ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்.
ராஜ அலங்காரத்தில் பழனி முருகன் காலண்டரையே உற்றுப் பார்க்கிறேன். அவ்வளவு பெரிய அழகான முருகன் படம், எனக்கு இப்போது வெறும் நிழல் மாதிரின்னா தெரியறது . அதுக்கும் கீழே தேதி இருக்குமிடத்தில் ஒரு பெரிய கருப்பு நிழல் தெரிந்ததும், கீதா, இன்னைக்கு என்ன தேதி…? என்று கேட்கிறேன்.
ஏன் உங்களுக்கு முதல்மைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன..? தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா? என்றாள் …அவள் குரலில் தான் ஏகப்பட்ட நையாண்டித்தனம்.
எனக்கு அறுபத்தைந்து வயதாகி விட்டது..கண்ணில் புரை இருக்கலாம். கண் மங்கலாயிண்டு வரது . காதும் கேட்காமல் போனால் தேவலை என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த மாதம் பத்தாம் தேதி இங்கே பக்கத்து தெருவிலே ஏதோ ஒரு அறக்கட்டளையும் அரவிந்த் கண் மருத்துவமனையும் சேர்ந்து ‘இலவசக் கண் பரிசோதனை முகாம்’ போடறாளாம். எதிர் வீட்டு கோமதி நேற்று தான் சொன்னா..”என்ன மாமி உங்களுக்கு இப்போல்லாம் சரியா கண் தெரியலையா? எல்லாத்தையும் தடவி எடுக்கறேளேன்னு சொல்லிட்டு ,,அந்த முகாமுக்கு போங்க , கண் புரை இருந்தா அறுவை சிகிச்சை இலவசமாகவே பண்ணுவாங்கன்னு. அதான் தேதியைக் கேட்டேன் தெரிஞ்சுக்கலாமேன்னு தான் என்றேன்.
எனது மாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், எதிராளாத்து கோமதியா..? அவள் எதுக்கு இங்கே வந்தாள் ? அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள்? இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும் என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா.
போன வாரம் வரைக்கும் ஹரிணிக்கு அழகா நிதானமா சிக்கெடுத்து பின்னி வீட்டுக் கொண்டிருந்தவள் நான் தான் . கண்ணுல குறை தெரியத் தெரிய…சீப்பை சரியாக வைக்க முடியாமல் போனதும், ஹரிணிக்கு கோபமும், எரிச்சலும், ஆத்திரமும் ஒரு சேர வந்து….என்ன பாட்டி இது….சீ….விடு..நான் அம்மாகிட்டயே பின்னிக்கறேன்னு ஒரு நாள் இழுத்துண்டு போனவள் தான்,
அம்மா…பாட்டி முடியைப் பிடிச்சி இழுக்கறா…வலிக்கறது உன்மேல இருக்குற கோபத்தை என் முடி மேலயா காமிக்கணும்..என்று சொன்னதும் தான் புரிந்தது, எனக்கு எதிரா அங்கே ஏதோ பேச்சு வார்த்தை நடக்கிறது என்பது.
சரி..சரி..இனிமேல் நானே பின்னிவிடறேன்,,என்று சொன்னவள், பெரியவா பெரியவா மாதிரி நடந்துக்கணும்….சின்னத்தனம் பண்ணைக் கூடாது என்று அழுத்தமாக …சீப்பை ஹரிணி தலையில் வைத்து அழுத்தினாள். அவ்ளோதான் ஹரிணி ஆ….வலிக்கிறதென்று ரகளை பண்ண ஒரு நிமிஷத்துல ஏகக் களேபரம்.
மொத்தத்தில் இந்த வீட்டில் எப்ப என்ன நடக்குமோன்னு ஜாக்கிரதையாவே இருக்கணும்.
சிவ சிவா…..சின்னத்துகள் இப்படிப் பெரியவாளை பார்த்துப் பேச யார் கத்துக் கொடுக்கறாளோ …? நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி வம்புக்கு வரே ? கேட்க நினைத்தேன்…இவள் கிட்டே யார் வாயைக் கொடுத்து மாட்டிக்கறது. அவளோட வளர்ப்பு அப்படி இருக்கலாம் , அவள் வளர்க்கறதும் அப்படித்தான் என்று நினைத்துக் கொள்கிறேன்.
வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருந்தேன். . ஆனால் எனக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வந்தது.
கேட்டால், உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ…பொறிச்சது , வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது…ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும் என்று நீட்டி முழக்கி என்னைக் கூனிக் குறுக வெச்சுடுவாள். கீதா அதில் ராக்ஷஷி .
அவளைப் பொறுத்தவரை பையனைக் கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவிட்டால், அத்தோடு கடமை முடிந்து போச்சுன்னு விலகிண்டுடணுமாம். இல்லாவிட்டால் ராமா கிருஷ்ணான்னு ஒரு ஓரத்துல கிடைக்கணுமாம்.
அதெப்படி முடியும். எத்தனை வருஷங்கள்…ஓடியாடிய உடம்பு. மனசுலயும், உடம்புலயும் இன்னும் தெம்பும், திடமும் இருக்கும் போது , எப்படி ஓரமா ஒதுங்கி வாழ முடியும்? நானும் நாலெழுத்து படிச்சவள் தான். சம்பாதிச்சவள் தான். முதுமை இப்போ தான் வந்தது. அந்தக் காலத்துல நான் பண்ணாத வேலைல கால் பங்கு கூட இப்போ இவள் பண்றது கிடையாது.அதுக்குள்ளே போய் ரேழியில கிடன்னு சொன்னால் எப்படி? வரட்டும் வெங்கிட்டு. ரெண்டுல ஒண்ணு கேட்டுடறேன். ஒண்ணு பொண்டாட்டியோட வாயை அடக்கி வைக்க சொல்லு. இல்லாத போனா, என்னைக் கொண்டு போயி எங்காவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுடுன்னு கேட்கப் போறேன். தினம் இந்த வீட்டுலே அக்கப்போர் பண்ண என்னாலே ஆகாதுடிம்மா.
கணவன் என்பவன் ஒரு பெண்களுக்கு ஒரு இரும்பு வேலி மாதிரி. அவர் இருக்கும் வரை இப்படியெல்லாம் ஒரு நாளாவது பேசியிருப்பாளா இவள்…அவர் போனதுக்கப்பறம் தான் இப்படி என்கிட்ட வாலாட்டறாள் .வெங்கிட்டுக்கு பார்த்துப் பார்த்து தலையில் கணம், மடியில் கணம், தோளில் கனம் பார்க்காமல், அவனையும் சம்மதிக்க வைச்சு இந்தக் கல்யாணத்தை முடிக்க நான் பட்ட பாடு நேக்குத் தான் தெரியும்.
வாசலில் காய்கறிக்காரியிடம் கீதா பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரே விலை…ஆறு பூ ஐம்பது ரூபாய்…..அவளது கறாரான குரலுக்கு எதிர் பேசாது…
சரி எடுத்துக்க தாயீ ….பூ நல்ல வெளஞ்ச காயி …பார்த்த்தியா எம்புட்டு பெரிசா இருக்குண்டு..அய்யர் ஊட்டம்மா எடுக்கும்னு தான் நானும் அம்புட்டையும் அள்ளியாந்தேன். வெலை கட்டாது தான்..என்ன செய்யிறது ? தலை பாரமாச்சும் குறையுமே…வெய்யில் கொஞ்சமாவா அடிக்குது..சரி பணத்தை கொடு…இன்னும் நாலு வீடு போகணும்..என்றவள் பாட்டிம்மா இல்லியா?
பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா….? இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ‘பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஓட்டிட்டு பொறந்தா மாதிரி ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள்.
இதோ..இன்னைக்கு வாழைப்பூ உசிலி பண்ணிட்டு, வாழைப்பூ தொக்கு பண்ணிடலாம்னு தான் இத்தனை வாங்கினேன்…கொஞ்சம் ஆய்ஞ்சு வெச்சு பொடிஸா நறுக்கித் தாங்கோ…என்றவள் கூடவே கத்தி ஒன்றையும் கொண்டுவந்து அருகில் வைத்தபடி சொல்லிவிட்டுப் போனாள் .
போச்சுடா…..என் அரை குறை கண்ணை வெச்சுண்டு வாழைப்பூ நறுக்குவதாவது? முடியாதுன்னு சொல்லவும் மனசு வராது.
கமகமவென்று வாழைப்பூவின் வாசனை அந்த இடத்தை ஆட்கொண்டது. அந்த மனத்தை ஆசைதீர முகர்ந்து பார்த்துக் கொண்டேன்…நல்லவேளை மூக்கு நன்னா வேலை செய்யறது….என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அருகில் யாருமில்லை என்ற தைரியத்தில்.
ஏன்….நாக்குக்கு என்ன குறைச்சல்? அதான் நாலு முழம் நீளர்தே…அதை பண்ணித்த தா….இதை பண்ணித்தான்னு…காதோ கேட்கவே வேண்டாம்…பாம்புக் காது..நான் அங்க பேசினா இங்கேர்ந்துண்டு என்ன சொல்றே?ன்னு கத்துவேள். ம்ம்ம்…கொஞ்சம் சீக்கிரம் நறுக்கிடுங்கோ. நான் சமையலை முடிச்சுட்டு கொஞ்சம் வெளில போகணும். என்று சொல்லிக் கொண்டே நகர்ந்த போது மனசுக்குள் ஏனோ…இன்னும் நான் யாருக்காக இந்த உயிரை வெச்சுண்டு இருக்கணும்னு தோணித்து. எத்தனையோ கஷ்டப்பட்டாச்சு. கடைசி காலத்துலயாவது நிம்மதியா எனக்காக வாழணும்னு தோணறது. எனக்குன்னு நிறைய நிறைவேற்றிக்காத ஆசைகளை இன்னும் மனசுக்குள்ள வெச்சுண்டிருக்கேனே.
அதிகாலை எழுந்திருந்து சூரியனைத் தொழணும்…..வாயார ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லணும். துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு அத்தோடு கொஞ்சம் பேசணும். குருவிக்கும் காக்காய்க்கும் ஒரு பிடி அரிசியைப் போட்டுட்டு அது கொத்தி தின்னும் அழகைப் பார்த்து ரசிக்கணும்…சுவாமிகிட்ட சின்னதா தினம் ஒரு கோலம் போடணும், காமாட்சி விளக்கேத்தி அந்த தீபக் சுடரில் என்னை மறந்து கொஞ்ச நேரமாவது உட்கார்ந்திருக்கணும்…இதெல்லாம் என்னிக்கோ நான் அவசரகதியில் பண்ணிட்டு விட்டாச்சு…இப்போ கண்ணும் போச்சு. நானொரு அல்ப சந்தோஷி…இதெல்லாம் நடக்கணும்னா முதல்ல என் கண்களைச் சரி பண்ணிக்கணும்.யோசித்துக் கொண்டே பழக்க தோஷத்தில் வாழைப் பூக்களை நாரெடுத்து ஆய்ந்து விறுவிறுவென நறுக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, கீதா….கீதா…வந்து எடுத்துண்டு போ.என்று குரல் கொடுக்கிறேன்.
அதுக்குள்ளே ஆயிடுத்தா ஆறு பூவும்…இல்ல்லாட்டி ஏனோ தானோன்னு பாதியை வீண் பண்ணிட்டேளா? என்றவளுக்கு பதிலாக ஏனோ எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
அத்தனை நேரம் உற்று உற்று பார்த்ததில் கண்கள் இரண்டிலும் வலியும் எரிச்சலும் வந்து நீர் வழிந்தது. இதை அவளிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று, ‘கீதா, பாரேன்…கண்கள் ரொம்ப வலி எடுக்கறது..ரொம்ப நேரம் உத்து பார்க்க முடியலை…நீ இன்னிக்காவது கண் டாக்டர்ட்ட அழைச்சுண்டு போறியா’ என்று கேட்கிறேன்.
நான் தான் அப்பவே சொன்னேனே எனக்கு வெளி வேலை இருக்குன்னு. இன்னும் ரெண்டு நாள்ல உங்க பிள்ளை ஆபீஸ் டூர்லேர்ந்து வந்துடுவார். வந்ததும் அவரை அழைச்சுண்டு போகச் சொல்றேன்..என்று நிறுத்தினாள் .
அவனை கூட்டிட்டு போக சொல்ல நீ யாரு ? கூப்பிட்டால் வந்துட்டுப் போறான். நானே அவனை அழைச்சுண்டு போவேன்….என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். சே…என்ன பெண் இவள்…ஒரு வயசானவளுக்கு, அதும் அவளோட கணவனைப் பெற்ற அம்மாவாச்சேன்னு கூட பார்க்கமாட்டேங்கறா. எனக்கு மட்டும் தான் இந்த நிலைமையா…? இல்லே நாட்ல இருக்குற எல்லா அம்மாக்களுக்குமா, ஒண்ணுமே தெரியலையே . போன வாரம் ஏதோ நீயா நானான்னு டிவி யில் இவாள்ளாம் பார்த்துண்டு இருந்தாளே. வரதட்சணை பத்தி…அதே மாதிரி மாமியார், மாட்டுப்பெண் நிகழ்ச்சி கூட ஏதாவது நடந்திருக்குமாயிருக்கும்..நான் எங்கே கண்டேன்?. நான் மட்டும் தான் இந்த வீட்டில் மனசளவில் வேண்டாத சாமானாகி விட்டேன் அவாளுக்கு.
அடிக்கடி டூர் போகும் வேலை தான் மகனுக்கு. இருந்தும் இப்போல்லாம் போகும் போது ஒரு வார்த்தை கூட சொல்லிட்டு போறதில்லை…வந்ததும் கேட்டால், ஏதோ சொல்வான். அங்கேர்ந்து போயிட்டேன்…இங்கேர்ந்து கிளம்பினேன்…வேற நினைவா இருந்துட்டேன்..இப்படி. பாவம், அவனும் தான் என்ன செய்வான்? அவனுக்கும் வயசு நாற்பத்தைந்தாயிடுத்து. போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்னு சக்கரையும் ஒட்டிண்டுடுத்து. சரியான பொண்டாட்டி தாசன். இவன் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவேயில்லை. மனத்தின் புலம்பல் ஆறுபோல் ஓடிக் கொண்டே இருந்தது.
இரண்டு நாட்கள் ஓடுவது ரெண்டு யுகமாய்த் தெரிந்து எனக்கு. தனிமை. மிகக் கொடுமை. உதாசீனம் அதைவிடக் கொடுமை.ஆனால் ஏனோ உடல் பழசாக ஆக பழைய சட்டையை தூக்கி விசிறி எரியறா மாதிரி எல்லாரும் மனுஷாள எரியத் தயாராயிடறா. இந்த மாயைல இது தான் ‘ஹைலைட்.’.அனால் இந்த நெஞ்சுக்குழில மட்டும் பாசம் அடிச்சுக்கறது.விட்டு விலகவே மாட்டேங்கறதே.
எனக்கு இந்த வயசிலும் எல்லைகள்,,,எதற்கு? இந்த எல்லையை மீறி வெளிநடப்பு செய்தாலும் யாரும் கவலைப் படைப்பு போவதுமில்லை.உலகம் ரொம்பப் பெரிசு தான் ஆனால் எனக்குப் போக்கிடம் ஏதுமில்லையே..மனசைப் பகிர்ந்துக்கக் கூட யாருமில்லையே. மனசுக்குள் ஒரு அகழ்வாராய்ச்சி செய்து கொண்டே இருக்கேன். இந்த வீட்டை விட்டால் நேரே ‘அந்த வீடு’ தான் என்கிற நிலை. கூண்டுக்குள் கிடைக்கும் குருட்டுப் பறவை போன்ற நிலைமைக்கு நானும் வந்தாச்சு.சிவ சிவா,
வெங்கிட்டுவும் வந்தான். நேரம் பார்த்து அவனிடம் சொன்னேன். அதுக்கு உடனே என் மேலேயே வார்த்தையால் பாய்ந்தான். அது தான் வேதனை.
நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு அடம் பண்ணினேன் . நீயாத் தானே இவளைப் பார்த்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தைக் கால்ல நின்னு அழிச்சாட்டியம் பண்ணினே. இப்போ எனக்கே தலைக்கு உசந்த பெண்குழந்தை இருக்கு. இன்னும் உன்னால தான் அவளை ஏத்துக்க முடியலை. கண்ணுக்கு பார்க்கணும்னு சொல்லு. பார்த்து விடறேன். அதை விட்டு அவாளை பத்தி எங்கிட்ட ஓதாதே. ஒண்ணும் நடக்காது. என்ன நடந்தாலும் நீ தான் அனுசரித்துப் போகணும். வயசாறதில்லையா…?
இதைக் கேட்டதும், மேற்கொண்டு பேச என்னிடம் எதுவுமில்லை. சொல்ல நினைத்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினேன். கண்கள் மடை திறக்கக் காத்திருந்தது அதையும் அப்படியே உள்ளே அடக்கினேன். இனி அழக்கூடாது. தயங்கியபடி, அப்போ….வெங்கிட்டு…எ..ன்..னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துலே சேர்த்துடேன், புண்ணியமாய் போகும்.தயங்கியபடியே சொன்னேன்.
ஓ….அப்படியா…ம்ம்ம்..அவளும் அதைத் தான் சொன்னாள் . இதோ பார்மா. என்னாலே ரெண்டு பக்கமும் தவில் மாதிரி அடி வாங்க முடியலை. உன் இஷ்டப் படி செய்யறேன் , என்றவன் ஒருவித நிம்மதியுடன் எழுந்து கொண்டான்.
சீ,,,இதுதானா நீ? அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க பூமி பிளந்து தன்னை இழுத்துக் கொள்ளாதா என ஏங்கினேன். இனியும் இங்கு இருப்பதில்…..மனம் யோசிக்க முடியாது ஸ்தம்பித்தது.
வாசலில் நிழலாடியது. மாமி…இன்னிக்குத்தான் அந்த முகாம் போட்டிருக்காங்க,,குரலில் கோமதி தான் எனத் தெரிந்து கொண்டேன்.
கோமதி, கொஞ்சம் இப்படி வாயேன், உனக்குப் புண்ணியமாய் போகும். நீயாவது வந்தாயே, என்னை எதுவும் கேட்காதே. அப்படியே கையை பிடித்து அந்த இடத்துக்கு அழைச்சிட்டுப் போயேன், என் குரலில் என்றுமில்லாத இயலாமையின் ஏக்கம்.
எனக்கென்று இந்த வீட்டில் எதுவுமேயில்லை என்று இருப்பதாய் நினைத்துக் கொண்டிருந்ததை உதறிவிட்டு கோமதியின் கைகளைப் பற்றியவள் படி இறங்கினேன். அந்த அம்பாளே வந்து அழைத்துப் போவது போல உணர்ந்தேன்.
எல்லாமே மாயையாய் நடந்தது. ஒரு பத்து நாளில் எனது கண்களில் புரை அகற்றி கட்டவிழ்த்து கண்கள் புத்துயிர் பெற்று பளிச்சென்று தெரிந்தது. எனக்குக் கருணை காட்டிய மருத்துவர் என் கதை ஓரளவு தெரிந்து கொண்டு அங்கேயே சிறிது நாட்கள் தங்கி இருக்கும்படி சொல்லியிருந்தார்.
வாய் வார்த்தைகளை விட எழுத்துக்களுக்கு வீரியம் அதிகமாச்சே.. மருத்துவருக்கு ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தேன்.
கைராசி மருத்துவரான உங்களுக்கு,
உங்களைக் கண் கொடுத்த தெய்வம் என்றே நினைக்கிறேன். என்னைப் போல் இதுவரையில் யாரும் பார்வை தந்தவருக்கு எழுதி நன்றி சொல்லியிருக்க மாட்டார். அல்லவா.? உங்களால் பல்லாயிரக் கணக்கில் கண்கள் மீண்டும் பார்வை கிடைத்து பார்க்க ஆரம்பித்திருக்கும். எங்களுக்குப் புது உலகை கண்ணில் மீண்டும் காட்டி இருக்கிறீர்கள். கோடானுகோடி நன்றிகள்.
தங்களின் அதி நவீன மருத்துவ சிகிச்சையும், இலவசமாக உடை,உறைவிடம், உணவு, அறுவை சிகிச்சை செய்து எங்களைப் போன்றோருக்கு பேருதவி செய்கிறீர்கள். தாயுள்ளம் படைத்த தாதிகளின் அரவணைப்பும் கண்டு நான் நெகிழ்ந்து போனேன்.
எங்களுக்கெல்லாம் அநேகமா ஒரே மாதிரியான பிரச்சனைகள் தான் குடும்பத்தில் இருக்கும் என்பதை இங்கு வந்து போன சில நாட்களில் புரிந்து கொண்டேன். சிலரிடமிருந்து கேட்டும் தெரிந்து கொண்டேன். மதுரையில் கிட்டத்தட்ட பல வருடங்களாகவே உங்கள் மருத்துவ மனை இருக்கு. உங்க அப்பா தான் என் அப்பாவுக்கு கண் ஆபரேஷன் செய்தார். இன்று இருவருமே இவ்வுலகத்தில் இல்லை. இருந்தும், உங்கள் அப்பா தனது மாபெரும் சொத்தாக உங்களுக்கு அதே கைராசியை தாரை வார்த்துத் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
நீங்கள் நினைத்தால் உங்களது பண பலத்தைக் கொண்டு ஒன்று செய்ய முடியும். அதாவது. எங்களை போன்ற சமுதாயத்தில் மன உளைச்சலோடு உயிரை பிடித்துக் கொண்டிருக்கும் பல முதியவர்களுக்கு அவர்களின் எஞ்சிய வாழ்நாளுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்க ஒரு புகலிடம் அமைத்துத் தாருங்கள். உங்கள் புண்ணியம் பேசப்படும். வாழ்த்தப்படும். காலமெல்லாம் புகழப் படுவீர்கள். பணம் படைத்தவர்களுக்குத் தான் முதியோர் இல்லம் என்கின்ற நிலைமையை மாற்றுங்களேன்.
எங்களுக்கு உடலில் தெம்பு நிறையவே இருக்கிறது. எங்களை விடவும் வயதானவர்களை பாதுகாக்கும் அன்பும், பொறுமையும் எங்களிடம் உண்டு. நாங்கள் ஒருவருக்கொருவராக ‘புதியதோர் முதியோர் உலகம்’ ஒன்றைப் படைத்துத் தாருங்கள்.
எங்களுக்கும் எஞ்சி இருக்கும் எங்கள் வாழ்நாள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கழிக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான வீடுகளில், எங்களை மதிப்பதே இல்லை. அதுவும் கணவனை இழந்தவள் என்றால் கேட்கவே வேண்டாம்…வேறு வழியே இல்லாதவள் என்று மிகவும் கொடுமைக்கு ஆளாகிறோம். அத்தோடு உடல் உபாதைகள் வேறு. சொல்லொணாத துயரத்தின் பிடியில் எங்கள் இறுதிக் காலங்கள் முடிவதை விட, நிம்மதியாக, பக்தியும், அமைதியும் அன்பும் ஆதரவும் இருக்கும் இடத்தில் நம்பிக்கையோடு கழிப்பதை மனம் விரும்பி ஏங்குகிறது. .உங்களை போன்றார் மனது வைத்தால் நான் சொல்வதை நடத்த முடியும். ஏழைகளுக்கு நீங்கள் இலவசமாகவே கண் அறுவை சிகிச்சை செய்கிறீர்கள்..அதே போல எங்களுக்கு தங்குவதற்கு புகலிடம் அளியுங்கள். எங்கள் ஆன்மா உங்களை என்றும் ஆசீர்வதிக்கும்.
கண் தெரியாது இருந்த வேளையில் தவித்துப் போனேன். இதோ….உங்கள் தயவால் இன்று நன்கு பார்க்கிறேன்…எழுதுகிறேன்….இதை நீங்கள் படிக்கும் போதே , உங்கள் கண்கள் இதை ஏற்றுக் கொண்டு உங்கள் மனதுள் மாற்றம் செய்தால் அது எங்களைப் போன்றோர் செய்த பாக்கியம். இறைவன் எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் நிறைய கொடுப்பான்..கூடவே அவர்களுக்குத் தயாள குணத்தையும் கொடுப்பான். என்று கேள்வி பட்டிருக்கிறேன். முதியவர்களுக்கு அன்போடு காக்கும் புகலிடம் அளியுங்கள்.
பார்க்க மட்டும் அல்ல இந்தக் கண்கள்…ஒருவரின் மனத்தை மாற்றவும் செய்யும்…அதனால் தான் இவ்வளவு பெரிய கடிதம்.
இப்படிக்கு
அன்புடன்
ஒரு அபலைத் தாய்.
மருத்துவரைப் பார்க்கக் காத்து நின்று , அவரது காலில் விழாத குறையாக கண்களால் நன்றி சொல்லி, கடிதத்தை அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். மனக்கண் முன்னே அவரே ராஜ அலங்கார முருகனாய் தோன்றினார்.
அவர் கடிதத்தைத் திறக்கையில் அவரது மனத்தின் கருணைக் கதவும் மெல்லத் திறந்தது.
அந்தக் கடிதத்தைப் படித்ததும் அந்த மருத்துவருக்கு மனது கனத்து என்னவோ செய்தது என்பது உண்மை தான்.
சென்ற வாரம் கூட தனது நண்பரிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
இங்கே மேலூர் பக்கத்துல வெள்ளிமலை கிட்டே ஒரு பத்து ஏக்கரா பூமி ரொம்ப வருஷமா இருக்கு.அதை பிளாட்டு போட்டு விற்கலாமா, வீடு கட்டி விற்கலாமான்னு ஒரே யோசனையா இருக்கு. இன்னும் காலம் தாழ்த்தாமே ஏதாச்சும் பண்ணியாகணும்.என்னமோ தெரியலை அதும் இழுத்துக்கிட்டே போவுது என்ற வார்த்தை பளிச்சிட்டது.
இத்தனை காலங்களை இழுத்துக் கொண்டு நின்ற விஷயத்தின் காரணம் புரிந்தது போலிருந்தது அவருக்கு. இந்தம்மாவின் கடிதம் மூலம் ‘வெள்ளிமலை முருகன்’ உத்தரவு கொடுத்தது போல உணர்ந்தவரின் மனத்துள் , அங்கே இந்த உலகத்துல எங்கியுமே இல்லாதவாறு அதி நவீனமா ஒரு இலவச முதியோர் இல்லத்தை பிரம்மாண்டமாக் கட்டி அதற்கு அப்பா பெயரை வைக்க வேண்டும்” நினைத்ததும், அதை ஆமோதித்ததை போல கடிகாரம் மணியடித்து ஓய்ந்தது.
————————————————-
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – அத்தியாயம் 10
- இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …
- செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்
- எங்களை ஏன் கேட்பதில்லை?
- கம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.
- வாத்தியார் சாமி
- கவிதைகள்
- கண்கள் மாற்றும்…!
- மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
- பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு
- பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.