப்போதுள்ள நிலையில் என்னை மட்டும்தான் நிஜத்திற்கு இட்டுவர இயலும். “இல்ல எலிசி…மழ வார மாதிரி இருக்கு. அதான் எல்லாரையும் போகச் சொல்லீட்டு இருக்கென்” – பாதிரியார். “ம்கும்…. இன்னைக்கு அடிச்ச வெயிலுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மழ எட்டிக் கூட பாக்காது. வாப்பா…கோயில பூட்ட வேண்டாமா? வந்து தூங்கு… காலைல பூசைக்கு கிளம்பணும்ல” என்று சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயலும் எலிசா அம்மாவிற்குப் பெரும்பாலான காலைப் பொழுதுகள் போராட்டம்தான். பழைய ஞாபகத்தில் அங்கியணிந்து கோயில் பூசைக்குத் தயாராகி ஆட்டோவை வரச்சொல்லி நச்சரிக்கத் தொடங்கும் பாதிரியாரிடம், “இன்னைக்குப் பூசை கிடையாது…அது இது”வென்று என்னவெல்லாமோ சொல்லி அவரைச் சமாளிப்பதற்குள் போது போதும் என்றாகிவிடும் எலிசா அம்மாவிற்கு.

 

முழுமையான இறைப்பணியில் ஈடுபட்டிருந்த போது தமக்கென வரும் பணம் அனைத்தையும் கேட்டோர்க்கு, கேட்காத வறியோர்க்கு, ஏமாற்றுவோர்க்கு என வாரி வாரி வழங்கியவரின் தற்போதைய நிலை காண்போரை நிச்சயம் கண் கலங்க வைக்கும்.  தொண்டு நிமித்தமாகப் பல நாடுகளுக்குப் பயணித்த ராஜா பாதிரியாருக்குத் தற்போது தாம் இருக்கும் நாடு, ஊர், தெரு என எதுவும் தெரியாது. உலகம் சுற்றிய இம்மனிதர் இறுதிவரை மனிதர்களைப் படிக்கப் பிரயத்தனப் பட்டதே இல்லை போலும். ‘வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ?’ என்று வாழ்க்கை மீது பயத்தை உண்டாக்கிய சைக்கிள் அங்கிளைப் போல, ‘வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாம்’ என வாழ்க்கை பற்றிய ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தினார் பாதிரியார். பாதிரியார் மீது எழும் பச்சாதாபம் அன்று நெடுநேரம் என்னைவிட்டு அகலவில்லை. என்னையும் அறியாமல் பெருமூச்செறிந்தேன். அப்பெருமூச்சை வெளிவிடுகையில் அதோடு இந்நினைவுகளில் இருந்து விடுபட்டு வேறொன்றுக்குத் தாவ முயன்று வீட்டின் முன் உள்ள தார் சாலையை உற்று நோக்க ஆரம்பித்தேன்.

 

அதிகப்போக்குவரத்து இல்லாத அச்சாலையில் ஒன்றிரண்டு வண்டித் தடங்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் செருப்பணியாத கால்களின் அழகை விளக்கும் நெளிவு சுழிவுகளுடன் கூடிய வளைந்த கால் தடங்கள், கால்நடைகளின் குளம்பு தடங்கள் – இவற்றிற்கு நடுவிலும் ப்ரியாகுட்டியின் பிஞ்சுக் கால் தடங்கள் எனக்கு மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. (இல்ல….இல்ல…நான் நல்லாதான் இருக்கேன். கொஞ்சம் கவித்துவமா எழுத முயற்சி பண்ணினேன். வேற ஒண்ணுமில்ல…ராஜா பாதிரியார் லிஸ்ட்ல என்னையும் வச்சுறாதீங்கப்பா! அதுக்கெல்லாம் இன்னும் நாள் கெடக்கு) பாதிரியாரின் அடுத்த வீட்டிற்குப் புதிதாய்க் குடி வந்த குடும்பம் ப்ரியாகுட்டியினுடையது. கண்களில் குறைந்த ஒளிக்கும் சேர்த்து, பெயரிலும் மனதிலும் இருமடங்காக வெளிச்சத்தைப் பெற்றிருக்கும் இஷாப்ரியா(10) எனது கைகளையும் முகத்தையும் தொட்டு உணர்ந்து இரண்டே நிமிடங்களில் என்னையும் அவளது உலகில் சேர்த்துக் கொண்டாள். அவளது தூய்மையான ஸ்பரிசத்தில் கிடைத்த உணர்வுப்பூர்வமான வரவேற்பு என்னைத் திக்குமுக்காடச் செய்தது. மருத்துவர், இயன்ற வரை வெறுங்காலோடு நடக்க அறிவுறுத்தியிருப்பதை நினைவுகூர்ந்தவளாய்த் தனது மென்மையான பாதச் சுவடுகளைப் பூமித்தாய்க்கு வலிக்காமல் பதித்தவாறே நிலத்தை உணரவும் புரியவும் முற்பட்டுக்கொண்டிருந்தாள். அவள் கரம் பற்றி சிறிது தூரம் நடந்து சென்றவாறே பல கதைகள் பேசினோம். பல நாள் பழக்கம்போல் தனது பள்ளிக்கதைகளைக் கூறினாள். அவளது தாயிடம், “என்னோட best friend”  என (சந்தித்த பதினைந்து நிமிடத்திற்குள்) என்னை அறிமுகப்படுத்திய போது மெய்சிலிர்த்துப்போனதையும் மறந்து எனது முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் படர்வதை உணர்ந்தேன். அதற்கு பிறகு அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் அவளைப் பார்க்க முடியவில்லை. என்னை அவள் தேடினாள் என்றும் அவள் வீட்டு வாசற்படியில் எனக்காகக் காத்திருந்தாள் என்றும் எலிசா அம்மா அன்று மாலை கூறியது நினைவிற்கு வர, மறுநாள் அவளைக் கட்டாயம் காணுவதற்கு ஞாபகப்படுத்துமாறு மனதிடம் சொல்லி வைத்தேன்.

 

‘இவ்வளவு அழகிய பரிசுத்தமான மனதைக் கொண்டவளுக்கு ஏன் இப்படி?’ என்று மனம் இயற்கையின் படைப்பை வெறுக்கத் துவங்கிய சில நொடிகளில் மஜித் மஜிதியின் ‘கலர் ஆஃப் பாராடைஸ்’ நினைவில் வந்து நின்றது. “ ‘நாம் குருடர்களாய் இருப்பதால் கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார்’ என்று ஆசிரியர் கூறினார். கடவுள் நம்மை நேசிக்கிறார் எனில் நம்மை ஏன் குருடாய்ப் படைக்க வேண்டும்?” – அப்படத்தில் வரும் முகமது என்ற சிறுவனின் இக்கேள்வி அனிச்சையாகக் காதில் எதிரொலித்தது.

 

மனம்தானே….அதனால் தறிகெட்டு ஓடி இருப்பு கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எனக்குப் பிடித்த உலகப் படங்கள் அனைத்தும் வரிசையாக மனதில் ஓடின. சிசிலியில் ‘பாரடைஸ்’ திரையரங்கம் இருந்த இடத்தைக் காணவும் ஃப்ளாரென்சில் தொலைந்த அந்தோனியோவின் மிதிவண்டியைத் தேடித் தரவும் ஆவல் எழுந்தது. மினா குட்டியை அவள் வீட்டில் பத்திரமாகச் சேர்க்கவும் ரசியா வீட்டின் கிணற்றில் தங்க மீன்களை விடவும் ஆசை பிறந்தது. இப்படி இன்னும் நிறைய….. இதற்காகவே இத்தாலிக்கும் ஈரானுக்கும் பறக்க விரும்பியது மனம். எதற்கெடுத்தாலும் ‘ஐயோ! பூச்சாண்டி’ எனப் பேடி காட்டி, ‘சாளரங்களுடனான நான்கு சுவர்களுக்குள் இருந்தே உலகத்தைக் காணக்கடவது’ எனப் பணிக்கும் சமூகத்திடம் , ‘அப்படியெனில் உலகின் அனைத்து இடங்களிலும் சாளரங்கள் கொண்ட சுவர்களை எழுப்பித் தாருங்கள். ஒவ்வொரு சாளரத்தின் வழியாக அப்படியாவது உலகைக் கண்டுவிட்டுப் போகிறேன்’ என்ற மனதின் கூப்பாட்டை காரிருள் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது.

 

இந்நேரம் உலகின் சில இடங்களில் கதிரவன் துயில் கலைத்திதிருப்பான்; சில இடங்களில் துயிலச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பான். அங்கெல்லாம் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும்? மனம் ஏனோ நம்மைச் சுற்றி உள்ள முரண்களைப் பட்டியலிட ஆரம்பித்தது.

 

  • ‘எனக்கு ஒரு கோடி செலவுல கல்யாணம் நடக்கணும்; நூறு சவரன் நகை வேணும்; …. வேணும்; ….. வேணும்; …… வேணும்’, ‘எனக்கு இப்ப 10,000 ரூபாய் pocket money குடுக்க முடியுமா? முடியாதா?’ என்று சில அடங்காப்பிடரிகள் பெற்றோரிடம் அலறிக்கொண்டிருக்க, ₹10,000 கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் தமது கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு குடும்பப்பாரம் சுமக்கப் புறப்பட்டிருப்பாள் ஒரு அரிவை/தெரிவை.

 

  • தன்னுடைய பீட்சாவில் சீஸ் குறைவாக இருப்பதாக ஏதோ ஒரு மடையன் கடை ஊழியரிடம் குரைத்துக் கொண்டிருக்க, சூடான் போன்ற ஏதோ ஒரு நாட்டில் கடும் பஞ்சம் காரணமாகக் கை கால்கள் குச்சியாய் மெலிந்து தன் இறுதித் தருணங்களில் நகர முடியாமல் அனத்திக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை அதன் உயிர் பிரிந்ததும் கொத்திக் கிழிக்கக் காத்திருக்கலாம் ஒரு வல்லூறு.

 

  • பிங்க் டிரெஸ்தான் வேண்டும் என்று அடம்பிடித்துக் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்கு, ‘போக்கோ ஹாராம்’ஆல் கடத்திச் செல்லப்பட்ட சிறுமிகளின் வாழ்வில் கறுப்பைத் தவிர வேறு எந்த நிறமும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

  • புகைப்படக் கருவியைத் துப்பாக்கி என எண்ணி தான் சரணடைவதாகக் கைகளைத் தூக்கியபடி ஒரு சிரிய அகதிக் குழந்தை மருண்டு நிற்க, மற்றொரு மூலையில் தீவிரவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் பிணைக்கைதிகளைச் சித்திரவதை செய்து கொன்று பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பானாயிருக்கும்.

 

இப்படியாக வேகமாக எங்கெங்கோ தாவிக் கொண்டிருந்தது மனது. மீண்டும் பெருமூச்சுடன் தார்சாலையில் நிலைகுத்தியிருந்த பார்வையை மேல்நோக்கித் திருப்பினேன். வீட்டின் முன் நிற்கும் வேப்பமரங்களும் அடுத்த வீட்டு தென்னை மரமும் விழுங்கித் தின்றது போகத் தெரிந்த அந்த சிறிய துண்டு வானம் ஒன்றிரண்டு நட்சத்திரங்களுடன் அன்று நிரம்பவே அழகாய் இருந்தது. வயல்வெளியிலும் கடற்கரையிலும் இருந்து காண்கையில் பரந்து விரிந்த வானமும் அழகுதான். ஆனால் ஓர் இடத்தில் மரத்தின் கொப்புகளுக்கும் இலைகளுக்கும் இடையே தெரியும் பரந்து விரிந்த வானத்தின் சிறிய பகுதியை மட்டுமே பார்த்துப் பழகும் கண்கள், கொப்புகள் வெட்டப்பட்ட பிறகு சட்டென பிரகாசமாய்த் தெரியும் பெரிய வானம் உண்டாக்கும் ஒருவித அச்சத்தைக் கண்களின் வழியே மனதிற்குக் குடியேற்றும். கொப்புகள் துளிர்த்து வளரும் வரை கண்களை மேலே உலவ விட அனுமதிக்கமாட்டேன். இதையெல்லாம் யோசித்துக் கொண்டே பார்வையைக் கூர்மையாக்க கூர்மையாக்க, ‘இனி இவளிடம் தப்ப இயலாது’ எனப் பல நட்சத்திரங்கள் வானத்திரையை விலக்கி வெளி வந்து காட்சி தந்தன. “இப்போது நான் காணும் இந்த நட்சத்திரங்களின் ஒளி எத்தனை ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து புறப்பட்டதோ? இப்போது இந்நொடி அந்த நட்சத்திரத்திலிருந்து கிளம்பும் ஒளியைக் காண நான் இருப்பேனா? எனில், எப்போது எங்கிருந்து காண்பேன்?’ – யோசித்தபடியே மினுக் மினுக் என்று கண்ணடித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன். “ம்ம்…ஒனக்கு இப்ப பொழுது போக மாட்டேங்குதோ? பொழப்பத்தவ மாதிரி வெட்டித்தனமா எங்கள எண்ண ஆரம்பிச்சுட்ட….போ…போய் தூங்குற வழிய பாரு” – நக்கலாக என்னைக் கடிந்து கொண்ட நட்சத்திரங்கள் மேகத்தைப் போர்வையென இழுத்து மூடி மறைந்தன. “போகத்தான் வேணுமோ?” என்று முதல் அடியை எடுத்து வைக்க எத்தனிக்கையில் வீட்டிற்கு மேலே இருந்த நிலா, பூமியின் சுழற்சியால் மெதுவாக நகர்ந்து தென்னங் கீற்றுகளுக்கிடையில் வந்து அயர்ச்சியில் இளைப்பாறியது. பல கவிஞர்களை உருவாக்கிய நிலவை அவர்கள் கண் கொண்டே பார்க்க முயன்றேன், கடன் வாங்கித்தான். ம்ஹூம்….வராதத வா வான்னா எங்க இருந்து வரும்? பெரும்பாலான பெண்களின் முகம் நிலவுடன் ஒப்பிடப்படும்போது என்னையும் அறியாமல் மனதில் உதயமாகும் கேள்வி : ‘அப்போ ஃபேர் அண்ட் லவ்லிதான் சூரியனா?’. எனது மனக்குரலைக் கேட்டது போல நிலவு மேகத்தினை முக்காடாக இட்டு தன்னை மறைத்துக் கொண்டது. (அவ்வளவு சத்தமாவா யோசிச்சேன்!) கோபமா? வெட்கமா? அப்போது நெற்றியில் விழுந்த ஒற்றை மழைத்துளி, ‘பெய்யெனப் பெய்யும் மழை’ – கொண்டவனைத் தொழுதெழுவோர்க்கு மட்டுமல்ல, ராஜா பாதிரியார் போன்றோர்க்கும்தான் என சொல்லியது.

 

மிதமான சாரலுக்கிடையே எங்கோ ஒரு பறவை சூரியனை எழுப்ப ஆரம்பித்தது. மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒளிரேகை கிழக்கு வானத்தைக் கீறிடத் தொடங்க, ஆதவனின் வருகையை உறங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அறிவித்துத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தது இன்னொரு பறவை. மெல்ல மெல்ல பொழுது புலர்ந்து, வெளிச்சத்தோடு பரபரப்பையும் கொண்டு வந்தது. இதற்கு மேல் சுவாரஸ்யமாக எழுத என்ன பெரிதாய் இருக்கப் போகிறது? குளித்துக் கிளம்பி அன்றைய நாளுக்கான ஓட்டத்தைத் துவங்க வேண்டியதுதான்.

 

  • சோம.அழகு

 

 

 

Series Navigationதமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்): மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    பேராசிரியர். ந. கிருஷ்ணன் says:

    அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும் (கவிஞர் நா. முத்துக்குமார்)

    என்று கனவுகள் சிறகடிக்க, மனிதர்களோ, உறவுகளோ வேண்டாத சமகால இளைய தலைமுறையிலிருந்து,

    அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
    ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
    வாயில் என்ன மந்திரமா
    மனசு என்ன எந்திரமா
    சாமியிடம் பேசுது புள்ள
    தாயழுகை கேட்கவுமில்லை (கவிப்பேரரசு வைரமுத்து)

    என்று மற்ற இளைஞர்களை வழிநடத்தும் அன்பில் முகிழ்த்து, அக்கம் பக்கம் பார்த்த மனித வாசிப்பினூடே கசிந்துருகிய மனிதநேய வாசகங்கள் இறைமையை நினைவூட்டின. சர்வ வல்லமை படைத்தவன், நம் பயணத்தின் போக்கில் பயணிக்கிறான். உன் சர்வ வல்லமையில் கொஞ்சம் எனக்கும் தாராயோ! என்று
    “ஏ.சி. அறையில் இருந்தவர் இப்போது ஏர் கூலருக்கும் வழியின்றி தினமும் மெத்தையில் ஒரு வாளி நீரை ஊற்றி அதில் உறங்கும் அவலத்தைக் கேட்ட போது அப்பணப்பேய்களின் சாவிற்காய் வேண்டினேன்.”
    கேட்கும் வரிகள் இதயத்தை ஏதோ செய்தன..

    “செய்ந்நன்றி மறவாத புண்ணியவதியான எலிசா அம்மாதான் தம் சொந்தங்களையும் சொந்த ஊரையும் விட்டு வந்து பாதிரியாரைத் தந்தையைப் போல பார்த்துக் கொள்கிறார். பாதிரியாரின் மருந்துச் செலவிற்குக் கூட காசில்லாததால் நான்கு வீடுகளில் வேலை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பாதிரியாருக்கும் தமக்குமான உணவுத் தேவைகளைச் சமாளிக்கிறார். எவ்வித எதிர்ப்பார்ப்பும் அவசியமும் இன்றி உறவினர் அல்லாத ஒருவரை கவனிக்கிற அந்த மனசு இருக்கே…..அதான் சார் கடவுள்! ”
    என்ற வரிகள் எலிசா அம்மாவாக வாழும் கடவுளைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின.

    ” – யோசித்தபடியே மினுக் மினுக் என்று கண்ணடித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன். “ம்ம்…ஒனக்கு இப்ப பொழுது போக மாட்டேங்குதோ? பொழப்பத்தவ மாதிரி வெட்டித்தனமா எங்கள எண்ண ஆரம்பிச்சுட்ட….போ…போய் தூங்குற வழிய பாரு” – நக்கலாக என்னைக் கடிந்து கொண்ட நட்சத்திரங்கள் மேகத்தைப் போர்வையென இழுத்து மூடி மறைந்தன.” என்ற வரிகள் ஏனோ
    ‘காக்கை குருவி எங்கள் சாதி
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்’
    என்று பாடிய பாரதியை அழைத்தன.

  2. Avatar
    meenal devaraajan says:

    ரு சோம அழகு அவர்களே!
    அழகான நடை, வளம் குன்றா வரிகள் , மனத்தைத் தொட்ட சம்வங்கள் ஏன் அந்த பாதிரியாருக்கு இந்த விதி? கடவுளை நம்பினார் அல்லவா?
    சிங்கார சிறும் மனதில் நிற்கிறாள். கதையின் தொடக்கம் அருமை
    தொடர்க உம் பணி
    இக்கதை எனது மனதில் நிலவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *