தொடுவானம் 175. நண்பர்கள் கூடினால் ….

This entry is part 6 of 13 in the series 25 ஜூன் 2017

ஜோகூர் பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விரைவு பேருந்தில் ஏறினேன். அது முக்கால் மணி நேர பிரயாணத்தில் சிங்கப்பூர் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தது. அங்கு கோவிந்தசாமி காத்திருந்தான்.

அவன் முன்புபோலவே ஒல்லியாக இருந்தான். தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. அவன் ஹெண்டர்சன் மலையில் நகரசபை குடியிருப்பில் ப்ளோக் பதின்மூன்றில்  இருந்ததுபோலவே இருந்தான்.அப்போது நான் ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் அரங்கேற்றியபோது அவனுக்கு முதலில் டாக்டர் வேடம் தந்தேன். பின்பு அவனுடைய உருவம் பொருத்தமில்லை என்பதால் அதை மாற்றி சார்லசுக்கு தந்தேன்.அதனால் அவனுக்கு பெரும் அவமானமாகக் கருதினான். பல வருடங்கள் ஆனபின்பும் அதை மறக்காமல் பன்னீர்செல்வனிடம் கூறியுள்ளான்.நான் பாத்திரத் தேர்வு சிறப்பாக அமையவேண்டும் என்றுதான் அப்படிச் செய்தேன். ஒரு டாக்டர் பாத்திரத்தில் நடிப்பவன் நோஞ்சானாக இருந்தால் இரசிகர்கள் சிரிப்பார்களே.. இது அவனுக்கு அப்போது புரியவில்லை. அதை அவன் வேறு விதமாக எடுத்துக்கொண்டான். அதற்குக் காரணம் சார்லஸ் என்னுடைய உறவினன் என்பதாகும்.

என்னைப் பார்த்த அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவ்வளவு ஆனந்தம். சிறு வயதில் என்னுடன் வளர்ந்தவன் அல்லவா? ஒன்றாக ஆரம்பப்பள்ளி சென்றுள்ளோம். நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடியதில்லை. ஆனால் அந்த வயதிலேயே பாடங்கள்  ,இலக்கியம், தமிழக அரசியல் பற்றியே பேசுவோம். இரவில் சில நாட்களில் பத்து காசுக்கு திறந்தவெளி கொட்டகையில் படம் பார்க்கச் செல்வோம்.  அவன் சிவாஜி ரசிகன்.நான் எம்.ஜி.ஆர். ரசிகன்.

அவன் பால்ய வயதிலேயே தாயை இழந்தவன். அவனுடைய தந்தை திரு. நாராயணசாமியுடன்தான் வளர்ந்தான். அவர் நகரசபையில் சாதாரண வேளையில்தான் இருந்தார். அவனுக்கு அழகம்மாள் என்னும் ஒரே அக்காள்தான். அவரையும் தமிழகத்தில் உள்ள உறவினருக்கு மணமுடித்துவிட்டனர். அவர் கணவருடன் மெட்ராசில் வாழ்கிறார். சொற்ப வருமானத்தில்தான் அவர் கோவிந்தசாமியை .படிக்க வைக்கிறார். அவன் என்னுடன்தான் அலெஸ்சாண்டிரா எஸ்டேட் பிரைமரி பள்ளியில் பயின்றுகொண்டிருந்தான்.அவன் நான்காம் வகுப்பில் இருந்தபோது திடீரென்று அவனை தமிழகத்துக்கு அனுப்பிவிட்டார். அது  பெரும்  அதிர்ச்சியாகும். அங்கு அவன் அக்காள் வீட்டில் இருந்துகொண்டு தமிழ்ப் பள்ளியில் சேர்ந்துள்ளான்.சில வருடங்கள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் திரும்பினான். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தான். அப்போது நான் ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தேன். நான் சீனியர் கேம்பிரிஜ் தேர்ச்சி பெற்றபின் மருத்துவம் பயில தமிழகம் சென்றுவிட்டேன். அவன் உயர்நிலைக் கல்வி முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்று ஆங்கிலப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறான். என்னுடைய வருகையால் பிரிந்துபோன எங்கள் நாட்களை இனிமேல் பகிர்ந்துகொள்ளலாம் என்று இருவருமே மகிழ்ந்தோம்.

பேருந்தில் செல்லும்போது, ” அப்பா சுகமா? ” என்று வினவினேன். அது கேட்டு அவன் முகம் வாடியது.

” உனக்குத் தெரியாதா? அப்பா காலமாகிவிட்டார். ” அது கேட்டு நான் அதிர்ச்சியுற்றேன்  எனக்கு அவர் மிகவும் பழக்கம். என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்துபவர்.

” எப்படி? எப்போது? ” நான் சோகத்துடன் அவனைக் கேட்டேன்.

” மூன்று வருடங்களாகிறது. மாரடைப்பு. “

” மிகவும் வருத்தமாக உள்ளது. இப்போது நீ எங்கே உள்ளாய்? சித்தப்பா  வீட்டிலா? ”  அவருடைய தம்பி குடும்பத்துடன் சிங்கப்பூரில்தான் உள்ளார். எப்போதாவது அவரைப் பார்ப்பேன்.மிகவும் சாதுவானவர். சில நாட்களில் அவர் அடுக்குச் சட்டியில் உணவு கொண்டுவருவார். மற்ற நாட்களில் கடையில் சாப்பிடுவார்கள்.

” நான் இப்போது ப்ளோக் பதின்மூன்றில் இல்லை. தனியாக வீடு வாங்கியுள்ளேன் . “

” எந்த பகுதியில்? “

” ஸ்டெர்லிங் ரோட்டில். ” அது எங்கே உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. நான்தான் தமிழகத்தில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு  .வந்துள்ளேனே. சிங்கப்பூர் எனக்கு அடையாளம் தெரியாத அளவில் மாறியிருந்தது. ஒரு பகுதியை நாங்கள் கடந்தபோது , ” இந்த இடம் உனக்கு தெரிகிறதா? ” என்று புதிர் போட்டான்.

” தெரியலையே? ” நான் பதில் சொன்னேன்.

” இதுதான் நாம் குடியிருந்த ஹெண்டர்சன் மலை. ” அங்கு மலையைக் காணவில்லை.

” மலையைக் காணவில்லையே? ” நான் வியந்துபோய் அவனை நோக்கினேன்.

” அதுதான் சிங்கப்பூர். மலையையே தரைமட்டமாக்கிவிட்ட்னர். “

” அங்கிருந்த நகரசபை குடியிருப்புகள்? “

” அவை இனி .தேவையில்லாமல்  போனது. அனைவருக்கும் அடுக்கு மாடி வீடுகள் தரப்பட்டுள்ளன. “

” அப்போது லதா? “நான் பரபரப்புடன் கேட்டேன்.

” அவர்கள் எந்தப் பகுதியில் எந்த அடுக்குமாடியில் உள்ளார்களோ தெரியவில்லை. நான் லதாவைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. ” நான் மேலும் அதிர்ச்சியுற்றேன். முகவரி தெரியாமல் நான் அவளை எப்படி கண்டுபிடிப்பது.

” நீ இன்னும் லதாவை மறக்கலையா? கடிதத் தொடர்பு உள்ளதா? “

” மறக்கவில்லை. ஆனால் தொடர்பும் இல்லை.” நான் உண்மையைச் சொன்னேன்.

” சரி கவலையை விடு. நீ லதாவால் உன் அப்பாவிடம் பட்ட பாடுகளை நானே இன்னும் மறக்கவில்லை. உன்னால் மட்டும் எப்படி மறக்கமுடியும் ? இப்போதும் ஒரு வழி உள்ளது. நீ லதாவைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று விரும்பினால் முன்பு நீ செல்வாயே வேலை இடம்? அங்கு சென்று முயன்று பார்க்கலாம். ஒரு வேளை லதா அங்கேயே வேலையில் இருந்தால் பார்த்துவிடலாம்.” நல்ல அறிவுரை வழங்கினான். முன்பு லதாவுக்கு கடிதங்கள் கொண்டு சென்றவனல்லவா?அவளை இவனாலும் எளிதில் மறந்துபோக வாய்ப்பில்லைதான்.

பேருந்து அலெக்ஸ்சாண்டிரா வீதியின் வழியாக குயீன்ஸ்வே பகுதியில் நுழைந்து சென்றது. அங்கு முனீஸ்வரர் கோவில் இருந்தது. அதைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் அவன்  குடியிருந்த அடுக்குமாடி இருந்தது. மின்தூக்கி மூலம் ஏழாவது மாடிக்குச் சென்றோம்.

          வீடு தாராளமாக இருந்தது. ஒரு பெரிய கூடமும் இரண்டு படுக்கை அறைகளும் இருந்தன.சமையல் அறையும் குளிக்கும் அறையும் பின்பகுதியில் தனியாக இருந்தன. அவன் மட்டும் தனியாக இருந்தான். நான் ஒரு படுக்கை அறையில் தங்கினேன். ஹெண்டர்சன் மலையில் அவன் ஒரு அறை மட்டுமே இருந்த நகரசபை குடியிருப்பில் இருந்தவன். நானோ மரப்பலகை சுவர்களும் தகர கூரையும் கொண்ட கம்பத்து வீட்டில் தங்கியிருந்தவன். அந்த அடுக்குமாடி வீடு எவ்வளவோ சொகுசானது.
          அவனுடைய மேசையைப் பார்த்தேன். அதில் ஏராளமான கோப்புகளும் வெள்ளைத் தாள்களும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில தாள்களில் நிறைய எழுதியிருந்தான். அவனுடைய தமிழ் கையெழுத்து அழகாக இருக்காது. கிறுக்கியதுபோன்று இருக்கும். சிலவற்றைப் புரட்டிப் பார்த்தேன். அது நாடகம்.
          ” நாடகம் எழுதுகிறாயா? ” அவனிடம் கேட்டேன்.
          ” ஆமாம். சிங்கப்பூர் வானொலிக்கு தொடர்ந்து நாடகங்கள் எழுதிவருகிறேன். இங்கு அவை பிரபலமாகிவிட்டன. ” அவன் கூறினான்.
          ” தொடர்ந்து எழுதுவதென்றால் எதைப்பற்றி  எழுதுகிறாய்? தொடர் நாடகமா? ” நான் வினவினேன்.
          ” இல்லை. இவை உண்மைக் கதைகள். இங்கு குற்றம் புரியும் இளையோருக்கு மறுவாழ்வு இல்லம் உள்ளது. “
          ” பாய்ஸ் டவுன்தானே? “
          ” ஆமாம். அங்கு நான் சென்று அங்குள்ளவர்களிடம் நேர்க்காணல் செய்து அதை வைத்து நாடகமாக எழுதுகிறேன். இவை சிறப்பான சமுதாய நோக்கு உள்ளதால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. “
          ” உண்மைதான். இது மிகவும் பயனுள்ள சேவை. அதோடு உன் எழுத்துக்கும் சிறப்பு கூடும். இவற்றை எழுத கருவுக்கும் பஞ்சமில்லை. இது நல்ல முயற்சி. தொடர்ந்து எழுது. ” நான் அவனுக்கு ஊக்கம் தந்தேன்.
          ” உனக்குத் தெரியுமா. நீ தமிழகம் சென்றபின்பு நான் இங்கே நிறைய எழுதிவருகிறேன். நீ அங்கிருந்து எழுதிய உன் சிறுகதைகளையும் படித்துள்ளேன். நீயும் விடாமல் எழுது. ” அவன் பதிலுக்கு என்னை ஊக்குவித்தான்.
          உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னைப் பார்த்துதான் அவன் எழுத ஆரம்பித்தான். அது தமிழ் முரசில் ” உங்கள் எழுத்து ” என்னும் பகுதி. அதில்தான் நான் முதல்முதலாக சிறு சிறு கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அதன்பின்புதான் சிறுகதைகள் எழுதினேன். நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்த அந்த பருவத்தில் அவனும் எழுதத் தொடங்கினான். அப்போதெல்லாம் அவன் அகிலன், மு. வ. நாவல்களை விரும்பிப் படிப்பான். இப்போது நாடகங்கள் மூலம் சிங்கப்பூரில் ஒரு எழுத்தாளனாக உருவாகிவருவது எனக்கு பெருமையாக இருந்தது.
          அப்போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அவன் கதவைத் திறந்தான். அங்கே பன்னீர்செல்வன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய  தோளில் ஒரு பையும்  கையில் சில நூல்களும் இருந்தன. அவனைக் கண்டது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.  அவன் வருவான் என்பதை கோவிந்தசாமி என்னிடம் சொல்லவில்லை. எனக்கு இத்தகைய இன்ப அதிர்ச்சி தர அவன் எண்ணியிருந்தான் போலும். நானும் அன்றே பன்னீர்செல்வனைக் காண்பேன்  என்று எண்ணவில்லை. உள்ளே வந்தவன்  ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தான். இருவரும் அணைத்துக்கொண்டோம்.
          பன்னீர்செல்வனும் மாறாமல் அப்படியே இருந்தான். அவன் அப்போது சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் ( Political Science ) பயின்றுகொண்டிருந்தான். அப்போதே அவனுக்கு எந்த ஒரு பொருள் என்றாலும் விமர்சனம் செய்யாமல் இருக்கமாட்டான். அவனுடன் நாங்கள் பேசும்போது விவாதம் போன்றே மாறிவிடும்! நாங்கள் மூவரும் கூடிவிட்டோம் அல்லவா? இனி எங்கள் இரவு நீளும்!
          ” கோவிந்த். கீழே போய் சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா? ” அவன் கோவிந்தசாமியை அப்படிதான் அழைப்பான்.
          கீழே சீனர் உணவகம் உள்ளது. அது மாலை வேளை. எனக்கும் பசி எடுத்தது. மூவரும் கீழே சென்றோம்.
          ” உன்னிடம் இன்று ஆசை தீர நிறைய பேசவேண்டும். ” மின்தூக்கியில் கீழே சென்றபோது பன்னீர்செல்வன் கூறினார்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationதலித்துகள் உயர்பதவிகளுக்கு வருவதால் தலித்மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமா?சிறுகதைப் போட்டி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *