எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

This entry is part 11 of 14 in the series 30 ஏப்ரல் 2017

 

போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்..

எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார் தங்களுடன் இருப்பது பிடிப்பதில்லை. மகனுக்கோ தந்தை மீது அக்கறை இல்லை. அதை உணரும் எம்.எஸ்.பாஸ்கர் தனது பணத்தேவைக்கு வங்கியை கொள்ளை அடிக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்து லட்சம் தருகிறார்.

வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை. அப்படி ஈட்டத்தெரியாதவன் பெண் சுகத்திற்கு அருகதை அற்றவனாகிறான். அதனால் வரும் பிள்ளை சுகத்திற்கு அவன் அருகதையற்றவனே. ஆனால் கடமை என்கிற பெயரில், தறுதலை பிள்ளைகள் பற்றி பொய் பொய்யாய் பெண் வீட்டில் அவிழ்த்துவிட்டு, ஒரு பிம்பம் உருவாக்கி கல்யாணம் செய்து வைத்து விடுவது அனேகம் வீடுகளில் இன்றும் நடக்கிறது. தகுதியற்ற ஆண்களுக்கு திருமணம் நடப்பது, அவர்களின் “பொறுப்பற்ற” பெற்றோர்களின் திறமையால்தா, செல்வாக்கால் தானே ஒழிய வேறில்லை என்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம் தான். எத்தனை பேருக்கு கண் பார்க்க “இவனுக்கெல்லாம் எப்படி அமையிது பாரு” என்றும்,
“எப்படியெல்லாம் இருந்தவ, அவளுக்கு வந்த வாழ்வைப் பாத்தியா” என்றும் நம்மை சுற்றி பல திருமணங்களை நாம் கடந்து போய்க்கொண்டு தான் இருக்கிறோம்.

அந்த திறமையும் என்னதான் திருமணத்தை நடத்திவிட்டாலும் “பொறுப்பற்ற” தன்மைக்கு விளைவு என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்? ஒரு பெண்ணுக்கு தகுதியற்ற ஆணை, மகன் என்கிற காரணத்திற்காய் உயர்த்திப்பிடித்த குற்றத்திற்கு பலி ஆகிறார் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் என்றே கொள்கிறேன் நான். தன் கடமைகளை உணராதவனுக்கு, அதற்கு தேவையான உழைப்பை நல்க மறுக்கும் சோம்பல் உள்ளவனுக்கு பாசம் என்கிற பெயரால் பெண் வீட்டில் அதை இதை சொல்லி பெண் எடுத்து கட்டி வைக்கும் குற்ற செயல் புரியும் வயோதிகனுக்கு என்ன நேர வேண்டுமோ அதுவே நேர்கிறது என்றே நான் என்னை சமாதானம் செய்து கொள்கிறேன்.

பெற்றவர்கள் 50 வயதுக்கு பிறகு குழந்தைகளைப்போல. எப்படி பெற்றவர்கள் நாம் வளர்ந்து ஆளாகும் வரை நமக்கு பொறுப்பேற்கிறார்களோ அவ்விதமே நாமும் அவர்கள் குழந்தைகளாகும் போது பொறுப்பேற்க வேண்டும். இதுவும் கடமை. இதை செய்ய தவறுபவர்களுக்கு எம்.எஸ் பாஸ்கர் தலா ஐந்து லட்சம் அளிக்கிறார். மடத்தனமான பாசம் ஒருவரை சோம்பேறியாகத்தான் மாற்றும். தனது பிள்ளைகளை தானே சோம்பேறி ஆக்கும் மடத்தனத்தைத்தான் செய்கிறது எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் என்பது எனது வாதம்.

ஒரு பிள்ளை என்னதான் பெற்றவர்கள் சொத்து சேர்த்து வைத்தாலும், தனக்கே தனக்கான வசதிகளை, சொத்துக்களை தன் சொந்த சுய நேர்மையான சம்பாத்தியத்தில் மட்டுமே ஈட்டவேண்டும். அது கடமை அய்யா. அது ஒரு விதமான ஒழுக்கம். அது ஒரு விதமான அறம். எவ்வாறு குழந்தைக்கான சகல செலவும் பெற்றவர்களைச் சேர்கிறதோ அதுபோல பெற்றவர்களின் சகலத்தையும் உத்தேசித்தே ஒரு பிள்ளை தன் வருமானத்தை திட்டமிட வேண்டும். அப்படி அல்லாதவனுக்கு ஏன் பெண்டாட்டி? ஏன் பிள்ளை?

அதை ஒருவரால் செய்ய முடியவில்லை என்றால், செய்ய முயற்சிக்க வேண்டும். முயற்சி கைகூடும் வரை கவனச்சிதறல் இன்றி உழைக்க முன்வர வேண்டும். அது நடக்கும் வரை, ஒரு பெண்ணுடன் கூடவோ, குழந்தை குட்டி பெறவோ, குடும்பம் நடத்தவோ அவன் தகுதியில்லை என்பதே இயற்கை சொல்கிறது. அதை மீறும் யாரையும் இயற்கை இப்படி அலைக்கழித்தே பார்க்கும்.. அதற்கு பரிதாபப்பட முடியாது. கூடாது. இந்த பின்னணியில் எனக்கு எம்.எஸ்.பாஸ்கரின் நீண்ட வசனம் வெறுப்பையே வரவழைத்தது.

இப்படி தகுதியில்லாத ஆண்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்களால் தான் ஆண் இனம் தொடர்ந்து மலினப்படுகிறது, மதிப்பிழக்கிறது. எம்.எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் தனது மனைவி குறித்து குறிப்பிடுகையில் “அவ இருந்தவரைக்கும் நான் ராஜாவா இருந்தேன்.. தங்கம் சார்.. இருக்கிறதை வச்சி எப்படியாவது ஒப்பேத்திடுவா” என்கிறது. இப்படி எல்லோருக்கும் அமைவதில்லை. ஏன்? ஏனென்றால் எம். எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் போன்ற புண்ணியவான்களால் தான். பாசம் கண்களை மறைக்க சோம்பேறி மகனை திருமண சந்தையில் உயர்த்திப்பேசி முன்னிருத்தி கட்டிவைத்து “திறமை”யை காட்டிவிடலாம். பெண் என்ன முட்டாளா? அப்படி மணமாகி வரும் பெண்ணுக்கு முதல் வாரத்திலேயே கட்டிய கணவனின் உண்மை நிலவரம் தெரிய வருகையில், “ஏமாற்றப்பட்டது” தெரியவருகிறது. அவளுக்கு எப்படி மாமனார் மீது மரியாதை வரும் ஐயா? அடுத்தவரை ஏமாற்ற முனையும் எவனும் நன்றாக வாழ்ந்துவிட முடியாது.. இதனால் இருபுறமுமே பிரச்சனைகள் தான். “திறமையான மனைவி, ஓரளவே சுமாரான கணவன்” என்கிற காம்போவுக்குள் சிக்கிக்கொள்ளும் மகன் என்கிற ஆண், திருமண உறவில் மனைவியுடன் எல்லாவிதத்திலும் தாழ்வுமனப்பான்மையை சந்திக்கையில், அதற்கு காரணமான தந்தையிடமே கோபம் கொள்வது இயற்கை தானே.

தகுதியான பெண்ணுக்கு அவளுக்கு இணையான தகுதியான ஆணை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்விக்கும் நான் இதையே பொறுத்தமான விடையாக அளிக்க விழைகிறேன். இந்த பின்னணியில், இணையான தகுதியான துணையை தேர்வு செய்வது எப்படி என்கிற ரீதியில் தான் எனது “உங்கள் எண் என்ன?” விரிகிறது.

படத்தில் ஏழு தோட்டாக்களிற்கு எம்.எஸ்.பாஸ்கரின் இந்த மடத்தனமே பின்னணியாக செயல்படுகிறது என்றே நினைக்கிறேன். தன் மடத்தனத்திற்கு பொறுப்பேற்பதாகத்தான் நான் என்னை மீண்டும் சமாதானம் செய்துகொள்கிறேன்

தந்தையின் ஓய்வூதியத்தில் தங்கள் வாழ்க்கையை பிரகாசிக்கச்செய்ய‌ கையேந்தும் பிள்ளைகளுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் பலர் உழைத்து சேமித்த பணத்தை கொள்ளை அடிக்கிறது. இந்த லட்சணத்தில் “வங்கி பணத்தை இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும்” என்று லாஜிக் வேறு. ஒரு வகையில் மருமகளும், மருமகனும் மறைமுகமாக எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரத்தை இடித்துரைக்கிறார்கள். “ஏமாற்றிய” மாமனார்கள் மீது கேலியும் கிண்டலும் தான் வரும். மரியாதை வராது ஐயா.

கதா நாயகனிடம் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் ஹோட்டலில் வைத்து நிகழ்த்தும் மிக நீண்ட உரையாடலில் “”நல்லதே செய்.. நல்லதே நடக்கும்.. நேர்மையா இருந்தா ஊரே உன்னை புகழும்.. எல்லாம் சுத்த பொய்.. அதை மொத மொதல்ல சொன்னவன் மட்டும் என் கையில கிடைச்சான் அவனை செருப்பாலயே அடிப்பேன் சார்..” வீர முழக்கம் இடுகிறார்.

அந்த வசனம் முழுக்க முழுக்க அக்மார்க் உண்மையே.. இப்போது இருப்பது இருத்தலிய உலகம் என்பதை நான் மறுக்கவில்லை.. ஆனால் தனது சோம்பேறித்தனத்தையும், கடமை உணர்வற்ற நிலைப்பாட்டையும், இயலாமை, கல்லாமை போன்ற ஆமைகளையும் நியாயப்படுத்திக்கொள்ளவே அதை பெரும்பாலும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

எம்.எஸ். பாஸ்கர் போன்ற அதீத பாசத்தால் முட்டாள்தனமாக, பாசத்தை பொழிகிறேன் பேர்வழி என்று சொந்த மகனுக்கோ, மகளுக்கோ பொறுந்தாத துணையை தேடி வைக்கும் சமூக பொறுப்பற்ற முட்டாள் பெற்றவர்களால் பொறுந்தாத துணைகள் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் நாம் இருத்தலியம் தவிர வேறு எதை எதிர்பார்க்க இயலும் ஐயா?

தவறை செய்துவிட்டு, அதற்கு விடையாக வங்கியில் அடுத்தவன் உழைத்து சேமித்த தொகையை கொள்ளையடிப்பதோடு எதிர்ப்பவரை சுட்டுக்கொள்ள ஏழு தோட்டாக்களை வேறு பயன்படுத்தும் எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரத்தை இன்றைக்கு இருக்கிற பொதுவான “அப்பன் அல்லது மாமன்” மனப்பாண்மையாக பார்க்கலாம்.

முதியோர் இல்லமொன்று தங்கிக்கொள்கிறேன் என்று விலகும் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் “குட்டையை குழப்பாமல் போய் தொலை சனியனே” என்று தான் சொல்ல வைக்கிறது இறுதியில்.

– ராம்பிரசாத்

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *