‘உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு இன்று இளைஞர்கள் தவறான கூட்டத்தோடு சேர்றாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்களின் கட்டுப்பாடற்ற தவறான வளர்ப்பு முறைதான்’ ஒரு பட்டிமன்றத்தில் ஓர் அணித் தலைவர் இப்படிச் சொன்னார். ‘இளைஞர்கள் இப்படி ஆவதற்கு அதிக கட்டுப்பாடுதான் காரணம்.’ எதிரணித் தலைவர் மறுத்தார். கைதட்டல். ‘நாங்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று எங்களை ஏன் கேட்பதில்லை?’ அதனால்தான் என் வாழ்க்கையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று முடிவு செய்தேன்.
எனக்கு இப்போது 22 வயது. தேசிய சேவை இப்போதுதான் முடித்தேன். திரும்பிப் பார்க்கிறேன். கடந்த காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. காலால் உதைத்து ஓட்டும் கிக் ஸ்கூட்டர் காலங்களில் அத்தா எனக்கு பேட்டரி போட்ட அசல் ஸ்கூட்டரே வாங்கித் தந்தார். அந்த ஸ்கூட்டரை என் அங்மோகியோ வீட்டுக்குக் கீழே உள்ள பூங்காவில் ஓட்டுவேன். வேடிக்கை பார்ப்பவர்களிடம் 10 காசு வசூலித்தாலே 5 வெள்ளி சேர்ந்திருக்கும். ஐ ஃபோன் 4,5,6,7 எந்த ஃபோன் வெளியானாலும் (தொலைபேசி என்று எழுதாதற்கு மன்னிக்கவும் சரளத்திற்காக பயன்படுத்துகிறேன்) முதலில் வாங்கும் பத்துப் பேரில் நானும் ஒருவனாக இருப்பேன். அப்போது நான் உயர்நிலை 3. பிஎம்டபிள்யூவில் வந்திறங்கும் என் நண்பன் ஜான் கேட்பான்.
’எத்தன வாட்சுடா வச்சுருக்கே. ஒன்னுமே ரிபீட் ஆகலியே’
இன்னொரு நண்பன் ஆலிவர் அவன் எப்போதும் அப்பாவோடு மெர்சிடிஸில் வருவான். அவன் கேட்பான்.
’எத்தன ஷூடா வச்சிருக்கே. ஒன்னுமே ரிபீட் ஆகலியே’
நான் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். இந்த ஆலிவர்தான் எனக்கு பிறகு நெருங்கிய நண்பனானான்.
இத்தனைக்கும் நான் ஒரு சாதாரண நான்கறை வீட்டில் வசிக்கும் பெற்றோர்களின் மகன்தான். நான் பிறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்தான் என் அத்தாவும் அம்மாவும் சிங்கப்பூர் வந்தார்கள். ஓரறை வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். அந்த வீட்டில் ஃபேன் கூட இல்லையாம். 30 வெள்ளிக்கு அத்தா ஒரு ஃபேன் வாங்கி தரையில் வைத்து அதன் அருகிலேயே தலையை வைத்துத்தான் அத்தாவும் அம்மாவும் தூங்குவார்களாம். இரவில் எழுந்து அம்மா அந்த ஃபேனை அத்தா பக்கம் திருப்பிவைத்துவிட்டு தூங்கிவிடுவார்களாம். அதற்குப் பிறகு அத்தா எழுந்து அதை அம்மா பக்கம் திருப்பி வைத்துவிட்டு தூங்குவாராம். அப்படி ஒரு அன்பு அவர்களுக்குள் இருந்தது. அதனால்தானோ என்னவோ அவர்களைப் பற்றி நினைக்கும்போது ஒரு துளி தேன் நெஞ்சில் சுரந்து உடம்பெல்லாம் பரவிவிடுகிறது. ஒரு தடவை அத்தா பாசிர் ரிஸ் சென்றுவிட்டு வருவதற்குக் காசில்லாமல் நடந்தே அங்மோகியோ வந்திருக்கிறார். இதை அத்தாவிடம் நானே கேட்டிருக்கிறேன். சலங்கைபோல் சிரித்துவிட்டு அத்தா சொன்னார். ‘வரும்போது எதிரே வந்த கார்களை எண்ணிக்கொண்டேவந்தேன். 3400 எண்ணிவிட்டேன்’ என்று மீண்டும் சிரித்தார். ஒரு கஷ்டத்தை கஷ்டப்படும்போதே நினைத்தால் அழுகை வரும். வசதி வந்தபின் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த கஷ்டங்களின் நிழலே தெரியாமல்தான் நான் வளர்கிறேன். நான் எதைக் கேட்டாலும் அதற்கு எந்த மறுப்பும் இருந்ததே இல்லை. பள்ளியிலிருந்து பல சமயங்களில் ஆலிவரோடு அவன் வீடடுக்குப் போய்விட்டு 8 மணி அல்லது அதற்கும் மேல்தான் வீட்டுக்குப் போவேன். ஆலிவர் வீட்டில் இருந்தபடியே அத்தாவுக்கு ஃபோன் செய்வேன். ‘வரும்போது வாங்க தம்பீ’ என்பார். அம்மாவிடமும் சொல்லிவிடுவார். ‘ஏன் ஆலிவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறாய்’ என்றுகூட கேட்டதில்லை. இதெல்லாம் எனக்கு அப்போது ஆச்சரியமாக இல்லை. எனென்றால் எல்லாப் பெற்றோரும் அப்படித்தான் பிள்ளைகளை வளர்ப்பார்கள் என்று எண்ணியிருந்ததுதான். ஒரு நாள் என் இன்னொரு நண்பன் பிரித்வீ அவன் முதுகை என்னிடம் காட்டும் வரை. அவன் அழுதான். செக்கச் செவேலென்று பட்டைபட்டையாக பெல்ட்டடி தடிப்புகள். ஒரு நாள் ஒரு மணி நேரம் தாமதமாக வீட்டுக்குப் போனானாம். அதற்குத்தான் அந்த அடியாம். அப்போதுதான் ஒரு அப்பா தன் பிள்ளையை அடிப்பதும் உண்டு என்று நான் நம்பினேன். எனக்கு என் வீட்டில் அத்தனை செல்லம். ஒரு நாள் அத்தாவிடமே கேட்டேன்.
‘எதிர்காலத்தில நா எப்படி வரவேண்டுமென்று ஆசப்படுறீங்க அத்தா?’
அத்தா சொன்னார்.
‘அது என் கையிலுமில்ல.. ஒங்க கையிலுமில்ல தம்பீ. ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு விதை இருக்கு. அது சமயம் வரும்போது தல காட்டும் அதப் புருஞ்சுக்கிட்டா போதும். அதுதான் ஒங்க எதிர்காலம்.’
‘எனக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு எப்படித்தா தெரியும்?’
‘தெரியும். தெரிய வரும்போது.’
நான் ஆலிவர் வீட்டுக்கு அடிக்கடி போவதற்கு காரணம் இருந்தது. ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் பைத்தியம் அவன். குத்துச் சண்டை வீரர் முகமதலியாக நடிப்பதற்கு வில்ஸ்மித் எப்படியெல்லாம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் என்பதை அவன் சொன்னபோது எனக்கு புல்லரித்தது. எனக்குள் ஏதோ ஒரு கிளர்ச்சி வெடித்து உடம்பெல்லாம் பரவியது. அத்தா சொன்ன அந்த விதை இதுதானோ? எனக்கு அப்போது தெரியவில்லை. செக் 3 படித்தபோது லேப்டாப் வைத்திருந்த ஒருசில மாணவர்களில் நானும் ஆலிவரும் அடக்கம். எனக்கும் அந்த வில்ஸ்மித் பைத்தியம் கொஞ்சம் வித்தியாசமாக ஒட்டிக்கொண்டது. வில்ஸ்மித் நடித்த பல காட்சிகளை என் லேப்டாப்பில் சேமித்து அதை ஊமையாக்கி அவர் பேசும் வசனத்தை நான் பேசிப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. இதுதான் அத்தா சொன்ன அந்த விதையாக இருக்க வேண்டும். என் தேடுதல் வில்ஸ்மித்தோடு நிற்கவில்லை. இன்னொரு நடிகர் அல்பாஸினோவும் என்னை ஈர்க்க ஆரம்பித்தார். இந்த விஷயத்தில் ஆலிவரைவிட நான் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன். அந்த அல்பாஸினோதான் ‘சென்ட் ஆஃப் எ உமன்’ என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருது வென்றவர். அந்தப் படத்தில் அவர் குருடராக நடித்திருப்பார். அவர் வரும் காட்சிகளிலெல்லாம் சரி, பேசும் வசனம் ஒரு நிமிடம் வரை நீடித்தாலும் சரி கண் சிமிட்டவே மாட்டார். உணர்ச்சி தெறிக்கும். நான் பேசிப் பார்த்திருக்கிறேன். அவர் நடித்த பல படங்களின் காட்சிகள், காட் ஃபாதரில் அவர் மார்லன்பிராண்டோவோடு தோன்றும் காட்சிகள் என்று ஆயிரக்கணக்கான பதிவுகள் என் லாப்டாப்பை நிறைத்துக் கொண்டிருக்கிறது. பாப் பாடல்களிலும் என் ஆர்வம் தலை நீட்டியது. மூச்சு விடாமல் பாடும் அந்த லாவகத்தை நினைக்கும்போது எனக்கு மூச்சு முட்டியது. நானே ஆங்கிலத்தில் கவிதை எழுதினேன். அது எனக்கு சுகமாக இருந்தது. அதே மாதிரி மூச்சு விடாமல் என் அறைக் கதவுகளை சாத்திக்கொண்டு பாடி எனக்குள் நானே உடைந்து என் லாப்டாப்பில் பதித்திருக்கிறேன் அதற்கு ஆலிவர் இசை கூட்டியிருக்கிறான். ஒரு தடவை அப்படி நாங்கள் தயாரித்த பாட்டை யூடியூபில் போஸ்ட செய்தோம். ஒரே நாளில் 13000 லைக்குகள். ‘டிரேக்’ என்றொரு பாப் பாடகர் காசு செலுத்திப் பாட்டுக் கேட்கும் ஒரு வலைத் தளத்தில் ஒரு பில்லியன் பேர் கேட்டிருக்கிறார்கள் என்றால் அது ட்ராக்கின் ஆல்பம்தான். இதெல்லாம் நானாகவே தேடிய தகவல்கள். ஒரு தடவை அத்தாவிடம் சொன்னேன். எதெல்லாம் என்னை உலுக்கிப் போடுகிறதோ அத்தனையையும் நான் அத்தாவிடம் பகிர்ந்து கொள்வேன். எங்களுக்குள் அத்தா மகன் என்ற உறவைவிட நண்பர்கள் என்ற உறவை விட மானசீகமாக இறைவனிடம் பேசி அழும் ஒரு உறவு இருந்தது.
‘ஆலிவர் வீட்டுக்கு நான் அடிக்கடி போகிறேன். என் ரசனைக்கு ஈடுகொடுப்பவன் அவன்தானத்தா.’
என்றேன். அத்தாவிடம் கேட்டேன்.
‘நீங்க என்னை மாதிரி இருந்தபோது நீங்க விரும்பிக் கேட்ட பாடல், நீங்கள் மிகவும் விரும்பிய நடிகர்னு யாராவது இருந்தா சொல்லுங்கத்தா’
‘சிவாஜி கணேசன்’ என்று சொல்லிவிட்டு ஆலயமணி படத்தில் வரும் ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ என்ற பாட்டை முழுதும் பாடிக்காண்பித்த போது அவரின் பழைய நினைவுகள் அவரை விழுங்க கண்களில் ஈரம் தெரிந்தது. அவரே சொன்னார்.
‘நீங்க பேசுற எவ்வளவோ விஷயங்கள நான் கேள்விப்படவே இல்ல தம்பி. ஒரு பாட்டை ஒரு பில்லியன் பேரு காசு கொடுத்துக் கேட்டார்கள்னு சொல்றீங்க. அதெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாது தம்பீ. இவ்வளவு விஷயம் தெரிஞ்ச ஒங்கள நா கண்டிச்சு வளக்கணுமாம்’
சலங்கைச் சிரிப்போடு அவர் சொன்னதை நான் ரசித்தேன். அத்தா ஒரு தடவை வசந்தம் சென்ட்ரலில் ‘பெற்றோர் பிள்ளை உறவைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பேசியதை அம்மா என்னிடம் சொன்னார்கள்.
‘பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்காமலேயே சுதந்திரம் கொடுத்தால் கெட்டுப் போய்விடுவார்கள். என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். சுதந்திரம் கொடுத்துப் பார்க்காமலேயே எதை வைத்து இப்படிப் பேசுகிறார்கள்?’
இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். இதைத்தான் அத்தா என்னிடம் சோதித்துப் பார்க்கிறாரோ? என் ஈடுபாடுகளையெல்லாம் அத்தாவிடம் சொல்லிவிட்டு கேட்டேன்.
‘நீங்க சொன்ன விதை இதுதானாத்தா?’
அத்தா தீர்க்கமாகச் சொன்னார் ‘ஆம்’ தேடல்கள் தொடர்ந்தன. அதையே வாழ்க்கையாக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன. ஒரு வெப்சைட் இருக்கிறது. அதில் உங்கள் புகைப்படங்கள் நடிப்பு பாட்டுத் திறமைகள் எல்லாவற்றையும் பதிவு செய்யலாம் உங்களின் திறமையை பயன்படுத்த விரும்பும் விளம்பரக் கம்பெனிகள், திரைப்பட நாடக குழுக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் என் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு ஆண்டுக்கு 150 வெள்ளி செலுத்த வேண்டும். அத்தாவிடம் சொன்னேன். உடனே செய்யச் சொன்னார். அதைப் பார்த்த சில விளம்பரக் கம்பெனிகள் எனக்கு ஆடிசன் தந்தார்கள். வாய்ப்புத் தந்தார்கள். என் முகத்தோடு பேனர்கள் பஸ் நிறுத்தங்களில் இடம்பெற்றது. அதைப் பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டேன். ஒரு ஜப்பானிய படத்துக்கு இங்கே சில காட்சிகளைப் படம்பிடித்தார்கள். ஒரு போர்த்தளபதியை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளும் காட்சிக்கு ஒரு நடிகரைத் தேடினார்கள் அதில் நான் ஆலிவர் உட்பட 100 பேர் ஆடிசனுக்குச் சென்றோம். என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆலிவர் என்னைக் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தான். அவனுக்குக் கிடைக்காத வருத்தத்தை விட எனக்குக் கிடைத்துவிட்டதில் அவன் ஆனந்தப்பட்டான். இதுதான் ஆலிவர். இதனாலேயே அவன் எனக்கு ஆருயிரு நண்பனானான். அது மட்டுமா? எனக்குள் இருந்த அந்த விதையை வெளியே கொண்டுவந்தது என் அம்மாவோ அத்தாவோ அல்ல. இந்த ஆலிவர்தான்.
ஓ லெவல் முடித்ததும் அம்மா என்னை தொடக்கக் கல்லூரியில் சேரச் சொன்னார்கள். ஏனென்று கேட்டேன்.
‘மார்க் அதிகம் வாங்கியவர்களும் நன்றாகப் படிப்பவர்களும்தான் தொடக்கக் கல்லூரியில் சேரமுடியும், மற்றவர்களிடம் சொல்லும்போது கௌரவமாக இருக்கும்’
என்றார். என் பாய்ண்டுக்கு நான் ஜேஸியும் போகலாம் பாலியும் போகலாம். நான் பாலியைத் தேர்வு செய்தேன். ‘மாஸ்காம்’ படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அத்தாவிடம் கேட்டேன்.
படிக்கப்போறது நீங்க. உங்களுக்கு எது புடிக்குதோ அதப் படிங்க’
என்றார். அம்மா குரலை உயர்த்தினார். எப்போதாவதுதான் அப்படி உயர்த்துவார்.
‘முடியவே முடியாது. ஜேஸிதான் படிக்கணும்’
அத்தா சொன்னார்.
‘சரி படிக்கட்டும். படிக்கிறது கஷ்டமா இருக்குன்னு பாதிலேயே வெளியே வந்துட்டா? அது யாருக்காவது தெரிசஞ்சுட்டா? அதுக்குத்தான் சொல்றேன். படிக்கப் போறது அவரு. அவர்க்கிட்டே விட்டுருங்க.’
அத்தாவுக்குள் இருந்து நான்தான் பேசுகிறேனா? அது எப்படி நான் நினைப்பதையே அவர் பேசுகிறார்? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மாஸ்காம்தான் படிக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். சிங்கப்பூரில் அந்தப் படிப்பு ஒரே ஒரு பாலியில்தான் மிகச் சிறப்பாக சொல்லித்தரப்படுகிறது. அதற்கு ‘கட்ஆஃப் பாய்ண்ட்’ 10. என்னிடம் இருப்பதோ 13. எப்படிச் சாத்தியமாகும்? துணிந்து விண்ணப்பித்தேன். நான் நடித்த காணொளிக் காட்சிகள். நானே எழுதிப் பாடிய பாப் காணொளிகள், நான் தலை நீட்டிய அந்த ஜப்பான் படக் காட்சிகள், சில சானல்5 நாடகங்கள் என்று அனைத்தையும் இணைத்தேன். இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டேன். எனக்குமட்டுமல்ல, ஆலிவருக்கும் இது ஆச்சரியம். 13 பாய்ண்டுக்கு இந் வாய்ப்பை அந்தப் பள்ளி தந்ததே இல்லை. அத்தாவிடம் சொன்னேன்.
‘இது உங்க படிப்புக்கான வெற்றி இல்ல தம்பீ. உங்க தன்னம்பிக்கைக்கான வெற்றி.’
இன்டர்வியூ. எனக்கு முன்னாலேயே அந்த வீடியோ காட்சிகளை அந்த ஆசிரியர் பார்த்தார். அதில் சில காட்சிகளை மீண்டும் நடிக்கச் சொன்னார். ஒரு பாப் பாடலைப் பாடச் சொன்னார். பிறகு கேட்டார்.
‘இந்தப் பள்ளியில் இடம் கிடைத்தால் ஏதும் சாதனை செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா?’
‘நம்புகிறேன். ஒரு குறும்படம் எடுப்பேன். அதற்கான கதை என்னிடம் தயாராக இருக்கிறது. கலைஞர்கள் கைவசம் உண்டு. நம் கல்லூரியின் பெயரை பல நாடுகள் அறியச் செய்வேன்.’
‘நன்றி. போய் வாருங்கள்’
இரண்டே நாளில் அட்மிஷனுக்கான கடிதம் வந்தது. இப்போது அந்தப் படிப்பையும் படித்துவிட்டேன். தேசிய சேவையும் முடித்துவிட்டேன். தொடர்ந்து பல சானல்5 நாடக வாய்ப்புக்கள் நடித்தேன். மிகப் பிரபலமான தொலைபேசிக் கம்பெனிகள் ஃபாஸ்ட் ஃபுட் கம்பெனிகள் எனக்கு ஆடிசன் இல்லாமலேயே வாய்ப்புத் தந்தன. இந்த வாய்ப்புக்களை வழங்கும் ஒரு நிறுவனத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். எனக்கு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களுக்கு 20% கொடுத்துவிடவேண்டும். எந்த வாய்ப்பாக இருந்தாலும் எனக்குச் சொல்லி என்னால் முடியாது என்றால்தான் அடுத்தவருக்கு அந்த வாய்ப்பு போகும். ஒரு இந்தியமுகம் தேவையென்றால் புரிந்துகொள்ளுங்கள். நான் அதில் நிச்சயமாக இருப்பேன். ஒரு ஜப்பானிய ஆடைக் கம்பெனி. அதற்கு மாடலிங் செய்யும் வாய்ப்பு எனக்குத் தந்தார்கள். அதற்குக் காரணம் அந்த ஜப்பானியப் படத்தில் தலை நீட்டியதுதான். அந்தக் கம்பெனியோடு இப்போது வேறு ஒரு ப்ராஜக்ட் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு ஹாலிவுட் கம்பெனி 300 மில்லியன் செலவில் சிங்கப்பூரிலேயே ஒரு படம் எடுக்கப் போகிறது. அதற்கு இங்கு ஆடிசன் கேட்டிருந்தார்கள். ஆலிவர் உட்பட 300 பேர் அதில் கலந்துகொண்டோம். அதில் நான் சார்ட்லிஸ்ட் ஆகியிருப்பதாக அந்த மேனேஜர் சொன்னார். அதுவும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
நான் வளர வளர அத்தா தேய்ந்து கொண்டே போவதை நான் உணர்கிறேன். அதை நினைத்து பாத்ரூமில் பல தடவை உரக்கக் கத்தி அழுதிருக்கிறேன். பல ஆண்டுகளாக அத்தாவுக்கு டயாபடீஸ் இருக்கிறது. இப்போது பிரஸரும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி பாலி கிளினிக் செல்கிறார். கண்ணில் கீழ்ப்பட்டையில் ஊசி போட்டுக் கொள்கிறார். கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். இதையெல்லாம் நினைத்து அழுவதுதான் என் வேலையா? இவைகள் சிறிதாகிற மாதிரி பெரிதாக ஒன்று நான் செய்யவேண்டாமா? என் ப்ராஜெக்ட்கள் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சாதித்துவிட்டுத்தான் என் அத்தாவிடமும் அம்மாவிடமும் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
ஒரு நாள். நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவும் அத்தாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பருப்பானம் ஊற்றிப் பிசைந்த சோற்றை கைநிறைய அள்ளி அம்மா வாய்க்குக் கொண்டு சென்ற போது அதை அப்படியே என் வாயில் வாங்கிக் கொண்டு வாங்கிய வேகத்திலேயே என் கைகளில் அதைத் துப்பிவிட்டு அத்தாவிடம் கேட்டேன்.
‘என்னத்தா இது. ருசியும் இல்ல. வாசமும் இல்ல. சக்க மாரி இருக்கு. இத எப்புடித்தா சாப்புர்றீங்க?’.
அந்த சலங்கைச் சிரிப்புக்கிடையே அத்தா சொன்னார்.
‘அது ஒன்னும் கஷ்டமில்ல தம்பீ. சாப்பாட வாயில வச்சவொன்னே மூச்ச அடக்கிறணும். சோறு தொண்டக்குழிய விட்டு இறங்கினதும் மூச்ச விடணும். ஒரு ருசியும் தெரியாது.’
மீண்டும் சிரித்தார். அத்தாவால் எப்படி சிரிக்கமுடிகிறது. நான் அத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். அம்மா கண்களில் கண்ணீர் திரண்டதைக் கவனிக்கிறேன். அம்மா சொன்னார்.
‘மயக்கமா இருக்குன்னு அத்தா வீட்லயே இருந்துர்றாங்க. பிரஸர் அதிகமாயிட்டதுனால உப்பில்லாம சாப்பிடச் சொல்லியிருக்காரு டாக்டர். பில்லு சேந்துக்கிட்டே இருக்கு. ஒங்கள்ட எதயுமே சொல்ல வேணாங்கிறாங்க அத்தா. எப்ப வர்றீங்க எப்ப வோவீங்க என்ன பண்றீங்க ஒன்னுமே தெரியல. பயமா இருக்கு தம்பி. ஒங்க அத்தாவுக்காகத்ததான் பயப்பட்றேன். இப்ப அத்தாவையே நா எழந்திருவேனோ’ அம்மாவும் அத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டார் எங்கள் கைகள் அம்மாவின் கைகளோடு சேர்ந்து நடுங்கியது. அம்மாவின் அந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த சலங்கைச் சிரிப்போடு அத்தா சொன்னார்
‘அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி. ஒங்க வேலயப் பாருங்க. இங்க ஒரு பிரச்சினையும் இல்ல.’
அத்தா என்னை சமாதானப்படுத்துகிறார். அது உண்மையல்ல. நானறிவேன். இனிமேலும் நான் சும்மா இருக்கக்கூடாது. அம்மாவை நான் சமாதானப்படுத்தியாக வேண்டும். நானே தொடர்ந்தேன்.
‘அத்தா ரொம்ப ஜீனியஸ்மா. அவருக்குப் பிள்ளயா ஒரு இளைஞனா வாழ்ந்து பாத்தாத்தான் அது புரியும். பிரச்சினைன்னு நீங்க எதையுமே சொல்லாததுனாலதான் நானே பிரச்சினைகளத் தேடித் தேடி கண்டுபிடிச்சேன். நமக்குள்ள பிரச்சினை எல்லாமே எனக்குத் தெரியும்மா. நா இப்படித்தான் இருக்கணும்னு எதயுமே நீங்க என்மேல திணிக்கல. அதனாலேயே நா எப்படி ஆகணும்னு நானே முடிவு செஞ்சுக்கிட்டேன். எல்லாமே கிட்டத்தட்ட கைக்கு வந்தது மாதிரிதான். சொல்லணும்னு நெனச்சிருதந்தேன். நானாக சொல்லும்படி இன்னிக்கு ஆயிடுச்சு பாத்திங்களா? அத்தா ஒரு ஜீனியஸ்மா. அந்த ஜப்பான் டிரஸ் கம்பெனி, நா மாடலிங் செய்தேனே. அந்தக் கம்பெனி, சிங்கப்பூர்ல ஒரு பிராஞ்ச் தொறக்கிறாங்க. அதுக்கு நான்தாம்மா மேனேஜிங் டைரக்டர். இன்னிக்கு காலைலதான் அக்ரீமென்ட்ல கையெழுத்து போட்டேன். அந்த ஹாலிவுட் படத்துக்கு சார்ட்லிஸ்ட் பண்ணுனாங்கள்ல, அது கெடச்சிருச்சும்மா. ராத்திரிதான் ஈமெயில் வந்துச்சு இவ்வளவும் என்னால சாதிக்க முடிஞ்சிருக்குன்னா எல்லாத்துக்கும் அத்தாதாம்மா காரணம். பெரிய ஜீனியஸ்மா அத்தா. ஒரு பெரிய தொகை கையில கிடைக்கப்போகுதும்மா. அத அப்படியே அத்தா கையில கொடுத்து நெஞ்சோட முகம் பொதச்சு அத்தாவ கட்டிப்புடிச்சு ‘ஒங்களாலதான் இந்த அளவுக்கு உயர்ந்தேன்னு சொல்லணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். அந்த நாள் வர்ற வரைக்கும் அம்மா அந்த சாப்பாட்ட இன்னொரு வாய் எனக்கு ஊட்டுங்கம்மா.’
அம்மா ஊட்டினார். நான் மென்று ருசித்து சாப்பிட்டேன். பிறகு சொன்னேன்.
‘அந்த நாள் வர்றவரைக்கும் எனக்கும் சேர்த்தே இந்த உப்பில்லா சாப்பாட்டச் செய்ங்கம்மா. அந்த நாள்வரைக்கும் நா வெளிய சாப்பிடப் போறதில்ல.’
அத்தாவின் நெஞ்சில் முகம் புதைத்து ஓவென்று கதறினேன்.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – அத்தியாயம் 10
- இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …
- செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்
- எங்களை ஏன் கேட்பதில்லை?
- கம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.
- வாத்தியார் சாமி
- கவிதைகள்
- கண்கள் மாற்றும்…!
- மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
- பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு
- பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.