சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 19 in the series 28 மே 2017

முனைவர் எச்.முகம்மது சலீம்
துணைத் தலைவர்
ஜாமியா அற நிறுவனம்
சிங்கப்பூர்

சிங்கப்பூர் தமிழ் கவிதைகளை உலகக் கவிதைகளுடன் வைத்து வாசிக்கக்கூடிய தரமான கவிதை படைப்புக்களை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் க.து.மு. இக்பால் தனிக்கவனம் பெறுகிறார்.

இக்பாலின் கவிதைகள் இதுவரை எட்டு தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இதய மலர்கள் (1975), அன்னை (சிறுவர்பாடல்கள்) (1984) , முகவரிகள் (1989), வைரக் கற்கள் (சிறுவர் பாடல்கள்) (1995) கனவுகள் வேண்டும் (2000), காகித வாசம் (2003), வானானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் (2009), இவைதவிர கவிதை பெண் என்னும் தலைப்பில் இக்பாலின் சிறந்த கவிதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தனித்த தொகுப்பாக சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற உதவியுடன் (2016) ஒரு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது

இக்பாலின் கவிதைகளை சொல்வளம், பொருள்வளம், கற்பனை, மொழி ஆளுமை மற்றும் பின்புலம் போன்ற பின்னணிகளில் தனித்துவம் மிக்கவையாகக் காண்கிறோம். மரபிலும், புதுக்கவிதைப் பாணியிலும் காத்திரமான பல கவிதைமணிகள் இவரது எழுத்துப் பண்ணையிலிருந்து அறுவடையாகியுள்ளன. வழக்கமான கவிதை புனைவுப் பாணியிலிருந்து விலகிச் சிந்திக்கும் இக்பாலின் எல்லாக் கவிதைகளிலும் புனைவாற்றல், புத்தாக்கச் செறிவு மற்றும் புதுமைகளை பேசும் போக்கு மேலோங்கி நிற்கப் பார்க்கிறோம் .

எளிமையும் சுயேட்சைத் தன்மையும் தம் வாழ்முறை தனித்தன்மையாகாகக் கொண்டு விளங்கும் இக்பால் தனது கவிதைப்படைப்புகளில் பொய்ம்மைகளைக் கட்டுடைத்து மெய்ம்மைகளின் நிதரிசனப் பாட்டைகளைத் திறந்து வைக்கிறார். இவரது பாடுபொருள் நம்மைச்ச்சுற்றி நடப்பதும் காண்பதும், கேட்பதும் விழைவதுமான கருப் பொருட்களைச் சுற்றியே பின்னப்படுகின்றன . இவரது கவிதைகளும் இவரைப்போலவே பகட்டும் படாடோபமும் இல்லாமல் வெளிப்படையானவை.

கவிதைகளுக்கான இக்பாலின் சொற்றேர்வு இவரது கவிஆளுமையின் உரைகல். சொல்லையும் மொழியையும் அவை சொல்லவரும் உணர்வுகளையும் உண்மையையும் அன்றாட வாழ்விலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களின் தருணங்களிலிருந்தும் நம் சமூகச் சூழலிலிருந்தும் தெளிந்து தேர்ந்தெடுத்து தம் கவிதைகளில் இக்பால் பதிவு செய்கிறார். இவரது மொழி நளினமானது. நாகரிகமானது. இதுவே இக்பாலின் கவிதை மொழியின் தனித்துவம். அறிஞர் கே.பி.எஸ். ஹமீது குறிப்பிடுவது போல இவரது கவிதைகளில் சொல்லும், சொல் நயமும், சொற்களின் வைப்புமுறையும், எதுகையும், மோனையும், சீரும், அசையும் ஓசையும் ஒழுங்கும், கவிதை அனுபவமும் உணர்ச்சிப் பின்னலும் முற்றாகவும் முழுமையாகவும் வந்தமைந்து நிற்கின்றன.

இக்பாலின் கவிதைப்பரப்பு இவரது எண்ண வெளியைப்போல் விரிவானது. ஒரு தீராநதிபோல் இவரது கவியொழுக்கு ஆற்றொழுக்காய் ஆரவாரமின்றி
வாசக மனங்களைத் தொட்டும் தழுவியும் ஓடக்காணலாம் .

வாழ்க்கையில் நம்மைச்சுற்றி நிகழும் சாதாரண நிகழ்வுகளை இக்பால் தன் கவிதைகளில் காட்சிப்படுத்தும் லாவகம் அற்புதமானது. தத்தித் தவழும் குழந்தையைக் காணும் தள்ளாடி நடக்கும் முதியவர் ஒருவரின் எண்ண ஓட்டத்தை எழிலுற கவிதையாக்கி நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.

இன்று தள்ளாடி நடந்து
நாளை தவழப் போகிறவன் நான்
நீயோ
இன்று தவழ்ந்து
நாளை நடக்கப்போகிறவன்
உனக்கு நடைவண்டி
எனக்கு ஊன்றுகோல்
(தாத்தா குழந்தை )

என்னும் கவிதை வரிகள் தவழும் குழந்தையையும் தடுமாறி நடக்கும் தாத்தாவையும் நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது

மாலைப் பண் என்னும் இவரது மற்றொரு கவிதை நமக்கு பரிச்சயமான காட்சி. ஆனால் ஒரு நிலைபேறுடையை மெய்ம்மையின் சாட்சிப் படிமம்:

அரவணைக்கப் போகும் மண்ணை
அடிக்கடிப் பார்த்த்துக்கொள்ளவோ
என் முதுகை வளைத்தாய்

முதுகு வளைய நம் முன்னர் நடந்துபோகும் முதியவரைக் கவிதை நம் கண்முன்னர் காட்சிப் படுத்துகிறது.

இக்பாலின் கவிதைகளில் ஒப்புமையை நுட்பமாகக் கையாளாக் காண்கிறோம்.

பெண்ணையும் கவிதையையும் ஒப்பு நோக்குகிறார்.

பெண்ணைப்போலவே
கவிதைக்கும் நாணமுண்டு
கவிதையும்
எதையும் மறைத்தே பேசுகிறது
முக்காடு போட்டுக்கொண்டே
எதையும் செய்கிறது
(கவிதை பெண்)

பூடகமான இவரின் ஒப்புமை புதுமையானது

அதிசயம் என்றும் கல்லில் எழுப்பப்பட்ட காதல் ஓவியம் என்றும் ஆராதிக்கப்படும் தாஜ்மஹால் குறித்த இக்பாலின் கவிதை தனித்துவமானது. கல்லில் மொழி பெயர்க்கப்பட்ட காதலின் சொல்லென தாஜ்மாஹாலை வருணிக்கிறார்.

ஒரே சொல்லில் வடிக்கப்பட்ட
கவிதை நீ
யமுனையில் நீ
முகம் பார்க்கிறாயோ இல்லையோ
யமுனை உன்னில்
தன்னைப் பார்த்துக்கொள்ளும்
ஏனெனில்
காதல் தண்ணீரைவிடத் தெளிவானது
கலங்கினாலும் தூய்மையாகவே இருப்பது
…….
கல்தான்
காதலுக்குப் பொருத்தமான குறியீடு. (தாஜ்மஹால்)

என்று பதிவு செய்கிறார்.

சிலர்
வாழும்போது கல்லாயிருந்து
மரித்தபின் உயிர்ப்பெற்றுவிடுகிறார்கள்
எனக்கும்
கல்லாயிருக்கவே பிடிக்கிறது

என்பது இவரது கல்லை உயிர்ப்பிக்கும் மற்றொரு கவிதை.

இக்பாலின் கவிதைமொழியில் இருவிதமான அரசியல்களைக் கவனிக்கலாம். ஓன்று அன்றாட வாழ்வனுபவங்கள் குறித்த எண்ண ஓட்டங்களை மனவெளியில் விரித்துவைக்கும் அனுபவக் குறியீட்டு வெளிப்பாடு சார்ந்த நுண்அரசியல். இன்னொன்று புறநிகழ்வுகளின் தாக்கங்களின் எதிர்வினைகளை வெளிப்படுத்தும் பெருவெளி அரசியல். இவரது பாதயாத்திரை, மாலைப் பண், அந்த நாளில், என் கல்லறையிலிருந்து, நரை வெளிச்சம், கல்லெழுத்து, தண்ணீர், நூற் சிக்கல்,
மரம், முகங்கள் கேட்காவிட்டால் என்னும் கவிதைகள் வாழ்வின் அனுபவக் குறிப்புக்களை சொற்சித்திரங்களாய் நம்முன்னர் நேரடியாகவும் பூடகமாகவும் அடுக்கித்தரும் அனுபவக் குறியீட்டு நுண்அரசியல் பதிவுகள் ஆசிரியப்பா, கண்சிமிட்டிச் சொன்னாள் கதை, அதிசய மனிதர் அ. நா., குறள் நாடு, சிங்கப்பூரின் இன்னொரு பெயர், தீக்குச்சி, இரட்டைத்தனம், விண்வாசம் என்பன போன்ற இக்பாலின் கவிதைகள் புறவெளிப்பரப்பின் பெருவெளி அரசியலைப் பேசும் கவிதைகள்.

இக்பாலின் கவிதை வரிகளில் கவித்துவ அழகு இழைந்தோடுவதோடு தனிமனிதர்களிடமும் ஒட்டுமொத்த சமூகத்திலும் நிகழும் பண்பாடு மற்றும் மதீப்பீட்டுச் சறுக்கல்களையும் அவை பகடியாய்ப் பதிவுசெய்கின்ற போக்கினைப் பார்க்க முடிகிறது.

இக்பாலின் கவிதைகள் உபதேச நோக்கம் கொண்டவையல்ல. ஆயினும் அவற்றை ஊன்றிப் படிக்கும்போது நம்மிடமுள்ள குறைநிறைகளை அங்கதச்சுவையோடு சுட்டிக்காட்டி குறைபாடுகளை நாம் உணரவும் நல்லெண்ணங்களையும் நன்னடத்தையையும் நயமாக வலியுறுத்தும் உயர் நோக்கு வரிகளாக இவரது கவிதைகளைப் பார்க்கலாம்.

மென்மையான பேச்சும் செயல்பாடுமே தன் அடையாளமாகக் கொண்ட இக்பாலின் கவிதைகள் உண்மைகளை உரத்துச்சொல்ல எப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுவே இக்பாலின் கவிதைமொழியின் தனித்துவம்.

Series Navigationசீதா கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *