தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?

This entry is part 5 of 15 in the series 23 ஜூலை 2017

 

          பன்னீர் செல்வன் இரண்டாம் நாள் இரவும் எங்களுடன் தாங்கிக்கொண்டான்.மூவரும் இரவில்உறக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.
          காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். கோவிந்த் பள்ளிக்கு டாக்சியில் புறப்பட்டான். அவன் வாகனம் வாங்கவில்லை. அதை ஓட்டும் பயிற்சியும் பெறவில்லை. பன்னீர் பேருந்தில் ஏறி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். மாலை வரை நான் அறையில் தங்கினேன். கோவிந்த சேகரித்து வைத்திருந்த தமிழ் நாவல்களை நோட்டமிட்டேன். ஏறக்குறைய மு.வ.வின் அணைத்து நூல்களும் அங்கிருந்தன.  அதுபோல் அகிலனின் நூல்களும் நிறைய இருந்தன. கல்கி, சாண்டில்யன், கு.ப.ரா. ஜெயகாந்தன் ஆகியோரின் நூல்களும் இருந்தன. அவற்றையெல்லாம் திறந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்தான். ஆனால் அவற்றை அவன் முறைப்படி அடுக்கிவைக்கவில்லை. நான் அவற்றை ஒவ்வொரு எழுத்தாளரின் நூல்களை  வரிசை படுத்தி அடுக்கி வைத்தேன். அப்போதுதான் ஒரு எழுத்தாளரின் நூலைத் தேடி எடுப்பது சுலபமாக இருக்கும். நூல்களை எப்போதுமே அழகாக அடுக்கிவைத்து அதன் அழகை ரசிக்கும் பழக்கம் எனக்கு பள்ளி கல்லூரி நாட்களில் இருந்துள்ளது.( அதை இப்போதும் கடைப்பிடித்தே வருகிறேன். )
          நண்பர்கள் இருவரை[ப் பார்த்துவிட்டேன். இனி ஜெயப்பிரகாசத்தைப் பார்க்கவேண்டும். அவன் வேலை செய்யும் இடம் சிங்கப்பூர் டெலிகாம்ஸ். அதன் தலைமையகம் சிங்கப்பூர் ஆற்றின் அருகில் பொது தபால் நிலையம் அருகே இருந்தது. நான் பேருந்து மூலம் அங்கு சென்றேன். அப்போது மதிய உணவு நேரம். என்னைக் கண்டதும் அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையைப் பிடித்துக்கொண்டு வரவேற்றான். என்னை அருகில் ஆற்றோரம் இருந்த அங்காடிக்குக் கூட்டிச் சென்றான். அங்கே ஒரு தள்ளுவண்டி உணவு தயார் செய்யும் கடை எதிரே அமர்ந்துகொண்டோம். மீ கோரேங் கொண்டுவரச் சொன்னான். சூடாக சுவையாக கொஞ்சம் காரமாகவும் இருந்தது. அதை தயார் செய்தவர் கேரளத்து இஸ்லாமியர். சற்று வயதானவர். என்னை மறுநாள்  வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினான். அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது.
          நான் லதாவைக் காதலித்தபோது அவன் மீனாட்சியைக் காதலித்தான். அவள் கலைமகள் தமிழ்ப் பள்ளியில் பயின்றபோது இருவருக்கும் காதல். இவனும் அப்போது அதே பள்ளியில் பயின்றுகொண்டிருந்தான். மீனாட்சி மாரிமுத்து ஆசிரியரின் மகள். கொஞ்சம் குறைவான நிறத்துடன் இருந்தாலும் நல்ல அழகி. மு. தங்கராசு ஆசிரியர் நடத்திவந்த தமிழவேள்  நாடக மன்றத்தின் நாடகங்களில் கதாநாயகியாகவும் நடித்து வந்தாள். அப்போது சிங்கப்பூரில் அவரின் நாடகங்கள் புகழ் பெற்று விளங்கியதால் மீனாட்சியும் நல்ல புகழுடன் திகழ்ந்தாள்.
          அவர்களின் திருமணம் தமிழவேள் கோ.சாரங்கபாணியின்  தலைமையில் நடந்தேறியது. திருமணப் படம் தமிழ் முரசில் வெளிவந்துள்ளது. அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தான். மணமாகி சில மாதங்கள் ஆகியிருந்தன. அவர்கள் இருவரும் ஓர் அடுக்கு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். எனக்கு வீட்டில் விருந்து வைக்க மிகவும் ஆர்வம் காட்டினான்.. நான் சிங்கப்பூரில் தங்கும் இடம் கேட்டான்.நான் கோவிந்த் வீட்டில் என்றேன். நாளை அங்கு வந்து என்னை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினான். அவனுடைய மதிய உணவு நேரம் முடிந்துவிட்டதால் நான் பெருத்து ஏறி திரும்பினேன்.
          அன்று மாலையும் பன்னீர் வந்தான். அவன் தனியாக வரவில்லை. உடன் ஓர் அழகிய இளம் பெண்ணையும் கூட்டிவந்தான். ஆம். அவள்தான் அவனுடைய முதல் காதலி பிரபா. பஞ்சாபி பெண்களுக்குள்ள தங்க நிறத்துடன் கவர்ச்சியான உடலழகையும் கொண்டவளாகத் திகழ்ந்தாள். தன்னுடைய பால்ய நண்பன் என்று என்னை அறிமுகம் செய்துவைத்தான். அவள் மலர்ந்த முகத்துடன் கை  குலுக்கினாள். நாங்கள் நால்வரும் கீழே சீன  உணவகம் சென்றோம். பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். கோவிந்த் தேநீர் கேட்டான். பிரபா ஆப்பிள் ஜூஸ் கேட்டாள் நான் ஜெயப்பிரகாசத்தை சந்தித்தது பற்றி சொன்னேன். நாளை இரவு விருந்துக்கு அங்கு சென்றுவரச் சொன்னார்கள். பன்னீர் என்னைப்பற்றியும் லதாவைப்பற்றியும் பிரபாவிடம் கதைபோல் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தான். அவளும் அதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். கோவிந்த் மீ கோரேங்க்கை சுவைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு காதல் அனுபவம் இன்னும் உண்டாகவில்லை. ஆனால் காதல் அனுபவம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருந்தது.
          ” நேற்று நாம் காதல் பற்றி பேசினோம். எனக்கு அது பற்றிய கேள்வியொன்று உள்ளது. உன்னிடம் கேட்கலாமா? ” என்னை நோக்கி கோவிந்த் கேட்டான். நான் சரி என்பதுபோல் தலையாட்டினேன்.
          ” நீ லதாவை சிறு வயதிலிருந்து பத்து வருடங்கள் காதலித்தாய். உன்னுடைய அப்பா எவ்வளவோ தடைகளை போட்டும் நீங்கள் இருவரும் அவற்றையும் மீறிதான் காதலித்தீர்கள். உங்களைப் பிரிக்க அவர் உன்னை தமிழகம் அனுப்பினார். வேறு வழியின்றி நீயும் சென்றுவிட்டாய். ஆறு ஏழு வருடங்கள் கழித்து நீ இப்போது திரும்பியுள்ளாய். நீ லாதவைச் சந்தித்தபோது அவள் வேறொருவனை திருமணம் செய்துகொண்டாள் என்பதைத்  தெரிந்துகொண்டாய். இந்தச் சூழலில் உனக்கு அது ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் தெரியலையா? அதனால் நீ கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே? இது எப்படி? காதல் என்பது இதுதானா? இது எனக்கு இன்னும் புரியவில்லை. ” தன்  சந்தேகத்தை வெளிப்படையாகக் கூறினான்.
          ” லதாதான் என் முதல் காதலி என்பதை நீங்கள் இருவரும் அறிவீர்கள். அது அறியா வயதில் உண்டானது என்று நான் சொல்லமாட்டேன். காதலின் புனிதமும் மகத்துவவமும் அறிந்துதான் காதலித்தோம். . அதனால்தான் அப்பாவின் அடி  உதை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நாங்கள் தொடர்ந்து காதலித்தோம். நான் அவளைப் பிரிந்து தமிழகம் சென்றேன். அங்கும் சில மாதங்கள் லதா நினைவாக இருந்தது உண்மை. அந்த சோகத்தை கடித  வாயிலாக அவளுக்கும் தெரிவித்தேன். அப்போதுதான் வெரோனிக்காவின் தொடர்பு கிடைத்தது. அவளுடைய அழகும் நளினமும் குணமும் என்னைக் கவர்ந்தது. அவளுடன்  வெளியில் சென்றபோது நாங்கள் நெருக்கமானோம். அப்போது லதா நினைவுக்கு வரவே செய்தாள். ஆனால் அருகில் இருந்த வெரோனிக்கா கொஞ்சங்கொஞ்சமாக  லதாவின் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். வெரோனிக்கா அவ்வாறு தொலைவில் இருந்த லதாவை தூர வைத்துவிட்டு என்னைத்  தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டாள். அதனால்தான் நான் மீண்டும் சொல்கிறேன். ஒரு பெண்ணை மறக்கடிக்க இன்னொரு பெண்ணால் முடியும் என்கிறேன். காதலின் புனிதம் மகத்துவம் தெய்வீகம் எல்லாம் அப்போது வெரோனிக்கவிடம் கொண்ட காதலில் உண்மையானது. லதா மீது கொண்ட காதல் அப்போது மனதின் ஒரு மூலையில் தஞ்சம் கொண்டது. அவளை இப்போது மீண்டும் சந்தித்தபோது அது வெளியில் வந்தது. ஆனால் அவளுக்கு மணமாகிவிட்டது என்பதை அறிந்தபின்பு அது மீண்டும் மனதுக்குள் ஒடுங்கிவிட்டது… அதனால் அதன் துன்பம் பெரிதாக எனக்குத் தெரியவில்லை. நான் இப்போது யாரையும் காதலிக்கவில்ல. அதனால் அந்த லாபீஸ் பெண்ணைப் பார்த்து மணமுடிக்க இங்கே வந்துள்ளேன். இப்போது காதல் என்பது என்ன என்பது தெரியுதா உனக்கு? ” நான் நீண்ட சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவனை நோக்கினேன்.
         இதைக் கூர்ந்து கவனித்த பன்னீர் பிரபாவிடம் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தான்.
           ” லதா பாவம். இவர் மருத்துவம் படிக்க இந்தியா சென்றதால் அவளுடைய காதல் நிறைவேறாமல் போனது. இங்கேயே தங்கி படித்திருந்தால் ஒருவேளை அது நிறைவேறியிருக்கும். ” லதா மீது அனுதாபம் கொண்டாள். நல்ல பெண்தான் அவள்.
          சுமார் ஒன்பது மணியளவில் பிரபா வாடகை ஊர்தியின் மூலம்  வீடு திரும்பினாள். அன்று இரவும் பன்னீர் எங்களுடன்தான் தங்கினான்.
          மறுநாள் காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். மாலை ஐந்து மணிக்கு ஜெயப்பிரகாசம் வந்தான். நான் அவனுடன் புறப்பட்டேன். அது நீண்ட பயணம்தான். பேருந்தில்தான் சென்றோம்.
          அவன் அடுக்கு மாடியில் மூன்றாவது தளத்தில் குடியிருந்தான். வீடு வசதியாக இருந்தது. இன்முகத்துடன் மீனாட்சி என்னை வரவேற்றாள். நான் அவளை அப்போதுதான் முதன்முறையாகக் கண்டேன். நல்ல அழகிதான். கனிவுடன் பேசி என்னை உபசரித்தாள். சுவையாக கோழிக்குழம்பு பரிமாறினாள். பால்ய நண்பர்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே உணவை சுவைத்து உண்டோம். அப்போது நான் என் திருமணம் பற்றி அவனிடம் சொன்னேன். அதோடு இன்னொன்றையும் சொன்னேன். எங்கள் இருவருக்கும் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு ஒரே பெயர்தான் சூட்டவேண்டும் என்றேன். அதுவே நம் நட்புக்கு அடையாளமாக இருக்கும் என்றேன். அவன் சரி என்று சம்மதித்தான். மீனாட்சி அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்பதை அவன் நிச்சயம் சொல்லியிருப்பான். ஒரு வகையில் அவர்கள் இருவரின் காதலுக்கு நான் உறவுப் பாலமாகவும் இருந்துள்ளேன். அதை அவர்கள் இருவரும் அறிவார்கள்.
          நான் லாபீஸ் திரும்பும்போது என்னுடன் கோவிந்தசாமியும் பன்னீரும் அந்த பெண்னனைப் பார்க்க வருகின்றனர் என்பதைக் கூறி அவனையும் வரச் சொன்னேன். அவனால் வரமுடியாது  என்று சொன்னதோடு அந்தப் பெண்ணுடன் சிங்கப்பூர் வரும்போது பார்த்துக்கொள்வதாகக் கூறினான். நான் சரி என்றேன்.
          இரவு பத்து மணியளவில் நான் வாடகை ஊர்தியில்  திரும்பினேன். முக்கியமான மூன்று நண்பர்களையும் பார்த்துவிட்டேன். இனி ஆனந்தனைத்தான் பார்க்கவேண்டும். அவனுடைய முகவரி தெரியவில்லை. இந்த வார இறுதியில் லாபீஸ் திரும்பிவிடலாம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகம்பன் கஞ்சனடிமாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *