பி.ஆர்.ஹரன்
பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்து, “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் “பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும், தேவையான நடவடிக்கைகளை நவீனமாக மற்றும் விஞ்ஞானப் பூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தி அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறது. ஆயினும், இந்தியா முழுவதற்குமானப் பசுவதைத் தடைச் சட்டம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது.
நவீன மயமாக்கலினால், நமது பாரம்பரிய விவசாய முறைகள் பாதிக்கப்பட்டன, அதன் விளைவாக, விவசாயத்தில் கால்நடைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து போனது. எனவே, அவை உணவுக்காக விற்கப்பட்டன. மாட்டு மாமிசத்தின் ஏற்றுமதியும் அதிகரித்தது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுக்கும் கால்நடைகள் கடத்தப்படுவது பெரிதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, பசுவதைத் தடுப்புக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
ஆயினும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.ஜ.க அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது. இது மோடி ஆதரவாளர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் ஹிந்துக்கள் இருந்தார்கள்.
கால்நடை வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள்-2017.
ஹிந்துக்களின் எதிர்பார்ப்பும், அவர்கள் பிரதமர் மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ல் கூடுதலாகச் சில விதிகளைச் சேர்த்த மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகள் வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள் – 2017-ஐ கடந்த மே மாதம் 26-ம் தேதியன்று, அறிவித்தது. இந்த விதிகளைத் தயார் செய்து, அவற்றுக்கு ஆட்சேபமோ அல்லது ஆலோசனைகளோ மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என்று 16 ஜனவரி 2017 அன்று முதல் அறிவிப்பை வெளியிட்டது மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். கால்நடைகள் நலன் மாநில அரசுகளின் கீழ் வந்தாலும், இந்திய விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India) மத்திய அரசின் வன மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் வருவதால், விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டம் (1960) பிரிவு 38-ல் கூறியுள்ளபடி, இந்தப் புதிய விதிகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. எனவே இந்த விதிகளைச் செயல்படுத்தவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, மூன்று மாதங்கள் கழித்து, தனக்கு வந்த ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்து, மேற்கண்ட அறிவிப்பை மே மாதம் 26 அன்று வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த அறிவிப்பு, பெரும்பான்மையான ஹிந்துக்களாலும், விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆயினும், மத்திய பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதை அரசியலுக்கு உள்ளாக்கி எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவரும் எதிர்கட்சிகள், மாட்டிறைச்சி உண்பதே தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களின் அடிப்படை உரிமையான உணவுத் தேர்விலும், உணவுப் பழக்கத்திலும் மத்திய அரசு தலையிடுவதாகவும், இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும் எதிரானதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் பொய்யானக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து, பல்வேறு விதமான போராட்டங்களில் இறங்கியுள்ளன. அவற்றை அலசுவதற்கு முன்னால் மத்திய அரசு அறிவிப்பில் உள்ள சில முக்கிய விதிகளைப் பார்ப்போம்.
• மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழு (District Animal Market Monitoring Committee) ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி தலைவராகவும், தலைமைக் கால்நடை மருத்துவ அதிகாரி செயலாளராகவும், சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்ட பிராந்திய வனத்துறை அதிகாரி, சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், விலங்குகள் வதைத் தடுப்புச் சங்கத்தின் (SPCA – Society for Prevention of Cruelty to Animals) பிரதினிதி ஒருவர், இந்திய விலங்குகள் நலவாரியத்தினாலும் மாநில அரசாலும் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளின் பிரதினிதிகள் இருவர் ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். குழுவின் கூட்டங்களில் முடிவுகள் எடுப்பதற்கு யாராவது நால்வர் இருந்தால் போதுமானது.
• மேற்கண்ட மாவட்ட அளவிலான குழு, அந்தந்த மாவட்டதிற்குள் தேவைப்படும் இடங்களில் விலங்குகள் சந்தைக் குழுக்கள் (Animal Market Committees) அமைக்கலாம். அக்குழுக்களில் உள்ளூர் (நகர ஆட்சி மன்றம், பஞ்சாயத்து ஆட்சி மன்றம் போன்ற) தலைவர் தலைவராகவும், நகர ஆட்சிமன்ற அல்லது பஞ்சாயத்து ஆட்சி மன்றத் தலைமை அதிகாரி செயலாளராகவும், சட்ட அதிகார எல்லைக்குட்பட்ட தாசில்தார், வனத்துறை அலுவலர், கால்நடை மருத்துவ அலுவலர், காவல்துறை ஆய்வாளர், SPCA பிரதினிதி ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளைச் சேர்ந்த இரு பிரதினிதிகள், ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அக்குழு செயல்படும். குழுவின் கூட்டங்களில் முடிவுகள் எடுப்பதற்கு யாராவது ஐவர் இருந்தால் போதுமானது.
• மேற்கண்ட குழுக்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஏற்கனவே இருக்கும் விலங்குச் சந்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவைகள் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழுவிடம் பதிவு செய்திட வேண்டும். உள்ளூர் விலங்குகள் சந்தைக் குழுக்கள் தங்கள் சட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேவைக்கு ஏற்ப மாவட்ட விலங்குகள் சந்தைக் குழுவிடம் அனுமதி பெற்று விலங்குகள் சந்தைகள் அமைக்கலாம்.
• பக்கத்து மாநில எல்லையிலிருந்து 25 கிலோமீட்டர் எல்லைக்கு உள்ளே தான் விலங்குகள் சந்தைகள் அமைக்கப்பட வேண்டும். அதே போல அடுத்த நாட்டின் எல்லையிலிருந்து (சர்வதேச எல்லை) 50 கிலோமீட்டர் எல்லைக்கு உள்ளே தான் அமைக்கப்பட வேண்டும்.
• விலங்குகள் சந்தைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் (இடம், பரப்பளவு, தொழுவம், மேற்கூரை, காற்றோட்ட முதலியவை), என்ன மாதிரியான வசதிகள் (தண்ணீர், குடிநீர், விளக்கு வெளிச்சம், ஏறி இறங்க சாய்ப்பிடை,, நோயுற்ற விலங்குகளுக்குத் தனியிடம், மருத்துவ வசதி, தீவனங்கள் இடம், வழுக்காத தரைதளம், கழிப்பறைகள், குதிரை வகை விலங்குகள் உருள ஏதுவாக மண்குழிகள், போன்றவை) செய்துதரப்பட வேண்டும், என்பதையெல்லாம், சுத்தம், சுகாதாரம், விலங்குகளின் நலன் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
• விலங்குகள் சந்தைக் குழு மற்றும் மாவட்ட விலங்குகள் சந்தைக் குழு ஆகியவற்றின் பணிகளும் அதிகாரங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
• மாநில வாரியமோ, மாவட்டக் குழுவோ, மாநிலக் கால்நடைத்துறையோ தங்கள் அலுவலகத்து அதிகாரி யாரை வேண்டுமானாலும் விலங்குகள் சந்தைகளைப் பரிசோதனை செய்ய அதிகாரம் அளித்து அனுப்பலாம். அவ்வாறு அதிகாரம் பெற்றுப் பரிசோதனைக்குச் செல்லும் அதிகாரிகள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கவும் அனுமதி உண்டு.
• ஒவ்வொரு விலங்குகள் சந்தையிலும் தேவைக்கு ஏற்ப கால்நடை மருத்துவர்களும், கால்நடைக் கண்காணிப்பாளர்களும், உதவியாளர்களும் இருக்க வேண்டும். இவர்களின் பணிகளும் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
• சூடு வைத்தல், காதுகளை வெட்டுதல், ரசாயனக்கலவைகள் மற்றும் பெயிண்டுகளை கொம்புகளிலோ, உடலின் மற்ற பகுதிகளிலோ பூசுதல், டேப்புகளால் மடிக்காம்புகளைக் கட்டி மூடுதல், விலங்குகளுக்கு அலங்காரங்கள் செய்தல், மூக்கணாங்கயிறு கட்டுதல், நாசிப்பைகள் மாட்டுதல் போன்ற பலவிதமான விலங்குகள் வதைச் செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பறவையினங்களை எடைபோடும் சமயத்தில் மட்டும் தூக்கலாம்.
• கயிற்றினால் கட்டையில் கட்டி வைத்தல், கயிற்றைக் கட்டி இழுத்து வருதல், கழுத்தைப் பிடித்துத் தூக்குதல், கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்குதல், வால்களை முறுக்குதல், கண்களில் மிளகாய் வைத்தல் போன்ற சித்தரவதைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
• சந்தைக்குக் கொண்டு வரப்படும் விலங்குகளுக்குத் தேவையான உணவும் குடிநீரும் கொடுக்க வேண்டியது விலங்குகளை விற்பனைக்குக் கொண்டு வருபவரின் பொறுப்பு.
• கர்ப்பமாக இருக்கின்ற விலங்குகளையும், 6 மாதத்திற்குக் குறைவான வயதுடைய கன்றுகளையும் மற்ற விலங்குகளையும் விற்பனை செய்யக் கூடாது. ஆரோக்கியம் குறைவாகவும், நோய்வாய்ப்பட்டுள்ள விலங்குகளையும் விற்பனைக்கு எடுத்துவரக் கூடாது.
• விலங்குகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் விவசாயிகளாகவும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களாகவும் இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்காக மட்டுமே அவர்கள் விற்கவும் வாங்கவும் முடியும். இறைச்சிக்காகக் கால்நடைகள் விற்கப்படக் கூடாது. வாங்கிச் சென்ற விலங்குகளை இறைச்சிக்காக விற்பதோ, வழிபாட்டுத் தலங்களில் பலி கொடுப்பதோ கூடாது. வாங்கிச் சென்று ஆறு மாதங்களுக்கு முன்பாக விற்கக்கூடாது.
• விற்பவரும் வாங்குபவரும் தாம் விவசாயி என்பதை உறுதி செய்யும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். நிலம் இருப்பவர்கள் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் அதற்கான தங்களுடைய ஆவணங்களையும் அடையாள அட்டைகளையும் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழுவிடம் காண்பிக்க வேண்டும். இறைச்சிக்காக விலங்குகளை வாங்கிச் செல்லவில்லை என்றும், வேளாண்மைக்காகவே வாங்கிச் செல்கிறேன் என்றும் உறுதி மொழிப் பத்திரத்தையும் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். நிலமோ வீடோ இல்லாத சிறு விவசாயிகள் அல்லது பால் வியாபாரிகள் மாவட்ட மேற்பார்வைக் குழுவிடம் சொல்லி வாங்குவோ விற்கவோ ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
மேற்கண்டவை மட்டுமல்லாமல் மேலும் பலவிதமான விதிகளை விதித்துள்ளது மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். இதில் மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விலங்குகள் பட்டியலில் கால்நடைகளுடன், கழுதைகள், கோவேறு போன்ற கழுதை வகைகள், குதிரை வகைகள், ஒட்டகங்கள், பன்றிகள் ஆகியவையும், பறவைப் பண்ணைகள் (Poultry) பட்டியலில், கோழிகள், வான்கோழிகள், வாத்துகள், கினியா கோழிகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
எதிர்கட்சிகள் மற்றும் தேசவிரோத சக்திகளின் அரசியல்
மத்திய அரசின் அறிவிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. மாட்டிறைச்சியை விற்பனை செய்யவோ, மாட்டிறைச்சியை உண்ணவோ தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஏற்கனவெ 1960 முதல் இருந்து வரும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் மேலும் சில விதிகளைச் சேர்த்து, விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும், கால்நடைக் கடத்தல்களை முற்றிலுமாக ஒழிக்கவும், கால்நடைகள் விற்பனையை முறைப்படுத்தவும், வேளாண்மையை முன்னேற்றவும் தான் இந்த அறிவிப்பினைக் கொண்டு வந்துள்ளது. மேலும் மாட்டிறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதும் மத்திய அரசின் நோக்கமே. முறையான உரிமங்கள் இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக ஏராளாமான இறைச்சிக் கூடங்கள் பெருகிவிட்டன. சுத்தம், சுகாதாரம் எதுவுமின்றி, நோய்களின் பிறப்பிடமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒழித்து, முறையான உரிமம் பெற்றுள்ள இறைச்சிக் கூடங்களின் மூலம் இறைச்சி விற்பனையையும் முறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்.
ஆனால், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்தே அதற்கு எதிராகப் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளும் மற்ற தேசவிரோத சக்திகளும். மேலும் தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களிலும், குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில், மாபெரும் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. ஆகவே, தென்னிந்திய மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்கிற அச்சத்தில், மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மேலும், இந்திய இறையாண்மைக்கு விரோதமாக அன்னிய நிதியுதவியுடன் செயலாற்றிக்கொண்டிருந்த அரசு சாரா அமைப்புகள் (Foreign funded NGOs) மீதான கண்காணிப்புகளை அதிகரித்து, அவற்றின் உரிமங்களை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. ஆகவே அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக இந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு அமைப்புகள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராகக் கலவரங்களையும் வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கின்றன. இதை, கருப்புப்பண ஒழிப்புக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் கண்கூடாகப் பார்த்தோம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களில் ஊடுருவிய தேச விரோத சக்திகள் மாணவர்களையும் இளைஞர்களையும் திசை திருப்பி மத்திய அரசுக்கு எதிராகப் போராட வைத்தன. மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டின் மூலம் நாட்டு மாடு வகைகள் பாதுகாக்கப்படும், பசுவதைக் கூடாது, பசுக்களும் காளைகளும் எங்கள் குடும்பங்களில் அங்கத்தினர்கள், ஜல்லிக்கட்டைத் தடை செய்பவர்கள் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதையும் தடை செய்யுங்கள் என்றெல்லாம் அப்போது கோஷம் போட்ட இதே அமைப்புகள், இப்போது மாட்டிறைச்சி விற்பனைக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சியை உண்பதற்கு ஆதரவாகவும் போராடுவது விந்தையிலும் விந்தை. இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், இவர்களின் ஒரே நோக்கம் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், ஹிந்துக்களின் நலனுக்கு எதிராக இயங்குவதும்தான்.
சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுக்காகப் போலி மதச்சார்பின்மைக் கொள்கையுடன் செயலாற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக்கட்சிகள், தமிழ் பிரிவினைவாதக் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் அனைத்தும் அவர்கள் ஆட்சி புரியும் மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஏதோ மாட்டிறைச்சி விற்பனைக்கும், அதை உண்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது போலப் போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த எதிர்ப்புகளில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கால்நடைக்கடத்தலிலும், சட்டத்துக்குப் புறம்பான கால்நடைச் சந்தைகளை நடத்துவதிலும், சட்ட விரோதக் கால்நடை விற்பனை மற்றும் இறைச்சிக் கூடங்கள் நடத்துவதிலும் ஈடுபட்டு வருபவர்களும் அவர்களுக்கு உதவுபவர்களும் தேச விரோத சக்திகளும் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அதனால் தான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் கூடுதல் விதிகளுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
ஆனால் உண்மையில் மத்திய அரசு செய்திருப்பது அனைத்து வகுப்பினராலும், அனைத்து மதத்தவராலும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்த அறிவிப்பைச் சட்டமாக்கி முறையாகச் செயல்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு. அந்த நன்மைகளைப் பார்ப்பதற்கு முன்னால், பொதுவில் உள்ள சில குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.
குற்றச்சாட்டுகளும் விளக்கங்களும்
முதலாவதாக, நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான் கால்நடைகளை விற்கவோ வாங்கவோ முடியும்; சொந்தமாக நிலங்கள் இல்லாத ஏழை விவசாயிகள், சிறிய அளவில் இரண்டு அல்லது மூன்று மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு பால் வியாபாரம் செய்பவர்கள், ஆகியோரெல்லாம் மாடுகளை வாங்கவோ விற்கவோ முடியாது; எனவே இது ஏழை விவசாயிகள் மற்றும் பால்காரர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தைப் பாதித்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவரும், என்கிற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், அறிக்கையில் எவ்விடத்திலும் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. நிலம் வைத்திருப்பவர்களோ அல்லது வீடு வைத்திருப்பவர்களோ அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். எதுவுமே இல்லாதவர்கள், மாவட்ட விலங்குகள் விற்பனைச் சந்தை மேற்பார்வைக் குழுவிடமோ அல்லது கால்நடைத்துறை அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு தாங்கள் பால்வியாபாரம், சிறிய அளவிலான தோட்ட விவசாயம், போன்ற தொழில்களுக்குத்தான் கால்நடைகளைப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்றுக் கால்நடைகளை வாங்கவோ, விற்கவோ செய்யலாம். இறைச்சிக்காக விற்பதும் வாங்குவதும் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மாடுகளை மட்டும்தான் இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மற்ற விலங்குகளை ஏன் கண்டுகொள்ளவில்லை? பறவைகள் பண்ணையைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை, என்றெல்லாம் குற்றம் கூறப்படுகின்றது. அறிக்கையைச் சரியாகப் படிக்காமல் சொல்லும் குற்றச்சாட்டு இது. மாநிலம் விட்டு மாநிலம், இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு, என்று லட்சக்கணக்கில் கடத்தப்படுவது மாடுகள் மட்டும்தான். ஆடுகளும் கோழிகளும் அவ்வாறு கடத்தப்படுவதில்லை. லட்சக்கணக்கான மாடுகள் கடத்தப்பட்டு, இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுவது அவைகளுக்குத் துன்பம் என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் பெரும் வருமான இழப்பு ஆகும். மாடுகள் போல மற்ற கால்நடைகள் கடத்தப்படுவதில்லை. எனவே தான் மாடுகள் கடத்தப்படுவதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றிகள், ஒட்டகம், குதிரைவகைகள், கழுதை போன்ற மற்ற கால்நடைகளும், கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் போன்ற பறவைகளும் கூட மத்திய அரசின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவதாக, அன்னிய சக்திகளுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக வேலை செய்யும் விலங்குகள் நல அமைப்புகளின் சதி; அவ்வமைப்புகள், நமது நாட்டு மாட்டினங்களை அழித்துவிட்டு, ஜெர்ஸி இன மாடுகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக இந்தச் சதிவேலையில் ஈடுபட்டுள்ளன, என்கிற குற்றச்சாட்டு. இது மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு. இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படுமானால், மாடுகள் அழிவிலிருந்து தப்பிக்கும் என்பதே உண்மை. மாடுகள் கடத்தப்படுவதும், காளைக்கன்றுகள் கொல்லப்படுவதும் தடுக்கப்பட்டால், மாடுகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தல் அதிகரிக்கும். வயதுக்கு வந்த இளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும், இனப்பெருக்கத்துக்கும் பயன்படும். உண்மையில் சொல்லப்போனால் இந்தக் குற்றச்சாட்டை வைப்பவர்களால் தான் மாட்டினங்கள் அழியும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, விலங்குகள் நல அமைப்பினர் நாட்டு மாட்டினங்களை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அதே நபர்கள், இப்போது மாடுகளின் நலனுக்காகவும் மாடுகளை அழிவிலிருந்து காப்பதற்காகவும், மாடுகள் சந்தையை முறைப்படுத்துவதற்காகவும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விலங்குகள் அமைப்பின் சதி என்று கூறுவது தான் வேடிக்கை.
மத்திய அரசின் இந்த அறிக்கையின் பின்னணியில் ஒரு வழக்கு இருக்கிறது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி “விலங்குகளுக்கான மக்கள்” (People For Animals) என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் அதிகாரி கௌரி முலேகி என்பவர் 2014-ஆம் ஆண்டு தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் மத்திய அரசு மேற்கண்ட கூடுதல் விதிகளைச் சேர்த்து புதிய விலங்குகள் வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள் – 2017-ஐ அறிவித்துள்ளது. கௌரி முலேகி அவர்கள் ரீடிஃப் இணையதளத்துக்குக் கொடுத்துள்ள பேட்டியைப் படித்தால் தெளிவாகப் புரியும். (http://www.rediff.com/news/interview/the-woman-behind-the-new-cattle-sale-law/20170601.htm )
மற்றபடி எதிர்வினையாளர்கள் மாட்டிறைச்சிக்குத் தடை என்று தேவையில்லாமல் போராட்டங்களில் ஈடுபடுவது வெறும் அரசியல் நாடகமே. பாஜகவிற்கு எதிராகச் செய்யும் வெற்று அரசியல்தான். இவ்விஷயத்தில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் தெளிவாக இருக்கிறது. அந்தத் தீர்ப்பில் “மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கவில்லை. மாடுகள் விற்பனையை ஒழுங்குபடுத்தியிருக்கிறது. அவ்வளவுதான். அறிவிப்பைப் படித்தால் தெளிவாக இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த நான்கு வாரத் தடை தேவையற்றது” என்று கூறியுள்ளது. (http://indianexpress.com/article/india/no-ban-on-cow-slaughter-or-beef-says-kerala-high-court-4683222/ )
நன்மைகள்
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய கூடுதல் விதிகளை முறையாகச் செயல்படுத்தினால், அதற்கு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பல நன்மைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவை என்னவென்று பார்ப்போம்.
• மாநிலம் விட்டு மாநிலம், மற்றும் இந்தியாவிலிருந்து வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கால்நடைகள் கடத்தப்படுவது வெகுவாகக் குறைக்கப்படும். தமிழகம், ஆந்திரம், ஒடிஷா, மஹாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குக் கடத்தப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 21,60,000 என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதே போல மற்ற வட மாநிலங்களிலிருந்து, மேற்கு வங்கத்துக்கும், வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றது. முறையற்ற சட்டத்திற்குப் புறம்பான விலங்குச் சந்தைகளில் நடக்கும் விற்பனையும், போக்குவரத்து விதிகளைச் செயல்படுத்தாததும் தான் இந்த அளவுக்குக் கால்நடைகள் கடத்தப்படுவதற்குக் காரணங்கள். எனவே, மாநிலங்கள் மற்றும் இந்திய எல்லைப்புறங்களைக் கண்டிப்புடன் கண்காணித்துக் குற்றவாளிகளுக்கு முறையாகத் தண்டனையும் அளித்தால், கடத்தலை முழுமையாகவே தடுத்து நிறுத்த முடியும்.
• கால்நடைகளின் நலன் காக்கப்படும். அவை துன்பத்துக்கும், சித்தரவதைக்கும் உள்ளாக்கப்படுவது பெரிதும் குறையும். கன்றுகளும், கர்ப்பிணிக் கால்நடைகளும், வயதான கால்நடைகளும் காப்பாற்றப்படும்.
• அழிந்து வரும் நாட்டு மாட்டினங்கள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் கூடும். காளை மாடுகள் மற்றும் பெட்டை மாடுகளின் விகிதாச்சாரமும் கூடும். வேகமாக அழிந்துவரும் ஒட்டக இனம் பாதுகாக்கப்பட்டு அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
• இறைச்சிக்காகக் கால்நடைகள் (ஒட்டகம் உட்பட) கடத்தப்படுவதும் குறையும். இறைச்சி உண்போர்களுக்குச் சுத்தமான கலப்படமற்ற இறைச்சி கிடைக்கும். மேலும், இறைச்சிக் கூடங்களில் சுகாதாரம் பேணப்படுவது அதிகரிக்கும்.
• விவசாயத்திற்காகக் கால்நடைகளைப் பயன்படுத்தும் பண்பாடு மீண்டும் தழைக்கும். வேளாண்மை ஏற்றம் பெறும். கால்நடைகளைப் பயன்படுத்தும் ஏழை விவசாயிகள் தங்களுடைய சிறு நிலங்களில் இயற்கை வேளாண்மை முறைகளைச் செயல்படுத்திப் பயன்பெறும் வாய்ப்புகள் கூடும்.
• மாட்டுச் சாணம், கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து, இயற்கை உரங்கள், இயற்கை எரிவாயு (Bio-Gas) போன்றவற்றின் தயாரிப்புகள் அதிகரித்து, ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து, மண்ணின் வளம் காக்கப்படும்.
• விலங்குகள் சந்தைகள் முறைப்படுத்தப்படுவதால், மாட்டுத் தீவனங்களின் தேவைகள் அதிகரிக்கும். இதனால் மாட்டுத்தீவனங்கள் பயிரிடுவதும் அதிகரிக்கும்.
• விலங்குகள் சந்தைகளும் கால்நடை விற்பனைகளும் முறைப்படுத்தப்படுவதாலும், கால்நடை மருத்துவர்களின் தேவைகள் அதிகரிப்பதாலும், இயற்கை வேளாண்மை முறைகளில் முன்னேற்றம் ஏற்படுவதாலும், வேலைவாய்ப்புகள் பெருகும்.
மேலும் சில கடமைகள்
மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த வருடங்களில் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளே ஒழுங்ககாக முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே நமது அனுபவம். ஆகவே மீண்டும் கூடுதலான விதிமுறைகளைக் கொண்டுவருவதால் மட்டும் கால்நடைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
அரசின் சார்பாக கால்நடைகள் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட வேண்டும். தனியார்கள் நடத்தி வரும் கோசாலைகளுக்குத் தேவையான மானியங்கள், உதவிகளை அரசு வழங்கி உதவ வேண்டும். மாட்டுத் தீவனங்களும் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும்.
அரசின் மானியங்களும் உதவிகளும், மேலும் தனியார் கோசாலைகள் தொடங்குவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும்.
காளைகளின் விவசாயப் பயன் குறைந்து போயிருப்பதால்தான் காளைக்கன்றுகள் இறைச்சி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அதே போலத்தான் பால்வற்றிய வயதான பசுக்களும். இவற்றினால் விவசாயிகள் கஷ்டமும் நஷ்டமும் படும் நிலையை மாற்றுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசு கோசாலைகளில் பராமரித்தல், காப்பீடு வழங்குதல் போன்ற சிலவற்றை நடைமுறைப்படுத்தலாம்.
இயற்கை வேளாண்மை முறைகளில் (இயற்கை உரம், இயற்கை எரிவாயு, கோமியம், பஞ்சகவ்யம், போன்ற தயாரிப்புகள்) அரசு தனிக்கவனம் செலுத்தி அவற்றின் பயன்களை விவசாயிகளிடம் கொண்டு சென்று, அவற்றைப்பெரிதும் ஊக்குவிக்க வேண்டும்.
பசுவைத் தெய்வமாகப் போற்றும் கலாச்சாரத்தையும், ஜீவகாருண்யத்தையும் பாரம்பரியமாகக் கொண்ட தர்மம் மிகுந்த இந்த தேசம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கின்றது என்பது ஒரு தேசிய அவமானம். தற்போது எதிர்கட்சிகளும் தேச விரோத சக்திகளும் தாங்கள் ஈடுபடும் மாட்டிறைச்சி அரசியல் மூலம் அந்த அவமானத்துடன் அசிங்கத்தையும் சேர்க்கின்றன. இந்த அசிங்கத்தை அழித்து அவமானத்தையும் துடைக்க வேண்டிய முக்கிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த அவமானம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டுமென்றால். அரசின் இறைச்சிக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அதற்குத் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கூடுதல் விதிகள் செயல்படுத்தப்படுவதில் வேகம் காட்டப்பட வேண்டும்.
தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை இறைச்சிக் கொள்கை மாற்றத்துக்கு அடிகோலும் என்றும் அதை நோக்கியே மத்திய அரசு செல்லும் என்றும் பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதை மத்திய அரசு நிறைவேற்றினால், நாட்டில் மீண்டும் தர்மம் தழைக்கும். நாம் தர்மம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்!
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.
- புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- தொடுவானம் 172. புது இல்லம்
- கவிதைகள்
- நினைவில் உதிர்தல்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15
- திருகுவளையில் உதித்த சூரியன்
- மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்