மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம்.
யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா? புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும். அவ்வாறெனில் திரிந்து போன ஒன்றை அடையாளம் கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டது நா. அந்த நாவே புளிப்பாய் மாறினால் என்னவாகும். அதுவும் யுகங்களின் புளிப்பு நாவுகள் என்கிறார் தலைப்பில். யுகம் என்பது காலத்தினை அளக்கும் மிகப் பெரிய அளவீடு. அதன் நம்பகத்தன்மை குறித்த இடத்திற்கு நகரவில்லை. அதனை ஒரு அடையாளத் தொன்மமாகக் கருதுகிறேன். கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 100% மக்கள் அற்த்தோடு வாழ்ந்தனராம். திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் 75% மக்கள் அறத்தோடு வாழ்ந்தனராம். துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள். இந்த யுகத்தில் வாழ்ந்த 50% சதவீத மக்கள் அறத்தோடு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். இப்போது நடைமுறையில் இருப்பது கலியுகம் 4,32,000 ஆண்டுகள். இக்காலக் கட்டத்தில் 25% சதவீத மக்கள் மட்டுமே அறத்தோடு வாழ்கிறார்களாம். சரி. இந்த வேத இதிகாச கருத்தியல்களின் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்கள் தான் . என்றாலும், காலத்தின் மிகப்பெரிய குறியீடாக யுகங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் காலப்பெருவெளி, புளித்துப் போன நாவாக மறிவிடும் என்பதன் புனைவின் பிரமாண்டத்தைத் தலைப்பு சட்டென உருவாக்குகிறது என்பதைக் குறிக்கவே இத்தனையும் கவனத்தில் கொண்டு வந்தேன். ஒரு தலைப்பைக் கொடுப்பதன் நோக்கமும் அது தானே.
இந்தத் தலைப்பின் வீரியத்தைக் குறித்து இவ்வளவு பேசிய பொழுதில், இத்தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கவிதை, ஒரு யுகாந்திரப் புளிப்பினை புளிப்பூட்டும் யதார்த்தச் செயல் வழிப் பொருத்தி மீள்வது என்பது எத்தகைய பிரமாண்டங்களும் வாழ்வின் நடைமுறைகளுக்குள் நங்கூரமிட்டவையே என்பதைக் கவனப்படுத்துகின்றன.
பாலுக்கு மோரூட்டுதல் என்பது இயல்பைத் திரிக்கிற யத்தனம் தானே. எப்படி?
குழந்தைக்குப் பாலூட்டும் பக்குவத்தில்
பாலுக்கு மோரூட்டுகிறாள்
திரிக்கச் செய்வதிலும் திறன் சார் பக்குவம்.
ஓர் யாமத்தில்
கலவியாடி கருத்தரித்து
புலரியில் பெற்றெடுக்கிறது காலம்
புதுத்தயிரை
யுகங்களைப் பேசும் கவிதை ஒரே ஒரு யாமத்தை அடையாளம் காட்டுகிறது. ஒரு யாமம் என்பது யுகத்தின் சிறுதுளியா. இல்லை. கலவியாடும் இரவின் புலரி பெற்றெடுப்பது புதுதயிரை. முற்றிலுமுறைந்து போய் கெட்டிதட்டிய தயிரை. புளிப்பின் சுவையூறிய தயிரை. அதனைப் பெற்றெடுக்கும் காலம் ஓர் இரவல்ல. யுகம் . யுகங்கள்.
அவ்வாறு யுக நாவு புளித்துப்போன சமூகத்தில் ஒரு கவிமனம் எதிர் கொள்ளும் கூறுகளே இவரின் கவிதைகள். சக மனிதை வஞ்சிக்கிற, சாதியப்படிநிலை பேணுகிற மத அடிப்படி வாதத்தை ஊட்டுகிற எளிய மக்களை அடிமைப்படுத்தத் துணிகிற பெண்களின் மீது தொடர்ந்து வன்முறையை ஏவுகிற வன்மம் மிக்க இந்த யுகத்தின் புளித்த நாவின் சுவை குமட்டும் சூழலின் சாட்சியாக,எதிர் குரலின் தீவிரமாக இருக்கின்றன இவரின் கவிதைகள்.
மு.ஆனந்தனின் கவிதைகள் சமகாலத்தின் எல்லா திசைவழிகளிலும் பயணித்து இருளின் இடரல்களைக் கண்டுபிடிக்கின்றன.
இவரின் அப்பா குறித்த கவிதையில் இருந்து பேசத்தொடங்கலாம்.
அப்பாவைப்பற்றி ஒரு பிம்பத்தைச் சித்தரிக்கிறார். அப்பா என்றொரு மாவீரன் என்னும் கவிதையின் தலைப்பில் மட்டுமல்லாது,
ஊர் சனம்
மதிலின் பின் நின்றே பேசும்
அம்மா
கதவின் நின்றே பேசுவாள்
நாங்கள்
அம்மாவின் பின் நின்றே பேசுவோம்
யாரும் நேர் நின்று பேசவியலாத மனிதர். ஊர் சனம் மதிலுக்கு பின்னே நின்று பேசுவது மட்டுமே சாத்தியம். நெருங்க முடியாது. நெருங்க முடியும் என்னும் வாழ்வியல் சாத்தியத்தைக் கொண்டிருந்த அம்மாவும் கதவுக்குப் பின் நின்றே பேசுவாள். பிள்ளைகள் அம்மாவுக்குப் பின் நின்றே பேசவியலும். பல வீடுகளில் கதுவுகள் திறக்க மூட மட்டுமல்லாது ஒளிந்து கொள்ளவும் தான் உபயோகமாகின்றன. அம்மாவுக்குக் கதவு. பிள்ளைகளுக்கு அம்மா ஒளிதற்கு. அணுகுமுறை இப்படி இருக்குமாயின் அவரின் உருவமோ
அப்பாவின் வீச்சரிவாள் மீசையில்
முறுகிய வேல் கம்பின்
சூலம் இதழ் விரித்திருக்கும்
உருவத்திற்கேற்ற
கருத்த டயர் செருப்பின்
கர்ச்சனையில்
கலைந்து ஓடியது நாங்களும் தான்
என்னும் போது அவரின் கர்ச்சனை கூட அவசியமில்லை. அவரின் செருப்பு சப்தமே சிம்ம சொப்பனமாய் மாறி விடும். அப்பா என்கிற மாவீரனின் உருவம் செயல் அவரை அணுகுவதில் இருக்கும் சூழல் எல்லாம் இப்படி. சரி. ஒரு மனிதனின் ஆளுமையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகச் சூழலில் இது உண்மையான ஆளுமைத் தன்மையாவெனும் கேள்வியை முன்வைத்து விமர்சனத்திற்கு உள்ளாக்குவது,
அப்பாவாகத் தோற்றுப் போனதை
என்றுமே அவரிடம் சொன்னதில்லை.
ஆம். கவிஞனால் கவிதையில் அவரின் தோல்வியைச் சுட்ட முடிகிற அளவு அப்பாவிடம் பிள்ளையாகச் சொல்ல முடிவதில்லை என்பதே யதார்த்தம்.
ன்னுக்களின் மாயக்கனவுகளில்
பாப்பி சுரந்து மார்பூட்டுமா
அப்பாக்களின் முலைகள்
ஊட்டாது. ஏன் ? ஊட்டவில்லை.
அப்பாவின் மலட்டு மார்புகளை
எக்கி எக்கி சப்பித்தும்
என்கிறார். எளிதாகக் கடக்க முடியாது சொற்களை. ஒரு ஆண் பிள்ளையின் பார்வையில் அப்பாவின் மீதாக கட்டமைக்கபடும் பிம்பம் இதுவெனக் கொள்ளலாம். பொதுவாகவே அப்பாக்களின் அன்பு பேசப்படுவதில்லை. அம்மாவின் அன்பு ஒப்புமையில்லாதது தான். ஆனால் அப்பாவின் அன்பு சற்றும் குறைந்ததல்ல. சமூகம் இட்டு நிரப்பியிருக்கும் போலி கம்பீரம் போலி கௌரவம் போலி பிம்பம் அதை உரிய முறையில் வெளிப்படுத்த முடியாமல் செய்து விடுகிற சோகம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் குறிப்பாக ஆண்குழந்தைகளுக்கு. பெண் குழந்தைகள் காணும் அப்பா கவிஞர் இளம்பிறை காணுகிற அப்பா. அப்பா குறித்த கடும் பார்வைக்கு மத்தியில் இவரின் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு பேசும் கவிதை அதையே உறுதி செய்கிறது.
பூக்கள் உதிராத
இலைகள் நரைகூடாத
மரங்கள் கிழப்பருவமெய்திடாத
மார்க்கண்டேய நந்தவனத்திற்குள்
அப்பாக்களின் ஆயுட்கரம் பற்றி
ஆதூரமாய் அழைத்துச் செல்கிறார்கள்
ன்னுக்குட்டிகள்
தேவதைகளாய்….
அப்பாவைப் பற்றிய இவரின் கவிதைகள் அம்மாக்களிடம் எப்படி இணக்கம் கொள்கின்றன என்பது ஒப்பில்லாத தாய்மைக்கு கவிமனம் காட்டும் சாட்சியம். ஏற்கனவே குறிப்பிட்ட யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதையிலேயே பாலூட்டும் பக்குவம் பார்த்தோம்.
அம்மாக்கள் அன்பு வயப்பட்டவர்கள் மட்டுமல்ல. துன்ப வயப்பட்டவர்கள் என்பது தான் கூடுதல் சோகம். சமூகம் சோகத்தில் திணற வைப்பதால் அம்மாக்கள் அன்பு மிகப்பெரும் சவால்களோடு மட்டுமே வாழ்முறைக்கு வந்து சேர்கிறது. அவர்களின் அன்பின் செயல்பாடு சவால்களோடு தியாகங்களைக் கோருகிறது. இன்னல்களை எதிர் கொள்ளப்பணிக்கிறது.
குடும்ப மகாபாரதத்தில்
கர்ணனின் குண்டலத்தைப் பறித்த
அப்பாக்களின் மதுலாகிரியில்
தள்ளாடினான் இந்திரன்
என்பதால்
அம்மாக்களின் செவிப்பூக்கள்
எப்பொழுதும்
அடகுக் கடையிலேயே மலர்கிறது
இது டாஸ்மாக் கொடுக்கும் உபரி சோகம்.என்ன செய்வது?
அம்மாவின் மருந்துச் சீட்டில்
மண்டிக்கிடக்கிறது
நீர்க்குவளைகள்
நீர்மத்திகளையும்
அத்திகளையும் தின்று…
என்கிறார் மற்றொரு கவிதையில்.
இந்தத் தொகுப்பு முழுக்க குழந்தைகள் வருகிறார்கள். ன்னுக்குட்டி வருகிறாள்.அவர்களின் குழந்தைமை பேசப்படுகிறது. ன்னுக்குட்டி வகுப்பறையில் இருக்கிறாள். அவளைப்பார்த்து டீச்சர் , யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கண்டிப்போடு கேட்கிறாள்.
பாடம் நடத்தும் போது
யாரிடம் அரட்டை?
டோராவிடம் தான்
என்று சொன்னால்
புரியவா போகிறது
இந்த மக்கு டீச்சருக்கு
டோராவிடம் விளையாடுகிறாள் ன்னுக்குட்டி. டோராவிடம் விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், கண்டிப்பு ஒன்றை மட்டுமே அறிந்த இந்த மக்கு டீச்சருக்கு புரியுமா என்ன? மக்கு டீச்சர் மக்கு டீச்சர். குழந்தையிடம் எழும் உணர்வின் கோபம் குழந்தைமையோடு கூடி எளிய நகையுணர் ஆகும் தருணம்.
ஊதிப்பெருத்த அம்மா பலூனின்
அடிவயிற்றில் ஆழ்ந்துறங்கி கிடக்கிறது
ஒரு குட்டி பலூன்
தாய்மையை அதன் வழியே சொல்வது.
நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள் என்றொரு கவிதை இன்றைய கல்வி முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அதன் இன்னும் நீட்சியாக , மெக்காலேவின் பிள்ளைகள் என்னும் கவிதையைச் சொல்லலாம். இங்கே கல்வி முறை என்பது ஆங்கிலேயர் தமக்குத் தேவையான குமாஸ்தாக்களை உருவாக்க வடிவமைக்கப் பட்டது.சிந்தனையைத் தூண்டாமல் மனப்பாடத்தை ஊக்குவிப்பது. விழுங்கி, வாந்தியெடுக்கும் வித்தை சொல்லித் தருவது. சமூக அரசியல் அறம் போதிக்கப்படுவதில்லை. வரலாறுகள் வசதிக்கொப்ப சொல்லித்தரப்படுகின்றன. இந்தக் கல்வி முறையின் மீது ன்னுக்குட்டிக்கு அதிருப்தி. பிள்ளைகள் பள்ளிக்குப் போவதை தண்டனையாகக் கருதுகின்றனர். பள்ளிக்குச் செல்வதிலே ஆர்வம் இல்லை. அதற்காக பொய் சொல்லவும் தயங்குவதில்லை. தலைவலி என்றும் காய்ச்சல் என்றும் வயிற்றுப் போக்கு என்றும் சொல்லி மட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ன்னுக்குட்டி சொல்லும் காரணம் மாறானது.
படிக்க வில்லையா என்றேன்
புத்தகங்களுக்குக் காய்ச்சல் என்றாள்
எங்கே என்றேன்
டாக்டரிடம் என்றாள்
என்றவள் புத்தகங்களுக்கு ஊசி வேண்டாம் வலிக்கும் என்று வேறு அச்சமுறுகிறாள். புத்தகத்திற்கு காய்ச்சல் என்றும் புத்தகங்களுக்கு வயிற்று வலி என்றும் சொல்லுமவள் புத்தகங்களுக்கு ஒரு வாரம் ஓய்வு வேண்டும் என்று அதிரடியாக அறிவிக்கிறாள்.
மெக்காலே பெற்றெடுத்த
நோஞ்சான் பிள்ளைகளின் தாயாகத்
தன்னையே தத்தெடுத்துக் கொள்கிறாள்
ன்னுக்குட்டி
என்று முடிகிறது கவிதை.
பெண் விடுதலைச் சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதை ,’வேறென்ன வேண்டும்’.
அந்தக் கிளியின் ஆசைப்படி தான் எல்லாம் செய்யப்படுகிறது. அதாவது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு அவர்களே அங்கீகாரம் வழங்கி, வக்காலத்து வாங்குவது தான் கொடுமை. கிளியின் ஆசைப்படிதான் உடுத்திக்கொள்ள உடை வழங்கப் படுகிறது. மருதாணி தீட்டும் ஆசை நிறைவேற்றித்தரப் படுகிறது .பீட்ஸா வேண்டுமா? பர்கர் வேண்டுமா வாங்கிக் கொள் என்று சொல்வதும் அதன் ஆசைப்படியே. வனம் சுகித்துத் திரும்ப அனுமதித்ததும் அந்தக் கிளியின் ஆசைப் படியே.
அந்தக் கிளியின் ஆசைப்படியே
கூண்டைப் பூட்டினேன்
வேறன்ன வேண்டும்
அடிமைப் படுத்துவது என்பது மானுட மீறலெனில் அடிமைப்படுபவரே அதற்கு ஆசைப்படுமளவு சூழலை உருவாக்கி வைத்திருப்பது எத்தகைய கொடுமை.
கன்னி மேரியின் தீட்டுத்துணிகள் மிக முக்கியமான கவிதை,
கன்னி மேரியின்
தீட்டுத் துணிகளைச் சிதைத்துச் சென்ற
கிருஷ்ணனின் தேர்ச்சக்கர மகாத்மியங்கள்
போர்நெறியின் அறப்பொருளை
எழுதிச் சென்றன
தத்துவ நோக்கில் எழுதப்பட்ட கவிதைகளாக பகலதிகாரம் நான் சொல்வதெல்லாம் பொய் போன்ற கவிதைகளைச் சொல்லலாம்.
என்னதான் வெளிச்சத்தைப் பீய்ச்சியடித்தாலும்
நிழலாய்ப் பின் தொடர்கிறது
இருள்.
என்னும் கவிதையின் மேற்புறப் பத்தியொன்றில்
இரவு விழிக்கத் துவங்கி விட்டால்
உன்மத்தம் பிடித்து விடுகிறது பகலுக்கு
என்கிறார்.
மௌனித்துகிடக்கும் உண்மை ஒருவகையில் பொய் தானே. அரூபமாய் பொய்கள் நடத்தும் சமூக சிக்கல்கள் எத்தனை?
சமூக அரசியல் தளங்களில் இயங்கும் பல கவிதைகள் இத்தொகுதியில் இருக்கின்றன.
பாலூட்டிய ஆசுவாசத்தில்
மேவாயால் முகத்தை முட்டி
வழிசல்களின் நாவால்
நக்கிக் கொடுக்கிறது
வைக்கோல் கன்றுக்குட்டியை
தீக்கூடு அழகிய புனைவுக் கவிதை. வடிவ நேர்த்தியில் அப்பாவின் முகமூடி முன் நிற்கிறது.
’நான் கவிதையின் வாசகி’, ஒரு முழுக்கவிதை. எனக்கு அதில் சிறு இடைவெளியுமில்லை. இறுக்கக்கட்டப்பட்ட நேர்த்தி.
முருகு, வல்லிகை, வாளி தண்டப்பிகள், ஒன்னப்பூ, வெட்கத்தின் தணுப்பெடுத்து, தும்பிலிப்பூ, உன்னிப் பூ, பசுந்தணுப்பு, மக்கிரிக் கூடை, காக்கனத்திக்காடு போன்ற பல புதிய சொற்களின் தரிசனத்தைத் தந்தது இத்தொகுதியில் உள்ள கவிதைகள்.
பல்வேறு புதிய வெளிகளை உருவாக்ககூடிய, உள்ளடக்கம் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் மொழிதலின் முறை சார்ந்தும் எனக்கு மிகவும் நெருக்கமாகவும் நிறைவாகவும் இத்தொகுதியில் உள்ள கவிதைகளை உணர்கிறேன்.
மு. ஆனந்தன் அவர்களின் கவிதை இயக்கம் பல உயரங்களைத் தொட என் வாழ்த்துகள் எப்போதும்.
- பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- இலக்கியச்சோலை அழைப்பு
- கம்பன் கஞ்சனடி
- தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?
- மாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்
- பையன்கள் : சுப்ரபாரதிமணியன்
- பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !
- கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)
- மொழிவது சுகம் 23 ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)
- இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- சீனியர் ரிசோர்ஸ்