தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

This entry is part 8 of 19 in the series 28 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை அவர் பாசத்துடன் தூக்கிக்கொண்டார். மோசஸ் சித்தப்பாவிடமும் செல்லக்கண்ணு மாமாவிடமும் அமர்ந்து பேசினார். கூடியிருந்த உறவினர்களிடமும் ஊராரிடமும் நலன் விசாரித்தார்.
அவர் அணிந்திருந்த ” கெள பாய் ” தொப்பியைக் கழற்றி திண்ணையில் வைத்தார். தலை முழுதும் வழுக்கையாகக் காணப்பட்டது. தொப்பியை அதனால்தான் அணிந்துள்ளார். அல்லது வெயில் அதிகம் என்பதாலும் அணிந்திருக்கலாம்.
ஊர் மக்கள் ஒருவாறாக கலைந்து சென்றனர். அப்பா தோட்டம் சென்று மாட்டுக்கொட்டகையைப் பார்வையிட்டார். அங்கு தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளைத் தட்டிக் கொடுத்தார்.அவைகளும் அவரைத் தெரிந்த மாதிரி தலையை ஆட்டி வரவேற்றன.
குழாயடியில் பால்பிள்ளை தண்ணீர் அடித்து பெரிய அண்டாவை நிரப்பினான். அப்பா வேப்பங்குச்சியால் பல் துலக்கிவிட்டு அங்கேயே குளித்தார்.
அன்று காலை பசியாற சுடச் சுட தோசையும், சுவையான கோழிக் குழம்பும் அம்மா செய்திருந்தார். பெரியப்பா எசேக்கியேல், சித்தப்பா மோசஸ் வில்லியம், செல்லக்கண்ணு மாமா ஆகியோர் அப்பாவுடன் பசியாறினர். அப்பா ருசித்துச் சாப்பிட்டார். நான் அண்ணன் அருகில் அமர்ந்து பசியாறினேன்.
அப்பா திண்ணையில் படுத்து தூங்கினார். பிரயாணக் களைப்பாக இருக்கலாம்.இந்தத் திண்ணை அப்பாவுக்கு பழக்கமானதுதான்.இங்கு படுத்தபோது அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்திருக்கலாம். தாத்தா அப்போது மலாயாவிலிருந்து திரும்பிவிட்டார். கிழக்கு வெளி நிலங்களை அவர்தான் சாகுபடி செய்தார். அப்பா சீர்காழியில் லுத்தரன் போர்டிங்கில் தங்கி உயர்நிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த வேளை. தாத்தா அவரை வயல் வேலைகளுக்கு உதவச் சொல்லியுள்ளார். அது ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரைதான். தற்காலிகமானது. மகன் உயர்நிலைப் பள்ளி படித்து முடித்துவிட்டால் என்ன. சொந்த நிலத்தில்தானே வேலை என்று அவரை அழைத்திருக்கலாம். அப்பாவும் அதை உணர்ந்தவராக வயல்வெளிக்குச் சென்றுள்ளார். ஆனால் ஒரேயொரு குறைதான். விடியலிலேயே எழுந்து காளை மாடுகளை ஒட்டிக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றுவிடவேண்டும் அப்பாவுக்கோ அதுதான் இயலாத காரியம். இதே திண்ணையில் அவர் விடிந்தபின்பும் தூங்குவதையே விரும்பினார். அதனால் வந்தது தொல்லை. தாத்தாவுக்கும் அவருக்கும் அன்றாடம் சண்டை.
இந்தத் திண்ணையில் படுத்து விடிந்த பின்பும் தூங்கியது அப்பா மலாயா செல்ல காரணமாக இருந்துள்ளது. தாத்தாவின் ” தொணதொணப்பு ” அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் பாட்டி வைத்திருந்த உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு கடலூர் சென்றுள்ளார். அங்கு மலாயா செல்லும் கப்பல் துறைமுகத்தில் நின்றுள்ளது. அங்கேயே பயனச் சீட்டு வாங்கிக்கொண்டு கப்பல் ஏறிவிட்டார். அப்போது குளுவாங் அருகில் உள்ள லம்பாக் தோட்டத்தின் தமிழ்ப் பள்ளியில் பெரியப்பாவும் பெரியம்மாவும் ஆசிரியர்களாக இருந்தனர். அங்கு இவரும் ஆசிரியராகச் சேர்ந்துகொண்டார். இதுவே அப்பா மலாயா சென்ற வரலாறு.
அப்பா மலாயா சென்றபோது அண்ணனுக்கு வயது ஆறு.அம்மா நிறைமாத கர்ப்பிணி. அவர் சென்றபின்புதான் நான் பிறந்தேன். நான் பிறந்தபின்பு என்னைக் காண வரவில்லை. எனக்கு எட்டு வயதுவரை அவர் என்னைப் பார்க்க வரவில்லை. அதன்பின்பு நான் அம்மாவுடன் சிங்கப்பூர் சென்றபோதுதான் என்னை முதன்முதலாகப் பார்த்தார். அப்போதான் அவர் எப்படி இருப்பார் என்பதும் எனக்குத் தெரிந்தது. பின்பு அண்ணனுக்கு திருமணம் செய்துவைக்கத்தான் அவர் ஊர் சென்றார். ஆறு வயதில் விட்டுச் சென்ற மூத்த மகனை இருபத்து எட்டு வயதில்தான் மீண்டும் பார்க்கிறார்.அப்பாவுக்கு என்னைத்தவிர வேறு பிள்ளைகளை வளர்த்த அனுபவம் இல்லை. என்னையும் குழந்தைப் பருவத்தில் தூக்கி வளர்த்த அனுபவம் இல்லை. நான் அவருடன் கழித்த பத்து வருடங்களும் துன்பம் நிறைந்ததாகவே கழிந்தது.
நான் பள்ளிப் பருவத்திலேயே லதாவைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அதற்கு அவர்தான் காரணம் என்றாலும் அது அவரை ஆவேசப்படுத்திவிட்டது.அதனால்தான் அவருடன் சேர்ந்து வாழ்ந்த காலங்கள் கடுமையானதாக இருந்தன.மகன் மீது உள்ள பாசம் கொஞ்சமும் அவரிடம் இல்லை. கடைசிவரை என்னிடம் கோபமாகவே இருந்துள்ளார்.
இப்போது ஊர் திரும்பிவிட்டார். நானும் மருத்துவம் படித்து முடித்துவிட்டேன்.இனிமேல் அவர் என்னிடம் எப்படி இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் கூற இயலும். இனி எங்களுக்குள் பிரச்னைகள் எழும் வாய்ப்பில்லை.
நான் கொஞ்ச நாட்கள் ஊரில் ஓய்வெடுத்துக்கொண்டு வேலையில் சேரும் முயற்சியில் இறங்கவேண்டும். இங்கேயே இருந்தால் நேரம் வீணாகும்.
நான் திருச்சபை மருத்துவமனையில் வேலையில் சேரலாம் என்பதை அண்ணனிடம் சொன்னேன். அவரும் சரியென்றார். நேராக திருச்சி சென்று தரங்கைவாசத்தில் பேராயரைப் பார்க்கலாம் என்றார். ஒரு வாரம் கழித்து அண்ணியையும் சில்வியாவையும் அழைத்துக்கொண்டு திருச்சி செல்லலாம் என்றார்.
தெம்மூரில் நாங்கள் முழு குடும்பமாக முதன்முதலாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா எங்கள் அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டுவந்திருந்தார். வீட்டுக்கு ஒரு ” பெட்ரோமேக்ஸ் ” விளக்கு கொண்டுவந்திருந்தார். அது மிகவும் பிரகாசமாக வீட்டு வாசலிலும் தெருவிலும்கூட ஒளி பரப்பியது. கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை. அதோடு வீட்டுக்குத் தேவையான சுத்தியல், ரம்பம், கோடாலி போன்றவற்றையும் கொண்டுவந்திருந்தார்.
அம்மாவுக்கு பெருமை தாங்கவில்லை. அப்பாவைப் பார்க்காமலேயே பத்து வருடங்கள் கழித்துவிட்டார். நல்ல மருமகளாக தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்து காலத்தைக் கடத்திவிட்டார். அவருக்கு அப்பா வந்துவிட்ட பெருமிதம் ஒருபுறம். நான்கு பிள்ளைகளும் ஒன்றாக இருப்பது மறுபுறம். சமையல் தடபுடலாக நடந்தது. முன்பே கோழிகள் நிறைய வளர்ந்துகொண்டிருந்தன. தினமும் கோழிக் குழம்புதான். .அந்த ஒரு வாரமும் மீன், முட்டை, இறால், நண்டு என்று மாறிமாறி விருந்துதான். தொடர்ந்து கடையிலேயே சாப்பிட்டுவந்த அப்பாவுக்கு வீட்டுச் சாப்பாடு திக்குமுக்காட வைத்தது. விரும்பியதையெல்லாம் ருசித்துச் சாப்பிட்டார். எவையெல்லாம் வேண்டுமோ அதைச் செய்யச் சொல்லி உண்டு மகிழ்ந்தார். அவர் நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் மாத்திரைகள் சாப்பிடுவதை ஒழுங்காகக் கடைப்பிடித்தார். அனால் உணவு உட்கொள்வதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அளவில் குறைவாகச் சாப்பிடச் சொல்ல யாருக்கும் துணிவு வரவில்லை. அதனால் அவர் விருப்பம்போலவே நிறையவே சாப்பிட்டார். அனால் வியக்கும்வகையில் அவர் ஊர் திரும்பியதும் அவருக்கு இனிப்பின் அளவும் குறைந்துவிட்டது.அதுதான் ஆச்சரியம்.
அண்ணன் அண்ணியுடன் நான் திருச்சி சென்றேன். பேராயர் டீல் ஊழிய ஓய்வு பெறும் நேரம் அது. நல்ல வேளையாக அவரைச் சந்தித்து நேரில் நன்றி சொன்னோம். நான் வெற்றிகரமாக மருத்துவம் படித்து முடித்தது குறித்து அவர் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அதோடு நான் திருச்சபை மருத்துவமனையில் பணியாற்ற வந்துள்ளது அவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தந்தது. மருத்துவச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவை போன்றது என்றார். உடன் திருச்சபையின் செயலர் டாக்டர் பிச்சை ராபர்ட் என்பவருடன் தொடர்பு கொண்டார். அவர் உடன் என்னை கோயம்புத்தூரில் உள்ள மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனையில் சேர்ந்துகொள்ளச் சொன்னார். அது கேட்டு நான் அகமகிழ்ந்தேன். பேராயருக்கு நன்றி சொன்னேன். அவர் எனக்காகவும் என்னுடைய மருத்துவப் பணி சிறப்பாக அமையவும் ஜெபம் செய்தார். இதைப் பெரிய அசீர்வாதமாக நான் கருதினேன். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர் தம்முடைய தாய் நாடான சுவீடன் திரும்பிவிடுவார்.
எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இனி நான் உடன் வேலையில் சேர்ந்துகொள்ளலாம். அண்ணன் அண்ணிக்கு அது மிகுந்த மகிழ்ச்சி. அப்பாவுக்குத் தெரிந்தால் நிச்சயம் மகிழ்வார்.
அண்ணனும் அண்ணியும் திருச்சியில் தங்கிவிட்டு தரங்கம்பாடி செல்வார்கள். நான் சிதம்பரம் செல்ல தொடர்வண்டியில் புறப்பட்டேன்.
நடந்தவற்றை அப்பாவிடம் கூறினேன். அவர் ஒரு வாரம் ஊரில் இருந்துவிட்டு கோயம்புத்தூர் புறப்படச் சொன்னார். நான் அவருடன் இருப்பது அவருக்குப் பிடித்திருந்தது. உடன் வேலைக்குப் பிரிந்து செல்வது அவருக்கு ஏமாற்றம் தந்திருக்கலாம். நான் துணிமணிகளை அடுக்கிக்கொண்டு ” ஹோல்டால் ” தயார் செய்தேன். வேலூரிலிருந்து கொண்டுவந்த என்னுடைய பொருட்கள் அப்படியே இருந்தன. பிரயாணத்துக்கு புதிதாக ஏதும் தேவையில்லை. அம்மாதான் எனக்குப் பிடித்த அதிரசம், முறுக்கு போன்றவற்றை தயார் செய்துகொண்டிருந்தார். அப்பாவுக்கும் அவை பிடிக்கும் என்பது அம்மாவுக்குத் தெரியும்.
அப்பாவைப் பார்த்துச் செல்ல உறவினர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களையெல்லாம் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பலரை நான் இதற்குமுன் பார்த்ததில்லை. அப்போதுதான் அவர்கள் யார் என்பது தெரிந்தது.
நான் திருவள்ளுவர் பேருந்து மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டேன். பால்பிள்ளைதான் வழியனுப்ப வந்தான்.அது இரவு நேர பயணம். மறுநாள் விடியலில் கோயம்புத்தூர் அடைந்தேன்.அதுதான் கோயம்புத்தூருக்கு நான் சென்ற முதல் பயணம்.
வாடகை ஊர்தி மூலம் மோசஸ் ஞானாபரணம் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு ஆல்பர்ட் என்னும் ஊர்தி ஓட்டுநர் என்னை நான் தங்கவேண்டிய அறைக்கு அழைத்துச் சென்றார். அது மருத்துவமனைக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்தது. தற்காலிகமாக அங்கே தங்கவைத்துள்ளனர் என்றார். டாக்டர் பிச்சை ராபர்ட்டை பத்து மணிக்கு அவருடைய அறையில் சந்திக்கலாம் என்றார். நான் குளித்துவிட்டு புத்தாடைகள் உடுத்திக்கொண்டு மருத்துவமனைக்கு வெளியில் சென்று பார்த்தேன். அது பிரதான வீதியில் அமைந்திருந்தது. அங்கே உணவகங்கள் இருந்தன. காலைச் சிற்றுண்டியை அங்கே உட்கொண்டேன்
மருத்துவமனைக்கு மீண்டும் திரும்பினேன். அது இரண்டு மாடி கட்டிடம். நுழைவாயிலில் வெளிநோயாளிகள் பிரிவு இருந்தது. நோயாளிகள் வந்துகொண்டிருந்தனர். அப்போதே சுமார் இருபது பேர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வயதானோர். அநேகமாக கண்ணில் புரை காரணமாக பார்வை குறைந்தவர்களாக இருப்பார்கள். நான் நான்காம் வருடத்தில் ஓராண்டு கண் மருத்துவம் பயின்றுள்ளேன். அப்போது நான் இப்படி ஒரு கண் மருத்துவமனையில் பணி புரிவேன் என்று எண்ணிப்பார்த்ததில்லை.
கண் சிகிச்சை அளிக்கும் அறை பெரிதாக இருந்தது. அங்கு நான்கு மருத்துவர்கள் அமரலாம். கண் அறுவை மருத்துவக்கூடம் தனியாக வேறு இடத்தில் இருந்தது. வெளிப்புறத்தில் வரிசையாக தனித்தனி அறைகள் இருந்தன. அங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவார்கள். அவை தவிர பெரிய வார்டும் இருந்தது. அங்கு வரிசையான கட்டில்களில் நோயாளிகள் படுத்திருந்தனர். அநேகமாக அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கும். மருத்துவமனையின் மாடியில் அலுவலகமும், விருந்தினருக்கு தங்க அறைகளும், பொதுவான ஓர் அரங்கமும் அமைந்திருந்தன.
நான் பத்து மணிக்கு தலைமை மருத்துவர் அறைக்குள் நுழைந்தேன். கருத்த உருவில் பழுத்த வயதுடையராகக் காணப்பட்டார் டாக்டர் பிச்சை ராபர்ட். இவர் எம்.பி.பி.எஸ். மருத்துவர் அல்ல. எல்.ஏம்.பி. என்ற அந்தக் கால மருத்துவர். கண் சிகிச்சையில் பயிற்சி பெற்றவர். இவர் இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்ததோடு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் செயலருமாவார். அது மிகவும் பெரிய பொறுப்பாகும். காரணம் லுத்தரன் திருச்சபை தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட்ங்களிலும் இயங்கியது. ( பின்னாட்களில் அண்ணனும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
லுத்தரன் திருச்சபையில் மொத்தம் மூன்று மருத்துவமனைகள் உள்ளன. இராமநாதபுரம் மாவட்ட திருப்புத்தூரில் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை உள்ளது. அது பொது மருத்துவமனை. திருச்சியில் டாக்டர் ஜோசப் கண் மருத்துவமனை உள்ளது. கோயம்புத்தூரில் மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை உள்ளது. இந்த மூன்று மருத்துவமனைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு திருச்சபையின் மருத்துவக் கழகத்திடம் உள்ளது. டாக்டர் பிச்சை ராபர்ட்தான் மருத்துவக் கழகத்தின் தலைவர். ஆக திருச்சபையில் இருக்கும் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் இவரிடமே இருந்தன. இவர் சொல்வதுதான் சட்டம் என்ற நிலை! திருச்சபையை வழிநடத்த ஓர் ஆலோசனைச் சங்கம் இருந்தாலும், இவர் ஒரு மருத்துவர் என்பதால் தனிச் செல்வாக்குடன் செயல்படும் வாய்ப்பிருந்தது.
நான் வணக்கம் சொல்லியவாறு அவரிடம் சென்றேன். அவர் கைகுலுக்கி என்னை வரவேற்று அமரச் சொன்னார்.
” வேலூர் மாணவர் ஒருவர் இங்கு வேலைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. கண் மருத்துவத்தில் அனுபவம் உண்டா? ” அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
” நான்காம் ஆண்டில் ஒரு வருடம் பயின்றுள்ளேன். ” நான் பதில் சொன்னேன்.
” நல்லது. இங்கு நீ நிறைய கற்றுக்கொள்ளலாம். உனக்கு இது பிடித்திருந்தால் நீ கண் மருத்துவம் பயின்று கண் மருத்துவ நிபுணராகலாம். நாங்கள் உன்னை வியன்னாவுக்கு அனுப்பி வைக்கவும் முடியும். ஆதலால் வேலையில் கவனமாக இருப்பதோடு அனைத்தையும் கற்றுக்கொள்.” நல்ல அறிவுரைதான் வழங்கினார்.
” மிக்க நன்றி டாக்டர். ” நான் நன்றி சொன்னேன்.
” சரி வா. உன்னை இங்குள்ள டாக்டர்களுக்கு உன்னை அறிமுகம் செய்கிறேன். ” அவர் இருக்கையைவிட்டு எழுந்தார்.
நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகோடைமழைஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *